வியாழன், 26 ஜனவரி, 2017

சின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 - பதிவுலக நண்பர்களின் கருத்துகள்


"ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"


     இந்த எங்களின் கேள்விக்கு வலையுலக பதிவர் நண்பர்கள் பதிலளித்து வருகிறார்கள்.   
     தொடரும் இன்றைய பதிவில் நண்பர் மனசு குமார்,  வெங்கட் நாகராஜ், ரஞ்சனி நாராயணன் மேடம் ஆகியோரின் கருத்துகள் இடம் பெறுகின்றன.


===========================================================

 

2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 

கலை : நடிப்பு (சினிமா) மட்டுமின்றி எழுத்து, ஒவியம் என எல்லாமே கலைதான் ஆனாலும் கலை என்னும் போது நாம் நடிப்பு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் கலை என்பது பணம் பார்க்கும் கருவியாக மட்டுமே இருக்கிறது.

அதில் வளர்ச்சி என்பதைவிட அதை வைத்து வளர நினைப்பவர்களே அதிகம். கலைக்கான மதிப்பும் மரியாதையும் வளரும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : கலையின் மூலம் நம் கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றைப் பாதுகாக்கும் விதமான நாடகங்கள் நிறையத் தயாரிக்க வேண்டும். பண்டைய தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல அதன் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.

இலக்கியம்: இன்றைய இலக்கிய உலகம் ஆள் சார்ந்துதான் இருக்கிறது. அரசியலைவிட இலக்கிய உலக அரசியல் ரொம்ப மோசமா இருக்கு... நல்ல எழுத்துக்கு வரவேற்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆள் பார்த்து புகழும் நிலையே இருக்கு, அதெல்லாம் 2017-ல் மாறி துதிபாடுவதைவிட நல்ல இலக்கியத்துக்கு நல்ல எழுத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முன்னணி எழுத்தாளர்கள் முன் வருவார்கள்... புதிய இலக்கிய படைப்பாளிகள் வேர் விடுவார்கள் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : வரலாறுகளை புனைவு என்ற பெயரில் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கிறார்கள். நம் பண்டைய வரலாற்றை, வீர மறவர்களின் வாழ்க்கைக் கதையை முடிந்தளவுக்கு உண்மை சேர்த்து எழுத வேண்டும். எத்தனையோ இளம் படைப்பாளிகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.

பொருளாதாரம் : நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சில பல நல்ல திட்டங்கள் அதற்கான வேர்தான்... அது மெல்ல மெல்ல கிளை விட்டு இந்தாண்டில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : நாட்டோட பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உயர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம் சாமானியர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் நிலை ஒழிய வேண்டும். எல்லாரையும் இந்தியராய் பார்க்க வேண்டும். மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தினை முன்னெடுக்கும் போது விருப்பு வெறுப்பு துறந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

விஞ்ஞானம் : இன்றைய நிலையில் விஞ்ஞான வளர்ச்சி நல்லாத்தான் இருக்கு. இன்னும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : உறவுகளைக் கொன்று, குழந்தைகள் உலகத்தை வேரோடு அளித்து எப்படிக் கெட்டுப் போகலாமோ அதற்கெல்லாம் வழி செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஏன்னா விஞ்ஞான வளர்ச்சி என்பது இப்போது வளர்ச்சியின் முதுகெலும்பாய்... தேவையற்றவற்றின் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும்.

அரசியல் : இப்போ கோடிகளில் பணம் சம்பாரிக்கும் இடம் இது மட்டும்தான். இதில் அப்படி வரும் இப்படி வரும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை... ஊழலில் ஊறி வருடங்கள் ஆயிருச்சு...

இனி மாற்றம் வரும் என்றெல்லாம் இல்லை என்றாலும் தற்போதைய சூழலில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

என் விருப்பம் : அரசியல்ல நம்ம விருப்பம் எல்லாம் ஒண்ணுமில்லை... படித்தவர்களும் பண்பாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே குறிக்கோளின்றி மக்கள் நலன் காக்கும் மனிதர்கள் வரவேண்டும்.

-‘பரிவை’ சே.குமார்.


============================================================================
 

2017 எப்படி இருக்க வேண்டும்…..

2016 வருடம் முடிவுக்கு வந்து விட்டது. 2017-ஆம் வருடம் பிறந்து விட்டது.  இந்த வருடம் எப்படி எல்லாம் இருக்கப் போகிறது, எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அடுத்த வருடத்தின் ஆரம்பம் வரை என்ன நடக்கப் போகிறது என்ற யூகமும், ஆசையும் இங்கே சொல்ல வேண்டும்.

என்னையும் இந்த ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட “எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கு முதலில் நன்றி.

2017 – எப்படி இருக்கப் போகிறது! ஜோசியம் சொல்ல எனக்கு தகுதி இல்லை. எனக்கு ஜோசியம் பிடிக்கவும் பிடிக்காது! எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டுமே சொல்லட்டா….

அரசியல்: 2016 பல குழப்பங்களையும், அரசியல் தகிடுதத்தங்களையும், சினிமாவினை விட அதிகமான நாடகங்களும் நடந்தேறிய வருடம். ஒரு பெரிய கட்சி தனது தலைவியை இழந்த பிறகு நடந்த அரசியல் நாடகங்கள் கேவலம். இந்த வருடத்திலாவது நம் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. திருந்த முயற்சியாவது
செய்வார்கள் என்ற ஆசை உண்டு. நாடு முழுவதுமே நல்ல அரசியல்வாதிகள் இல்லை! ஹிந்தியில் சொல்வார்கள் – Kissa kursi kaa!
என்று நாற்காலி அரசியல் எங்கும்…. தமிழகம் பொறுத்தவரை எனது ஆசை,

நமது மக்கள் சினிமா மோகத்தினை இனிமேலாவது விட்டு, மெத்தப் படித்தவர்களை, பதவியில் அமர்த்தட்டும்…..

இந்தியா வல்லரசு ஆகும் என்ற கனவுகளோடு இருக்கும் கோடான கோடி
மக்களில் ஒரு கடைக்கோடியில் நானும் இருக்கிறேன். வருடத்தின் கடைசி பகுதியில் செல்லாக் காசு விவகாரத்தினால் நாடு முழுவதுமே பிரச்சனைகள், குழப்பங்கள். அது நல்லதா, கெட்டதா என்பதை விட அந்த
நடவடிக்கை மூலம் பல விஷயங்கள் வெளியே வந்தன. பதுக்கல்
கும்பல்கள் சில பிடிபட்டாலும், Common Man என அழைக்கப்படும்
பொதுஜனமும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். இந்த மாதிரி கஷ்டங்கள்
அனுபவித்தாலும் அவை நல்ல மாற்றத்தை உருவாக்கினால், அதன்
மூலம் நாட்டுக்கு நலம் உண்டானால் நல்லது….

அடுத்த வருட ஆரம்பத்திற்குள் நாட்டின் நிதிநிலை சரியாகி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தினை இந்தியா பெறட்டும்…..

அனைவருக்கும் கல்வி, நல்ல மருத்துவ வசதி, சீரான சாலைகள், கடைசி
கிராமங்கள் வரை போக்குவரத்து வசதிகள், மின்சார வசதி என அனைத்தும் கிடைக்க இந்த வருடமாவது வேலையைத் துவங்க
வேண்டும். இவை அனைத்தும் ஒரு வருடத்தில் செய்து முடிக்கக் கூடிய
வேலை அல்ல – ஆனால் நல்லதொரு தொடக்கமாவது இருந்தால்
பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம். தன் வீடு, தன் குடும்பம்,
தனது வசதி என்ற சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அகன்று,
நல்லெண்ணெம் கொண்டவர்கள் அரசாளும் அரியணையில் அமர்ந்து சீரிய
பணிகளைச் செய்யட்டும்……

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட
வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்.

நல்லதே நடக்கட்டும்…..

அன்புடன்

வெங்கட்

புது தில்லி.==============================================================================

ரஞ்சனி நாராயணன்  :


மாற்றங்கள் 2018

என்னிடம் கருத்துக் கேட்டதற்கு முதலில் நன்றி.

நீங்கள் கேட்காத ஒரு துறையில் ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கும் ஒரு மாற்றத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் எங்கள் குடியிருப்பிற்கு வந்து இரண்டு வீடுகள் வேண்டும் என்று கேட்டார் – வாடகைக்குத்தான். ஒரு வீட்டில் இவரும் இவர் கணவர், குழந்தை இருப்பார்கள்;

இரண்டாவது வீட்டில் இவரது மாமியார், மாமனார், திருமணம் ஆகாத மைத்துனர் இருப்பார்கள்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு கசந்து முகர்ந்து கொள்வதைவிட இது தேவலை என்று எனக்குத் தோன்றியது. ரொம்பவும் அருகில் இருக்காமல், ரொம்பவும் தூரத்தில் இல்லாமல் பக்கத்திலேயே ஆனால் போதிய இடைவெளியுடன். அதாவது இடைவெளியுடன் கூடிய கூட்டுக் குடும்பம்.

வியப்பாக இருந்தாலும், இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.

‘தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு இல்லையா? ஆரம்பத்திலிருந்தே இந்த ஏற்பாடு தான். பெரிய பிள்ளைக்குத் திருமணம் ஆனவுடனேயே தனி வீடு – எங்களுக்கு அருகிலேயே – பார்த்து குடித்தனம் வைத்துவிட்டேன்’ என்று அந்த மாமி சாதாரணக் குரலில் சொன்னார்.

‘Gated Community’ என்று சொல்வார்கள். மொத்தக் குடும்பமும் ஒரே வளாகத்திற்குள் – தனித்தனியாக. இளம் வயதினருக்கு வேண்டிய சுதந்திரம். பெரியவர்களுக்கு பிள்ளைகள் அருகில் இருக்கும் தைரியம். வரவேற்கத்தக்க மாற்றம் என்று தோன்றுகிறது.

இனி நீங்கள் கேட்டிருக்கும் துறைகளில் நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

கலை: இப்போதைய சினிமாக்களில் இருக்கும் அரைக் கிழங்கள், முக்கால் கிழங்கள், முழுக்கிழங்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.

தொலைக்காட்சி சானல்கள் பெரியவர்களின் மனதை விஷமாக்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறுவர்களையும் குறி வைக்கின்றன. மனது பதறுகிறது. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை சூர்யாவைப் பார்த்து ‘நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். உங்களுடனேயே இருக்க வேண்டும்’ என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

கூடியிருக்கும் பெரியவர்கள், அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் எல்லோரும் வெட்கம் என்பதே இல்லாமல் ரசித்துக் கைதட்டுகிறார்கள். நிச்சயம் இது அந்தக் குழந்தையின் தவறு அல்ல.

பெரியவர்களின் விஷமத்தனமான வேலை இது. இந்த மாதிரி சிறுவர்களின் மனதில் விஷத்தை விதைப்பவர்களை பொதுவிடத்தில் தூக்கில் தொங்க விடவேண்டும். அல்லது பொதுமக்களின் கைகளால் அடித்துக் கொல்லப்பட விட்டுவிட வேண்டும்.

விஜய் மற்றும் ஜீ (ZEE) தொலைக்காட்சி சானல்கள் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இரு சானல்களின் உரிமையையும் ரத்து செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சில:

 குழந்தைகள் பங்கு கொள்ளும் போட்டிகளான சூப்பர் சிங்கர் போட்டிகளின் பெயர்களை இனி ‘சூப்பர் ஒப்பாரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும். தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்காமல் பெற்றோர்களும் மேடை ஏறி ஒப்பாரி வைப்பதுதான் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற மாயப்போர்வை இப்போதைக்கு அகலும் என்று தோன்றவில்லை. ரியாலிட்டி ஷோ என்பதை அழுவாச்சி ஷோ என்றும் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.

 லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், குஷ்புவும் இனி நம் வீடுகளுக்கு வந்து நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். இதுவரை அமெச்சூர் நடிகர்களை வைத்து நடத்திய இந்த ஷோவில் நடிக்க எதிர்காலத்தில் பிரபல நடிகர்கள் ‘க்யூ’வில் நிற்பார்கள்.

அரசியல்:

தமிழ்நாட்டின் தலைவிதி என்ன என்பதுதான் பெரிய கேள்வி இப்போது.

முதல் மாற்றம்: ‘அம்மா’வின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது என்றால் ‘சின்னம்மா’வின் ஆட்சியில் பாலும், தேனும், பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

நாட்டின் பிரதமர் உரையைக் கூட ஒளிபரப்பாமல் ‘சின்னம்மா’ வின் கண்ணீர் மல்கும் உரையை ஒளிபரப்பும் தமிழ் சானல்கள்! என்றைக்கு தமிழ்நாடு தேசீய நீரோட்டத்தில் சேரப்போகிறது?

சமீபத்திய மிகபெரிய மாற்றமான ‘ரூபாய் நோட்டு வாபஸ்’ பற்றிப் பேசாமல் இந்த கருத்துரையை முடிக்க முடியாது.

பலர் (படித்தவர்கள் உட்பட) பல கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புழக்கத்தில் இருக்கும் பண நோட்டுக்களை வாபஸ் வாங்குவதில் பிரதமர் மோதிக்கு எந்த சுயலாபமும் இல்லை. இதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டால் போதும்.

பிரதமர் மோடியின் துணிச்சல் பாராட்டத் தக்கது. மக்கள் கஷ்டப் பட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில்அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் என்ன முன்னேற்றம் கண்டோம்?

50 சதவீத கிராமங்களில் மின் வசதி இல்லை..

சாமான்யர்களை வங்கி கணக்கை துவக்க வைக்க முயலவில்லை.

பிரதமரே சொன்னது போல இருபத்து நாலு சதவிகிதம் மக்கள் மட்டுமே வருமானத்தைக் காட்டுகிறார்கள்.

அதைப்பற்றி இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே கவலைப்படவில்லை.

ஒரு ஒழுங்கு முறைக்குள் செயல் பட வேண்டுமென்றால் எல்லோர்க்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

பலர் தங்கள் பணத்தை ஏழை மக்களிடம் கொடுத்து கமிஷன் அடிப்படையில் மாற்ற முயலும்போதே தேங்கி கிடந்த பணம் வெளியில் வரத் தொடங்கி விட்டது என்பது புரியவில்லையா? இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது பல இன்னல்கள், எதிர்பார்க்காத சிக்கல்கள் வரத்தான் செய்யும்..

மிக தைரியமான முடிவை நாட்டிற்காக எடுத்த மோடியும், அவருக்கு உதவி செய்தவர்களும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

இந்த 50 நாட்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?  எத்தனை கறுப்புப்பணம் வெளியே வந்தது? என்று கேட்பவர்கள் அறிவிலிகள். இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்தவர்களைக் கேள்வி கேட்டார்களா இந்த அறிவாளிகள்? நல்ல பலன் கிடைப்பதற்கு சில பல கஷ்டங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

நல்லது செய்ய எண்ணும் ஒரு பிரதமர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கை கொடுப்போம்.==============================
===================================

31 கருத்துகள்:

 1. "வெளி உலகுக்குத் தெரியாமல் உள்ள இளம் படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரவேண்டும்" நண்பர் குமார் அவர்களின் கூற்றை மிகவும் வரவேற்கிறேன்...

  "நிச்சயம் நல்லதே நடக்கும்" நம்பிக்கையுடன் சொல்லும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்... நன்றிகள்...

  ரஞ்சனி அம்மா சொல்லும் மாற்றங்கள் அனைத்தும் (முக்கியமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) நடந்து விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்... வாழ்த்துகள் அம்மா...

  பதிலளிநீக்கு
 2. அனைவரின் கருத்துக்களும் நடைமுறைக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் வரவேற்கத்தக்கதே...

  பதிலளிநீக்கு
 4. குமார் எப்போதுமே எழுதுவது போல் மிக அழகாக தெளிவான பார்வையுடன் எல்லோரது ஆதங்கங்களையும் முன்வைத்துவிட்டார்..வாழ்த்துக்கள் குமார்!! பூங்கொத்து...குறிப்பாக இந்தக் கருத்தை "வெளி உலகுக்குத் தெரியாமல் உள்ள இளம் படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரவேண்டும்"// வரவேற்கிறோம்...

  வாவ்!!! வெங்கட்ஜி!!!!!! அடி பொளி கலக்கிட்டீங்க போங்க!!! வெங்கட்ஜி என்றாலே பயணக் கட்டுரைகள்,அருமையான ஃப்ரூட் சாலட் , அவ்வப்போது ஆதங்கங்கள் என்ற வெங்கட்ஜியின் ஓபன் டாக்!!!! சூப்பர் சூப்பர்!! நிச்சயம் நல்லது நடக்கும் ஜி உங்களுக்கும் பூங்கொத்து..

  ரஞ்சனி சகோ/அக்கா முதலில் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் வரவேற்கத் தக்கதே காலம் மாறும் போது இதுவும் நல்லதே அதாவது குடும்ப அமைப்பு!!!! மற்றும் பிற கருத்துக்கள் அதுவும் கலை பற்றிய கருத்துக்கள்!! அதே!!! உங்களுக்கும் ஒரு பூங்கொத்து!!!

  அருமை எல்லாமே. எங்கள் ப்ளாகிற்குப் பாராட்டுக்கள். அந்நியன், முதல்வன் படங்களில் புகார் பெட்டி கருத்துப் பெட்டி என்று வருமே அது போன்று வலையுலகினர் பெரும்பான்மையோரது விருப்பங்கள், புகார்கள் வைக்கும், எல்லோரும் காணும் ஒரு பெட்டியாக இதைக் கருதலாம்...பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்!!

  பதிலளிநீக்கு
 5. //கலை : நடிப்பு (சினிமா) மட்டுமின்றி எழுத்து, ஒவியம் என எல்லாமே கலைதான் ஆனாலும் கலை என்னும் போது நாம் நடிப்பு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் கலை என்பது பணம் பார்க்கும் கருவியாக மட்டுமே இருக்கிறது. அதில் வளர்ச்சி என்பதைவிட அதை வைத்து வளர நினைப்பவர்களே அதிகம்.//

  இவை அனைத்துமே உண்மைதான். தன் மனதில் பட்டதை ‘மனசு குமார்’ அப்படியே பிரதிபலித்துள்ளார்.

  //என் விருப்பம் : கலையின் மூலம் நம் கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றைப் பாதுகாக்கும் விதமான நாடகங்கள் நிறையத் தயாரிக்க வேண்டும். பண்டைய தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல அதன் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.//

  தங்கள் விருப்பம் என்னவோ நியாயம்தான். ஆனால் இவற்றையெல்லாம் மேடை நாடகங்களாகப் போட்டு, பழைய காலம்போல ஊர் ஊராக மக்களிடம் எடுத்துச்சென்று நிறைவேற்றுவது மிகவும் கடினம்.

  இருப்பினும் இதற்கான மாற்று வழிகள் நிறையவே உள்ளன. அவற்றை யோசித்துச் செய்யலாம்.

  //எத்தனையோ இளம் படைப்பாளிகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.//

  இது மிகவும் நியாயமான எண்ணம். பாராட்டுகள்.

  //உறவுகளைக் கொன்று, குழந்தைகள் உலகத்தை வேரோடு அளித்து எப்படிக் கெட்டுப் போகலாமோ அதற்கெல்லாம் வழி செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஏன்னா விஞ்ஞான வளர்ச்சி என்பது இப்போது வளர்ச்சியின் முதுகெலும்பாய்... தேவையற்றவற்றின் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும்.//

  உண்மையை உண்மையாக, உள்ளது உள்ளபடி, உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  //படித்தவர்களும் பண்பாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே குறிக்கோளின்றி மக்கள் நலன் காக்கும் மனிதர்கள் வரவேண்டும்.//

  சூப்பர் !

  -=-=-=-=-

  பதிலளிநீக்கு
 6. //நமது மக்கள் சினிமா மோகத்தினை இனிமேலாவது விட்டு, மெத்தப் படித்தவர்களை, பதவியில் அமர்த்தட்டும்…..//

  இதுவே இன்றைய அவசர மற்றும் அவசியத் தேவையாகும்.

  மெத்தப் படித்தவர்களில், எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி தான் பிழைக்கலாம் என்று கணக்குப் போட்டுப் பிழைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

  காட்சிக்கு எளிமையானவர்களாகவும், சுலபமாக அணுக முடியுபவராகவும், ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

  //அடுத்த வருட ஆரம்பத்திற்குள் நாட்டின் நிதிநிலை சரியாகி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தினை இந்தியா பெறட்டும்…..//

  இது நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

  //ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும். நல்லதே நடக்கட்டும்…..//

  தங்களின் இந்த முடிவுரை அருமை ..... வெங்கட் ஜி. பாராட்டுகள்.

  -=-=-=-=-

  பதிலளிநீக்கு
 7. //‘Gated Community’ என்று சொல்வார்கள். மொத்தக் குடும்பமும் ஒரே வளாகத்திற்குள் – தனித்தனியாக. இளம் வயதினருக்கு வேண்டிய சுதந்திரம். பெரியவர்களுக்கு பிள்ளைகள் அருகில் இருக்கும் தைரியம்.//

  இது மிகவும் நியாயமான + வரவேற்கத்தக்க மாற்றம் என்று எனக்கும் தோன்றுகிறது.

  //கலை: இப்போதைய சினிமாக்களில் இருக்கும் அரைக் கிழங்கள், முக்கால் கிழங்கள், முழுக்கிழங்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.//

  மிகவும் அருமையான + நியாயமான எதிர்பார்ப்பு.

  //தொலைக்காட்சி சானல்கள் பெரியவர்களின் மனதை விஷமாக்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறுவர்களையும் குறி வைக்கின்றன.//

  ஆம். மனது பதறுகிறது என்பதே உண்மை.

  //இந்த மாதிரி சிறுவர்களின் மனதில் விஷத்தை விதைப்பவர்களை பொதுவிடத்தில் தூக்கில் தொங்க விடவேண்டும். அல்லது பொதுமக்களின் கைகளால் அடித்துக் கொல்லப்பட விட்டுவிட வேண்டும்.//

  தங்களின் இந்த ஆவேசத்தில், ஒட்டுமொத்த சமுதாய நல்லெண்ணமும், நியாயமும் உள்ளது.

  //நல்லது செய்ய எண்ணும் ஒரு பிரதமர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கை கொடுப்போம்.//

  சபாஷ் ! இந்த முடிவுரை வரிகளும் அதற்காகத் தாங்கள் எடுத்துச்சொல்லி விளக்கியுள்ள காரணங்களும் மிகவும் அருமை. தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய ஸ்பெஷல் பாராட்டுகள்.

  -=-=-=-

  பதிலளிநீக்கு
 8. ஆஹா... மனசு குமார் மற்றும் ரஞ்சனிம்மாவின் கருத்துகளோடு எனது கருத்தும்..... நன்றி “எங்கள் பிளாக்”....

  எனக்கும் இங்கே ஒரு இடம் தந்தமைக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு
 9. அனைத்து கருத்துகளும் நன்று

  பதிலளிநீக்கு
 10. அனைத்து கருத்துகளும் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. மூவரின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் நியாயமானவை .பெரும்பாலும் நம் அனைவரது விருப்பமும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கின்றன இமூவரின் சின்ன சின்ன ஆசைகள் ..

  பதிலளிநீக்கு
 12. @குமார் .//.நீங்க சொன்ன அந்த அனைவரையும் இந்தியராக பார்க்க வேண்டும் //..நம்ம ஊரில் நடக்குதோ இல்லையோ இங்கே வெளிநாட்டில்
  குஜராத்திக்காரன் பஞ்சாப்காரன் செய்றா தப்புக்கெல்லாம் மொத்தமா எங்களையும் சேர்த்தே திட்டி
  தொலைக்கிறாங்க :) இந்தியர் இந்திய குடும்பம்னு

  பதிலளிநீக்கு
 13. @வெங்கட் நாகராஜ் //தன் வீடு, தன் குடும்பம்,
  தனது வசதி என்ற சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அகன்று,// மிக சரியான நியாயமான எதிர்பார்ப்பு ..

  பதிலளிநீக்கு
 14. @ரஞ்சனிம்மா ..மிக சரியா சொன்னிங்க இங்கே இங்கிலாந்தில் வாழும் பாகிஸ்தானியர் பஞ்சாபியர் குஜராத்தியர் பலர் இந்த gated community மற்றும் எக்ஸ்டெண்டட் family ..வகையினர்
  இவர்கள் semi detached மற்றும் mid terrace வகை வீடுகளை வாங்கி அருகில் வசிக்கிறார்கள் பிரைவசி பிரச்சினையும் இல்லை பாதுகாப்புக்கு உத்தரவாதம் .
  தொல்லைக்காட்சி குறித்த உங்களது ஆதங்கம் நியாயமானதே ..எங்கள் வீட்டில் தமிழ் டிவி கனெக்ஷன் இல்லையாததால் தப்பித்தேன் ..

  பதிலளிநீக்கு
 15. எல்லார் கருத்தும் நல்லாத்தான் இருக்கு. நடக்குமா?

  பதிலளிநீக்கு
 16. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.

  பதிலளிநீக்கு
 17. மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட 2017ஐப் பற்றி நண்பர்களின் கருத்துகளைப் பகிர்ந்தவிதம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள் மூவரும்.
  நல்லது நடந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 19. பிரபல பத்திரிகைகளுக்கு எழுதி எழுதி பழக்கப்பட்ட கை. சசோதரி ரஞ்சனி நாராயணனின் கட்டுரை பிரமாதம்.

  ஒரே வீட்டில் இரண்டு சமையல் அவலங்களுக்கு இது பரவாயில்லை. "இந்தா, உஷா! முருங்கைக்காய் சாம்பார்ன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும், இல்லியா? .. இன்னிக்கு பண்ணியிருந்தேன். கொஞ்சம் எடுத்து வந்தேன். அவனுக்குப் போட்டுடு" என்று எல்லா நடைமுறை ஏற்பாடுகளையும் ஜெயிக்கும் தாய்ப் பாசம் தனிக்கதை.

  ரூபாய் நோட்டு வாபஸ் பற்றிய ர.நா. கருத்துக்களை மிகவும் ரசித்தேன். விஷயத்தை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார். மத்திய வர்க்கத்தினரின் பலவித எதிர்மறைக் கருத்துக்களிடையே எதிர்கால நம்பிக்கையை எடுத்துரைக்கும் தீர்க்கமான அலசல். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. வரவேற்கத் தக்க கருத்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 21. சிறந்த அறிஞர்களின்
  சிந்திக்க வைக்கின்ற எண்ணங்களை
  எல்லோரும் பின்பற்றலாம்!

  பதிலளிநீக்கு
 22. விரும்பியதை சொல்லி விட்டார்கள் ,அடுத்த வருடம் இதில் எது நிறைவேறியது என்பதையும் அவர்கள் வாயாலேயே சொல்லக் கேட்போம் :)

  பதிலளிநீக்கு
 23. வரலாறுகளை புனைவு என்ற பெயரில் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாய் எழுதி இருக்கிறார்கள்.வீர மறவர்களின் வாழ்க்கையை முடிந்த அளவு உண்மை சேர்த்து எழுத வேண்டும் என்னும் மனசு குமார் அவர்களின் ஆசையை வழி மொழிகிறேன்.

  பின்னாளில் ஏற்பட போகும் மாற்றங்களுக்கு இந்த ஆண்டு ஒரு துவக்கமாக இருக்க வேண்டும் என்னும் வெங்கட் நாகராஜ் அவர்களின் இயல்பான எதிர்பார்ப்புக்கு போடுவோம் ஒரு ஜே!

  வந்தாரம்மா ரஞ்சனி நாராயணன்! மட்டைக்கு ரெண்டு கீத்து என்று பளிச் பளிச்சென்று அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஆசைகள் அபாரம்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்மார்க் உண்மைகள்!

  அரை கிழம், முக்கால் கிழங்கள் தானாக விலகவில்லை என்றால் ஓரம்கட்டப் படுவார்கள். ஆகவே நாம் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 24. ரஞ்சனி சொல்லி இருக்கும் அருகருகே தனிக்குடித்தனம் என்பது ஏற்கெனவே செட்டிநாட்டு வழக்கத்தில் இருக்கிறது என்பதோடு இப்போ எங்கள் உறவினர்களிலும் பலரும் இப்படித் தான் செய்து வருகின்றனர். இதுவும் நன்மைக்கே!

  பதிலளிநீக்கு
 25. நண்பர்கள் கனவுகள் நிறைவேறுவது ஒன்றே என் கனவு..

  அற்புத முயற்சி...

  பதிலளிநீக்கு
 26. இணையப் பக்கம் சில மாதங்களாக வராமல் ஒதுங்கி இருந்த என்னை மாற்றங்கள் பற்றி எழுத வைத்து இங்கு வரவழைத்த தம்பி ஸ்ரீராமிற்கு நன்றி முதலில்.
  பரிவை சே. குமார்தான் 'மனசு' குமார் என்று அவரது தளத்திற்குப் போய் இன்று தெரிந்துகொண்டேன். இதிகாச புராணங்களை தங்கள் விருப்பபடி அளந்து (நிறைய நீர் ஊற்றி!) எழுதுவது எனக்கும் பிடிப்பதில்லை. சமீபத்தில் கூட பீஷ்மர் உண்மையில் அம்பையை விரும்பியதாகவும், தனது விரதத்திற்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவளை விரட்டி விட்டதாகவும் சிகண்டியை தனது மகளாகவே நினைப்பதாகவும் ஒரு கதை படித்தேன். பீஷ்மர் என்கிற கதாபாத்திரமே அடிபட்டுப்போகிறதே! மனசு நொந்து விட்டது! நிச்சயம் உண்மைகளை மட்டுமே எழுத வேண்டும் என்பது என் கருத்தும் கூட.

  திரு வெங்கட் உலகம் சுற்றும் வாலிபர். நிறைய ஊர்களுக்குப் போய் நிறைய மனிதர்களைச் சந்திப்பவர். அவரது எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் நாடு முன்னேற வேண்டும் என்று நினைக்கவேண்டும் என்ற கருத்து மிகவும் சரி. வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல ஒரு பிரதமர் வர வேண்டியிருக்கிறது. வெட்கப்பட வேண்டிய நிலை. நிச்சயம் மாற வேண்டும்.

  எனது கருத்துக்களுக்கு விலாவாரியாக பதில் எழுதிய திரு வைகோ, திரு ஜீவி, திருமதி பானுமதி, திருமதி கீதா மற்றும் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போன அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. @ஜீவி ஸார் புனைப்பெயரில் எழுத வேண்டும் என்று நினைக்கும் எனக்கு நீங்கள் கொடுத்த புனைப்பெயர் ர.நா என்ற பெயர் மிகவும் பிடித்துவிட்டது! நன்றி ஸார்!

  எனது மனத்தாங்கல்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீராம் தம்பிக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 27. ர.நா. உங்கள் பெயரின் சுருக்கம் அல்லவோ?..
  முழுமை கொண்டதாய் ஒரு புனைப்பெயரை யோசிக்கலாம் என்றால்--
  எந்த யோசனைக்கும் இடம் கொடுக்காமல், பொறி தட்டியது போல சட்டென்று நினைவுக்கு வந்தது--

  நிரஞ்சனி

  இந்தப் புனைப்பெயர் எப்படி இருக்கிறது?..

  பிடித்தால் சூட்டிக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 28. வெங்கட் அண்ணன் ரஞ்சனி அம்மாவுடன் அடியேனின் கருத்தும்...
  வாழ்த்துக்கள் இருவருக்கும்... நன்றி ஸ்ரீராம் அண்ணாவுக்கு...

  பதிலளிநீக்கு
 29. எங்கள் கருத்துக்கள் குறித்து தங்கள் எண்ணங்களைச் சொல்லிய அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!