Solanum melongena (சொலனும் மெலோங்கெனா ) என்னும் உயிரியற் பெயர் எதைக் குறிக்கின்றது தெரியுமா?
அத அப்புறம் சொல்றேன்.
முதலில் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வது என்று சொல்லிடறேன்.
வேண்டிய பொருட்கள்:
கத்தரிக்காய் கால் கிலோ. (எங்க ஊர்ல இப்போ ஒரு கிலோ நாட்டுக் கத்தரிக்காய் முப்பத்தாறு ரூபாய்)
மிளகாய் வற்றல் : இரண்டு அல்லது மூன்று.
மிளகு : அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை.
கொப்பரைத் தேங்காய் அரை மூடி. (கத்தியால், சிறு துண்டுகளாகக் கீறி வைத்துக்கொள்ளவும்.)
பால் : நூறு மி லி (என்னது பொரிச்ச குழம்புல பாலா! என்கிறார் திருமதி. எனக்கு இந்த சமையல் குறிப்பைச் சொன்னவர் பசும்பால் என்றார். பசும்பால் எல்லாம் இந்தக் காலத்தில் எங்கே கிடைக்கிறது. எல்லாம் பிளாஸ்டிக் கவர் பால்தான்!)
உப்பு : தேவையான அளவு.
தாளிக்க:
நெய்: ஒரு டீஸ்பூன்.
உளுத்தம்பருப்பு : அரை டீஸ்பூன்.
கடுகு: கால் டீஸ்பூன்.
சீரகம் : கால் டீஸ்பூன்.
கறிவேப்பிலை : பதினான்கு இலைகள்.
கடைக்குப் போய், இளசா, உருண்டையா, சிறியதாக உள்ள பிஞ்சுக் கத்தரிக்காய் கால் கிலோ வாங்கியாங்க. ஒவ்வொரு காயும் பளபளன்னு இருக்கணும். பூச்சி, சொத்தை உள்ள காய்களை வாங்காதீர்கள்.
(பையன்: "அம்மா, மார்க்கட்ல இவ்வளவு கத்திரிக்காய் இருக்கே, யாருமே வாங்காம, வாடி, வதங்கிப் போயிடிச்சுன்னா என்னம்மா பண்ணுவாங்க?"
அம்மா : " மறுநாளைக்கு உன் அப்பா காய்கறி வாங்கப் போகும்போது அவர் தலையில கட்டி அனுப்பிடுவாங்க!")
கத்தரிக்காயைக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தோராயமாக ஒவ்வொரு துண்டும் ஒரு கன செ மீ இருக்கலாம்.
மிளகாய் வற்றல், மிளகு, மஞ்சள் தூள், கொப்பரைத் தேங்காய் இவற்றை பக்குவமாய் வறுத்து, மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காய்த் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, நறுக்கிய துண்டங்களை அதிலிட்டு, வேகவிடவும்.
கால் லிட்டர் தண்ணீரில் அரைத்துவைத்திருக்கும் (மி வ + மி + ம + தே ) மசாலா பொடியைக் கரைத்து, தேவையான உப்புப் பொடி கரைத்து, வெந்த கத்தரிக்காய்த் துண்டுகளுடன் சேர்க்கவும்.
அதன் பின்னர் மேற்கண்ட கலவையில், பாலை ஊற்றவும். பால் கொதித்து, கத்தரிக்காய்த் துண்டுகள் நன்றாக வெந்தபின், கீழ்க் கண்டபடி, தாளிக்கவும்.
ஒரு கரண்டியில் நெய்விட்டு, கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு, சத்தம் அடங்கியதும், தாளித்ததை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பில் இட்டு, கறி வேப்பிலைகளைக் கிள்ளிப் போட்டு, பொரிச்ச குழம்பை, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
(செஞ்சு, சாப்பிட்டுப் பார்த்து, நல்லா இருந்தா எனக்கும் சொல்லுங்க. திருமதியின் உதவி இன்றி நானும் செய்துப் பார்க்கிறேன்!)
இது கத்தரிப்பூ.
எச்சரிக்கை: சிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கும். அவர்கள் கத்தரிக்காய்க்கு பதிலாக புடலங்காய் உபயோகிக்கலாம்..