செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு - ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி


பாலகிருஷ்ணன் வீடு 

அது ஒரு ஸ்டோர். முன்னும்,பின்னுமாய் ஆறு குடியிருப்புகள். காமன் லெட்ரின். பொதுவாக ஒரு கிணறு. அந்த காலத்தில், திருச்சியில் ஸ்டோர் குடியிருப்புகள் பிரசித்தம். சனி,ஞாயிறு சாயங்கால நேரங்களில், பொழுது போகாமல், பாச்சா என்கிற பார்த்தசாரதியும், கோண்டு என்கிற கோதண்டராமனும் விளையாட்டாக ஆரம்பித்த 'வாலி பால் ப்ளே' இன்று களை கட்டி,நெட்..ஸ்பேர் பந்து.. ஷார்ட்ஸ்.. என்று பத்து, பதினைந்து மெம்பர்களாக வளர்ந்து விட்டது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, வாலி பால் விளையாடும் போது ஆரம்பித்தான், ரகு.
' ஏன் சார், பாலகிருஷ்ணன் வீடு ஒரு மாசமாப் பூட்டிக் கிடக்கே..யாராவது வராங்களா?'

பாலகிருஷ்ணன் அந்த வாலிபால் டீமில் ஒரு ஆக்டிவ் மெம்பர். 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா'வில் க்ளார்க். திடீரென்று ஆஃபீஸர் ப்ரமோஷன் கொடுத்து, பம்பாய்க்கு அவனை ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டார்கள்.  பையன் ஸ்கூல் ஃபைனல் முடித்து விட, ஆர்டர் வந்த மூன்றாம் நாளே கிளம்பி விட்டான்.  

பாலு. ' வெஜிடேரியன் வந்தா பரவாயில்ல..'

' வெஜ்ஜோ..நான்வெஜ்ஜோ.. அதுவா முக்கியம்? செட்டியாருக்கு டோக்,டோக்கா மாசம் ஐநூறு ரூபாய் வாடகை வந்தால் போறும். யாரு கொடுத்தா என்ன?'

' இப்ப, நம்ம பாலு வீட்டுக்கு அறு நூறு ரூபாய்க்கு ஆள் வந்தாச்சு.'

'அப்படியா'

' ஆள் வந்தாச்சா?'

' அறுநூறு ரூபாயா?'

' அச்சச்சோ ...அப்ப நமக்கும் நூறு ரூபாய் ஏத்திடுவாரே, செட்டியார்'

' யாரு வராங்களாம்?'

ஏக குரலில் கேட்டனர் ரகுவும், நாணாவும்.

' யாரோ லேடியாம்..'

' ஆஃபீஸ் கோயரா?'

' அவங்க ஆஃபீஸ் போக மாட்டாங்க. ஆனா, ஆஃபீஸ் அவங்களைத் தேடி வரும்' -நக்கலாகச் சொன்னான், கோண்டு.

' சமூக சேவகியா?'

' ஊஹும்..'

' அரசியல் வாதியா?'

' ஊஹூம்..'

' யாராக இருந்தால் என்ன? நம்ம ஸ்டோர் மொத்தத்தில நாறப் போறது..'

' கொஞ்ச நேரம் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டார்கள். வாலிபால் ஆட்ட 
விறுவிறுப்பில் அது மறந்து போயிற்று.

ஒரு திங்கட்கிழமை, தெருவையே அடைத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து, அதிலிருந்து கண்டா, முண்டா சாமான்கள் இறங்கும் போது தான், பாலகிருஷ்ணன் வீடு பூட்டிக் கிடக்கும் விஷயமும், அந்த வீட்டிற்கு யார் குடி வரப் போகிறார்கள் என்கிற சுவாரஸ்யமும், மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது, அங்குள்ளவர்களுக்கு! 

' யார் அவள்?'

' என்ன வயசு இருக்கும்?'

' பார்க்க எப்படி இருப்பாள்?'

ஆனால், வந்தது என்னவோ கட்டை, குட்டையாய் முண்டாசு கட்டிக் கொண்டு, இரண்டு,மூன்று ஆட்கள்!

பொறுப்பாக எல்லா சாமான்களையும் வீட்டினுள் எடுத்து வைத்து, பார்க்கும் எல்லார்
முகங்களிலும், அறைகிறார்போல், வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்ற விதம், யார் அந்த வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தான் தூண்டி விட்டது.

' ரொம்ப வசதி பட்டவா போல இருக்கு' - இது பார்வதி மாமி.

' வசதிப் பட்டவான்னா, ஸ்டோருக்கு எதுக்கு வரணும்?  தனி வீடு பார்த்துக்க வேண்டியது தானே..' - பேபி.

' என்னமோடிம்மா..தெரியாம சொல்லிட்டேன்' - பார்வதி மாமி சட்டென்று ஜகா வாங்கவும், ஒரு புதுச் சண்டையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்த அத்தனை பேர் முகங்களிலும் 'பேஸ்து' வழிந்தது!

சாமான்கள் வந்து இறங்கி, கரெக்டாக பத்தாவது நாள், இரவு ஒன்பது மணிக்கு பால கிருஷ்ணன் வீட்டு 'லைட்' எரிந்தது.

காலையில் வீட்டைப் பார்த்தால் பெரிய பூட்டு!

ஒரு வாரமாகவே இப்படித்தான். இரவு ஒன்பது மணிக்கு வீடு திறக்கும். 

பன்னிரெண்டு மணி வரை லைட் எரிதல். காலையில் பூட்டிக் கிடக்கும். வீட்டில் யார்..யார்..இருக்கிறார்கள் ..எப்போது வருகிறார்கள்..எப்போது போகிறார்கள்..என்று ஒன்றும் புரியாத நிலை!

அப்புறம் ஒரு மாதம் பூட்டியே கிடந்தது.

பொதுவான லைட் ஒன்றிற்கு எலெக்ட்ரிக் சார்ஜ், தெரு கூட்டும் பெண்ணிற்கு மாசச் சம்பளம் போன்ற சில செலவுகளை 'காமனாக' செய்வார்கள். பாலகிருஷ்ணன் வீட்டைச் சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்கிற குழப்பம். யாராவது வீட்டில் இருந்தால் தானே... யாரிடம் போய் வசூல் செய்வதாம்?

வாடகை வாங்க வரும் செட்டியாரிடம், கேட்டுப் பார்த்தால், ' அதெல்லாம் நீங்களே சேர்த்துப் போட்டுக்குங்க..அவங்க கிட்ட யாரும், எதுவும் கேட்கக் கூடாது' என்று ஒரே போடாகப் போட்டார். 

செட்டியாரைப் பற்றி இங்கு ஒன்று சொல்ல வேண்டும். நாம் சொல்லும் குறைகளை பொறுமையாகக் கேட்பார். பிறகு 'இஷ்டம் இருந்தா இருங்க..இல்லாட்டி வீட்டைக் காலி பண்ணிடுங்க...ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வர எனக்கு ஆள் காத்துக்கிட்டு இருக்காங்க..யாரும் ரொம்ப கஷ்டப் பட்டு இங்கு இருக்க வேண்டாம்'னு கூலாக சொல்வார்.

அப்படிப் பட்ட செட்டியாரையே 'இம்ப்ரஸ்' பண்ற ஆள் யாராக இருக்கும்?

அங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.

குசுகுசுவென்று ஆண்கள் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஆர்வம் அப்படியே பெண்களுக்கும் தொற்றியது.  ஒரு வழியாய் சஸ்பென்ஸ் தீர்ந்தவுடன் 'அடச்சீ' என்றாகி விட்டது, எல்லாருக்கும்.

' வர வர செட்டியாருக்கு புத்தி பொடனியை விட்டு கீழே போயிடுத்துப் போல இருக்கு. நாலு பேர் கௌரவமாய் வாழற இடத்தில 'இவளை' குடி வைக்க எப்படி இவருக்கு மனசு வந்தது....  வாடகை வாங்க செட்டியார் வரட்டும்..  நான் இதைக் கேட்காம விட மாட்டேன்..'

கோடி வீட்டுக் கோனார் குதிகுதியென்று குதித்தார்.

' நம்ம கிட்ட ஒத்துமை இல்ல..ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் அவர்ட்ட கோள் சொல்றோம். அவருக்கு அது சாதகமாப் போயிடுத்து.  நம்ம கிட்ட ஒத்துமை இருந்தா, அவர் இப்படி செய்வாரா?'  ஆதங்கத்துடன் சொன்னார், அனந்து.

அனந்து சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. நன்றுடையான் கோவிலில், விடிய விடிய மதுரை சோமு கச்சேரி கேட்டு விட்டு, விடிகாலை மூன்று மணி வாக்கில் சுவரேறி குதித்து, வீட்டிற்கு வந்ததை யாரோ செட்டியாரிடம் போட்டுக் கொடுத்து விட்ட வருத்தம் அவருக்கு!

எல்லாரும் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.

யாரும் பாலகிருஷ்ணன் வீட்டில் பேசக் கூடாது. முக்கியமாக பேபி காஃபிப் பொடி கடன் கேட்டு அந்த வீட்டு வாசல் படி மிதிக்கக் கூடாது. செட்டியார் வேண்டுமானால் ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி!

' ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி! '

நாணி கோணிக்கொண்டு நாணா செட்டியார் மாதிரி 'மிமிக்ரி' பண்ணியது அனைவரும் ரசிக்கும் படியாய் இருந்தது.

அந்த 'அவள்' ..  அது தான் அந்த பாலகிருஷ்ணன் வீட்டில் குடி வந்தவளுக்கு யாரைப் பற்றியும்.. எதைப் பற்றியும் கவலையில்லை.  அவள் உண்டு..அவள் 'வேலை' உண்டு.. என்று இருந்தாள். எல்லாரும் சேர்ந்து உதாசீனப் படுத்தியதை, அவள் உதாசீனப் படுத்தியது அவர்கள் எல்லாருக்கும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது!

எங்கிருந்தோ ஒருவன் வந்து அவள் வீட்டிற்கு பால் ஊற்றினான். கீரைக் காரி.. பூக்காரி என்று அவள் வீட்டிற்கு மட்டும் புதிது,புதிதாய் ஆட்கள்!

' முறையில் வந்து தண்ணி பிடிக்கணும்கிற அவசியம் அவங்களுக்கு இல்ல.. அவங்க எப்ப வந்தாலும், நீங்க தண்ணிக்கு விடணும்'  என்று செட்டியார் ஆர்டர் போட்டு விட்டார்.  கரெக்டாக ஏழு இருபதுக்கு வேலைக்காரி வந்து இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள்.  அத்துடன் சரி..

பொச பொசவென்று வந்தது அத்தனை பேருக்கும். 'அவளுக்கு இருக்கிற ராங்கியப் பாரேன்' என்று ஆளாளுக்குப் பொருமினார்கள். 

செட்டியார் கூட அவளோட ' கஸ்டமரோ' என்று சந்தேகப் படவும் ஆரம்பித்தார்கள். 
அந்த ஸ்டோருக்கு அந்த 'அவள்' வருகையினால் வந்த நன்மை யாதெனில், அவரவர் தம்தம் வேற்றுமைகளை மறந்து ஒரு பொது எதிரியை ஒழித்துக் கட்ட ஒன்று கூடி நின்றது தான்! 

எவ்வளவு நாள் அவளால் இங்கு தாக்கு பிடிக்க முடியும் என்று நினைத்தது போக, நாம இங்கு எவ்வளவு நாள் தாக்கு பிடிப்போம் என்று அவளுடைய அலட்சியம் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்தது. போதும் போதாததிற்கு செட்டியார் வீட்டை அவளிடம் விற்று விட்டார் என்று கூட ஒரு வதந்தி கிளம்பியது!

ஸ்டோரை விட்டு ' வாலி பால்' ஆட்டம் போயே போய் விட்டது. அவரவர் வீட்டு ஆண்களை, பெண்கள் பொத்தி,பொத்தி காத்து வந்தார்கள். ஆண்களோ, குடியரசு தின அணி வகுப்பின் போது, ஜவான்கள் வலது புறமாக சடாரென்று தலையை சாய்த்துக் கொண்டு 'பேரேடு' செய்வார்களே, அது போல ஆஃபீசுக்குப் போகும்போதும் சரி... ஆஃபீஸ் விட்டு வரும்போதும்..சரி..  அவள் வீடு இருந்த பக்கம் அனிச்சையாய் தலையை சாய்த்துக் கொண்டு, ஆஃபீஸ் நோக்கியோ...  தம்தம் வீடு நோக்கியோ... சென்று கொண்டிருந்தார்கள்!

ஸ்டோரே கனத்துக் கிடந்தது!

தண்ணிச் சண்டை...பால் காரன் சத்தம்...காய்கறிகாரியுடன் பேரம்..'லஸ்மீ..கிஸ்ண மூர்த்தி..ப்போஸ்ட்ட்' என்ற போஸ்ட்மேன் கூவல்...'குருவை வணங்கக் கூசி நின்றேனோ.. கொண்டவர் பாவத்தை சுமக்க மறந்தேனோ..  பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ..'  என்று வள்ளலார் போல பளிச்சென்று வெள்ளை உடை உடுத்தி, காலை சாய்த்துக் கொண்டு வருபவர் போச்சு!!

நேஷனல் ஹைஸ்கூல் க்ரவுண்டில் கீரன் கதை, தூப்புல் காலட்சேபம்.. கும்பகோணம் சங்கர் பஜனை... ராதா கல்யாணம்..  சீதா கல்யாணம்...  பாகவத சம்மேளனம்...  ஆச்சார்யரின் பட்டினப் ப்ரவேசம்..  எல்லாமே போச்சு! 

இப்ப அந்த இடத்தில லேடீஸ் காலேஜ் கட்டப் போறாங்களாம்!

வடக்கு ஆண்டார் வீதியே தன் சுயத்தை இழந்து கொஞ்சம்,கொஞ்சமாய் மாறிக் கொண்டு வர, மாற விருப்பம் இல்லாதவர்கள், திசைக்கு ஒருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

ஒரு கால கட்டத்தில், இந்த இடத்துக்கு இவள் தான் சாஸ்வதம் என்று எல்லாராலும் பேசப் பட்ட அந்த 'அவள்' கூட வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள்! 

மும்பை சென்ற பாலகிருஷ்ணன் அங்கேயே 'ரிடையர்டா'கி விட்டான். 

பையனுக்கும் அங்கேயே வேலை கிடைத்து விட்டது. வேலை.வெட்டி எதுவும் அவனுக்கு இல்லாததினால், மனசு பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும். ஸ்டோர் ஞாபகம் வந்து விடும், அடிக்கடி!

ஹாலில் மாட்டியிருக்கிறானே, இந்த பழைய 'வால் க்ளாக்' .  இது இவனிடம் வந்ததே ஒரு தனிக் கதை!

ஒரு நாள் பக்கத்து வீட்டு மாலுக்குட்டி காணாமல் போய் விட்டாள்.  ஏக அமர்க்களம்.. ஸ்டோரே அல்லோல..கல்லோலப் பட்டது.  இரண்டு மணி நேர அலக்கழித்தலுக்குப் பிறகு, குழந்தை கிடைத்தவுடன் எல்லார் முகங்களிலும் நிம்மதி!

அடுத்த நாள் குழந்தை சொன்னாள்.

" இதோ பாருங்கோ,எல்லாரும்..  நா இனிமே காணாமப் போக மாட்டேன்.."

" எப்படிடா, கண்ணு"

முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு, 'நர்ஸரி ரைம்' போல் பாட ஆரம்பித்தாள்.

எம் பேரு மாலு..
எங்கப்பா பேரு பாலு..
முப்பத்தெட்டு பை மூணு..
மூக்கப் பிள்ள லேனு..
மணிவாசகம் ஸ்டோரு..
வடக்கு ஆண்டார் வீதி..
தெப்பக் குளம் போஸ்ட்டு..
திருச்சி ரெண்டு ....

" பாட்டு ஜோரா இருக்கே..யார் சொல்லித் தந்தா?"

" தோ...பால கிருஷ்ணன் அங்க்கிள்.  அப்பா
நான் இனிமே காணாமப் போயிட்டா, நீங்க யாரும் கவலைப் படாதீங்க..இந்த பாட்டை பாடினாப் போறும்.. போலீஸ் மாமா இங்கு என்னை கொண்டு வந்து சேர்த்திடுவார்.."

குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான், அந்த பால கணேசன். மாலுக் குட்டியின் அப்பா!

இவன் ஸ்டோரைக் காலி செய்யும் போது அந்த பால கணேசன் ஒரு 'வால் க்ளாக்' ப்ரஸண்ட் பண்ணினான்.

அது தான் இது!

" ஹாலின் 'ரிச்னஸ்' க்கு இது திருஷ்டிப் பூசணிக்காய்' என்று மருமகள் சொன்னாலும், 'இது இங்க தான் இருக்கணும்'ங்கிற பால கிருஷ்ணனின் பிடிவாதமே வென்றது! 

இங்கேயும் தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது..அடுத்தவர் உதவியும் தேவை இல்லை... முகத்தை எப்போது பார்த்தாலும் இறுக்கமாக வைத்துக் கொண்டு...  இயந்திர மனிதர்கள் !

ஃப்ளாட்டில் பக்கத்து வீட்டுக் காரர் பெயர் கூடத் தெரியாமல்..பத்து வருடங்களாக என்ன ஒரு ஜீவனே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!

பழையபடி, திருச்சிக்கே போய், அந்த ஸ்டோரிலேயே, 'செட்டில்' ஆகி விடலாமா என்று ஒரு நப்பாசை..

அந்த சமயம் பார்த்து, திருச்சியில் ஒரு கல்யாணம் வர, அப்பா, பிள்ளை இருவரும் கிளம்பி விட்டார்கள்.

பிரயாணத்தின் போது பையன் கேட்டான்:
' அப்பா..ஸ்டோர்ல உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்களா?'

' தெரியாதுப்பா..அப்பவே அனந்து பின்னவாசல் பக்கம் போயிடப் போறதா சொன்னார். கோனார் காலமாயிட்டார்னு தெரியும். பார்வதி மாமி இருக்க சான்ஸே இல்ல..நாணா, கோண்டு, பாச்சா, பேபி யாராவது இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம். ஆனா, அந்த ஸ்டோர் அங்க நிச்சயமா இருக்கும்'

கல்யாணம் முடிந்தவுடன், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆண்டார் வீதி வந்தார்கள், இருவரும்.

என்ன ஒரு ஏமாற்றம்!

அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!

அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !,

22 கருத்துகள்:

 1. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலைவணக்கம் துரைசெல்வராஜு அண்ணா அண்ட் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்! ஆஜர்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. துரை செல்வராஜு அண்ணா வணக்கம்...மாம்பழச்சாமியாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஒண்டுக்குடித்தனத்திற்குள் இருந்ததில்லை...

  ஆனாலும் அப்படியோர் உணர்வு கதையைப் படிக்கும்போது...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 6. கதையைப் பற்றி எழுதிய கருத்து எங்கே போனது?...

  பதிலளிநீக்கு
 7. நல்ல நினைவோட்டம். மதுரையிலும் இம்மாதிரி ஸ்டோர்கள் உண்டு. முக்கியமாய் லக்ஷ்மி நாராயணபுர அக்ரஹாரம், ஆதிமூலம்பிள்ளை அக்ரஹாரம் போன்ற இடங்களில்.

  கடைசி வரை அந்த பாலகிருஷ்ணன் வீட்டுக்குக் குடி வந்தவள் பற்றிய சஸ்பென்ஸ் அவிழவே இல்லை. ஊகத்தில் விட்டு விட்டார் ஆசிரியர். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. வார்த்தைகளைவிட, வர்ணனைகளே அதிகம் அழகு இரசிக்க வைத்தன...

  பதிலளிநீக்கு
 9. கதையின் முடிவை முதலில் "அவள்" பற்றி இருக்குமோ என்று நினத்து அப்புறம் ஊகிக்க முடிந்துவிட்டது என்றாலும் கூட... மனம் கனக்க வைத்துவிட்டது இறுதி வரிகள்! இப்படித்தான் பலருக்கும் பல அழியாத கோலங்கள் போன்ற நினைவுகள் யதார்த்த வாழ்வில் அழிந்த கோலங்கள் ஆனாலும் மனதில் அழியாதவையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.....

  எங்களின் மாமியாரின் அழகான வீடு எப்போது அடுக்குமாடி ஆகிவிடுமோ என்ற ஒரு வருத்தம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல இன்னும் பல நினைவுகள் காலமாற்றத்தில் ஏமாற்றங்களைத் தந்தாலும் மனதை விட்டு அகல மறுத்து அவ்வப்போது எழுந்து வருத்தம், புத்துணர்வு என்று மாறி மாறி கடிகாரத்தின் பெண்டுலம் போல் அசைத்துப் பார்க்கிறதுதான்...ஒரு நாள் அதுவும் நிற்கத்தானே செய்யும்!

  நல்ல யதார்த்தமான கதை...கதாசிரியர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களை எபி மூலம்தான் அறிமுகம்..கதாசிரியருக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இந்தக் கதையை ஏற்கனவே படித்த நினைவு படித்ததில் டாப்பு அந்தப் பெண்பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணியதுதான் நகைச் சுவை மன்னரின் மாறு பட்ட கதை

  பதிலளிநீக்கு
 11. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார்.. கால மாற்றத்தைக் கண்முன்னே கொண்டுவந்துள்ளார். காலம் மாற மாற, மனிதன், ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு தனித் தனித் தீவாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

  'ஆண்டார் தெரு'வை ஞாபகப்படுத்திவிட்டீர்களே. அது சின்னத் தெரு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்க சொல்றதைப் பார்த்தால் பலப் பல ஸ்டோர்கள் இருந்த பெரிய தெரு போலிருக்கிறது. தற்போது 'சிவசக்தி டவர்ஸ்' என்று எழும்பியுள்ள கட்டிடமும் (யார் என்று தெரிகிறதா?) முன்பு இப்படிப்பட்ட ஸ்டோராகத்தான் இருந்ததா?

  கதையைப் படிக்கும்போது, VGK வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் படித்த பல இடுகைகள் நினைவில் வந்துபோனது. (நேஷனல் ஹைஸ்கூல் கிரௌண்ட், லேடீஸ் காலேஜ், வடக்கு ஆண்டார் வீதி போன்ற பல).

  வாழ்த்துகள் இராமமூர்த்தி சார். (உங்கள் வீட்டில் உள்ள ஒன்றைப் பற்றிய படத்தோடு ஒரு இடுகை விரைவில் இங்கு வெளியாகும் :-) )

  பதிலளிநீக்கு
 12. இம்மாதிரி ஸ்டோர்ஸில் வாழ்பவர்களுக்கு சண்டைகளும், நேசமும் அவ்வப்போது வந்து போகும். வம்பென்றால் விடமாட்டார்கள். தொடர்கதையாகத்தான் இருக்கும். சிறிய ஃப்ளாட்டுகளில் வசிப்பவர்களிடம் சில ஸமயம் இதைப் பார்க்க முடிகிறது. மற்றபடி எந்தஸம்பந்தமுமில்லாமல்,வாழும் ஃப்ளாட் வாஸம்தான் அதிகம். மும்பையிலும் அப்படிதான் இருக்கிறது.
  கதை வெகு இயல்பாக நகருகிறது. இருந்த இடம் பார்ப்பதில் எவ்வளவு ஆர்வம்? இயற்கையானது. இடமே மாறி விட்டாலும் , யாராவது ஓரிருவரைப்பற்றித் தகவல் கிடைத்தால் பாக்கியமோ பாக்கியம். மிக்க நல்ல நினைவுக்கதை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 13. கதை அருமையாக இருக்கிறது. வீடுகள் கொண்ட குடியிருப்பில் மாயவரத்தில் இருந்தோம்.
  பத்து வீடுகள் கொண்ட குடியிருப்பு.

  மாடியில் இருந்தேன். என் வீட்டு மாடிப்படிக்கு அடியில் பெரிய திண்ணை இருக்கும் மற்ற வீட்டுக்காரார்கள் வந்து அமர்ந்து
  உரையாடி செல்வார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு ஓய்வாய் சிறிது நேரம் பேசி மகிழ்ந்து போவார்கள்.  நான் ஊருக்கு போனால் வழி அனுப்ப ஒரு கூட்டம். வந்த பின் வந்து விட்டீர்களா? என்று விசாரிக்க ஒரு கூட்டம் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள், என்னவிட இளையவர்கள் எல்லாம், அத்தை , அம்மா, அக்கா, பெரியம்மா என்று அழைத்து மகிழ்வார்கள்.

  இங்க்கு 150 வீடு கொண்ட அடுக்கு மாடி குடி இருப்பு! ஒரு சிலர் தான் பேசுகிறார்கள். இன்னும் சரியாக பேச வில்லை.
  மாயவரம் நினைவுகள் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது.

  அலைபேசியில் உரையாடி கொண்டு இருக்கிறோம்.

  உங்கள் கதையில் கடைசி வ்ரியை படிக்கும் போது மனம் கனத்து போனது.  பதிலளிநீக்கு
 14. அழகிய கதை, ஒரு படம் பார்த்து முடித்த ஃபீலிங் வருகிறது.

  படங்களில்தான் இப்படியான கொலனி குடித்தனங்கள் பார்த்திருக்கிறேன், அக் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்தது அருமை.

  முடிவு மனம் கொஞ்சம் கனக்கிறது... ஆனா பலபேர் எதிர்பார்ப்பது இப்படித்தானே, அதாவது தாம் தம் வசதிக்கேற்ப வெளி நாடு, வேறு ஊர் போய் வருவார்கள் ஆனா அந்த பழைய ஊர் வீடு, கடை, மரம் எல்லாம் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தப்புத்தானே...

  யாருமே ஊரை விட்டு நகராமல் அப்படியேயே வாழ்ந்து வந்தால் ஒருவேளை எல்லாமும் அப்படியே இருக்குமோ என்னமோ...

  பதிலளிநீக்கு
 15. பழைய நினைவுகள் எப்போதுமே சுகமானவை, சுமையானவையும் கூட. நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 16. ஸ்டோர் - பல ஸ்டோர்கள் இப்போது மாறி விட்டன. எனக்குத் தெரிந்த ஒரு உறவினர் இது போன்ற ஸ்டோரில் தான் சென்ற மாதம் வரை குடியிருந்தார். இப்போது வேறு வீடு வாங்கிக் கொண்டு போய் விட்டார்.

  ஒவ்வொரு ஸ்டோரிலும் பல கதைகள்.

  சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 17. அருமை யான உயிரோட்டமுள்ள வருணனை.60 களில் சில மாதங்கள் புது முதலியார் ஸ்டோரில் வாழ்ந்த அனுபவங்களை கிளறி விட்டது. joyous nostalgia. thank you for the desc

  பதிலளிநீக்கு
 18. அருமை.
  இது போல் ஒண்டுக் குடித்தன அனுபவம் இருப்பதால் ஒன்ற முடிந்தது
  நவீன அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் ஒண்டுக் குடித்தனம் நன்றாகவே மாடர்ன் ட்ரெண்டில் வந்து விட்டது.
  ஆனால் அந்தப் பழைய ஒட்டுதல்கள் நன்றாகவே மிஸ்ஸிங்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!