செவ்வாய், 1 ஜனவரி, 2013

ஃப்ளூட் மாலி

                                                  
பொதுவாழ்வில் ஒரு கலைஞர் ரொம்பப் பிசுக்காரம் செய்துகொண்டால் பொதுமக்கள் என்ன செய்வார்கள்? அவர்களை மதிக்கவே மாட்டார்கள், பகிஷ்காரம் செய்து விடுவார்கள். ஆனால் இவர் செய்த அத்தனைக் கோமாளித்தனங்களையும் பொறுத்துக் கொண்டு, 'இப்படித்தான் இவர், இதையும் மீறியது இவரின் திறமை' என்று தெளிந்து, இவர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு இவர் இஷ்டத்துக்கு வளைந்து இவரின் கலையை ரசித்தவர்கள் தமிழக மக்கள் மற்றும் சக கலைஞர்கள்.
                                                                
அவர்... புல்லாங்குழல் மாலி. T R மகாலிங்கம். சமீபத்தில் இவர் பற்றிப் பத்திரிகைகளில் படித்த சில நினைவுகள்.


மியுசிக் அகாடெமியில் இவர் வந்து கச்சேரி செய்ய ஆரம்பிக்குமுன் ரசிகர்களில் ஒருவரைக்   வெளியேற்றினால்தான் தான் கச்சேரி செய்வேன் என்று சொல்லி விட்டாராம். அவர் சொன்னால் சொன்னதுதான். அந்த ரசிகர் 'தான் ஏன் வெளியில் செல்ல வேண்டும்' என்று அடம் பிடிக்க, மற்ற ரசிகர்கள் வேறு வழியில்லாமல், 'நீங்கள் ஒருவர் வெளியேறினால்தான் மற்றவர்கள் அவர் கச்சேரியை ரசிக்க முடியும், தயவு செய்து ஒத்துழையுங்கள்' என்று வேண்டிக்கொள்ள சரி என்று வெளியேறிய அந்த ரசிகர் புல்லாங்குழல் மாலியின் சொந்தத் தந்தை!


மியுசிக் அகாடமி குழுவினர் 'இவரைக் கச்சேரிக்குப் போட்டால் தலைவலி. வராமல் கழுத்தறுத்து விடுவார்'  என்று பேசிக் கொண்டதைக் கேள்விப்பட்ட மாலி, தானே வலிய அவர்களைத் தொடர்பு கொண்டு தான் வருவதாகச் சொல்ல நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவரை ஒப்பந்தம் செய்து விட்டு, அவரைக் கண்காணிக்க ஒரு புகழ் பெற்ற மிருதங்க வித்வானையும் ஏற்பாடு செய்து 'உங்கள் பொறுப்பு' என்று விட்டார்களாம். அவரும் தினமும் மாலியைச் சந்தித்து உருவேற்றிக் கொண்டேயிருக்க, 'சரி, சரி' என்று சொல்லிக் கொண்டிருந்த மாலி கச்சேரி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கையில் காணாமல் போனாராம். எவ்வளவு முயற்சித்தும் அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் போக வேறு கச்சேரியை ஏற்பாடு செய்யவும் முடியாமல் - ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் - பணம் திருப்பித் தரப் பட, மக்கள் கலைந்து செல்வதை சற்றுத் தள்ளி ஒரு கடையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாராம் மாலி!  'ஏன் இப்படிச் செய்தீர்கள், நியாயமா?' என்று அப்புறம் அவரைக் கேட்டபோது அவர், 'இல்லை, இல்லை, அவர்களுக்குத் தெரியும், நான் ஒத்துக் கொண்டாலும் வரமாட்டேனென்று... கேட்டுப் பாருங்கள். பொதுக்குழுவிலேயே பேசிக் கொண்டார்களே..' என்றாராம்!

இன்னொருமுறை வழக்கம் போல, 'தான் நிச்சயம் வருவேன்' என்று சொல்லியிருக்கிறார். சபாக்காரர்கள் அவர் காரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கம்பளி போர்த்தி, மஃப்ளர் கட்டி அவர் உள்ளே நுழைய முயல, காவலாளி டிக்கெட் கேட்டுத் திருப்பியனுப்ப, வரவில்லை என்றதும் கோபப் பட்டுக் கொந்தளித்து அவரைத் தொடர்பு கொண்டபோது, நடந்ததைச் சொல்லி, 'நான் வந்தேன் உங்கள் காவலாளிதான் உள்ளே விடவில்லை' என்று சொல்ல, நொந்து போனார்களாம் சபாக்காரர்கள்.

இன்னொருமுறை இவர் காரைப் பார்த்ததும் டிக்கெட் வாங்கலாம் என்று காத்திருந்து ரசிகர்கள் இவர் காரைக் கண்டதும் ஓடிச்சென்று டிக்கெட் வாங்கி முண்டியடித்து உள்ளே ஓட, இவரோ காரை விட்டு இறங்காமலே 'உடல்நிலை சரியில்லை' என்று சொல்லி அவர் கிளம்பிப் போக நொந்து போனது இம்முறை ரசிகர்களும்!

இப்படி பெரிய சபாக்காரர்களை இவர் இம்சை செய்தாலும் பெரம்பூர் அயனாவரம் போன்ற சிறிய சபாக்களில் ஒருநாளும் இவர் இப்படிச் செய்ததில்லையாம்.

இவ்வளவு இருந்தும் ஒருமுறை 'மாலி வந்து விட்டார், வாசிக்கத் தொடங்கி விட்டார்' என்று ரசிகர் ஒருவர் மூலம் தகவல் கே பி சுந்தராம்பாளுக்குத் தெரிவிக்கப் பட, அவரும், அப்புறம் எம் எஸ் சதாசிவம் என்று அனைவரும் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்து முழுக் கச்சேரியை ரசித்துச் சென்றதும்,

உடைந்த புல்லாங்குழலை ஒட்டிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து ஊழியர் ஒருவர் 'இதை வைத்து எப்படி இவர் வாசிக்கப் போகிறார்' என்று பேசியபோது, வித்தை குழலில் இல்லை, இந்த மனிதரின் மூச்சில் இருக்கிறது' என்று சொல்லிய இன்னொரு ஊழியரின் பேச்சில் இருந்த நியாயத்தை அன்றைய கச்சேரியில் கண்டாராம் இந்த ஊழியர்.

இன்னொருமுறை தஞ்சாவூர் ஆனந்தபவனம் உணவகத்தில் தங்கியிருந்த மாலி அதிகாலையில் சாதகம் செய்யத் தொடங்கி, வாசித்துக் கொண்டே போனதை அங்கிருந்த ஊழியர்கள், அருகிலிருந்த ரிக்ஷாக்காரர்கள், போன்ற எளியோர்கள் மணிக்கணக்கில் ரசித்தனராம்.

'இப்படி கச்சேரியை ஒத்துக் கொண்டு ஒத்துக் கொண்டு கேன்சல் செய்கிறீர்களே, இது நியாயமா' என்று நண்பர் ஒருவர் மாலியைக் கேட்டபோது மாலி சொன்னாராம், 'ஒத்துக் கொள்ளாமல் எப்படிக் கேன்சல் செய்வது?'

10 கருத்துகள்:

 1. மாலியும் அம்பத்தூரில் தான் இருந்தார். அங்கே ஒரு வீட்டில் அவர் கச்சேரியைக் கேட்டிருக்கேன். :)))

  பதிலளிநீக்கு
 2. மரபொந்தில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மாலி அவர்களின் புல்லாங்குழல் இசையில் மயங்கி திளைக்கிறதே மைனா.

  அருமையான புல்லாங்குழல் இசையை ரசிக்க கொடுத்தமைக்கு நன்றி.

  மாலி அவர்களை பற்றிய செய்தியை அறிய தந்தைமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான இசைக்கலைஞரை பற்றிய அரிய தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மாலி எப்படி விநோதமாக நடந்து கொண்டாரோ. அவரது குழல் கொடுத்த நாதம் தேவகானம். மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு

 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 6. புல்லாங்குழல் மேதை என்று மாலியை பற்றி கேள்விப் பட்டிருகிறேனே தவிர அவரைப் பற்றி வேறு தகவல்கள் தெரியாது.நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
 7. மாலி என்னும் கலைஞரைப் பற்றி தெரிந்து கொண்டேன். விசித்திரமான மனிதர் தான் போல

  // பிசுக்காரம் பகிஷ்காரம் // ஆமா சார் இதுவெல்லாம் எந்த கிரகத்து வார்த்தைகள் சத்தியமா புரியல

  பதிலளிநீக்கு
 8. வித்தை குழலில் இல்லை, இந்த மனிதரின் மூச்சில் இருக்கிறது' என்று சொல்லிய இன்னொரு ஊழியரின் பேச்சில் இருந்த நியாயத்தை அன்றைய கச்சேரியில் கண்டாராம் இந்த ஊழியர்./

  ஒத்துக் கொள்ளாமல் எப்படிக் கேன்சல் செய்வது?'

  வித்வத் இருக்குமிடத்தில் விதண்டாவாதமும் இருக்குமோ !!!??

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!