21.6.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் –நெல்லைத்தமிழன்

 

நாதமுனிகள் குருகைக்காவலப்பர் – பகுதி -2

குருவாலப்பர் கோயில் என்று கூகிளிட்டு மேப்பின் மூலம் சென்றால், அது ஒரு கிராமத்துக்கான பாதை. அங்கு சிறிது தூரம் சென்றுபார்த்தால் ஒரே வயல் வெளி இருபுறமும். நாம் தேடிவந்த கோயில் இருக்கும் இடம் இது அல்ல என்று தோன்றியது. அங்குள்ளவர்களைக் கேட்டு (பெருமாள் கோயில் எங்க இருக்கு என்று), திரும்பவும் நெடுஞ்சாலை வந்து கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலை நோக்கிச் செல்லும்போது நெடுஞ்சாலையின் மறுபுறம் வீரநாராயணப் பெருமாள் கோயில் என்ற வளைவு தென்பட்டது. அதற்குள் சென்றால் சிறிது தூரத்தில் வீரநாராயணப் பெருமாள் கோயில் வந்தது.

நான் மனதில் நினைத்திருந்ததைவிடப் பெரிய கோயில் அது. உள்ளே சென்று வீரநாராயணப் பெருமாளைச் சேவித்தோம். மூலவர் பிரம்மாண்டமாக மிக அழகுடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்தார். அர்ச்சகரிடம் மூலவர் படம் கிடைக்குமா என்று கேட்டேன். (பெருமாளைச் சேவித்தது நினைவில் இருப்பதற்காக என்று சொன்னேன்). படம் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

நாதமுனிகள், நம்மாழ்வாரிடமிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பெற்றுக்கொண்டார் என்று பார்த்தோம். நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்களை நான்கு வேத சாரமாகவும், திருமங்கையாழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களை ஆறு அங்கமாகவும் கருதினார் நாதமுனிகள்.

திருப்பல்லாண்டு தொடக்கமாக, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தங்கள் பிரணவார்த்தம் என்பதால் முதலாயிரமாகவும், திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் ஆகியவற்றை இரண்டாமாயிரமாகவும், முதலாழ்வார்கள் அருளிச்செய்த மூன்று திருவந்தாதிகளும், நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய பிரபந்தங்களை இயற்பா என்றும், திருவாய்மொழி த்வய அர்த்த விவரணம் என்பதால் மூன்றாம் ஆயிரமாகவும் நாதமுனிகள் பகுத்தார். இவரே பாசுரங்களுக்குப் பண் அமைத்து இராகத்துடன் பாடுவதைப் புகுத்தியவர். அரையர் சேவையை ஆரம்பித்துவைத்தவரும் அவர்தாம்.

உய்யக்கொண்டார் காலத்திலும் ஆளவந்தாரை வைணவ தர்சனத்துக்குக் கொண்டுவரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்குப் பிறகான தரிசனத் தலைவரான மணக்கால் நம்பி, யமுனைத்துறைவரை தரிசனத்தின் பக்கல் திருப்பி, அவரை வைணவ சமயத் தலைவராக மிளிரச் செய்தார். (அந்த வரலாறு வேறு ஒரு சமயத்தில்).

அப்படி ஆளவந்தாருக்கு பிரபந்தங்கள் பற்றிய விளக்கங்களைக் கொடுத்த மணக்கால் நம்பி,  ஆளவந்தாரிடம், தங்கள் தாத்தா நாதமுனிகள், தங்களை யோகசாஸ்திரங்களை குருகைக்காவலப்பரிடம் தெரிந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னார்.  நாதமுனிகள் பரமபதித்த பிறகு, குருகைக் காவலப்பர், நாதமுனிகளைப் பள்ளிபடுத்திய இடத்தின் அருகிலேயே யோகம் செய்துகொண்டிருந்தார்.

மணக்கால் நம்பி பரமபதித்த பிறகுதான் அவர் தன்னிடம் சொன்னது ஆளவந்தாருக்கு நினைவுக்கு வந்தது. குருகைக்காவலப்பரைத் தேடி அவர் யோகம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு தன் சிஷ்யர்களுடன் ஆளவந்தார் போனார். தியானத்தில் ஆழ்ந்திருந்த குருகைக்காவலப்பரை தொந்தரவு செய்ய அஞ்சி, சுவற்றிர்க்கு அப்பால் சப்தம் போடாமல் நின்றுகொண்டிருந்தார்.  அப்போது தியானத்தில் இருந்த குருகைக்காவலப்பர், இங்கு சொட்டைக்குலத்தார் யாரேனும் வந்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

நாதமுனிகள் சொட்டைக் குலத்தைச் சேர்ந்தவர் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

உடனே ஆளவந்தார், அவர் முன்பு வந்து, அடியேன் வந்திருக்கிறேன். அடியேன் வந்திருப்பது எப்படித் தெரிந்தது எனக் கேட்க,  தியானத்தில் என் முன்னே இருந்த கிருஷ்ணன் (எம்பெருமான்) என் தோளைத் தாண்டி எட்டி எட்டிப் பார்த்தான். (கிருஷ்ண பகவானை சொட்டைக் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வதுண்டு)

ஆளவந்தார், தாம் வந்த காரியத்தை எடுத்துரைத்தார். தன் தாத்தா நாதமுனிகளின் விருப்பப்படி, தன்னுடைய ஆச்சார்யார் மணக்கால் நம்பி சொன்னதற்கிணங்க தான் யோக ரகசியங்களைத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகச் சொன்னார்.

இதனை உமக்கு என்னுடைய அந்திமத் தசையிலே சொல்லிக்கொடுக்க விழைகிறேன். என்னுடைய இறுதிக்காலம் வரும் தை மாதம் அபிஜத் நட்சத்திரம் வரும் தினம். அதற்கு முன்பாக வந்து யோக ரகசியங்களைக் கற்றுக்கொள்ளும் என்று சொன்னார். சொன்னது மாத்திரமல்லாமல் ஒரு ஓலை நறுக்கில் எழுதியும் கொடுத்தார்.

ஆளவந்தார், வைணவ தரிசனத்திற்குத் தலைவராக திருவரங்கத்தில் இருந்து, தன் சிஷ்யர்களைப் பெருக்கிக்கொண்டு, அவர்களுக்கும் நிறைய உபதேசித்துக்கொண்டும் இருக்குங்கால், திருவரங்கம் கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி சமயம், அரையர் சேவையின்போது செல்ல, அப்போது திருவரங்கப் பெருமாள் அரையர், நம்பெருமாள் முன்பு (அப்போது உற்சவர் பெயர் அழகிய மணவாளன்) கெடுமிடராயவெல்லாம் என்ற திருவனந்தபுர பாசுரத்தைச் சேவித்துக்கொண்டிருந்தார்.

அரையர் சேவை என்பது, பெருமால் திரு முன்பு, ஆழ்வார் பாசுரங்களை இராகத்துடன் அபிநயம் பிடித்து சொல்வது (சேவிப்பது). பாசுரத்தின் பொருளுக்கு ஏற்றவாறு அபிநயம் இருக்கும். திருவரங்கத்தில் இப்போதும் அரையர் சேவை நடக்கிறது.

அரையர் சேவையின்போது, ஆழ்வார் பாசுரங்களை அரையர் சேவித்தாலும், கூடியிருப்பவர்கள் அந்த ஆழ்வாரே பெருமாள் திரு முன்பு பாசுரங்களைச் சேவிப்பதாக நினைத்து அதன் ஆழ்பொருளில் ஆழ்ந்திருப்பார்கள்.

ஆளவந்தார் அங்கு இருந்தபோது,  திருவரங்கப் பெருமாள் அரையர், கடுவினை களையல் ஆகும் என்ற பாசுரத்தைப் பாடும்போது,  ‘நடமினோ நமர்கள் உள்ளீர், நாம் உமக்கு அறியச் சொன்னோம்’ என்ற கடைசி வரியை திரும்பத் திரும்பச் சேவித்தார். அப்படிச் சேவிக்கும்போது ஆளவந்தார் முகத்தைப் பார்த்தார். அந்தப் பாசுரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

கடுவினை களையல் ஆகும், காமனைப் பயந்த காளை

இடவகை கொண்டது என்பர், எழில் அணி அனந்தபுரம்,

படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண

நடமினோ, நமர்கள் உள்ளீர், நாம் நமக்கு அறியச் சொன்னோம்

“படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண, நடமினோ” என்று ஆழ்வாரே தன்னை நோக்கிக் கூறுவதாக உணர்ந்த ஆளவந்தார், உடனேயே கோஷ்டியிலிருந்து விடைபெற்று (பெருமாளுக்கும் அரையருக்கும் கீழே விழுந்து சேவித்து) தன் சிஷ்யர்கள் சிலருடன் திருவனந்தபுரம் நோக்கி நடக்கலானார்.  தன் சிஷ்யரான தெய்வ வாரியாண்டானை திருவரங்கம் மடத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு திருவனந்தபுரம் நோக்கிச் செல்லலானார்.

இங்கு உங்களுக்கு திவ்யப்பிரபந்தம் சேவிக்கும்போது உள்ள நடைமுறையைச் சொல்லலாமென்று தோன்றுகிறது. கூடியிருந்து குளிர்ந்தேலோர் என்பது போல, பெருமாள் சன்னிதியின் முன்பு, எதிரெதிரே இரண்டு வரிசைகளில் ஸ்ரீவைணவர்கள் அமர்ந்துகொண்டு (அல்லது சில நேரங்களில் நின்றுகொண்டு) திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைச் சேவிப்பார்கள். இதற்கு சேவாகாலம் என்று பெயர்.

ஆரம்பிப்பதற்கு முன்பு, அர்ச்சகர், ‘அருளிப்பாடுங்கள்’ என்று உத்தரவு தருவார்.  (அருளிப்பாடு ஸ்ரீவைஷ்ணவா  என்று அவர் சொல்ல, அங்கு கூடியிருப்பவர்கள் ‘நாயுந்தே நாயுந்தே’ – நாங்களிருக்கிறோம் நாங்களிருக்கிறோமென்று சொல்லி உடனேயே ‘ராமானுஜ தயாபாத்ரம்’ என்ற தனியனோ (வடகலை), ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்’ என்ற தனியனுடனோ (தென்கலை சம்ப்ரதாயம்) ஆரம்பிப்பார்கள்.

இப்படி ஆரம்பித்த பிறகு கோஷ்டியில் சேர்ந்துகொள்ள வருபவர்கள், அங்கிருப்பவர்களை விழுந்து சேவித்துவிட்டுத்தான் கோஷ்டியில் உட்காரவேண்டும். அதுபோல, இடையில் எக்காரணத்தினாலோ வெளியே செல்லவேண்டும் என்றால், விழுந்து சேவித்துவிட்டுத்தான் செல்லவேண்டும். இதுதான் நடைமுறை.

காஞ்சீபுரத்தில் தினமும் திவ்யப்பிரபந்தங்களை கோஷ்டியாக கோயிலில் சேவித்துக்கொண்டிருந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார், தனது ஐம்பது வருடங்களான இந்தக் கைங்கர்யத்தில் தான் ஒரு நாளும் கோஷ்டியில் விழுந்து சேவித்ததில்லை என்று எழுதியிருக்கிறார். அதன் அர்த்தம், எப்போதும் தான் முதலாவதாகச் சென்றுதான் வழக்கமே தவிர, ஒரு நாளும் நேரமாக்கியதில்லை.

நான் பாசுரங்களை இங்கு பகிரும்போது, முதல் இரண்டு வரிகள் ஒரு நிறத்திலும், அடுத்த இரண்டு வரிகள் இன்னொரு நிறத்திலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல, பொதுவா ஒரு வரியில் இரண்டு * (ஸ்டார்) இருக்கும். பாசுரங்களைச் சேவிக்கும் முறை ‘முன்னடி பின்னடி’ என்று சொல்வர். முதலிரண்டு வரிகளை ஒரு சாரார் சேவிக்க, அதற்குப் பிறகு அடுத்த இரண்டு வரிகளை மற்றவர்கள் சேவிப்பார்கள். ஸ்டார் உள்ள இடத்தில் சிறிது நிறுத்துவதுபோல இருக்கும். நீங்கள் யூடியூபில் கேட்டால், அந்த ரிதம் நன்கு தெரியும்.

இப்படி இருக்கையில், ஒரு நாள் அனந்தபத்மனாபனைச் சேவித்துவிட்டு தாம் இருந்த இடத்திற்கு வந்த ஆளவந்தார், ஏதோ நினைவில், குருகைக்காவலப்பர் கொடுத்த ஓலை முறியை எடுத்துப் பார்க்க, அன்றுதான் அவர் பரமபதிக்கப்போவதாக எழுதிக்கொடுத்திருந்த து அறிய வர, அடடா… நமக்கு ஒரு புஷ்பக விமானம் இருந்தால்தானே நாம் குருகைக்காவலப்பரிடம் சென்று சேர முடியும் என்று நினைத்து துக்கித்தார்.

இப்படியாக யோகரகசியங்கள் குருகைக்காவலப்பரிடமிருந்து பிறருக்குச் சென்று சேராமலேயே போய்விட்ட து.  இதற்கு பெரியோர்கள் சொல்லும் விளக்கம், ஆழ்வார்கள் பாசுரங்களே நல்வழி காட்டும், ஸ்ரீவைணவர்களுக்கு யோகரகசியங்கள் தியான வழிமுறை தேவையில்லை என்று பெருமாள் சங்கல்பித்துவிட்டார் என்பர்.

குருகைக்காவலப்பரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை. அவர் குருகூரில் பெரிய செல்வந்தராகப் பிறந்து பின்னாளில் நாதமுனிகளின் சிஷ்யரானார் என்று மாத்திரமே இருக்கிறது. இதிலிருந்து, நாதமுனிகளுக்கு நாலாயிரம் ஆழ்வார் திருநகரியில் கிடைத்த பிறகு, அங்கேயே நாலாயிரத்தைச் சேவித்துக்கொண்டிருந்தார் என்று பார்க்கிறோம். அப்போது நாதமுனிகளின் சிஷ்யராக குருகைக்காவலப்பர் ஆகியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.

இனி, குருகைக்காவலப்பர் தியானம் செய்து, அங்கேயே பரமபதித்த இடத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் படங்களைப் பார்ப்போம்.

 

 

 

 

 


பச்சைக்கறை உடையுடன் துளசிமாலை துலங்க மிக அழகாகக் காட்சியளித்த வீரநாராயணர். சில நேரங்களில் பெருமாளுக்கான அலங்காரங்கள் நம் மனதைக் கொள்ளைகொள்ளும். அத்தகைய உணர்வு மூலவரைச் சேவித்தபோது எனக்கு ஏற்பட்டது. அனைத்து தலங்களிலும் இருக்கும் இறைவன் அந்த ஒருவனே. பல தலங்களில் நமக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்கும். சில இடங்களில் சில விநாடிகளே நமக்குக் கிடைக்கிறது.

குருகைக்காவலப்பர் யோகாப்யாசம் செய்த இடம். ஊர் பெயரே குருகைக்காவலப்பர் கோயில். (குருவாலப்பர் கோயில்). பரிவட்டத்துடன் காட்சி தருபவர் திருக்குருகைக்காவலப்பர்.

ஆச்சார்யார்கள் வரிசை. 

மூலவர் சன்னிதி, துவாரபாலகர்களுடன். 

ஆழ்வார் ஆச்சார்யார்கள் சன்னிதி

 

 

 

மரகதவல்லித்தாயார் தனிக்கோயில்.

 

 

 

 

 

 

கல்வெட்டுகள்தாம். காலங்களினால் மங்கியிருக்கின்றன

 

 

 

 

 

 

 

நாங்கள் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது திருமணத்துக்கு முந்தைய போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்படி இந்தக் கோயிலுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, கங்கைகொண்ட சோழீச்வரத்தில்தான் போட்டோக்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். பிரதோஷம் என்பதால் அவர்கள் அன்று அனுமதிக்கவில்லை. அதனால் பக்கத்தில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு வந்தோம் என்றார்கள்.

வலது பக்கத்தில் சிமெண்ட் பூசப்பட்ட தரையாகக் காட்சியளிப்பதுதான் திருக்குருகைக்காவலப்பருடைய திருவரசு என்று ஒருவர் எனக்குச் சொன்னார். முன்னால் சிதிலமடைந்துகிடந்த இப்பகுதியை தற்போது மேடிட்டு வைத்துள்ளார்கள் என்றார்.

திருக்குருகைக்காவலப்பர் திருவரசு. ஏன் இவற்றை நம்மால் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல இயலவில்லை? சமீபத்தில் இணையத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் சொல்லியிருக்கிறார், அவரது தாத்தா பாட்டி வாழ்ந்த ஊர் காட்டுமன்னார் கோயில். அவர்களது வீடு இன்னும் இருக்கிறதாம். அவரும் எப்போதாவது வருவாராம். ஆனால் அது வரை நாதமுனிகள், ஆளவந்தார் போன்றோரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையாம். நானும் குருபரம்பரை பற்றி பிற்காலத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன்.

ஒரு தடவை என் சிற்றப்பாவிடம் (ஏழு வருடங்களுக்கு முன்பு), ஏன் குருபரம்பரை, திவ்யதேசங்கள் போன்ற பலவற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில்லை என்று கேட்டதற்கு, அவர்களாகவே அவற்றைத் தேட வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை பெரியோர்களிடம் கேட்கவேண்டும் என்றார். மனதில் ஆசை ஏற்பட்டால்தான் தேட, படிக்க, கேட்கத் தோன்றும். ஆசையில்லாத எதையும் பிறர் சொன்னால்  மனது உள்வாங்கிக்கொள்ளாது என்றார். எனக்கு அவர் கூறியதில் உடன்பாடு இல்லை. தாய் என்பவள் குழந்தைக்கு ஒவ்வொரு உணவாக அறிமுகப்படுத்துகிறாள், மருந்து உட்பட. அதுபோலவே தன் வீட்டுப் பழக்கத்தையும் குழந்தைக்கு உணர்த்தி அதனைத் தொடரச் செய்கிறாள்.  இது மிக முக்கியம். வீட்டில் வழி வழியாக வரும் பழக்கவழக்கங்களை தாய்தான் குழந்தைக்குக் கடத்த இயலும். குழந்தைகள் தாய் தந்தை செய்வதைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறது. நாம் செய்யாத எதையும் குழந்தைகளுக்கு அறிவுரை என்ற பெயரில் கடத்த இயலாது.  எனக்கு என் சித்தப்பா சொன்னபோது, கூரத்தாழ்வான் வாழ்வில் நடந்தது நினைவுக்கு வந்தது. அவருடைய மகன்களுக்கு திருமந்திரத்தின் அர்த்தத்தைச் சொன்னது.

என் பெண், அவளுடைய வீட்டில் நடந்து கொள்வதை, கடைபிடிப்பதை அறியும்போது எனக்கு இந்த எண்ணம் இன்னும் வலுப்படும்.

குருகைக்காவலப்பர் வீரநாராயணப் பெருமாள் கோயில்.

குருகைக்காவலப்பர் திருவரசுவைச் சேவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலுக்குச் சென்றோம். அங்கு நிறைய நேரம் செலவழித்து தரிசனம் முடிந்து படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, உணவிற்கு ஏதேனும் கிடைக்குமா என்று அந்த வளாகத்தின் சாலைக்கு எதிரே இருந்த உணவகத்தில் பார்த்தோம். உணவகப் பெயர்கள் கவர்ச்சியாக இருந்தாலும், உணவு சரிப்படாது என்று எனக்குத் தோன்றியது. அதனால் நேரே கும்பகோணம் திரும்பி அங்கு வெங்கட்நாராயணா உணவகத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். கங்கைகொண்ட சோழீச்வரத்திலிருந்து புறப்பட்டு கார் ஓரிரு கிமீ தூரம் பயணித்ததும் மனைவி என்னிடம், சோழன் மாளிகை மேடு பார்க்கணும் என்று சொல்லியிருந்தீர்களே என்றார். உடனே காரைத் திருப்பி அதனைத் தேடிக்கொண்டு சென்றோம். அதுவும் மூன்று கிமீ தூரத்திற்குள்தான், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது (ஆனால் அங்கு செல்ல, குருவாலப்பர் கோயில் என்று போட்டிருந்த வேறு ஒரு சாலை வழியாக வயல்வெளிகளைக் கடந்து செல்லணும்). மாளிகைமேட்டுப் படங்களை ஏற்கனவே இந்தத் தொடரில் பகிர்ந்திருக்கிறேன்.

அடுத்த வாரம் வேறு ஒரு கோயிலைப் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்) 

32 கருத்துகள்:

  1. குருவாலப்பர் கோயில் என்று கூகிளிட்டு மேப்பின் மூலம் சென்றால், //

    நெல்லை, இதை நாமளே கூகுள் மேப்பில் பதியலாம் (அவங்கவங்க வீட்டை முகவரியைப் பதியறாங்கல்ல அப்படி) இல்லைனா, கூகுள் தளத்தில் சென்று பதியலாம். கூகுளில் வேலை செய்பவர் இருந்தால் அவரிடமும் சொல்லிப் பதியலாம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதை எப்படிச் செய்வது எனத் தெரியாது. பார்க்கிறேன்.

      நீக்கு
  2. திருவாய்மொழி த்வய அர்த்த விவரணம்//

    மந்திரம் எனும் பொருள் இல்லையா? த்வயம் என்றால்? திருவாய்மொழி இறைவனின் திருவடிகளைப் பணிவதைச் சொல்வதால் மூன்றாம் ஆயிரமா?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இவரே பாசுரங்களுக்குப் பண் அமைத்து இராகத்துடன் பாடுவதைப் புகுத்தியவர்.//

    சூப்பர்ல! ஒரிஜினல் கிடைச்சா நல்லது

    ஆளவந்தார் குருகைக்காவலப்பர் விவரங்கள் நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன் நெல்லை.

    சேவாகாலம் பற்றிய விவரங்கள் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. குருவாலப்பர் கோயில் னு இருக்கே போர்டில். அப்புறம் ஏன் கூகுள் காட்டலை? அப்படினா இப்பெயர் உள்ளிடப்படவில்லை என்று நினைக்கிறேன். அதாவது குருகைக்காவலப்பர்ன்ற பெயர் இல்லாம குருகாவலப்பர்னு போட்டிருந்தா காட்டியிருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கோவில் படங்கள் எல்லாம் நல்லாருக்கு நெல்லை. வளாகம் நல்ல பெரிசா இருக்கு கூட்டம் இல்லாததால் இன்னும் அழகா இருக்கு கோவில் முன்புறம் கோபுரத்துடன், . த்வஜஸ்தம்பம் இருக்கும் படங்கள் செமையா இருக்கு

    கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் அப்படத்தைக் கூர்ந்து பாக்க முடியலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லுடன் ராமர் சிற்பமா?

      கீதா

      நீக்கு
    2. ஓ அது வில் இல்லை கதையோ?

      கீதா

      நீக்கு
  6. சில நேரங்களில் பெருமாளுக்கான அலங்காரங்கள் நம் மனதைக் கொள்ளைகொள்ளும். //

    ஆமாம்.....அலங்காரமே இல்லைனாலும் அது ஒரு தனி ஈர்ப்பு.

    சன்னதி படமும் நல்லாருக்கு.

    ஓ அந்தப் படத்தில் தூரத்தில் ஒரு பெண்ணும் பையனும் இருக்காங்களே அதுதான் அந்த ஷூட்?

    ஏன் இப்படிக் கோயிலுக்குள் எடுக்க விடறாங்க? வேண்டாம் நான் ஏதாச்சும் சொல்லி வாங்கிக் கட்டிக்கக் கூடாது!!ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு Pre Wed shootல்லாம் ஆர்வம் இல்லை. அழகிய அமைதியான ஓயிலில் அவங்களுக்கு படங்கள் நன்றாக அமைந்திருக்கும். அவர்கள் உடையும் கௌரவமாகவே இருந்தது. தவறில்லை என்பது என் அபிப்ராயம், போஸ் கௌரவமா இருந்தால்.

      நீக்கு
  7. வலது பக்கத்தில் சிமெண்ட் பூசப்பட்ட தரையாகக் காட்சியளிப்பதுதான் திருக்குருகைக்காவலப்பருடைய திருவரசு என்று ஒருவர் எனக்குச் சொன்னார்.//

    கொஞ்சமா தெரிகிறது

    கோபுரம் படம் செமையா இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பெரிய பகுதி... 20x30 அடிகள் இருக்கும். கோபுரமும் கோயிலும் மிக அழகு.

      நீக்கு
    2. நம்ம மக்களுக்கு, இந்தக் கோயிலுக்குச் சென்றால் பிரிந்தவர் கூடுவர், திருமணமாகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், மன அமைதி ஏற்படும் , கடன் தொல்லை நீங்கும் என்று ஏதேனும் ஒன்றை அட்டாச் செய்தால் தரிசனத்திற்குச் செல்ல ஆரம்பிப்பார்கள்.

      நீக்கு
  8. நெல்லை, உங்க சித்தப்பா சொன்னதும் அதற்கு உங்கள் கருத்தும்....

    நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட வேண்டும். அதன்பின் அவர்கள் விருப்பம். அவர்கள் அப்படியே பின் பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் அவர்கள் அவர்களின் அனுபவங்களில் கற்றுக் கொள்வதில் அவங்க வாழ்க்கைக்கு ஏற்ப எண்ணங்களில் மாறுபடக் கூடும். என்னை உட்படுத்திக் கொண்டேன்.

    உங்களையோ மத்தவங்களையோ சொல்லலை. என்னைச் சொல்லிக் கொண்டேன்.

    சில பழக்கவழக்கங்கள் எப்போதைய காலத்துக்கும் பொருந்தாது. அப்படிப் பார்த்தால் கடல் கடக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதுண்டு. நாம் அப்படி இருக்கோமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் சரி. நாம் சொல்வதைச் சொல்லிவிடவேண்டும். நாமும் கடைபிடிக்கணும், அது முக்கியம்.

      கடல் கடந்தால் பிராயச்சித்தம் உண்டு. அறிவியலினால் நிலைமை மாறுவதால் காலமாறுதலுக்கும் உட்பட்டது. இது பற்றி எழுதுகிறேன்.

      நீக்கு
  9. கடைசிப்படம் சூப்பர்!!!!!

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு நெல்லை

    நானும் இப்படித்தான் எடுத்துத் தள்ளிவிடுவேன்...அதைப் பகிரவும் நினைப்பேன்.

    மாளிகைமேட்டுப் படங்களை ஏற்கனவே இந்தத் தொடரில் பகிர்ந்திருக்கிறேன்.//

    ஆமா நினைவிருக்கு.

    வெங்கட்நாராயணா நல்லாருக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். நான் ஏராளமான படங்கள் எடுத்து, ஓரளவு சரியா வந்திருப்பதைப் பகிர்கிறேன்.

      வெங்கட்நாராயணா சூப்பர். அதுவும் காலை 9 1/2 க்கு சுடச் சுட சாப்பாடு, மாலை மூணு மணி ஸ்பெஷல்... ஆனால் எனக்கு எப்போதுமே பிடிக்காத்து கொத்சு, கடப்பா. இரண்டு நாட்கள் கஷ்டம்தான்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்று அதிசயமாக நான் என் தளத்தில் பதிவொன்று போட்டுள்ளேன். அதை இங்கு "உங்கள் ப்ளாக் எங்கள் விருப்பம்" பக்கத்தில் இதுவரை காட்டவில்லை. (அதுதான் நீ அதிசயமாக பதிவைப்போட்டால் நான் எப்படி.? என மௌனமாக உள்ளது போலும். :))) ) என் நண்பர்கள் புதிய. பதிவு" பக்கத்திலும் இது தொடர்கிறது. எங்கள் ப்ளாக் அன்றாட பதிவுகளை எப்போதோ காட்டுகிறது. இணையத்தின் தவறா, நம் நேரமா எனத் தெரியவில்லை. ஆனால், உங்களால் முடிந்த போது என் பதிவுக்கு வாருங்கள் என அழைக்கிறேன். இதுவும் ஒரு சுயநலந்தான் என வெட்கமும் படுகிறேன். நன்றி அனைவருக்கும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பழைய பதிவுகளுக்கு மறுமொழி கொடுத்திருந்தால்தான் புதிய பதிவைக் காட்டும் போலிருக்கு. இட்லி பதிவை திரும்ப நான் பார்க்கணும்.

      நீக்கு
  12. ஆளவந்தார் குருகைக்காவலப்பரிடமிருந்து யோக ரகசியங்களை அறிய முடியாமல் போனதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். குரு பரம்பரை, ஞாயிறில் அது சம்பந்தமான கோயில் பதிவு வருவதால் இந்த மாதிரி அமைந்துவிடுகிறது.

      நீக்கு
  13. கோவில் படங்கள் நன்றாக இருக்கின்றன. நம்முடைய புராதன சிறப்புகளை நாம் பாதுகாப்பதில்லை என்பது நம்முடைய பலவீனம். உங்கள் சித்தப்பா சொன்னதில் சிறிதளவு உண்மை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டில் சாதாரணமானவற்றையே, சில நூற்றாண்டுகள் ஆனவற்றையே பெருமிதமாகப் பாதுகாக்கிறார்கள். நம்மிடம் ஏராளமாக இருப்பதால் சுணக்கம்.

      பொதுவா, மனைவி விட்டுட்டுப் போயிடுவாளோ என்பதால் கூடுதல் மதிப்பு கவனம். இங்கு, இவள் நம்மை விட்டு எங்கு போய்விடுவாள் என்பதால் அலட்சியம், கவனிப்பின்மை... இந்த மாதிரி வித்தியாசம்தான்.

      நீக்கு
  14. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய ஞாயிறு பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். வீரநாராயணபுரம் கோவிலின் ராஜ கோபுர தந்தையும், பிற கோபுரங்களையும் தரிசித்துக் கொண்டேன். பச்சைக் கலர் பட்டுத்தி கம்பீரமாக காட்சி தரும் வீரநாராயணா பெருமாளை நானும் கண் குளிர தரிசித்துக் கொண்டேன். (எனக்கு சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் வீட்டில் இருக்கும் பச்சைக்கலர் ஸ்ரீராமர் நினைவுக்கு வந்தார்.இன்று அவர் பதிவிலும், ஸ்ரீ ராமரை தரிசித்து வந்தேன். )

    உங்கள் மனக்கணக்கு சரிதான். பழைய பதிவுக்கு பதில் தராத கோபம் போலும். என் புதிய பதிவுக்கு...! எ. பியின் "நிம்மதியற்ற உறக்கத்தைத்தான்" இன்னமும் என் "நண்பர்கள் பக்கமும்" காட்டிக் கொண்டுள்ளது. என்னவோ பதிவுகளுக்கு வந்த! சோதனை..! "இது என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை" என்று டி. எஸ் பாலையா அவர்களின் வசனத்தை கூறிக் கொண்டுள்ளேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ வேலைகளுக்கிடையில், பயணங்களுக்கிடையில் பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயம் கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் புதிய பதிவுக்கு நான் முதல் வரவு.

      நீக்கு
    2. இந்தத் தடவை ஶ்ரீராமர் படத்தை கீசா மேடம் நன்றாக எடுத்துள்ளார். இன்னும் கருத்து எழுதவில்லை. கண் பிரச்சனையால் அவருமே நாள் கழித்துதான் பதிவு பார்ப்பார் என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      என் தளத்தில் இன்றைய புதிய பதிவுக்கான உங்கள் அன்பான கருத்துகளைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியும் அடைந்தேன். என்னடா இது..! புதுப்பதிவு என் தளத்தில் வெளியானாலும்,, என் பதிவுக்கு வருபவர்கள் உங்களுடன் சேர்த்து ஒரு சிலர்தான். இன்று அந்தப் பதிவையும் இணையம் எங்கும் காட்டாமல் போனதே என வருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்தக்கருத்தையும்(புதுப்பதிவு நான் எழுதியிருப்பதையும ஒரு கருத்தாக) இங்கேயே பகிர்ந்தேன்.

      அதைக்கணடதும், உங்கள் வேலைகளுக்கிடையேயும், முதல் நபராக உடனே வந்து பல கருத்துக்களை தந்து விட்டது என் மனதுக்கு மகிழ்வாகவும், உற்சாகமாகவும், உள்ளது. உங்களது ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் என் எழுத்துக்களுக்கு மிக்க பலமாக இருக்கும் .உங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும். ஸ்ரீ ராம் சகோதரரையும் இன்று காணவில்லை. வெளியில் எங்கேனும் சென்றிருப்பார் என நினைக்கிறேன் அவர் வந்தவுடன் அவர் கருத்தையும் காண ஆவலோடிருக்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. ​படங்கள் அழகாக உள்ளன. கடைசி படம் கோணம் அருமை
    இனிப்பு பிடிக்கும் என்றாலும் நிறைய தின்றால் திகட்டும். அது போலத்தான் கட்டுரையில் படங்களும். சில சாதாரண படங்களைத் தவிர்த்து விடலாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கலாம். அத்தனித்தன்மையை சுட்டி தனியாக விளக்கி கோயிலின் பெருமையை சிறப்பிக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். பொதுவா கோயில் பதிவுகள்ல நான் ஒவ்வொரு பதிவுக்கும் 17-24 படங்கள் வரை இணைப்பேன். முதலில் ஞாயிறு பதிவு என்பதே படங்கள் மாத்திரமே இருந்தது. அதில் நான் யாத்திரை, பயணங்கள், கோயில்கள் என்று எழுத ஆரம்பித்ததிலிருந்து படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். சில கோயில்களில் வகை தொகை இல்லாமல் எல்லாப் படங்களையும் பகிர்வதன் மூலம் பதிவுகள் அதிகமாகிறது. கோயிலின் சிறப்பினை மாத்திரம் எழுதுவது எனக்குக் கடினம். அதற்கு நிறைய முயற்சியும் தகவல்கள் அறிந்திருக்கும் அறிவும் தேவை. என்னிடம் நஹீ

      நீக்கு
  16. இன்றைய பிரபந்த பாசுரப் பகுதியில் நாதமுனிகள் குருகைக் காவலப்ப ர்பகுதிகள் கண்டோம். அரவர் சேவை பற்றியும் அறிந்தோம்.

    அழகிய வீரநாராயணப்பெருமாள் கோவில்.
    மிகப் பரந்து பட்டு காணப்படுகிறது. கோவில் கோபுரப் படங்களும், ஏனைய படங்களும் நன்று.

    பெருமாள் பச்சை வண்ணத்தில் கண்குளிரக் காட்சி தருகிறார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!