செவ்வாய், 7 அக்டோபர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 06 மறக்கமாட்டேன்!


முந்தைய பகுதி சுட்டி இங்கே: மறந்துவிடு 

திரு விஸ்வம் அவர்களுக்கு,

மன்னித்துவிடு, மறந்துவிடு என்று அரசியல்வாதி போல எழுதியிருக்கின்றீர்கள். 

மன்னிப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன குற்றம் செய்தீர்கள்? இந்தக் கல்யாணியைக் கல்யாணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றியது ஒரு குற்றமா? நான் முதன் முதலில் கூறியதை சற்று நினைத்துப் பாருங்கள். 'இதெல்லாம் என்னுடைய அப்பாவுக்குப் பிடிக்காது, தெரிந்தால் முதுகுத் தோலை உரித்துவிடுவார்' என்றுதானே! அப்பா என்னை மன்னிப்பாரா என்று தெரியவில்லை - அவருடைய பேச்சை மீறி, காதல், கத்தரிக்காய் என்று விழுந்ததற்கு. மன்னிப்பதற்குரிய குற்றம் எதையும் நீங்கள் செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுவதால், மன்னிப்பு என்ற சொல்லுக்கே இகே இடமில்லை. அதனால், சந்தோஷமாக, உங்கள் அம்மா சொல்லுகின்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள். 
உங்களுக்கு ஒரு பையன் பிறந்தால், அவன் ஏழைப் பெண் யாரையும் விரும்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

அப்பொழுது 'என்னை நினை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்கின்றேன்' என்றீர்கள், நான் 'நினைக்கமாட்டேன்' என்றேன். இப்பொழுது, 'என்னை மறந்துவிடு, நான் வேறொரு கல்யாணம் செய்துகொள்கின்றேன்' என்கிறீர்கள். 

இப்பொழுது  நான் கூறப்போவது, 'மறக்கமாட்டேன்' என்பதுதான். எப்படி மறக்க முடியும்? மருந்து சாப்பிடும்பொழுது குரங்கை நினைக்கக்கூடாது என்று கூறப்பட்டவன் கதைதான்.  வாழ்க்கை ஒரு சிலேட்டா? எழுதியதை எல்லாம் எச்சில் தொட்டு அழித்துவிட்டு, வேறு ஒன்றை எழுதிக்கொள்ள முடியுமா? அப்படியே சிலேட்டாக இருந்தாலும், பலப்பம் வைத்து எழுதியதை அழிக்கலாம்; ஆணி கொண்டு போட்ட கோடுகளை அழித்துவிடமுடியுமா? 
     
    

நீங்கள் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொரு வார்த்தையும், என் இதயத்தில் ஆணிக்கீறல்களாக உள்ளனவே! இதயத்திலிருந்து அவைகளை அழித்துவிட இயலுமா? 

என் வாழ்க்கையில் காதல் என்ற ஒரு சொல்லினால்,  எனக்கு ஒரு பிரியமான அம்மா கிடைத்துள்ளார்கள். இதற்காக நான் உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்லவேண்டும். 

உங்கள் கடிதத்தில், "கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும். என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு." என்று எழுதியிருந்தீர்கள்! 

அடுத்தமுறை பார்க்க நேர்ந்தால் ...... பார்க்க நேர்ந்தால் ! பார்க்க நேர்ந்தால் ....! 

'பார்க்கவேண்டாம் .... ' என்று நினைக்கின்றீர்கள் போலிருக்கு. நேர்ந்தால் பார்ப்போம்! 

'கணவனுடனும்...' ஹா ஹா - இதற்குச் சந்தர்ப்பமே வாய்க்காது! 
'குழந்தையுடனும் ..... ?' ஹா ஹா குட் ஜோக்!                   
'சிரித்த முகத்தோடு ....' சந்திக்க நேர்ந்தால், இதைப்பற்றி சிந்திக்கின்றேன். சரி என்று தோன்றினால் சிரிக்கின்றேன்! 

அதுவரையிலும் ....... 

என்றும் மறவாத 
கல்யாணி. 
   
(தொடரும்) 
       

15 கருத்துகள்:

  1. நல்ல சாட்டையடி, ஆனால் இது போதாது. இவனுக்காகக் கல்யாணி உருகிக் கொண்டு இவன் நினைவாகவே இருப்பது தப்பு. கல்யாணி மனம் மாறப் பிரார்த்திக்கிறேன். :)))))

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதில் கல்யாணியிடமிருந்து! விஸ்வம் போன்றோருக்கு இது போன்ற நெத்தியடி அவசியம்! அவன் முன்னால் கல்யாணி வாழ்ந்து காட்ட வேண்டும்! தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு
  3. கல்யாணி கலங்காமல் சாட்டையடியாக கொடுத்த பதில் சூப்பர்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.
    கதையின் கற்பனை கதையோட்டம் மிக அருமையாகஉள்ளது வாசிக்கும் உள்ளங்களை கட்டிப்போட்டு வைத்துள்ளீர்கள் .. தொடருங்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்
    நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இம்மாதிரிப் பெண்கள் ஏமாளிகளா விஷ்யம் தெரிந்தவர்களா.?

    பதிலளிநீக்கு
  6. 'காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல் வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன'.

    - 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'
    நாவலின் முன்னுரையில் திரு, ஜெயகாந்தன்.

    பதிலளிநீக்கு
  7. அஹா... கல்யாணியின் பேச்சு ... உரை வீச்சு...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  8. // Geetha Sambasivam said...
    நல்ல சாட்டையடி, ஆனால் இது போதாது. இவனுக்காகக் கல்யாணி உருகிக் கொண்டு இவன் நினைவாகவே இருப்பது தப்பு. கல்யாணி மனம் மாறப் பிரார்த்திக்கிறேன். :)))))//
    நாம் பெற்றக் குழந்தைகளே நம் பேச்சைக் கேட்பதில்லை! அப்படியிருக்க, நாம் படைக்கும் கதாபாத்திரங்கள் கேட்டுவிடுவார்களோ என்ன! :-)

    பதிலளிநீக்கு
  9. கல்யாணி எழுதிய கடிதத்தில் சாட்டையடி எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  10. // G.M Balasubramaniam said...
    இம்மாதிரிப் பெண்கள் ஏமாளிகளா விஷ்யம் தெரிந்தவர்களா.?//

    இப்படியும் பெண்கள் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  11. // ஜீவி said...
    'காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல் வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன'.

    - 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'
    நாவலின் முன்னுரையில் திரு, ஜெயகாந்தன்.//

    ஜீவி சார் - மிகவும் சரியான வார்த்தைகள். முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  12. இரசித்து, கருத்துகளைக் கூறிய அனைவருக்கும் கல்யாணியின் சார்பில் என் நன்றி!

    கல்யாணியின் சிரிப்புக்குக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  13. கல்யாணி மனதில் இருப்பதை எழுதிவிட்டாள். இனியும் வெற்றி பெறுவாள். எத்தனை அழகான மனம் இந்தப் பெண்ணுக்கு. மிக நன்றி இனி அவள் சிரிப்பதைப் பார்க்கலாம். மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணி சார்பில் உங்களுக்கு நன்றி வல்லிம்மா

      நீக்கு
  14. நல்ல பதில். அடுத்து என்ன நடந்தது என்பதையும் படிக்க இதோ போய்க்கொண்டே இருக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!