செவ்வாய், 28 ஜூன், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாற்றம்

          அவரின் தளம் அநன்யாவின் எண்ண அலைகள்.

          சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட்.  சென்ற வருடத்துக்குப் பிறகு பிளாக்கில் அவர் எழுதவில்லை.    ஆனால் ஃபேஸ்புக்கில் மிகவும் பிஸி!


          இந்தக் கதை பற்றிய அவர் கருத்தும், தொடர்ந்து அவர் படைப்பும்...========================================================================- அநன்யா வீடு மாற்றும் மும்முரத்தில் இருப்பதால் முன்னுரை தராததற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்! -


========================================================================

மாற்றம்  


அநன்யா மகாதேவன்

     ”வீடு பெருக்கி துடைக்கிறதுக்காம்மா 600 கேக்கறீங்க?” என்றேன். ”அங்கே ஒரு வீட்டுல செய்யறேன் அவங்க 800 குடுக்கறாங்கம்மா” என்றாள்.சென்னையில் ஆள் கிடைப்பதே அரிது, ”பாத்திரமெல்லாம்?”
 என்றாள்.

”வேண்டாம்மா, அது நானே பாத்துப்பேன்” என்றேன். ”வெறுமனே பெருக்கி துடைக்கணும்மா, 500 ரூபாய் தரேன்”


”இப்பச்சரி, ஆனா நான் செய்யறதை பாத்துட்டு 3 மாசம் கழிச்சு 600 தாங்க” என்றாள்.


அரை மணி வேலைதானே? அதுவும் சிறிய வீடு தான். எதுக்கு 600 எல்லாம்? என்று நினைத்துக்கொண்டேன்.

     8 மணிக்கு சமயல் முடித்துவிட்டு வேலைக்கு ஓடவேண்டும். பழைய வீட்டில் ரொம்ப அவஸ்தை. ”ஆகட்டும்மா” என்று சொல்லி வைத்தேன்.

     சுமார் 65 வயதிருக்கும். முழுவதும் நரைத்த முடி, மூக்கின் இரண்டு புறமும் பேசரி அணிந்து, காலை 5.30க்கு சிரிக்கும் கண்களுடன் ஆஜர் ஆகி விடுவாள்.அரை மணி நேரம் வேலை செய்கிறாள்.

     முதலில் கூடம், பின்னர் சமயலறை, பிறகு இரண்டு அறைகளையும் சுத்தமாக நன்றாகக் குனிந்து இரண்டு கைகளாலும் விளக்குமாற்றை பிடித்துக் கொண்டு பெருக்கி,அழகாக அழுத்தி மாப்பைக் கொண்டு துடைக்கிறாள் அந்த மூதாட்டி.  சில சமயம் 5.45, சில சமயம் 6.00 மணிக்கு வந்தாலும் நேரத்துக்கு வேலையை முடித்துக்கொண்டு அனாவஸ்ய பேச்சில்லாமல், குப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள்.

     ”வெறும்பாலு குடிக்க மாட்டேய்ன். கொஞ்சமா சர்க்கரை போட்டு ஒரு சொட்டு காப்பித்தண்ணி ஊத்துங்க ” என்று தனக்கு வேண்டியதை சொன்னாள். அப்படியே தரேம்மா என்றேன். காபி தருவாத ஒன்றும் பேசவில்லை. ஒரு வேளை கொடுக்கவில்லையென்றால் கேட்கவும் மாட்டாள். அவள் வந்தால் அவளுக்கு காப்பி கொடுக்க வேண்டுமே என்ற உந்துதலில் 5/.15க்கே எழ ஆரம்பித்தேன்.

     எனக்கு ஜுரமாக இருந்ததை உணர்ந்து நான்கு நாள் வழக்கமான வேலைகளுடன், பாத்திரங்களை சத்தமில்லாமல் தேய்த்துவிட்டு மேடை துடைத்துவிட்டுப் போனாள்.

     அவள் கால்கள் மூப்பினால் கோணி இருந்தன. ஒரு நாள் நான் கால்களை கவனிப்பதைக் கண்டு,”கட்டட வேலை செஞ்சு செஞ்சு காலெல்லாம் திராணியில்லாம போச்சும்மா, ரொம்ப வலிக்கிது” என்றாள்.

     வேலைக்கு வர ஆரம்பித்த ஒரு வாரத்தில், ”5 நாள் கரூர் போறேய்ன். வரமாட்டேய்ன்” என்றாள் . சிவுக்கென்றது. 5 நாளா? என்று ஆச்சர்யமும் அதிருப்தியும் காட்டிவிட்டு, சரிம்மா என்று சிரித்து வைத்தேன்.

     டாண் என்று 5வது நாள் ஆஜர் ஆகிவிட்டாள். அவ்வப்போது ”ஃப்ரிஜ்ஜுக்கு பின்னாடி தூசி இருக்கும்மா” என்றேன். பெருக்கும்போது கூடவே நடந்தேன். கீழேயுள்ளவற்றை எடுத்து நீக்கி உதவி செய்தேன். இல்லாவிட்டால் அப்படியே பெருக்கிவிடுகிறாள். அடியில் தூசி குப்பை எல்லாம் அப்படியே இருக்கும்.

     தினமும் 5.45க்கு வந்துவிட்டு 6.15க்கு கிளம்பி விடுவதால் எதுவும் பேசமுடியவில்லை. ஒரு நாள் கொஞ்சம் லேட்டாக வரச்சொன்னேன். 11.00 மணிக்கு வந்தாள். ”எனக்கு பசங்க இல்லே, ஒரே பொண்ணு தேன்.. என் பொண்ணுவயித்து பேத்தியை நாந்தேன் படிக்கவைக்கிறேய்ன். மாப்பிள்ளை சரியில்லைம்மா, குடிக்கிறாய்ன், அதேன் நானே அவளை எடுத்துட்டு வந்துட்டேய்ன். இங்கே தேன் படிச்சா, பெரியமனுசி ஆயிடும்ன்னு தோணிச்சு, அதான் கொண்டு என் பொண்ணு கிட்டே கரூர்ல விட்டேய்ய்ன். நானே சம்பாரிச்சு காசு சேத்து அவளை படிக்க வெக்கிறேய்ன்” என்றாள்.வீட்டுக்கு வீடு கஷ்டமும் வேதனையும் இருக்குமே. இவர்களுக்கு இது போல என்றெண்ணிக்கொண்டேன்.

     ”பேத்தியை ஆஸ்டல்ல சேர்த்திருக்கேன். கொஞ்சங்கொஞ்சமா காசு சேத்துருக்கேய்ன். 30000 கேக்குறாய்ங்கே. காசை மாப்பிள்ளைகிட்டே குடுத்தா குடிச்சிப்புடுவாய்ன். அதேன் நானே கரூருக்குப் போய் கட்டிட்டு வந்தேய்ன்” என்றாள்.

     அன்று முதல் தேதி. கண்களில் எதிர்ப்பார்ப்புடன் வந்தாள். 500 ரூபாய் நோட்டுடன் 100 ரூபாய் நோட்டும் கொடுத்தேன். அவள் கண்கள் பனித்து, நன்றி என்றன.  

     என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.

31 கருத்துகள்:

 1. அவர்கள் இல்லாதபோது வரும் க்ஷண கோபம் அவர்களைப் பார்த்ததும் காணாமல் போய் விடுகிறது.. நமக்குள் மனிதம் ஜீவித்திருப்பதின் சாட்சி

  பதிலளிநீக்கு
 2. அவர்கள் இல்லாதபோது வரும் க்ஷண கோபம் அவர்களைப் பார்த்ததும் காணாமல் போய் விடுகிறது.. நமக்குள் மனிதம் ஜீவித்திருப்பதின் சாட்சி

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ணா, கேஜிஜி நாட்டாமைஜி! - அநன்யா வீடு மாற்றும் மும்முரத்தில் இருப்பதால் முன்னுரை தராததற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்! // ஹிஹி!

  பதிலளிநீக்கு
 4. மனிதர்களுக்கு தான் மதிப்பு அவசியமாகிறது..... உண்மை....

  நல்ல பகிர்வு. பாராட்டுகள் அனன்யா.... பகிர்ந்து கொண்ட எங்கள் பிளாக் நண்பர்களுக்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 5. அனன்யா வா? அநன்யா வா? - காளிதாசனா? காலிதாசனா? ஒரே கன்பீசிங்கா இருக்கே!

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு கதை அநன்யா மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  எட்டாவது பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் ப்ளாக்க இன்னும் எட்டாத உயரம் தொட எமது வாழ்த்துகள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. ரூபா 500 ஆ !! ஆச்சரியமாக இருக்கிறது !

  நாங்கள் 2000 ரூபா தருகிறோம்.

  பாத்திரம் தேய்க்கவேண்டும் வீடு பெருக்கி கூட்டவேண்டும்.
  அதற்கு 1000 ரூபா.

  மற்றபடி, வூட்டு அம்மாவுடன் சொந்தக் கதை, ஊர்கதை பேசி
  நேரத்தைப் போக்க ரூபா 1000 போல இருக்கிறது.

  என்னவோ !!

  அது இருக்கட்டும்.

  அனன்யா மஹாதேவன் அவர்கள் நகைச்சுவை க்காக ஒரு
  பாரத ரத்னா விருது தரலாம்.

  நான் இப்போது அவர்கள் முக நூல் படிப்பது இல்லை.
  காரணம்.
  போன தடவை படித்து, சிரித்து சிரித்து, அடக்கமுடியாமல் சிரித்து, வந்த வயிற்று கிராம்ப்ஸ் இன்னும்
  அங்கேயே ஸ்தம்பித்து இருக்கிறது. !!

  மேடத்துக்கிட்டே சொல்லி, அதுக்கு எதுனாச்சும் நாட்டு மருந்து தேடணும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 8. அநன்யா வின் கதை அருமை!அதுவும் அந்த முத்தாய்பு வரி. உண்மைதான் நான் என்னதால் சில சமயம் அலுத்துக் கொண்டாலும் இறுதியில் மனிதம் உள்ளவர்கள் என்றால் கொடுத்துவிடுவோம் நம்மை அறியாமலேயே..... வாழ்த்துகள்!

  கீதா: நாங்க கரெக்ட்டா போட்டுருக்கமா "ந" ஹிஹிஹி அநன்யாவை நங்கு பரிச்சயம் உண்டே. ஓ வீடு மாறுகின்றாரா. சொல்லிக் கொண்டிருந்தார் முன்பு....

  பதிலளிநீக்கு
 9. என்னாச்சு இப்போதெல்லாம் அவ்வப்போது தமிழ்மணம் காணாமல் போய்விடுகிறது?!!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. கதையின் தலைப்பும் மாற்றம் கேட்டு வாங்கிப் போடுவதிலும் மாற்றம் இந்த மாதிரி நான்கு வீடுகளில் செய்தால் ரூ 2000-/ இரண்டு மணி நேரத்துக்கு மணிக்கு ரூ ஆயிரம் அலுவலகம் போய்ச் சம்பாதிப்பவர்களை விட அதிகம் சம்பளம் என்ன பொல்லாத மதிப்பு. எல்லாமே நாம் எண்ணுகிற விதம்தான் டிக்னிடி ஆஃப் லேபர் என்பது வெறும் வார்த்தை அல்ல.

  பதிலளிநீக்கு
 11. மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 12. மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 13. என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.// உண்மையான வார்த்தைகள்! சிறிய கதையானாலும் பெரிய தத்துவத்தை உணர்த்திவிட்டார். அருமையான கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 14. அருமையான அழகான யதார்த்தமான மனிதநேயம் மிகுந்த கதை.

  எழுதியவருக்குப் பாராட்டுகள்.

  படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. எத்தனை பணம் கொடுத்தாலும் நம்பிக்கைக்குரியவர் கிடைத்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்.

  கதை அருமை. 65 வயது பெண்மணியை "அவள்" என்று விளிப்பதை தவிர்த்திருக்கலாமே.

  கோ

  பதிலளிநீக்கு
 16. உண்மை தான் கோவில்பிள்ளை அவர்களே, திருத்திக்கொள்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 17. படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 18. இ;ருபத்தெட்டில் எட்டு வருவது விசேஷமாயிற்றே! வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 19. இவ்வளவு கதை கேட்டுவிட்டு வெறும் நூறு ரூபா தானா?..
  நல்ல வேளை, பாட்டி பேத்தியையும் கூட்டி வரவில்லை.
  அது என்ன இரண்டு கைகளாலும் விளக்குமாற்றைப் பிடித்து பெருக்கி?..
  செய்யற வேலையும் கெட்டுப் போகும். :))

  பதிலளிநீக்கு
 20. அதானே ,எங்கள் வீட்டிலும் பதினெட்டு வருடமாய் ஒரே சர்வென்ட் பெ'ண்மணி'தான் :)

  பதிலளிநீக்கு
 21. அநன்யா மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 22. நான் சென்னையில் இருந்தப்போப் பத்து வருஷம் முன்னரே பாத்திரம் மட்டும் தேய்க்க ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கேன். வீடு பெருக்கித் துடைக்க அவங்க வர நேரம் எனக்கு ஒத்துவராது என்பதால் வைச்சுக்கலை! இப்போ இங்கே ஶ்ரீரங்கத்தில் பாத்திரம் மட்டும் தேய்க்க வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் சரி ஆயிரம் ரூபாய்/ குறைந்த பட்சமாக 750 ரூபாய்! எங்களுக்கு அவ்வளவு பாத்திரம் வராது என்பதால் நான் வைச்சுக்கவே இல்லை. சென்னையிலும் அடிக்கடி லீவு போட்டுடுவாங்க. தோட்டம் பெருக்க வேண்டி இருந்ததால் வேலைக்கு ஆள் கட்டாயத் தேவையாக இருந்தது. இங்கே அதெல்லாம் இல்லையே! :) கதை சொல்றேனோ?

  பதிலளிநீக்கு
 23. நல்லா வேலை செய்தால் நாமாகக் கொடுப்போம் தான்! ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கணும் அவங்களும். எனக்கு இதில் நிறையக் கசப்பான அனுபவங்கள் தான்! :(

  பதிலளிநீக்கு
 24. இன்னொரு கோணத்தில் பார்க்கப் போனால், லவலேசமும் கற்பனை கலக்காத யதார்த்தமான கதை இது.
  வாழ்க்க்கையில் நடப்பதை கதாசிரியர் நடக்கிற மாதிரியே சொல்லி இயல்பாகப் புரிய வைக்கிறார். அதற்காக கதாசிரியரைப் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள், அநன்யா மஹாதேவன்!

  பதிலளிநீக்கு
 25. அருமையானகதை. அனன்யாவுக்குப் பாராட்டுதல்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.//
  உண்மை. நாம் நிறைய காசு கொடுக்கிறோம் நன்றாக வேலை செய்வது இல்லை என்று அவர்கள் வரும் முன் சொன்னாலும் அவர்கள் வந்தபின் அவர்கள் சொல்லும் கதைகளை கேட்ட பின் பாவம் என்ன செய்வார்கள் ?
  என்ற எண்ணம் தோன்றிவிடும். மனிதர்களுக்கு தான் மதிப்பு.

  இயல்பான நடை. அருமை.

  அநன்யா மகாதேவனுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளைப் பார்த்து நாம் எல்லோருமே இரக்கப்படுகிறோம். ஆனால் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். பணம் அதிகம் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இல்லை. அதை அவர்கள் நமது பலவீனமாக எடுத்துக் கொள்ளாதவரை எல்லாமே ஓகே தான்.
  நகைச்சுவை நாயகியிடமிருந்து ஒரு சீரியஸ் கதை! பாராட்டுக்கள், அனன்யா!

  பதிலளிநீக்கு
 28. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 29. சரளமான நடையில் இயல்பான நல்ல கதை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!