Tuesday, May 5, 2015

முதியோர் இல்லத்தில் வசிக்கும் இளைஞர்கள்1) என்னவொரு யோசனை...  உருப்படியான யோசனை.  லிங்க் க்ளிக் செய்தால் கடைசிச் செய்தி.

                                      Image result for old age home images


நெதர்லாந்து முதியோர் காப்பகம் ஒன்றில் புதுமையான ஒரு யோசனையைச் செயல்படுத்தி வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் காப்பகத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அதற்குப் பிரதிபலனாக ஒரு மாதத்தில் 30 மணி நேரங்களை முதியவர்களுடன் செலவிட வேண்டும். முதியவர்களுக்காக விளையாட்டு, பிறந்தநாள் பார்ட்டி என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவர்கள் ஆதரவாகப் பேசக்கூடிய மனிதர்களைத்தான் விரும்புகிறார்கள். 

                                                                Image result for old age home images


அதனால்தான் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த யோசனை பிரமாதமாக வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்களும் ஆர்வமாக முதியவர்களிடம் உரையாடுகிறார்கள், உதவி செய்கிறார்கள். முதியவர்களும் மனம் விட்டுப் பேசி, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார் விடுதியின் உரிமையாளர். மற்ற முதியோர் இல்லங்களிலும் இந்த யோசனையைச் செயல்படுத்த இருக்கிறார்கள். 

                                                                                   Image result for old age home images


நல்ல யோசனை… இந்தியாவிலும் செயல்படுத்தலாமே…2) தெற்கு ஹாலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆந்தைகள் மனிதர்களின் தலை மீது வந்து அமர்கின்றன. 2.7 கிலோ எடை கொண்ட ஐரோப்பிய ஆந்தை மரங்களிலோ, வேலிகளிலோ வந்து அமர்வதில்லை. நடந்துகொண்டிருக்கிற மனிதர்கள், நின்றுகொண்டிருக்கிற மனிதர்களின் தலையை நோக்கிக் குறிவைத்து அமர்கிறது. 
ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது. ஆந்தை தலையில் வந்து அமர்வதை அங்குள்ள மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. தலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆந்தை கிளம்பிய பிறகு நகர்கிறார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். 


ஆந்தைகளின் இந்தச் செயல் மூலம் தங்களுடைய கிராமம் பிரபலமடைந்து வருவதாக அங்குள்ளவர்கள் பெருமைப்படுகிறார்கள். கேமராவைப் பார்த்துவிட்டால் இன்னும் உற்சாகமாகி, தலையில் அமர்ந்தபடி நன்றாகக் காட்சி தருகின்றன ஆந்தைகள். 


அடடா! எவ்வளவு துணிச்சல்!  3) தியாகையர் ஆனந்தபைரவி ராகத்தில் மூன்றே பாடல்கள்  இயற்றியுள்ளாராம்.  காரணம் திரிபுவனம் சுவாமிநாத ஐயர்.

                                                      Image result for thyagaraja swamigal images

யார் இவர்?


ஆனந்த பைரவி ராகத்தை மட்டுமே கற்றுத் தேறி, எந்த ஊரில் கச்சேரி நடத்த வாய்ப்பு கிடைத்தாலும் அந்த ராகத்தைப் பிழிந்து எடுத்து விடுவாராம் அவர்.

இவர் புகழைக் கேள்விப்பட்டு,
திருவையாறில் ஒருமுறை அவர் நடத்திய கச்சேரியை தியாகையரே நேரில் வந்து கேட்டு, ரசித்துப் பாராட்ட, திரிபுவனம் சுவாமிநாத ஐயர் மகிழ்ந்து போனாலும் தியாகையரிடம் ஒரு வரம் கேட்டாராம்.  அவர் என்ன கேட்கப் போகிறார் என்று தெரிந்தும் 'தந்தேன்' என்று வரமளித்து விடுகிறார் தியாகையர்.                                                                     Image result for thyagaraja swamigal images
 

இனி தியாகையர் ஆனந்த பைரவியில் பாடல் இயற்றக் கூடாது என்பதே வரம்.  அதனாலேயே தியாகையர் அதற்கு முன்னாலேயே இந்த ராகத்தில் இயற்றியிருந்த 'ராம ராம நீ வாராமு', 'க்ஷீர சாகர விஹார', 'நீகே தெலியக' என்கிற மூன்று பாடல்களைக் கூட அவர் அப்புறம் பாடுவதுமில்லை, சிஷ்யர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லையாம். 

அப்புறம் ஆனந்த பைரவியில் அவர் பாடல் இயற்றவுமில்லை.

அந்த பழைய மூன்று கிருதிகளைக் கூட
முன்னரே பாடமாக்கிக் கொண்ட சில சீடர்களாலேயே இந்தப் பாடல்கள் வெளியுலகுக்குத் தெரிந்தனவாம். 
(படித்தது)

படங்கள்  :  இணையத்திலிருந்து.25 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

முதியோர் இல்லத்தில் இளைஞர்கள்
அருமையான யோசனை

ரூபன் said...

வணக்கம்

நல்ல சிந்தனை... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்

நல்ல சிந்தனை... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

R.Umayal Gayathri said...

முதியோர் இல்லங்களில் இளைஞர்கள் சூப்பர் ஐடியா...இங்கு விரைவில் அதுமாதிரி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்,

ஆந்தை ஆச்சரியமான சந்தோஷமாக இருக்கிறது,

தியாகையர்...தலைவணங்குகிறேன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

முதியோர்கள் இல்லங்களில் அவர்களுடன், இளைஞர்கள் தங்குவது,நல்ல யோஜனை. இதனால் ஒருவரையொருவர் புரிந்துணர்வு, முதியோர்களின் சந்தோஷங்கள் என படிக்கவே மனதுக்கு மகிழ்வாக உள்ளது. நம்நாட்டிலும் இது துவங்கினால், தனிமை நோய் முற்றிலும் மறையும்.
துவங்க வேண்டுவோம்.

ஆந்தைகள் திடீரென்று தலை மீது வந்தமர்ந்தால் பயமாய் இருக்காதோ?
பழக்கம் பயத்தை குறைக்குமோ? ஆயினும் ஆச்சரியமான சுவாரஸ்யமான விஷயந்தான்.

தியாகையர்..பற்றி.. இந்த விஷயம் தாங்கள் பகிர்ந்ததை படித்ததும் எனக்கும் எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. அவருடைய பெருந்தன்மைக்கு நாம் என்றும் தலை வணங்குவோம்.நன்றி.

என் வெளியூர் பயணத்தில் பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்திடாமைக்கு வருந்துகிறேன்.முந்தைய பதிவுகளை விரைவில் படித்து கருத்திடுகிறேன். நன்றி..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

பழனி. கந்தசாமி said...

நான்கு நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

sury Siva said...

எனக்கு என்னவோ அந்த சுவாமிநாதன் கேட்ட வரம்
சரி எனத் தோன்றவில்லை.

தான் ஒரு குறிப்பிட்ட
காரியத்தில், அல்லது பொருளில் திறமை வாய்த்தவர் என்பதற்காக, மற்ற எவரும் அந்த காரியத்திர்குள்ளே வரக்கூடாது என்று
சொல்வது அல்ல நினைப்பது கூட மனதில் ஏற்படும் பொறாமை தான் என நினைக்கத் தோன்றுகிறது.

இரண்டாவது விஷயம் சொல்லவேண்டும். ராகங்களைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ராகத்திற்கும் ஆரோஹனம், அவரோஹனம் என்று ஸ்வரங்களை சீர் படுத்தி இருப்பினும், அதை எந்த வாறு அந்த ஸ்வரங்களை உபயோகப்படுத்தி, பாடுவது, முக்கியமாக ஆலாபனை அல்லது, கீர்த்தனை நடுவே ஸ்வரங்கள் பாடுவது அவரவர் கற்பனை திறம், அதன எல்லை யைப் பொறுத்தது.

அண்மையில், இளைய ராஜா அவர்கள் மோகனம் என்று நினைக்கிறேன். ஆரோகனத்தில் மட்டுமே ஒரு பாட்டு முழுக்க ஸ்வரம் இட்டு இருக்கின்றார். இதுவரை இசை உலகில், எந்த ஒரு கம்பொசருமே நினைத்துப் பார்க்ககூட சாதனை இது.

இன்னொரு சமயம், ஒரு ராகத்தில் மூன்று ஸ்வரங்களை மட்டும் எடுத்து பிரயோகம் செய்து இருக்கிறார்.

இதெல்லாம் முக்கியமாக கர்நாடாக சங்கீதம் ஒரு எவலூஷணரி ப்ராசஸ் ல் இன்னமும் இருக்கிறது பால முரளி சில புதிய ராகங்களை வகுத்து இருக்கிறார்.

நல்ல வேளை .. அந்த சுவாமிநாதன் ஆனந்த பைரவி ராகத்தை தான் மட்டும் தான் பாடவேண்டும் என்று சொல்லவில்லை.

தானும் சிறக்கவேண்டும். மற்றவர்களும் சிறக்கவேண்டும் என்று நினைப்பதுவே மனித நேயம்.

அது தான் வின் வின் சிச்சுவேஷன்.

சுப்பு தாத்தா.

திண்டுக்கல் தனபாலன் said...

புதுமையான யோசனை சிறப்பு...

ஆந்தை... ஐயோ...

Geetha Sambasivam said...

நாங்களும் முதியோர் இல்லம் சென்று விடலாம் என்று தான் நினைத்திருந்தோம். எங்கள் நெருங்கிய நண்பர் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் சங்கர்குமாரும் அதான் சொன்னார். அவர் நண்பர் பெண்களூரில் ஒரு இல்லம் திறந்திருப்பதாகவும் அங்கே செல்லும்படியும் இன்னும் வயதாகி ரொம்ப முடியாமல் போன பின்னர் போகவேண்டாம். இப்போது தெம்பு இருக்கையிலேயே போயிடுங்க என்றார். ஆனால் எங்க பையருக்கு அது இஷ்டம் இல்லை.

Geetha Sambasivam said...

கோவையில் தபோவனம், பெண்களூரில் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் நடத்தும் முதியோர் இல்லம் ஆகியவை எங்களுடைய ரசனைக்கு ஏற்றாற்போல் தெரிந்தது. விபரங்கள் கூடச் சேகரிக்க ஆரம்பித்தோம். அதுக்குள்ளே பையர் இங்கே வீடு வாங்கிட்டார். ஆகவே இப்போதைக்குப் போக முடியாது. ஆனால் உள்ளூர போக முடியலையே, போயிருக்கலாமோனு ஒரு எண்ணம்.

Geetha Sambasivam said...

எங்களுக்குத் தெரிந்து இரண்டு பேர் கோவையின் இன்னொரு முதியோர் இல்லம் சென்று சில மாதங்கள் தங்கி விட்டுப் பின்னர் பிடிக்காமல் சொந்த இடத்துக்கே திரும்பி விட்டார்கள். இருவரும் சென்னை அண்ணா நகரிலும், திருவான்மியூரிலும் உள்ள அவங்க வீட்டை வாடகைக்கும் விடாமல், விற்கவும் விற்காமல் பூட்டி வைச்சிருந்தாங்க. ஆகையால் திரும்பிச் செல்ல வசதியாக இருந்தது. இதைத் தவிரவும் சொந்தக்காரர்கள் சிலர் முதியோர் இல்லத்தில் இருந்திருக்காங்க. இப்போவும் இருக்காங்க. நம்ம "இ" (இன்னம்புரார்) சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் நடுவிலே தான் ஏதோ ஓர் முதியோர் இல்லத்திலே இருக்கிறார். நல்லா இருக்குனு சொல்றார். :)

Geetha Sambasivam said...

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முதியோர் இல்லத்தில் கஷ்டப்பட்டதாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். இத்தனைக்கும் அது தான் தமிழ்நாட்டின் முதல் முதியோர் இல்லம். :(

Geetha Sambasivam said...

ஆந்தை உட்காருவதை நினைச்சாலே கிலியா இருக்கு! :)

Geetha Sambasivam said...

தியாகையர் விஷயம் படிச்சிருக்கேன். உண்மையா, பொய்யானு தெரியாது. ஆனால் இப்படி நிபந்தனை விதிச்சதன் மூலம் சங்கீத தேவதையையே அந்த சுவாமிநாத ஐயர், அவமதிச்சுட்டதா எனக்குத் தோணும். யாரும், யாரையும் எதற்கும் கட்டுப்பாடு பண்ணக் கூடாது. எனக்குக் கவிதை எழுத வராது. அதே என்னோட அண்ணா பெண் கவிதையில் பிச்சு உதறுவா. எனக்கு வராதுங்கறதாலே அவ கிட்டே நான் நீ கவிதையே எழுதக் கூடாதுனு சொல்லலாமா? சொல்வது தான் முறையா? தியாகையர் மேல் மதிப்புக் கூடுகிறது.

Geetha Sambasivam said...

சுப்புத்தாத்தாவின் கருத்தையும் இப்போது தான் பார்த்தேன். அவர் கருத்துத் தான் என் கருத்தும். (ஏதோ இது ஒண்ணிலேயாவது ஒத்த கருத்தாக இருக்கே!) :P :P :P :P

Geetha Sambasivam said...

முதியோர் இல்லத்தில் இளைஞர்களைத் தங்க வைப்பது வெளிநாடுகளில் சாத்தியமாக இருக்கலாம். நம் நாட்டில் முடியுமா? சந்தேகமே! :(

ராமலக்ஷ்மி said...

முதலாவது, முயற்சி நல்ல பலனைத் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. மற்ற நாடுகளிலும் இது பரவினால் நல்லதே. உண்மையில் ஆர்வமும், சேவை மனப்பான்மையுடைய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தங்க வைக்கலாம்.

ஆந்தையைத் தனியே படமெடுப்பதே பெரும் சிரமம். தானாக வந்து போஸ் கொடுத்தால் விடுவார்களா:)?

G.M Balasubramaniam said...

இலவச தங்கும் வசதிக்கு மாதம் 30 மணிநேரம் முதியோருடன் கழிப்பது பெரிய விஷயமில்லை. இலவசத்துக்கு கட்டாய சேவை. தலையில் ஆந்தை. ஒருவேளை பழக்கப் படுத்தப்பட்டவையா. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பகிர்வுக்கு

Ranjani Narayanan said...

முதியோர் இல்லத்தையும், குழந்தைகள் காப்பகத்தையும் இணைப்பது போல ஒரு விளம்பரம் வருகிறதே, இந்த செய்தியைப் பார்த்துத்தானோ என்னவோ?

@சுப்பு ஸார்
ஏற்கனவே இளையராஜா சிந்துபைரவி படத்தில் கல்யாணியின் ஆரோகணத்தில் மட்டும் 'கலைவாணியே' பாடலை போட்டிருக்கிறாரே, தகவல் சரியா, தவறா என்று தெரியவில்லை.
தோடி ராகத்தை அடகு வைத்து ஒரு கதை - தோடி ராகம் என்றே வந்தது - டி.என் சேஷகோபாலன் நடித்திருந்தார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இதெல்லாம் அவர்களது (சங்கீத வித்வான்களின்) பெருமையைப் பேச வந்த கதைகள். நிஜத்தில் நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஸ்ரீராம். said...

* நன்றி கரந்தை ஜெயக்குமார்.

நன்றி ரூபன்.

நன்றி உமையாள் காயத்ரி.

நன்றி கமலா ஹரிஹரன்.

நன்றி பழனி.கந்தசாமி ஸார். (நான்கா?)

நன்றி சுப்பு தாத்தா. உங்கள் பதிவிலும் பதில் சொல்லி விட்டேன்! உங்கள் கருத்துதான் எனக்கும். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா, அல்லது வெறும் கற்பனைதானா என்றும் சந்தேகம் உண்டு.

நன்றி டிடி.

நன்றி கீதா மேடம். முதியோர் இல்லம் செல்வது பற்றி முன்னரே ஓரிருமுறை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனது கடைசி காலத்தில் ராமச்சந்திரா மருத்துவமனையில்தானே இருந்தார்? அவர் வேறு எழுத்தாளரா? நம் நாட்டில் முதியோர் இல்லங்களில் இளைஞர்களை வைத்தால் என்னதான் ஆகும்?!!

நன்றி ராமலக்ஷ்மி. ஆந்தை பற்றி ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில் உங்கள் பார்வை, பதில் சுவாரஸ்யம்.

நன்றி ஜி எம் பி ஸார்.

நன்றி ரஞ்சனி மேடம். நீங்கள் சொல்லி இருக்கும் பாடலைத்தான் நானும் அவர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

Geetha Sambasivam said...

கவனிப்பாரில்லாமல் இருந்த திருமதி ராஜம் கிருஷ்ணனை விஸ்ராந்தியில் சேர்த்தது அப்போதைய திலகவதி ஐபிஎஸ் அவர்கள். அங்கே அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடல்நிலையும் மோசமாகவே கடைசியில் ராமச்சந்திராவுக்குப் போயிருக்கலாம். எனக்குத் தெரிந்து விஸ்ராந்தியில் தான் இருந்தார்கள். வாரப் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்துக் கூடப் போட்டிருந்தது.

Geetha Sambasivam said...

இப்போ சில நிகழ்வுகளை எல்லாம் பார்க்கையில் முதியோர் இல்லம் செல்வதற்கும் யோசிக்க வேண்டி இருக்கிறது. முடியலைனால் பேசாமல் ஒரு ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக வேண்டியதுதான். :))))))

Geetha Sambasivam said...

நான் இன்னமும் சுப்புத்தாத்தா பதிவைப் படிக்கலை. நேத்தே கூப்பிட்டிருந்தார். போக முடியலை!

Thulasidharan V Thillaiakathu said...

முதியோர் இல்லம் யோசனை நன்றாகத்தான் இருக்கிறது...

ஆந்தை தகவல் ஆச்சரியமாக இருக்கு

தியாகையர் ஏன் அந்த வரத்தை அளித்தார் என்று தெரியவில்லை. சம்பவமே உண்மையா கற்பனையா என்று....அதுவும் வரலாற்றில் இடைச்க் செருகல்கல் அதிகம்....சுவாமிநாட ஐயர் செய்தது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்று இல்லை.

Thulasidharan V Thillaiakathu said...

ரஞ்சனி மேடம், நீங்கள் சொல்லி இருப்பது சரியே சிந்துபைரவியில் கல்யாணி ஆரோகணத்தில் தான் அந்த கலைவாணியே பாடல்......

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!