வியாழன், 11 நவம்பர், 2010

ஜல் உபயத்தில் ஒரு ஜில் சுற்று.தீபாவளிக்கு மறுநாள். ஜல் பரபரப்பு தொடங்கிய நேரம். வெயில் வராது என்று நிச்சயமாகத் தெரிந்தது. (புயல் என்ன, மழை கூட பெரிதாக வரவில்லை என்று அப்புறமல்லவா தெரிந்தது...) நீண்ட நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்த ஒரு கோரிக்கையை நிறைவேற்றி விடுவது என்று தீர்மானித்து, மனைவியிடம் சொல்லி நீண்ட நாள் ட்யூவான வேண்டுதலை நிறைவேற்ற திருவேற்காடு நோக்கி புறப்பட்டோம்.

  
ஏழு மணிக்கெல்லாம் சென்று விட்டதாலும் சனிக் கிழமை என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசித்தோம். அலங்காரத்துக்கு நேரமாகும் என்றதும் கிளம்பி விட்டோம். வெளியில் ஒரு உண்டியலில் மட்டும் ஏகப் பட்ட பூட்டுக்கள் தொங்கின. அதில்தான் மிகுந்த விலை உயர்ந்த காணிக்கைகள் இருக்குமோ என்று நினைத்தால், இல்லையாம். அது ஒரு வேண்டுதலாம். பூட்டை அதில் பூட்டி சாவியை அங்கிருந்த அம்மன் விக்ரகம் காலடியில் போடச் சொன்னது அறிவிப்புப் பலகை. அம்மன் பண மாலை போட்டுக் கொண்டு ஜொலிக்க, கீழே காசுகளும் பணங்களும் போடப் பட்டிருந்தன. உள்ளேயே பெருமாள் சன்னதி, நவக்ரக சன்னதி எல்லாம் இருந்தன.
   
வெளியில் வந்ததும் கண்ணில் பட்டது புற்றுக் கோவில். ஓங்கி வளர்ந்திருந்த (அரச?) மரம் ஒன்றின் பரந்த வேரில் பெரிய அளவில் மண் கொட்டினது போல புற்று. அங்கு கூரை வேய்ந்து விட்டார்கள். முன்புறம் பிள்ளையார் மூர்த்தம் ஒன்று. அங்கு புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம். ஒரு அண்டாவின் அருகில் சிறிய பல தம்ளர்கள் அடுக்கியிருக்க ஒரு சிறுமி புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் அருகில் சென்றதும் நிமிர்ந்து "ஐந்து ரூபாய்" என்றாள். கொடுத்தால் 75 ml பெறக் கூடிய தம்ளரில் வெள்ளை நிற திரவம் ஒன்றைத் தந்தாள். பாலாம். அதை அங்கு பிரதட்சணமாய் வலம் வந்து ஊற்ற வேண்டுமாம். பாதி பிரதட்சணம் கூட செய்ய முடியவில்லை. கோடி ஈக்கள் மொய்க்க உள்ளே முட்டைகள் உடைக்கப் பட்டு சுத்தம் செய்யப் படாமல், சுற்றிக் கூட வர முடியாமல் முடை நாற்றம். 'தெய்வ குற்றம்' ஆகாமல் இருக்க ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தோம். மரத்தடி விநாயகருக்குக் கூரை வேய்ந்து எப்படியோ காசு பார்த்து விடுகிறார்கள்.
    
அடுத்து மாங்காடு. 
   
அறிவிப்புப் பலகையைத் தாண்டி நடந்தாலே கோவில். நீண்ட அகலமான பிரகாரங்கள். 
   
திருவேற்காட்டிலும் சரி, இங்கும் சரி இன்னொரு வியாபாரம். அகல் விளக்கேற்றுவது. இரண்டு விளக்கு ஏற்றினால் இன்ன பலன், நான்கு ஏற்றினால் இன்ன பலன் என்று கோடி விளக்கு வரை ஏற்றினால் கிடைக்கும் புண்ணியங்களின் லிஸ்ட் தந்துள்ளார்கள். மிகச் சிறிய அந்த அகல் விளக்கு திருவேற்காட்டில் ஜோடி ஆறு ரூபாய், இங்கு நான்கு ரூபாய். அதை விற்கும் பெண்களின் உழைப்பைச் சொல்ல வேண்டும். மங்களகரமாய் குளித்து, ஒரு கையால் பூத் தொடுத்துக் கொண்டே வியாபாரம் கவனிக்கிறார்கள். அம்மனை தரிசிக்க உள்ளே சென்றதும் எங்களைப் பார்த்த உடனேயே இங்கும் திரை போட்டு விட்டார்கள். ராசி! நல்ல வேளை சீக்கிரம் திறந்து விட்டார்கள். தட்டில் பத்து ரூபாய் போட்டால் நிறைய குங்குமமும் ஒரு பூத் துண்டும் கிடைக்கும். உள்ளே அர்ச்சனை செய்ய வாங்கும் அர்ச்சனைத் தட்டுகளை அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னரே ஓர் ஐயர் வாங்கி, தேங்காயை உடைத்து, பூ வைத்து தருகிறார். எலுமிச்சம்பழம் அங்கேயே வாங்கப் பட்டு விடுகிறது. கூடவே பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று வாங்கி அடுக்கி வைத்துள்ளார். கட்டணமா, அன்பளிப்பா தெரியவில்லை.

பிரகாரம் சுற்றி வரும்போது கோவில் சுவற்றில் கிறுக்குவோருக்காக ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு கண்ணில் பட்டது.
   
இரண்டு கோவில்களிலும் எப்படி எப்படியோ காசு வாங்குகிறார்கள். ஏன் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?

அடுத்து ஸ்ரீபெரும்புதூர்.
  
ஊருக்குள் அங்கங்கே கடைகள் பார்ப்பது போல ஊருக்கு வெளியே அங்கங்கே பொறியியற் கல்லூரிகள். தூ...ரத்தில் தெரிபவை ஹாலிடே ரிசார்ட்ஸ் அல்ல...பொறியியற் கல்லூரிகள். பல்வேறு பெயர்கள். ஒரே பெயரில் இரண்டு மூன்று...காலேஜ் ஆஃப் என்ஜினீரிங் என்று, இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்று...!

   
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்காரஸ்வாமி திருக்கோயில். சிவபெருமான் நடனம் ஆடும்போது அவிழ்ந்து விழுந்த ஆடைகளைக் கண்டு நகைத்த பூதங்களுக்கு சாபம் கொடுத்து, அவை பிரம்மனை வேண்டி ஆதி கேசவப் பெருமாளிடம் சாப விமோசனம் பெற்ற இடம்.
     
உள்ளே நின்ற யானைக் குட்டியை அப்புறம் படமெடுக்கலாம் என்று எண்ணி சுற்றி வருவதற்குள் காணமல் போனது.

இப்போது எல்லாக் கோவில்களிலும் கம்பி கட்டி வழி ஏற்படுத்தி சுற்றி சுற்றி அதில் நுழைந்து செல்லுமாறு வைத்திருக்கிறார்கள். அதற்குச் செல்லும் வழியிலேயே இடது பக்கம் இருந்த சன்னதியில் நுழைந்து ஆதி கேசவப் பெருமாளைத் தரிசித்து, வெளியில் வந்து 'கீப் லெஃப்ட்'டி... ராமானுஜர் சன்னதி வந்தால் சடாரி வைத்த குண்டு பட்டர் "ம்...இப்போ போய் பெருமாளை சேவியுங்கோ.." என்றார். வெளியில் இருந்தே பெருமாளை மறுபடியும் "ஹாய்" என்று சேவித்து விட்டு எதிராஜ நாதவல்லித் தாயாரை சந்திக்க - தரிசிக்க - விரைந்தோம். தாயாரைச் சுற்ற முற்படுகையில் ஒரு தூணில் சீட்டுகளாலான மாலை. இருளில் உற்று நோக்கினால் அந்தத் தூணில் ஆஞ்சநேயர்.

தட்டில் காசு போடும்போது மனைவியிடம் சொன்னேன், "கோவில் உண்டியலிலாவது போடலாம்" மனைவி, "பெரிய ஆளுங்க எவ்வளவு எடுப்பாங்க,  கோவிலுக்கு எவ்வளவு சேர்ப்பாங்கன்னு தெரியாது, இவர்களைப் பார்த்தால் பாவமாய் இருக்கு..இவர்களுக்காவது போகட்டுமே...கண்ணெதிரே நம் காசு யாருக்குப் போகிறது என்று தெரியுமே..." என்றதும், 'அதுவும் சரிதான்' என்று விட்டு விட்டேன். ஒல்லியான உடம்புடன், கழுத்தில் செயின் இல்லாமல் இருந்தால் தட்டில் பத்து ரூபாய், குண்டாக, கழுத்தில் செயினுடன் இருந்தால், தட்டில் ஐந்து ரூபாய் என்பது மனைவியின் கணக்கு! "அந்த ஒல்லி பட்டர் ட்யூட்டி முடிந்து போகும்போது அவிழ்த்து வைத்திருந்த செயினை எடுத்து மாட்டிகிட்டு போவார் தெரியுமா" என்ற என்னை, என மனைவி லட்சியம் செய்யவில்லை.

வெளியில் வந்தோம். அருகில் ஒரு பழைய கோவில் போன்ற ஒன்று பூட்டிக் கிடந்தது. பின்னர் விசாரித்ததில் அது மணவாள மாமுனிகள் கோவிலாம். பத்தரைக்குப் பூட்டி விடுவார்களாம்.
     
வந்தது வந்தோம், பஸ்ஸில் தாண்டிச் செல்லும்போது மட்டுமே பார்த்திருந்த, ராஜீவ் காந்தி நினைவிடத்தைப் பார்த்து விடுவோமே என்று போனால், மனைவி உள்ளே வர மறுத்து விட நான் மட்டும் உள்ளே சென்று பார்த்தேன். கோவில்கள் சுற்றி விட்டு சமாதி பார்க்கக் கூடாதாம். இது சமாதி இல்லை, நினைவிடம் என்று சொல்லிப் பார்த்தும் மனைவி உள்ளே வரவில்லை!
   
உள்ளே சவ்கிதார்கள் ஹிந்தியில் டைரக்ட் செய்தார்கள். சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அழகிய புல்வெளிகள், 
  


   
மரங்கள், 
  
தூண்கள். 
   
 நீண்ட சிமென்ட் நடை பாதைகள்.
     
வீடு திரும்ப ஒரு மணிக்கு மேல் ஆன போதும் வெயில் இல்லாமல் அழகிய கரு வானத்துடன் சூழ்நிலை ஜிலு ஜிலு என்றிருந்தது. நன்றி ஜல். 
                     

23 கருத்துகள்:

 1. ஜல்லினால் இப்படி ஒரு பயன். நல்ல அருமையான படங்கள் மற்றும் விவரிப்பு .

  பதிலளிநீக்கு
 2. அருமையான படங்கள்!
  மாங்காடு கோவில் அட்டகாசமாக இருக்கிறதே? பரிதாபமாக கேட்பாரற்று கிடந்த கோவில் தான் என் நினைவில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. அங்கிருந்து ஒரு எட்டு..அப்படியே குன்றதூரையும் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்திருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 4. படத்துடன் உள்ளுர் பயணக்கட்டுரை மிக அருமை.

  பதிலளிநீக்கு
 5. சென்னை புறநகர் பயணக் கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 6. ஜல்லென்று ஒரு பக்த விஜயமா? படங்கள் நல்லா இருக்கு. மாங்காடு கோவிலில் முன்பெல்லாம் கூட்டம் நெரியுமே!
  ராஜீவ் நினைவிடம்தான் பச்சைப் புல்வெளியுடன் மிக நன்றாக இருக்கிறது (ஃபோட்டோவில்).

  பதிலளிநீக்கு
 7. //"அந்த ஒல்லி பட்டர் ட்யூட்டி முடிந்து போகும்போது அவிழ்த்து வைத்திருந்த செயினை எடுத்து மாட்டிகிட்டு போவார் தெரியுமா"//

  "ஒடம்புலேருந்து எறக்கிவிட்ட காத்த திரும்ப அடிச்சிகிட்டு திரும்பவும் குண்டாயிவார்.." -- இதை ஏன் சொல்ல மறந்திட்டீங்க?

  அது சரி ஜூன் மாசம் 11ம் தேதியா இல்லை நவம்பர் மாசம் ஆறாம் தேதியா ? (சனிக்கிழமையின்னா நவம்பர் ஆறு.. சரியா?)

  பதிலளிநீக்கு
 8. நிஜமாவே ஜல் நல்லது பண்ணிருக்கு.
  மாங்காடு கோவில் நல்ல விதமாகப் பராமரிக்கப் படுகிறது.முன்னைக்கு இப்ப தேவலை.அந்த அம்மாவின் அலங்காரம் கண்கொள்ளா அழகா இருக்கும். எப்படியோ நல்ல புண்ணியம் கட்டிக் கொண்டீர்கள். அப்பாதுரை சொன்ன மாதிரி குன்றத்தூருக்கும் ஏறிப் பார்த்திருக்கலாம்:) சஷ்டிப் புண்ணியமும் கிடைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் நல்லா இருக்கு...

  திருவேற்காட்டில் ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறதே.. பார்க்கவில்லையா... பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர்... தம்பதி சமேதராக லிங்கத்திற்கு பின் கருவறையில் சிவன் வீற்றிருப்பார். காண கண் கோடி வேண்டும்....

  பதிலளிநீக்கு
 10. கோபுரங்களின் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதம்.அதனால் படங்கள் எடுத்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.
  செண்பகப்பூ வாசனை.நிச்சயமா ஒல்லி பட்டர்கிட்ட செயின் இருக்கும் !

  பதிலளிநீக்கு
 11. //உள்ளே நின்ற யானைக் குட்டியை அப்புறம் படமெடுக்கலாம் என்று எண்ணி சுற்றி வருவதற்குள் காணமல் போனது.//

  மறந்துட்டீங்களே : காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

  பதிலளிநீக்கு
 12. Man, what a narration!!!. Am impressed. Had been to these places many times and have not even thought about blogging it. Wonderful...

  பதிலளிநீக்கு
 13. உருப்படியான காரியம் செய்தீங்ணா....

  பதிலளிநீக்கு
 14. "கோரிக்கைகளைக் கடவுளிடம் சொல்லுங்கள். சுவற்றில் அல்ல" - very suggestive.

  பதிலளிநீக்கு
 15. பயணக் கட்டுரையும் படங்களும் நன்று.
  ஒல்லி / குண்டு பட்டர் என்றெல்லாம் பார்க்காமல் தட்டில் போட்டால் short term உண்டியில் போட்டால் long term என்று யோசிப்பது என் வழக்கம். ( expense / savings account ?). எங்கோ தூரத்தில் தெரியும் கட்டடங்கள் engineering colleges என்று எழுதியுள்ளீர்கள். இது நல்ல விஷயம். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு காலி இடங்கள் காணாமல் போய்விடும். பூமியை "காக்கக் காக்கக் கனகவேல் காக்க"

  பதிலளிநீக்கு
 16. நல்லா இருக்கு. உங்க புண்ணியத்துல நான் ஒரு நாலஞ்சு கோயிலைப் பாத்துக்கிட்டேன்!

  மாங்காடு போனதில்லை. போக வேண்டும்

  பதிலளிநீக்கு
 17. பகிர்வு அருமை. படங்கள் மிக மிக அருமை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 18. ஜல் புண்ணியத்தில் ஜில்லென்று ஒரு பயணம்..

  பதிலளிநீக்கு
 19. //நிமிர்ந்து "ஐந்து ரூபாய்" என்றாள். கொடுத்தால் 75 ml பெறக் கூடிய தம்ளரில் வெள்ளை நிற திரவம் ஒன்றைத் தந்தாள்.//

  ஹா...ஹா...எங்களுக்கும் இடங்களை சற்றிக்காட்டியதற்கு நன்றி. ஆமா போட்டோவில் ஆறாவது மாதம் காட்டுதே.

  பதிலளிநீக்கு
 20. அருமையான படங்கள். மாங்காடு, திருவேற்காடு ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். எனக்கென்னவோ சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்களுக்கு செல்வதில் உள்ள ஆர்வம் அம்மன் கோவில்களுக்கு செல்வதில் அவ்வளவாக இருந்ததில்லை. இன்று வரை மேல்மருவத்தூர் கோவில் சென்றதே இல்லை. பதிவில் படங்களை பார்க்கும்போது, நேரம் ஏற்படுத்திக்கொண்டு ஒரு ரவுண்டு போகவேண்டும் என்று தோன்றுகிறது.
  நெடுநாள் ஆசை. திருவண்ணாமலை கோவில் கட்டி இருக்கும் அழகையும், அதன் சிறப்பையும் படித்த பிறகு, முதலில் அந்த கோவிலையும், சுற்றி இருக்கும் அத்தனை லிங்கங்களையும் சென்று நிதனாமாக பார்த்து ரசிக்க வேண்டும்.
  இனிமேல் இது போன்ற ஜில் பதிவுகளை அடிக்கடி எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
 21. படங்கள் அருமை!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!