நேற்று சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கினார். டிவிக்களில் நேரடி ஒளிபரப்புகள் அமர்க்களப்பட்டன. இது நினைவுகளை கிளறிப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது!
இந்தப் பதிவில் அழகர் இல்லை (என்றால்) வல்லிம்மா மன்னிக்க!!
ஆற்றில் இறங்க அல்லது ஆற்றைக் கடக்க அழகர், அழகர் மலையிலிருந்து இறங்கி வரும் நாட்கள் மதுரையில் கோலாகலமானவை. அவர் வரும் வழியில் ரேஸ் கோர்ஸ் குடியிருப்பில் அப்போது ஜாகை. சுற்றிலும் நிறைய இடம் இருக்கும் அரசாங்கக் குடியிருப்பு. இந்த நாளில் கூடும் கூட்டம் பற்றிய நினைவுகளே இந்தப் பதிவு.
சில சமயங்களில் முதல் நாள் மாலையே மக்கள் வந்து 'இடம்' பார்த்துச் செல்வதுண்டு. ரிசர்வ் பண்ணியும் செல்வதுண்டு! மறுநாள் காலை பால் வாங்க 'பூத்'துக்குச் செல்லும்போதே நடமாட்டத்தை உணர ஆரம்பிக்க முடியும். காலை ஆறுமணி சுமாருக்கெல்லாம் ஐந்து பத்து என்று மக்கள் கூடத் தொடங்கி விடுவார்கள். மரத்தடிகள் முதல் குடியிருப்புகளின் வராண்டா வரை ஒவ்வொரு இடமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவார்கள்.
எட்டு மணி, ஒன்பது மணி ஆகும்போது நம் வீட்டில் நாம் சுதந்தரமாக இருக்க, நகர முடியாத சூழல்கள் உண்டாகும்! தெருக்களும், சாலைகளும் ஜன வெள்ளத்தில் மூச்சுத் திணறும். குடும்பம், குடும்பமாக வருவார்கள் மக்கள். பெரும்பாலானோருக்கு அழகர் குல தெய்வம். எல்லாக் குடும்பங்கள் கையிலும் பெரிய/சிறிய ரகவாரியாக எவர்சில்வர், பித்தளைத் தூக்குச் சட்டிகள் இருக்கும்.
வாகான இடம் பிடித்ததும் பாத்திரங்களைத் திறந்து, இலைகளை எடுத்து பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்குவார்கள். ஒவ்வொரு குடும்பமும் நட்பு, உறவுக் குடும்பங்களுடன் உணவுகளைப் பகிர்ந்து கொள்வதும் நடக்கும்.
ஐஸ் க்ரீம் முதல் வடை, போண்டா, புளியோதரை வரை ஏகப் பட்ட ஐட்டங்கள் சாலைகளில் விற்றுக் கொண்டு வருவார்கள். அவற்றையும் வாங்கி உண்ணுவார்கள். சிறிய குழந்தைகள் முதல் வயதான மனிதர்கள் வரை இங்குமங்கும் நடந்து நட்பு உறவுகளை விசாரித்தபடி, பொழுது போக்குவார்கள். இந்த நாட்களில் பல திருமணங்கள் கூடப் பேசி முடிவதுண்டாம்.
'வயசு'பையன்கள் ராமராஜ உடையணிந்து சாலைகளில் நண்பர்களுடன் உலா வந்து ஓரங்களில் தங்கி, உண்டு இளைப்பாறும் குழுக்களிலும், எதிர்ப்படும் குழுக்களிலும் ஜோடிகளைத் தேடுவார்கள்!
அழகர் கோவில் பேருந்துகள் புதூர் பேருந்துகள் என்று அந்த ரூட்டில் வரும் பேருந்துகள், சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக, ரேஸ் கோர்ஸ் காலனி வரை, பாண்டியன் ஹோட்டல் வரை, தல்லாக்குளம் வரை கோரிப்பாளையம் வரை என்று கட் சர்வீஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.
அழகர் அந்த ஏரியா வர மாலை ஆகலாம். அதுவரை இந்நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். அழகர் வரும்போது 'சட்'டென மாவிளக்கு மாவில் கற்பூரம் ஏற்றி அழகருக்குக் காட்டி விட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு வழியனுப்பி வைப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலையத் தொடங்கும். அப்புறமும் இரவு ஏழு மணி வரை கூட சிலபல குடும்பங்கள் அமர்ந்திருக்கும்.
மறுநாள் அந்த இடத்தை, அந்தத் தெருவை, அந்தச் சாலையைப் பார்க்கும்போது புயலடித்து ஓய்ந்த மாதிரி இருக்கும்! வீடுகளுக்கு முன்னாலும் தெருவிலும் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற, மறுநாள் பல மணி ஆகும்!
இவ்வளவு கூட்டம் வராவிட்டாலும் இதில் முக்கால் அழகர் மறுபடி மலைக்குத் திரும்பும் 'எதிர்சேவை'யிலும் நடக்கும்.
மிகச் சில சமயங்களில் மட்டுமே இந்த ஜன வெள்ளத்தில் நீந்தி அழகர் ஆற்றில் இறங்குவதைக் கண்டிருக்கிறேன். அப்புறம் வண்டியூர் வரை ஒரே கோலாகலமாயிருக்கும்.
சளைக்காமல் இந்நாட்களில் உண்ணும் மக்களைக் கண்டு மலைத்துப் போய் 'சித்திரைத் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்த மதுரைக் கோலாகலம் 'உண்ணும் விழா' வாகவே மனதில் நிற்கிறது!
திருவிழாவுக்கே உரிய ராட்டினங்கள், பலூன்கள், இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டு. அழகருக்கு பிரார்த்தனையாக வேண்டிக் கொண்டவர்கள் ஆஞ்சநேய வேடமிட்டு கையில் ஒரு பைப்புடன் மக்கள் மேல் நீர் பீய்ச்சிய படியே அவ்வப்போது கடந்து போவார்கள்.
நம் வீட்டு வராண்டாவில் இடம் பிடித்தவர்கள் பிரியா விடை பெற்று மாலை வீடு திரும்புவார்கள். சில வருடங்கள் பழக்கம் காரணமாக அதே குடும்பங்களே அடுத்த வருடமும் வந்து இடம் பிடித்ததுமுண்டு.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு கோவிலுக்குள்ளே சென்று வியர்வை மழையில் நனைந்து, இரண்டு பட்டர்கள் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பாவனையில் முன்பின் நடந்துமாலை மாற்றும் வைபவம் கண்டு களித்து, பிரசாதமாகக் கிடைக்கும் தாலிக் கயிறுகளை வாங்கி தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புவது உண்டு.
ஆனால் ஒன்று... இந்நாட்களில் மதுரை முழுவதும் சொந்த வீட்டு விசேஷம் போல திருவிழாக் கோலம் பூண்டிருப்பது இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக உணர முடிகிறது. நாங்கள் எல்லாம் ஆற்று க்கு இந்தப் பக்கம். அழகர் வருவதும், திரும்புவதும் எங்களுக்குப் பெரிய திருவிழா. ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருப்போருக்கு சித்திரைத் திருவிழாவுக்குக் கோவிலில் கொடி ஏற்றும் நாள் முதலே கோவிலில் திருவிழாத் தொடங்கி, நாளும் கோலாகலம்!
ம்...ஹூம்.... மதுரை மதுரைதான்.