செவ்வாய், 14 ஜூன், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை : விஸ்வரூபம்





     இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் பிரபல எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.


     திருமதி வித்யா சுப்பிரமணியம் அவர்களின் தளம் கதையின் கதை.


     வித்யா சுப்பிரமணியம் மேடம் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார் என்று சொல்லி உதவிய திருமதி சாந்தி மாரியப்பனுக்கு (அமைதிச்சாரல்) எங்கள் நன்றி.


     கதை பற்றி திருமதி வித்யா சுப்பிரமணியம் அவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து அவர் படைப்பும்.....

=================================================================



     ஏதோ  ஒரு  உபநிஷதத்தில்  சுருக்கமாய்  கூறப்பட்ட விஷயத்தைக் கொண்டுதான்  இச்சிறுகதையை  எழுதினேன். பதினேழு வருடங்களாகிறது  இதனை  எழுதி.  ஒரு  ஆன்மீகப் பத்திரிகைக்காக எழுதப்பட்ட  கதை  இது.  எனது  வெட்டி வேர்கள்  என்ற  சிறுகதைத் தொகுப்பிலும்  இதனை சேர்த்துள்ளேன்.

============================================================================== 



விஸ்வரூபம்



வித்யா  சுப்ரமணியம்











நுப்பும்  நுரையும்,  நீர்க்கொப்புளங்களுமாய்  ஆற்றில்  புது  வெள்ளம் கரை புரண்டோடியது.  வயது வித்தியாசமின்றி மனிதர்கள்  அனைவரும் குழந்தைகளாய்  மாறியிருந்தனர்.



"அடேயப்பா எவ்வளவு  பெரிய  நீர்க்குமிழிகள்!  எவ்வளவு  நுரை!"  ஒரு  பையன்  வியந்தான்.  ஒரு பெரிய  நீர்க்குமிழியை  விரலால்  உடைத்து  மகிழ்ந்தான். அருகிலிருந்த  தாயிடம் கேட்டான்.



"நீர்க்குமிழ்கள்  எப்படி  உருவாகிறது?"



"பிரம்மஹத்தி!" துணி துவைத்தபடி  கூறினாள்  தாய்.



"அப்படிஎன்றால்? பையன்  புருவம்  சுருக்கி  கேட்டான்.



"அது  ஒரு  கதை  நீ  குளித்து  விட்டு  வா  சொல்கிறேன்.



"கேட்டு  விட்டே  குளிக்கறேனே"



அம்மா  புன்னகைத்தாள்.  துணி துவைத்தபடி  சொல்ல  ஆரம்பித்தாள்.



                                                      *********************





தேவலோகம்  பீதியிலாழ்ந்திருந்தது.  தேவர்களின்  முகங்கள்  இருண்டு போயிருந்தன. தேவர்கள்  சிலர்  கூட்டமாய்ச்  சென்று இந்திரனை சூழ்ந்து கொண்டார்கள்.



"தவறு  செய்து  விட்டாய்  தேவேந்திரா !  அசுரர்கள்  வெல்வதற்கு  வாய்ப்பளித்து  விட்டாய்.   அவர்கள் இந்திர லோகத்தைக்  கைப்பற்றியே  தீருவதென்று முடிவு  செய்து  விட்டார்கள்.  ஓடி  ஒளிவதைத்  தவிர வேறு  வழியில்லையா  நமக்கு?"



"என்ன  செய்யலாம் என்று  நீங்களே  சொல்லுங்கள்"



பிருஹஸ்பதியை அவமானப்படுத்தியது  நீதான்.  உன் மீதுள்ள ஆத்திரத்தால்  அவர்  தேவலோகத்தை  விட்டுச்  சென்று  விட்டார். குரு  நம்முடன்  இல்லாதது  நம்மை  பலவீனமாக்கி  விட்டது.  அதுவே  அசுரர்களின் பலமாகவும்  ஆகி  விட்டது.  இதுதான்  சமயம் என்று  அவர்கள்  தங்கள்  குருவின்  ஆசியுடன்  போருக்குப்  புறப்பட்டு  விட்டார்கள்.  இன்னும்  சற்று  நேரத்தில் தேவலோகம்  அவர்கள்  வசமாகும்.  உன்  இந்திர  பதவி  பறிபோகும்"



"இனி  செய்வதற்கு  ஒன்றுமில்லையா?  நம்மால்  அவர்களுடன்  போரிட  இயலாதா?"  இந்திரன்  வருத்தத்துடன்  கேட்டான்.



"இயலாது.  நம்  தேவர்கள்  எந்த  நிலையில்  உள்ளார்கள்  என்று  போய்ப்  பார்.  பாதி  பேர்  சோமபானம்  அருந்தி  விட்டு  மயங்கிக்  கிடக்கிறார்கள்.  மீதிப்பேர் மங்கையர்களின்  மடியில்  மயங்கிக்  கிடக்கிறார்கள்.    சொகுசாய்  இருப்பதற்காகவே  தாங்கள்  இங்கு  அவதரித்திருப்பதாய் நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.  எனவே  போர்  என்றால்  ஓடி  ஒளிந்து  கொள்வார்கள்.  காயப்பட  இவர்களால்  முடியாது.  எப்போது  என்ன  பிரச்சனை  என்றாலும் மும்மூர்த்திகளிடம்  அடைக்க்கலாமாவதுதனே  நம்  இயல்பு?"



"தேவர்களைப்  பரிகசிக்காதே.  நீயும்  அவர்களில்  ஒருவன்தான் என்பதை  மறந்து  விட  வேண்டாம். அசுரர்களை  வெல்ல  வழி  கேட்டால்,  வேறு  ஏதேதோ  பேசுகிறாய்  நீ? இந்திரன்  விழி  சிவக்க  அந்த  தேவலோகப்  பிரஜையைப்  பார்த்தான்.



"குருவின்  காலில்  விழுந்து  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று உனக்கு  இப்போதும்  தோன்றவில்லையா?"



"புரியாமல்  பேசாதே.  குருவை அலட்சியப்படுத்தியது  பெரும்  தவறுதான்.  என்  மதி  கெட்டு விட்டது  எனது  விதி.  நடந்து  முடிந்தவற்றை,  அவை  சரியாயினும்,  தவறாயினும்,  மாற்றி  விட்டு  சரி  செய்ய  தேவர்களாயினும்  முடியாது.  என்  வருத்தம்  புரியாமல் தூஷிக்காதே.  குருவிடம் மன்னிப்புக்  கேட்கத்தான் சென்றேன்.  அவர்  எங்கிருக்கிறார்  என்பது  தெரிந்தால்தானே?"



"இப்பொழுது  என்ன  செய்வது?"



"தோல்வியே  இப்போது  நம்  தலைவிதி!  முதலில்  தோற்போம்.  பிறகு  வெற்றிக்கு  வழி தேடுவோம்"  தேவேந்திரன்  வருத்தத்துடன்  கூறினான்.



வெற்றி  அசுரர்களுக்கு  சுலபமாயிற்று.  அவர்கள்  தந்திரசாலிகள்.  எப்பொழுதும்  குருவை  மதிக்கா  விட்டாலும்  எப்பொழுது  மதிக்க  வேண்டுமோ  அப்போது  மதித்து,  தம்  காரியங்களை  சாதித்துக்  கொள்வதில்  சமர்த்தர்கள்.



தேவலோகம்  அவர்கள்  வசம்மாயிற்று.   அங்கிருந்து  விரட்டப்பட்ட  தேவர்கள்  பிரம்மதேவனிடம்  சரண்  அடைவதென  முடிவு  செய்ய,  இந்திரனும்  அதற்க்லு  சம்மதித்தான்.



நான்முகன்  புன்னகையுடன்  அவர்களுக்கு  அபயமளித்தான்.  "தேவலோகத்தை  மீண்டும்  அடைய ஒரே  ஒரு  வழி  உள்ளது " என்றான்.



"கூறுங்கள்"



"துவஷ்டாவின்  குமாரன்  விஸ்வரூபனை  அறிவாயா நீ?"



"மகா தபஸ்வி  என்று  கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ...."



"நீ  எதற்கு  இழுக்கிறாய்  என்று  புரிகிறது  தேவேந்திரா.  அவன்  அசுர குலத்தோனாயிற்றே  என்று  எண்ணுகிறாய். சரியா?"



"அதுமட்டுமல்ல.  அவன்  எவ்விதத்தில்  எங்களுக்கு  உதவக்  கூடும்?"



"சந்தேகம்  வேண்டாம்  தேவேந்திரா. விஸ்வரூபன்  அசுர குலத்தில்  உதித்தவனாயிருக்கலாம்.    ஆனால்  தபஸ்வி.  தர்மங்களும்  நியாயங்களும்  அறிந்த உத்தமன். அவனுடைய  தபோபலனும் சத்திய சிந்தையும் உங்களைக்  காக்கும்.  அசுர  வம்சம்  என்றெண்ணாது  அவனைச் சரணடைவீராக.  கண்டிப்பாக  அவன்  உங்களுக்கு  உதவுவான்."



"நன்றி  நான்முகனே.  இப்போதே  விஸ்வரூபனிடம்  செல்கிறோம்"  தேவர்கள்  அங்கிருந்து  கிளம்பி  விஸ்வரூபனிடம்  வந்து தங்கள்  நிலையைக்  கூறி  அவன்  உதவியைக்  கோரினார்கள்.  .



விஸ்வரூபன்  கண்மூடி  யோசனையிலாழ்ந்தான்.



 "உதவி  என்று  வந்தவரைத்  திருப்பி  அனுப்புதல்  தர்மமன்று என்பதை  நானறிவேன்.  உங்களுக்கு  உதவுதல்  என்  கடமையும்  கூட.  அதே  நேரம்  தங்களுக்கு  புரோகிதம்  செய்வதால்  என்  தபஸ்  நாசமடையும்.  இருப்பினும்  தங்களைக்  கைவிட மாட்டேன்."



விஸ்வரூபன்  உறுதியளித்து  விட்டு கண்மூடி தியானத்திலாழ்ந்தான்.  சுக்ராச்சாரியாரிடமிருந்து  தான்  கற்ற  வித்தையைக்  கொண்டு  அசுரர்களின்  பலத்தை  கிரகித்து இந்திரனுக்கு  மந்திரோபதேசம்  செய்தான்.

"இதுவே  நாராயண  கவசம்.  இதனை  உனக்கு  உபதேசித்து  விட்டேன்.  இதனை  பக்தி  சிரத்தையுடன்  ஜெபித்து  அசுரர்களை  வென்று  தேவலோகத்தை  மீட்பாயாக. இந்த  மந்திரம்  சத்ரு பயத்திலிருந்து  உன்னை  விடுவித்து  எங்கும்  எதிலும்  ஜெயிக்க  வைக்கும்.  சென்று  வா" 



இந்திரன்  விஸ்வரூபனை  வணங்கி  நன்றி  கூறி  விடை பெற்றான்.  நாராயண  கவசம்  தேவலோகத்தை  மீட்டுக்  கொடுத்தது.  



தேவர்களுக்கு  புரோகிதம்  செய்ததால்  விஸ்வரூபனின்  தபஸ்  குறைப்பட்டு,  அவனுக்கு  மூன்று  தலைகள்  உண்டாயின.  தன்   தபோவலிமையை  மீண்டும்  அடைய,  விஸ்வரூபன்  யாகமொன்று  நடத்தினான்.  தேவர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுத்த  பிறகு தன தாய்வழிச்  சொந்தங்களான  அசுரர்களுக்கும்  ஒரு  பங்கு  அவிர்ப்பாகம்  கொடுத்தான்.  அது  கண்டதும்  தேவேந்திரனின்  விழிகள் சிவந்தது.  அவன்  விஸ்வரூபனை  நோக்கி  கேட்டான்.



"நீங்கள்  செய்வது  சரியா  புரோகிதரே?"



"எது?"



எனக்கு  சமமாக  அசுரர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுக்கிறீரே.  அதைத்தான்  சரியா  எனக்  கேட்கிறேன்."



"அதிலென்ன  தவறு?"



"அவர்கள்  அசுரர்கள்  என்பதுதான்  தவறு.  அவிர்ப்பாகம்  பெற்றுக்  கொள்ளும்  அருகதை  அவர்களுக்கு  இல்லை  என்பதை  மறந்து  விட  வேண்டாம்.  எங்கள்  முன்பாக  அவர்களுக்கு  அவிர்ப்பாகம்  அளிப்பது  எங்களை  அவமதிப்பதாய்  ஆகாதா?



"அவர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுத்தது  அன்பினால்.  அதனைத்  தாங்கள்  தவறாக  எடுத்துக்  கொள்ள  வேண்டாம்.  உங்களை  அவமதிக்கும்  எண்ணமோ  நோக்கமோ இங்கு  எவருக்கும்  இல்லை.  தயவு செய்து  அமைதியடையுங்கள்"  விஸ்வரூபன்  சாந்தமாகக்  கூறினான். 



"முடியாது  வெற்று  சமாதானம்  என்  ஆத்திரத்தை  தணிக்காது.  கொடுத்த  அவிர்ப்பாகத்தை  நீங்கள்  திரும்பப்  பெற  வேண்டும்.  அப்போதுதான்  என்  ஆத்திரம்  தணியும்."



"கொடுத்ததைத்  திரும்பப்  பெறுவது  தர்மமல்ல  தேவேந்திரா.  அது  என்னால்  இயலாது"



"அப்படியானால்  என்  சினத்திற்கு  நீ  ஆளாக  வேண்டியிருக்கும்"



"உன் மூலம்தான்  எனக்கு  முடிவென்றால்  அதைத்  தடுக்க  யாரால்  முடியும்?  நான்  சித்தமாயிருக்கிறேன்"



விஸ்வரூபன்  உறுதியாகவும்  பணிவாகவும்  கூற,  தேவேந்திரனின்  சினம்  தலைக்கேறியது.  அசுரேந்திரன்  ஆனான்.  விஸ்வரூபனின்  மூன்று  சிரங்க்ளையும்  கொய்து  யாகத்தீயில்  எறிந்தான்.  தேவேந்திரனின்  செய்கையில்  அனைவரும்  அதிர்ச்சி  அடைந்தனர்.  தேவர்களாலேயே   அத்துக்கத்தை  தாங்க  முடியவில்லை.  வெட்கத்துடன்  தலை  குனிந்து  நின்றனர்.   அசுரர்கள்   முகத்தைப்  பொத்திக்க் கொண்டு  கண்கலங்கினார்கள்.  புத்திர சோகம்  தாளாது  துவஷ்டா  கதறினான்.  



"உனக்கு  நாராயண  கவசம்  சொல்லிக்  கொடுத்து,  தேவலோகம்  திரும்பக்  கிடைக்க  உதவினானே   என்  மகன்.  இதுதான்  நீ  அவனுக்குத்  தரும்  பரிசா தேவேந்திரா?   இவ்வளவு  நன்றி  கெட்டவனா  நீ?  மீண்டும்  இந்திர  பதவி  கிடைத்ததும்  உன்  மதி  கெட்டு   விட்டத?  உத்தமன்  ஒருவனை  நன்றி  மறந்து  கொன்றதால்  உன்னை  பிரம்மஹத்தி  தோஷம்  பீடிக்கட்டும்.  உன்  ரூபம்  மாறட்டும் ! பதவி  பறி போகட்டும்! புத்திர  சோகம்  தாளாது  துவஷ்டா  சாபமிட்டான்.  



சில  நிமிடங்களில்  தேவேந்திரனின்  ரூபம்  கோரமாய்  மாறத்  துவங்கியது.  "ஐயோ  இந்த  பிரம்மஹத்தி  தோஷத்திலிருந்து  யாரேனும்  என்னைக்  காப்பாற்றுங்களேன்"  என்று  கதறி  அழுதபடி  கால்போன  போக்கில்  ஓட  ஆரம்பித்தான்  தேவேந்திரன்.   இந்திரன்  இல்லாத  தேவலோகம்  பொலிவிழந்து  இருண்டு  போனது.  அவனை  இத்தோஷத்திலிருந்து  எவ்வாறு  மீட்பது  என்பது  குறித்து  தேவர்கள்  தங்கள்  குரு  பிரஹஸ்பதியோடு  ஆலோசித்தனர். 



"ஒரு  வழியுள்ளது.   தேவேந்திரனின்  இந்த  பிரம்மஹத்தி  தோஷத்தைப்  பகிர்ந்து  கொள்ள  உங்களில்  எவரேனும்  முன்  வந்தால்  அவன்  அதிலிருந்து  விடுபடுவான்."  குரு பிரஹஸ்பதி கூறினார். 



தேவர்கள்  திகைத்து  தயங்கிப்  பின்வாங்கினார்கள்.  முடிவில்  தேவரல்லாத  நால்வர்  பிரம்மஹத்தி  தோஷத்தை  பங்கு  போட்டு  இந்திரனை  விடுவிக்க  முன்வந்தனர்.  





அம்மா  கதையை  நிறுத்தினாள்.  



"யாரந்த  நான்கு  பேர்?  பையன்  ஆவலுடன்  விழி   விரியக்  கேட்டான். 



வேறு  யாருமில்லை.  நாம்  வசிக்கும்  இந்த  பூமி,  நாம்  குளிக்கும்  இந்த  ஜாலம்,  இந்த  பூமியிலுள்ள  விருட்சங்கள், மற்றும் ஸ்திரீகள் இவர்களே  பிரம்மஹத்தியை  பங்கு  போட்டுக்  கொண்டு  தேவேந்திரனின்  தோஷத்தை  நீக்கியவர்கள்" 



"பெற்றுக்  கொண்ட  பிரம்மஹத்தி  தோஷம்  இவர்களை  பாதிக்கவில்லையா?  பாதித்தது  என்றால்  எப்படிப்  பட்ட  பாதிப்பு?  பையன்  கேட்டான். 



"பாதிப்பு  மட்டுமல்ல.  இந்த  நற்செயலுக்காக  நான்கு  பேருக்கும்  ஆளுக்கு  ஒரு வரமும்  கிடைத்தது."



"என்ன  பாதிப்பு?  என்ன  வரம்?"



"பூமி  தன்  மீது  ஏற்பட்ட  பள்ளங்கள்,  தானே  தூர்ந்து  போகவல்ல  வரத்தைப்  பெற்றது.    இந்த  பூமியில்  பொய்  பித்தலாட்டம்,  நன்றி கெட்ட  குணம்,  பிறர்  பொருளை அபகரிப்பது  போன்ற  தவறுகளைச்  செய்பவர்கள்  எல்லோரும்  பிரம்மஹத்தியின்  ரூபமாயிருப்பார்கள்.   



ஜலம்,  விருத்தியாகி  பெருகி ஓடும்  வரத்தைப்  பெற்றது.  அதில்  காணும்  நுரையும்,  நீர்க்கொப்புளங்களும்  பிரம்மஹத்தியின்  ரூபம்.  



விருட்சம்  அதன்  கிளைகளை  எவ்வளவு  முறை  வெட்டினாலும்  மீண்டும்  மீண்டும்  துளிர்க்கும்  வரத்தைப்  பெற்றது.  அதே  நேரம்  அதில்  வடியும்  பிசின்தான்  பிரம்மஹத்தியின்  வெளிப்பாடு.  



ஸ்திரீகள்  தாங்கள் கருவுற்ற  காலத்தில்,  தன்  கருவிலிருக்கும்  சிசுவுக்கு  எவ்வித  ஆபத்துமின்றி கணவனுடன்   சம்போகம்  செய்து  கொள்ளும்  வரத்தைப்  பெற்றார்கள்.  மாதா  மாதம்  அவர்களுக்கு  ஏற்படும்  உதிரப்  போக்குதான்  பிரம்மஹத்தியின்  ரூபம். 



அம்மா  சொல்லி  முடிக்க,  பையன்  ஜலத்தையும்  அதன்  கரையிலிருந்த  விருட்சங்களையும்,  தான்  நின்றிருந்த  பூமியையும்,  ஆற்றில்  குளித்துக்  கொண்டிருந்த  ஸ்திரீகளையும்  மரியாதையோடு  பார்த்தான்.  



ஆற்றங்கரையோரம்  பூமியில்  சிறிய  பள்ளம்  செய்து  வைத்து  விட்டுப்  போனான்.  இரு  தினம்  கழித்து  வந்து  பார்த்த  போது,  அந்தப்  பள்ளம்  தானே தூர்ந்து  போயிருந்தது  கண்டு  வியந்தான்.  நல்லவர்கள்  எல்லாம்  விஸ்வரூபனாய்த்  தெரிந்தார்கள்.  தீயவர்கள்  எல்லாம்  பிரம்மஹத்தி  பிடித்த  இந்திரனாய்த்  தெரிந்தார்கள்.  தான்  இனி  எப்படி  வாழ  வேண்டும்  எனப்  புரிந்தது.  இதுவரை  தான்  ஏதேனும்  தவறுகள்  செய்திருக்கிறோமா  என்று  யோசித்தான்.  சிறு  சிறு  தவறுகள்  செய்திருக்கிறோம்  என  நினைத்துக்  கொண்டான்.  தன்  தவறுகளுக்கு  மானசீகமாய்  மன்னிப்பு  கேட்டுக்  கொண்டான்.  பயபக்தியோடு  ஜலத்தில்  இறங்கினான்.  



"இதுவரை  நான்  அறிந்தோ  அறியாமலோ  செய்துள்ள  சிறு  சிறு  தவறுகளை  ஏற்றுக்  கொள்  ஜலமே!  என்னைப்  புது  மனிதனாக  மாற்று.  விஸ்வரூபனைப்  போல்  வாழ்ந்து  தர்மத்தின்  வழி  நடக்க  வரம்  கொடு"



கண்மூடி  தியானித்த படி  நீரில்  மூழ்கி  எழுந்தான். 
                              
                                                *****************************













23 கருத்துகள்:

  1. ஏற்கெனவே படிச்சிருக்கேன். :) மிக்க நன்றி. நல்ல படிப்பினை உள்ள கதை! :) ஆன்மிக/பக்திக் கதையையும் சாமானியர்கள் படிக்கும் வண்ணம் ருசிகரமாக மாற்றிய ஆசிரியருக்கு (வித்யா சுப்பிரமணியம்) வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கெனவே படிச்சிருக்கேன். :) மிக்க நன்றி. நல்ல படிப்பினை உள்ள கதை! :) ஆன்மிக/பக்திக் கதையையும் சாமானியர்கள் படிக்கும் வண்ணம் ருசிகரமாக மாற்றிய ஆசிரியருக்கு (வித்யா சுப்பிரமணியம்) வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கதைக்கு சமூக நோக்கு மிகப் பொருந்தி இருக்கிறது. அருமை. நன்றி வித்யா சுப்ரமண்யம். நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. கதை அருமை வாழ்த்துகள் திருமிகு. வித்யா சுப்ரமணியம்.

    பதிலளிநீக்கு
  5. // நாம் வசிக்கும் இந்த பூமி, நாம் குளிக்கும் இந்த ஜாலம், இந்த பூமியிலுள்ள விருட்சங்கள், மற்றும் ஸ்திரீகள் இவர்களே பிரம்மஹத்தியை பங்கு போட்டுக் கொண்டு தேவேந்திரனின் தோஷத்தை நீக்கியவர்கள் //

    ஆஹா, புராணக்கதைகளை அற்புதமாகக் கற்பனை செய்து, அதற்கேற்ற காரணங்களையும் அடுத்தடுத்துச் சொல்லி அசத்தியுள்ளது, படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

    கதாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள். எங்கள் ப்ளாக்குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. கருத்தாழம் மிக்க கதை நன்றி

    பதிலளிநீக்கு
  7. நாம் செய்யும் செயல்களுக்கு புராண முலாம் பூசி தவறெது சரியெது என்று கூறும் ஒரு நல்ல கற்பனை.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. உங்களது இந்த தளத்தில் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது இதோ சுட்டி
    - கில்லர்ஜி

    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  9. ஓ! வித்யா சுப்ரமணியமா? எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்?.. எழுதி எழுதி பழக்கப்பட்ட எழுத்து.
    அதான் வாகாக அது தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது. எழுத முனைவோருக்கும் எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் எழுத்து. உரையாடலில் கதையை நகர்த்திய விதம் அற்புதம். இந்த அற்புதம் இந்தக் காலத்தில் எங்கே போயிற்று என்று ஆற்றாமையாக இருக்கிறது.

    உபநிஷதக் கதைகள் எக்காலத்துக்கும் பொருந்தி வருவது தான் அவற்றின் சிறப்பு. அதான் அவை பெற்ற வரம். எப்போது அந்த வரத்தைப் பெற்றது என்பதற்கும் ஒரு வரலாறு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. மிக எளிமையாக புரியும் வகையில் இருக்கு ...பிரம்ம ஹத்தி பெயர் காரணத்தை அறிந்து கொண்டேன்
    எங்க பாட்டிமற்றும் அம்மா இருவருமே வித்யமாவின் பரம ரசிகைகள் ..முந்தி எனக்கு 87/90 களில் இவங்க மற்றும் சில பெண் எழுத்தாளர் புக்ஸ் மட்டுமே படிக்க அனுமதி :) இங்கேuk லைப்ரரியில் கூட வித்யா மேடத்தின் புக்ஸ் நிறைய இருக்கே ..அவங்க வரையும் படங்களும் கொள்ளை அழகாச்சே .பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக் ..

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கதை.
    வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.
    நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கதை.
    வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.
    நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  14. அருமையான விளக்கம் வித்யா. பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம். !

    பதிலளிநீக்கு
  15. இந்த கதையை முன்பே முறை படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதையைப் படைத்த வித்யாஜிக்கும் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நல்ல விளக்கத்துடன் கூடிய சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. சகோதரி வித்யா சுப்ரமண்யம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    கீதா : வித்யா சுப்ரமண்யம் அவர்களின் கதைகள் பல வாசித்ததுண்டு. நாவல்கள் உட்பட. மிக்க நன்றி அவர்களின் கதையை இங்கு பகிர்ந்தமைக்கு. வாழ்த்துகள் சகோதரிக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!