வியாழன், 23 ஜூன், 2016

வேற ஜாதிப் பையன்!

      
சமையலறையில், பின்னால் ஏதோ நிழலாடியது.    இப்படி பூனை மாதிரி வருவது யார் என்று அமிர்தத்திற்கு நன்றாகத் தெரியும். மகள் அகிலாவாகத்தான் இருக்கும். 

அகிலா திருச்சியில் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, (பி எஸ் சி இறுதியாண்டு) படிப்பவள். விடுமுறைக்கு வந்திருக்கின்றாள். அநேகமாக, சத்தமில்லாமல் வந்து, பின்னாலிருந்து கண்ணைப்  பொத்துவாள்.  'நான் யார் என்று சொல்லு பார்ப்போம்.' 

'வேற யாரு? என்னுடைய போக்கிரிப் பொண்ணு!' என்று கூறியபடி, பொத்திய கைகளை விலக்கி, அகிலாவைத் திரும்பிப் பார்த்து, பெருமையுடன் புன்னகை செய்வாள் அமிர்தம்.  
    
   

இன்று அப்படி எதுவும் நிகழவில்லை. 

"அம்மா" 

"என்னம்மா அகிலா?" 

"உன்கிட்ட ஒண்ணு சொல்லப்  போறேன். " 

"ஒண்ணு என்ன? ஒன்பது வேண்டுமானாலும் சொல்லு. கேட்டுக்கறேன். " 

"அதெல்லாம் இல்லை - ஒன்னே ஒண்ணுதான். " 

"சரி. சொல்லு. " 

" நான் ஒருத்தரை லவ் பண்றேன்." 

"என்ன?" என்று கேட்டவாறே அவசரமாகத் திரும்பிய அமிர்தத்தின் கையில், இறக்கிவைத்த சூடான பால் பாத்திரம் சுட்டுவிட்டது. " ஆ " என்று அலறிவிட்டாள் அமிர்தம். 

"அம்மா நீ இந்த அளவுக்கு அஃபெக்ட் ஆயிடுவே என்று நினைக்கலை. சாரிம்மா. நான் அப்புறமா உன்கிட்ட பேசறேன்." 

"அகிலா  இரு இரு நான் அஃபெக்ட் ஆனதுக்கு நீ சொன்ன விஷயம் காரணம் இல்லை. திரும்பும்பொழுது, சூடான பால் பாத்திரம் கையில் பட்டுடுச்சு. அதனால்தான் அலறினேன். " 

"நல்ல வேளை - அப்பா வீட்டில் இல்லை. இருந்திருந்தால், உன் குரல் கேட்டவுடன் ஓடோடி வந்து, என்னைப்  பார்த்து, 'அடி பாதகி! என்ன செய்தாய் என் அன்பு மனைவியை ' என்று என்னைப் பார்த்து சத்தம் போட்டிருப்பார் அம்மா!" 

அமிர்தம் அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "யாரு உன் அப்பாவா!   நான் அலறினால் உடனே ஓடி வருவார் என்பது சரி. ஆனால்,வந்து  என்ன சொல்லுவார் தெரியுமா? 'அமிர்தம் - ஏன் இப்படி பேய் போல அலறி, கொழந்தைய பயமுறுத்துறே?' இப்படித்தான் சொல்லுவார்!" 

"சரி. சமையலறையை  விட்டு வெளியே வா அம்மா. நான் மெடிக்கல்  கப்  போர்டிலிருந்து பர்னால் எடுத்துவந்து உன் கைக்குப் போட்டுவிடறேன்." 

               ஹாலில், அமிர்தத்தை ஒரு  நாற்காலியில்  உட்காரவைத்து, கைக்கு பர்னால் போட்டு விட்டாள் அகிலா. 

கை எரிச்சல் குறைந்ததும், அமிர்தம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். 

"அந்தப் பையன் பெயர் என்ன?" 

" மங்கள்." 

" அது என்ன மங்கள், திங்கள் என்றெல்லாம் பெயர்!  நம்ம ஜாதி இல்லையா?" 

" இல்லை." 

" அட ராகவா! "

" அதுக்கு ஏன் இப்போ அப்பாவைக் கூப்பிடுகிறாய்? அதுவும் பெயர் சொல்லிக்  கூப்பிடறே !"

" அவரை எங்கே கூப்பிட்டேன்? நான் சொன்ன ராகவன் வேற. ஆனால் உன் அப்பாவுக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது. ஒப்புக்கொள்ளவே மாட்டார். சரி. அந்தப் பையன் என்ன ஜாதி?"

"தெரியலை. தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ணலை."

" போட்டோ இருக்கா?" 

அகிலா போட்டோவை, தன் கைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினாள். 
"ரொம்ப  சின்ன வயசா இருக்கும் போலிருக்கு!"

"அம்மா இது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ. இது நல்லா இருக்குன்னு சொல்லி, நான் கேட்டப்ப இதைக் கொடுத்தார்." 

"என்னுடைய  அண்ணன் பையன் ராஜு இவனைவிட  நல்லா இருக்கான். அவன்  பேச்சை  எடுத்தாலே  நீ அவன் ஒரு மக்கு. ஏதோ நட்டாமுட்டி வேலை செய்துகொண்டு, ஊர் சுற்றும் சோம்பேறி என்று சொல்வாய்." 

" நான் சொல்றது இருக்கட்டும். நீயே சொல்லு. உன் கல்யாண வயசுல, ராஜு மாதிரி ஒருத்தனைப் பார்த்திருந்தா நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருப்பியா அம்மா?" 

" இதோ பாரு இந்தமாதிரி சிச்சுவேஷன் அந்தக் காலகட்டத்தில் இல்லை. அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் முடிச்சுப்போட  முடியாது."

"நான் கேட்ட கேள்விக்கு, இன்னும் நீ பதிலை சொல்லவில்லை. ராஜு மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதித்திருப்பாயா?"

" நான் மாட்டேன். " 

"அப்போ உங்க பொண்ணு மட்டும் எப்படி சம்மதிப்பா?" 

"ஓஹோ! சரி. மங்களுக்கு சொத்து பத்து நிலம் நீச்சு எல்லாம் ஏதாவது இருக்கா? "  

" ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நினைக்கிறேன். சரியா, விவரமா தெரியலை."

" எந்த ஊரு? "

" சொந்த ஊரு அஹ்மத்நகர், மகாராஷ்டிரா என்று  சொன்னார். "

" தமிழ் தெரியாதா?" 

" தமிழ் பேசத் தெரியும். தமிழ்  எழுதப் படிக்கத் தெரியாது. "

" என்ன வேலை?" 

" அவரு ஐ டி கம்பெனில  பிராஜக்ட்  லீடரா  இருக்காரும்மா " 

" அப்பிடீன்னா - அது பெரிய வேலையா?" 

"அப்படித்தான் வெச்சிக்கோயேன்."

" காலம்  பூரா உன்னைக் கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவானா?" 

" நான் எதற்குமே கண் கலங்கமாட்டேன் அம்மா!" 

" சரி. ராஜூவைத்தான்  உனக்குப் பிடிக்கலை. மக்குன்னு சொல்லி ஒதுக்கிட்டே. உங்க  அப்பாவின்  தங்கச்சி  - உன்னுடைய  லலிதா அத்தையின் பையனையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா? அவன் மக்கு  இல்லையே. சூப்பர் இன்டெலிஜென்ட். நல்ல வேலையிலே இருக்கான். " 

" யாரு? தாமோதரனா? அம்மா என்னுடைய  மாமாவின் மக்குப்  பையனையாவது  பொறுத்துக்கலாம். ஆனா அத்தைப் பையன் .....  ஐயோ - என்னால ஒரு மணி நேரம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. எப்போ வாய் திறந்தாலும் ஒரே சுயதம்பட்டம். டாம்  டாம்  தாமோதரன் - ச்சே - எங்கேயாவது நாம் சொல்வது எதையாவது காது கொடுத்துக் கேட்பானா? எப்போ பாரு  நான் இப்படிப்  பண்ணுவேன் அப்படிப் பண்ணுவேன், இப்படி சொல்லிட்டேன், அப்படி சொல்லிட்டேன் என்று தன்னைப் பற்றியே  உயர்வாகப்  பேசிக் கொள்வான். அந்த டமார சத்தத்திலேயே எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!"

"அப்போ மங்கள்  என்று  உறுதி செய்துவிட்டாய்."

"ஆமாம் அம்மா - உனக்கு இந்தக் கல்யாணத்தில் ஆட்சேபணை எதுவும் இல்லைதானே? சம்மதம்தானே?"

"உன்னுடைய  அப்பா என்ன சொல்லுவாரோ, சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. அவருடைய  அபிப்பிராயம்  என்ன என்று தெரிந்துதான் நான் எதுவும் சொல்லமுடியும். அவர் தாமோதரன் தனக்கு மாப்பிள்ளையாக வந்தால், நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்."

"அம்மா. அப்பா மார்க்கெட்டிலிருந்து வந்தவுடன் நான்  லைப்ரரிக்குப்  போயிடறேன். நீ அப்பாகிட்ட பேசி அவருடைய சம்மதத்தை வாங்கிவிடு. இப்போ சமையலறைக்குப் போய் எனக்கு உன்னுடைய ஸ்பெஷல் காபி போட்டுக்கொடு. " 

"சரி அகிலா. அது என்ன ஸ்பெஷல் காபி? நான்  எப்பவும் போடறது ஒரே காபிதானே! "

"உனக்கு வேணா அது ஸ்பெஷல் இல்லாம இருக்கலாம். நீ போடறது காபியே இல்லை. ஒரிஜினல்! ஒரிஜினல் தேவாம்ருதம்! நீ போடற மாதிரி காபி, இதுவரை நான் இந்த ஈரேழு பதினான்கு உலகிலும் குடித்ததில்லை!"

" ஆமாம் - இவ எல்லா லோகத்தையும் சுத்தி வந்தவ!"

இருவரும் சிரிக்கிறார்கள். 

ராகவன் உள்ளே வந்துகொண்டே , "என்ன அம்மாவும் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா பேசிச் சிரிச்சுகிட்டு இருக்கீங்க! ஏதாவது சந்தோஷ சமாச்சாரமா?"

" ஆங்  - அது வந்துங்க ... ஆமாம்  ... சந்தோஷ ..... "

" அம்மா நீ போய் முதலில் மூன்று ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துகிட்டு வா. குடித்துவிட்டு, நான் லைப்ரரிக்குப் போகணும்."

"ஆமாம் அகிலா. அதுதான் சரி." 

அம்மா காபியுடன் வரும்வரை அகிலா லைப்ரரி புத்தகத்தைத் தேடுவது போல பரபரவென்று அலைந்து தேடிக்கொண்டிருந்தாள். காபி வந்ததும் புத்தகம் கிடைத்துவிட்டது. 

காபியைக் குடித்துவிட்டு, "அம்மா - நான் லைப்ரரி போயிட்டு வறேன்" என்று சொல்லியபடி வெளியில் சென்றாள். 

********************
"என்னங்க - சந்தோஷ சமாச்சாரம் சொல்ல  வந்தேனே - என்ன என்று தெரியுமா?" 

"தெரியலையே! என்ன அது?"

" கேட்டு, அதிர்ச்சி அடஞ்சிடாதீங்க. நம்ம அகிலா ஒருத்தரை லவ் செய்யறாளாம். கல்யாணம் பண்ணிக்கொண்டால்  அவனைத்தான் செய்துகொள்வேன் என்று உறுதியா சொல்றா."

"இதையா சந்தோஷ சமாச்சாரம்னு சொன்னே! இதுக்கா சிரிச்சுகிட்டு இருந்தீங்க !" 

" நாங்க சிரிச்சது, காபி விஷயமா. ஆனா இந்த சீரியஸ் விஷயம் பத்திப்  பேசி , நான் உங்க சம்மதத்தை வாங்கணும்னு அகிலா நெனக்கிறா." 

அகிலாவிடம் அமிர்தம் கேட்ட  பல கேள்விகளையே ராகவன், அமிர்தத்திடம்  கேட்கிறார். அகிலா சொன்ன பதில்களை, அமிர்தம் ராகவனுக்குச் சொலகிறாள். 

"தாமோதரனைக் கூடவா வேண்டாம் என்று சொல்கிறாள்!" எங்கே அந்த மங்கள் போட்டோவைக்  காட்டு!"

போட்டோவைப் பார்க்கிறார். 

"ஹூம் இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் எதை வெச்சு எப்படி லவ்வுல விழறாங்கன்னு தெரியலை."

" சரிங்க - உங்க அபிப்பிராயம் என்ன? அதைச் சொல்லுங்க."

" நீ ஏற்கெனவே ஏதாவது முடிவு எடுத்திருப்பே. நீ எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். நீ என்ன நெனக்கிற  சொல்லு."

"அகிலா அவளுடைய அத்தை பையனையோ, மாமா பையனையோ கல்யாணம் பண்ணிக்க  விரும்பலை என்பது, எனக்கு வருத்தம்தான். ஆனால், அவளுடைய சந்தோஷம்தான் நமக்கு முக்கியம். பையனுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்கு; பொண்ணுக்குப் பையனைப் புடிச்சிருக்குன்னா அது போதும். எனக்கு சம்மதம்தான். " 

"சரி - அப்போ அகிலாவிடம் அவள் வந்தவுடன் நம்ம சம்மதத்தை சொல்லிடலாம். - நீ போய் சமையல் வேலையை கவனி." 

அமிர்தம் சமயலறைக்குள் சந்தோஷமாக நுழைந்தாள். 

******************** 

அகிலாவின் கைப்பேசி , "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு ... " என்று முதலமைச்சர் குரலில் மெலிதாக ஒலித்தது. லைப்ரரியில் எல்லோரும் திரும்பிப்பார்த்தனர். 

அவசரமாக கைப்பேசியை எடுத்த அகிலா கேட்டாள் ,
 " என்ன அப்பா?"
" அம்மா சம்மதிச்சுட்டா "
   
    

*********************************************** 17 கருத்துகள்:

 1. இனிமேல் இதுதான் வழக்கமாக இருக்கும். கல்யாணமும் அவங்களே செஞ்சுட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு செலவு மிச்சம். மேல் நாட்டுப் பழக்க வழக்கங்கள் நல்லதுதானே!

  பதிலளிநீக்கு
 2. மஹாராஷ்டிரா பையன் இல்லாதபடி,
  மாசூட்ஸ் , (யூ.எஸ்.ஏ ) லெந்து வந்தவனாக இருந்தால் ?

  எப்படியும், ஜீவி சார் தன்னுடைய சிலப்பதிகாரக் கதைத் தொடரில்
  சொல்வது போல, அந்த அந்த நேரத்தில், ஊழ் வினை ஒவ்வொருவரையும்
  அவர்களையும் அறியாது இழுத்துக்கொண்டே தான் செல்கிறது.

  தாய் தந்தை தனக்குரிய கடமைகள் முடிந்துவிட்டதென்ற நிலையில்,
  தனது பெண் முடிவான முதிர்ச்சியான ஒரு நிலை எடுத்து இருப்பின்,
  அதில் விசனப்படுவத்திற்கோ, அது குறித்து அலம்பல் பண்ணுவதற்கோ இடமில்லை. செய்தும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

  வேதக் காலம் முதலே காந்தர்வ அடிப்படியில் திருமணங்கள் நடப்பது சாத்தியம் தான்.

  அதெல்லாம் இருக்கட்டும். கல்யாணம் எப்ப ? எங்க?
  அட்சதை போட நான் வர்றேன்.
  சாப்பாடு என்ன மெனு அப்படிங்கறது கீதா அம்மா தான் தீர்மானம் செய்யணும்.
  அந்த திங்கக் கிழமை சமாச்சாரம் மட்டும் வேண்டாம்.

  நல்லதா பாம்பே மீல்ஸ்.

  சுபஸ்ய சீக்ரம். அந்த பையன் மனசு மார்றதுக்கு முன்னாடி, மூணு முடிச்சு போடச்சொல்லுங்க..

  மாங்கல்யம் தந்து நா னே நா...

  மத்தளம் மத்தளம்..!!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. இப்போல்லாம் இப்படித் தான் நடக்கிறது. தமிழ்ப்பெண்ணுக்கு மஹாராஷ்டிர மாப்பிள்ளைன்னா தமிழ்ப்பையன் மஹாராஷ்டிரப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். பெற்றோரும் ஒத்துக் கொண்டே எல்லாக் கல்யாணங்களும் நடக்கின்றன. மெனு கலந்து கட்டித் தானே இருக்கணும்.

  என்ன? பால் பாயசம் அல்லது பாசந்தி

  சப்பாத்தி அல்லது பூரி

  வெங்காயப் பச்சடி

  ஸ்வீட் பச்சடி

  உ.கி. கறி

  அவியல்

  பூரிக்குத் தொட்டுக்க சனா மசாலா

  காலிஃப்ளவர் மஞ்சுரியன்

  உ.கி.வறுவல் அல்லது சே.கி. ஃபிங்கர் சிப்ஸ்

  அப்பளம்

  சாம்பார் சாதம் அல்லது வெஜிடபுள் புலவ் (இதிலே ஏதேனும் ஒண்ணு போதும், 2,3 டைப்- சாதங்கள் எல்லாம் வேண்டாம், வீணாகிப் போகும். சாப்பிட முடியாது. ஆகவே கொத்துமல்லி ரைஸ், புதினா, பட்டாணிபுலவ் இதெல்லாம் வேண்டாம்.)

  வெறும் சாதம் /தக்காளி ரசம்

  தயிர் சாதம் கறுப்பு திராட்சை, மாதுளை முத்துக்கள் எல்லாம் போட்டு

  தொட்டுக்க மாங்காய் ஊறுகாய் மற்றும் புளி இஞ்சி

  கடைசியில் டெசர்ட்டாக குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம்.

  பதிலளிநீக்கு
 4. ஜீவி சார் தன்னுடைய சிலப்பதிகாரக் கதைத் தொடரில்
  சொல்வது போல, அந்த அந்த நேரத்தில், ஊழ் வினை ஒவ்வொருவரையும்
  அவர்களையும் அறியாது இழுத்துக்கொண்டே தான் செல்கிறது. //

  நானும் சூரி சார் சொல்வதை வழிமொழிகிறேன்.
  அப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது , நம் கையில் ஒன்றும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டே.

  இந்த கதையில் வரும் அப்பா, அம்மா போல் எல்லாருக்கும் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும். (இன்றைய குழந்தைகளுக்கு.)

  பதிலளிநீக்கு
 5. சம்மதம் கொடுத்தால் இவர்கள் கல்யாணம் செய்து வைக்கும் வரை பொறுத்திருப்பார்கள்! மறுத்தால் ஓடிப்போவார்கள்! ஆனால் இதில் அப்பாவுக்கு விஷயம் முதலிலேயே தெரிந்துவிட்டது போலிருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 6. இந்தமாதிரி காதல் கல்யாணங்களின் முதல் வேட்டே மொழிதான் தமிழா மராத்தியா ஆங்கிலமா. பிறக்கும் பிள்ளைகளுக்கு எது தாய் மொழி. மொத்தத்தில் That which can not be cured must be endured சரியா

  பதிலளிநீக்கு
 7. இப்படியும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது அது சரி மங்கள் எப்படி ? சொல்லவே இல்லை.
  ஒருவேளை தொடருமோ..... ?

  பதிலளிநீக்கு
 8. நம்ம லைப்ல இப்படிலாம் நடக்கமாட்டேன் என்கிறது ? சரி கதையிலாவது படித்துக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிரச்சினை இருக்காது என்றுசொல்கிற கதை..

  பதிலளிநீக்கு
 10. பெரிய இடத்து காதல்.. வெட்டு,குத்து, கொலை போன்ற.பிரச்சினை இருக்காது என்றுசொல்கிற கதை..

  பதிலளிநீக்கு
 11. என்னிக்குமே அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் உள்ள பாசம் மாறவே மாறாது. அப்பாவைச் சரிக்கட்டிட்டு அம்மாவைச் சரிக்கட்ட இப்படி ஒரு ப்ளானா? அனேகமா அப்பாவே போட்டுக் குடுத்த திட்டமாத்தான் இருக்கும். தன்னோட மனைவி எப்படி நினைப்பாள் என்று ஒரு கணவனுக்குத்தானே தெரியும்?

  பதிலளிநீக்கு
 12. ஓ! அப்பா பெண்ணின் பக்கம் போலும். பேசி வைத்து நாடகமோ...அது சரி அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லையே...அப்படினா அம்மாவுக்கு அப்பாவைப் பற்றித் தெரியவில்லை...அப்பாவுக்கு அம்மாவைத் தெரியவில்லையோ...ஹஹஹஹ்...எது எப்படியோ இறுதியில் மாங்கல்யம்/மங்கள்சூத்ர தந்துனானே....

  கதை அருமை.

  பதிலளிநீக்கு
 13. எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணனும்..... :) என்று வடிவேலு மாதிரி அப்பாவுக்கும் பெண்ணுக்கும் தெரிந்திருக்கிறது!

  மெனுவே சூப்பரா இருக்கு.... மனசால கல்யாணம் பண்ணி வைச்சு, சாப்பாடும் சாப்பிட வேண்டியது தான் பாக்கி!

  பதிலளிநீக்கு
 14. பெண்களைவிட பையன்கள் பெற்றோரிடம் சாதனை படைத்து விடுகிரார்கள். எல்லாம் ஸரி. பிள்ளைகள் ஒரு பைஸா கூட பெண் தரப்பிலிருந்து சிலவு வைக்காமல், உற்றார் சூழ விவாகம் விதி முறைப்படி. நேஷனல் இண்டிகிரேஷனோ என்னவோ?
  அம்மாதிரி உதாரணம் வேண்டுமா? நான் இருக்கிறேன். காதல் கல்யாணம் சிலவுகளில்லாது முடிய வேண்டும். கோடி காட்டி எழுதியிருக்கிறேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 15. கதை சூப்பர். சந்தோஷமாக முடிவதில் தான் இன்பம். நன்றாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!