டூரிங் கொட்டாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டூரிங் கொட்டாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.12.14

எனது சினிமா நினைவுகள்!

                         
                                                             Image result for satyam theater images

எத்தனையோ தொலைக்காட்சிச் சேனல்களில் தினசரி பல்வேறு திரைப்படங்களையும் பார்க்கும் வசதி, நினைத்த நேரத்தில் இணையத்தில் பாடல்களோ, முழுத் திரைப்படங்களையோ பார்த்துக் கொள்ளும் வசதி, வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி வைத்து, புதிய / பழைய திரைப்படங்களை 3D வசதியுடன் பார்க்கும் வசதி என்று இத்தனை வசதிகள் இருக்கும் இந்தக் காலத்திலேயே தியேட்டரில் சென்று படம் பார்க்க மக்கள் முன்னூறும் ஐநூறும் கொடுத்து அலை மோதுகிறார்களே...

இதில் எந்த வசதியுமே இல்லாத காலத்தில், திரையரங்குகளில் மட்டுமே சினிமா பார்க்கமுடியும் என்ற  இருந்தபோது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?  சினிமாவை விட்டால் ரேடியோதான் எங்கள் அடுத்த ஒரே பொழுதுபோக்கு.

(தஞ்சாவூர் சிவகங்கா கார்டனில் பெரிய பெரிய மைக்குகள் மறைவாக வைத்து ரேடியோ நியூஸ் ஒலிபரப்புவார்கள்)
                                                                     
                                                 
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் திரையரங்கம் தஞ்சாவூர் மெடிகல் காலேஜ் ரோடில் இருந்த ராஜேந்திரா டூரிங் டாக்கிஸ்தான். 

அடர்த்தியான கூரைகளால் வேயப்பட்ட கவர்ச்சியான கூரைக் கொட்டாய். சுற்றிலும் படல் வேலி!  வேலியை வகுந்து டிக்கெட் கவுண்டர்கள். வெளிப் பகுதியில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்கள் வழியாக உள்ளே நுழைந்து பாடலுக்கு உள்ளே சென்றால் 15 பைசா முதல் இன்ஸ்டன்ட் சொர்க்க வாசல்!
                                                                   
                                                 

பெரிய திரையில் கருப்பு வெள்ளையில் காவியங்கள்.  அவ்வப்போது சில திரைப்படங்கள் வண்ணத்தில் வெளியாகி எங்களைச் சோதிக்கும்.   அந்த வண்ண மயமான அனுபவத்துக்காகவே இரண்டு மூன்று முறை பார்ப்போம்.

யார் நடித்தால் என்ன?   திரையில் பெரிய சைஸில் உருவங்கள் வரவேண்டும்! சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும்!   எங்களுக்கு எம் ஜி ஆர், சிவாஜி, ரவிச்சந்திரன் எல்லோருமே பிடித்த ஹீரோக்கள்தான்! 
                                                                  Image result for touring talkies images

பெஞ்ச் டிக்கெட்டும் (ஐயே.... மூட்டைப்பூச்சி!) சேர் டிக்கெட்டும் கவுரதை என்றாலும் குறைந்த விலையில் முன்னால் மணலில் அமர்ந்தும், படுத்தும் பார்க்கும் சுகம்!  கூட்டம் அதிகமாக இருந்தால் மணலைக் குமித்து படுத்து படம் பார்க்க முடியாது. சிலர் அந்த மணலிலே செய்யும் அசிங்கங்களை எல்லாம் பொருட்படுத்தாத வயது!

இடைவேளைகளில் சோடாவும், கலரும் ("ஜோடா கலரு.....ஜோடா கலரு....") கடலை மிட்டாயும்தான்.

டூரிங் டாக்கீசிலிருந்து 'டவுனுக்'குள் சென்று நாகரீகமான திரை அரங்குகளில் புதிய திரைப் படங்கள் பார்த்த போது அந்த சந்தோஷம் தனியாக இருந்தது. இடைவேளைகளில் கோன் ஐஸ்! அங்கு மணல் கிடையாது. சீட்டுகளில் மெத்தை இருந்தத என்று ஞாபகமில்லை. ஆனால் படங்கள் பார்க்கும் சுவாரஸ்யம் குறையவில்லை. 

பின்னாளில் இந்தப் படங்களை நம் வீட்டுக்குள் அமர்ந்தே பார்க்கப்போகிறோம் என்று யோசித்திருக்கவில்லை!  பாடல்களை வீட்டிலிருந்தே நம் கையால் இயக்கியே, நம் விருப்பத்தில் கேட்போம் என்றும் எண்ணியதில்லை!

                                    

ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களிடம் 25 பைசா வசூலித்துக்கொண்டு டான்போஸ்கோ ஹாலில் நடுவில் இருந்த தடுப்புகளை எல்லாம் எடுத்து விட்டு தெய்வமகன் படம் போட்டார்கள்.  அப்புறம் கொஞ்சநாள் கழித்து லாரல் ஹார்டி படங்களும், அடுத்து கொஞ்சநாள் கழித்து சார்லி சாப்ளின் படங்களும் போட்டார்கள்.  அப்புறம் அப்புறம் ஒன்றும் போடாமல் நிறுத்தி விட்டார்கள்!
         
                      
இங்கு லாரல் ஹார்டி படங்கள் பார்த்து, அவர்களைப் பிடித்துப்போய், பக்கத்தில் அப்போதுதான் திறந்திருந்த அருள் தியேட்டரில் சனிக்கிழமைகளில் காலைக் காட்சிகள் பார்த்ததும், சில நாட்களில் அதிரடியாகத் தியேட்டருக்குள் நுழையும் ட்ரில் மாஸ்டர்களால் காதுகள் திருகப் பட்டு மறுபடி பள்ளிக்கு அழைத்து வரப்பட்டதும் உண்டு! 
                                                    
                                                        
சனிக்கிழமையில் என்ன விசேஷம்?  1. எங்களுக்குப் பள்ளியில் யூனிஃபார்ம் கிடையாது. கலர் ட்ரெஸ்!   2. அரை நாள்.  3. சனி, ஞாயிறில்தான் காலைக் காட்சியில் இது மாதிரித் திரைப்படங்கள் போடுவார்கள்!

டிரைவ் இன் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவத்தை எனக்கு முதன்முதலில் வழங்கியது தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு! மாதத்துக்கு ஒரு படம் குடியிருப்பு வளாக மைதானத்தில் திரையிடுவார்கள். 
                                                    
               
ஒரு 35 எம் எம் ( இல்லை 16 எம் எம்மோ?)  ப்ரொஜக்டர் வாங்கி வைத்திருந்தார்கள். அசோசியேஷனில் பேசி முடிவு செய்து,  படச்சுருள் வாங்கி வருவார்கள். ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலையில் படம் திரையிடப்படும். 

ஒவ்வொரு வாரமும் புதன் முதலே மைதானத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை ஆவலுடன் தினமும் கவனித்துக் கொண்டிருப்போம்.  இந்த மாதம் என்ன திரைப்படம் போடப்போகிறார்கள், எப்போது அறிவிப்பு வரும் என்று!

சில மாதங்களில் இரண்டு படங்கள் போட்டும்  அசத்துவார்கள்!

மாலை ஆறு மணிக்கு மேல் அந்த மைதானத்தில் ஜமா சேர ஆரம்பிக்கும். நாற்காலியில் அமரும் பார்ட்டிகள் பின் வரிசையில் நாற்காலிகள் போட்டு ரிசர்வ் செய்து விடுவார்கள். ஆறரை மணிக்குமேல் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஆஜராகி விடுவார்கள்.
                                                            
                                            
முதலில் எல்லாம் நான் முன்னால் தரை டிக்கெட்டில் எல்லா நண்பர்களுடனும் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் சில காரணங்களுக்காக வேண்டி சில நெருங்கிய நண்பர்களுடன் நாற்காலி போட்டு இடம் பிடித்து அங்கு அமர்ந்து படம் பார்த்தேன். அப்புறம் மறுபடி தரை டிக்கெட்டுக்குச் சென்று விட்டேன்!

இரவு நேரத்தில் குடியிருப்பு மக்களுடன் கூட்டமாக அமர்ந்தும், நின்றும் படம் பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதது.  இடையில் இடையில் படத்தை நிறுத்தி ரீல் மாற்றுவார்கள்.  முதலில் எல்லாம் இதற்கெனவே அந்தப் படக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் வருவார்.  அப்புறம் குடியிருப்பிலேயே குடியிருந்த ஒரு வெடர்னரி டாக்டர் இருந்தார். அவர் வீட்டில்தான் ப்ரொஜக்டர் வைத்திருந்தார். அவர்தான் படத்தை ஓட்டுவார். சளசளவெனப் பேசிக் கொண்டிருப்போம்.  படம் ஆரம்பித்ததும் அதில் ஆழ்ந்து விடுவோம்!  நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்து திறந்தவெளித் திரையரங்கில் படம் பார்த்த அந்த அனுபவம் இன்னமும் மறக்க முடியாதது.

நிறைய வீடுகளிலிருந்து குடும்பத்துடன் படம் பார்க்க வருவார்கள்.  எங்கள் வீட்டிலிருந்து அப்பா அம்மா படம் பார்க்க வந்ததே இல்லை.

 
         

முருகன்  காட்டிய வழி, வரப்ரசாதம், திக்கற்ற பார்வதி போன்ற எத்தனையோ படங்கள் அங்கு பார்த்ததுதான்.  இவற்றை தியேட்டரில் சென்று பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். சர்வர் சுந்தரம் கூட இங்கு பார்த்ததுதான்.  எவ்வளவு ஒடிசல் படம் போட்டாலும் கடமையாய் உட்கார்ந்து பார்த்து விடுவோம்!!
                                                       
                    

பின்னாட்களில் மதுரையிலும் இந்த வழக்கம் தொடர்ந்தது என்றாலும் ஏனோ மதுரையில் பெரிய நண்பர்கள் வட்டம் இல்லை. அதனாலோ என்னவோ கொஞ்சம் சுவை குன்றி இருந்தது.  

ரிசர்வ் லைன் பெரிய மைதானத்தில் மணலில் அமர்ந்து பெரிய திரையில் படங்கள் பார்த்த அனுபவம் கூடுதல் சுவாரஸ்யம்.  இங்கு இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் வார இறுதியில், இரவு 9 மணிக்குமேல்தான் படம் போட ஆரம்பிப்பார்கள்.  படம் முடிய இரவு ஒரு மணி ஆகி விடும்.  வீட்டில் இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு
சைக்கிளுடன் ஆஜராகி விடுவேன்.  சைக்கிளைப் படுக்க வைத்து விட்டு மணலில் படுத்து படம் பார்த்த அனுபவங்கள்.. 




இன்னமும் குளிராக மனதில் நிற்கின்றது.









பின்குறிப்பு :  நேற்றுதான் டாக்டர் பழனி. கந்தசாமி ஸார் 'வாழ்க்கைக்குத் தேவையான பதிவுகளைப் பிரசுரிக்கிறார்' என்று வலைச்சரத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இது அதில் ஒன்றா  என்று கேட்க வேண்டாம்!