வியாழன், 9 பிப்ரவரி, 2012

மகா ம(கா)கக் குடந்தை! - பாஹே


கும்பகோணம்.  
   
கோபி ரசித்து எழுதியிருப்பதை நானும் மிக ரசித்து எப்படிப் படிக்க முடிந்தது? என் இளமைக்கால வாழ்க்கையும் அம்மாநகரோடு பின்னிப் பிணைந்திருந்தது என்பதால்தான். 

குடந்தைப் பணிமனையே,
கோடி செய்திப் பேசும் குவலயமே!
நாலரை ஆண்டுகள்
நானிருந்தேன் உன்னோடு!
மகிழ்வித்தாய் -
மறக்கவொண்ணா
மா துயர்கள் கூட்டுவித்தாய் -
மறப்பேனா உன்னை நான்!

'தென்னாட்டின் கேம்ப்ரிட்ஜ்.'
   
ரைட் ஹானரபில் வி.எஸ் சீனிவாஸ சாஸ்திரியார் பயின்ற, பணியிலிருந்த அரசினர் கலைக் கல்லூரியுள்ள நகர்.

என் நினைவுகளில் சுவையும் அதிகம், சோகமும் அதிகம். 
   
நான் முதன்முதலில் தந்தை அந்தஸ்த்தைப் பெற்றது அந்நகரில் இருக்கும்போதுதான். 
    
என் தந்தையை இழந்ததும் அந்த ஊரில்தான். பேத்தியைப் பாராமலேயே-இருவருடங்களுக்கு முன்பே - அவர் காலமாகியது என் மற்றொரு சோகத் தழும்பு. 
        
கடந்த ஐம்பத்தேழு வருடங்களாக நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்பது ஒரு தீபாவளி நாளில் அந்தப் புலர்காலைப் பொழுதில் அவர் இறுதியாத்திரை அமைந்ததுதான்.
             
அவ்வூரில் என் குடியிருப்பு கு.ப.ரா வீட்டுக்கு அடுத்த வீடு. இரண்டு மாடிகளுக்கும் இடையில் ஒரு குட்டிச் சுவர்தான் இருக்கும். என் மனைவியும் திருமதி கு.ப ராவும் இரு பக்கமும் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அம்மணி என்பது அவர் பெயர் என்று நினைவு. அவர் மூத்த மகன் ராஜாராமனுக்கு, நான் பெண் பார்த்தது தனிக் கதை. இதில் எனக்கு உதவிய பிரபல தஞ்சை பிரகாஷ், தொழில் முறையில் அறிமுகமான ஆப்த நண்பர்.
             
அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி எழுத்தாளரும் கு.ப.ராவின் சகோதரியுமான கு.ப. சேது அம்மாள் வசித்து வந்தார். மனைவிக்குப் பழக்கம். நான்கைந்து தெரு தள்ளி இன்னொரு பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியின் ஜாகை. அப்போது அவர் வேதாரண்யம் கோவிலில் நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற நேரம். வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்து தெருவில் வருவோர் போவோரை வெறித்துக் கொண்டிருப்பார். அவர் பார்வையில் அடிக்கடி பட்ட இளைஞன் நான்!
       
தலைமுடி முன்பக்கம் வாரப்படாமல் பின் கழுத்தில் மிச்சம் கொண்டிருக்க, நீண்ட வெண்தாடி அடிவயிறு வரை நீண்டிருக்கும். வ.வே.சு ஐயரை நினைவு படுத்தும் தோற்றம்.
             
தன முன்னுரை ஒன்றில் ந.பி இப்படிக் குறித்திருக்கிறார். "பொழுது போகாத வேளைகளில் நான் தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பேன்"
                      
அறிமுகம் இல்லாதிருந்தும் அவர் பார்வை வெளிச்சம் என்னை ஆசீர்வதித்திருக்கிறது.
                    
என் வீட்டுக்கு இன்னொருபுறம் டபீர் தெரு. குடந்தையில் இன்னொரு பிரபல எழுத்தாளர் கி.ரா.கோபாலன் இங்கு குடியிருந்தார். தன வீட்டில் அடிக்கடி இலக்கியக் கூட்டம் நடத்துவார். ஒருமுறை ஆனந்தவிகடன் ஆசிரியர் தேவன் வந்து உரையாற்றியதும் நான் ஏதோ கேள்விகள் கேட்டதும் மங்கலாக நினைவிருக்கிறது.
                  
12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமகம் நடக்கும். கூட்டமான கூட்டம். அப்படி ஒரு நாளில் என் பழைய பாக்ஸ் கேமிராவோடு மகாமகக் குளக்கரையின் நான்கு பக்கங்களையும் முற்பகல் சென்று படமெடுத்துக் கொண்டிருந்தபோதுதான் நான் முதல் முறையாக தந்தையான தகவல் வந்தது.
      
அப் புகைப் படங்களை ஆல்பத்தில் ஒட்டி அதன் கீழே நான் எழுதிய வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது-  
     
"பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணமும் நேரமும் பகுத்தறிவும் பாழாகும் விந்தை காணீர்"
       
திருவாரூரில் உள்ள என் தம்பியும் தொழில் பிரமுகருமான ராகவன், இன்றும் இவ்வரிகளை நினைவு வைத்துக் கொண்டு அப்படியே திருப்பிச் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
       
அதுவா ஆச்சர்யம்?-அவ்வரிகளின் பாதிப்பு ராகவனைக் கவர்ந்திருக்கிறது என்பது இனிக்கவும் செய்கிறது, இடிக்கவும் செய்கிறது. 
                               
அன்புடன் :: பா ஹே.
                       

16 கருத்துகள்:

  1. "பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை பாழாகும் விந்தை "-
    எனும் சிந்தை
    இன்னும் மாறாதிருந்தால்
    அதுவே விந்தை.

    பதிலளிநீக்கு
  2. படித்து மனம் நெகிழ்ந்து போனது.

    'பாஹே' யாரென்று தெரியாத குழப்பம் இருந்தும் அவர் மீது பாசம் பொங்கி வழிந்தது. அதற்கு நிறைய காரணங்கள்.
    சுருக்கமாக 'என்னைப் போல் ஒருவரை' கண்டு கொண்ட தரிசனம்.

    மிக்க நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  3. கு.ப.ரா படித்திருக்கிறேன்.இதமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்ச்சியான நினைவுகள்.
    "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணமும் நேரமும் பகுத்தறிவும் பாழாகும் விந்தை காணீர்"
    எத்தனைபேர் சொன்னா என்னா.அதுவா நடந்திட்டேதான் இருக்கும் இப்படியான நிகழ்வுகள்.சரி....சந்தோஷமும்தான் !

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு. ‘பணமும் நேரமும் பகுத்தறிவும் பாழாகும் விந்தை’ தவிர்க்க முடியாததாய் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அந்தத் தெரு கொடுத்துவைத்தது. குபரா, ந.பிச்சமூர்த்தி இவர்களோடு உலாவியவருக்கு நமஸ்காரங்கள்.
    புனிதமாக ஆரம்பித்த ஒரு விஷயம் இத்தனை மனிதர்களுக்குக் கசப்பாக ஆனதே:(
    நான் சொல்வது மஹாமகத்தைப் பற்றி. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம் சார்... ஸ்ரீராம் சார்...
    உணர்ச்சிமயமான பதிவு......

    மகாமகம்... நான் பிறந்த பின்னர் வந்த முதல் இரு மகாமஹத்தில்(1980, 1992) புனித நீராடி இருக்கிறேன்..
    (2004)பின்னர் வெளியூர் வாசம்.. ..
    2016 ?? (யாரறிவார்...!!)

    பதிலளிநீக்கு
  8. நெகிழ்வான அனுபவங்கள். மிகவும் அருமை.
    மகாமக குளம் படம் பார்த்தவுடன் தலை சுற்றியது.

    பதிலளிநீக்கு
  9. mapquest படத்தில் திருச்சியை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்களே! கண்டனம் தெரிவிக்கிறேன். ராமசுப்ரமணியமாக இருந்தால் அடிக்க வந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  10. மகாமகம் மகாமகம் என்று அடித்துக் கொள்வதைப் பார்த்து/கேட்டிருக்கிறேன். படம் பிரமாதம். கோபியின் பதிவையும் உங்கள் பதிவையும் படித்தது முதல் பிறந்த ஊரைப் பற்றி இன்னும் என்னென்ன சுவாரசியங்கள் உள்ளனவோ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. கும்பகோணம் என்றால் வெற்றிலை வறுவல் சீவல், வாசனைப் புகையிலை, வெங்கடா லாட்ஜ் டிபன், ஆர்ய பவன் காபி, டி.எஸ்.ஆர நறுமணம், பொங்கிப் பெருகும் காவிரி, மோசமான மருத்துவ மனை, கணக்கற்ற கோவில்கள், அலட்சியமாக வம்பு பேசும் 'பெரிய மனிதர்கள்' இரண்டு மூன்று கட்டு ஓட்டு வீடுகள், பாவாடை தாவணி அழகியர், அறை டிராயர் சிறுவர் . . எவ்வளவு நினைவுகள்! என் முதல் நீண்ட பயணம் குடந்தைக்குதான்! (வெறும் இருநூறு மைல்கள்) பாத்திரக் கடைகளுக்கு பேர் போன ஊர். மோசடிக்கு மறுபெயராக அகராதியில் இடம் பெற்ற ஊர். அய்யன் தெரு - அதிலும் மேல அய்யன் கீழ அய்யன் என்று இரண்டு -என்றும் டபீர் புதுத் தெரு என்றும் வேறு எந்த ஊரில் பெயர் வைத்திருக்கிறார்கள்?

    நல்ல பதிவைப் படித்த நிறைவு.

    பதிலளிநீக்கு
  12. மோசடிக்கு மறுபெயராக அகராதியில் இடம் பெற்ற ஊர்?

    பதிலளிநீக்கு
  13. மோசடிக்கு மறுபெயராக அகராதியில் இடம் பெற்ற ஊர்?//

    இதை நானும் கண்டிக்கிறேன். எல்லா ஊர்களிலும் மோசடிக்காரர்கள் இருக்கிறார்கள். இல்லாத ஊரே கிடையாது. குடந்தை அப்படிப் பெயர் பெற்றதாக இன்றுவரை கேள்விப் பட்டதும் இல்லை.

    டபீர் தெரு மேல டபீர் தெரு,கீழ டபீர் தெரு, டபீர் நடுத்தெரு என்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
  14. இன்னமும் கொஞ்சம் பழமை மாறாமல் இருக்கும் ஊர் என்றும் சொல்லலாம். ஆனால் இதுவும் வணிகமயமாகிக் கொண்டு வருகிறது என்பது மிகப் பெரிய சோகம்.

    பதிலளிநீக்கு
  15. Kumbakonam is also identified with the Sangam age settlement of Kudavayil.[8] Winslow, in his 1862 Tamil-English dictionary, associates negative connotations with Kumbakonam.[4] However, Winslow later apologized for his erroneous claim.[4]

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!