வியாழன், 14 பிப்ரவரி, 2013

முக்கண் முதன்மை!

            
ரெக்கார்டு நோட்டுப் புத்தகம்  செட் ஸ்கொயர் கருப்பு மை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு 10 மிமீ அல்லது 12 மிமீ எது பார்டருக்கு நன்றாக இருக்கும்.  ஒரு கோடு போட்டால் போதுமா  இல்லை இரண்டு கோடுகள், அதிலும் ஒன்று மட்டும் அழுத்தமாக .... என்று இப்படி உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மா வந்தாள்.
 

  
"மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு சும்மா தானே உட்கார்ந்திருக்கே ?  ஒரு வேலை செய்யேன். " என்றாள். 
            
" உம் சொல்லு, நீ சொல்லி நான் செய்யாமல் போயிருக்கேன் இல்லை தப்பிக்கத்தான் முடியுமா? சீக்கிரம் சொல்லு.   எனக்கு ஒரு 5 பக்க ரெகார்டு வேலை இருக்கு."
          
"தேங்காய் சேவைக்கு பாக்கி எல்லாம் ரெடி.  நீ போய் பரசுராமன் கடையிலிருந்து ஒரு தேங்காய் வாங்கி வந்துடு."
   
நான் என்னுடைய மானசீக பைக்கில் [அதாங்க, வி வடிவத்தில் ரப்பரில் வார் போட்ட சிங்கப்பூர் செருப்பு ] ஏறிப்பறந்தேன்.
        
பரசுராமன் மளிகை வாசலில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்டு போட்ட பின் தான் கடை இன்னும் திறக்க வில்லை என்பதைக் கவனித்தேன்.  பின்னர் தான் அன்று வியாழக்கிழமை என்பதும் நினைவுக்கு வந்தது.  அவர் கடைக்கு வாராந்தர விடுமுறை.  பரகத் ஸ்டோர் வெள்ளியன்று தான் விடுமுறை என்பது நினைவுக்கு வர பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்து மாரியம்மன் கோவிலருகே போனதும் இங்கேயே வாங்கிப் போனால் என்ன என்று எண்ணம் வர, 
            
அங்கேயே வாங்கியும் விட்டேன். பரசுராமன் கடையில் என்றால் அவர் ஒன்றை எடுத்து ஓரமாக வைத்து விட்டு மற்றொன்றை எடுத்து காதுக்கு நேரே ஆட்டிப் பார்த்து பிறகு மூன்றாவதாக ஒரு காயை எடுத்து முன்னதுடன் மோதி சப்தத்தில் திருப்தி அடைந்தால்  மட்டுமே நம்மிடம் தருவார். தேங்காய்க் குவியல் நமக்கு எட்டும் தூரத்தில் இருக்காது.  ஆனால் இங்கே கடைக்காரர் தேங்காய குன்றின் பின் ஒளிந்து கொண்டு நீயே எடுத்துக்கோ என்று சொன்னதற்கு காரணம் அவர் சோம்பேறித்தனமா, இல்லை காலை உணவு அருந்திக் கொண்டிருந்ததால் எச்சில் கையால் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரா, இல்லை, வாடிக்கையாளர் அவருக்கு வேண்டியதை அவரே தேர்வு செய்யட்டும் என்ற ஜனநாயக பாதுகாவலரா என்றெல்லாம் யோசனைகள் செய்யாமல், அம்மன் கோவிலுக்கு நேர்ந்து கொண்டவர்கள் வாங்கிப் போவதுதான் நமக்கும் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் என்று கைக்கு வந்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். 
              
பஞ்சு கிருஷ்ணனுக்கு எப்போது எதிரில் வரலாம் வரக் கூடாது என்று பாகுபாடுகள் எல்லாம் இல்லை.  வந்தால் ஒரு அரை மணி நேரம் எதாவது கேள்விகளாக கேட்டுக் கொண்டே இரு[அறு?]ப்பான்.   
                 
அன்று பேசியதெல்லாம் இன்றும் நினைவுக்கு வருகிறது  நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை.  கே லூசக்கின் லா ஆஃப் கம்பைனிங் காஸ் வால்யூம்சிலிருந்து இந்திய நிலக்கரிக்கும், இங்கிலாந்து கரிக்கும் உள்ள வித்தியாசங்கள் நெய்வேலியில் எடுக்கப் படும் பழுப்பு நிலக்கரி இப்படி நிறைய பேசிய பின், நானும் உங்க வீட்டுப் பக்கம்தான் வருகிறேன், 104 பாலுவிடம் பழைய புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல அவ்வளவு நேரம் அம்மாவைக் காக்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.  பெயருக்குத்தான் பஞ்சு - பறக்க எல்லாம் மாட்டான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து எறும்பு போலத்தான் நடப்பான். 
        
ஒரு வழியாக கிழக்கு மடவிளாகத்தில் முனையில் அவனை விட்டு விட்டு, வீட்டுக்குள் வந்து அம்மாவிடம் தேங்காயைக் கொடுத்து விட்டு ரெகார்டு நோட்டு பென்சில் பேனாக்களில் கவனம் செலுத்தினேன்.
              
மீண்டும் அம்மா.  கையில் உடைத்த தேங்காய்  பாண்டியன் சபையில் சிலம்பைக் கையில் வைத்துக் கொண்டு நீதி கேட்கும் கண்ணகி போன்ற  முக பாவம்.  
              
"கடைக்காரர் தானே எடுத்துக் கொடுத்தார் ? இல்லை நீயே எடுத்தியா ?"
               
"நான்.... நான் ,,, தான் எடுத்தேன்." 
         
"நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? நல்லா தட்டிப் பார்த்து, கனம் அதிகமில்லாமல் உள்ளே நீர் ஆடணும்னு .....? போ, போய்க் கொடுத்து விட்டு வேறு வாங்கி வா.  பரசுராமன் கட்டாயம் மாற்றிக் கொடுப்பார். " 
       
"அம்மா இன்னிக்கு வியாழக் கிழமை"  
   
"வியாழக் கிழமைன்னா ...?"
  
" பரசுராமன் கடை லீவு!"  
             
"பின்னே இதை எங்கே வாங்கினே ?" 
  
"மாரியம்மன் கோவில் வாசல்லே."
           
"அவரும் மாற்றிக் கொடுப்பார்; நீ போய் கேட்டுப் பார்."
    
"எனக்கு நிறைய வேலை...இருக்கும்மா"   
     
"பஞ்சு கிருஷ்ணனுடன் வம்பளக்கும் பொழுது இந்த வேலை எல்லாம் இங்கேயே தானே இருந்தது ?" 
            
 அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது!
             
அதுக்காக எல்லோருமா பரசுராமன் ? இந்தக் கடைக்காரர் என்னைப் பார்க்கவே இல்லை - நானும் அவரைப் பார்க்கவில்லை. எனக்கு வேறு யாராவது அங்கே உட்கார்ந்திருந்தால் கூட தெரியாது!
             
"போ, போய் கேட்டுப்பார்."
                   
'ஏதோ கண்ணகி சாபம் எதுவும் கொடுக்காமல் அந்தப்புறம் போனது நாம் செய்த பாக்கியம்' என்று மீண்டும் சென்று, சென்றார் - கண்டார் - வென்றார் வந்தார் என்பது போல திரும்பி வந்து தம்பி தங்கையுடன் தேங்காய் சேவை சாப்பிட்டது இன்றும் பசுமை.
    
இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி.
             

14 கருத்துகள்:

  1. //இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி. //

    :-)))))

    பதிலளிநீக்கு
  2. தேங்காய் இப்படி வாங்கி வந்தால் மகனை திருப்பி அனுப்புவேன். அதைப்பார்த்த் என் கணவர் முன் ஜாக்கிரதையாக உடைத்தே வாங்கி வந்து விடுகிறார்கள்.

    அம்மா செய்து தந்த தேங்காய் சேவை உங்கள் நினைவைவிட்டு அகலாதே!

    பதிலளிநீக்கு
  3. சுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //http://geetha-sambasivam.blogspot.in/2012/09/blog-post_6315.html#comment-form//

    அப்படியே சேவை செய்முறையோடயே பார்த்துடுங்க. இதிலே வர தேங்காய்ச் சேவையைத் தான் கெளதம் சார் சொல்லி இருக்காரானு தெரியலை. ஸ்ரீராம் தேங்காயோடு சர்க்கரை கலந்து சாப்பிடுவோம்னு சொல்லி இருக்கார். அப்படியும் சாப்பிடலாம். வெல்லம், தேங்காய் சேர்த்தும் சாப்பிடலாம். இதிலே சொல்லி இருக்காப்போல் தேங்காய்ச் சாதம் பக்குவத்தில் தாளிதம் செய்து சேவையைக் கலந்து சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.

    அப்பாடா, இதுக்கும் ஒரு இணைப்பைக் கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))))

    விடமாட்டோமுல்ல!

    பதிலளிநீக்கு
  5. இதைப் படித்ததும் என் அம்மா சேவை செய்த நினைவுகள் கண் முன்னே வந்து நிற்கின்றன. ரெடிமேட் சேவை கிடைத்தாலும் அன்று அம்மா செய்த ருசி நீங்கவே நீங்காது...

    நானும் உடைத்தே தான் வாங்கி வருவேன் இப்பொழுதும். எனக்கு தேங்காய் உடைக்க வராது என்பதும் காரணம்...:))

    பதிலளிநீக்கு
  6. //இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி. //
    ஆஹா இப்படிக்கூட ஒரு விமரிசனமா
    தேங்காய் சேவை நன்றாக வந்திருக்கும்.
    பார்த்து வாங்கியதாச்சே:)

    பதிலளிநீக்கு
  7. அடுக்குமாடிக் குடியிருப்பில் தேங்காய் உடைக்க இடம் ஏது? அதனால் உடைத்தே வாங்குவது வழக்கம். கல்யாணத் தேங்காய்கள் தானம் செய்யப்பட்டுவிடும்.

    தேங்காய் சேவை செய்ய வேண்டும் போல இருக்கிறது இந்தப் பதிவைப் படித்தவுடன்!

    பதிலளிநீக்கு
  8. ரஞ்சனி, தேங்காய் உடைக்கவென்றே ஒரு கல் உரல் வாங்கி வைச்சிருக்கேன். அதிலே தான் உடைக்கிறது. உடைச்செல்லாம் வாங்கறதில்லை. :)))) எனக்கும் சேவை செய்யணும்னு ஆசை தான். ஆனால் இப்போ வடாம் சீசன்! :))) நான் வடாம் மாவு கிளற ஆரம்பிச்சால் உடனே தூறல் வருது! வானமும், நானும் ஜெயிக்கப் போறது யாருனு போட்டி போடறோம். :)))))

    பதிலளிநீக்கு
  9. இனிமையான நினைவுகள்....

    தேங்காய் வாங்கிக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்து நன்றாக இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் வரை இருக்கும் சஸ்பென்ஸ்! :)

    தில்லியில் வீட்டுக்குக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்து நன்றாக இல்லை எனத் திருப்பிக் கொடுக்க முடியாது! - வாங்கிக் கொள்வதில்லை என்பதாலும் உடைத்தே வாங்கி வந்து விடுவோம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!