Thursday, June 9, 2016

இந்த மனுஷங்க சுத்த மோசம்பா....
     சமீபத்தில் தில்லையகத்து க்ரானிக்கில்ஸ் தளத்தில் கீதா "செல்லங்களின் சந்திப்பு"  பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.  உடனே எனக்கு என் செல்லங்களில் ஒன்றின் கதை நினைவுக்கு வந்து விட்டது.  இதில் நான் முன்பு வெளியிட்ட 'நாய் மனம்'  அதீதத்தில் (இரண்டு முறை) வெளியாகி விட்டது!  எனவே இங்கு எங்கள் தளத்தில் முன்பு வெளியிட்ட இந்தப் பதிவை மீள் பதிவாக வெளியிடுகிறேன்!


==================================================================
    
                                                         

      
     இந்த மனுஷங்க சுத்த மோசம்பா....   என்ன ஜென்மங்களோ.... சொல்லவும் முடியலை...  என்னாச்சு?  ஏன் புலம்பறேன்னுதானே கேட்கறீங்க....?   எனக்கு நாலு குழந்தைகள் பிறந்தபோது எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா...  கஷ்டத்துக்கு அப்புறம் சந்தோஷம். அதை ஓடி ஓடி எதிர் வீட்டுக்காரர் கிட்ட சொல்ல நினச்சேன்.  அவருக்குத்தான் என்னை ரொம்பப் பிடிக்கும்.  கடவுள் வாயக் கொடுக்கலியே...

 
     ஆனாலும் அவன் என்னைப் புரிஞ்சிகிட்டு வந்து பார்த்து அதிசயிச்சுப் போனான். ஒரு குழந்தை கிட்ட அசைவே இல்லையேன்னு கவலைப் பட்டான். எனக்குக் கவலை இல்லை. மற்ற மூணுக்குப் பால் கொடுக்க அதுதான் எனக்கு வேணும். 


     அவனும் அவன் மனைவியும் குழந்தைகளும், இன்னும் பக்கத்து வீட்டுக் காரங்களும் எனக்கு ஓடி ஓடி 'பிள்ளை பெற்ற உடம்பு'ன்னு 'பன்'னு, ரொட்டி, கறி சோறு ன்னு பார்த்துப் பார்த்துப் போட்டாங்க.   அப்பப்போ மூணு குட்டியையும் எடுத்துக் கொஞ்சினாங்க.   நாலாவது எங்கேன்னு அவங்களும் அவ்வளவாத் தேடலை. 


     இந்தக் காக்கைகளையும் மற்ற நாய்களையும் நான் அந்த ஏரியாவிலேயே அண்ட விடுவதில்லை.   காக்காய் முதல்லையே எனக்கு ஆகாது.  துரத்து துரத்துன்னு துரத்துவேன்.   இப்போ குட்டிகள் வேற இருக்கா...   ரொம்பவே ஜாக்கிரதையா இருந்தேன். 


                                                                Image result for dogs images

     இதுவரை என் கூடவே இருந்த இன்னொரு வெள்ளை நாயையும் இந்த ஏரியாவிலிருந்தே  துரத்தி விட்டேன்.  அந்தத் தெருவில் விளையாடிய குழந்தைகள், பெரியவர்கள் அப்பப்போ வந்து என் குட்டிகளைப் பார்த்துக் கொஞ்சிட்டுப் போவாங்க.  குழந்தைகள் குட்டிகளைத் தூக்கினால் பெரியவங்க   'ஜாக்கிரதை... ஜாக்கிரதை...  தாய் கடிச்சிடப் போவுது'ம்பாங்க...   

     நான் கடிக்கறதில்லைங்க...   நம்ம குட்டிங்க மாதிரிதானே அதுகளும்..

     ஆனா பாருங்க ஒரு நாள் என் மூணு குட்டி ரெண்டாயிடுச்சு.  மூணாவது என்னாச்சுன்னு யாருக்கும் தெரியலை.  சந்தேகமாப் பார்க்காதீங்க... நானும் இல்லை.  அந்த ஸ்டேஜெல்லாம் தாண்டிடுச்சு இல்லே...

     ரெண்டுல ஒண்ணு பொட்டை, ஒண்ணு கிடா...   எல்லாம் இவங்க பேசிக்கறதுதான்.  அந்த கிடா குட்டி மேலத்தான் ரெண்டு மூணு பேருக்குக் கண்ணு.  எதிர் வீட்டுக்காரன் பொண்டாட்டி அதுமேல உசுரையே வச்சிருந்தா....  தன் குழந்தையையே கொஞ்சுறா மாதிரிக் கொஞ்சுவா... 


                                                Image result for dogs images    Image result for dogs images
     

     அடுத்த ஒரு வாரத்துல கண்ணு திறந்த குட்டிங்க நடக்க ஆரம்பிச்சுது பாருங்க....  ஆண் குட்டியைக் காணோம்...  கொண்டு போன ஒருத்தன் திரும்பிக் கொண்டு வரலை.  எல்லோரும் தேடினாங்க...  நான் எப்படி அவனை இவங்களுக்கு அடையாளம் காட்டுவேன்...  அவனும் இவங்களோட சேர்ந்து அந்தக் குட்டியைத் தேடறான்...  

     கோபம் வரலைங்க... அழுகைதான் வந்தது... அழுதேன்.  சில பேர் அனுதாபப் பட்டாங்க...  எதிர்வீட்டுக்காரங்க...  அவங்களுக்கு என்னை மாதிரி ஜென்மங்களை  ரொம்பப் பிடிக்குமாம்.  மற்றவர்கள் நான் அழுதால் அவர்களுக்கும் அந்தத் தெருவுக்குமே ஆகாது என்று சொல்லி இவர்கள் பார்க்காத போது கல்லால் அடிப்பார்கள்.   என்ன செய்ய? என்னால் அழாமலும் இருக்க முடியவில்லையே....      இருக்கற ஒரு குட்டியை நானும் சரி, எதிர் வீட்டுக்காரங்களும் சரி ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்துகிட்டோம்.   அவங்களைக் கண்டாலே எனக்கு வால் தானா ஆட ஆரம்பிச்சுடும்.   என்னையும் என் குட்டியையும் கண்ணும் கருத்துமாப் பாத்துக்கறாங்களே...

     அப்புறம் எதிர் வீட்டம்மா ஒரு யோசனை சொல்லுச்சு.  அவங்களுக்குப் பின்னால வீட்டுல இருந்தவங்களுக்கும் எங்கள் மேல் உயிர்.  குறிப்பா அவங்க வீட்டு வாண்டு!  அவனுக்கு வாங்கித் தரும் ரொட்டிஎல்லாம் எனக்குத்தான் போடுவான்.  அவன் குரல் கேட்டாலே அவன் வீட்டுப் பக்கம் போயிடுவேன்.  அவங்க வீட்டுல இந்த பாக்கி இருக்கற குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொல்வது என்று முடிவானது.  சுற்றி இருக்கறவங்க எல்லார் வீட்டிலும் பெர்மிஷன் வாங்கினாங்க....

     என்ன கேட்கறீங்க...?   என் கிட்டயா...?   நல்லா கேட்டீங்க...  என்னை யாரு கேக்கறா...  இல்லை என்னாலதான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க...  'நம்ம பேசறதை எல்லாம் அப்படியே புரிஞ்சுக்குது' ன்னு என்னைப் பத்திச் சொல்லிப் புல்லரிச்சுப் போயிடுவாங்க...  

     எனக்குப் புரியுதுதான்,  ஆனால் என்னை உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே...

     அன்னிக்கே என் குட்டியை அவங்க வீட்டுக்கு எடுத்துப் போனாங்க. டீனா ன்னு பெயர் வச்சாங்க...  என்ன பேரோ...  ஆளாளுக்கு 'டீனா...டீனா'ன்னா இது என்ன பண்ணும்...  பாவம்...   எங்களுக்கெல்லாம் 'ச்...ச்....ச்...' னாலே போதும் ஓடி வந்துடுவோம்.  ஆனா பாருங்க,  அப்படியும் அப்புறம் அப்புறம் 'டீனா'ன்னா என் குட்டி அவங்களைத் திரும்பிப் பார்க்கவும் அவங்களுக்கெல்லாம் ஒரே குஷி.      நல்லாதாங்க போச்சு எல்லாம்.  நானும் கூட அவங்க வீட்டு வாசலுக்கே குடி போயிட்டேன்னு வச்சுக்குங்க.  குளிப்பாட்டுவாங்க...  துடைப்பாங்க... பௌடர் கூடப் போட்டு விடுவாங்க....  அவங்க வீட்டு வாண்டுகள் ரெண்டும் ட்ரெஸ் கூடப் போட்டு விட்டாங்க...  தினமும் அங்கேயே பழியாக் கிடப்பேன்.  சந்தோஷமாத்தான் இருந்தது.      ஆனா யாரைக் குறை சொல்ல...  மனுஷங்களையா என் குட்டியையா... ராத்திரி நேரம் எல்லாம் அது பாட்டுக்கு அழ, வந்தது வினை.   அவங்க பக்கத்து வீட்டுக் காரங்க எல்லாம் 'ராத்திரி எல்லாம் தூங்கமுடியலை. கொண்டு விட்டுடு' ன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாங்க.  இவங்களுக்கா,  மனசே ஆகலை என்றும் தெரிகிறது.  அவங்களுக்குள்ளேயே பேசிகிட்டாங்க....  திடீர்னு பார்க்கறேன் குட்டியைக் காணோம். சுத்திச் சுத்தி வந்து தேடறேன்.   அந்த வாண்டை ஏக்கமாகப் பார்க்கிறேன்.      'உள்ளேயிருந்து குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து காட்டேன்...' 


                                                   Image result for dogs images

      "அட... எப்படித் தலையை சாய்த்து அழகாப் பார்க்குது பாரேன்..."  குட்டி இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரி!       "இல்லை ஆண்ட்டி....  குட்டியைத் தேடுது.... பாவம்!   அதை நம்ம வெளியில் கொடுத்துட்டோம்னு அதுக்குத் தெரியவில்லை"  என்றான். 
அடப்பாவி!  என் குட்டியைத் தூக்கி யார் கிட்டயோ கொடுத்துட்டாங்க....


     ஏங்க...  நீங்களே சொல்லுங்க... இவங்க யாருங்க என்னோட குட்டியைத் தூக்கி யார் கிட்டயோ கொடுக்க...  அங்க கஷ்டமா இருக்குன்னா திரும்பி என்கிட்டே விடறதுதானேங்க  நியாயம்...   இவங்க குழந்தையை நாங்க எடுத்து வேற தெருவில் கொடுக்க முடியுமா சொல்லுங்க...  இப்போ ஆளுக்கு ஆள், "பாவம் குட்டியைத் தேடுது.. பாவம் பாவம்" கறாங்க.... என்னோட குட்டி ராத்திரி கத்தினது தொந்தரவா இருக்குன்னு சொன்னவங்களும் சேர்ந்தே 'பாவம் பாவம்'னு சொல்றாங்களே.... எப்படிங்க அது?   மனசாட்சியே இல்லையா இவங்களுக்கு? 


     "எப்படி காலைத் தூக்கி தூக்கி வச்சு விளையாடும் தெரியுமா" 


     ஆத்து ஆத்துதான் போறாங்க.  அந்த வாண்டுகள் கண்களிலும் கண்ணீர் தெரியுது.  என்ன சொல்லி என்ன...  குட்டியைத் தூக்கி மனசாட்சியே இல்லாம யார் கிட்டயோ தந்துட்டு என்ன வசனம் வேண்டிக் கிடக்கு?


     மனசுதான் இப்படிப் போராடுது....  இதோ பாருங்க இவங்க என்னைப் பத்திப் பேசறாங்கன்னு எனக்குத் தெரியுது...  நான் என்ன நினைக்கிறேன்னு இவங்களுக்குச் சொல்ல முடியலை.   கோபம் மனசுல. ஆனால் அவங்க பேசப்பேச என்னோட வால் தன்னால ஆடிகிட்டு இருக்கு... ஏங்க அது?
                                                       Image result for dogs images படங்கள் :   இணையத்திலிருந்து.

46 comments:

Srimalaiyappanb sriram said...

அருமை

Bagawanjee KA said...

நல்லாவே ரசிக்குதே நாய்க்குட்டி :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சூப்பர்.உண்மையாகவே அந்த வாயில்லாப் பிராணி இப்படித்தான் நினைக்கும் என்கிற அளவுக்கு அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். முன்பு ஒரு முறை பரமவில் இருந்து தப்பி வரும்போது நாயை விட்டு வந்த ஒருவரின்உருக்கமான கதை இன்னும் நினைவில் இருக்கிறது

Avargal Unmaigal said...

பதிவு மிக அருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்

Avargal Unmaigal said...

நாயை வளர்க்கும் போதுதான் தெரிகிறது மனுஷன் எவ்வளவு மோசம் என்பது அவைகள் காட்டும் பாசம் அளவிட முடியாதது..

Umesh Srinivasan said...

அருமையான பதிவு. நன்றியுள்ள ஜீவனுக்கு மனிதர்கள் காட்டும் நன்றி இவ்வளவே.

துளசி கோபால் said...

ப்ச்.......... பாவம்.... நாய் ஜென்மம் :-(

கோமதி அரசு said...

படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
மனுஷங்க மோசம் தான்.

கோமதி அரசு said...

படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
மனுஷங்க மோசம் தான்.

காமாட்சி said...

இப்படியும் சிலர். என் பெண் வீட்டின் பின்புற வீடு அவர்களுடையது. எத்தனை குட்டிகள் அந்தத் தெரு நாய் போடுமோ,எல்லாவற்றிற்கும் தாராளமாகச் சாப்பாடு போடுவாள். இனாமா ரேஷனில் அரிசி கிடைக்கிறதே. ப்ரௌனி,பிங்கி,ப்ளாக்கி போரெல்லாம் வைப்பாள். மொட்டை மாடி பூரா நாய்ப் பாளையம்தான். ஒவ்வொன்றாகக் காணாது போய்விடும். அல்லது ஏதாவது அடி பட்டுச் சாகும்.வேதனைப்படுவாள். திரும்பவும் தெருநாய்க் குட்டிகள்,அதற்கு இடம்,பாவம் அது என்ன பண்ணும். திரும்பவும் எங்க வீட்டையே தேடி வரது.பாவமோ,புண்ணியமோ அதுக்கு யார் இருக்கிரார்கள் என்பாள். இரண்டொன்று பெறிதாகவும் ஆகி பேரன் பேத்தியும் இருக்கு. இதற்கென்ன சொல்கிறீர்கள்? அன்புடன்

KILLERGEE Devakottai said...

இதை கதையாக நினைத்து ரசிக்க முடியவில்லை நண்பரே அந்த நாயின் நிலையிலிருந்து பார்த்தால் மனம் கனத்து விடுகின்றது உண்மையே அவைகளும் பாசம், நேசம் உள்ளவைதைனே... பிரிவின் வேதனை நமக்கு தெரிகின்றது அதையே மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை மறந்து விடுகிறோம் இதுதான் நடைமுறை உண்மை நாய் வளர்க்கும் எத்தனை குடும்பங்கள் அந்த நாய் இடும் குட்டிகளையும் அவைகளோடு குடும்பமாக வைத்து பாராமரிக்கின்றார்கள் ? கொஞ்சம் வளர்ந்ததும் அதை மற்றவர்களுக்கு பரிசாகவோ, பணத்துக்காகவோ கொடுத்து விடுகின்றார்கள் அந்த தாயின் வேதனையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

‘தளிர்’ சுரேஷ் said...

நாயோட தாய் மனசை அழகாக பதிவாக்கி அருமையான கதையாக்கி தந்துள்ளீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!

Angelin said...

பாவம் வாயில்லா ஜீவனுக்கும் அன்பு பாசம் தாய்மை எல்லாமுண்டே ..
எங்க ஜெஸியை ஒரு வீட்டில் இருந்து எடுத்து வந்தோம் ..அந்த பூனை 6 குட்டி போட்டுச்சாம் .
அத்தனையும் பெண்குட்டிகள் ..ஒரு கடையில் advertisement பார்த்துதான போனோம் .
நாங்க சென்ற அன்று எல்லா குட்டிகளும் எடுத்துபோய் கடைசி குட்டி இவள் மட்டுமே ..நான் கையில் தூக்கிட்டேன் அப்போ அந்த தாய் கிட்ட வந்து தலையை உயர்த்தி எங்களை ஒரு பார்வை பார்த்தது அதன் கண்களில் அவ்ளோ துக்கம் :(
எனக்கு அதை பார்த்து ரொம்ப கவலையாகிபோச்சு
நானா வேணாம்னு விட்டாலும் வேற யாரோ எடுத்துதான போவாங்க ..பிறகு அந்த மியாவ் தாயிடம்
சொன்னேன் //கவலைபடாதே பத்திரமா வளர்ப்பேன் உன் பாப்பாவை //..அதற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

G.M Balasubramaniam said...

நாய்களின் உணர்வுகளை நன்கு அலசி இருக்கிறீர்கள்நாய் இப்படித்தான் நினைத்திருக்கும் என்பது உங்களுக்கு அவை மீது இருக்கும் அன்பைக் காட்டுகிறதுநாங்களும் ஒரு பெண்நாயை வளர்த்தோம் என் மனைவி அது மாமியார் இல்லாத குறையைப் போக்கியது என்பாள்.

Bhanumathy Venkateswaran said...
This comment has been removed by the author.
Bhanumathy Venkateswaran said...

As there was some typing errors, I removed my previous comment. here is the new one: பிரமாதம்! நிஜமாகவே அந்த நாய் அப்படித்தான் உணர்ந்திருக்குமோ என்று தோன்றுகிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

நாயின் தாய் மனதை அழகாக பதிவாக்கி அருமையான கதையாக்கி தந்துள்ளீர்கள்
நன்றி நண்பரே
தம =1

ஸ்ரீராம். said...

நன்றி ஸ்ரீராம்.

ஸ்ரீராம். said...

நன்றி பகவான்ஜி.

ஸ்ரீராம். said...

ரொம்ப நன்றி டி என் முரளிதரன். நானும் நீங்கள் சொல்லும் சம்பவம் படித்திருக்கிறேன், புத்தகம் வைத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

நன்றி மதுரைத் தமிழன். நீங்கள் சொல்வது உண்மைதான்.

ஸ்ரீராம். said...

வாங்க உமேஷ் ஸ்ரீநிவாசன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி டீச்சர்.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

ஸ்ரீராம். said...

நன்றி காமாட்சி அம்மா. நானும் இப்படி நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி.. நீண்ட அழகிய உணர்வுபூர்வமான பின்னூட்டத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின். நீங்கள் சொல்லி இருப்பதும் சரிதான். இப்படி ஒரு கோணம் இருக்கு இல்லையா!

ஸ்ரீராம். said...

நன்றி ஜி எம் பி ஸார்.

ஸ்ரீராம். said...

மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

Ranjani Narayanan said...

பாவம் அந்த நாய். தாய் என்றால் ஒரே மாதிரி தான் உணர்வுகளும் இருக்கும் போலிருக்கிறது. நிஜமாகவே தன் குட்டியை நாய் சாப்பிட்டுவிடுமா?

ஸ்ரீராம். said...

வாங்க ரஞ்சனி மேடம்.... அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கேன்.

Geetha Sambasivam said...

இதுக்கு நான் போட்ட கமென்டை யார் தூக்கி எங்கே போட்டாங்க? தெரியலை! அப்போச் சொல்லி இருந்தது நிஜம்மாவே பிறக்கும் குட்டிகளில் ஒன்றை நாய் தின்னுமா என்பது தான்! இது எவ்வளவு தூரம் உண்மைனு தெரியலை! இதைக் குறித்து எனக்கும் என் மாமியாருக்கும் வாத, விவாதங்கள் நடந்திருக்கின்றன. பிறக்கும் குட்டிகளில் மூத்ததைத் தின்னும் என்றும் சிலர் சொல்கிறார்கள். குட்டியைத் தின்னிருக்கலாம் சரி, அப்போ அவற்றின் மிச்சம் எல்லாம் எங்கே? எலும்புகள் எல்லாம் எங்கே போகும்? தோலோடு விழுங்கிடுமா என்ன? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Geetha Sambasivam said...

கிட்டத்தட்ட இந்தக் கருத்தைத் தான் முன்னரும் சொல்லி இருந்தேன்/அல்லது கேட்டிருந்தேன். நாங்க அம்பத்தூரில் இருந்தவரைக்கும் எங்க வீடு தான் நாய்கள், பூனைகளுக்குப் பிரசவ மருத்துவமனை! இதைக் குறித்துப் பதிவே எழுதி இருக்கேன். :)

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2008/02/p.html

இங்கே போய்ப் பாருங்க, சும்ம்ம்ம்ம்ம்மா ஒரு சாம்பிள் தான்!

Angelin said...

ஆமாம் ரொம்ப அபூர்வமா சாப்பிடும் ..நாயும் பூனையும் பிரசவ வலி ரொம்ப கடினமா இருக்கும் நிலைல நடக்க சாத்தியமுண்டு .
மேலும் 7 குட்டி பிறந்தா அத்தனையும் ஹெல்த்தியா இருக்க சான்ஸ் இல்லை 7 வது குட்டி வீக் ஆகவோ அல்லது ஏதேனும் குறைகளுடனோ இருக்கும்பட்சத்தில் அதை தின்றுவிடுமாம் .சில பிறந்தாஹ் குட்டிகளில் ஸ்டில் born குட்டி foetus இருந்தா அதையும் சாப்பிடும் ..கோழிகளில் கூட நோஞ்சான் குஞ்சை தாய் விலக்கி வைச்சிருக்கு ,,canines மற்ற நல்ல ஹெல்தி குட்டிகளை காப்பாற்ற செய்யுமாம்

Angelin said...

//சரி, அப்போ அவற்றின் மிச்சம் எல்லாம் எங்கே? எலும்புகள் எல்லாம் எங்கே போகும்? தோலோடு விழுங்கிடுமா என்ன? !!!!!!!!!!!//இது ஒருவகை சர்வைவல் of the fittest தான் கீதா மேடம் ..மேலும் தாய்க்கு ஒரு நேச்சறல் மெட்டர்னல் instinct சொல்லுமாம் இந்த வீக் குட்டி பிழைக்க சாத்தியமில்லை ..அதனால்தான் வீட்டில் வளர்க்கும் போது இவற்றை வாச் பண்ணிகிட்டே இருக்கணும் என்கிறாங்க டாக்டர்ஸ் ..
எங்க குடும்ப நண்பர் வீட்டு லாப்ரடார் 8 குட்டி போட்டது கடைசி குட்டியை அக்ரசிவா நக்கி நக்கி விழுங்க பார்த்ததும் அதை எடுத்து தனியா பிரிச்சு வச்சிட்டாங்க 3 நாள் கழிச்சி மெதுவா தாயுடன் இணைதாங்க சில மாதங்களில் 7 குட்டிகள் நன்கு வளர இந்த 8 வது கால்கள் வளைந்து deformed ஆகியிருந்தது இண்டர்னலாவும் பல பிரச்சினைகள் ....அப்போதான் புரிந்தது தாய் அதை சாப்பிட முயன்றதன் காரணம் .மேலும் அவை சாப்பிட முயலுபவை மிக வீகா சின்னதா இருக்குமாம் ..placental sac உடன் வரும்போது ஒரே விழுங்கு thats it..

ஸ்ரீராம். said...

வாங்க கீதா மேடம்.. உங்கள் கேள்விகளுக்கும் ரஞ்சனி மேடம் கேள்விக்கும் ஏஞ்சலின் பதில் சொல்லிட்டாங்க..

ஸ்ரீராம். said...

நன்றி கீதா மேடம். உங்கள் பதிவுக்குச் சென்று படித்தேன். அடடே.. நாங்கள் பிறக்கும்முன் வந்த பதிவு! எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் கூட இவ்வளவு கருணையா? சமைக்கும் பொது அருகில் அமர்ந்து சூபர்வைஸ் செய்யும் எலியை மனக்கண்ணில் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது! சுப்பு தாத்தா அப்போவே உங்கள் தளம் வந்து பின்னூட்டம் போட்டிருக்கார்!

ஸ்ரீராம். said...

மீள்வருகைக்கும், சந்தேக நிவர்த்திக்கும் நன்றி ஏஞ்சலின். எனக்கும் இந்த விஷயங்கள் புதிது. //லபக்குனு ஒரே முழுங்கு// பகீர் என்கிறது!

Angelin said...

நோ பகீர் :) இதுதான் இயற்கை
sea turtles lay 110 eggs in a nest..20 ஆமைகள் X 110 முட்டைகள் பொரிச்சா கடலெல்லாம் ஆமைகூட்டம் அதுங்க மற்ற மீன்கள் தவளைகுட்டிங்களை வாழ விடுமா ?கொஞ்சம் யோசிச்சிபாருங்க ..தட்ஸ் சர்வைவல் :) இதுங்க கடலை சேர்வதற்குள் பாதி சீகல்ஸ் மற்றும் சில பறவைங்களுக்கு பட்சனமாகிடும் தி பெஸ்ட் சர்வைவ்ஸ் .. டேவிட் அட்டன்பரோவின் அனிமல்கிங்டம்/BBC's Life of Mammals வீடியோஸ் கிடைச்சா பாருங்க ஆச்சர்யபடுவீங்க ...

ஸ்ரீராம். said...

ஓ... அந்த நியாயம் எல்லாம் ஓகே. ஒரு நாய் விள்ளாமல், விலகாமல், கடிக்காமல் 'அப்படியே சாப்பிடுவேன்' என்று முழுசாக உள்ளே தள்ளும் பகீரைச் சொன்னேன்!

:)))

Angelin said...

அப்பாவின் பிரண்ட் ஒருவர் சொன்னார் :) அப்படி சாப்பிட்டதை பார்த்தாராம் அது அந்த நேரத்து அவசரம் பிரசவ வலி தீவிரம் என்று நினைக்கிறேன் ..
எங்க வீட்ல நிறைய அதிசயங்களை பார்த்திருக்கோம் குஞ்சு பொரிச்ச அடுத்த நாளே கோழி பெரிய ஓணான் இல்லை பாம்பு அடிச்சி குஞ்சுங்களுக்கு கொடுக்கும் பூனை கண்ணு திறக்காத குட்டிங்களுக்கு எலியை தூக்கிட்டு வரும் நாங்க அலறி ஓடுவோம் :)

Angelin said...

நான் அடுத்த போஸ்டுக்கு கமெண்ட் பண்ணனும் இங்கயே ரவுண்ட் அடிக்கறேன் :))

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பதிவைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

அருமையாக சொல்லியிருக்கீங்க. இதை நீங்கள் அன்று சொன்னதுமே தேடிப் படித்துவிட்டேன் உங்கள் பழைய பதிவை...இப்போது என் பதிவின் சுட்டியுடன்...

எனக்கு இதைப் படிக்க படிக்க அப்படியே பாண்டிச்சேரியில் இருந்த போது அங்கிருந்த பக்கத்து வீட்டு பைரவர் அவர்கள் வளர்த்தார்கள் என்று சொன்னாலும் வெளியில்தான் இருந்தது ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் எங்களுடந்தான் அவள் கண்ணம்மா மூன்று பிரசவம். மகன் தான் உதவினான். மூன்றாவதில் வந்தவற்றில் இரண்டுதான் எங்களுடன் இப்போது. இந்தக் கண்ணம்மா எந்தக் குட்டியையும் சாப்பிடவில்லை. சாப்பிடுவது என்பது வெரி ரேர். இந்தக் கண்ணம்மாவிற்கு மூன்றாவது பிரசவத்தின் போது 8 குட்டிகள் அதில் 8 வது ஒரு விரல் அளவே இருந்தது ஆனால் கண்ணம்மா அதைச் சாப்பிடவில்லை. அது 4 வது நாள் இறந்துவிட்டது ப்ரீமெச்சூர்...

உங்கள் பதிவைப் படித்ததும் மனம் மிகவும் நெகிழ்ந்தது. ஆனால் பாருங்கள் 4, 5 மாதம் ஆகும் போது அம்மாவும் குட்டிகளும் நீ வேறு நான் வேறு என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிய ஆரம்பித்து விடுவார்கள். 6 மாதத்திற்கு அப்புறம் பிரிந்தே விடுவார்கள். அம்மாவிற்கும் குட்டிகளுக்குமே ஒருவருக்கொருவர் உறுமிக் கொள்வார்கள். அம்மா உறுமி அவைகளைத் தன் பக்கம் விடாமல் தள்ளி விடுவாள். அடுத்த பீரியட்ஸ் பெரும்பாலும் வந்துவிடும். உடனே ஆண் பார்த்தல், கர்ப்பம் குட்டி போடல் என்று தொடரும். 6 மாதம் ஆனதும் பிறந்த குட்டிகள் பெண்கள் என்றால் வயதிற்கு வரும் பருவம் என்பதால் தங்களுக்குள் யார் தலைவி என்பதை முடிவு செய்ய சண்டைகள் தொடங்கும். ஏரியா பிரிக்க. உணவு என்று. இதில் ஆல்ஃபா பைரவர் வெல்வார். மற்றவை ஆல்ஃபாவிற்கு அடங்கி இருக்க வேண்டும்ம. ஆல்ஃபா அருகில் வரும் போது, மல்லாந்துப் படுத்து நான் உனக்கு அடிமை என்று உணர்த்த வேண்டும். இல்லை என்றால் உடம்பைச் சுருக்கி தலையைத் தாழ்த்தி ஒரு பக்கமாகச் சரிந்து உட்கார்ந்து அதாவது பவ்யமாக..இல்லை என்றால் குடுமிப் பிடிச் சண்டைதான்..சண்டையில் கழுத்தைப் பிடிப்பதுதான் வெற்றிக்கு அறிகுறி. க்டிபட்டுக் காயம் வரும்வரை கூட சண்டை நடக்கும். பெரும்பாலும் அம்மா நாய் என்றால் பிள்ளைகள் கொஞ்சம் ஒதுங்கிப் போய்விடுவார்கள் அம்மா உறுமும் என்பதால்....

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பதிவைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

அருமையாக சொல்லியிருக்கீங்க. இதை நீங்கள் அன்று சொன்னதுமே தேடிப் படித்துவிட்டேன் உங்கள் பழைய பதிவை...இப்போது என் பதிவின் சுட்டியுடன்...

எனக்கு இதைப் படிக்க படிக்க அப்படியே பாண்டிச்சேரியில் இருந்த போது அங்கிருந்த பக்கத்து வீட்டு பைரவர் அவர்கள் வளர்த்தார்கள் என்று சொன்னாலும் வெளியில்தான் இருந்தது ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் எங்களுடந்தான் அவள் கண்ணம்மா மூன்று பிரசவம். மகன் தான் உதவினான். மூன்றாவதில் வந்தவற்றில் இரண்டுதான் எங்களுடன் இப்போது. இந்தக் கண்ணம்மா எந்தக் குட்டியையும் சாப்பிடவில்லை. சாப்பிடுவது என்பது வெரி ரேர். இந்தக் கண்ணம்மாவிற்கு மூன்றாவது பிரசவத்தின் போது 8 குட்டிகள் அதில் 8 வது ஒரு விரல் அளவே இருந்தது ஆனால் கண்ணம்மா அதைச் சாப்பிடவில்லை. அது 4 வது நாள் இறந்துவிட்டது ப்ரீமெச்சூர்...

உங்கள் பதிவைப் படித்ததும் மனம் மிகவும் நெகிழ்ந்தது. ஆனால் பாருங்கள் 4, 5 மாதம் ஆகும் போது அம்மாவும் குட்டிகளும் நீ வேறு நான் வேறு என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிய ஆரம்பித்து விடுவார்கள். 6 மாதத்திற்கு அப்புறம் பிரிந்தே விடுவார்கள். அம்மாவிற்கும் குட்டிகளுக்குமே ஒருவருக்கொருவர் உறுமிக் கொள்வார்கள். அம்மா உறுமி அவைகளைத் தன் பக்கம் விடாமல் தள்ளி விடுவாள். அடுத்த பீரியட்ஸ் பெரும்பாலும் வந்துவிடும். உடனே ஆண் பார்த்தல், கர்ப்பம் குட்டி போடல் என்று தொடரும். 6 மாதம் ஆனதும் பிறந்த குட்டிகள் பெண்கள் என்றால் வயதிற்கு வரும் பருவம் என்பதால் தங்களுக்குள் யார் தலைவி என்பதை முடிவு செய்ய சண்டைகள் தொடங்கும். ஏரியா பிரிக்க. உணவு என்று. இதில் ஆல்ஃபா பைரவர் வெல்வார். மற்றவை ஆல்ஃபாவிற்கு அடங்கி இருக்க வேண்டும்ம. ஆல்ஃபா அருகில் வரும் போது, மல்லாந்துப் படுத்து நான் உனக்கு அடிமை என்று உணர்த்த வேண்டும். இல்லை என்றால் உடம்பைச் சுருக்கி தலையைத் தாழ்த்தி ஒரு பக்கமாகச் சரிந்து உட்கார்ந்து அதாவது பவ்யமாக..இல்லை என்றால் குடுமிப் பிடிச் சண்டைதான்..சண்டையில் கழுத்தைப் பிடிப்பதுதான் வெற்றிக்கு அறிகுறி. க்டிபட்டுக் காயம் வரும்வரை கூட சண்டை நடக்கும். பெரும்பாலும் அம்மா நாய் என்றால் பிள்ளைகள் கொஞ்சம் ஒதுங்கிப் போய்விடுவார்கள் அம்மா உறுமும் என்பதால்....

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!