Monday, May 4, 2015

'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு.

               
Solanum melongena  (சொலனும் மெலோங்கெனா )  என்னும் உயிரியற்  பெயர் எதைக் குறிக்கின்றது தெரியுமா? 

அத அப்புறம் சொல்றேன். 

முதலில் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வது என்று சொல்லிடறேன். 
வேண்டிய பொருட்கள்: 
கத்தரிக்காய் கால் கிலோ. (எங்க ஊர்ல இப்போ ஒரு கிலோ நாட்டுக் கத்தரிக்காய் முப்பத்தாறு ரூபாய்) 
            
மிளகாய் வற்றல் : இரண்டு அல்லது மூன்று.
மிளகு : அரை டீஸ்பூன். 
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை. 
கொப்பரைத் தேங்காய் அரை மூடி. (கத்தியால், சிறு துண்டுகளாகக் கீறி வைத்துக்கொள்ளவும்.) 
பால் : நூறு மி லி (என்னது பொரிச்ச குழம்புல பாலா! என்கிறார் திருமதி. எனக்கு இந்த சமையல் குறிப்பைச் சொன்னவர் பசும்பால் என்றார். பசும்பால் எல்லாம் இந்தக் காலத்தில் எங்கே கிடைக்கிறது. எல்லாம் பிளாஸ்டிக் கவர் பால்தான்!) 
          
உப்பு : தேவையான அளவு. 
         
தாளிக்க: 
நெய்: ஒரு டீஸ்பூன். 
உளுத்தம்பருப்பு : அரை டீஸ்பூன்.
கடுகு: கால் டீஸ்பூன்.
சீரகம் : கால் டீஸ்பூன். 
கறிவேப்பிலை : பதினான்கு இலைகள். 

கடைக்குப் போய், இளசா, உருண்டையா, சிறியதாக உள்ள பிஞ்சுக் கத்தரிக்காய் கால் கிலோ வாங்கியாங்க. ஒவ்வொரு காயும் பளபளன்னு இருக்கணும். பூச்சி, சொத்தை உள்ள காய்களை வாங்காதீர்கள். 
       

(பையன்: "அம்மா, மார்க்கட்ல இவ்வளவு கத்திரிக்காய் இருக்கே, யாருமே  வாங்காம, வாடி, வதங்கிப் போயிடிச்சுன்னா என்னம்மா பண்ணுவாங்க?" 
அம்மா : " மறுநாளைக்கு உன் அப்பா காய்கறி வாங்கப் போகும்போது அவர் தலையில கட்டி அனுப்பிடுவாங்க!") 

கத்தரிக்காயைக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தோராயமாக ஒவ்வொரு துண்டும் ஒரு கன செ மீ இருக்கலாம். 

மிளகாய் வற்றல், மிளகு, மஞ்சள் தூள், கொப்பரைத் தேங்காய் இவற்றை பக்குவமாய் வறுத்து, மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காய்த் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, நறுக்கிய துண்டங்களை அதிலிட்டு, வேகவிடவும். 

கால் லிட்டர் தண்ணீரில் அரைத்துவைத்திருக்கும் (மி வ + மி + ம + தே ) மசாலா பொடியைக் கரைத்து, தேவையான உப்புப் பொடி கரைத்து, வெந்த கத்தரிக்காய்த் துண்டுகளுடன் சேர்க்கவும். 
              
அதன் பின்னர் மேற்கண்ட கலவையில், பாலை ஊற்றவும். பால் கொதித்து, கத்தரிக்காய்த் துண்டுகள் நன்றாக வெந்தபின், கீழ்க் கண்டபடி, தாளிக்கவும். 
  
ஒரு கரண்டியில் நெய்விட்டு, கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு, சத்தம் அடங்கியதும், தாளித்ததை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பில் இட்டு, கறி வேப்பிலைகளைக் கிள்ளிப் போட்டு, பொரிச்ச குழம்பை, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 
       


(செஞ்சு, சாப்பிட்டுப் பார்த்து, நல்லா இருந்தா எனக்கும் சொல்லுங்க. திருமதியின் உதவி இன்றி நானும் செய்துப் பார்க்கிறேன்!) 
             இது கத்தரிப்பூ.


                       
எச்சரிக்கை: சிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கும். அவர்கள் கத்தரிக்காய்க்கு பதிலாக புடலங்காய் உபயோகிக்கலாம்.. 
                              

18 comments:

Durai A said...

பொரிச்ச குழம்புக்கு பருப்பு வேணாமா? மெலா சொலுங்கோனா.

Durai A said...

சீன ஜப்பானிய இந்தோனேசிய கத்தரிவகைகள் இந்திய வகையை விட வித்தியாசமானவை.

இந்தியக் கத்தரிக்காய் உற்பத்தி விவரம் சரியில்லையோனு தோணுது. கத்தரிக்காய் கறி, எண்ணைக் கத்தரிக்காய், கூட்டு, கொத்சு, வத்தல், கத்தரிக்காய் சாதம், வறுவல், துவையல் வடிவங்களில் நானே இதை விட அதிகமா சாப்பிடுறேன்னு நினைக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

உதவியின்றி செய்து பார்க்கலாம் மட்டும் தான்...!

Geetha Sambasivam said...

மீ கத்தரிக்காய்ப் பிரியை! முதல்லே ஒண்ணு சொல்றேன். நீங்க சொல்லி இருப்பது கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு வகை தான். பொரிச்ச குழம்புன்னா அதுக்குப் பருப்புப் போடணும். பாசிப்பருப்பு ஆக இருப்பது உத்தமம். அதோடு மி.வத்தலோடு உபருப்பு, மிளகு சேர்த்துத் தேங்காயோடு அரைச்சு விடணும். அல்லது மிளகு, உபருப்பு, பெருங்காயம், தேங்காய் வறுத்து அரைக்கலாம். மிளகாய் சேர்க்காமலும் பண்ணலாம். இரண்டும் சேர்த்தால் காரம் நிதானமாகப் பார்த்துப் போடணும்.

Geetha Sambasivam said...

அட??? அப்பாதுரையும் சொல்லி இருக்காரா பருப்பு வேணும்னு! ஆமாம், பருப்புப் போட்டால் தான் பொரிச்ச குழம்பு. இல்லைனா கூட்டுத் தான். :)))))

Geetha Sambasivam said...

எந்தப் பொரிச்ச குழம்புக்கும் பருப்பு வேணும். அவரை, கத்தரி, புடலை, கீரைத்தண்டு, கொத்தவரை,கதம்பக் காய்கள் போட்ட பொரிச்ச குழம்பு என எதை எடுத்தாலும் பருப்புப் போடணும்.

middleclassmadhavi said...

'பொரிச்ச' -வுக்கு என்ன மீனிங்?:-)
எங்கள் வீட்டில் இன்று கொத்தவரங்காய் பொரிச்ச குழம்பு (மீனிங் புரியாமலேயே!!). இந்த டைப் குழம்பில் கூட கொத்துக்கடலையோ, காராமணியோ போட்டால், இன்னும் சுவை!

geethasmbsvm6 said...

மிடில்க்ளாஸ் மாதவி, புளி சேர்க்காத குழம்பு, கூட்டு, ரசம் வகைகள் பொரிச்ச என்னும் அடைமொழியைப் பெறும். இவைதான் புளி நமக்கு அறிமுகம் ஆகும் முன்னர் சமைத்த பாரம்பரிய முறைச் சமையல் ஆகும் மோர்க்குழம்பு சங்க காலத்திலேயே உண்டு. :) அதைக் கலக்கும் விதம் குறித்த ஒரு கவிதையும் உண்டு. மறந்து போச்சு! :)

geethasmbsvm6 said...

நீங்க சொல்றாப்போல் நான் பொரிச்ச குழம்பிலும் மொச்சை, கொ.கடலை சேர்ப்பேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

மனோ சாமிநாதன் said...

சுவையான பொரிச்ச குழம்பு! இடைச்செருகலாக அம்மாவும் மகனும் பேசிக்கொள்வது அதையும் விட சுவை!

Geetha Sambasivam said...

சொல்ல மறந்துட்டேனே, கத்திரிக்காயை நீளமா நறுக்கிப் பொரிச்ச குழம்பு பண்ணினா ஒரு சுவையும் துண்டங்களாக நறுக்கிப் பண்ணினால் ஒரு சுவையும் கிடைக்கும். இரண்டையும் முயற்சி பண்ணுங்க. கத்திரிக்காயை விடமாட்டோமுல்ல! :)

‘தளிர்’ சுரேஷ் said...

கத்தரிக்காய் அலர்ஜி எனக்கும் உண்டு. ஆனால் பொரிச்ச கூட்டு செய்தால் ஒரு கட்டு பிடிப்பேன்! இது பொரிச்ச குழம்பு வித்தியாசமாக உள்ளது! நன்றி!

‘தளிர்’ சுரேஷ் said...

இடையில் வரும் ஜோக்ஸ் கலக்கல்! உங்க கிட்ட ஜோக் எழுத பயிற்சி எடுத்துக்கலாம்னு தோணுது!

KILLERGEE Devakottai said...


பொர்க் வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்

ரூபன் said...

வணக்கம்
ஐயா

சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

பொரிச்ச குழம்பு? பருப்பு இல்லாமலேயே? கூட்டு இல்லையோ..சரி சரி கூட்டா இருந்தா என்ன குழம்பா இருந்தா என்ன எல்லாம் வயத்துக்குள்ளதான் போகப் போறது அதுக்கு பேரா தெரியப் போகுது? நாக்குக்கு நல்லா இருந்தா போதுமே.....ஸ்வாஹா தான்...

ஹஹ்ஹாஹ் அந்த ஜோக் சூப்பர்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அது சரி அது என்ன 14 கறிவேப்பிலைகள்??!!! அஹ்ஹாஹ்ஹ்

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!