கடவுள் நம் எதிரில் வந்தால் என்ன செய்வோம்...
ஒரு பழைய ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது.
கடுமையான சிமென்ட் நெருக்கடிக் காலத்தில் வீடுகட்டிக் கொண்டிருந்த ஒருவன் உடனடியாக சிமென்ட் தேவை ஏற்பட்டு அலைந்து கொண்டிருந்தபோது எதிரே கடவுள் தோன்றினாராம். "என்ன வேண்டும் கேள் பக்தா...!" என்றாராம். யோசிக்காமல் "உடனடியாக ஐந்து மூட்டை சிமென்ட் வேண்டும் கடவுளே.." என்றானாம் அவன்.

நான் கூட அப்படிக் கேட்டிருக்கலாம். கனவா நினைவா என்று தெரியாத நிலையில்தான் அது நிகழ்ந்தது. அப்போது ஏதும் எனக்குக் கவலை - அப்போதையக் கவலை - எதுவும் இருந்ததாக ஞாபகமில்லை. வந்த உருவம் கடவுளா, காலனா, அதுவும் தெரியவில்லை. கேட்ட கேள்வியும் வந்த பதிலும்தான் 'காலனா' என்ற கேள்வியையே மனதில் உண்டாக்குகிறது. யோசித்துப் பார்த்தால் கேள்வியும் எனதில்லையோ என்றும் தோன்றுகிறது. கேட்க வைக்கப் பட்டேனோ என்னமோ....
பரீக்ஷிததுக்கு தன் நேரம் தெரிந்தது போல எனக்கும் தெரிந்து விட்டது.
'சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்'னு வசனமெழுதினார் சுஜாதா. எனெக்கென்னமோ பெரிய நரகமாயில்லை. ஏதோ எதிர்பார்த்த ஒன்று சட்டென முடிவுக்கு வந்தது போல மனதில் ஒரு வெறுமை. நிறைவு என்று அதைச் சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனால் அப்படியும் சொல்லலாம். என் சம்பந்தப் பட்ட எல்லாமும் நிறைவு பெறப்போகும் நாள் என்பதால் சொல்லலாம். புன்னகைக்கத் தோன்றியது. இந்நிலையில் புன்னகைத்தால் செயற்கையாகத் தோன்றும் என்றும் தோன்றியது. யாருக்கு செயற்கையாகத் தோன்றும்? இது எனக்கு மட்டும்தானே தெரியும்? எனக்கே என் புன்னகை செயற்கையாக இருக்க முடியுமா?
நானே எனக்குப் பகையானேன் போல, நானே எனக்கு செயற்கையாக இருக்க முடியுமா? பல சமயங்களில் நமக்கு நியாயம் என்று நினைப்பது அடுத்தவருக்கு நியாயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லையே... அப்போது நான் சரி என்ற எண்ணம் எனக்குள் நான் ஏற்படுத்திக் கொள்ளும்போது என்னை, என் மனசாட்சியை நான் ஏமாற்றி செயற்கையாகத்தான் இருந்திருப்பேன்....
செய்ய வேண்டிய கடமை என்று ஏதுமில்லை என்று நினைக்கிறேன். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து பேரனும் பார்த்தாயிற்று. மனைவி எப்போதோ விடைபெற்றுச் சென்று விட்டாள். அதற்காக எனக்கு நீங்கள் எழுபது, எண்பது என்றெல்லாம் வயது கணக்கு போடக் கூடாது. அறுபதைத் தொடப் போகிறேன். அவ்வளவுதான். இருபத்தொரு வயதில் திருமணம். சென்ற வருடம் பேரன் பார்த்து விட்டேன். மகள் திருமணத்தையும், பேரனையும் பார்க்க மனைவிக்குக் கொடுத்து வைக்கவில்லை.

வாழ்வில் பெரிய வருத்தம் ஏதுமில்லை. அவ்வப்போது சமையல் எரிவாயு கிடைக்கவில்லை, செல்லுக்கு டவர் கிடைக்கவில்லை, நினைத்த நேரத்துக்கு பஸ் வரவில்லை போன்ற சாதாரண குறைகள்தான். அப்படியே யோசித்துப் பார்க்கும்போது பெரிய சந்தோஷம் என்றும் கூட ஏதும் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லாததால் ஏமாற்றம் ஏதும் இல்லை. 'இது நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்பதால் இவையெல்லாம் நடக்கிறது' என்கிற எண்ணம் மனதில் பதிந்து விட்டதால் வருத்தங்களும் சந்தோஷங்களும் நிலைத்து நின்று பாதித்ததில்லை.
அதே நிலைதான் இப்போதும். மரணம் எப்போது என்று தெரிந்து விட்டாலும், எந்த வகையில் வரும் என்ற கேள்வி மட்டும் மனதில்.
நிதானமாகச் செயல்பட்டேன். இருக்கும் ஒரு வீட்டையும் இரண்டு மனைகளையும் யாருக்குச் சேர வேண்டும் என்று எப்படி எழுத வேண்டுமோ அபபடி எழுதி வைத்தேன். கிரெடிட் கார்டை சரண்டர் செய்தேன் புதிதான ஒன்றுக்கு அவசியமில்லையே..! வங்கிக் கணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தேன். எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பிரித்து பங்கு வைத்தேன். என்னிடம் போதுமான அளவு வைத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் பிரித்தேன். இருக்கும் வரை சாப்பிட வேண்டுமே... பீச் சென்று மணலில் அமர்ந்து மக்களையும், கடலையும் பார்க்க வேண்டும்...மிளகாய் பஜ்ஜி சாப்பிட வேண்டும். பாசந்தி சாப்பிட வேண்டும். வருத்தமும் சந்தோஷமும் இல்லையென்றுதான் சொன்னேன். ஆசை இல்லையென்று சொல்லவில்லையே...! ஆசை யாருக்குத்தான் இல்லை? ஆனால் என்னுடைய ஆசைகள் எல்லை மீறாதவை. என்னுடைய எல்லை எதுவென்று எனக்கும் என் கனவுகளுக்கும் தெரிந்திருந்தது.
இதோ, இன்றோ நாளையோ... இன்று என்றுதான் நினைத்திருந்தேன். பேசிய நாளைக் கணக்கில் சேர்க்கா விட்டால் நாளை..! இதுவரை முடிவுக்கான எந்த அறிகுறியும் தெரியாததால் இந்த கணக்குக் குழப்பம். திடீரென ஒரு மாசிவ் அட்டாக் வருமோ...!
கையிலிருந்த புத்தகத்தை மூடி மேஜையின் ஓரமாக வைத்தேன். தலை பாரமாக, கண்கள் எரிச்சலில் சூடாக இருப்பது போலத் தோன்றியது.
அப்படியே மேஜையில் கைவைத்துத் தலையை கைகளுக்கும் புதைத்தபோது கைகள் காட்சிக்குப் பக்கத்தில் இருக்க, என் கைகளை நானே வெளியாள் போலப் பார்த்தேன். உணர்ச்சியற்று, உபயோகமற்று போகப்போகும் கைகள்... மேஜையின் மேலே கைகளை அப்படியே நீள வாக்கில் கிடத்தினேன். 'இப்படித்தான் ஆடாமல் இருக்கும்...' கொஞ்ச நேரம் அசையாமல் இருந்து, எந்த அவயங்களையும் அசைக்காமல் மரணமாக வாழ்ந்து பார்த்தேன். மறுபடியும் புன்னகைக்கத் தோன்றியது. எல்லோரும் கடந்த காலங்களைத்தான் மறுபடி தன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து பார்ப்பார்கள். நான் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை வாழ்ந்து பார்க்கிறேன். நானே கடந்த காலமாக மாறப் போவதைத்தானே செய்து பார்க்கிறேன்?
மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா? என்ன முரண்?
இப்போது எழுந்து அருகிலிருந்த கட்டிலில் கால்கள் நீட்டிப் படுத்துக் கொண்டேன். கைகளை வயிற்றின் நடுவில் க்ராஸ் அமைத்தேன். தலையை நிமிர்த்தி ஒரே சீராக வைத்து மூச்சை நிறுத்தி, இல்லை, இல்லை, அடக்கி கூரையை வெறித்தேன். கண்கள் மூடியிருக்க வேண்டுமோ...?
மூட முடியவில்லை. அறையின் மேற்கூரையில் விளக்கணைத்தால் நட்சத்திரங்கள் தெரியும் அழகிய ஆகாயம் தெரியும் வண்ணம் அந்த விசேஷ பெயின்ட் அடிக்கப் பட்டிருந்தது. கண்களை மூடாமல் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடியே, மேகக் கூட்டங்களின் நடுவே நட்சத்திரங்களை ஒதுக்கியபடி எல்லையில்லா காலப் பயணத்தில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் பயணம் செய்தேன். கற்பனையில் பயணத்தை எங்கு நிறுத்துவது என்று குழப்பம் ஏற்பட்டது. அதைப் பற்றி நிச்சயமான ஒன்றாக எதுவும் இதுவரைப் படித்ததில்லை! வானில் இரண்டு பங்களாக்கள் சொர்க்கம் ஒன்று நரகம் ஒன்று என்று இருப்பது போலக் கற்பனை செய்ய முடியவில்லை.

அப்படியே நிறுத்தினாலும் எந்த வீட்டில் இறங்குவது என்று முடிவு செய்வது யாராக இருக்கும்? பாவம் எது புண்ணியம் எதுவென்று ஒரு பொது நீதியாக நமக்குள் பேசிக் கொள்வதுதானே... சொர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே நரகமாகி விட்டாலும் என்ன செய்வது? வெளியில் ஓடித் தப்பிக்க முடியுமா? மாற்றலுக்குக் கேட்க முடியுமா? எனில், யாரிடம்?

வேண்டாம், இந்தக் கற்பனை. ஒதுக்கி விட்டு பயணத்தையே சுற்றிச் சுற்றித் தொடர்ந்தேன். சுற்றி வந்தால் அடுத்து ஜனிக்கக் காத்திருக்கும் ஒரு புதிய உயிருக்குள் புகுந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது.
கண்களைத் திறந்து வைத்திருந்திருக்கக் கூடாது. மூடியிருந்திருக்க வேண்டும். திறந்தே இருந்து, வானம் கற்பனைக் காட்சிக்கு அகப்பட்டதால்தானே பயணக் கற்பனை? கண்களை மூடிக் கொண்டிருந்திருந்தால் யோசனை ஏதுமின்றி பிணம் போலவே படுத்திருந்திருக்கலாம்.
சிக்கலான கற்பனையை சிக்கலான வார்த்தையமைப்புகளோடு கற்பனை செய்வதாகத் தோன்றியது. இதுவும் எனக்குத் தேவையா இல்லையா என்று முடிவெடுக்கத் தெரியாததால் கற்பனையை மனச் சேமிப்புக் கிடங்கில் அந்த அளவில் சேமித்து, கற்பனை நீக்கி எழுந்தேன்.
இத்தனை நாட்களுமே நாட்களும் நேரமும் மெல்லத்தான் நகர்ந்தன. வேகமாக ஓடியதாகக் கற்பனை செய்ய வேண்டுமானால் எனக்கு மரணபயம் இருக்க வேண்டும். மரண பயம் எப்போது வருகிறது? ஆசைகள் தீராத போதா, கடமைகள் தீராத போதா? ஆசைகள் சுயநலத்தோடும், கடமைகள் பாசங்களோடும் பிணைக்கப் பட்டவை. பாசங்களை அனுபவங்கள் அறுக்கின்றன. நீக்குகின்றன. நம்மால் இருந்த உபயோகம் தீர்ந்த போது நம்மை நாடி வருபவர்கள் யாருமில்லை. அயல் மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஆக்கூட்டம் போல உடன் அதே நிலையில் பயணிக்கும் மாக்களே நம் துணை. அதுவும் வழித்துணைதான்.
என்னால் எந்த பயனும் என் உறவுகளுக்கு இல்லை என்றறிந்து நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன். அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் குறையுமில்லை. அவர்களுக்கு என் மேல் மலையளவு குறையிருக்கலாம். என்னைப் போல அவர்களும் குறையற்று இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை.
துணிகளை ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தானம் செய்தேன். பாத்திரங்களை ரக வாரியாக அடுக்கி மேலே வைத்தேன். சுய சமையல். தேவைக்கு மட்டும் அளவாக பாத்திரங்கள் கீழே வைத்தேன். புத்தகங்களைச் சீராக அடுக்கி வைத்தேன். வீடு குப்பைக் கூளம் இல்லாமலும், அடைசல் இல்லாமலும் சீராக வைத்தேன்.

எதைச் செய்தாலும் என் நேர்த்தியைப் பற்றிப் பேசுபவர்கள் இதையும் பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அப்படிப் பேச வேண்டும் என்று கூட நினைத்துச் செய்தேனோ என்னமோ.... இருந்தாலும் தப்பில்லையே....!
ஏதோ ஊருக்குக் கிளம்புவது போல உணர்ந்தேன். ஊருக்குக் கிளம்பினால் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்! நான் யாரிடம் போய், என்னவென்று சொல்ல? நம்புவார்களா என்ன? ஆனால் ஒன்று மரண வீட்டில் சொல்லாமல்தான் கிளம்ப வேண்டும் என்று சொல்வார்களே... "வூட்ல சொல்லிக்கினு வந்தியா..." ஏதோ சாலைப் போக்குவரத்தில் எப்போதோ கேட்ட ஏதோ ஒரு வாகன ஓட்டியின் குரல் காதில் ஒலித்தது. மறுபடியும் புன்னகை வந்தது. ரொம்பத்தான் புன்னகைக்கிறேனோ....!
கருடபுராணம் கண்ணில் பட்டது. 'படிக்க வேண்டிய காலம்' போட்டிருந்தது. ஏற்கெனவே படித்ததுதான். இப்போதே படித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே அடுத்து இருந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துப் புரட்டினேன். காலக் கணக்குப் பற்றிப் போட்டிருந்ததில் கண்கள் நின்றன.
இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம். அறுபது நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பக்ஷம். 2 பக்ஷங்கள் (வளர்பிறை, தேய்பிறை) ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயநம். இரண்டு அயநங்கள் (உத்தராயணம், தட்சிணாயனம்) ஒரு ஆண்டு. இது மனிதர்களின் காலக் கணக்கு.
மனிதர்களின் ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.....
படித்துக் கொண்டே வந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கடைசி வரி மின்னலடித்தது. அன்று நடந்த உரையாடல் மறுபடி நினைவுக்கு வந்தது.

'என் கணக்குக் கேட்கிறாயா? உன் கணக்குக் கேட்கிறாயா?'
'என் காலமுடிவுக்கு உன் கணக்கைத்தான் கேட்கிறேன்...'
'பதினைந்து நாள்...'
படங்கள் உதவி : நன்றி இணையம்.