புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.6.16

நான் ஏன் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவில்லை.





முன்குறிப்பு  :  "தியேட்டர் நினைவுகள்" தொடர் அடுத்த வாரம் வெளியாகும்!



Image result for புத்தகக் கண்காட்சி

     ஜனவரியின் குளிர்ச்சியில் வைக்காமல் ஜூனின் வெப்பத்தில் வைத்ததாலா?  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், சென்னை வெள்ளம் புரட்டிப் போட்டது!  அப்போதே வைத்திருந்தால் ,  இப்போது வரும் கூட்டம் கூட வந்திருக்காது என்று தோன்றுகிறது!   


பொதுவாக, ஜனவரியில் என்னும்போது வருடத்தின் ஆரம்ப மாத உற்சாகம் எல்லோரிடமும் இருக்கும்.  புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்... இந்த வருடமாவது இதை வாங்க வேண்டும், இதைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.  அந்த சமயத்தில் புத்தகத் திருவிழா வைத்தால் அந்த மயக்கத்திலேயே சில புத்தகங்கள் வாங்கி விடலாம்.  இன்றைய தினத்தின் வெப்பம் ஆயாசம் தருவதாக இருக்கிறது.  அதுமட்டும்தான் காரணமா?


     இந்த முறை என் இருப்பிடத்திலிருந்து தூரம் அதிகம்.  எளிதாக அப்ரோச் செய்யும் தூரம் இல்லை.  அதுவும் ஒரு காரணம்.


     இந்த வருடம் 'புத்தகம் வாங்கா' விரதம் இருக்கத் தீர்மானம்.  புத்தகம் வாங்கா விட்டாலும் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கண்காட்சியில் சுற்றி வரலாம் என்பது,  சிகரெட்டை விட்டவன் இன்று ஒரு நாள் மட்டும் ஒரே ஒரு தம் இழுத்துப் பார்க்கலாம் என்றோ, சும்மா கண்ணால் மட்டும் பார்ப்போம் என்றோ நினைப்பதற்குச் சமம்.  


அரித்தவன் கை சொரியாமல் இருக்குமா?  இது ஒரு காரணம்.  அங்கு சென்றால் நண்பர்களைப் பார்க்கலாம்தான்.  அந்தக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு போகவேண்டுமா என்று செல்லவில்லை.

Image result for புத்தகக் கண்காட்சி



     இதுவரை வாங்கியுள்ள புத்தகங்களில் ஒரு அளவாவது படிக்காமல் புதிய புத்தகங்கள் வாங்குவதில்லை என்கிற தீர்மானம்!  எங்கே போய்விடப் போகிறோம், வாங்கி வைத்து விடுவோம்...    அப்புறம் படிக்கலாம் என்கிற மன நிலையிலிருந்து வெளி வந்திருப்பதாகவே நினைக்கிறேன்.  பிடிக்கும் பிடிக்கும் என்று பிரியாணியை ஐந்தாறு ப்ளேட் வாங்கிச் சாப்பிட முடியுமா சொல்லுங்கள்.. வைத்திருந்தாலும்தான் அப்புறம் சாப்பிடத் தோன்றுமா?   கொஞ்சமாக இருந்தால் சாப்பிடத் தோன்றும் ஆர்வம் மொத்தமாகப் பார்த்தால் வடிந்து விடும்தானே? 
 

       நண்பர் ஒருவர் வீட்டில் சமீபத்தில் ஒரு 'குழுக் கூடுதல் விழா'வில் சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறும்போது ஒரு பெரியவர் சொன்னார்..  "சாம்பாரை சின்ன பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வந்து பரிமாறுங்கள்...  இவ்வளவு பெரிய பாத்திரத்தில் பார்த்தால் பிரமிப்பு வருகிறது.  சாப்பிடத் தோன்றவில்லை"   அது போலத்தானே புத்தகங்களும்?  


     எப்படி?  லாஜிக்கிலேயே அடிக்கிறேனா?



     ஜீவி ஸார் தனது பதிவில் எங்கள் ப்ளாக் புத்தகக் கண்காட்சிப் பதிவைப் படிக்கக் காத்திருப்பதாய்ச் சொன்னார்.  அவருக்கு இந்தப் பதிவு (இதை அவர் படித்தால்) ஏமாற்றம் அளிக்கலாம்.


   தேனம்மை அலைபேசி அவர் புத்தகத்தின் வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார்.  கண்காட்சிக்குச் செல்வீர்களா, வெளியீட்டு விழாவுக்கு வருவீர்களா என்று கேட்டார்.  

     விகடனில் எழுதி இருந்தார்கள்...  புத்தக ஸ்டால்களை விட, தீனிக் கடைகளில்தான் கூட்டம் இருந்தது என்று... அதற்கு ஃபேஸ்புக்கில் என் பதிவு..


     இந்தமுறை நிறைய ஸ்டால்களில் 10% க்கும் அதிகமாக தள்ளுபடி தருகிறார்கள் என்று தமிழ் இந்துவில் போட்டிருந்தார்கள்.  ஏற்கெனவே சாஹித்ய அகாடமி ஸ்டால்களில் நடப்பதுதான் அது.  சில மத சம்பந்தப்பட்ட ஸ்டால்களிலும்.  மேலும் சென்னை வெள்ளத்தில் சிக்கிச் சீரழிந்ததில் நஷ்டப் பட்டுப் போன பதிப்பாளர்கள், அதில் ஓரளவு தேறக்கூடிய புத்தகங்களைத் தள்ளுபடியில் தருகிறார்கள் என்றும் சொன்னார்கள்.  




     அப்பா காலமாவதற்கு முன்னரே, சென்ற வருடத்தின் மத்தியில் மதுரையிலிருந்த அப்பாவின் மற்றும் எண்களின் மொத்த கலெக்ஷன் பைண்டிங் புத்தகங்களும் சென்னைக்கு என் வீட்டுக்கு வந்து விட்டன.  அவற்றை வைக்கவே இடமில்லாமல் பரணில் தூக்கிப் போட்டிருக்கிறேன்.  அந்த வேதனையே உறுத்துகிறது.  இன்னும் இன்னும் என்னென்ன வாங்க?


     வாங்குவதற்குப் புத்தகங்களே இல்லையா?  இருக்கிறது.  மலையாள மூலம் என்று நினைவு, ஒரு மொழிபெயர்ப்புக் கதை.  டாவின்ஸி கோட் மாதிரியான புத்தகம் என்று விமர்சனம் படித்து, தலைப்பு மறந்து விடக் கூடாது என்று அந்தப் புத்தகத்தின் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.  தொலைந்து விட்டது.  காலச்சக்கரம் நரசிம்மாவின் கர்ண பரம்பரை.  முகில் எழுதிய ஒரு புத்தகம் (தலைப்பு மறந்து விட்டது.  ஆனால் விலை மறக்கவில்லை,,999 ரூபாய்) இன்னும் சில புத்தகங்கள்..  கோவை ஆவியிடம் பதிப்பகங்களின் விலைப் பட்டியல் கேட்டிருக்கிறேன்.  அவற்றைப் பார்த்தால் கண்காட்சியே போன நிறைவு ஏற்படும்.  ஏதாவது புத்தகம் அவசியம் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் அதே பத்து சதவிகிதக் கழிவில் கதவுப் பிரசவம் செய்யக் கதிரேசன் இருக்கிறார்!




     அதுவரை...?

  
     வாங்கிப் படிக்கப் படாமல் காத்திருக்கும் புத்தகங்கள் ஏக்கத்துடன் என் கைகள் பட்டு விழியின் வழியே இதயம் நுழையக் காத்திருக்கின்றன.  படிக்கப் படாததால் வெறுத்துப் போன எழுத்துகள் புத்தகங்கள் விட்டுப் பறந்து போய்விடக் கூடாதல்லவா...  


 


                                                           [படம் தி இந்து (தமிழ்) லேருந்து திருடியது!]


 
     இந்தப் பதிவு போகாமல் விட்டு விட்டேனோ என்கிற புலம்பல் மாதிரியும் ஒலிக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கே வருகிறது.

14.1.15

புத்தகங்கள் - . தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.


வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு சில கேள்விகள்:  தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.
 
         
                                                           
 
1)  நீங்கள் வாங்க விரும்புவது கதைகள் / கட்டுரைகள் / வரலாறு / அறிவியல் எது அதிகம்? அல்லது நீங்கள் அதிகம் நாடும் துறை எது?
 
2)  கதைகள் என்றால் யார் படைப்பு?
 
3)  கட்டுரைகள் என்றால் என்ன வகைக் கட்டுரைகள்? யார் எழுதியவைகளை வாங்க விருப்பம்?
 
4)  வரலாறு என்றால் கட்டுரையா, கதைகளா?  எந்த எழுத்தாளர்?
 
5)  இன்னமும் பழைய, பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள்தான் அதிகம் வாங்குகிறீர்களா?
 
6)  தற்போதைய எழுத்தாளர்களில் யாருக்காவது தனித்துவமான நடை என்று இருப்பதாக நினைக்கிறீர்களா?


                                                         

 
7)  எதை வைத்து நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களைத் தெரிவு செய்கிறீர்கள்? விமர்சனங்களா? நண்பர்களின் படைப்பு என்பதாலா? பிரபலமானவர்கள் எழுதியது என்பதாலா?
 
8)  நீண்ட நாட்களாய்த் தேடியும் கிடைக்காத புத்தகம் என்று எதாவது உண்டா?  இதை வாங்கக் கூடாது என்று எந்தப் புத்தகம் பற்றியாவது எண்ணம் உண்டா?
 
9)  மாதொரு பாகன் படைப்புக்கான எதிர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெருமாள் முருகனின் எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

10)  புதிய எழுத்தாளர்களில் யார் யாருடைய படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள்? யார் நன்றாக எழுதுகிறார் என்று நினைக்கிறீர்கள்?
 
11)  புத்தகத்தின் விலை உங்களைப் பாதிக்கும் தருணம் எது?  விலை பற்றிக் கவலைப் படாமல் படைப்புக்காக நீங்கள் வாங்கிய புத்தகம்?
 
12)  வாங்கியபின், அல்லது படித்தபின் வாங்கியிருக்க வேண்டாம் என்று நினைக்க வைத்த புத்தகம்?
13)  புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது 
 
அ. உண்மையான ஆர்வம் 
ஆ. எல்லோரும் வாங்கும் ஒரு பரபரப்பான ஆர்வத்தில் 
இ. சும்மா எல்லோரும் சொல்கிறார்களே என்று!
 
14)  வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையும் படித்து முடித்திருக்க முடியாதுதான். ஆனால் வாங்கியது 100 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால் எத்தனை சதவிகிதம் இதுவரை படித்து முடித்திருக்கிறீர்கள்?


                                                                               

15)  எல்லாப் புத்தகங்களுமே படித்து முடித்தபின் அந்தப் புத்தகங்களை வைத்துப் பாதுகாப்போம் என்று தோன்ற வைக்கிறதா?  இல்லை, நண்பர்களுக்குக் கொடுத்து விடலாம், போற்றிப் பாதுகாத்து வைக்க இதில் ஒன்றுமில்லை என்று ஏதாவது புத்தகங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
 

                                                                                 
 
16)  புத்தகக் கண்காட்சியில் நீங்கள் காணும் முக்கியக் குறை(கள்) என்ன?
 
17) புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருந்து புத்தகம் வாங்குகிறீர்களா?  அல்லது புத்தகம் தேவைப்படும்போது உடனே பதிப்பகத்துக்கோ, கடைகளுக்கோ, அல்லது NHM வாயிலாகவோ உடனுக்குடன் வாங்கி விடுகிறீர்களா?
 
18)  பு. க. காட்சிக்குச் செல்வதால் நிர்ப்பந்தத்துக்குப் புத்தகம் வாங்குகிறீர்களா?

19)  சாகித்ய அகாடமி போன்ற விருது வாங்கிய புத்தகங்களை வாங்குகிறீர்களா?

23.1.13

புத்தகச் சந்தை 2



இந்தமுறை காம்பவுண்டு உள்ளே நுழைந்து ஸ்டால்களைப் பார்க்க நடக்க வேண்டிய தூரம் பெரிய மைனஸ்.
                               
புத்தகச் சந்தையில் இந்த முறை உள்ளே நுழையும்போதே விகடன்காரர்கள் எந்த பதிப்பகம், எத்தனாம் நம்பர் ஸ்டால் என்று புக்லெட் போட்டிருந்ததைக் கையில் கொடுத்தார்கள். வசதிதான்.... ஆனாலும் அதைப் புரட்டிப் பார்க்கவில்லை. வரிசையாக பார்த்துக் கொண்டே முதலிரண்டு ரவுண்டு!

முத்து காமிக்ஸ் அரங்கில் நான் தேடிய தலைப்புக்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததை வாங்கிச் சிறுவனானேன். 35 காசுக்கும் 50 பைசாவுக்கும் வாங்கிய புத்தகங்கள் 100 ரூபாய்.  நான்கைந்து புத்தகங்களை ஒரு கவரில் போட்டு 210 ரூபாய், 400 ரூபாய் என்று போட்டிருந்தார்கள். அதில் நான் கேட்கும் புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டபோது 'அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும்' என்றார் அரங்க உரிமையாளர். தனியாகத் தர மாட்டாராம். தனியாக இருந்த புத்தகம் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது. அதுவும் லயன் காமிக்ஸ்!



                                                      

 

அவர்கள் விற்க விரும்பும் புத்தகங்கள் உங்கள் கண்ணில்படும் வகையில் முன்னால் வைத்திருந்தார்கள். நீங்கள் தேடும் புத்தகம் பின்னா....ல் எங்கோ, அல்லது அடி வரிசையில் இருக்கும். தே....ட வேண்டும்! அரங்க உரிமையாளரிடம் கேட்டால் சில சமயம் கிடைக்கலாம் - பதில்.

ராஜ் டிவிக்காரர்கள் ஸ்டால் இருந்தது. இந்த வருடம்தான் முதல் முறையா என்று கேட்டதற்கு ராஜ் சகோதரர்களில் ஒருவர் 'இரண்டாம் முறை, சென்ற வருடமே போட்டிருந்தோம்' என்றார்.  நான் தேடிய, கேட்ட சிடிக்கள் இல்லையென்றார்.
    
பதினோரு ரூபாய்க்கும், பத்தொன்பது ரூபாய்க்கும் புத்தகங்கள் வாங்க முடிந்த இடம் மதுரை மீனாக்ஷி புத்தக நிலையம். குறிப்பாக சுஜாதா புத்தகங்கள். என்ன, அடுத்த புத்தகச் சந்தைக்குள் அதிலிருக்கும் எழுத்துகள் மறைந்து விடுமோ என்று கொஞ்சம் சந்தேகம் வரும்!


அருகில் புத்தகம் புரட்டியவர்கள் எல்லோரும் முதலில் பார்ப்பது விலையைத்தான். அவர்கள் வாங்க என்று திட்டமிட்டு வரும் புத்தகங்கள் தவிர மற்றவற்றை இப்படித்தான் பார்க்கிறார்கள்.


கேப்டன் டிவியில் ஒரு பெண் புத்தகக் கண்காட்சி பற்றிப் பேசினார். "புத்தகங்கல் வாங்கிக் கொல்ல எல்லோருக்கும் ஆர்வம்தான் ஆன்கல் பென்கல் எல்லோருமே நிறையப் பேர் வந்தார்கல். வனிக எழுத்தாளர் சுஜாதா புத்தகங்கலும் நிறைய விற்றன.....கன்னதாசனின் வனவாசம் நிறைய போகிறது.."  


கடவுலே! இவர்கலைக் மண்ணித்துக் காப்பார்று! 

அவர் இப்போதே கணக்குச் சொல்லி விட்டார். பொன்னியின் செல்வன்தான் அதிக விற்பனை. அப்புறம் காந்தியின் சுயசரிதை. தற்கால இலக்கிய ஜாம்பவான்கள் ஜெயமோகனும், எஸ்ராவும்....

மூன்றாம் சுழி அப்பாதுரையை புத்தகக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது. அவர் என்னென்ன புத்தகங்கள் தெரிவு செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

               
ரிசர்வ் பேங்க் வைத்திருந்த கவுண்டரில் அவ்வப்போது பதிப்பாளர்கள் வரிசையில் நின்று சில்லறை மாற்றிக் கொண்டார்கள். சத்யம் டிவி, புதிய தலைமுறை டிவிக்கள் ஸ்டால் அமைத்திருந்தார்கள். அகில இந்திய வானொலிக் காரர்கள் வழக்கம் போல பழைய கர்னாடக சங்கீதப் பாடல்களை 4 பாடல்கள், 5 பாடல்கள் முன்னூறு, முநூற்றைம்பது என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.
           
"ஏதாவது முன்னால தமிழ் 'ஆத்தர்'ஸ் படிச்ச ஞாபகம் இருக்கா... பெயர் தெரிஞ்சாக் கூட விசாரிச்சு நாமளும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணலாம்.." ஒரு இளம் கணவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இனிமேல் பெயர் ஞாபகம் வந்து....
             
"கம்பராமாயணம் விளக்க உரை வாங்கணும்... எளிமையாப் புரிகிற மாதிரி, அதே சமயம் விலை குறைச்சலா வாங்கணும்னா எது வாங்கலாம்..." ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்.
           
" இதை நான் எப்படிச் சொல்ல முடியும்?  எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம். எடுத்துப் புரட்டிப் படித்து முடிவு செய்யுங்கள்" என்றேன்.


                                          

மூன்று பாகம் நான்கு பாகம் என்று இருக்கும் புத்தகங்களை சென்ற வருடம் வரை ஒவ்வொரு பாகமாக வாங்க முடிந்தது. ஏற்கெனவே இரண்டு பாகம் வாங்கி விட்ட ஒரு புத்தகத்தை மூன்றாம் பாகம் மட்டும் கொடுங்கள் என்று கேட்டபோது 'செட்'டாகத்தான் தருவோம்' என்று மறுத்து விட்டார். 'சரி, போ' என்று விட்டு விட்டோம்.

 நிறைய ஸ்டால்களை மக்கள் பக்கவாட்டில் முறைத்தபடியே தாண்டிச் சென்றார்கள். கிழக்குப் பதிப்பகம், அல்லையன்ஸ், விகடன், டிஸ்கவரி, என்று இதைப் படிக்கும் நீங்களும் எதிர்பார்க்கும் பெயருள்ள ஸ்டால்களில்தான் கூட்டம். திருக்குடந்தைப் பதிப்பகம் (முக்தா ஸ்ரீனிவாசன்) போன்ற இன்னும் சில ஸ்டால்களில் மிகக் குறைந்த புத்தகங்களுடன் இருந்ததை என்ன பார்ப்பது என்று மக்கள் தாண்டிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

                                                

 

குறைந்த புத்தகங்கள் என்றில்லை, நிறையப் புத்தகங்கள் இருந்த பல ஸ்டால்களின் கதையும் அதே, அதே!

உள்ளே நுழையும்போது எதிரில் வந்து கொண்டிருந்த சிலரின் கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் பார்த்த போது 'எப்படி இவர்களால் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது?' என்று பொறாமையாக இருந்தது.

தினமணியில் ஒரே பெயரில் ஒரு புத்தகத்தை வெவ்வேறு பதிப்பகங்களில் போட்டு விற்பனை செய்வது சரியா என்று கேட்டிருந்தார் எடிட்டர்.
  புத்தகங்களின் விலை....  விடுங்கள். வாங்கிவிட்டு அப்புறம் குறை சொல்லக் கூடாது.  :)))

                                            
 
வாசலில் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளைப் பார்க்க முடியாமல் போனது வருத்தம். அவர்கள் மூன்றாவது நாள் முதல்தான் கண்களில் பட்டார்கள். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் சரியில்லை, இந்த வருடம் நஷ்டம்தான் என்று சொன்னதாகக் கல்கியில் போட்டிருந்தார்கள்.

இந்தியாவில், ஏன் அயல்நாடுகளிலிருந்தும் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் தொலைபேசியிலேயே ஆர்டர் கொடுத்து வீட்டு வாசலில் பெற்றுக் கொள்ள ஒரு நம்பர் கொடுத்திருக்கிறார்கள். டயல் ஃபார் புக்ஸ் : 9445901234, 94459 79797 என்ற எண்களில் நம் முகவரி, நமக்குத் தேவையான புத்தகங்களை  நம் குரலிலேயே பதிவு செய்து விடலாம் என்ற வசதி வந்துள்ளது. பெயர் மட்டும் தெரிந்தால் கூட விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமாம்.

புத்தகம் வாங்க வந்தவர்களை விட அரட்டை அடிக்க வந்தவர்கள் அதிகம் என்று ஏதோ ஒரு தொலைக் காட்சியில் சொன்னார்கள்.


                                                

 

ஆக, நிறைவுற்றது இந்த வருடப் புத்தகத் திருவிழா!