Wednesday, January 16, 2013

பெயரில் என்ன இருக்கிறது?


இதோ கடந்து விட்டது இன்னுமொரு திருநாள். பொங்கலானால் என்ன, தீபாவளியானால் என்ன? பெயரில் என்ன இருக்கிறது? 

                
தீபாவளி நினைவுகளில் பழைய நினைவுகளின் சுகம் இப்போது இல்லை. அதைச் சொன்னால் இப்போது இருப்பவர்களுக்குப் புரியவும் இல்லை. முன் காலத்தில் கூடி விளையாடவும், வெடிக்கவும் இடம் இருந்தது. அதைவிட  வேறு கவனக் கலைப்புகள் இன்றி பண்டிகைகளை உணர்ந்து கொண்டாட  நேரம் இருந்தது! இந்தக் காலப் பிள்ளைகளுக்கு தீபாவளி என்பது நரகாசுரனோ, கௌரி நோன்போ, நண்பர்களுடன் விளையாட்டோ, வெடி வெடிப்போ இல்லை. ஒன்று, 25 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு வாங்கி முதல் நாள், முதல் ஷோ படங்கள். அல்லது இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறைப் படங்கள். இல்லாவிட்டால் விவேககஞ்சாசந்தானவடிவேலுக் காமெடிகள்... புத்தாடை அணியும் மகிழ்ச்சியோ, தீபாவளிப் பலகாரங்கள் மகிழ்ச்சியோ கூடக் கொண்டாடப் படுவதில்லை. விளையாட்டு மைதானங்களை விழுங்கிய கான்க்ரீட் கட்டடங்கள் மனங்களையும் இறுக்கி விட்டன.

ஆனால், இந்நாள் குழந்தைகள் பின்னாட்களில் பெரியவர்களானதும் அவர்கள் குழந்தைப் பருவம் மாதிரி இல்லை என்று அப்போது நிலை குறித்து வருத்தப் படுவார்களோ என்னமோ...!

பொங்கலுக்கும் இதே தொலைக்காட்சி, சினிமா தொந்தரவுகள் உண்டு. முகநூலில் இப்போது கொஞ்சம் பேர் பழைய பொங்கல் வாழ்த்துகள் போல படங்களை எடுத்துப் பகிர்கிறார்கள். பார்க்கும்போது பழைய நினைவு வருகிறது. 15 பைசா கார்டிலிருந்து, 1.50 பைசா, 2.50 பைசா என்று பைசாக் கணக்கில் ஏறிக் கொண்டே போகும் காஸ்ட்லி பொங்கல் வாழ்த்துகள். 

                
யாருக்கு வாழ்த்துகள் நிறைய வந்திருக்கிறது என்று நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்ன படம் என்று அறிவதில் ஆர்வம் இருக்கும். பண்டிகைக் குறித்த படங்கள் சாதாரணம். வெட்டி ஒட்டியது போலச் சிறப்புத் தோற்றத்திலும், கலரில், கார்டில், கவரில் ஜிகினா ஒட்டி, முன்பக்கம் ஒன்று பின்பக்கம் ஒன்று என விதவிதமாய் வாழ்த்துகள் வரும்....  

          
அப்புறம் நடிக, நடிகையர் படங்கள் விசேஷம். பொங்கல் வாழ்த்துகளில் அச்சிட்டிருக்கும் வாழ்த்துகளைக் காபி செய்து 10 பைசா, அப்புறம் 15 பைசா கார்டில் ழுதி அனுப்பும் 'ஏழை'ப் பொங்கல் வாழ்த்துகளும் உண்டு.  நான் தபால் கார்டில், என் கையால் படங்கள் வரைந்து, டிசைன் போட்டு அனுப்பியிருக்கிறேன்!! பொங்கலன்று தபால் நிலையம் விடுமுறை என்பதால் அதற்கு முந்தய வேலை நாட்களில் கிடைக்குமாறு  அனுப்புவது வழக்கம்.

          
தபால் அலுவலகம் அந்த ஒரு வாரம் அல்லகல்லோலப் படும். பாவம் தபால்காரர்கள். கட்டுக் கட்டாக வாழ்த்துக் கவர்கள், அட்டைகளைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அலைவார்கள். பொங்கல் காசும் அவர்களுக்குக் கிடைக்கும். இப்போது வெறிச்சிட்டு நிற்கின்றன தபால் நிலையங்கள்.

                             

காவிரியில் தண்ணீர் இல்லை. தண்ணீர் விட சக இந்தியர்களுக்கே மனதில் ஈரம் இல்லை. பொய்த்துக் கொண்டே வரும் பருவ மழைகள். காய்ந்து கிடக்கும் விளை நிலங்கள்.  தவித்து நிற்கும் விவசாயிகள். விளைச்சல் சரியில்லாத கரும்புகளுக்கு கொள்முதல் விலை சரியில்லாத சோகத்தில் கரும்பு சாகுபடிக்காரர்கள். 

                                                     
விலையில்லா அரிசியில் யாரும் பொங்கல் செய்தார்களா, தெரியாது. ஆனால் அரசாங்கம் தந்த இலவச வேட்டி சேலையை, 100 ரூபாயை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இலவசம் கொடுக்கும் / வாங்கும் வழக்கம் என்று நிற்குமோ!

         
தீபாவளி, பொங்கலானால் என்ன, குடியரசு தினம், சுதந்திர தினமானால் என்ன, அந்தந்த தின தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை.

பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பண்டிகை தினங்களும் ஒரே விதமாய்த்தான் இருக்கின்றன.

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பண்டிகை தினங்களும் ஒரே விதமாய்த்தான் இருக்கின்றன.

அந்தந்த தின தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் என சம்பந்தமில்லாத பேட்டிகளுக்குக் குறைவில்லை.

பழனி.கந்தசாமி said...

டிவிக்காரன் பண்றதுதான் இது.

ஹுஸைனம்மா said...

ம்ம்... அப்போவெல்லாம் பண்டிகைகளுக்கெனவே சில உற்சாகங்கள் இருந்தன. புத்தாடை, விசேஷ உணவு, பலகாரங்கள், வாழ்த்து அட்டைகள், உறவினர்-நண்பர்களைச் சந்திப்பது, புதுப்படங்கள்... இப்படிப் பலவும். இப்போ அதெல்லாம் தினப்படி வாடிக்கையாகிவிட்டதால, அவற்றோடு பண்டிகைகளும் சுவாரஸ்யம் இழந்துவிட்டன.

ராமலக்ஷ்மி said...

நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்துமே சரியாகதான் இருக்கிறது. விவசாயிகளின் வேதனைகளுக்கு நடுவே இன்று பொங்கல் கொண்டாட்டங்கள்.

வாழ்த்து அனுப்புகிற பெறுகின்ற உற்சாகமான பண்டிகை உணர்வுகளும் காணமலேதான் போய் விட்டன.

அமைதிச்சாரல் said...

//இந்நாள் குழந்தைகள் பின்னாட்களில் பெரியவர்களானதும் அவர்கள் குழந்தைப் பருவம் மாதிரி இல்லை என்று அப்போது நிலை குறித்து வருத்தப் படுவார்களோ என்னமோ...!//

இந்த எண்ணம் அடிக்கடி வருவதுண்டு. இன்னும் வருங்காலத்தில் நிலைமை எப்படியிருக்கும்ன்னு தெரியாதே :-(

வாழ்த்து அட்டைகள், புத்தாடை, பலகாரங்கள் ஒரு காலத்தில் அபூர்வமாக் கிடைச்சது. அதனால் மதிப்புமிருந்தது. இப்ப அப்படியில்லையே.

RAMVI said...

என்னுடைய சிறு வயது பண்டிகைக் கொண்டாட்டங்களை நினைவு படுத்தியது பதிவு.
கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் குறைந்து தொலைக்காட்சி பார்ப்பதே இந்நாளில் பெரிதாக ஆகிவிட்டது மனதுக்கு வருத்தம் தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
பொங்கல் அன்று உறவினர் வீட்டுக்குப் போனோம். சாலையில் நடன்மாடமே இல்லை. வீட்டிலோ தியேட்டரிலோ அடைந்திருப்பர்கள் என்று தோன்றியது.

என்ன அழகான காற்று,. ஹா என்று அனுபவிக்க முடிந்தது.
புத்தாடை மதிப்புக் குறைந்துவிட்டது.
எல்லாமே சப்பென்றாகிவிட்டதா.புரியவில்லை.

s suresh said...

உண்மைதான் பண்டிகைகளின் உற்சாகம் குறைந்துவிட்டது! இதுவரை நான் பார்த்த பொங்கல்களில் இந்த ஆண்டு உற்சாகம் ரொம்ப குறைவாக தோன்றியது! காலம் வேகமாக ஓடுகிறது!

சீனு said...

எனக்கும் நினைவு இருக்கிறது என் எட்டாம் வகுப்பு வரைக்கும் வாழ்த்து அட்டைகளை கொடுத்து இருக்கிறேன், வாங்கிக் குவித்து இருக்கிறேன். இவன் நமக்கு வாழ்த்து அட்டை தர மாறான என்றெல்லாம் எதிர் பார்த்து இருக்கிறேன்

இன்று வாழ்த்து அட்டைகள் என்பது காதலர் தினத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது...

எங்கே செல்கிறோம் நாம் தெரியவில்லை

பால கணேஷ் said...

ஒரு காலததில எனக்கு வந்த வாழ்த்து அட்டைகளை சேகரித்து வைத்திருந்தேன். இப்போது அனுப்புவதும் பெறுவதும் அறவே இல்லை என்றாகி விடடது. என்ன செய்ய...? தொலைக்காட்சிகளைப் பொறுததவரை எந்தப் பண்டிகை எனறாலும ஒரே விதமான புரோகிராம் மெனுதான்.

சே. குமார் said...

இப்போது பண்டிகைகளை தனது பாக்கெட்டில் இருத்திவிட்டன தொலைக்காட்சிகள்...

பண்டிகை விளையாட்டுக்களோ வாழ்த்து அட்டைகளோ இல்லாமல் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு நாளாகவே கழிகிறது...

வெங்கட் நாகராஜ் said...

சரியாகச் சொன்னீர்கள்.... பெயரில் என்ன இருக்கிறது. என்ன பண்டிகையாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது சினிமா நிகழ்ச்சிகள் - தொல்லைக்காட்சி பெட்டி முன்னரே முழு நாளையும் போக்கி விடுகிறார்கள் இப்போது...

Ranjani Narayanan said...

காலத்தின் கோலம் என்று சொல்லலாமா?

நம் சின்ன வயதில் இத்தனை ஊடகங்கள் இல்லை. வானொலிப் பெட்டி ஒன்றுதான்.

நமக்குத் தெரிந்த ஒரே கொண்டாட்டம் பண்டிகை நாட்களில் உறவுகளைப் பார்த்து நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதுதான்! எத்தனை மாமாக்கள், அத்தைகள், சித்தப்பாக்கள்!

இப்போதெல்லாம் ஒரே குழந்தை. இதனாலும் பண்டிகைகள் ஒளி குறைந்திருக்கின்றன என்று சொல்லலாமா?

ஹேமா said...

முன்னைப்போல் இல்லை இப்போ எதுவும் !

கோமதி அரசு said...

பொங்கல் வாழ்த்து படங்கள் தேடி தேடி யாருக்கு அனுப்புகிறமோ அவர் விருப்பம் தெரிந்து தேர்ந்து எடுத்து அனுப்புவது ஒரு பெரிய கலையாகவும் மனதுக்கு சந்தோஷமும் இருந்தது.
அவை எல்லாம் இல்லாமல் பண்டிகைகள் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!