நேற்று சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கினார். டிவிக்களில் நேரடி ஒளிபரப்புகள் அமர்க்களப்பட்டன. இது நினைவுகளை கிளறிப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது!
இந்தப் பதிவில் அழகர் இல்லை (என்றால்) வல்லிம்மா மன்னிக்க!!
ஆற்றில் இறங்க அல்லது ஆற்றைக் கடக்க அழகர், அழகர் மலையிலிருந்து இறங்கி வரும் நாட்கள் மதுரையில் கோலாகலமானவை. அவர் வரும் வழியில் ரேஸ் கோர்ஸ் குடியிருப்பில் அப்போது ஜாகை. சுற்றிலும் நிறைய இடம் இருக்கும் அரசாங்கக் குடியிருப்பு. இந்த நாளில் கூடும் கூட்டம் பற்றிய நினைவுகளே இந்தப் பதிவு.
சில சமயங்களில் முதல் நாள் மாலையே மக்கள் வந்து 'இடம்' பார்த்துச் செல்வதுண்டு. ரிசர்வ் பண்ணியும் செல்வதுண்டு! மறுநாள் காலை பால் வாங்க 'பூத்'துக்குச் செல்லும்போதே நடமாட்டத்தை உணர ஆரம்பிக்க முடியும். காலை ஆறுமணி சுமாருக்கெல்லாம் ஐந்து பத்து என்று மக்கள் கூடத் தொடங்கி விடுவார்கள். மரத்தடிகள் முதல் குடியிருப்புகளின் வராண்டா வரை ஒவ்வொரு இடமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவார்கள்.
எட்டு மணி, ஒன்பது மணி ஆகும்போது நம் வீட்டில் நாம் சுதந்தரமாக இருக்க, நகர முடியாத சூழல்கள் உண்டாகும்! தெருக்களும், சாலைகளும் ஜன வெள்ளத்தில் மூச்சுத் திணறும். குடும்பம், குடும்பமாக வருவார்கள் மக்கள். பெரும்பாலானோருக்கு அழகர் குல தெய்வம். எல்லாக் குடும்பங்கள் கையிலும் பெரிய/சிறிய ரகவாரியாக எவர்சில்வர், பித்தளைத் தூக்குச் சட்டிகள் இருக்கும்.
வாகான இடம் பிடித்ததும் பாத்திரங்களைத் திறந்து, இலைகளை எடுத்து பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்குவார்கள். ஒவ்வொரு குடும்பமும் நட்பு, உறவுக் குடும்பங்களுடன் உணவுகளைப் பகிர்ந்து கொள்வதும் நடக்கும்.
ஐஸ் க்ரீம் முதல் வடை, போண்டா, புளியோதரை வரை ஏகப் பட்ட ஐட்டங்கள் சாலைகளில் விற்றுக் கொண்டு வருவார்கள். அவற்றையும் வாங்கி உண்ணுவார்கள். சிறிய குழந்தைகள் முதல் வயதான மனிதர்கள் வரை இங்குமங்கும் நடந்து நட்பு உறவுகளை விசாரித்தபடி, பொழுது போக்குவார்கள். இந்த நாட்களில் பல திருமணங்கள் கூடப் பேசி முடிவதுண்டாம்.
'வயசு'பையன்கள் ராமராஜ உடையணிந்து சாலைகளில் நண்பர்களுடன் உலா வந்து ஓரங்களில் தங்கி, உண்டு இளைப்பாறும் குழுக்களிலும், எதிர்ப்படும் குழுக்களிலும் ஜோடிகளைத் தேடுவார்கள்!
அழகர் கோவில் பேருந்துகள் புதூர் பேருந்துகள் என்று அந்த ரூட்டில் வரும் பேருந்துகள், சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக, ரேஸ் கோர்ஸ் காலனி வரை, பாண்டியன் ஹோட்டல் வரை, தல்லாக்குளம் வரை கோரிப்பாளையம் வரை என்று கட் சர்வீஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.
அழகர் அந்த ஏரியா வர மாலை ஆகலாம். அதுவரை இந்நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். அழகர் வரும்போது 'சட்'டென மாவிளக்கு மாவில் கற்பூரம் ஏற்றி அழகருக்குக் காட்டி விட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு வழியனுப்பி வைப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலையத் தொடங்கும். அப்புறமும் இரவு ஏழு மணி வரை கூட சிலபல குடும்பங்கள் அமர்ந்திருக்கும்.
மறுநாள் அந்த இடத்தை, அந்தத் தெருவை, அந்தச் சாலையைப் பார்க்கும்போது புயலடித்து ஓய்ந்த மாதிரி இருக்கும்! வீடுகளுக்கு முன்னாலும் தெருவிலும் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற, மறுநாள் பல மணி ஆகும்!
இவ்வளவு கூட்டம் வராவிட்டாலும் இதில் முக்கால் அழகர் மறுபடி மலைக்குத் திரும்பும் 'எதிர்சேவை'யிலும் நடக்கும்.
மிகச் சில சமயங்களில் மட்டுமே இந்த ஜன வெள்ளத்தில் நீந்தி அழகர் ஆற்றில் இறங்குவதைக் கண்டிருக்கிறேன். அப்புறம் வண்டியூர் வரை ஒரே கோலாகலமாயிருக்கும்.
சளைக்காமல் இந்நாட்களில் உண்ணும் மக்களைக் கண்டு மலைத்துப் போய் 'சித்திரைத் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்த மதுரைக் கோலாகலம் 'உண்ணும் விழா' வாகவே மனதில் நிற்கிறது!
திருவிழாவுக்கே உரிய ராட்டினங்கள், பலூன்கள், இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டு. அழகருக்கு பிரார்த்தனையாக வேண்டிக் கொண்டவர்கள் ஆஞ்சநேய வேடமிட்டு கையில் ஒரு பைப்புடன் மக்கள் மேல் நீர் பீய்ச்சிய படியே அவ்வப்போது கடந்து போவார்கள்.
நம் வீட்டு வராண்டாவில் இடம் பிடித்தவர்கள் பிரியா விடை பெற்று மாலை வீடு திரும்புவார்கள். சில வருடங்கள் பழக்கம் காரணமாக அதே குடும்பங்களே அடுத்த வருடமும் வந்து இடம் பிடித்ததுமுண்டு.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு கோவிலுக்குள்ளே சென்று வியர்வை மழையில் நனைந்து, இரண்டு பட்டர்கள் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பாவனையில் முன்பின் நடந்துமாலை மாற்றும் வைபவம் கண்டு களித்து, பிரசாதமாகக் கிடைக்கும் தாலிக் கயிறுகளை வாங்கி தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புவது உண்டு.
ஆனால் ஒன்று... இந்நாட்களில் மதுரை முழுவதும் சொந்த வீட்டு விசேஷம் போல திருவிழாக் கோலம் பூண்டிருப்பது இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக உணர முடிகிறது. நாங்கள் எல்லாம் ஆற்று க்கு இந்தப் பக்கம். அழகர் வருவதும், திரும்புவதும் எங்களுக்குப் பெரிய திருவிழா. ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருப்போருக்கு சித்திரைத் திருவிழாவுக்குக் கோவிலில் கொடி ஏற்றும் நாள் முதலே கோவிலில் திருவிழாத் தொடங்கி, நாளும் கோலாகலம்!
ம்...ஹூம்.... மதுரை மதுரைதான்.
கோலாகலத் திருவிழாதான்! நினைவுகளை சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குயாருக்கு எது ரொம்பப் பிடிக்குமோ அந்த விழாவாகி விடுகிறது:)!
இப்போதும் பத்து இலட்சம் பேர் கூடியதாக வல்லிம்மா பதிவிலிருந்து அறிய வந்தேன்.
//யாருக்கு எது ரொம்பப் பிடிக்குமோ அந்த விழாவாகி விடுகிறது:)!//
பதிலளிநீக்குஸ்ரீராம் --- ஹா ஹா உண்ணும விழா என்று பதிவின் தலைப்பு வைக்கும் பொழுதே நினைத்தேன். இப்போ இவங்க சாப்பாட்டு ராமன் டைட்டில் கொடுத்துட்டாங்க!!
அடாடா... அந்த மதுரை நாட்கள்... ஏக்கப் பெருமூச்சு விட வைத்து விட்டீர்களே ஸ்ரீராம்... அப்போது எனக்கு மிக வாலிபம் என்பதால் நீங்கள் சொன்ன எல்லாவற்றுடன் ’சைட்’ அடித்தலும் உப காரியமாக நிகழும்.
பதிலளிநீக்குநானும் சுமார் 2 வருடங்கள் மதுரையில் இருந்திருக்கிறேன்.(1989-91) ஆனால் இந்த விழாவை பார்த்ததில்லை.
பதிலளிநீக்குவிழாவைப்பற்றிய உங்க நினைவுகளை அருமையாக பகிர்ந்திருக்கீங்க.படிக்க சுவாரசியமாக இருக்கு.
ஒரு வருஷம் அங்கே இருந்தும் கூட விழாவை பார்த்ததில்லை என்கிற ஏக்கம் வருது
பதிலளிநீக்குசித்ரா பவுர்ணமி என்றால் கூட்டாஞ்சோறுதான் ஞாபகத்திற்கு வரும்.பழைய நினைவுகளை பரிமாறியதில் கூட்டாஞ்சோறின் சுவை:)
பதிலளிநீக்குஊர்த்திருவிழா என்றாலே கோலாகலம்தான்..
பதிலளிநீக்கும்ம்.. தற்போதைய தூர மற்றும் நக(ரக)ர வாழ்க்கையிலே நம்ம புள்ளங்களுக்கு இந்த சந்தோஷம்லாம் கொடுக்க முடியலேன்னு.. மனசு ஏங்குது..
கொஞ்சம் பொறாமையாக்கூட இருக்கு !
பதிலளிநீக்குநல்லா ரசிச்சு எழுதிருக்கீங்க. இவ்வளவு ஏக்கமா இருக்குன்னா, இதோ பக்கத்துலதானே மதுரை. கையில் ஒரு கேரியரோடு, விழா நாட்களில் போய்வரலாம்தானே? உறவினர்/நண்பர் வீடுகள் இருக்குமே? :-)))))
பதிலளிநீக்கு//அழகர் மறுபடி மலைக்குத் திரும்பும் 'எதிர்சேவை'//
அதாவது சாமியை மறுபடி கோயிலுக்குக் கொண்டுபோவதைச் சொல்கிறீர்களா?
அமர்க்களமாத்தான் இருக்கு..
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு ! படங்களும் சூப்பர் ! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குமதுரை மதுரைதான்.
பதிலளிநீக்குமுதல்லே அழகர் மலைக்குத் திரும்பற நாள் எதிர்சேவை என்பதை வன்மையாக மறுக்கிறேன். எதிர்சேவையன்னிக்குத் தான் கோழிச்சொல்லிப் பெருமாள், (ஹிஹிஹி) மீனாக்ஷி அழகர் ஆயிரம்பொன் சப்பரத்தைச் சீராகக் கொண்டு வரதுக்குள்ளே கல்யாணம் பண்ணிண்டதாச் சொல்லும் நிகழ்ச்சி தான் எதிர்சேவை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅதுக்கு அப்புறம் தான் அழகர் கோவிச்சுண்டு ஆற்றில் இறங்கியவர் அப்படியே திரும்பறதா ஐதீகம். எதிர்சேவை அன்னிக்கு சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவரான பரமசாமி என்பவரோடு வீட்டு மண்டகப்படி தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கருகே நடக்கும். வருடா வருடம் அங்கே வந்து எங்கம்மா மேற்பார்வையில் தயார் செய்யப்படும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் வகையறாக்களை ஓலைப்பெட்டியில் கட்டி எடுத்துக்கொண்டு நடந்தே மேலாவணி மூலவீதிக்கு வந்திருக்கோம். அந்தப் புளியோதரை தெருப்பூராக் கொடுத்தாலும் எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கும். :)))))
இது சாம்பிள் தான். மதுரைங்கற பேரைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன். மிச்சம் அப்புறமா.
பதிலளிநீக்குசித்ராபெளர்ணமியன்னிக்கு அழகர் ஆத்திலே இறங்கற வைபவம் நடப்பதாலே முதல்நாள் நடக்கும் எதிர்சேவையன்னிக்குக் காலையில் அநேகமாய் மீனாக்ஷி தேர்த்திருவிழா நடந்திருக்கும், அபூர்வமாய்ச் சில சமயம் ஓரிருநாட்கள் தள்ளி வருவது உண்டு. இம்முறை இரண்டு நாட்கள் தள்ளி வந்திருக்கின்றது.
பதிலளிநீக்குகளை கட்டிவிட்டது. அதான் என்னடா நாமதான் எதிர்சேவையைத் தப்பாப் புரிந்து கொண்டுவிட்டோமான்னு கலக்கமாப் போச்சு. ஸ்ரீராம் உண்ணும் விழா பிரமாதம். எனக்கு விழாவின் இந்தப் பக்கம் மிகவும் பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்கு