Book fair chennai 2010 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Book fair chennai 2010 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.1.10

புத்தகத் திருவிழா..


கடந்த சனிக்கிழமை புத்தகத் திருவிழா சென்று வந்தேன். ஊரே அங்கு மொய்க்கும்போது நான் மட்டும் போகாமலிருந்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடுவார்களோ என்ற பயமும் காரணம்!





   போய் வந்தது சொந்த திருப்திக்கு. ஆனாலும் எல்லோரும் இதைப் பற்றி பதிவிடும்போது நாம் மட்டும் விடுவது சரியல்ல என்று தோன்றியதாலும், பதிவுக்கு ஒரு நல்ல மேட்டர் கிடைக்கும்போது நழுவ விடாதே பாலகுமாரா என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஒலித்ததாலும் பதிவிட முடிவெடுத்தேன்.
   ஏற்கெனவே படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது மேலும் மேலும் புத்தகங்கள் வாங்குவது தம்பட்டம் அடிக்கவே என்று கிருஷ் சார் சொல்லி உள்ளதால் நான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிடப் போவதில்லை.


மறுநாள் கடைசி நாள் என்ற நிலையில் இனியும் ஒத்திப் போட வழி இல்லாத நிலையில் சனிக்கிழமை கிளம்பி மதியம் பனிரண்டரை முதல் இரவு ஏழரை வரை செலவழித்து சுற்றினேன்.உடன் பெரிய ஆசிரியரும் வந்திருந்தார்.


உள்ளே கிடைத்த டீயும் காபியும் மூன்றாம் தரத்தில் இருந்தாலும் விலையில் முதலிடம். என்ன செய்வது புத்தகத்துக்கு முதலிடம் கொடுத்தாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே... பசிக்கிறது என்றால் வெளியே சென்றுதான் சாப்பிட வேண்டும்.
   வெளியே இருந்த கடை 'ஸ்ரீ கிருஷ்ணா' காரர்களுடையது. கால் பாகம் சுற்றிய பிறகு சாப்பிட வந்தால் மெனு பார்த்து வரிசையில் நின்று ஞாபகம் வைத்துக் கொண்டு நாம் விரும்பியதைக் கேட்டால், அங்கு இருந்த மாமா ஜெருகண்டி..ஜெருகண்டி பாணியில் நாம் கேட்பது எல்லாற்றையும் மறுத்து பதிலுக்கு வேறு ஒன்று சொல்லி எதை எடுத்தாலும் 35 ரூபாய் விலையில் பெயர் எழுதா சீட்டு கிழித்துக் கையில் கொடுத்து துரத்தி விட, அதை வாங்கும் இடத்தில் நாம் சொல்வது ஒன்று அவர்கள் போட்டுக் கொண்டிருப்பது ஒன்று என்று குழப்பம். அடை அவியல், ஆனியன் ஊத்தப்பம், தோசை என்று எதை எடுத்தாலும் முப்பத்தைந்து ரூபாய்.
   ஐந்திணைப் பதிப்பகத்தைப் பார்த்ததும் கிருஷ் சார் 'சு(வாசிக்கப்)போறேங்க' வலைப் பக்கத்தில் மகனுடன் நடந்த உரையாடல் பற்றி சொன்னது நினைவு வந்தது. ஐந்திணையையே விலைக்கு வாங்க வேண்டும் போல இருந்தது அங்கு இருந்த புத்தக வரிசை...என்ன செய்வது...எனக்கு சக்தி இல்லையே...சக்தி இல்லையே...!


உயிர்மைப் பதிப்பகத்தில் சாரு நிவேதிதா நின்று கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். வெண்ணிற இரவுகள் கார்த்தி சொன்ன சாரு புத்தகங்கள் பெயர் மறந்து போனாலும் வேறு புத்தகம் வாங்கி கடமையாய் அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டேன். (எல்லோரிடமும் கேட்கும் உங்கள் பெயர் என கேட்ட உடன் சொன்னேன்..எழுதிக் கையெழுத்திட்டார். என்ன செய்றீங்க என்று சம்ப்ரதாயமாய்க் கேட்டதும் நான்...எங்கள் ப்ளாக் என்று தொடங்கினேன்...தலையாட்டிக் கொண்டேகேட்டு அனுப்பினார்!) 




மனுஷ்ய புத்திரனும் வந்திருந்தார். போன வருடம் வாங்கிய உயிர்மைப் பதிப்பக 'சுஜாதா கேள்வி பதில்கள்' புத்தகத்தில் கடைசி சில பக்கங்கள் இல்லாமலிருந்ததை கொண்டு வராமல் போய் விட்டோமே என்று வருந்தினேன்.
இட்லிவடையில் படித்த ரகோத்தமன் புத்தகம் கடமையாய் வாங்கிக் கொண்டேன். பா ரா புத்தகம் எங்காவது கண்ணில் படுகிறதா என்று பார்த்தேன். பதிப்பகம் பார்க்காமல் வந்து விட்டோமே என்று வருந்தினேன்...கிருஷ் சார் விமர்சனம் செய்திருந்த எம்டன் புத்தகம் (திவாகர் எழுதியது) பார்த்தேன். விலை 200 ரூபாய் என்று போட்டிருந்தது. புரட்டி விட்டு வந்தேன்.
  லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பதை போட்டிருந்தார்கள்..ஆர்வமாய் தேடிச் சென்றும் கண்ணில் படவில்லை. 5 ஆம் எண் ஸ்டால் என்று போட்டிருந்ததாய் ஞ்பாபகம். அங்கு ஆல்பா காரர்கள் பாட சம்பந்தப் பட்ட புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்! ஏமாற்றம்!
   தணல் பதிப்பகம் அருகே ஒரு உற்சாகக் கூட்டம் கண்டதும் சந்தேகத்துடன் நின்று பார்த்தேன் ப்ளாகர்ஸ் போலத் தெரிகிறதே.... ஒன்றிரண்டு தெரிந்த முகம் போலத் தோன்றினாலும் நிச்சயமாய்த் தெரியாததால் சற்று நின்று விட்டு கேட்கலாம் என்று அருகே சென்றேன்...என் நண்பன் என்னை நிறுத்தினான். 'அவர்கள் முகத்தில் பார் என்ன ஒளி? உன்னைப் பார்த்தால் நம்புவார்களா? வந்து விடு..நானும் கூட இருக்கும்போது ரிஸ்க் எடுக்காதே' என்றான்... தயங்கி உண்மைதான் என்று தோன்றியதால் செல்லில் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று பார்த்தேன். உடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தார். எனக்குத் தெரிந்த பெண் பதிவர் பெயரெல்லாம் நினைத்துப்பார்த்தேன்.ம்..ஹூம்...ஒரு பெண் நின்ற காரணத்தினாலேயே போட்டோ எடுப்பதையும் எண் நண்பன் தடுத்து விட்டான். அங்கு நின்று உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தது பதிவர்கள்தான் என்று நம்புகிறேன்...
   மீனாக்ஷி பதிப்பகத்தார் மதுரை பெயரையும் வேறு சில விவரம் சொன்னதும் அடையாளம் தெரிந்துகொண்டு சகாயம் செய்தது சந்தோஷம்.
    பொதுவாகவே பதிப்பகத்தார் நன்றாக உரையாடினாலும் திராவிடர் கழக ஸ்டாலில் அவர்கள் நூல்களை அறிமுகப் படுத்தியது நன்றாக இருந்தது. ஹிக்கின் பாதம்ஸ் வினோத், அவர்களிடம் இல்லாத அல்லது தீர்ந்து விட்ட நூல்களைப் பற்றி கேட்டால் கூட தலைப்பை சரியாய் எடுத்துச் சொல்லி பதிப்பகம் சொல்லி வழி காட்டியது நல்ல அனுபவம். நக்கீரன் காரர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் முன்னால் விசாரணைக் கௌண்டருக்கு போகச் சொன்னதோடு, அந்தப் புத்தகம் உங்களுக்கு கிடைக்காதே, தடை செய்து விட்டார்களே, கேள்விப் பட்டதே இல்லை போன்ற பதில்கள் சொன்னார்கள். வானதியில் ஒரு வித முறைப்போடு பதில் சொன்னார்கள்...பில் போட்டுக் கொண்டிருந்த பெரியவர் தவிர..
இந்தப் படத்துக்கான கமெண்ட் .... !!


வயசான காலம்....புத்தக ஆசை...இவ்வளவுதான்...ஆனால் தூக்க முடியவில்லையே...!





ஒரு ஸ்டால்....திருமகள் புத்தக நிலையம் என்று ஞாபகம்...ஒரு பெண்ணும் புத்தகக் கடைக்காரரும்...பெண் கையில் "மணிபல்லவம் நா பா" என்றிருக்க, பெண் கடைக்காரரிடம், "ஏங்க ! இது யார் எழுதியது?" என்றார். அவர், "போட்டிருக்கு பாருங்கம்மா...நா பா...." என்றார். "நா பா ன்னா...?" பெண்.  அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?"  கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.
        இன்னொரு ஸ்டால். வாசகர் கையில் புதுமைப்பித்தன் சிறுகதைகள். கடைக்காரரிடம் "ஏங்க...இதுல புதுமைப் பித்தன் பாடல்களும் சேர்ந்திருக்கா..." என்றார். "இல்லை சார்" என்றார் கடைக்காரர். அருகிலிருந்த ஒருவர், " சார் பாட்டு எழுதினது புதுமைப்பித்தன் இல்லை சார், புலமைப் பித்தன்..அவர் வேற.." என்று கூறி தன் புலமையைக் காட்டினார்.  இருவரும் கடைக்காரரை ஒரு மாதிரி பார்த்து விட்டு நகர்ந்து சென்றனர்.