திங்கள், 2 ஜனவரி, 2012

சங்கீதராமன் பாடினார்

                                                 
முதலிலேயே சொல்லி விடுகிறேன், இது இசை விமர்சனம் அல்ல. சதுச்ர ஜாதி ஜம்பை தாளம் என்றால் ஏதோ பித்தளைப் பாத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு தான் எனக்கு சங்கீத ஞானம்.  அதற்காக மோகனத்துக்கும் முகாரிக்கும் வித்தியாசம் தெரியாத ஜடம் என்றோ, பக்கத்து இருக்கைகளில் இருக்கும்  ஞானஸ்தி மாமி ஒருவரை கண்டுபிடித்து அவர் போடும் சங்கீர்ண  ஜாதி கண்ட ஏக தாளத்தை இமிட்டேட்   செய்யத் தெரியாத மண்டு என்றோ எண்ணிவிட வேண்டாம். (போதும் தற்புகழ்ச்சி). ஏதேதோ படே சலாம் கச்சேரிகளுக்கு அலைந்து டிக்கெட் கிடைக்காமல் கடைசியில் போனால் போகிறது என்று பிரம்ம கான சபாவில் சாகேத ராமன் கச்சேரிக்கு டிக்கெட் கிடைத்து. அரை மணி முன்பாகவே அரங்கை அடைந்தோம். 
            
டிக்கட் கச்சேரிக்கு முன் நடந்த இலவச கச்சேரியில் அக்ஷய் பத்மநாபன் பாடிய சங்கராபரணம், செஞ்சுருட்டி தில்லானா கேட்டு மரியாதையாக பலத்த கரகோஷம் செய்தோம். வயலின் வசித்தது அக்கரை சுவர்ணலதா என்று அடையாளம் சொல்லிப் பெருமை அடைந்தோம். 
                
அவையில் ஐம்பது அறுபது பேர்களே இருந்தனர். சாகேதராமன் பாட ஆரம்பிப்பதற்கு முன் பக்கத்தில் இருக்கும் காண்டீனை நோக்கி படை எடுத்தோம். வீட்டிலிருந்து டப்பாவில் கொண்டுவந்து சூடு செய்து விற்கிற மாதிரி இருந்தது தோற்றம். கீரை வடை காபி விமரிசனத்துக்கு அப்பாற்பட்டு விளங்கியது. அந்த இடம்  கூட்டத்துக்கு அதுவே அதிகம் என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டு மேடைக்கு அருகில் (கூட்டம் குறைந்த நிகழ்ச்சிகளில் இது ஒரு சௌகரியம். எனக்கு பாடுபவர் பக்கவாத்தியக்காரர்கள் முகம் சாதரணமாக சரிவரத் தெரிவதில்லை. வயது காரணம் சுவாமி. கண்ணை இடுக்கி, விரல் குவித்து ஒரு சிறு துளை செய்து கொண்டு பார்த்து வயலின் மைசூர் நாகராஜா மஞ்சுநாத்தா என்று குழம்பினேன். மிருதங்கம் மன்னார்குடி ஈஸ்வரன் என்று கண்டுபிடித்தேன்.  (வயலின் மஞ்சுநாத் என்று பிற்பாடு தெரியவந்தது.)
              
பாடகர் இளைஞர். நல்ல குரல் வளம்;நல்ல கற்பனை. சுபபந்து வராளியில் பிரமாதமாக ஆலாபனை செய்து 'என்னாள்ளு ஊரகே' என்ற தியாகராஜர் கிருதியை மிக நன்றாகப் பாடினார். அதற்கு முன்பு ஒரு எக்ஸ்பிரஸ் பிலஹரி முடிவில் லால்குடி தில்லானாவும் 'அனுமனை நினை மனமே' என்ற ராகமாலிகையும் பாடி மகிழ்வித்தார். அருமையாக இருந்தது.  சாகித்தியத்தில் சற்று கவனக் குறைவு உச்சரிப்பில் சிறு சிறு சறுக்கல்கள் சற்றே நெருடியது. 
             
வயலின் மிருதங்கம் இருவரின் வாசிப்பையும் ஒரே வார்த்தையில் விளக்கி விடலாம்.  பிரமாதம். வயலின் எம். எஸ். கோபால கிருஷ்ணனை நினைவூட்டியது. மிருதங்கம் பாட்டுக்கு இசைந்து  ராஜநடை நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் சபை ஒரு நூற்றைம்பது இருநூறு ரசிகர்களைக் கொண்டிருந்தது என்பதை சொல்ல மறந்து விட்டேன். 
                  
வேறு இடங்களில் சீனியர்கள் வழக்கமான பாடல்களை சிறப்பாகப் பாடியிருக்கக் கூடும்.  ஆனாலும் சாகேதராமன் எங்களை ஏமாற்றவில்லை. நிறைவுடன் வீடு திரும்பினோம். 
                     

19 கருத்துகள்:

  1. அருமையாக பாடினார்களா என்று தெரியாது. ஆனால் அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் பெங்களூருவுக்கும சென்னைககுமுள்ள தூரம்! ஜகா வாங்கிக்கறேன். (ஸ்ரீராம் சார்! என் பதிவுல நீங்க கேட்ட கேள்விக்கு இப்ப பதில் கொடுத்திருக்கேன். ப்ளீஸ், நோட்!)

    பதிலளிநீக்கு
  3. நீங்களாவது ஏதோ பாத்திரம்னு நெனச்சீங்க kgg.. எனக்கு என்னவோ திட்டறாப்ல தோணுதுங்க.
    பாடகர்கள்.. அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு பாடுபவர் பக்கவாத்தியக்காரர்கள் முகம் சாதரணமாக சரிவரத் தெரிவதில்லை. வயது காரணம் சுவாமி. கண்ணை இடுக்கி, விரல் குவித்து ஒரு சிறு துளை செய்து கொண்டு பார்த்து வயலின் மைசூர் நாகராஜா மஞ்சுநாத்தா என்று குழம்பினேன். மிருதங்கம் மன்னார்குடி ஈஸ்வரன் என்று கண்டுபிடித்தேன். (வயலின் மஞ்சுநாத் என்று பிற்பாடு தெரியவந்தது.)

    ஆஹா ..இதுவல்லவா விமர்சனம்.. அருமை!

    பதிலளிநீக்கு
  5. விமர்சனமே இசையாயிருக்கிறது.நான் எப்போதும் சொல்வதுண்டு தமிழ்நாட்டின் இண்டு இடுக்கு,நாடி நரம்பெல்லாம் கலையென்று.கலைக்கு நீங்கள்தானய்யா !

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. சாகேத ராமன் என்பது தெனாலி ராமன் மாதிரி ஏதோ பெயர் என்று நினைத்தேன். நம்ம ஞானம் அவ்வளவு தான்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சங்கீத சீசனை பதிவின் வழியாகவே ரசிக்க வைக்கிறீர்கள். மிகவும் நன்றி. ஜெயா டீவியில் மார்கழி மஹோற்சவத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன். இன்று பாடிய அபிஷேக் ரகுராம் மிகவும் சிறியவர். எவ்வளவு அருமையான குரல் வளம். மிகவும் அருமையாக பாடினார். வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் மேல் உள்ள ஈடுபாடும், ஞானமும் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. விமரிசனக் கச்சேரிக்கு சபாஷ்:))

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்3 ஜனவரி, 2012 அன்று 12:00 PM

    யோவ ஆசிரியர்களே - பக்கத்துல இருக்கின்ற வோட்டுப் பெட்டியில நீங்க யாருமே எனக்கு வோட்டுப் போடலை. மரியாதையா எனக்கு போட்டுடுங்க - இல்லாங்காட்டி நான் ஜனவரி பதினைந்தாம் தேதி வழக்கு போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கிடுவேன்!

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்3 ஜனவரி, 2012 அன்று 12:11 PM

    உங்க வோட்டுப் பெட்டியில் (அது என்ன இ வி எம்மா?) ஏதோ தில்லு முல்லு - என் பெயருக்கு நேரே நான் போட்ட வோட்டு கூட என் பெயருக்கு மேலே இருக்கின்ற கீதா சந்தானம் பெயருக்கு விழுகிறது. நிச்சயம் வழக்கு போடுவேன்.

    பதிலளிநீக்கு
  12. சங்கீர்ண ஜாதி கண்ட ஏக தாளத்தை இமிட்டேட் செய்யத் தெரியாத மண்டு என்றோ எண்ணிவிட வேண்டாம். (போதும் தற்புகழ்ச்சி)

    :-)) super!

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2012 அன்று 7:40 PM

    யோவ் கு கு - உமக்கு டிப்பாசிட் காலி என்று தெரிகிறது. லீடிங்க்கில் இருப்பவர் மேல புழுதி வாரி தூற்றுகிறீரா!

    பதிலளிநீக்கு
  14. சாப்பிட ,நன்றாகச் சமைக்கத் தெரிய வேண்டுமா? பசி தான் எடுக்கவேண்டும்.
    அந்த வகையில் நம் இசையென்ன? எந்த இசையையும் ரசிக்க இசையறிவு தேவையென்பதிலும், இசையுணர்வு தேவை என்பேன்.
    உங்களுக்குத் தெரிந்ததில் எள் அளவுகூட எனக்குத் தெரியாது.
    10 வயதில் இருந்து இசையை ரசிக்கிறேன், கமகம் என்பதை என்ன வெனத் தெளிய எனக்கு 55 வயதாகிவிட்டது. இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் என்ன? இசையில் பரீட்சையா? எழுதப் போகிறேன்.
    ஆனால் நம்மிசையை நான் மணித்தியாலக் கணக்கில்
    தினமும் ரசிக்கிறேன். மன அமைதி கிட்டுகிறது.ஆனந்த உணர்வு தருகிறது.யாராவது இது என்ன? ராகம் எனக் கேட்டால் கூச்சப்படாமல், ஒலி நாடாப் பெட்டியில் உள்ளதைக் கூறுவேன்.
    அதிக சமையல் நுணுக்கம் தெரிந்தவர் எப்படிச் சாப்பாட்டை ரசிக்கமுடியாதோ, அப்படியே அதிக இசை நுணுக்கம் தெரிந்தவர்களால் இசையை ரசிக்க முடியாது.
    பிழை தேடுவதிலே இரசிப்பைக் கோட்டை, விட்டுவிடுவார்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
    இணையத்தில் உதவியால் எவ்வளவோ புதியவர்கள் இசையை நாம் கேட்கப் கூடியதாக உள்ளது.

    அந்த வகையில் இவரை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இது வரை கேட்கவில்லை இனிக் கேட்பேன். வரும் 24 மார்ச் 2012 இவரை, வருடா வருடம் பாரிஸ் மாநகர சபையால் நடத்தப்படும் உலக இசை அரங்கில் பாட அழைத்துள்ளார்கள்.
    அருணா சாயிராமும் வரவுள்ளார். போக உத்தேசித்துள்ளேன். இத் தொடுப்பில் விபரம் ஆங்கிலத்தில் உள்ளது பார்க்கலாம்.
    http://www.theatredelaville-paris.com/spectacle-ssaketharamanindedusud-410
    இந்த மண்டபத்தில் 1985 லிருந்து நம் இசை விற்பன்னர்கள் வரும் போது சென்று ரசித்துள்ளேன்.
    சுமார் 1000 பேர் அடங்கக்கூடிய இதில் விரல் விட்டெண்ணக்கூடிய இந்திய , இலங்கை ரசிகர்களைக் காணலாம்.
    அதிலும் இந்தியத் தூதரகத்துக்குக் கிடைக்கும் இலவச சலுகையில் 4 பேர் வருவார்கள். மிகுதி பிரஞ்சு ரசிகர்களும் வேறு நாட்டவர்களும், அதில் முக்கால் வாசி நம் இசைபற்றிய தேர்ந்த ஞானமற்றவர்களே! ஆனால் அவர்களில் பலர் என்னிடம் கூறியது, பாடும் மொழியோ, இசை லட்சணங்களோ புரியவில்லை. ஆனால் உங்கள் இசையும், அதை கலைஞர்கள் தரும் பாங்கும் மனதுக்கு இதமாக உள்ளது. உன்னதமாக உள்ளது. ஒரு தடவை அல்ல நூறு தடவை இதைக் கேட்டுள்ளேன்.
    நம் நாடுகளில் தனி ஆவர்த்தனம் இயற்கை உவாதை தீர்க்கும் நேரம், இங்கே அது முடிந்ததும் 10 நிமிடம் கரஓசை எழுப்பி மீண்டும் வாசிக்கும்படி கேட்பார்கள். அதிலும் கடம்- ஒரு மண்குடமா? இந்த நாதம் பேசுவதென வியக்காதாரில்லை.
    இசைக் கச்சேரி நடக்கும் போது, குண்டூசி விழுந்தால் சந்தம் கேட்பதென்ன பிரமாதம், இறகு விழும் சத்தம் கேட்கலாம்.
    அப்படி ஒரு அமைதி, இசைக்குக் கொடுக்கும் மரியாதை.
    இப்படி நம் இசைக்குப் பழக்கமில்லாத இந்த மேற்குலகமே ரசிக்கும் நம் மிசையை, கருவிலே ருசித்த நாம் ரசிக்க ஏது தடை. இசைத் சட்ட திட்டங்களா? எனக்கு அவற்றில் அக்கறையேயில்லை.
    இந்த அக்கரை சுவர்ணலதா, வயலின் வித்தகி அக்கரை சுப்லக்சுமியின் உறவா?
    அக்கரை சுப்லக்சுமி 3 வருடங்களின் முன் பாரிஸ் வந்திருந்தார். தேர்ந்த ஞானம், சுகமான வாசிப்பு.

    நீங்கள் இசையை விபரமாக ரசிக்கக் கூடிய வகையில் எழுதுகிறீர்கள்.இப்படியே தொடரவும்.
    அதிகம் இசை நுணுக்கங்களைக் கலந்து, எங்களை உங்கள் பதிவுப் பக்கம் வராமல் விரட்ட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக்4 ஜனவரி, 2012 அன்று 9:31 AM

    ஆகா, யோகன்!

    பதிலளிநீக்கு
  16. குரோம்பேட்டைக்குறும்பன், அதான், அதான், நான் எனக்குப் போட்ட ஒரு ஓட்டுக்கூட எனக்கு விழலை! என்ன அநியாயம் இது! அது சரி, உங்க கிட்டே கான்வாசிங் எப்படிப் பண்ணறது/ உங்க ஓட்டை எனக்கே போடுங்க. :)))) ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!