வெள்ளி, 15 அக்டோபர், 2010

தங்கையே தனக்குதவி (சவால் சிறுகதை)

2010 October 10. 

இரவு மணி ஒன்பது. 

காமினி கம்பியூட்டரில் கேம் ஆடிக்கொண்டிருந்தாள். மெளனமாக ஒரு பாப் அப் ... நியூ மெயில் ஃப்ரம் மாலினி இன் யுவர் இன் பாக்ஸ்! 
(இணைபிறப்பு) சகோதரியிடமிருந்து  தனக்கு வந்த ஈ மெயிலைப் படித்து திகைத்துப் போனாள். 
    
"காமினி, மிக அவசரம். போலீஸ் என்னைப் பின் தொடர்கிறது. உடனே புறப்பட்டு வா. என்னை இக்கட்டிலிருந்து விடுவிக்க, உன்னால் மட்டுமே முடியும். நீ செய்யவேண்டியது ரொம்ப சுலபமான விஷயம். நான் இன்னும் சற்று நேரத்தில் பாலாஜி ஹாஸ்பிடலில் (ஃபோன் எண் : 044 - 22.........) எமெர்ஜென்சி வார்டில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் படுவேன். நீ என்னுடைய கைப்பையில் இருக்கின்ற சூயிங் கம் பாக்கெட்டை எடுத்துகொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்துவிடு. பரந்தாமனைப் பற்றி நான் உனக்கு ஏற்கெனவே எல்லா விவரங்களையும் சொல்லிருக்கின்றேன். ஞாபகம் வைத்துக்கொள். பரந்தாமனுக்கும் உன்னிடமிருந்து பாக்கெட்டை வாங்கிக்கொள்ளச் சொல்லி,  மெயில் அனுப்பிவிட்டேன்."  

காமினி, தன் அலைபேசியில் ஹாஸ்பிடல் எண்ணை சேகரித்து வைத்துக்கொண்டாள். 

இரட்டைப் பிறவியான தன அக்கா மாலினியைக் காப்பாற்ற அவ்வப்போது என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது! பணத்துக்காக பல நிழலான வேலைகளைச் செய்து அயோக்கியர்களுக்கு சதியுதவி செய்யும் அக்கா மாலினியை, இரட்டைப் பிறவி என்று சொல்வதைவிட, ஈனப் பிறவி என்று சொல்லிவிடலாம் என்று தோன்றிற்று காமினிக்கு. அந்தப் பாவி பரந்தாமனும் படு அயோக்கியன். ஒரு மாநில அமைச்சரின் அந்தரங்க செயலாளர் இந்த அளவுக்கு கிரிமினல் புத்தியோடு இருப்பாரா! இதுதான் கடைசி உதவி. இனிமேல் அக்கா என்ன சொல்லி, எப்படி அழைத்தாலும் அவளுக்கு உதவுவதில்லை என்று உறுதி பூண்டாள் காமினி. 

இரவு மணி ஒன்பது பத்து.   
முதல்வர் மறுநாள் தன்னுடைய மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபித்தாகவேண்டும். அமைச்சரவை சகாக்களில் தனக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் உள்ளதோ அவர்களை எல்லாம் தன்னை வீட்டிற்கு வந்து சந்திக்க சொல்லியிருந்தார் அவர். அமைச்சர்கள் அண்ணாமலை, அழகேசன், வெள்ளியங்கிரி, மற்றும் போலீஸ் உயர் அதிகாரி எல்லோரும் மீட்டிங் வந்து முதல்வருக்காக காத்திருந்தனர். அமைச்சர் அண்ணாமலைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. படபடவென்று வந்தது. அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் தன்னுடைய சதித் திட்டம் வெளியாகி, தன்னால் மீண்டும் தலை எடுக்கமுடியாமல் போய்விடுமோ 
 
என்று பயந்தார். அவசர அவசரமாக தன் திட்டத்தில் மேற்கொண்டு என்னென்ன மாற்றங்களை செய்வது என்று யோசனை செய்ய ஆரம்பித்தார். முதலில், 'கைமாற இருந்த அந்த வைரத்தை, அந்த மடச்சி மாலினி கைப்பற்றி வந்து பரந்தாமனிடம் கொடுத்துவிட்டாளா இல்லையா' என்று தெரிந்துகொள்ள வேண்டும். பி ஏ பரந்தாமனை ஃபோனில் கூப்பிட்டு, தகவல் தாமதத்திற்கு கன்னா பின்னாவென்று திட்டிவிடவேண்டும் என்று முடிவுடன் அலைபேசியைக் கையில் எடுத்தார். வரவேற்பறையின் கோடியில் இருந்த பாத் ரூமிற்கு சென்றார். 

இரவு மணி ஒன்பது பதினைந்து.    
கம்பியூட்டரை இயங்க வைத்த பரந்தாமன் மாலினியிடமிருந்து வந்திருந்த மெயிலைப் படித்தார். 
"சார், மேட்டர் கைக்கு வந்துவிட்டது. போலீஸ் மோப்பம் பிடித்து பின் தொடர்கிறார்கள். பிடிபட்டால் விஷயம் ரொம்ப விபரீதமாகிவிடும். மேட்டர் உங்க கைக்கு, இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்து சேரும். என் ட்வின் சிஸ்டர் காமினி கொண்டு வந்து தருவாள். (பிளாக் பெர்ரி மூலமாக) மாலினி." 

பரந்தாமனின் அறைக்கதவு தட்டப்பட்டது. கம்பியூட்டரை அவசரமாக ஆஃப் செய்துவிட்டு, பரந்தாமன் கதவைத் திறந்தார். அங்கே சிவா நின்றுகொண்டு இருந்தான். 'இவன் எங்கே பூஜை வேளையில் கரடி மாதிரி?' என்று மனது நினைத்தாலும், "வாப்பா சிவராமா வா, எங்கே இந்தப் பக்கம், இந்த நேரத்தில்?" என்று வாய் வரவேற்றது.  

"எங்கே சார் என்னோட ஆளு? ரெண்டு வாரமாகக் காணோம்?" என்று கேட்டான் சிவா. 

"உன்னோட ஆளா? ஓஹோ மாலினியைச் சொல்றியா? போன மாதம்தான் நீ அவளை மீட் செய்தாய். அதற்குள் உன்னோட ஆளு ஆயிட்டாளா! அவளை நான் பார்த்தும் ரெண்டு வாரம் ஆயிடுச்சே" என்று புளுகினார் பரந்தாமன். 

பிறகு சொன்னார் "சிவா - பாஸ் எந்த நேரமும் கூப்பிடுவேன் என்று சொல்லி முதலமைச்சரைப் பார்க்க சென்றிருக்கிறார். நான் பாத்ரூம் கூடப் போகாமல் அவர் காலுக்காக வெயிட்டிங். ஒரு நிமிடம் இங்கேயே இரு. 
 
பாஸ் கிட்டயிருந்து என்ன கால் வந்தாலும், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் எடு; ஆனால் நீ எதுவும் பேசாதே. உடனே என்னைக் கூப்பிடு' என்று சிவாவிடம் சொல்லிவிட்டு பாத் ரூம் பக்கம் சென்றார் பரந்தாமன். 
"சார் நான் அமைச்சர் அழகேசனின் பி ஏ! உங்க பி ஏ இல்லை!" என்றான் சிவா. 
"அதனால் என்ன? நீ என் நண்பேண்டா ..." என்று சொல்லி சிரித்தவாறு பாத்ரூம் உள்ளே சென்றார்  பரந்தாமன்.  

இரண்டே நிமிடங்களில், சொல்லி வைத்தாற்போல் 
 பரந்தாமனின் அலைபேசியிலிருந்து வித்தியாசமான அழைப்பொலி இசைத்தது. 

சிவா சற்றும் தாமதிக்காமல் அலைபேசியை எடுத்து பச்சைப் பொத்தானை அழுத்தியவுடன், அதிலிருந்து, "பரந்தாமன், மாலினி எங்கே? வைரங்களைக் கொண்டுவந்துவிட்டாளா? ஏன் உன்னிடமிருந்து தகவலே இல்லை? ......" சிவா மேற்கொண்டு கேட்குமுன், 
 பாத்ரூமிலிருந்து வேகமாக வெளியே வந்த பரந்தாமன், அலைபேசியை வேகமாக வாங்கி தன் காதில் பொருத்திக்கொண்டார். சிவாவை சைகையாலேயே வாயைப் பொத்திக்காட்டி, வெளியே செல்லும்படியும் சைகை காட்டினார். 

"....என்ன நான் கேட்டுக்கொண்டே இருக்கேன், நீ பதிலே சொல்லமாட்டேன் என்கிறாய்? மாலினி எங்கே? 
வைரங்களைக் கொண்டுவந்துவிட்டாளா?.." 

தணிந்த குரலில் விவரங்களை, தெளிவாகக் கூற ஆரம்பித்தார் பரந்தாமன். 

அறைக்கு வெளியே வந்த சிவா, செல் ஃபோனில் தான் கேட்ட சில வார்த்தைகளை, திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான். 

இரவு மணி ஒன்பது முப்பது.
மீண்டும் மீண்டும் செல் ஃபோன் வார்த்தைகள் நினைவுக்கு வந்தவுடன் சிவாவுக்கு ஏதோ பொறி தட்டியது.  
ஒரு மாநில அமைச்சரவையையே கவிழ்க்கின்ற சக்தி வாய்ந்த சில வைரங்கள் ஒரு பிரபல ஹோட்டலில் இருக்கிறது என்பதும், அது கை மாறினால், மெஜாரிட்டி தன் பக்கம் இல்லாமல் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்பதும் சிவாவிற்கு வேறு ஒரு ரூட்டில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனால் தெரிந்ததை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டான் அவன். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? 

'இந்த அயோக்கியர்கள் பிடியிலிருந்து மாலினியைக் காப்பாற்ற வேண்டும்'  என்று எண்ணமிட்டவாறு, மாலினி தங்கி இருக்கும் வொர்கிங் வுமன் ஹாஸ்டல் பக்கம் தன் டூ வீலரில், கைத்துப்பாக்கியோடு விரைந்தான். 

இரவு மணி ஒன்பது நாற்பது.     
அக்கா எழுதியிருந்த பாலாஜி ஹாஸ்பிடலைத் தேடிக் கண்டு பிடிப்பது 
 
காமினிக்கு
 
 சுலபமாகத்தான் இருந்தது, இரவு நேரம் என்பதால் விசிட்டர் பாஸ் போன்ற கெடுபிடிகள் ஏதும் இல்லை. எமெர்ஜென்சி வார்டில் விசாரித்து, ஐ சி யூ பக்கம் சென்றாள். ஐ சி யூ நுழைவு வாசலில் ஒரு போலீஸ்காரர் தூங்கி விழுந்துகொண்டு இருந்தார். மயக்கமாக உள்ள மாலினி நிச்சயம் எழுந்து ஓடிவிடமாட்டாள் என்கிற தைரியம் போலும்! 

சுலபமாக ஐ சி யூ வில் நுழைந்துவிட்டாள் காமினி. உள்ளே மாலினி, முகத்தின் மீது ஆக்சிஜன் மாஸ்க், வயர் கனெக்க்ஷன்களுடன் படுத்திருந்த நிலையைப் பார்த்ததும் காமினிக்கு வயிற்றில் ஏதோ சுருண்ட உணர்வு.  'அக்கா, நீ ஏன்தான் இந்தமாதிரி ஆபத்துகளில் எல்லாம் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்கிறாயோ' என்று நினைத்தாள். அக்காவின் கைப்பையிலிருந்து சூயிங் கம் பாக்கெட்டை எடுத்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டாள். பிறகு அந்தப் பையை ஜாக்கெட்டினுள் செருகிக் கொண்டாள். 
   
அப்போ ஒரு நர்ஸ் ஓடிவந்தாள். வரும்பொழுதே "நைட் டூட்டி டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். பேஷண்ட் தவிர வேறு யாரும் இருக்காதீங்க. அஞ்சு நிமிஷத்துல இடத்தை காலி பண்ணுங்க" என்று சத்தமாக சொல்லிக்கொண்டே போனாள். ஆஹா, இந்த நேரத்தில் வெளியே சென்றால், டூட்டி டாக்டர் அமளியில் அந்த அரைத் தூக்க போலீஸ்காரர் நிச்சயம் விழித்துக் கொண்டிருப்பாரே! என்ன செய்யலாம்? காமினிக்கு அவசரத்தில் ஒரு யுக்தி தோன்றியது. உடனே அவசரமாக, காலியாக இருந்த பக்கத்து படுக்கையில் படுத்து, கைக்குக் கிடைத்த வயர்கள் டியூப்கள் போன்றவைகளை தன் கைகளில் இழுத்து சுருட்டிக் கொண்டு, மாஸ்கை எடுத்து முகத்தின் மீது வைத்துக்கொண்டு நீல நிறப் போர்வைக்குள் தன் கைகளை மறைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருப்பவளைப் போல நிச்சலனமாகக் கிடந்தாள். 

காமினி பக்கம் கொஞ்சம் அதிருஷ்டம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஐ சி யூ விற்குள் ஒவ்வொரு பேஷண்டையும் பார்த்து, டிரிப் சீட் பார்த்து, நர்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, வந்துகொண்டிருந்த டாக்டரின் அலைபேசி அவர் மூன்றாவது பேஷண்டை விட்டு விலகியதும், ஒலிக்கத் தொடங்கியது. அதை எடுத்து அவர், "எஸ் ஸ்பீக்கிங்,,,, ஓஹோ ஈஸ் இட்? ஓ காட்! உடனே சர்ஜரி ஏற்பாடுகள் செய்யுங்கள் - ஐ வில் கம் தேர் இன் அ மினிட். .." என்று சொல்லியவாறு, வேகமாக நடக்கத் தொடங்கினார். ஆனாலும் நர்சிடம், " நர்ஸ், எது போலீஸ் கேஸ் அட்மிஷன்?" என்று கேட்டார். நர்ஸ் மாலினி படுக்கையைக் காட்டியவுடன், அவளை ஒரு பார்வையும், அவளுடைய கேஸ் ஷீட்டை ஒரு பார்வையும் பார்த்துவிட்டு, "மீதி எல்லாம் எமெர்ஜென்சி ஆப்பரேஷன் முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி அவசரமாக ஐ சி யூ விலிருந்து அகன்றார். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.    

இரவு மணி ஒன்பது ஐம்பது. 

வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் சென்ற சிவாவுக்கு ஹாஸ்டல் வார்டன் சொன்ன செய்தி அதிர்ச்சியளித்தது. என்ன? மாலினி உயிருக்குப் போராடும் நிலைமையில், பாலாஜி ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டிருக்கின்றாளா! இவளுக்கு எதற்கு இந்த வைர விளையாட்டெல்லாம்? 

பாலாஜி ஹாஸ்பிடலை நோக்கி வந்துகொண்டிருந்த சிவாவின் கவனத்தை ஈர்த்தது சுற்று முற்றிலும் பார்த்துக் கொண்டே வந்த உருவம். அட மாலினி! 

டூ வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவள் எதிரே போய் நின்று, "மாலினி, நில்" என்றான். 

காமினி நிற்கவில்லை. இன்னும் வேகமாக நடக்க முயன்றாள். அவன் தொடர்ந்து பின்னாலேயே வந்து, "மாலினி, உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்.  இந்த வைர சமாச்சாரங்களில் எல்லாம் நீ தலையிடாதே. உன்னிடம் இருக்கின்ற அந்த சனியனை தூர எறிந்துவிட்டு நீ எங்கேனும் கண் காணாத இடத்துக்கு சென்றுவிடு." 

காமினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

சிவா மேலும் சொன்னான். "பரந்தாமன், பரம அயோக்கியன். அண்ணாமலைக்காக   என்ன வேண்டுமானாலும் செய்வான். யாரையாவது பலி கொடுத்து, அமைச்சர் தலையைத் தப்ப வைக்கவேண்டும் என்றால் கூட உன்னை பலி கொடுத்து அமைச்சரிடம் அவனுக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டுவான். நான் சொல்வதைக் கேள் மாலினி." 

அப்பொழுதும் தொடர்ந்து காமினி தன் வழியில் நடக்கத் தொடங்கினாள். 

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. 
   
"மாலினி, இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேட்டு நட. அந்த சனியனை தூக்கி எறி. உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்."  

காமினிக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.   பிறகு ஒருவாறு சமாளித்து, "சார். உங்க பேரு என்ன என்று கூட எனக்குத் தெரியாது. ஆனா, நான் மாலினி இல்லை. அவள் பாலாஜி ஹாஸ்பிடல் ஐ சி யு வில் சுய நினைவு இன்றி படுத்திருக்கின்றாள். அவளைப் போய்க் காப்பாற்றுங்கள். நீங்க சொல்லுகின்ற வைரம் இப்போ அவள் கிட்ட இல்லை. அதனால கவலை இல்லாமல் போங்க." என்றாள். 

அவள் குரலைக் கேட்டதும் குழப்பமடைந்த சிவா, " நீ .... நீங்க ... மாலினி இல்லையா? .. அ யாம் சாரி" என்று சொன்னவாறு தன் டூ வீலரில் ஏறி பாலாஜி ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். 

காமினிக்கு சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அக்காவைப் பார்த்துக்கொள்ள ஒரு நம்பகமான ஆள் கிடைத்துவிட்டார்! பக்கத்தில் காலியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, செல்லவேண்டிய இடத்தைச் சொன்னாள். 

இரவு மணி பத்து பத்து.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். 

முகத்தில் புன்னகையுடன், மனதுக்குள் 'சரிதான் போய்யா யாருக்கு வேண்டும் உன் பாராட்டு எல்லாம்? என் அக்காவைக் காப்பாற்றிவிட்டேன், அது போதும்' என்று நினைத்தவாறு வெளியே வந்தாள் காமினி. 
        

12 கருத்துகள்:

 1. Good! வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  (மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

  பதிலளிநீக்கு
 2. Madhavan said...

  Good! வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  (மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)////


  அதனால தான் நாம் போட்டில கலந்துக்கல.

  பதிலளிநீக்கு
 3. நன்று. வாழ்த்துக்கள்!

  (பிளெக்பெரி கோணம் சுவாரசியமானது.)

  பதிலளிநீக்கு
 4. ரைட்டு தமிழ் உதயம். நீங்களும் நானும் கலந்துகிட்டா ஒரு இது பண்ணியிருப்போம்ல? அதான்.. ஒரு இது..

  (அப்பாடி.. ஒரு ஐடியாவும் தோணாலனு இனி சொல்ல வேணாம்)

  பதிலளிநீக்கு
 5. கதை நல்லா இருக்கு, வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. இதெல்லாம் ரெம்ப ஓவருங்....காமினியை கெட்டவரா சித்தரிக்க கூடாதுன்னு அப்படியே ஒரு ஜெராக்ஸ் எடுத்து அதை கெட்ட பொண்ணா ஆக்கிட்டீங்க. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். :)))

  பதிலளிநீக்கு
 7. நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

  பதிலளிநீக்கு
 8. இப்போதான் படிச்சேன். விதிமுறைகளை மீறாமல், பிரமாதமாக எழுதியுள்ளீர்கள். நானும் போட்டியில் பங்கேற்றுள்ளதால், இங்கே அனானி கமெண்ட் போட்டுள்ளேன்!

  பதிலளிநீக்கு
 9. சவால் முடிவுகளை இப்பத்தான் படிச்சேன்... இந்தக் கதை டாப் 15ல வந்திருக்கே? வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!