கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1 மற்றவர்கள் கஷ்டங்களைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைவதும், நல்லதைப் பார்த்து பொறாமை அடைவதும் மனிதனின் இயல்பான குணங்களாக இருப்பதன் காரணம் என்ன?
# அது மனிதனின் இயல்பான குணம் அல்ல என்று தான் நான் சொல்வேன். பெரும்பாலானவர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால், பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது உலக நியதி என்று தான் நான் பதில் சொல்ல வேண்டும்.
& சேச்சே என் இயல்பு அப்படி கிடையாது. வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடுவது என் இயல்பு.
2. எதிர்பாராத சங்கடங்கள் வாழ்க்கையில் நிகழும்போது நீங்கள் யாரிடம் ஆலோசனை கேட்பீர்கள்? தந்தையிடமா, சகோதரனிடமா இல்லை நண்பனிடமா? (இருபாலாரும்)
# ஆலோசனை பிரச்சனைக்கு தகுந்த மாதிரி எல்லாரிடமும் கேட்பேன். பெரும்பாலும் சகோதரர்களிடம் கேட்பது உண்டு. நண்பர்களுக்கு நிறைய ஆலோசனை சொல்லி இருக்கிறேன் தவிர அவர்களிடம் எதையும் கேட்டு பெற்றதில்லை.
& சங்கடங்கள் நிகழும்போது யாரையும் ஆலோசனை கேட்டதில்லை. முக்கிய தீர்வுகள் எடுக்கவேண்டிய கட்டங்களில் மூத்த சகோதரரை கலந்து ஆலோசித்தது உண்டு - உதாரணம் : அலுவலகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்ற நிலையில். அவர் ஒரு ஜோதிடம் பார்த்து சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன்.
3. ஆணின் பள்ளிக்கால நண்பன், கடைசி வரையில் நண்பனாக இருக்கும் வாய்ப்பு போல ஒரு பெண்ணுக்கு ஏன் அப்படி அமைவதில்லை- விதிவிலக்குகள் தவிர
# என் மகள்கள் இருவருக்கும் நெருக்கமான பள்ளி தோழர்கள் இன்னமும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். நீங்கள் சற்று அவசரப்பட்டு முடிவு செய்தீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது.
& என்னுடைய மனைவியின் சகோதரிக்கு சிறு வயது தோழிகள் இன்றும் நண்பிகளாகத் தொடர்கிறார்கள். இந்த வாட்ஸ்ஆப் யுகத்தில் நண்பிகள் / நண்பர்கள் தொடர்வது முற்றிலும் சாத்தியமே.
4. இன்றைக்கு ஆண் பெண் வயது வித்தியாசம் கூடாது என்று இளைய தலைமுறை ஆசைப்படுகிறதே. இது நல்ல போக்காக இருக்குமா?
# உங்கள் கேள்வி புரியவில்லை. திருமணம் செய்வதில் ஆண் வயது சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்கு சமூக & மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. அவை ஆங்காங்கே மீறப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மைதான் என்ன செய்வது!
5. பிறர் நம்முடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்ப வேண்டும்?
# ஆலோசனை கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது என் கட்சி. ஆலோசனை கேட்டு பெற்றுக்கொண்டு அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது நமக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் ? நமது ஆலோசையை ஏற்றுக் கொள்வது என்பது அவர்களின் இஷ்டத்தைப் பொருத்தது அல்லவா ?
& நான் அப்படி எல்லாம் விரும்புவது இல்லை. ஆலோசனை கேட்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் வழங்குவது உண்டு.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
மிடில் க்ளாஸுக்கும், அப்பர் மிடில் க்ளாஸுக்கும் என்ன வித்தியாசம்?
# மேலேறுவதில் சிறு வெற்றி கண்டவர்கள் அப்பர் மி.
ரயில் பெர்த் போல்தான், ஆனால் இதில் அப்பர் உயர்த்தி.
வாழ்க்கையில் ஜெயிக்க எதிர் நீச்சல் போட வேண்டும் என்றும், எதிர்நீச்சல் போடும்பொழுது சீக்கிரம் சேர்ந்து விடுவோம், ஜெயிப்பது கடினம் எனவே go with the flow என்றும் கூறப்படுகிறது. நீங்கள் எந்த கட்சி?
# உலகத்தொடு ஒட்ட ஒழுகல் இது ஆற்றின் போக்கில் நீந்தி வேகம் காண்பது.
முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும். இது சவால்களை எதிர்த்து நின்று வெற்றி காண்பது.
நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டால் அதிகம் சச்சரவை விரும்பாத சாது நான். " விட்டுக் கொடுத்துப் போ - விவகாரத்தைத் தவிர் " என்பது தான் என்னுடைய சித்தாந்தம்.
வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது, இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும். எது எப்போது வேண்டும் என்று அறிவது சிறப்பு.
& எதிர்நீச்சல் போடவேண்டும் - வாலிப வயதில்.
ஆற்றின் போக்கில் செல்வோம் - வயோதிகத்தில்.
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
தென்னகத்தின் புகழ் பெற்ற கோயிலில் எடுக்கப்பட்ட படம் இது. உடைந்து போயிருந்த யானைக்கும் யாளிக்குமான தொடர்பை மீட்டெடுக்க முயல்கிறார் ஸ்தபதி. இதற்காக அருகிலேயே ஓவியம் ஒன்றையும் வைத்திருந்தார். அதைப் பார்த்தபோது இப்படித்தான் அந்தக் காலத்திலும் சிற்பிகள் ஓவியத்தை வைத்துக்கொண்டு செதுக்கியிருப்பார்கள் என்று நினைத்தேன். ஒற்றைக் கல்லில் செதுக்கும்போது (அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள்) அது எவ்வளவு கடினமான வேலை, சிறிது தவறினாலும் மொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பது புரியும். போற வர்றவனெல்லாம் நம் குழந்தையைக் கொஞ்சுகிறேன், செல்லமா இருக்கேன் என்று சொல்லிக்கொண்டு, விரலைப்பிடித்து இழுப்பது, கன்னத்தை இழுப்பது, காதைக் கிள்ளுவது, மூக்கை அமுக்குவது என்றெல்லாம் செய்தால் பொறுத்துக்கொள்ள இயலாத நாம், காலம் கடந்து நிற்கும் இந்தச் சிற்பங்களைப் பிறர் சிதைக்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
இதுதான் மாடல் ஓவியம். இதை வைத்துத்தான் சீர் செய்துகொண்டிருந்தார் ஸ்தபதி.
= = = = = = = = = = = = = = = = =
ஸ்ரீராம் :
ஆனந்த சயனமா
அபாய சயனமா
= = = = = = = = = = = = = =
மனசாட்சியம் - 27
KGY Raman
" பச்சை பச்சையாக .. "
( அடல்ட்ஸ் ஒன்லி அல்ல)
"காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடுங்கள், பழங்களை முழுதாக தோலோடு சாப்பிடுவது சிறந்தது (அதாவது உரிக்காமல் தோலோடு சாப்பிடுகிற பழங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பலாப் பழத்தையும் சத்துக்குடியையும் உரிக்காமல் சாப்பிட முடியுமா என்ன ?)
இப்படி எல்லாம் ஆரோக்கியம் குறித்த பதிவுகள் எல்லா தளங்களிலும் ஏராளமாக வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சில பிராணிகளுக்கு சில இயல்புகள் இருக்கும். பெரும்பாலான பிராணிகள் எதையுமே முகர்ந்து பார்த்து, வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். குரங்கு சற்று வித்தியாசமானது. மூக்கில் வைத்துப் பார்த்து அந்தப் பொருள் பாஸானால், அதை ஒரு கடி கடித்துப் பார்த்து அதற்குப் பின் தின்னுவதோ தூக்கி எறிவதோ செய்யும்.
" ஏண்டா உனக்கு இந்த குரங்கு புத்தி " என்று என்னை யாரும் கோபித்துக் கொண்டதில்லையே தவிர, என்னிடம் இந்தக் குரங்கு புத்தி இருப்பது எனக்கே தெரியும். விழித்துக் கொண்டிருக்கிற எல்லா நேரமும் ஏதாவது ஒன்றைக் கொறித்துக் கொண்டிருக்கிற குரங்கு புத்தி என்னுடையது.
இலை, தழை, பூ , காய், பழம், கிழங்கு என்று எல்லாவற்றையும் வித்யாசம் பாராமல் வாயில் இட்டுப் பார்ப்பது என்னுடைய சுபாவம். இது எந்த அளவுக்கு போனது என்றால், ஒரு சமயம் சேம்பு இலையை மென்று பார்த்து வாய் முழுதும் மகா அரிப்பு ஏற்பட்டு, என் அத்தை, நல்ல வேளையாக, புளி உப்பு இரண்டையும் சேர்த்து வாயின் உட்புறம் முழுதும் பாசி பிடித்த பித்தளைச் சொம்பைத் தேய்ப்பது போல் தேய்க்கச் சொன்னார். அப்பாடா ! ஒருவகையாக அரிப்பு நின்றது ! அத்தைக்கு நன்றி .. அத்தையை அங்கு எனக்கு அருகிலே இருக்க வைத்த இறைவனுக்கும் நன்றி.
சேம்பு இலை, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு இவற்றையே வாயில் போட்டுப் பார்த்த ஆளுக்கு கத்தரிக்காயும் அவரைக்காயும் எம்மாத்திரம் ? " அனைத்தும் யாம் அறிவோம் " என்று சிவாஜி சொன்ன மாதிரி நானும் " ருசி அனைத்தும் யாம் அறிவோம் " என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் போலவே இருக்கிற ஆனால் வெள்ளரிக்காய் அல்லாத கக்கிரிக்காய் என்ற பெயர் கொண்ட காயை நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா ? அதேபோல " சிலோனில் இருந்து வந்தது " என்கிற சிறப்புடன் ஒரு கையை விரித்துத் தாங்கக் கூடிய அளவுக்கு இருக்கிற மட்டையுடன் கூடிய பச்சைத் தேங்காய் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போது என் தகப்பனார் தென்னைப் பொருட்களை ஏற்றுமதிசெய்து கொண்டிருந்த ஒரு தனிநபர் முதலாளியிடம் வேலை பார்த்து வந்தார். தேங்காய் நார் வைக்கோல் போன்ற பொருட்களை நன்றாக இறுக்கி கட்டியாக சதுர வடிவில் கயிறு கட்டி நிறுத்தி அதன் மேல் கவர் செய்து ஏற்றுமதிக்கு அனுப்புவார்கள். இந்த கெட்டிப்படுத்துதல் பார்ப்பதற்கே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதற்கான அழுத்தும் இயந்திரம் ஒன்றை அந்தக் காலத்திற்குப் பின் நான் எங்கும் பார்க்கவில்லை.
சிலோன் தேங்காயை விட்டுவிட்டு எங்கேயோ போய் விட்டேனே. சிலோன் தேங்காய் விசேஷம் என்னவென்றால் அதனுடைய மட்டை, கரும்பு போல் இனிக்கும். அம்மா அரிவாள்மணையில் அதை ஜாக்கிரதையாக சிறு துண்டங்களாக நறுக்கி எடுத்துக் கொடுத்த போது, மிகுந்த அவநம்பிக்கையுடன் வாயில் போட்டுப் பார்த்தோம். நம்ப முடியாத அளவுக்கு அது இனிப்பாகவே இருந்தது. அதன்பின் அந்த சிலோன் தேங்காயை நான் எங்கும் பார்த்ததும் இல்லை வேறு ஒருவர் அது பற்றிச் சொல்லக் கேட்டதும் இல்லை.
பிஞ்சுக் கொத்தவரை, கீரை வகைகள் பிஞ்சு அவரைக்காய் என்று விதவிதமாக நான் மென்று முழுங்கியது உண்டு.
" பச்சைக் கத்தரிக்காயைக் கடிச்சுச் திங்காதே , பல் சொத்தை ஆகிவிடும் " என்ற பாட்டியின் கட்டளையை மீறி பிஞ்சுக் கத்திரிக்காயையும் தின்றிருக்கிறேன்.
இந்த பச்சைக் கத்திரிக்காய் கடித்து சாப்பிடுவதில் மட்டும் எனக்கு போட்டியாளர்கள் சிலர் இருந்தார்கள். என் அண்ணன் பிஞ்சுக் காயை அழகாக குறுக்கே எட்டு துண்டுகள் வரும்படி முழுதுமாக இல்லாமல் அளவாக நறுக்கி, உள்ளே மிளகாய் பொடி உப்பு திணித்து ஒரு நூலால் கட்டி உத்திரத்தில் இருந்து தொங்க விட்டிருப்பார். அது நன்றாக ஊறியதும் அதை எடுத்து ஆளுக்கு ஒரு துண்டு தின்போம். அதனால் தானா என்று நிச்சயமாக தெரியவில்லை, ஏனென்றால் அதை அவ்வளவு அதிகம் சாப்பிடவில்லை, என்றாலும் பற்கள் என்னவோ சொத்தை ஆனது உண்மை. பல் டாக்டர்கள் பிழைக்க வேண்டாமா ?
இப்படி ஆடு மாடு போல பச்சைக் காய்களை மேய்வது நான் என்றால் எங்கள் குடும்பத்தில் சிலர் காய்கறிகளை அழகாக நறுக்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள். என் சித்தப்பா ஒருவர் எங்கு பிரயாணம் போனாலும் எளிதாகச் சுருட்டி எடுத்துக் கொள்ளக்கூடிய அவருடைய சிறு மெத்தை, தலையணை, போர்வை இவற்றை அழகாக, கச்சிதமாக சுருட்டி, கயிற்றால் கட்டி எடுத்துக்கொண்டு போவார். படுக்கை எடுத்துக்கொண்டு போவது போலவே நல்ல கூர்மையான கத்தி ஒன்றும் அவரிடம் இருக்கும். அவருடைய சகோதரர்கள் யார் வீட்டுக்குப் போனாலும் " இன்றைக்கு என்ன சமையல் ? நான் காய் நறுக்கிக் கொடுத்து விடுகிறேன். காய்களை எடுத்துக் கொடுங்கள் " என்று கேட்டு வாங்கி மிக அழகாக அவற்றை நறுக்கித் தருவார். எப்படி சமைக்க வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துச் சொல்வார். எல்லாவற்றிலுமே மிகுந்த ரசனையோடு இருந்த என் அபிமான சித்தப்பா.
காய் நறுக்கும் கலை பற்றி பேசும் போது எங்கள் மெஸ் சமையல்காரர் ராமன் நாயர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. காய்கறிகளை சரியாகவும் நறுக்க வேண்டும், மிக வேகமாகவும் செய்ய வேண்டும் என்பது அவருடைய கொள்கை. காய்கறி நறுக்குவது அங்கே சாப்பிடுகிற எங்களது வேலை. நாங்கள் நறுக்குவதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார். அதை எப்படி நறுக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டே இருப்பார். " இப்படி சாவகாசமாக நறுக்கிக் கொண்டிருந்தால் சாப்பாடு நாளைக்கு தான் சாப்பிடணும் " என்பது அவருடைய அபிமான வாசகம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
KGG பக்கம்.
மழைக் காலங்களில் காலை நடைப்பயிற்சி என்பது மிகவும் சவாலான விஷயம்.
தினமும் நடைப்பயிற்சி செய்தே ஆகவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்திருப்பதால் அடித்துப் பிடித்து காலை நடைப்பயிற்சி எப்படியும் 2 கி மீ நடந்துவிடுவது என் வழக்கம்.
அடுக்ககத்தில் நடைப்பயிற்சி என்பது சுலபமான விஷயம். அடுக்ககத்தை உள்பக்க நடைபாதையில் ஒரு சுற்று சுற்றி வந்தால் 400 மீட்டர். ஐந்து சுற்று சுற்றினால் போதும். மழை என்றால், பேஸ்மெண்டில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் நடைப்பயிற்சி செய்யலாம். எனவே எந்தக் காலத்திலும் கவலை இல்லை.
சில நாட்களில் (அதாவது உதவியாளர் ஊருக்குப் போயிருக்கும் சமயங்களில்) மகன் குடும்பம் / மகள் குடும்பம் இவர்களுடன் தங்கவேண்டியது இருக்கும். மழை இல்லை என்றால் கவலை இல்லை - மகன் வீட்டு அருகில் உள்ள பார்க் / அல்லது மகளின் அடுக்கக கட்டிடத்தை சுற்றி நடைப்பயிற்சி சுமார் அரைமணி நேரம் சென்று வருவேன்.
மழை இருந்தால் பிரச்சனை - குடையுடன் மழையில் நடைப்பயிற்சி செல்லவேண்டும். குடையுடன் பார்க்கில் அல்லது அடுக்ககத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யும் என்னை அதிசயமாக பார்ப்பவர்கள் ' யாருடா இந்தப் பைத்தியக்காரன்!' என்பது போலப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது!
பார்க்கில் மழை நேரத்தில் அல்லது மழை காலத்தில் நடைப்பயிற்சி செல்வது என்பது இன்னும் சிக்கலான விஷயம். மழை பெய்யும்போது குடையுடன் நடந்தால் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தாலும் அதிகம் கவனிக்கமாட்டார்கள். ஆனால் பார்க் போன்ற மரங்கள் நிறைந்த பாதையில் மழை நின்றாலும் மரங்களிலிருந்து சொட்டு சொட்டாக விழும் நீர்த்துளிகள் நம் மீது விழாமல் இருக்க குடை விரித்தபடிதான் தொடர்ந்து நடக்கவேண்டும் !
கிட்டத்தட்ட கடந்த ஒருவார காலமாக பெங்களூரில் காலை நேரத்தில் மழை பெய்து வருவதால், பார்க் பகுதியில் தினமும் நடைப்பயிற்சி சென்று வருவது கடினமாக உள்ளது.
ஆனாலும் மருத்துவர் சொல்லைத் தட்டாதே என்று மனம் சொல்வதை கேட்டு நடைப்பயிற்சி தொடர்கிறது !
= = = = = = = = = = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்கு//விட்டுக் கொடுத்துப் போ - விவகாரத்தைத் தவிர்// This is my policy too! :)
பதிலளிநீக்குஇன்றைக்கு குறைவான கேள்விகள் தான் போலும்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். புதன் கிழமை நன்மை செய்யட்டும்.
பதிலளிநீக்குகாய்கறிகள், இலைகள் போன்றவற்றை பச்சையாக சுவைப்பது என்னிடமும் உண்டு - ஆனாலும் எல்லா காய்கறிகளையும் இப்படி சாப்பிட்டதில்லை - குறிப்பாக கத்திரிக்காய்! :) முகர்ந்து பார்ப்பது உண்டு.
பதிலளிநீக்குவிவாதம் விவகாரம் மிகப் பிடிக்காத ஒன்று. சொல்லிப் பார்க்கலாம். மூர்க்கனும் முதலையும் கதை வந்தால் விட்டு ஓடிவிட வேண்டும்:)))
பதிலளிநீக்குகாலை நேர நடை - தொடர்வது சில சமயங்களில் கடினமாகத் தான் இருக்கிறது. இதோ இன்றைக்கு காலை நேர நடை கட்! :(
பதிலளிநீக்கு