அசோக் லேலண்டில் நவம்பர் மாதம் வந்ததுமே தொழிலகத்தில் குறிப்பாக எங்கள் இன்ஜினியரிங் பகுதியில் ஓர் எதிர்பார்ப்பு கலந்த, ஆர்வத்துடன் கூடிய, சிறிய பரபரப்பு பற்றிக் கொள்ளும்.
நிர்வாகத்தினர், அடுத்த ஆண்டுக்கான பன்னிரண்டு நாட்கள் பண்டிகை விடுமுறை நாட்கள் என்னென்ன என்று ஒரு வரைவு சுற்றறிக்கை அனுப்புவார்கள். எல்லா பகுதி அறிவிப்புப் பலகையிலும் அந்த அறிவிப்புத் தாள் ஒட்டப்படும்.
தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அதுவே இறுதி அறிவிப்பாகவும் உறுதி செய்யப்படும். எனக்குத் தெரிந்து, ஒரே ஒரு வருடம் மட்டும் அந்த விடுமுறை நாள் பட்டியலில் இறுதி வடிவம் வரும் பொழுது, ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எல்லைக்கருகே அமைந்திருக்கும் தொழிலகம் என்பதால், எண்ணூரில் (என்னைப் போன்ற) மனவாடுகள் அதிகம். அந்த குறிப்பிட்ட வருடத்தில் தமிழ் வருடப் பிறப்பு தினம் ஒரு திங்கட்கிழமையில் (எண்ணூர் அசோக் லேலண்டுக்கு வாராந்திர விடுமுறை தினம்) வந்ததால், பன்னிரண்டு விடுமுறை நாட்களில் அதை ஒன்றாக சேர்க்காமல், தெலுங்கு வருடப் பிறப்பு தினத்தை அந்த ஆண்டில் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி ம வா எல்லோரும் சேர்ந்து கேட்டு, வெற்றியும் பெற்றார்கள்.
இதில் வேறொரு சூட்சுமமும் இருக்கின்றது. விடுமுறை நாட்களை யூனியன் தோழர்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது, இயன்றவரையிலும் சனி அல்லது செவ்வாய்க்கிழமை வருமாறு பார்த்துக் கொள்வார்கள். அந்தக் காலத்தில் ஞாயிறு வேலை நாளுக்கு விடுமுறை விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. ஞாயிறு வேலைக்கு வரவில்லை என்றால், சம்பளத்தில் உபரியாக வருகின்ற ஞாயிற்றுக் கிழமை சம்பளம் (sixth day salary) வெட்டப்படும். மாதத்தில் நான்கு அல்லது ஐந்து ஞாயிறு வந்தால், அதற்குரிய உபரி சம்பளம் கிடைக்கும்.
சனி அல்லது செவ்வாய்க்கிழமை பண்டிகை விடுமுறையாக அமைந்தால், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிடும். மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கின்றதே!
விடுமுறை அறிவிப்பு வந்தவுடனேயே எங்கள் பகுதியில் வேலை பார்க்கும் இரண்டு டிரேசர்கள் மும்முரமாக, ஒரு A4 டிரேசிங் பேப்பரில் அடுத்த ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பார்கள். (நோ நோ இந்தக் காலண்டரில் கவர்ச்சிப் படங்கள் எதுவும் கிடையாது). சற்றேறக் குறைய, அந்தக் காலண்டரின் அமைப்பு, இந்தப் படத்தில் காணப்படுவது போல இருக்கும்.
டிரேசிங் பேப்பரில் வரையப்பட்ட காலண்டர் என்பதால், இதை வைத்து நிறைய அம்மோனியா பிரிண்ட் எடுக்கலாம். எடுப்போம். எங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று ஆளுக்கொன்று தருவதற்காக, ஆயிரக் கணக்கில் பிரிண்டுகள் தயாரான வருடங்களும் உண்டு.
என்னுடைய அசோக் லேலண்ட் சர்வீஸ் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாமே ஒரு கோப்பாக வைத்திருந்தேன். 1974 தொடங்கி, 2006 வரை ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு தாள். என்னுடைய காலண்டர் தாளில், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு நான் எத்தனை மணிக்கு வந்து, எத்தனை மணி வரை இருந்தேன், லீவு என்றால் என்ன லீவு, ஏன் லீவு, வாங்கிய சம்பளம் என்ன, இன்செண்டிவ் என்ன, போனஸ் என்ன போன்ற எல்லா விவரங்களும் எழுதி வைத்திருந்தேன்.
ஏ எம் ஐ ஈ பரிட்சை எழுதிய வருடங்களில், (1977 ~ 1983) summer / winter exams வருகின்ற நாட்களில், பரிட்சைக்குப் படிக்கவும், எழுதவும் ஒவ்வொரு சீசனிலும் இரண்டிரண்டு வாரங்கள் லீவு போட்டுப் படித்து பரிட்சை எழுதுவேன்.
நான்கு பரிட்சை எழுதி இரண்டு அல்லது மூன்று சப்ஜெக்டுகளில் பாஸ் செய்வேன். சில சமயங்களில் வாஷ் அவுட்டும் ஆனது உண்டு. அது தனிக் கதை! காலண்டரை வைத்துக் கொண்டு திட்டம் போட்டு லீவு விண்ணப்பம் அளித்து, படித்து, எழுதுவேன்.
ஏ எம் ஐ ஈ பாஸ் செய்த பிறகு, ஒவ்வொரு வருடமும் கடைசி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களோ அல்லது கடைசி பத்து நாட்களோ லீவு போட்டு விட்டு, எல்லா நாட்களையும், மியுசிக் அகடெமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன், தமிழ் இசை சங்கம், இன்னும் மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் கச்சேரி நடக்கும் இடங்களாக சுற்றுவேன். வாழ்க்கையின் மகிழ்ச்சியான மார்கழி மாதங்கள்!
சுவாரஸ்யமான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குஓசூர் லேலண்டில் தெலுங்கு வருடப் பிறப்பு ரைட் ராயலாக விடுமுறை. ஓசூரே பலகாலம் ஆந்திராவின் கீழ் இருந்த ஊர்!
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
அனுபவம் அருமை.ஏ எம் ஐ ஈ மிகக் கடினம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது ஏ எம் ஐ ஈ இருகிறதா?
பதிலளிநீக்குவாழ்க்கையின் மகிழ்ச்சியான மார்கழி மாதங்கள்! மகிழ்ச்சியான திட்டமிட்ட பகிர்வுகள்..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு// (நோ நோ இந்தக் காலண்டரில் கவர்ச்சிப் படங்கள் எதுவும் கிடையாது). //
பதிலளிநீக்கு:))) இதுக்கு சாட்சியா காலண்டர் படம் வேறயா! :)
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈஸி பாலிசி. இதுதான் எங்களுக்கு. வேற ஒன்னும் பண்ண முடியாது. அப்போ எல்லாம் எனக்கு மார்கழி மாசம்னாலே கோவில்தான். கச்சேரிகளை விட அப்பாவோட கதாகாலட்சேபம் போனதுதான் அதிகம்.
நல்ல சுவாரசியமான பதிவு.
மகிழ்ச்சியான மார்கழி மாதங்களை மிக சுவாரசியமாக பகிர்ந்திருக்கீங்க.
பதிலளிநீக்குஅசோக் லேலண்ட் அனுபவங்கள், அலேக் அனுபவங்களாக மாறி படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஉங்களது திட்டமிடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது. இன்னும் அப்படித்தானோ?
காலண்டர் வந்தவுடன் லீவு நாட்களை முதலில் பார்க்கும் பழக்கம் எனக்கும் உண்டு. அதைவிட எங்கள் எல்லோரது பிறந்தநாட்களையும் குறித்து வைப்பது மிகவும் பிடித்த விஷயம்.
'அந்த' காலத்துக்கே போய் விட்டேன்!
சுகமான நினைவுகள்.....
பதிலளிநீக்குஎங்கள் அலுவலகத்திலும் ஒரு நபர் இப்படி காலண்டர்கள் கணினியில் தயாரித்து ஆண்டின் முதல் நாளன்று எல்லோருக்கும் தந்து புத்தாண்டு வாழ்த்துச் சொல்வார்.....