திங்கள், 4 அக்டோபர், 2010

பொடி விஷயம்...

அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ விஷயங்கள் இந்தக் காலத்தில் கண்ணை விட்டு மறைந்து விட்டன. கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தை விட்டு மறையாது. சிட்டுக் குருவி, பருந்து என்று பல உண்டு! அந்த வரிசையில்...

   
சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. அதைப் பற்றி படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் இருந்த போது கொண்டாடப் பட்ட கும்பாபிஷேகம் என்று நினைக்கிறேன்... நினைவுகள் வந்து போயின. வேஷ்டி கட்டத் தொடங்கிய புதிது. அரசுக் குடியிருப்பில் இருந்தோம். மேம்பாலம் வழியாக இறங்கி இடது பக்கமாக போய் வலது பக்கம் போனால் கோர்ட்) புதாற்றை ஒட்டி இடது பக்கம் திரும்பினால் பெரிய கோவில். தாண்டிச் சென்று இடதுபுறமாகப் போனால் சிவகங்கைப் பூங்கா. ராஜராஜன் சிலையை ஒட்டி வலது புறம் திரும்பினால் மத்திய நூலகம், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி வழியாக பஸ் ஸ்டேண்ட் அடையலாம். அந்த கும்பாபிஷேகம் சமயம் இந்தப் பாதையில் தான் பயங்கரக் கூட்டத்தில் மாட்டி, வேஷ்டி எப்போது எங்கே விழுந்தது என்று தெரியாமல் அலமலந்து ஓடி, திலகர் திடல் குட்டிச் சுவர் ஏறி, நரகல் குவியலில் குதித்து ஒரு ரிக்க்ஷா பிடித்து அப்பா, அண்ணன் தயவில் மானத்தை மறைத்து, பத்திரமாக வீடு வந்து சேர்ந்த நினைவுகள் எல்லாம் வந்தன...!     
   
ஆனால், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல...!

அப்போதெல்லாம் இந்த மாதிரி விழாக்காலங்களிலும், இன்னும் ஏதேதோ கண்காட்சி போன்ற கூட்டம் கூடும் நாட்களிலும் மக்கள் கவனத்தைக் கவர்வது பல விளம்பரங்களுக்கு நடுவில் காணப் படும் (மூக்குப்) பொடி விளம்பரம். என் வி எஸ் என்று நினைக்கிறேன்,(டி ஏ எஸ்? ) வேஷ்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியது போன்ற உருவகத்துடன் ஒரு மனிதன் உட்கார்ந்து பொடி இடிப்பது போன்ற விளம்பரம். பின்னர் விளக்குகள் போடப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டு, கைகள் உரலில் இடிப்பது போல மேலும் கீழும் சென்று வரும் . இது அந்நாளில் புதுமை. அந்நாளில் குடைராட்டினத்துக்கு இணையாக இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் சேரும்.

இப்போது முதல் பாராவை மறுபடி படிக்கவும்.

நாகப்பட்டினத்திலிருந்து என் தாத்தா தஞ்சை வருவார். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். செம்மங்குடி பற்றியும் மதுரை மணி கச்சேரி சென்று வந்த அனுபவங்கள் பற்றியும் பேசுவார். சிறுவர்களிடம் அவர்களுக்கு இணையாகப் பேச்சு கொடுப்பார். ஒன்றும் தெரியாதது போல கேள்விகள் கேட்டு எங்கள் அறிவைச் சோதிப்பார். நான் அதில் ஒரு போதும் தேறியதில்லை! எங்களுடன் செஸ் விளையாடுவார். ஜோதிடம் பற்றி பேசுவார். மொத்தத்தில் சகலகலாவல்லவர். எதைப் பற்றி வேண்டுமானாலும், யாரிடம், எந்த வயதினரிடம் வேண்டுமானாலும் பேசுவார்.  அரசியலை விவாதிப்பார். பேச்சில் பொறி பறக்கும். என் அப்பாவுக்கும் அவருக்கும் குடுமி பிடி சண்டைக்கு இணையாக தடித்த பேச்சு வார்த்தைகள் பறக்கும். மாமனார் Vs மாப்பிள்ளை விவாதங்களை நாங்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். சண்டை கைகலப்பில் முடியுமோ, தாத்தா ஊருக்குக் கிளம்பி விடுவாரோ என்று பயமாக இருக்கும்.   

அவர் ஊர் சென்று விட்டால் சுவையான பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லாமல் போய் விடும் என்பது மட்டுமில்லை, தாத்தா சுவைப் பிரியரும் கூட. சாப்பாட்டில் பக்குவம் சொல்வது, புதுப் புது காம்பினேஷன்களில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது என்று கலக்குவதோடு அவர் ஒரு சிறிய அலுமினியப் பெட்டி வைத்திருப்பார். அதிலிருந்து காசு எடுத்து வெள்ளை அப்பம், பஜ்ஜி, காராச் சேவு மற்றும் இன்ன பிற நொறுக்குத் தீனிகளுக்கு மாலை நேரங்களில் வழி செய்வார். 'உன் கூட யார் பேசுவா' போன்ற இறுதிக் கட்ட வசனங்களுடன் கோபமாகப் பிரியும் மாமனாரும், மருமகனும் இரவு உணவின்போதோ, மறுநாளோ மிகச் சாதாரணமாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே உண்டாகும். தாத்தா பற்றி தனிப் பதிவே போடலாம்!  ஆனால், பதிவு அவரைப்  பற்றியும் அல்ல...!

அந்த தாத்தா தன்னுடைய வேட்டி மடிப்பில் ஒரு வாழை நார்ப் பொட்டலம் வைத்திருப்பார். பாடல் ராகம் இழுத்துக் கொண்டே அல்லது சுவையான விவாதங்களுக்கு நடுவே, அல்லது படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு'வை லேசாக மடித்து இடுக்கிக் கொண்டு... மிக ஜாக்கிரதையாக அந்தப் பொட்டலத்தை உள்ளங்கையில் வைத்து லேசாக ரெண்டு தட்டுத் தட்டி, ஜாக்கிரதையாகப் பிரிப்பார். மெல்லத் திறந்து கட்டை விரலாலும், நடு விரலாலும் ஒரு சிமிட்டா அதிலிருந்து எடுப்பார். மூக்கின் இரு துளைகளிலும் சமமாகப் பங்கிட்டு கண்ணை மூடி 'சர்.ர்..ர், சர்..ர்...ர்..' என இழுப்பார். சிலபல தும்மல்கள். இதற்காகவே இடுப்பில் நிரந்தரமாகச் சொருகியிருக்கும், இப்படி துடைத்து துடைத்தே நிறம் மாறி பழுப்பாகிப் போன கைக்குட்டையை வைத்து துடைத்துக் கொள்வார். சில சமயங்களில் அது நார்ப் பொட்டலமாக இல்லாமல் நீள் உருளையாக தகர டப்பி ஒன்று வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்துப் போடுவார். அவருக்கு அவர் பெயர் போட்ட எவர்சில்வர் டப்பா ஒன்றை அவருடைய பையன் ஒருவர் செய்து கொடுத்திருந்தார் (தந்தைக்கு மகன் ஆற்றிய உதவி - பெயர் சொல்லும் டப்பா!) இன்னொரு பொடிப் பிரியர் அருகிலிருந்தால் அவருக்கு ஒரு சிமிட்டா கிடைக்கும். 'மூக்கு அடைப்பு, ஜலதோஷம்லாம் கிட்ட அண்டாதுடா' என்பார்.      
           
மூக்குப் பொடி எதனால் செய்யப் பட்டது என்று எங்களுக்குள் விவாதம் நடக்கும்.. 'காபிப் பொடியில் காரம் கலப்பார்கள்' என்பான் ஒருவன். 'காய்ந்த புகையிலைப் பொடிடா' என்பான் இன்னொருவன்...

அந்த பொடி மட்டையை இப்போதெல்லாம் காணோம்! இப்போதெல்லாம் யார் கையிலும் பொடி மட்டை வைத்து அல்லது பொடி போட்டுக் கூட நான் பார்க்க நேர்வதில்லை. எங்கேயும் பொடி விளம்பரங்களையும் காணக் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு கடைகளில் பொடி விற்பார்கள். தாத்தா இருபத்தைந்து பைசாவுக்கோ எட்டணாவுக்கோ பொடி வாங்கி வரச் சொல்வார். கடைக் காரர் இதற்கென்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப் பட்ட ஸ்பூன் ஒன்று வைத்திருப்பார். நீளக் குச்சியில் குழிந்த அடிப்பாகம் கொண்ட 'எடுப்பான்'. அதை மூக்குப் பொடி ஜாடிக்குள் விட்டு காசுக்கு தகுந்தாற்போல அளவில் எடுத்து, பதம் அல்லது பாடம் செய்யப் பட்ட நார்ப் பொட்டலத்தில் கட்டித் தருவார்கள். இதற்கென்றே வாழை மட்டைச் சருகு எடுத்து காய வைத்து அடித்து பதப் படுத்தி வைத்திருப்பார்கள். சமீப காலங்களில் எந்தக் கடையிலும் பொடி விற்பனை செய்யும் அரிய காட்சியைக் காண முடியவில்லை. நான் போகும்போது யாரும் வாங்குவதுமில்லை. வழக்கொழிந்து போய் விட்டதோ? என்று எண்ணுகின்ற அளவு என் கண்பட யாரும் பொடி போடுவதும் இல்லை...! நல்ல வேளை - நாடு முன்னேறிவிட்டது, ஒரு புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு. 
        
இன்றைய இளைய சமுதாயம் பொடியை புறக்கணித்து மறந்து விட்டதா?  அல்லது, 'உமிழ்தல், உறிஞ்சுதல், ஊதுதல்' (tobacco chewing and spitting, snuff, smoke) ஆகிய மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டை மறந்து ஒன்றில் விழுந்துவிட்டார்களா? மூன்றையும் விட்டுவிட்டால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாமே!     
                                            

46 கருத்துகள்:

 1. பொடி மறந்தால் என்ன. வேறு வேறு பழக்கங்கள் கால மாற்றத்திற்கேற்ப வசதி வாய்ப்புக்கேற்ப வந்து கொண்டு தானிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. காணாமல் போன இன்னும் சில பொடி வகைகள்: பருப்புப்பொடி, தேங்காய்பொடி, நார்த்திலைப்பொடி, எள்ளுப்பொடி.

  பதிலளிநீக்கு
 3. சொல்ல மறந்திட்டேன்.கௌதமன் அவர்களுக்கு என் நன்றி.எனக்கு என் பக்கத்தில் பதில் தந்திருந்தார்.
  எனக்குத் தெரியும் ஸ்ரீராம்,நீங்கள் இருவரும் எங்கள் புளொக் ஆசிரியர்கள் என்று.என்றாலும் ஒருதரம்கூட என் பக்கம் வரவில்லையென்கிற ஒரு ஆசையும் ஆதங்கமும்தான்.வந்ததுக்கு நன்றி கௌதமன் அவர்களுக்கு.

  இந்தப் பதிவைப் படிக்கும்போது மெல்லிய புகைபோல ஒரு ஞாபகம் திடீரென்று வருகிறது.முகம்கூட அலைபோல...மூக்குப்பொடித்தாத்தா.ஓமப்பொடியும் பல்லிமுட்டாய் இனிப்பும் வாங்கித் தந்திருக்கிறார்.
  எப்போதும் நிறைவெறியில் தள்ளாடியபடி ஆனால் சின்னக்குழந்தைகள் சூழத்தான் ஞாபகம் தெரிகிறது.நிச்சயமாக 20 வருடத்துக்குமுன்.இப்போது அவர் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.
  அப்போதே வயதான தாத்தா அவர்.நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஆயிரம் ஆண்டுகளா! wow! விழா எப்படி, தடபுடலா? தெரியவே தெரியாதே? செம்மொழி எந்திரன் நடுவில் தஞ்சை கோவிலை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று அமைதியான விழாவா? உங்க பதிவில் தான் முதலாகப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 5. பொடிசா ஆரம்பிச்சு சமுதாய நலன் என்று பெரிசாய்த்தான் முடிகிறது பதிவு.

  சிறு வயது ஞாபகங்களை கிளறுகிறது!

  பதிலளிநீக்கு
 6. "பொடி" மலரும் நினைவுகள் வாசனையா இருக்கு!!

  பதிலளிநீக்கு
 7. @appadurai
  periya vizha nadanduche ? gavaniklalya ??? en maama, chitthappa ellam poduvar. naanum pottu irukiren, urakkam varamal irukka ubayogithu ullen

  பதிலளிநீக்கு
 8. பொடிசா இருந்தப்ப பார்த்திருக்கேன். என்னோட சின்ன தாத்தா வெங்கடாசலம் பொடி போடுவார். முரட்டு மூக்கு அதனால் முரட்டு சிட்டிகை. டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி. தோளில் ஒரு சின்ன டர்க்கி துண்டு எப்போதும் வழியும் மூக்கை துடைப்பதற்காக தொங்கும்.

  அப்பா சார்... ராஜராஜனின் கல்லறைய காணலியே அப்படின்னு கலைஞர் கூட நொந்து போய் பேசியிருக்காரே... என்ன மன்னவா.. ரஜினிக்கும் ராஜராஜனுக்கும் நடந்த போட்டியில், ரஜினிக்கே வெற்றி போலும்.

  பதிலளிநீக்கு
 9. வேஷ்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியது போன்ற உருவகத்துடன் //ஒரு மனிதன் உட்கார்ந்து பொடி இடிப்பது போன்ற விளம்பரம். பின்னர் விளக்குகள் போடப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டு, கைகள் உரலில் இடிப்பது போல மேலும் கீழும் சென்று வரும் . இது அந்நாளில் புதுமை. அந்நாளில் குடைராட்டினத்துக்கு இணையாக இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் சேரும்.//
  ---->>
  எங்கள் ('ப்ளாக்' அல்ல) ஊரில் நடைபெறும் 'பங்குனித் திருவிழாவில்' நான் பார்த்திருக்குக்கிறேன்.
  இரண்டு வெவ்வேறு கம்பெனிகள்.. இரண்டு வெவ்வேறு ஆக்ஷன் பொம்மைகள்..
  1 ) டி.டி (கையிலிரிந்து பொடியை எடுத்து மூக்கு வரை கொண்டு செல்லும்) &
  2 ) டி.ஏ.எஸ் (நீங்கள் சொன்னதுபோல பொடியை உரல் போன்ற வடிவத்தில் உலக்கையால் அரைக்கும்)
  மூன்றையும் விட்டுவிட்டால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாமே! -- Well Said.. let's hope for it.

  பதிலளிநீக்கு
 10. பொடி பற்றி எழுதுவது தப்பில்லை, சுவாரஸ்யமும் கூட! பொடி வெச்சித்தான் எழுதக் கூடாது.

  எனக்கு ஒரு சந்தேகம்தான்.

  என்விஎஸ் பட்டணம் பொடி என்பார்கள். டிஏஎஸ் ரத்தினம் பட்டணம் பொடி என்பார்கள்.

  அதென்ன பட்டணம் பொடி, கிராமத்துப் பொடி?

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 11. பொடி வெச்சு பேசுறுதுல உள்ள பொடி மறையல..

  பதிலளிநீக்கு
 12. அந்த காலத்தில் பொடி டப்பாவை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் பலரைப் பார்த்ததுண்டு. தாத்தாவைப் பற்றி எழுதியிருப்பது அருமை. ‘பொடி வைத்துப் பேசுவது’ என்பது எதனால் வந்தது என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்:)!

  பதிலளிநீக்கு
 13. கெட்ட பழக்கத்திலேயே, பாக்க கொஞ்சம் கூட பிடிக்காத கெட்ட பழக்கம் மூக்கு பொடி போடறதுதான். யார் போட்டாலுமே சகிக்காது. சிகிரெட்
  பிடிக்கறது, தண்ணி அடிக்கறது இதெல்லாம் கெட்ட பழக்கமா இருந்தாலுமே சில பேர் பண்றத ரொம்ப ரசிக்க முடியும். 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'யார் அந்த நிலவு' இந்த பாட்டுல எல்லாம், சிவாஜி சிகிரெட் பிடிக்கற அழகுக்காகவே பல தடவ பாத்து ரசிச்சிருக்கேன். சில பேர் வெத்தலை, புகையிலை போட்டுண்டு கன்னம் ரெண்டையும் விடமா அசைசுண்டே இருக்கறது கூட வேடிக்கையா இருக்கும். ஆனா இந்த மூக்கு பொடி இருக்கே அது..........வேண்டாம் விடுங்க, அதான் இப்ப ரொம்பவே இல்லாம போய்டுத்தே.

  பதிலளிநீக்கு
 14. பொடி போட்டவர்கள் எல்லாம் நிரம்ப புத்திசாலியாக இருப்பதை கண்டிருக்கிறேன்.

  இப்போது அதுவும் குறைந்து விட்டது போல தோன்றுகிறது.

  @ SPS
  சிலபேர் சிகரட் குடிப்பதை ரசிக்கிறேன் என்று துணிந்து கருத்து சொன்ன உங்களை பாராட்டுகிறேன்.
  (நானும் சிகரெட் குடிப்பேனாக்கும்)

  விஜய்

  பதிலளிநீக்கு
 15. ஆஹா! விஜய், நான் சிலபேர் என்றது சினிமா நடிகர்களை. அதிலும் குறிப்பாக நான் மிகவும் ரசிப்பது சிவாஜியைத்தான். மேலும் ரஜினி, அமிதாப் இவர்கள் ஸ்டைல் மிகவும் பிடிக்கும். எனக்கு சிகிரெட் ஸ்மெல் என்றாலே அலர்ஜி. என்னுடைய அன்றாட வாழ்கையில் என் உறவினர்கள், நண்பர்கள் யாரும் சிகிரெட் பிடிப்பதில்லை, அப்படி பிடிப்பவர்களும் எங்கள் எதிரில் பிடித்ததில்லை. நீங்கள் சிகிரெட் பிடிப்பதாக எழுதி இருப்பது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. உங்கள் வலைதள நண்பி என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து கூடிய விரைவில் இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள். இப்படி நான் நேரடியாக உங்களிடம் கேட்டுக் கொண்டது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், என்னை மன்னித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. Good old memories.They used to give hand Fans ( கை விசிறி) free.
  You should see the crowd.....
  Anyway, it was fun...
  நாம் பொடியை விட்டோமோ இல்லையோ, அது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களை மறந்து விட்டோம். sad...
  The curse goes to TV.

  பதிலளிநீக்கு
 17. // Jawahar said...
  பொடி பற்றி எழுதுவது தப்பில்லை, சுவாரஸ்யமும் கூட! பொடி வெச்சித்தான் எழுதக் கூடாது. // ரொம்ப சரி !!

  மீனாட்சி அவர்கள் சொன்னது போல் பொடி போடுவதென்பது ரசிக்க முடியாத ஒரு செயல் தான்!

  எனது தந்தை வழித் தாத்தா பொடி போடும் பழக்கம் உள்ளவர். சுந்தரம் கடையில் பல முறை வாங்கி வந்த நினைவு வருகிறது. வெற்றிலையில் இருப்பது போல வெள்ளை மற்றும் கறுப்புப் பொடிகளும் இருந்ததாக நினைவு. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும் போது தாத்தாவின் பொடி டப்பா கிடைத்தால் எடுத்து பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

  அப்பப்பா நினைவுகளைத் தூண்டிய உங்கள் பதிவு... அப்பப்பா ரொம்ப அருமை.

  பதிலளிநீக்கு
 18. இன்னொரு விஷயம் சொல்லவேண்டும். இப்போதெல்லாம் காற்றிலேயே நிறைய பொடி (particulate pollution) கலந்திருப்பதால் புகையிலைப் பொடி அவசியம் இல்லாமல் போய்விட்டது.

  பதிலளிநீக்கு
 19. @ SPS

  மிகுந்த நன்றி தங்களின் அன்புக்கும், நட்புசார் அறிவுரைக்கும்.

  சிறிது சிறிதாக குறைத்து கொள்கிறேன்.

  தவறாக ஏதும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.

  விஜய்

  பதிலளிநீக்கு
 20. விஜய்.. அவிங்க சிகரெட் கூடாதுங்கறாங்க. பீடி பிடிக்கச்சொல்றாங்க .. இந்த எகானமில சிகரெட் கட்டுப்பிடியாவுமான்றாங்க..

  பதிலளிநீக்கு
 21. சிகரெட் பிடிக்கிறது தண்ணி அடிக்கிறது (பாவம், அதைப் போய் அடிப்பானேன்?) கெட்ட பழக்கமா? கறி துன்றத விட்டுட்டீங்களா.. எதுக்கு சொல்றன்னா அதையும் கெட்ட பழக்கம்னு சொல்றவிங்க இருக்காங்க. உங்களுக்கு ஒரு சவாலான கேள்விங்க. பொய் சொல்லுறது ஏமாத்துறது கெட்ட பழக்கமா? சிகரெட் தண்ணி கெட்ட பழக்கமா? இரண்டு வகையில் ஒண்ணை நிறுத்தணும்னா எந்த வகையை சிபாரிசு செய்வெங்க ? (ஸ்ரீராம், மீனாட்சி ஆட்டோ அனுப்புவாரா தெரியாது..) நம்ம சமுதாயத்துல மூடநம்பிக்கை பொய் பித்தலாட்டம் ஏமாத்து இதையெல்லாம் பிள்ளைங்களுக்கு சொல்லிக்கொடுத்தும் கொடுக்காமலும் வளக்கிறோம், சிகரெட் தண்ணியப் பிடிச்சுக்கிட்டு கெட்டப் பழக்கம்னு அலையறோம்.

  எங்க நைனா, அவரோட நைனா அல்லாருமே பொடி போடுவாய்ங்க.. நெய் மணம் அடிக்கும் புதுப்பொடிப் பாக்கெட்டுல. எங்க தாத்தாவோட வேட்டிக்கரைல ப்ரௌன் கலர் பாத்துட்டு ரொம்ப நாளா வேறே ஏதோனு நினைச்சிட்டிருந்து அவர் பக்கம் போவவே தயங்குவேன்.. பிறவு பொடினு தெரிஞ்சுட்டு ஓகேயாயிடுச்சு. நைனா கதை வேறே. எப்பவும் பொடி போட மாட்டாரு. வெத்தில பாக்கு புவயில போடும் போது மட்டும் தான். எப்பவும் வெத்தில பாக்கு புவயில போட மாட்டாரு..

  பதிலளிநீக்கு
 22. நன்றி விஜய். எதற்கு மன்னிப்பு, நீங்க எதுவும் தவறாக எழுதவில்லையே!

  அப்பாதுரை உங்கள் கேள்வி யாருக்காக இருந்தாலும் என்னுடைய பதில்.
  //பொய் சொல்லுறது ஏமாத்துறது கெட்ட பழக்கமா? சிகரெட் தண்ணி கெட்ட பழக்கமா? இரண்டு வகையில் ஒண்ணை நிறுத்தணும்னா எந்த வகையை சிபாரிசு செய்வெங்க ?//
  கண்டிப்பா பொய் சொல்றது, எமாத்தறதான் நிறுத்தணும்னு சொல்வேன். புகை பிடித்தாலும் பரவாயில்லை, அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருந்தால் சரிதான். என்ன, சிகிரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு ரொம்ப கெடுதல். அதனாலதான் அதை வேண்டாம்னு சொல்றது.

  பதிலளிநீக்கு
 23. என் பள்ளித் தோழியின் அப்பா பொடிக்கடை வைத்து இருந்தார்.. இப்போ என்ன செய்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது ராம்

  பதிலளிநீக்கு
 24. தமிழ் உதயம் சொல்வது சரிதான். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றிலும் - ஏதேனும் ஒரு பழக்கம் மனித சமூகத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றது.

  அப்பாதுரை சார், பருப்புப்போடி, எள்ளுப்பொடி, சம்பந்திப்பொடி, கரிவேப்பிலைப்பொடி, புளியோதரைப்பொடி, இன்னும் எவ்வளவோ வகைப் பொடிகள் குரோம்பேட்டை அம்பிகா அப்பளம் டெப்போவில் சென்ற மாதம் கூட பார்த்தேன்.

  ஹேமா - கௌதமன் சார்பில் எங்கள் நன்றி.

  அப்பாதுரை சார். ஆமாம். பெரிய கோவில் கட்டப்பட்டது ஆயிரத்துப் பத்தாம் ஆண்டு. ஆயிரம் வருடங்கள் முடிந்துவிட்டன. Copy and paste the following link.

  see this link:
  http://www.youtube.com/v/0GqmsZIwNkY?fs=1&hl=en_US%22%20type=%22application/x-shockwave-flash%22%20allowscriptaccess=%22always%22%20allowfullscreen=%22true%22%20width=%22640%22%20height=%22385%22

  பதிலளிநீக்கு
 25. நன்றி வேல்ஜி, சை கொ ப, எல் கே, ஆர் வி எஸ், மாதவன்.

  பதிலளிநீக்கு
 26. சம்பந்திப்பொடியா? கேள்விப்பட்டதில்லையே? இத்தனை பொடி விக்கிறாங்களா? வாங்கிக் கட்டுப்பொடியாவுங்களா?

  பதிலளிநீக்கு
 27. நான் சிகரெட் போன டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி திரும்பி ஆரம்பிதிருக்கின்றேன். எல்லாம் நேரம் தான் ! விடுவது இஸி அதனால் பிரச்சினை இல்லை.

  ஆனால் பொய் சொல்லுவதில்லை. யாரையும் ஏமாற்றுவதில்லை. என்னால் முடிந்த உதவி படிப்புக்கு செய்திருக்கின்றேன். ஏதோ அதனால் போற வழிக்கு புண்ணியம் கிடக்கும் என்று நினைக்கின்றேன்.

  எல்லாவற்றையும் விட கோவத்தை சொல்லுவேன். ஆனால் அது ரொம்பவே ஜாஸ்தி. கூட இருந்து அனுபவிக்கும் குடும்பம் ஐயோ பாவம்.

  முற்றும் துறந்தால் ஞானி. துறக்க ரெடி, இலஞ்சியில் ஆசிரமம் ஆரம்பிக்க முடிவு. சிஷ்யகோடிகளை (கேடிகளை !) முதலில் ரெடி பண்ணவேண்டும்.

  பதிலளிநீக்கு
 28. நன்றி எனக்கு சொல்லலியே, இது நியாயமா? :(

  பதிலளிநீக்கு
 29. ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்படியா எதுனா தேறுமா?

  பதிலளிநீக்கு
 30. மீனாக்ஷி - ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி வருகிறோம். உங்கள் கருத்துகள், மிகவும் சரியே! தனி பதிவுகளாகப் போடக்கூடிய அளவுக்கு பல சிந்தனைகள் எழுதியுள்ளீர்கள். நன்றி, நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 31. //அப்பாதுரை said... ஆமா, ஆசிரம்ன்றீங்களே... உருப்படியா எதுனா தேறுமா? //

  துரை

  ஆசிரமமே "உருப்படி"க்களுக்கு தான் ! நித்தி ஸ்டைலில் தானே வேணும் !

  பதிலளிநீக்கு
 32. ஜவஹர் கேட்டிருப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில், ஒருவேளை - கிராமங்களில் இருக்கின்ற பெரும்பான்மை மக்களைக் கவர்வதற்காக 'பட்டணம்' பொடி, 'ஆஃபிசர்ஸ்' பொடி, என்றெல்லாம் பெயர் வைத்தார்களோ என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 33. // அப்பாதுரை said... கேடி #1 ஆஜருங்க //

  துரை

  ரொம்பவே சீரியசாக இந்தியா செல்ல எண்ணம். என் அண்ணனும் / சித்தாப்பாவும் இலஞ்சியில் ஒரு வாரமாக சுத்தி - குற்றாலம் முதன்மை (மெயின் !!) அருவியை கண்ணுக்கு தெரியும் தூரத்தில் ஒரு இடம் பார்த்திருக்கின்றார்கள். துட்டு தான் ஜாஸ்தி (அங்கேயும்) - பெரிய பெரிய பங்களா வருவதாக கேள்வி ! ஒரு சென்ட் ஒன்றரை லட்சம் (!!). பதினைந்து சென்ட் இடம் பார்த்திருக்கின்றார்கள் - ரொம்பவே கஷ்டம் தான் - பெரிய மகனின் படிப்பு செலவை என்னும்போது !! $ பிரிண்ட் செய்யணும். பார்ப்போம்.

  ஒன்றும் இல்லையெனில் என் தகுதிக்கு இந்தியாவில் நிச்சியம் நல்ல வேலை கிடக்கும். எவனாவது ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் இந்த கேடி ரெடி (ஆர்.வி.எஸ் !! உங்க கம்பெனிக்கு கேடி வேணுமா !) !! நான் முதல் கேடி - அப்பாலிக்க நீ துரை !!

  பதிலளிநீக்கு
 34. அஹமது இர்ஷாத் - பொடி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டே சிலம்பம் ஆடி இருக்கிறார்!
  ராமலஷ்மி அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு எங்கள் ஆராய்ச்சிக் குழு விரைவில் தன ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆனால், தங்க நகைகள் செய்யும்பொழுது, 'பொடி வைத்து ஊதி' செய்த நகைகள் என்றால், மற்ற பொடி வைக்காத நகைகளை விட மாற்றுக் குறைவு என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அந்தப் பொடிக்கும், இந்த பொடி வைத்து எழுதலுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 35. விஜய் அவர்களிடம் நாங்கள் சொல்ல நினைத்ததை, மீனாக்ஷி சொல்லிவிட்டார்கள். நாங்க மணி ஆயிரத்தில் ஒருவனிடமும், விஜய் அவர்களிடமும் கேட்டுக் கொள்வது: புகைப் பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள். அல்லது புகைக் கோல்களின் எண்ணிக்கையையாவது குறைத்துக்கொள்ளுங்கள். புகைப் பழக்கத்தால் வருகின்ற தீமைகளை, பல எழுதலாம்; உண்மையான நன்மை ஏதேனும் ஒன்று நீங்கள் யாராவது சொல்லமுடியுமா?

  பதிலளிநீக்கு
 36. Bala அவர்கள் கூறியிருப்பது சரிதான். அவர் கருத்தைப் படித்தவுடன்தான் எங்களுக்கும் அந்த 'அட்டை விசிறி' ஞாபகம் வருகிறது.

  மோ சி - அப்பப்பா! எங்களை ரொம்பப் புகழ்ந்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 37. தேனம்மை அவர்கள் சொல்லி இருப்பதைப் போல, எங்கள் ஊரில் நாங்கள் பார்த்த பொடிக்கடை, மற்றும் அந்த பொடிக்கடை ஜாடிகள், spatula, பொடிமட்டைகள் இன்னபிற அயிட்டங்கள் என்னவாயின என்பதை நாகை பெரியகடைத் தெரு பக்கம் வசிப்பவர்கள் சென்று, பார்த்து வந்து, எங்களுக்கு எழுதவும்.

  பதிலளிநீக்கு
 38. அப்பாதுரை + சாய் கமெண்ட்கள் இன்னும் தொடரும் என்று நினைக்கின்றோம். அப்புறமா வந்து விவாத முடிவில் எங்கள் கருத்துகளைக் கூறுகிறோம்!

  பதிலளிநீக்கு
 39. புகை பிடிப்பவரால் அவர் நலம் கெடுவதோடு, அவர்கள் புகை பிடிக்கும்போது வெளியேற்றும் அந்த புகையால், அருகில் இருப்பவர் உடல் நலமும் கெடுகிறது, சுற்றுப்புற சூழலும் மிகவும் மாசு படுகின்றது.

  புகை பிடிக்கும் பாதி பேருக்கு அதை சரியாக அணைக்காமல் தூக்கி எரியும் பழக்கம் வேறு உண்டு. நான் எப்பொழுது வெளியே சென்றாலும், எந்த அவசரத்தில் சென்றாலும், என் கண்ணில் படும் சரியாக அணையாத சிகிரெட் துண்டுகளை அணைத்து விட்டுதான் நடப்பேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் சில பேருக்கு காலணிகள் அணியும் பழக்கம் கிடையாது. சில பேருக்கு அதை வாங்கும் வசதியும் கிடையாது. என்னுடன் படித்த என் தோழியின் அப்பா செருப்பு போடவே மாட்டார். என் பாட்டி, பெரிய பெரியம்மா இருவரும் அவர்கள் வாழ்நாளில் செருப்பே அணிந்தது கிடையாது.
  ஒரு வேளை அதனால் எனக்கு இந்த பழக்கம் வந்ததோ என்னவோ.

  பதிலளிநீக்கு
 40. //meenakshi said...
  புகை பிடிக்கும் பாதி பேருக்கு அதை சரியாக அணைக்காமல் தூக்கி எரியும் பழக்கம் வேறு உண்டு. நான் எப்பொழுது வெளியே சென்றாலும், எந்த அவசரத்தில் சென்றாலும், என் கண்ணில் படும் சரியாக அணையாத சிகிரெட் துண்டுகளை அணைத்து விட்டுதான் நடப்பேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் சில பேருக்கு காலணிகள் அணியும் பழக்கம் கிடையாது. சில பேருக்கு அதை வாங்கும் வசதியும் கிடையாது. என்னுடன் படித்த என் தோழியின் அப்பா செருப்பு போடவே மாட்டார். //

  சிகரெட் அணைக்காமல் பரவாயில்லங்க - நிறைய பேர் வீட்டு கேஸை அணைக்காமல் வெளியே போறாங்க ! அது இன்னும் டேஞ்சர் ! ஹீ ஹீ !

  என் கடைசி தம்பி என் அப்பாவின் செல்லப்பிள்ளை. எங்களுக்கு எல்லாம் அண்ணாநகரில் இருந்தாலும் கல்லூரி வரும்போது தான் செருப்பு வாங்க முடிந்தது அவரால். ஆனால் சின்னவர் அப்படி இல்லை. அவருக்கு எப்போதும் உண்டு. அவன் வாங்கிக்கொண்டுத்த செருப்பை தொலைத்துவிட்டான்.

  வீட்டுக்கு வந்த அவனிடம் "ஏண்டா செருப்பு எங்கே என்று" கேட்டதற்கு, "இல்லப்பா, வரும்போது ஒரு மாடு செருப்பே இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டது, அதனால் அதற்கு கொடுத்துவிட்டேன்" என்றான் !! ரெண்டு கால் செருப்பு நாலு கால் மாடுக்கு !!

  பதிலளிநீக்கு
 41. சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்களும் வாதாடுவோம்

  visit forces.org for scientific reasons

  விஜய்

  பதிலளிநீக்கு
 42. //விஜய் said...சிகரட்டினால் கேடு இல்லை என்று நாங்களும் வாதாடுவோம்
  //

  இல்லை விஜய். எனக்கு தெரிந்து நெறைய பேர் தொண்டை கான்சர் வந்து மாதங்களிலே சித்தரவதை அனுபவித்து போய் இருக்கின்றார்கள். என் சித்தப்பாவையும் சேர்த்து !

  நான் மறுபடியும் விட்டுவிடுவேன். சிகரெட் விடுவதற்கு சிறந்த வழி. ஒரே அடியாக விடபோகிறேன் என்று நினைக்காமல் ஒவ்வொரு நாளைக்கு தள்ளிபோடுங்கள். இன்னிக்கு பிடிக்கமாட்டேன், மறுநாள் அதே போல் இன்னிக்கு பிடிக்கமாட்டேன் என்று. அப்படிதான் நான் விட்டேன். கொஞ்ச நாள் அப்படியே பழகிவிட்டால் நிகோடின் crave இருக்காது.

  திரும்பி இப்போது தொட்டதை விடுங்கள். நான் மறுபடியும் விடுவேன் ஏனென்றால் என்னால் முடியும். என்னை என் மனைவி கேட்பதை விட என் அம்மாவும் / மகனும் ரொம்பவே கெஞ்சுவார்கள்.

  ப்ளீஸ் விஜய். கிவ் யப். நாட் வொர்த் இட்.

  பதிலளிநீக்கு
 43. புள்ளிக்குட்டி7 அக்டோபர், 2010 அன்று 9:02 AM

  யார் கூறினார்கள் என்பதைவிட, என்ன கூறப்பட்டது என்பது முக்கியம்.
  "புளுகுகள் மூன்று வகைப்படும்.
  ஒன்று: அண்டப் புளுகு
  இரண்டு: ஆகாசப் புளுகு
  மூன்று: புள்ளி விவரங்கள்."

  அன்பு நண்பர் விஜய் அவர்கள் கூறியுள்ள forces.org தளத்தில், மூன்றாவது வகை விவரங்கள் நிறைய உள்ளன. கேட்டவருக்கு, கேட்டபடி நிறைய கிடைக்கும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

  பதிலளிநீக்கு
 44. கள்ளுப்புட்டி8 அக்டோபர், 2010 அன்று 7:33 PM

  ஜார்ஜ் பர்ன்ஸ் நூறு வருடங்கள் வாழ்ந்தவர். எப்பவும் சிகரெட் பிடிப்பார். ஒரு மேடையில் "என்ன இவ்வண்ணம் தொடர் புகைவரா இருக்கிறீர்களே, சிகரெட் புகை பிடிப்பவரை மெல்ல கொல்லற்பாலது என்றறியீரோ?"னு அவரைக் கேட்டப்ப, "ஆமாங்கண்ணு... மொள்ளாத்தான் கொல்லுது.. எனுக்கு எண்பத்தியேலு வயசாவுது"னாராம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!