16.1.13

பெயரில் என்ன இருக்கிறது?


இதோ கடந்து விட்டது இன்னுமொரு திருநாள். பொங்கலானால் என்ன, தீபாவளியானால் என்ன? பெயரில் என்ன இருக்கிறது? 

                
தீபாவளி நினைவுகளில் பழைய நினைவுகளின் சுகம் இப்போது இல்லை. அதைச் சொன்னால் இப்போது இருப்பவர்களுக்குப் புரியவும் இல்லை. முன் காலத்தில் கூடி விளையாடவும், வெடிக்கவும் இடம் இருந்தது. அதைவிட  வேறு கவனக் கலைப்புகள் இன்றி பண்டிகைகளை உணர்ந்து கொண்டாட  நேரம் இருந்தது! இந்தக் காலப் பிள்ளைகளுக்கு தீபாவளி என்பது நரகாசுரனோ, கௌரி நோன்போ, நண்பர்களுடன் விளையாட்டோ, வெடி வெடிப்போ இல்லை. ஒன்று, 25 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு வாங்கி முதல் நாள், முதல் ஷோ படங்கள். அல்லது இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறைப் படங்கள். இல்லாவிட்டால் விவேககஞ்சாசந்தானவடிவேலுக் காமெடிகள்... புத்தாடை அணியும் மகிழ்ச்சியோ, தீபாவளிப் பலகாரங்கள் மகிழ்ச்சியோ கூடக் கொண்டாடப் படுவதில்லை. விளையாட்டு மைதானங்களை விழுங்கிய கான்க்ரீட் கட்டடங்கள் மனங்களையும் இறுக்கி விட்டன.

ஆனால், இந்நாள் குழந்தைகள் பின்னாட்களில் பெரியவர்களானதும் அவர்கள் குழந்தைப் பருவம் மாதிரி இல்லை என்று அப்போது நிலை குறித்து வருத்தப் படுவார்களோ என்னமோ...!

பொங்கலுக்கும் இதே தொலைக்காட்சி, சினிமா தொந்தரவுகள் உண்டு. முகநூலில் இப்போது கொஞ்சம் பேர் பழைய பொங்கல் வாழ்த்துகள் போல படங்களை எடுத்துப் பகிர்கிறார்கள். பார்க்கும்போது பழைய நினைவு வருகிறது. 15 பைசா கார்டிலிருந்து, 1.50 பைசா, 2.50 பைசா என்று பைசாக் கணக்கில் ஏறிக் கொண்டே போகும் காஸ்ட்லி பொங்கல் வாழ்த்துகள். 

                
யாருக்கு வாழ்த்துகள் நிறைய வந்திருக்கிறது என்று நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்ன படம் என்று அறிவதில் ஆர்வம் இருக்கும். பண்டிகைக் குறித்த படங்கள் சாதாரணம். வெட்டி ஒட்டியது போலச் சிறப்புத் தோற்றத்திலும், கலரில், கார்டில், கவரில் ஜிகினா ஒட்டி, முன்பக்கம் ஒன்று பின்பக்கம் ஒன்று என விதவிதமாய் வாழ்த்துகள் வரும்....  

          
அப்புறம் நடிக, நடிகையர் படங்கள் விசேஷம். பொங்கல் வாழ்த்துகளில் அச்சிட்டிருக்கும் வாழ்த்துகளைக் காபி செய்து 10 பைசா, அப்புறம் 15 பைசா கார்டில் எழுதி அனுப்பும் 'ஏழை'ப் பொங்கல் வாழ்த்துகளும் உண்டு.  நான் தபால் கார்டில், என் கையால் படங்கள் வரைந்து, டிசைன் போட்டு அனுப்பியிருக்கிறேன்!! பொங்கலன்று தபால் நிலையம் விடுமுறை என்பதால் அதற்கு முந்தய வேலை நாட்களில் கிடைக்குமாறு  அனுப்புவது வழக்கம்.

          
தபால் அலுவலகம் அந்த ஒரு வாரம் அல்லகல்லோலப் படும். பாவம் தபால்காரர்கள். கட்டுக் கட்டாக வாழ்த்துக் கவர்கள், அட்டைகளைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அலைவார்கள். பொங்கல் காசும் அவர்களுக்குக் கிடைக்கும். இப்போது வெறிச்சிட்டு நிற்கின்றன தபால் நிலையங்கள்.

                             

காவிரியில் தண்ணீர் இல்லை. தண்ணீர் விட சக இந்தியர்களுக்கே மனதில் ஈரம் இல்லை. பொய்த்துக் கொண்டே வரும் பருவ மழைகள். காய்ந்து கிடக்கும் விளை நிலங்கள்.  தவித்து நிற்கும் விவசாயிகள். விளைச்சல் சரியில்லாத கரும்புகளுக்கு கொள்முதல் விலை சரியில்லாத சோகத்தில் கரும்பு சாகுபடிக்காரர்கள். 

                                                     
விலையில்லா அரிசியில் யாரும் பொங்கல் செய்தார்களா, தெரியாது. ஆனால் அரசாங்கம் தந்த இலவச வேட்டி சேலையை, 100 ரூபாயை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இலவசம் கொடுக்கும் / வாங்கும் வழக்கம் என்று நிற்குமோ!

         
தீபாவளி, பொங்கலானால் என்ன, குடியரசு தினம், சுதந்திர தினமானால் என்ன, அந்தந்த தின தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை.

பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பண்டிகை தினங்களும் ஒரே விதமாய்த்தான் இருக்கின்றன.

15.1.13

எண்ணை மறந்ததேன்? என் நிலை சொல்லி வா!

              
அலுவலகத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் பதினான்கு பேர்களிடமும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார், ஜகன். 

          
"நண்பர்களே! நம் தொழிலகம், ஐ எஸ் ஓ சான்றிதழ் பெறுவதற்கு, ஆடிட் நடத்த அடுத்த வாரம் நம் தொழிலக வளாகத்தில், ஆடிட்டர்கள் வரவிருக்கின்றார்கள். இந்தத் தொழிலகத்தின் ஐ எஸ் ஓ சான்றிதழ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில், நான் உங்கள் எல்லோருக்கும் நாம் ஆடிட்டின் பொழுது கடைபிடிக்க வேண்டிய சில .... "
               
அவர் பையில் இருந்த அலைபேசி மெளனமாக அதிர்ந்தது. ஏதோ குறுந்தகவல். சற்றுத் தயங்கியவர், தொடர்ந்தார். ".... சில யுக்திகளை உங்களுக்குச் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். முதலாவதாக, ஆடிட்டர்களுக்கு, அவர்கள் கேட்காமல், எந்த அதிகப்படி தகவல்களையும் ......" 
   
மீண்டும் சட்டைப்பை அலைபேசி மெளனமாக அதிர்ந்தது. பேச்சு தடைப்பட்டது. அலைபேசியைக் கையில் எடுத்து, யாரிடமிருந்து குறுந்தகவல் என்று நோட்டமிட்டவாறு, பேச்சைத் தொடர்ந்தார். ".... நாமாக அளிக்கக் கூடாது. சில இடங்களில் நாம் வேண்டுமென்றே சில மைனர் நான்-கன்ஃபார்மிடீஸ் - ஆடிட்டர்கள் கண்டுபிடிப்பதற்காக - அவர்களைத் திருப்திப்படுத்த, விட்டு வைத்திருக்கின்றோம். இது ஒரு மனோ தத்துவ யுக்தி. ..."     

            
குறுந்தகவல் வந்திருந்தது, அவருடைய மனைவியின் அலைபேசியிலிருந்து. "எக்ஸ்கியூஸ் மீ ஜென்டில்மென்..." என்றவாறு, குறுந்தகவல் என்ன என்று மேலோட்டமாகப் பார்த்தார். அடிக்கடி வருகின்ற குறுந்தகவல்தான்! 

                  
"அவசரம். என்னுடைய ஐ சி ஐ சி ஐ கார்டின் தற்போதைய கடவு எண் ( PIN) என்ன என்று எஸ் எம் எஸ் செய்யவும்." 
               
'மனைவியின் ஐ சி ஐ சி ஐ அட்டை கடவு எண் மனைவிக்கே தெரியாதா?' என்று கேட்கின்றீர்களா? 
                     
பாதுகாப்பு கருதி, ஜகன், அவர்களின் இருவருடைய கடன் அட்டை கடவு எண்ணையும் ஆன் லைனில் அடிக்கடி மாற்றி வைத்து விடுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறை எண் மாற்றும் பொழுதும், அந்த எண்ணை, ஞாபகமாக தன்னுடைய அலைபேசியில், தேதியிட்டு, சேமித்து வைத்துவிடுவார்.   
      
இன்று காலை மனைவி மங்களம், தான் பண்டிகை கால பர்ச்சேஸ் செய்ய தி.நகர் செல்வதாகச் சொன்னதும், தன்னையும் அழைத்ததும், அவருடைய நினைவுக்கு வந்தது. 
             
"நான் வரவில்லை மங்களம். ஆபீசில் ஆடிட் பிரிபரேஷன் மீட்டிங். எனக்கு அனாவசியமாக கால் எதுவும் செய்யாதே. ஏதேனும் அவசரம் என்றால், எஸ் எம் எஸ் அனுப்பு." என்று சொல்லிவிட்டு வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தது. 
             
அவசரமாக மங்களத்தின் கடன் அட்டை கடவு எண்ணை சேமிப்பிலிருந்து பார்த்து, எஸ் எம் எஸ் அனுப்பினார்.   

     
ஜகன் தன்னுடைய உரையை தொடர்ந்தார். "ஆடிட்டுக்கு வருகின்ற வெளி ஆடிட்டர்கள் கண்டு பிடிப்பதற்காக நாம் ஆங்காங்கே தூவி வைத்திருக்கின்ற 'நான் கன்பார்மிடி' என்னென்ன என்று நான் அறுதியிட்டுக் கூறப்போவதில்லை. ஆடிட்டர்களுடன் வருகின்ற நம் அலுவலக உள் மட்ட ஆடிட்டர்களுக்கு மட்டும் அவை தெரியும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உள் மட்ட ஆடிட்டர்கள் தீர்த்து வைப்பார்கள். எதற்கும் கவலைப் படாதீர்கள். நம் அலுவலகத்திற்கு ஐ எஸ் ஓ சான்றிதழ் நிச்சயம் கிடைத்துவிடும்."   
     
உறுப்பினர்கள் பலமாகக் கை தட்டினார்கள். பிறகு சில உறுப்பினர்கள் சில சந்தேகங்கள் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் விளக்கம் அளித்தார் ஜகன்.   
              
அலைபேசி மீண்டும் தொடர்ந்து அதிர்ந்தது. குறுந்தகவல் அல்ல; யாரோ அழைக்கிறார்கள். எடுத்துப் பார்த்தார், அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு. எடுத்தால், கடன் தருகிறோம் என்றோ அல்லது ஏதேனும் நிறுவனம் அவர்களுடைய சூப்பர் சேமிப்பு திட்டம் குறித்தோ குழைந்து குழைந்து கூறுவார்கள் என்று தோன்றியது. பேசாமல் கட் செய்தார், அந்த அழைப்பை.   
         
மீட்டிங் முடிந்தது.   
               
எல்லோரும் டைனிங் ஹாலுக்கு சென்றனர். உணவு சாப்பிட்டதும், அலுவலகத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில அவசர வேலைகளைப் பார்த்து, பிறகு வீட்டிற்குக் கிளம்பினார், ஜகன்.   
            
*** *** *** 
    
வீட்டிற்கு வந்தவுடன், மனைவி மங்களத்திடம் கேட்டார், "ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டியா? என்னென்ன வாங்கினே, எவ்வளவு செலவாச்சு?" 

           
மங்களம்: " ஷாப்பிங் போனேன்; கையிலிருந்த பணத்திற்கு மட்டும் ஏதோ கொஞ்சம் டிரஸ் வாங்கினேன். ஆனால் பெரியதாக ஒன்றும் வாங்க முடியவில்லை!" 
           
ஜகன்: " ஏன்?"   
           
மங்களம்: "கடையில், என்னுடைய கைப்பையை, புடவை இரகங்கள் பார்க்கும் பொழுது, அந்த மேஜை மீது வைத்திருந்தேன். அதன் மீது ஒரு கண்ணும் வைத்திருந்தேன். ஆனால், எப்படிப் போச்சு, எப்போ போச்சு என்று தெரியலை, புடவைகள் எல்லாம் செலெக்ட் செய்து, பணம் கொடுக்கலாம் என்று கைப்பையை எடுத்தால், அதற்குள்ளே இருந்த ஐ சி ஐ சி ஐ கார்டைக் காணோம். ஒருவேளை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேனோ என்ற சந்தேகம். இருந்தாலும் கார்டு காணோம் என்று உங்களுக்கு போன் செய்து சொல்லலாம் என்று பார்த்தால், செல் போனையும் காணோம்! அப்புறம் யோசித்துப் பார்த்தேன். ஒரு தடவை விலை உயர்ந்த செல் போன் காணாமல் போனதிலிருந்து மலிவான செல் போன்களை மட்டும்தான் என் உபயோகத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். காணாமல் போன செல் நாம அறுநூற்றைம்பது ரூபாய்க்கு, ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கியது. அப்புறம் ஐ சி ஐ சி ஐ கார்டு. அதனுடைய 'பின்' நம்பர் என்ன என்று எனக்கே தெரியாது. எடுத்துகிட்டுப் போன ஆளுக்கா தெரியப் போகுது?"    
  
            
ஜகன்: "அடப்பாவி! காணாமல் போன கார்டு, போன் எல்லா விவரமும் எனக்கு பொதுத் தொலைபேசியிலிருந்தாவது போன் செய்து சொல்லியிருக்கலாமே?"   
             
மங்களம்: "கடைக்காரரிடம் கெஞ்சிக் கூத்தாடி, புடவைக் கடையிலிருந்து போன் செய்தேன். நீங்க அந்த அழைப்பைக் கட் செய்து விட்டீர்கள்." 
      
ஜகன் அவசரம் அவசரமாக கம்பியூட்டரில் நெட் புகுந்து, மங்களத்தின் அக்கவுண்ட் எண் - கடவுச் சொல் கொடுத்து அக்கவுண்ட் பாலன்ஸ் என்ன என்று பார்த்ததில். காலையில் கணக்கில் இருந்த எண்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய்கள், ஐந்தாறு வெவ்வேறு டிரான்சாக்ஷன்ஸ் முடிந்து, மீதி நூற்றுப் பதினொரு ரூபாய்கள் உள்ளன என்று காட்டியது! 
                 
(எங்கள் வாசகர்களில் துப்பறியும் நிபுணர் யாரேனும் இருந்தால், மங்களம் சென்ற புடவைக் கடை எது என்று கண்டு பிடித்துக் கூறலாம். முதல் துப்பறியும் நிபுணருக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது!) 
                         

14.1.13

புத்தகச் சந்தை விஜயம்..

                 
இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் புத்தகச் சந்தை விஜயம். முதல் நாள் அப்பாவுடன். மறுநாள் மாமாவுடன்!
 
புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைப்பது பாவம் என்று நினைக்குமளவு இருக்கிறது கண்காட்சி நடக்குமிடத்தை அடைவது. நந்தனம் YMCA மைதானம் என்பது கேட்க மிக எளிதாக இருந்தாலும் உள்ளே சென்று வருவது அவ்வளவு சுலபமல்ல. குறிப்பாக வயதானவர்களுக்கு. பழைய மைதானம் இந்த வகைகளில் ப்ளஸ்!

சனிக்கிழமை காலை 11.15 முதல் மாலை 4 மணி வரையும் ஞாயிறு மதியம் 2.15 முதல் மாலை ஆறரை மணி வரையும் உள்ளே சுற்றி வந்தோம்.


சனிக்கிழமை அன்று பார்த்த வி ஐ பி நடிகர் நாசர். அவ்வளவு கூட்டமில்லை, மாலை நாங்கள் கிளம்பும் வரையும் கூட! (மறுநாள் தினமணியில் சனிக்கிழமை காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் என்று செய்தி!). நடுவில் ஒரு வரிசை தவிர மற்ற வரிசையில் ஸ்டால்கள் போதிய இடைவெளியில் அமைந்திருந்தாலும் ஸ்டால்களுக்குள் நுழைந்து வருவது கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது.

கேமிரா வைத்து பு.ப எடுக்காமல் அவசரத்துக்கு அலைபேசியில் எடுத்த தெளிவில்லாத பு.படங்களுக்கு நானே பொறுப்பு!


வழக்கமான ஸ்டால்கள். வழக்கமான புத்தகங்கள். வெளியே சற்றுத் தள்ளி 'சாப்பிட வாங்க' மெண்டீன். ரவா தோசை, பூரி, சப்பாத்தி 40 ரூபாய். ,பூரியும் சப்பாத்தியும் மும்மூன்று வைத்தார்கள். ரவா தோசை (ஸ்டாக் இல்லை) கூட 3 கொடுப்பார்களோ என்று கேட்கத் தோன்றியது. கை கழுவ நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

 

சரிதாயணம் டிஸ்கவரியில் வாங்கிக் கொண்டேன். ஜவர்லாலின் 'மௌனத்தின் அலறல்' (மொழிபெயர்ப்பு) மற்றும் சில புத்தகங்கள்.
 
          
எல்லா ஸ்டால்களிலும் டி. செல்வராஜின் 'தோல்' (சாகித்ய அகாடெமி) கண்ணில் பட்டது. பாலகுமாரனின் 'கங்கை கொண்ட ராஜேந்திரன்'  புதிய புத்தகம்  இருந்தது. 330 ரூபாய்.
 
சாகித்ய அகாடமி அரங்கம் முதல் நாள் தப்பு ஸ்பெல்லிங் உடன் இருந்து மறுநாள் அது சரி செய்யப் பட்டிருந்தது! இந்த அரங்கில் 50, 60, 70 களில் வந்த சாகித்ய அகாடமி வென்ற புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைத்தன.


வேறொரு ஸ்டாலில் யதேச்சையாக 'கோவை அனுராதா' புத்தகத்தை எடுத்துப் புரட்ட, அருகில் வந்த விற்பனையாளர் 'எடுங்க சார்... 50 சதவிகிதம் தள்ளுபடி' என்றார்

பரிசளிக்க என்று சில புத்தகங்கள் எடுத்தேன். கீதா பிரஸ்ஸில் பகவத்கீதைப் புத்தகம் 10 ரூபாய், திருப்பாவை விளக்கத்துடன் என்ற புத்தகம் 25 ரூபாய் என்று... இன்னொரு ஸ்டாலில் விஷ்ணுசஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் என்றும் வாங்கிக் கொண்டேன். 7 ரூபாய், 12 ரூபாய் என்று விலைகள். நண்பர்களுக்குப் பரிசளிக்க உதவும்!                                                                  

அப்பா என் சுயசரிதை (உ.வே.சா), ராஜாஜி குழந்தைகளுக்கு எழுதிய புத்தகம், ராஜாஜியின் ஜெயில் டைரி, குண்டூசித் தொகுப்பு என்று வாங்கினார். என் பாஸ் கேட்ட வேதவல்லி வெங்கடாசலம் எழுதிய சமையல் புத்தகம் கிடைக்கவேயில்லை. 'மௌனியின் சிறுகதைகள்' இருக்கிறதா என்றால் சில ஸ்டால்களில் 'மௌலியா' என்றும் கேட்டார்கள். வைக்கப்போவதாகச் சொன்ன தொடுதிரைத் தேடு கணினி கண்ணில் படவேயில்லை. கழிவறை.... ம்ஹூம்... அது தனிக்கதை!

12.1.13

பாசிட்டிவ் செய்திகள் 5/1/13 முதல் 12/1/13 வரை

                 
எங்கள் B+ செய்திகள்.
                  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....          
=======================================================================
                     
1) குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார் டாக்டர் பஜாஜ் கோவிந்த். இவர் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு வசதியான குடும்பத்தில் 1942 ஆம் வருடம் பிறந்தவர். இவரின் தாயார் இந்தியா பற்றியும், கீதை பற்றியும் சொல்லி வந்ததில் மும்பை வந்து பள்ளிக்கல்வி, மருத்துவக் கல்வி முடித்து, பெங்களுரு, மும்பை நகரங்களில் மருத்துவப் பணியாற்றிவிட்டு, கடந்த 5 வருடங்களாக குன்னூர் வாசம். 'மருத்துவத் தொழில் வியாபாரமல்ல, உயிரைப் பாதுகாப்பதற்கே' என்ற தாயின் வாக்கிற்கேற்ப, இலவசமாகப் பார்க்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் மதிப்பு இருக்காது என்பதால் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார். அந்த 5 ரூபாயையும் நேரடியாக வாங்காமல், ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தச் செய்து, அந்த வருமானத்தையும் மருந்து  மாத்திரை வாங்கி இலவச விநியோகம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்கிறார். (தினமணி)


2) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஷிஜியின் வீடு. விவசாயம் செய்ய நிலம் தேவையில்லை என்று நிரூபித்து வீட்டு மொட்டை மாடியிலேயே பல்வகைச்  செடிகளை வளர்த்து, சாதனை செய்து வருகிறார். பக்கத்து வீட்டில் வளர்க்கும் மாடுகளிடமிருந்து தொழுவுரம் பெற்று வாரம் ஒரு முறை போடுகிறார்.    

"எங்க வீட்டுக்குக் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கி வருஷக் கணக்காகுது. தினமும் சாயங்காலம் மாடியில ஒரு சுத்து வந்து செடிகளைப் பாத்தா... அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும். இயற்கை முறையில விளையறதால உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்துல எங்க உடம்பையும் மனசையும் இந்த மாடித்தோட்டம்தான் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டிருக்கு''      என்று 
கூறும் ஷிஜியின் செல்போன் எண் : 77087-81763.

முகப்புத்தகத்தில் சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி பதிவு செய்ததிலிருந்து.                      
4) பெங்களுரு நகரின்  பெல்லாந்துர் பகுதியில் பார்பர் ஷாப் நடத்தி வரும் 30 வயது ரஷீத் ஆலம் மகனுக்கு ரத்தப் புற்று நோய் என்றும், அதைக் குணமாக்க 20 லட்ச ரூபாய்க்கு மேல்  செலவாகும் என்றும் தெரிந்து கொண்ட, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரஷீத் கான் மற்றும் நண்பர்கள் அவரின் சோகத்துக்கான காரணம் கேட்டு அறிந்து, விவரம் பெற்று, முகப்புத்தகத்தில் 'சேவ் சிசான்' என்று பக்கம் தொடங்கி, விவரம் கொடுத்து, முதல் நாளே 40,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கப் பெற்றதில் உற்சாகமடைந்து, இப்போது முழுப்பணம் கலெக்ட் செய்ததும் அவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.  
5) ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மில்லில் வேலை பார்த்து, இடைப்பட்ட நேரத்தில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்க ஆரம்பித்த திரு சின்னசாமி, அந்தப் பழங்களை சொந்தமாகப் பயிரிட்டு விற்க முடிவு செய்து,                       
                                                 
இரண்டு ஏக்கர் அளவில் குட்டை வெட்டி, மழை நீரைத் தேக்கி, 70 ஏக்கர் நிலத்தில் 4 கிணறுகளை வெட்டி,குட்டையில் தேங்கிய நீரை, பி.வி.சி., பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், 20 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் பார்க்கிறார். அவரிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும்; கோழி பண்ணையிலிருந்து பெறும் கோழிக் கழிவுகளையும்; கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறார்.  ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச் செடி, மிளகாய் செடி, வெண்டை என, பயிரிடுகிறார். வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும். கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறார். (தினமலர்)
                  
6) "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார் : "சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்க்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது.  நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.


                                       ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்!

"கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி: சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. 

நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 

சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். 

தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். 

ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும். 

மொபைல்: 99402 03871

சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். 
                     
தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். 
                     
ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும். 
                 
மொபைல்: 99402 03871.   
                 
7) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள். ''இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். 
                                        பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்...
'ரோபாட்' காலணி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.

''இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். 

மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது.. அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். 

பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். 

இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by : Aval Vikatan
மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது.. அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். 
                  
பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். 
                        
இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ( 'அவள் விகடனி'லிருந்து எடுத்து முகப்புத்தகத்தில். )   
                         

10.1.13

புத்தகக் கண்காட்சி முன்னோட்டம்.

             
நாளை முதல் 36 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடக்கம். 11-1-2013 முதல் 23 -1-2013 வரை.
                 
இந்தமுறை நந்தனம் YMCA மைதானத்தில். 
 
                                      

1 கோடி புத்தகங்களுடன் என்கிறது செய்தி. வாசகர்கள் தாங்கள் வாங்க விரும்பும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று அறிய, புத்தகத்தின் தலைப்போ, பதிப்பகமோ ஏதாவது ஒன்று தெரிந்தாலும் தேடுவதற்கு வசதியாக தொடுதிரைக் கணினி வாயிலிலேயே ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் இந்தமுறை.

                                           

750 அரங்குகள். தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் வட மாநிலங்கள், ஜப்பான் போன்ற இடங்களிலிருந்தும் 250 தமிழ் பதிப்பாளர்கள், 127 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 37 ஊடகப் பதிப்பாளர்கள், 36 புரவலர் அரங்குகள் என 450 பங்கேற்பாளர்கள் விறபனைக்கு வைக்கின்றனராம்.
                                                  

மாற்றுத் திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக பபாசித் தலைவர் சொல்கிறார். நடக்க முடியாத வயாதனவர்களுக்கும் இந்த வசதி வழங்கப் பட்டால் நல்லது. சென்றமுறை போதுமான அளவு இல்லையென்று நினைவு. இந்த முறை எப்படியிருக்கிறதோ, பார்க்கலாம்.

அகில இந்திய வானொலி அரங்கும், பொதிகைத் தொலைக் காட்சி அரங்கும் அருகருகே இந்த முறை அமைந்திருப்பதாக பொதிகைத் தொலைக்காட்சியில் திரு திருப்பூர்க் கிருஷ்ணனுக்கு அளித்த பேட்டியில் திரு வைரவன் (செயலாளர்), திரு வெங்கடாசலம் ஆகியோர் தெரிவித்தனர்.


அரங்குகள் 100 ச. அடி, 200 ச.அடி, 300 ச. அடி அளவில் பதிப்பகங்களின் புத்தகத் தேவைக்கேற்ப வழங்கப் பட்டிருக்கிறதாம்.

                                        

சங்க உறுப்பினர்கள் 480 பேருக்கு சுற்றறிக்க அனுப்பப்பட்டு, முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கிறதாகவும், விரிவாக செய்தித் தாள்களில் விளம்பரம் செய்தால் அனைவருக்கும் அரங்குகள் வழங்க முடியாது என்றும் சொன்னார்கள்.

இம்முறை புத்தகத் திருவிழா இன்னும் கூடத் தள்ளித் திறக்க ஆலோசிக்கப் பட்டாலும் டிசம்பரில் நடைபெறும் சங்கீத சீசனுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு எப்படி வெளியூர், மற்றும் முக்கியமாக வெளிநாட்டு ரசிகர்கள் வருகின்றனரோ அதே போல இந்தக் கண்காட்சிக்காகவும் வரத் திட்டமிட்டிருக்கும் வெளிநாட்டு ரசிகர்களை - பொங்கல் விடுமுறையை உபயோகித்து வருபவர்கள் - ஏமாற்றாமல் அந்தத் தேதிகள் கவர் செய்து தொடங்கி விட்டனராம்.


வேலை நாட்களில் பகல் 2.30 முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும். 
                                          
                                                        
                                             

வழக்கமாக 5 வழங்கப்படும்  விருதுகளுடன் குழந்தைகளுக்காக அறிவியல் புனைவுகள் எழுதும் நெல்லை சு முத்து வழங்கிய 1,00,000 ரூபாய் நன்கொடையை வைத்து சிறுவர் அறிவியல் இலக்கிய விருது ஒன்றும் இந்தமுறை வழங்கப் படுகிறதாம். இம்முறை அந்த விருது வழங்கப்படும் நூல் மேரி கியூரி பற்றிய சித்திரக் கதைக்கு என்றார் திரு வைரவன்.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பதிப்பகங்கள் வரிசைக்கு இடம் கொடுக்க நினைத்தால் சென்னையிலேயே இடமிருக்காது என்றார். முந்திக் கொள்பவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றார்.

                                         

'மின்னல் வரிகள்' கணேஷ் எழுதிய 'சரிதாயணம்' புத்தகம் 'டிஸ்கவரி புக் பாலஸ்' அரங்கில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். என்ன விலை கணேஷ்?

மேலும் கணேஷ் சொல்லியுள்ள படி பதிவர்கள் கவியாழி கண்ணதாசன் அவர்கள் புத்தகமும், கோவை மு. சரளா அவர்கள் புத்தகமும் வெளியாகி, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கலாம் என்று தெரிகிறது. அருணா செல்வம் எழுதியுள்ள 6 கவிதைத் தொகுப்புகள் மணிமேகலைப் பிரசுரத்தில் கிடைக்கும் என்று அவர் கணேஷ் பக்கத்தில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மௌனத்தின் அலறல், தன்னாட்சி. இடம் கிழக்குப் பதிப்பகம். 

     

புத்தகக் கண்காட்சிக்குப் போக நினைப்பவர்கள் கையைத் தூக்கலாம். வாங்க விரும்பும் புத்தக லிஸ்ட் இங்கும் கொடுத்தால் இங்கு படிப்பவர்களுக்கும் தாங்கள் என்ன புத்தகம் வாங்கலாம் என்பதற்கு டிப்ஸ் கிடைக்கலாம்.

விகடன் இயர் புத்தகத்துக்கு ஏக விளம்பரம்... எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 'ஸ்ரீ
வைஷ்ணவம்', மௌனியின் மறுபக்கம், 'அறம்'  ஜெமோ சிறுகதைத் தொகுப்பு, ஸுஜாதா விஜயராகவன் எழுதிய சங்கீதம் பற்றிய நாவல் ஆடியோ சிடியில்(பெயர் என்ன?) போன்றவை மனதில் இருக்கின்றன. அதிகம் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டும். இம்முறை ரொம்ப வாங்கக் கூடாது என்று எண்ணம். 'சுகா' ஏதாவது புதிய புத்தகம் எழுதியிருக்கிறாரோ?