ஒரு வருட எதிர்பார்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு வருட எதிர்பார்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.1.17

சின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 - பதிவுலக நண்பர்களின் கருத்துகள்


"ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"


     இந்த எங்களின் கேள்விக்கு வலையுலக பதிவர் நண்பர்கள் பதிலளித்து வருகிறார்கள்.   
     தொடரும் இன்றைய பதிவில் நண்பர் மனசு குமார்,  வெங்கட் நாகராஜ், ரஞ்சனி நாராயணன் மேடம் ஆகியோரின் கருத்துகள் இடம் பெறுகின்றன.


===========================================================

 

2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 

கலை : நடிப்பு (சினிமா) மட்டுமின்றி எழுத்து, ஒவியம் என எல்லாமே கலைதான் ஆனாலும் கலை என்னும் போது நாம் நடிப்பு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் கலை என்பது பணம் பார்க்கும் கருவியாக மட்டுமே இருக்கிறது.

அதில் வளர்ச்சி என்பதைவிட அதை வைத்து வளர நினைப்பவர்களே அதிகம். கலைக்கான மதிப்பும் மரியாதையும் வளரும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : கலையின் மூலம் நம் கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றைப் பாதுகாக்கும் விதமான நாடகங்கள் நிறையத் தயாரிக்க வேண்டும். பண்டைய தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல அதன் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.

இலக்கியம்: இன்றைய இலக்கிய உலகம் ஆள் சார்ந்துதான் இருக்கிறது. அரசியலைவிட இலக்கிய உலக அரசியல் ரொம்ப மோசமா இருக்கு... நல்ல எழுத்துக்கு வரவேற்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆள் பார்த்து புகழும் நிலையே இருக்கு, அதெல்லாம் 2017-ல் மாறி துதிபாடுவதைவிட நல்ல இலக்கியத்துக்கு நல்ல எழுத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முன்னணி எழுத்தாளர்கள் முன் வருவார்கள்... புதிய இலக்கிய படைப்பாளிகள் வேர் விடுவார்கள் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : வரலாறுகளை புனைவு என்ற பெயரில் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கிறார்கள். நம் பண்டைய வரலாற்றை, வீர மறவர்களின் வாழ்க்கைக் கதையை முடிந்தளவுக்கு உண்மை சேர்த்து எழுத வேண்டும். எத்தனையோ இளம் படைப்பாளிகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.

பொருளாதாரம் : நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சில பல நல்ல திட்டங்கள் அதற்கான வேர்தான்... அது மெல்ல மெல்ல கிளை விட்டு இந்தாண்டில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : நாட்டோட பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உயர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம் சாமானியர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் நிலை ஒழிய வேண்டும். எல்லாரையும் இந்தியராய் பார்க்க வேண்டும். மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தினை முன்னெடுக்கும் போது விருப்பு வெறுப்பு துறந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

விஞ்ஞானம் : இன்றைய நிலையில் விஞ்ஞான வளர்ச்சி நல்லாத்தான் இருக்கு. இன்னும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : உறவுகளைக் கொன்று, குழந்தைகள் உலகத்தை வேரோடு அளித்து எப்படிக் கெட்டுப் போகலாமோ அதற்கெல்லாம் வழி செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஏன்னா விஞ்ஞான வளர்ச்சி என்பது இப்போது வளர்ச்சியின் முதுகெலும்பாய்... தேவையற்றவற்றின் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும்.

அரசியல் : இப்போ கோடிகளில் பணம் சம்பாரிக்கும் இடம் இது மட்டும்தான். இதில் அப்படி வரும் இப்படி வரும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை... ஊழலில் ஊறி வருடங்கள் ஆயிருச்சு...

இனி மாற்றம் வரும் என்றெல்லாம் இல்லை என்றாலும் தற்போதைய சூழலில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

என் விருப்பம் : அரசியல்ல நம்ம விருப்பம் எல்லாம் ஒண்ணுமில்லை... படித்தவர்களும் பண்பாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே குறிக்கோளின்றி மக்கள் நலன் காக்கும் மனிதர்கள் வரவேண்டும்.

-‘பரிவை’ சே.குமார்.


============================================================================
 

2017 எப்படி இருக்க வேண்டும்…..

2016 வருடம் முடிவுக்கு வந்து விட்டது. 2017-ஆம் வருடம் பிறந்து விட்டது.  இந்த வருடம் எப்படி எல்லாம் இருக்கப் போகிறது, எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அடுத்த வருடத்தின் ஆரம்பம் வரை என்ன நடக்கப் போகிறது என்ற யூகமும், ஆசையும் இங்கே சொல்ல வேண்டும்.

என்னையும் இந்த ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட “எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கு முதலில் நன்றி.

2017 – எப்படி இருக்கப் போகிறது! ஜோசியம் சொல்ல எனக்கு தகுதி இல்லை. எனக்கு ஜோசியம் பிடிக்கவும் பிடிக்காது! எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டுமே சொல்லட்டா….

அரசியல்: 2016 பல குழப்பங்களையும், அரசியல் தகிடுதத்தங்களையும், சினிமாவினை விட அதிகமான நாடகங்களும் நடந்தேறிய வருடம். ஒரு பெரிய கட்சி தனது தலைவியை இழந்த பிறகு நடந்த அரசியல் நாடகங்கள் கேவலம். இந்த வருடத்திலாவது நம் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. திருந்த முயற்சியாவது
செய்வார்கள் என்ற ஆசை உண்டு. நாடு முழுவதுமே நல்ல அரசியல்வாதிகள் இல்லை! ஹிந்தியில் சொல்வார்கள் – Kissa kursi kaa!
என்று நாற்காலி அரசியல் எங்கும்…. தமிழகம் பொறுத்தவரை எனது ஆசை,

நமது மக்கள் சினிமா மோகத்தினை இனிமேலாவது விட்டு, மெத்தப் படித்தவர்களை, பதவியில் அமர்த்தட்டும்…..

இந்தியா வல்லரசு ஆகும் என்ற கனவுகளோடு இருக்கும் கோடான கோடி
மக்களில் ஒரு கடைக்கோடியில் நானும் இருக்கிறேன். வருடத்தின் கடைசி பகுதியில் செல்லாக் காசு விவகாரத்தினால் நாடு முழுவதுமே பிரச்சனைகள், குழப்பங்கள். அது நல்லதா, கெட்டதா என்பதை விட அந்த
நடவடிக்கை மூலம் பல விஷயங்கள் வெளியே வந்தன. பதுக்கல்
கும்பல்கள் சில பிடிபட்டாலும், Common Man என அழைக்கப்படும்
பொதுஜனமும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். இந்த மாதிரி கஷ்டங்கள்
அனுபவித்தாலும் அவை நல்ல மாற்றத்தை உருவாக்கினால், அதன்
மூலம் நாட்டுக்கு நலம் உண்டானால் நல்லது….

அடுத்த வருட ஆரம்பத்திற்குள் நாட்டின் நிதிநிலை சரியாகி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தினை இந்தியா பெறட்டும்…..

அனைவருக்கும் கல்வி, நல்ல மருத்துவ வசதி, சீரான சாலைகள், கடைசி
கிராமங்கள் வரை போக்குவரத்து வசதிகள், மின்சார வசதி என அனைத்தும் கிடைக்க இந்த வருடமாவது வேலையைத் துவங்க
வேண்டும். இவை அனைத்தும் ஒரு வருடத்தில் செய்து முடிக்கக் கூடிய
வேலை அல்ல – ஆனால் நல்லதொரு தொடக்கமாவது இருந்தால்
பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம். தன் வீடு, தன் குடும்பம்,
தனது வசதி என்ற சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அகன்று,
நல்லெண்ணெம் கொண்டவர்கள் அரசாளும் அரியணையில் அமர்ந்து சீரிய
பணிகளைச் செய்யட்டும்……

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட
வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்.

நல்லதே நடக்கட்டும்…..

அன்புடன்

வெங்கட்

புது தில்லி.



==============================================================================

ரஞ்சனி நாராயணன்  :


மாற்றங்கள் 2018

என்னிடம் கருத்துக் கேட்டதற்கு முதலில் நன்றி.

நீங்கள் கேட்காத ஒரு துறையில் ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கும் ஒரு மாற்றத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் எங்கள் குடியிருப்பிற்கு வந்து இரண்டு வீடுகள் வேண்டும் என்று கேட்டார் – வாடகைக்குத்தான். ஒரு வீட்டில் இவரும் இவர் கணவர், குழந்தை இருப்பார்கள்;

இரண்டாவது வீட்டில் இவரது மாமியார், மாமனார், திருமணம் ஆகாத மைத்துனர் இருப்பார்கள்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு கசந்து முகர்ந்து கொள்வதைவிட இது தேவலை என்று எனக்குத் தோன்றியது. ரொம்பவும் அருகில் இருக்காமல், ரொம்பவும் தூரத்தில் இல்லாமல் பக்கத்திலேயே ஆனால் போதிய இடைவெளியுடன். அதாவது இடைவெளியுடன் கூடிய கூட்டுக் குடும்பம்.

வியப்பாக இருந்தாலும், இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.

‘தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு இல்லையா? ஆரம்பத்திலிருந்தே இந்த ஏற்பாடு தான். பெரிய பிள்ளைக்குத் திருமணம் ஆனவுடனேயே தனி வீடு – எங்களுக்கு அருகிலேயே – பார்த்து குடித்தனம் வைத்துவிட்டேன்’ என்று அந்த மாமி சாதாரணக் குரலில் சொன்னார்.

‘Gated Community’ என்று சொல்வார்கள். மொத்தக் குடும்பமும் ஒரே வளாகத்திற்குள் – தனித்தனியாக. இளம் வயதினருக்கு வேண்டிய சுதந்திரம். பெரியவர்களுக்கு பிள்ளைகள் அருகில் இருக்கும் தைரியம். வரவேற்கத்தக்க மாற்றம் என்று தோன்றுகிறது.

இனி நீங்கள் கேட்டிருக்கும் துறைகளில் நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

கலை: இப்போதைய சினிமாக்களில் இருக்கும் அரைக் கிழங்கள், முக்கால் கிழங்கள், முழுக்கிழங்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.

தொலைக்காட்சி சானல்கள் பெரியவர்களின் மனதை விஷமாக்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறுவர்களையும் குறி வைக்கின்றன. மனது பதறுகிறது. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை சூர்யாவைப் பார்த்து ‘நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். உங்களுடனேயே இருக்க வேண்டும்’ என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

கூடியிருக்கும் பெரியவர்கள், அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் எல்லோரும் வெட்கம் என்பதே இல்லாமல் ரசித்துக் கைதட்டுகிறார்கள். நிச்சயம் இது அந்தக் குழந்தையின் தவறு அல்ல.

பெரியவர்களின் விஷமத்தனமான வேலை இது. இந்த மாதிரி சிறுவர்களின் மனதில் விஷத்தை விதைப்பவர்களை பொதுவிடத்தில் தூக்கில் தொங்க விடவேண்டும். அல்லது பொதுமக்களின் கைகளால் அடித்துக் கொல்லப்பட விட்டுவிட வேண்டும்.

விஜய் மற்றும் ஜீ (ZEE) தொலைக்காட்சி சானல்கள் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இரு சானல்களின் உரிமையையும் ரத்து செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சில:

 குழந்தைகள் பங்கு கொள்ளும் போட்டிகளான சூப்பர் சிங்கர் போட்டிகளின் பெயர்களை இனி ‘சூப்பர் ஒப்பாரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும். தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்காமல் பெற்றோர்களும் மேடை ஏறி ஒப்பாரி வைப்பதுதான் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற மாயப்போர்வை இப்போதைக்கு அகலும் என்று தோன்றவில்லை. ரியாலிட்டி ஷோ என்பதை அழுவாச்சி ஷோ என்றும் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.

 லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், குஷ்புவும் இனி நம் வீடுகளுக்கு வந்து நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். இதுவரை அமெச்சூர் நடிகர்களை வைத்து நடத்திய இந்த ஷோவில் நடிக்க எதிர்காலத்தில் பிரபல நடிகர்கள் ‘க்யூ’வில் நிற்பார்கள்.

அரசியல்:

தமிழ்நாட்டின் தலைவிதி என்ன என்பதுதான் பெரிய கேள்வி இப்போது.

முதல் மாற்றம்: ‘அம்மா’வின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது என்றால் ‘சின்னம்மா’வின் ஆட்சியில் பாலும், தேனும், பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

நாட்டின் பிரதமர் உரையைக் கூட ஒளிபரப்பாமல் ‘சின்னம்மா’ வின் கண்ணீர் மல்கும் உரையை ஒளிபரப்பும் தமிழ் சானல்கள்! என்றைக்கு தமிழ்நாடு தேசீய நீரோட்டத்தில் சேரப்போகிறது?

சமீபத்திய மிகபெரிய மாற்றமான ‘ரூபாய் நோட்டு வாபஸ்’ பற்றிப் பேசாமல் இந்த கருத்துரையை முடிக்க முடியாது.

பலர் (படித்தவர்கள் உட்பட) பல கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புழக்கத்தில் இருக்கும் பண நோட்டுக்களை வாபஸ் வாங்குவதில் பிரதமர் மோதிக்கு எந்த சுயலாபமும் இல்லை. இதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டால் போதும்.

பிரதமர் மோடியின் துணிச்சல் பாராட்டத் தக்கது. மக்கள் கஷ்டப் பட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில்அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் என்ன முன்னேற்றம் கண்டோம்?

50 சதவீத கிராமங்களில் மின் வசதி இல்லை..

சாமான்யர்களை வங்கி கணக்கை துவக்க வைக்க முயலவில்லை.

பிரதமரே சொன்னது போல இருபத்து நாலு சதவிகிதம் மக்கள் மட்டுமே வருமானத்தைக் காட்டுகிறார்கள்.

அதைப்பற்றி இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே கவலைப்படவில்லை.

ஒரு ஒழுங்கு முறைக்குள் செயல் பட வேண்டுமென்றால் எல்லோர்க்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

பலர் தங்கள் பணத்தை ஏழை மக்களிடம் கொடுத்து கமிஷன் அடிப்படையில் மாற்ற முயலும்போதே தேங்கி கிடந்த பணம் வெளியில் வரத் தொடங்கி விட்டது என்பது புரியவில்லையா? இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது பல இன்னல்கள், எதிர்பார்க்காத சிக்கல்கள் வரத்தான் செய்யும்..

மிக தைரியமான முடிவை நாட்டிற்காக எடுத்த மோடியும், அவருக்கு உதவி செய்தவர்களும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

இந்த 50 நாட்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?  எத்தனை கறுப்புப்பணம் வெளியே வந்தது? என்று கேட்பவர்கள் அறிவிலிகள். இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்தவர்களைக் கேள்வி கேட்டார்களா இந்த அறிவாளிகள்? நல்ல பலன் கிடைப்பதற்கு சில பல கஷ்டங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

நல்லது செய்ய எண்ணும் ஒரு பிரதமர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கை கொடுப்போம்.



==============================
===================================

12.1.17

ஜனவரி எதிர்பார்ப்புகள் 2 : சக பதிவர்களின் கருத்துகள்





     ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 

     இந்தக் கேள்வியை நம்முடைய பதிவுலகத் தோழர்களிடம் கேட்டபோது அவர்களிடமிருந்து வந்த கருத்துகள்...  இந்தப் பகுதிக்கு மேலும் சில நண்பர்களிடமிருந்து வந்திருக்கும் கருத்துகள் தொடர்ந்து அவ்வப்போது இடம்பெறும்.  முதலில் வந்த பதில் முதலில் என்கிற வகையில் இந்த வாரம் மேலும் இரண்டு பதிவர்களின் கருத்துகள்.

====================================================  




திரு ஶ்ரீராம்,


என் பதில் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். 


உண்மை தான்,  எதிர்பாரா மாற்றங்கள் நிறைய ஏற்பட்டிருக்கின்றன.
எனக்கு யாருடைய ஆட்சியும் திருப்தி தரவில்லை. நேர்மையாய் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கட்சித் தலைமை இல்லாத வரை, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்று தான். உச்சி வெயிலில் தார் ரோட்டில் வெறுங்காலோடு நடக்கும் போது, சூடு தாங்காமல் கால்களுக்கு மாற்றி மாற்றி சற்று ஓய்வு கொடுப்பது போல கட்சிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவ்வளவே! 

இதையெல்லாம் தாண்டி ஜெயலலிதாவை ஒரு இரும்பு மனுஷியாய் எனக்குப் பிடிக்கும். அவரது பல நடவடிக்கைகளை நான் ரசித்திருக்கிறேன்.


மத்தியில் இருக்கும் ஆட்சி மீது கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. Demonitisation னில் சற்றே அசௌகரியம் ஏற்பட்டாலும், பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அது பலன் கொடுத்திருக்கிறதா இல்லையா என்ற விவாதத்தைத் தாண்டி மோடி ஏதோ செய்கிறார்  என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.


இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று ஒழுங்காய் எழுதத் தெரிய வேண்டும் அல்லது  சத்தமாய் சண்டையிடவோ, குறை சொல்லவோ தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் வளர்ச்சி சத்தத்தின் volume ஐப் பொறுத்தது.


அறிவியல்  வளர்ச்சிகளைப் பார்த்தால் பயம் தோன்றுகிறது. உறவுகளுக்கான இடைவெளி அதிகமாவதை உணர முடிகிறது. திருமணத்திற்கு சென்றால் கூட பிள்ளைகள் ஆளுக்கொரு கைபேசியுடன் தனியாய் அமர்ந்து விடுகிறார்கள்.  வர்தாப் புயல் அடித்த இரவு தான் நெடுநாட்கள் கழித்து, தொ.கா, தொ.பே வின் ஊடுறுவலில்லாமல், தீப வெளிச்சத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசினோம். மின்விசிறியின்றி  தூங்கினோம். சில நேரம் அறிவியல் வளர்ச்சி, என்னை வயதானவளாய் உணரச் செய்கிறது.


கலை இதை நேரமிருக்கும் போது ரசிக்கிறேன். மண்டையை இடித்தால் வெறுக்கிறேன். அவசர ஓட்டத்தில் குடுமியைப் பிடித்து  கவனத்தை இழுக்கும் படைப்புகளை வியக்கிறேன். அவற்றிடம் எனக்குள்ள உறவு அவ்வளவு தான்.


இலக்கியம் , கலை, அறிவியல் , அரசியல், இவற்றில் ஏற்படும் மாற்றங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொள்ள எதிர்கொள்ள பழகிக்கொண்டேன். அதனால் அதன் வளர்ச்சியைக் கணிப்பதோ, அது இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவதோ இல்லை!


இந்த பதில்களை தட்டச்சும் போது self centered person னாய் உணர்கிறேன்.  முதலில் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் 😊


என்னால் இயன்றவரை  பதிலளித்திருக்கிறேன்.  மிக்க நன்றி!



- ஹேமா


=============================================================




ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?

------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாற்றங்கள் இன்றியமையாதவை கண்ணுக்கு தெரியாத மரபணுக்களில் ஏற்படும் சில மாற்றங்களையே சிலநேரம் தாங்க முடியாமற்போகிறது ..ஆனால் சமீபத்து மாற்றங்கள் குறிப்பாக அரசியல் விஷயத்தில் நல்லதும் கெட்டதும் போட்டிபோட்டு நடக்கின்றன ..திடீர் மாற்றங்களும் பிறழ்வுகளும் சாத்தியம் என்ற நம்பிக்கையில் எனது மனதுக்கு பட்டவற்றை இங்கு கூறியுள்ளேன் .

ஆரோக்கியமான அரசியல் சூழல் 2018 இல் உருவாகும் ..
எம் .ஜி .ஆர் அவர்களின் மறைவில் நான் காணத்துடித்தது கலைஞர் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுப்பாரா அங்கு அமர்வாரா என்றெல்லாம் தொலைக்காட்சியை உற்று பார்த்து கொண்டிருந்தேன் அவர் சென்றதாக கேள்விப்பட்டேன் ஆனால் இப்போ அம்மாவின் உடலுக்கு ஸ்டாலின்  அவர்கள் இறுதி மரியாதை செலுத்தியது மற்றும் கலைஞர் அவர்களை எல்லா கட்சியினரும் நலம் விசாரிப்பது என கண்டதில் ஒரு ஆரோக்கியமான சூழல் கண் முன்னே தெரிகிறது ..இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டுள்ளார்கள்  ..
ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத ஒரு அரசியல் சூழல் உருவாகும் 2018 இல் ..இங்கிலாந்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி தலைவர்கள் அருகருகே அமர்ந்து புன்னகைக்கும் படங்களை காணும்போதெல்லாம் எப்போ நம் நாட்டில் இப்படி ஒரு காட்சி காண்பேன் என்று நினைப்பேன் 
நிச்சயம் 2018 அல்லது வரும் காலம் விரைவில் அதற்கான வழி வகுக்கும் .என்று நம்புகிறேன் .

அனைத்து கட்சியினரும் இனிஅடுத்த தேர்தலுக்காவது  வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தவர்களை குறைந்தது இளங்கலை அரசியல்  /பொருளாதாரம் ..அரியர்ஸ் வைக்காம படித்தவர்களை  தேர்ந்தெடுக்க வேண்டும் ..

அரசியல் தலைவர்கள் தலைவிகள் அணியும் ஸ்லிப்பரில் மின்சார ஷாக் அடிக்கும் FACILITY வைக்கணும் அப்போதான் காலில் விழுந்து கும்பிட்டா டபார்னு ஷாக்கடிச்சி இனி மீண்டும் விழமாட்டாங்க :)  )

பொருளாதாரம் ..
=================
 நாட்டில் கருப்பு பணமெல்லாம் பிடிபட்டு விடும் என்பது நம்பிக்கை ..அந்த பணத்தை வீடில்லாதோருக்கு இருப்பிடம் இல்லாதோருக்கு அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்பது எனது விருப்பம் .கொஞ்சம் அளவுக்கதிகமான ஆசை மற்றும் நம்பிக்கை 2018 இலாவது பொருள் ஆதாரம் அனைவருக்கும் சமமாக கிட்டிஏழைகள்  சாலையோரம் குளிரில் படுத்துறங்கும் காட்சிகளை கனவிலும் காணக்கூடாது என்பது எனது நம்பிக்கைமற்றும் விருப்பம் 


..இதெல்லாம் ஒரே வருஷத்தில் சாத்தியமா என்றெல்லாம் கேட்கக்கூடாது நான் முதலில் சொன்னபடி Mutations எப்பவும் ஏற்பட சாத்தியமுண்டு ..

விஞ்ஞானம் 
=============

சில விஞ்ஞான வளர்ச்சிகள் பயமுறுத்துகிறது ..CRYONICS பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் .இங்கு 14 வயது பெண் கோர்ட் கேஸ் போட்டு இறக்குமுன் வெற்றி பெற்று இப்போ அமெரிக்காவில் அவளுடல் உறைய வைக்கபட்டிருக்கு .அவள் இறந்தது தீர்க்க முடியா புற்றுநோயால் ..அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தால் உறையவைக்கப்பட்டுள்ள உடல் மீண்டும் THAW செய்யப்பட்டு மருந்துகளால் உயிர் பெற கூடும் என்பது அப்பெண்ணின் மற்றும் சிலரின் நம்பிக்கை ..எனக்கு அவ்ளோ ஆசை எல்லாமில்லை நோயற்ற வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க அனைவருக்கும் ஹெல்த் கார்ட் மற்றும் மருத்துவ வசதி இலவசமாக கிடைக்கும் என்பது அளவுக்கதிகமான பேராசை நம்பிக்கை மற்றும் விருப்பம் ..


..கலை ..இலக்கியம் 
=====================
பல வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நான் இழந்தது வாசிப்பு ..அதனால் இலக்கியம் கொஞ்சம் என்னை  விட்டு விலகியே நிற்கிறது ..எனக்கு பாரதியார் கவிதைகளும் ஜெயகாந்தனின் புத்தகங்களும் மாபெரும் இலக்கியங்கள்..இலக்கியம் என்பது அடிமட்ட வாழ்வியலை தொட்டு செல்ல வேண்டும் அநீதிக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் .எல்லா காலத்துக்கும் பொருத்தவும் வேண்டும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் எழுத்துக்களை பாராட்டி அதற்கென ஜால்ரா  அடிக்கும் இலக்கிய விசிலடிச்சான்  வியாதிகள் ஒழிந்து நல்ல காலத்தால் அழியா இலக்கியங்களும் திரைப்படங்களும் வெளிவர வேண்டும் என்பது நம்பிக்கையும் விருப்பமும் ..
..

பொதுவாக 2018 இல் எல்லாருக்கும் எல்லாம் சமம் எனும் நிலை வர வேண்டும் ..எதற்கும் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் அதற்கு அன்றாடவாழ்க்கை தரம் உயர வேண்டும்    தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் மருத்துவ வசதி இலவசமாக்கப்பட வேண்டும் ..


==================================================================

5.1.17

ஜனவரி எதிர்பார்ப்புகள் - சக பதிவர்களின் கருத்துகள்.


     இப்போது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  அதுதான் வழக்கமும் கூட.  எதிர்பாரா குறுகிய நேரத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

     ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 


     இந்தக் கேள்வியை நம்முடைய பதிவுலகத் தோழர்களிடம் கேட்டபோது அவர்களிடமிருந்து வந்த கருத்துகள்...  இந்தப் பகுதிக்கு மேலும் சில நண்பர்களிடமிருந்து வந்திருக்கும் கருத்துகள் தொடர்ந்து அவ்வப்போது இடம்பெறும்.  முதலில் வந்த பதில் முதலில் என்கிற வகையில் இந்த வாரம் இரண்டு மூத்த பதிவர்களின்கருத்துகள். 



     எங்கள் கேள்விகளை மதித்து அன்புடன் பதில் அளித்தமைக்கு நன்றி வல்லிம்மா...  நன்றி வைகோ ஸார்.



ரேவதி நரசிம்மன் :







   என்னென்ன மாற்றங்களை விரும்புகிறேன் என்று மட்டும் சொல்கிறேன். எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை.
 

   பொருளாதாரத்தில் இப்பொழுது எல்லோரையும் வதைத்துக் கொமண்டிருக்கும் 500, ஆயிரம்  தொந்தரவுகள் ஒழிய வேண்டும் . ஒரே நாட்டில் ஏழைகளும் மத்திமர்களும் மட்டும் துயரம் அடைய அரசியல் வாதிகளும்,பண முதலைகளும் செழிக்கும் நிலை மாறவேண்டும்.
 

   அரசியலில்  அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் கையில் அதிகாரம் போகக்கூடாது.
 
 
   தட்டிக் கேட்டு சண்டப் பிரசண்டர்களை விலக்க வேண்டும். பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து மன சாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். மிகப் பெரிய ஆசை. விருப்பப் படுவதில் தப்பில்லையே.
 

   விஞ்ஞான  வளர்ச்சிக்கு ஏதுவாக சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்முறைப் பயிற்சிகள் கொடுத்து, அந்த வகுப்பை மகிழ்ச்சிக்குரிய படிப்பாக மாற்றவேண்டும்.
 
 
  எத்தனையோ இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல சமயம் ஆரம்ப நாட்களிலேயே முடக்கப் பட்டுவிடுகின்றன. உரியவர்கள் அவர்களை ஊக்குவித்து முன்னேற வைக்க வேண்டும்.
 
 
   கலை ,இலக்கியம்  பற்றி எனக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு  தெளிவு போதாது. இரண்டிலும் வன்மை இல்லாமல் இனிமை ஓங்கவேண்டும் என்பதே ஆசை.
 
 

==================================================================
 


வை. கோபாலகிருஷ்ணன்   ::





//ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?//

பொதுவான முன்னுரை:

மாற்றங்கள் மட்டுமே எப்போதுமே மாறாதவை. அது உலக நியதியாகும். இதில் யாரும் எந்த மாற்றங்களையும் கொண்டுவந்து எதையும் நிரந்தரமாக ஆக்கிக்கொள்ளவே முடியாது. 

பஞ்ச பூதங்களான காற்று, நீர், நெருப்பு, ஆகாசம், பூமி ஆகிய இவை ஐந்து மட்டுமே என்றும் மாறாதவை. இதெல்லாம் இயற்கையின் (ஆண்டவனின்) படைப்புகள். 

இவைகளில் எப்போதுமே மாற்றங்கள் நிகழாது. அவ்வப்போது இவை எச்சரிக்கும் சீற்றங்களை மட்டுமே நாம் உணர முடியும். 

[உதாரணம்: (1) தென்றல் காற்று, புயல் காற்று; (2) பலத்த மழை, வெள்ளம், சுனாமி, கடலின் கொந்தளிப்பு, கடல் அலைகளின் சீற்றம்; (3) தீ விபத்துகள், காடு தீப்பற்றி எரிவது, எரிமலை வெடித்து குழம்பாக ஓடுவது; (4) இடி, மின்னல்; (5) பூகம்பம், நில நடுக்கம் ..... ஆகியவை]. 

இவற்றுக்கு மட்டும் எப்போதுமே முற்றிலுமான அழிவு என்பது கிடையாது. 

மற்றபடி மனிதனால் கண்டு பிடிக்கப்படும் அல்லது ஆக்கப்படும் அனைத்துக்குமே மாற்றங்களும், ஒருநாள் அழிவும் நிச்சயம் உண்டு. மாடல்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய புதுக் கண்டுபிடிப்பு நாளைக்கு பழசாகவும் அவுட்-ஆஃப்-பேஷனாகவும் ஆகிவிடும். அவற்றின் ஆயுளும் கம்மிதான். தூக்கிக் குப்பையில் போட வேண்டியதுதான்.

கலை:

கலைகள் எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். புதுப்புது கலைஞர்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். பழைமையான கலைகள் சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும். புத்தம் புதிய கலைகள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ரஸனைக்கு ஏற்ப புதுப்பரிமாணத்தில் கொடுக்கப்பட்டு, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

இலக்கியம்:

இனி, இலக்கியம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கக்கூடும். இதிலெல்லாம் ஆர்வம் காட்டிப் படித்து வந்தவர்களும், எழுதி வந்தவர்களும், பகிர்ந்து கொண்டவர்களும் இப்போது மிகக் குறைவாகவே உள்ளனர். 

இவையெல்லாம் பழைய பஞ்சாங்கம் போன்றவைகளாக தோன்ற ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகி விட்டன. இன்று யாருக்கும், எதற்கும், இதிலெல்லாம் (பழைய பஞ்சாங்கங்களைப் பார்ப்பதில்) நேரமோ ஆர்வமோ ரஸனையோ இருப்பது இல்லை.  

சமீபத்திய நவீன இலக்கியமாகத் திகழ்ந்து வந்த வலைப்பதிவுகளின் நிலைமையும் இதிலிருந்து தப்பவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வலையுலக ஆக்கங்களின் தரமும், அதற்கான வாசகர்களின் பின்னூட்ட வரவேற்பும் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.  

இந்த மகத்தான மாற்றத்திற்கு நல்லதொரு புத்துயிர் கொடுக்க வேண்டி ‘எங்கள் ப்ளாக்’ செய்துவரும் ’கேட்டு வாங்கிப் போடும் கதைகள்’ + ‘நெல்லைத்தமிழன் அவர்களின் சமையல் குறிப்புகள்’ போன்றவற்றை நாம் இங்கு சற்றே நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்ளலாம்.

மிகச் சுருக்கமாகவும், சுவையாகவும், படத்துடனும், காணொளிகளுடனும் பகிரப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றைப் பார்ப்பதும், படிப்பதும், லைக் போடுவதும், ஷேர் செய்துகொள்வதும், உடனே அவற்றை டிலீட் போட்டு விடுவதிலும்தான் இன்று பலருக்கும் நேரம் போய்க்கொண்டிருக்கிறது.  இலக்கியமாவது ...... வெங்காயமாவது ?

பொருளாதாரம்:

வரும் ஓராண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர முடியும். 

[இப்போதே உணர ஆரம்பித்துள்ளோம் என ஆங்காங்கே பலரும் முணுமுணுப்பது என் காதிலும் விழத்தான் செய்கிறது]. 

இந்த மாபெரும் பொருளாதார மாற்றம் நம்மை எங்கு கொண்டுபோய் விடக்கூடும் என்பதை இப்போது நம்மால் யூகித்துச் சொல்ல இயலாமல்தான் உள்ளது.  

நல்லதே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும் என்பதே என்னைப்போன்ற சாதாரண (ஏழை மற்றும் நடுத்தர வர்க்க) மக்களின் கருத்தும், எண்ணமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

விஞ்ஞானம்:

அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்தே ஆக வேண்டியவைகள் என்பதை யாருமே மறுக்க முடியாது. இவற்றின் வளர்ச்சி மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் ஒருபோதும்  அச்சுறுத்தலாக இல்லாமல், ஆக்க பூர்வமாக மட்டுமே இருக்க வேண்டும்.   

சமீபத்தில் சென்னையை கலங்க வைத்த வர்தா புயலின் வருகையை முன்கூட்டியே அறிவித்து, எச்சரிக்கை செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவும் மேற்கொண்டு, பெரும்பாலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவியுள்ளது, மனிதனின் அறிவியல் + விஞ்ஞான சாதனைகள் மட்டுமே என்பதை நாம் யாரும் மறுப்பதற்கு இல்லை. 

இதுபோன்ற ஆக்க பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிகளும், ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாமும் ஒத்துழைப்பினை நல்கி, நம் அரசாங்கமும் நிறைய பண ஒதிக்கீடுகள் செய்யத்தான் வேண்டும்.

அரசியல்:

வரும் ஓராண்டுக்குள் அரசியலில் மாபெரும் மாற்றங்கள் நிகழக்கூடும் என்பது என் கணிப்பு.

மத்திய அரசு மேலும் ஸ்திரத்தன்மையை அடையக்கூடும். மாநில அரசாங்கத்தில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழக்கூடும். 

மக்களுக்கு இதுவரை இல்லாத மாபெரும் விழிப்புணர்வு ஏற்படக்கூடும். 

யார் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஆட்சி செய்தாலும், ஏழை எளிய மக்களின் நலனே கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கும். அப்போதுதான் யாரும் வலிமையுடன் தொடர்ச்சியாக ஆட்சியே செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாக மாற்றங்கள் இருக்கும்.  

-oOo-

என் மனதில் பட்ட கருத்துக்களை இங்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்திற்கும், குறிப்பாக என் அருமை நண்பர் ‘ஸ்ரீராம்’ ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் ......
வை. கோபாலகிருஷ்ணன்


=====================================================