புதன், 29 ஆகஸ்ட், 2012

கடவுள் காலம்


கடவுள் நம் எதிரில் வந்தால் என்ன செய்வோம்...

ஒரு பழைய ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது.


கடுமையான சிமென்ட் நெருக்கடிக் காலத்தில் வீடுகட்டிக் கொண்டிருந்த ஒருவன் உடனடியாக சிமென்ட் தேவை ஏற்பட்டு அலைந்து கொண்டிருந்தபோது எதிரே கடவுள் தோன்றினாராம். "என்ன வேண்டும் கேள் பக்தா...!" என்றாராம். யோசிக்காமல் "உடனடியாக ஐந்து மூட்டை சிமென்ட் வேண்டும் கடவுளே.." என்றானாம் அவன். 





நான் கூட அப்படிக் கேட்டிருக்கலாம். கனவா நினைவா என்று தெரியாத நிலையில்தான் அது நிகழ்ந்தது. அப்போது ஏதும் எனக்குக் கவலை - அப்போதையக் கவலை - எதுவும் இருந்ததாக ஞாபகமில்லை. வந்த உருவம் கடவுளா, காலனா, அதுவும் தெரியவில்லை. கேட்ட கேள்வியும் வந்த பதிலும்தான் 'காலனா' என்ற கேள்வியையே மனதில் உண்டாக்குகிறது. யோசித்துப் பார்த்தால் கேள்வியும் எனதில்லையோ என்றும் தோன்றுகிறது. கேட்க வைக்கப் பட்டேனோ என்னமோ....


பரீக்ஷிததுக்கு தன் நேரம் தெரிந்தது போல எனக்கும் தெரிந்து விட்டது.


'சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்'னு வசனமெழுதினார் சுஜாதா. எனெக்கென்னமோ பெரிய நரகமாயில்லை. ஏதோ எதிர்பார்த்த ஒன்று சட்டென முடிவுக்கு வந்தது போல மனதில் ஒரு வெறுமை. நிறைவு என்று அதைச் சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனால் அப்படியும் சொல்லலாம். என் சம்பந்தப் பட்ட எல்லாமும் நிறைவு பெறப்போகும் நாள் என்பதால் சொல்லலாம். புன்னகைக்கத் தோன்றியது. இந்நிலையில் புன்னகைத்தால் செயற்கையாகத் தோன்றும் என்றும் தோன்றியது. யாருக்கு செயற்கையாகத் தோன்றும்? இது எனக்கு மட்டும்தானே தெரியும்? எனக்கே என் புன்னகை செயற்கையாக இருக்க முடியுமா?


நானே எனக்குப் பகையானேன் போல, நானே எனக்கு செயற்கையாக இருக்க முடியுமா?  பல சமயங்களில் நமக்கு நியாயம் என்று நினைப்பது அடுத்தவருக்கு நியாயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லையே... அப்போது நான் சரி என்ற எண்ணம் எனக்குள் நான் ஏற்படுத்திக் கொள்ளும்போது என்னை, என் மனசாட்சியை நான் ஏமாற்றி செயற்கையாகத்தான் இருந்திருப்பேன்....


செய்ய வேண்டிய கடமை என்று ஏதுமில்லை என்று நினைக்கிறேன். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து பேரனும் பார்த்தாயிற்று. மனைவி எப்போதோ விடைபெற்றுச் சென்று விட்டாள். அதற்காக எனக்கு நீங்கள் எழுபது, எண்பது என்றெல்லாம் வயது கணக்கு போடக் கூடாது. அறுபதைத் தொடப் போகிறேன். அவ்வளவுதான். இருபத்தொரு வயதில் திருமணம். சென்ற வருடம் பேரன் பார்த்து விட்டேன். மகள் திருமணத்தையும், பேரனையும் பார்க்க மனைவிக்குக் கொடுத்து வைக்கவில்லை. 




வாழ்வில் பெரிய வருத்தம் ஏதுமில்லை. அவ்வப்போது சமையல் எரிவாயு கிடைக்கவில்லை, செல்லுக்கு டவர் கிடைக்கவில்லை, நினைத்த நேரத்துக்கு பஸ் வரவில்லை போன்ற சாதாரண குறைகள்தான். அப்படியே யோசித்துப் பார்க்கும்போது பெரிய சந்தோஷம் என்றும் கூட ஏதும் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லாததால் ஏமாற்றம் ஏதும் இல்லை.  'இது நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்பதால் இவையெல்லாம் நடக்கிறது' என்கிற எண்ணம் மனதில் பதிந்து விட்டதால் வருத்தங்களும் சந்தோஷங்களும் நிலைத்து நின்று பாதித்ததில்லை.

அதே நிலைதான் இப்போதும். மரணம் எப்போது என்று தெரிந்து விட்டாலும், எந்த வகையில் வரும் என்ற கேள்வி மட்டும் மனதில்.


நிதானமாகச் செயல்பட்டேன். இருக்கும் ஒரு வீட்டையும் இரண்டு மனைகளையும் யாருக்குச் சேர வேண்டும் என்று எப்படி எழுத வேண்டுமோ அபபடி எழுதி வைத்தேன். கிரெடிட் கார்டை சரண்டர் செய்தேன் புதிதான ஒன்றுக்கு அவசியமில்லையே..! வங்கிக் கணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பிரித்து பங்கு வைத்தேன். என்னிடம் போதுமான அளவு வைத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் பிரித்தேன். இருக்கும் வரை சாப்பிட வேண்டுமே... பீச் சென்று மணலில் அமர்ந்து மக்களையும், கடலையும் பார்க்க வேண்டும்...மிளகாய் பஜ்ஜி சாப்பிட வேண்டும். பாசந்தி சாப்பிட வேண்டும். வருத்தமும் சந்தோஷமும் இல்லையென்றுதான் சொன்னேன். ஆசை இல்லையென்று சொல்லவில்லையே...! ஆசை யாருக்குத்தான் இல்லை? ஆனால் என்னுடைய ஆசைகள் எல்லை மீறாதவை. என்னுடைய எல்லை எதுவென்று எனக்கும் என் கனவுகளுக்கும் தெரிந்திருந்தது. 

இதோ, இன்றோ நாளையோ... இன்று என்றுதான் நினைத்திருந்தேன். பேசிய நாளைக் கணக்கில் சேர்க்கா விட்டால் நாளை..! இதுவரை முடிவுக்கான எந்த அறிகுறியும் தெரியாததால் இந்த கணக்குக் குழப்பம். திடீரென ஒரு மாசிவ் அட்டாக் வருமோ...!


கையிலிருந்த புத்தகத்தை மூடி மேஜையின் ஓரமாக வைத்தேன். தலை பாரமாக, கண்கள் எரிச்சலில் சூடாக இருப்பது போலத் தோன்றியது.


அப்படியே மேஜையில் கைவைத்துத் தலையை கைகளுக்கும் புதைத்தபோது கைகள் காட்சிக்குப் பக்கத்தில் இருக்க, என் கைகளை நானே வெளியாள் போலப் பார்த்தேன். உணர்ச்சியற்று, உபயோகமற்று போகப்போகும் கைகள்...  மேஜையின் மேலே கைகளை அப்படியே நீள வாக்கில் கிடத்தினேன். 'இப்படித்தான் ஆடாமல் இருக்கும்...' கொஞ்ச நேரம் அசையாமல் இருந்து, எந்த அவயங்களையும் அசைக்காமல் மரணமாக வாழ்ந்து பார்த்தேன். மறுபடியும் புன்னகைக்கத் தோன்றியது. எல்லோரும் கடந்த காலங்களைத்தான் மறுபடி தன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து பார்ப்பார்கள். நான் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை வாழ்ந்து பார்க்கிறேன். நானே கடந்த காலமாக மாறப் போவதைத்தானே செய்து பார்க்கிறேன்?


மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா? என்ன முரண்?


இப்போது எழுந்து அருகிலிருந்த கட்டிலில் கால்கள் நீட்டிப் படுத்துக் கொண்டேன். கைகளை வயிற்றின் நடுவில் க்ராஸ் அமைத்தேன். தலையை நிமிர்த்தி ஒரே சீராக வைத்து மூச்சை நிறுத்தி, இல்லை, இல்லை, அடக்கி கூரையை வெறித்தேன். கண்கள் மூடியிருக்க வேண்டுமோ...?


மூட முடியவில்லை. அறையின் மேற்கூரையில் விளக்கணைத்தால் நட்சத்திரங்கள் தெரியும் அழகிய ஆகாயம் தெரியும் வண்ணம் அந்த விசேஷ பெயின்ட் அடிக்கப் பட்டிருந்தது. கண்களை மூடாமல் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடியே, மேகக் கூட்டங்களின் நடுவே நட்சத்திரங்களை ஒதுக்கியபடி எல்லையில்லா காலப் பயணத்தில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் பயணம் செய்தேன். கற்பனையில் பயணத்தை எங்கு நிறுத்துவது என்று குழப்பம் ஏற்பட்டது. அதைப் பற்றி நிச்சயமான ஒன்றாக எதுவும் இதுவரைப் படித்ததில்லை! வானில் இரண்டு பங்களாக்கள் சொர்க்கம் ஒன்று நரகம் ஒன்று என்று இருப்பது போலக் கற்பனை செய்ய முடியவில்லை.




அப்படியே நிறுத்தினாலும் எந்த வீட்டில் இறங்குவது என்று முடிவு செய்வது யாராக இருக்கும்? பாவம் எது புண்ணியம் எதுவென்று ஒரு பொது நீதியாக நமக்குள் பேசிக் கொள்வதுதானே... சொர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே நரகமாகி விட்டாலும் என்ன செய்வது?  வெளியில் ஓடித் தப்பிக்க முடியுமா? மாற்றலுக்குக் கேட்க முடியுமா? எனில், யாரிடம்?




வேண்டாம், இந்தக் கற்பனை. ஒதுக்கி விட்டு பயணத்தையே சுற்றிச் சுற்றித் தொடர்ந்தேன். சுற்றி வந்தால் அடுத்து ஜனிக்கக் காத்திருக்கும் ஒரு புதிய உயிருக்குள் புகுந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது.


கண்களைத் திறந்து வைத்திருந்திருக்கக் கூடாது. மூடியிருந்திருக்க வேண்டும்.  திறந்தே இருந்து,  வானம் கற்பனைக் காட்சிக்கு அகப்பட்டதால்தானே பயணக் கற்பனை?  கண்களை மூடிக் கொண்டிருந்திருந்தால் யோசனை ஏதுமின்றி பிணம் போலவே படுத்திருந்திருக்கலாம்.


சிக்கலான கற்பனையை சிக்கலான வார்த்தையமைப்புகளோடு கற்பனை செய்வதாகத் தோன்றியது. இதுவும் எனக்குத் தேவையா இல்லையா என்று முடிவெடுக்கத் தெரியாததால் கற்பனையை மனச் சேமிப்புக் கிடங்கில் அந்த அளவில் சேமித்து, கற்பனை நீக்கி எழுந்தேன்.


இத்தனை நாட்களுமே நாட்களும் நேரமும் மெல்லத்தான் நகர்ந்தன. வேகமாக ஓடியதாகக் கற்பனை செய்ய வேண்டுமானால் எனக்கு மரணபயம் இருக்க வேண்டும். மரண பயம் எப்போது வருகிறது? ஆசைகள் தீராத போதா, கடமைகள் தீராத போதா? ஆசைகள் சுயநலத்தோடும், கடமைகள் பாசங்களோடும் பிணைக்கப் பட்டவை. பாசங்களை அனுபவங்கள் அறுக்கின்றன. நீக்குகின்றன. நம்மால் இருந்த உபயோகம் தீர்ந்த போது நம்மை நாடி வருபவர்கள் யாருமில்லை. அயல் மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஆக்கூட்டம் போல உடன் அதே நிலையில் பயணிக்கும் மாக்களே நம் துணை. அதுவும் வழித்துணைதான்.


என்னால் எந்த பயனும் என் உறவுகளுக்கு இல்லை என்றறிந்து நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன். அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் குறையுமில்லை. அவர்களுக்கு என் மேல் மலையளவு குறையிருக்கலாம். என்னைப் போல அவர்களும் குறையற்று இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை.


துணிகளை ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தானம் செய்தேன். பாத்திரங்களை ரக வாரியாக அடுக்கி மேலே வைத்தேன். சுய சமையல். தேவைக்கு மட்டும் அளவாக பாத்திரங்கள் கீழே வைத்தேன். புத்தகங்களைச் சீராக அடுக்கி வைத்தேன். வீடு குப்பைக் கூளம் இல்லாமலும், அடைசல் இல்லாமலும் சீராக வைத்தேன். 


 
எதைச் செய்தாலும் என் நேர்த்தியைப் பற்றிப் பேசுபவர்கள் இதையும் பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அப்படிப் பேச வேண்டும் என்று கூட நினைத்துச் செய்தேனோ என்னமோ....  இருந்தாலும் தப்பில்லையே....!

ஏதோ ஊருக்குக் கிளம்புவது போல உணர்ந்தேன். ஊருக்குக் கிளம்பினால் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்! நான் யாரிடம் போய், என்னவென்று சொல்ல? நம்புவார்களா என்ன?  ஆனால் ஒன்று மரண வீட்டில் சொல்லாமல்தான் கிளம்ப வேண்டும் என்று சொல்வார்களே... "வூட்ல சொல்லிக்கினு வந்தியா..." ஏதோ சாலைப் போக்குவரத்தில் எப்போதோ கேட்ட ஏதோ ஒரு வாகன ஓட்டியின் குரல் காதில் ஒலித்தது. மறுபடியும் புன்னகை வந்தது. ரொம்பத்தான் புன்னகைக்கிறேனோ....!


கருடபுராணம் கண்ணில் பட்டது. 'படிக்க வேண்டிய காலம்' போட்டிருந்தது. ஏற்கெனவே படித்ததுதான். இப்போதே படித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே அடுத்து இருந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துப் புரட்டினேன். காலக் கணக்குப் பற்றிப் போட்டிருந்ததில் கண்கள் நின்றன.


இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.  அறுபது நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பக்ஷம். 2 பக்ஷங்கள் (வளர்பிறை, தேய்பிறை) ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயநம். இரண்டு அயநங்கள் (உத்தராயணம், தட்சிணாயனம்) ஒரு ஆண்டு. இது மனிதர்களின் காலக் கணக்கு.


மனிதர்களின் ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.....


படித்துக் கொண்டே வந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கடைசி வரி மின்னலடித்தது. அன்று நடந்த உரையாடல் மறுபடி நினைவுக்கு வந்தது.




'என் கணக்குக் கேட்கிறாயா? உன் கணக்குக் கேட்கிறாயா?'

'என் காலமுடிவுக்கு உன் கணக்கைத்தான் கேட்கிறேன்...'


'பதினைந்து நாள்...'


படங்கள் உதவி : நன்றி இணையம்.

25 கருத்துகள்:

  1. எப்புடிங்க இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க !!

    பதிலளிநீக்கு
  2. பல இடங்களில் என் எண்ணங்களையே கண்டேன் என்பதுவே உண்மை. வீட்டை ஒழுங்கு செய்வது, சீக்கிரம் கல்யாணம் ஆகிப் பேரன், பேத்தி எடுத்தது, மற்ற நினைவுகள், எதிர்பார்ப்பு இல்லாமை எனப் பல இடங்களிலும். :)))))இப்படி யோசிக்கிறது உண்டே தவிர எப்போனு கேட்டதில்லை. நல்லவேளையாக் கேட்கலைனு கடைசி வரியைப் படிச்சப்போ நினைச்சுச் சிரிப்பு வந்தது. ஹிஹிஹி. கடைசி வரி சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. தொடங்கிய விதமும் முடித்த விதமும் அருமை.
    //நானே எனக்குப் பகையானேன் போல, நானே எனக்கு செயற்கையாக இருக்க முடியுமா? பல சமயங்களில் நமக்கு நியாயம் என்று நினைப்பது அடுத்தவருக்கு நியாயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லையே... அப்போது நான் சரி என்ற எண்ணம் எனக்குள் நான் ஏற்படுத்திக் கொள்ளும்போது என்னை, என் மனசாட்சியை நான் ஏமாற்றி செயற்கையாகத்தான் இருந்திருப்பேன்....
    ஜேகே.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. முடிவு அருமை.
    வித்தியாசமான கற்பனை

    பதிலளிநீக்கு
  6. Theriyaadhathai nokki oru payanamaai thodangi vithayaasamai mudiththirukireerkal. Very nice.
    Paavam kathaanayakan. Ella accountaiyum marupadi thodanganum! :-))

    பதிலளிநீக்கு
  7. என்னமா எழுதறீங்க! தனிமையில் இதை எல்லாம் யோசிச்சா பயம் தான் பலருக்கு...

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை. பல வரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டின.

    பதிலளிநீக்கு
  9. ஆழமான வரிகள்... ஒரு வாசித்தலில் புரியவில்லை.. ஒவ்வொரு வரிகளையும் மேலும் மேலும் வாசித்தேன்... என்னால் கருத்து கூற இயலவில்லை.... என்னால் என்ன கூற முடியும் சொல்லத் தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  10. எண்ணங்கள் சிலருக்கு ஒரே போல் அமையுமாமே.. சிந்தனைகள் வேறாகி இருந்தாலும்?

    சிந்திக்கிறதுன்னா பிரயத்தன்யம் செய்து ஏதேனும் யோசிக்கிறது.. ஆனா எண்ணங்களுக்கு மட்டும் தடையே போடமுடியாதபடி போய்க்கிட்டே இருக்கும்....

    அதுபோல உங்களுடைய வரிகள் எல்லாம் படிக்கும்போது நான் சிலசமயம் சின்னவயதில் இருந்து இதோ இப்பவரை விடை கிடைக்காமல் பலதடவை தோணினதை தான் அப்படியே கொடுத்திருக்கீங்க....

    கடமைகள் இருக்கு இன்னும் முடிக்க...ஆனாலும் ஒரு பற்றில்லாத்தன்மை சட்டுனு வந்து மனதை வெறுமையாக்கும்...

    இங்கே எழுதி இருப்பதை பார்க்கும்போது மரணத்தை வரவேற்க தன்னை தயார் செய்துக்கொள்ளும் விதத்தை ஒவ்வொரு ஸ்டேஜா ரொம்ப நுணுக்கமா எழுதி இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பா இருக்குப்பா...

    ஆரம்பமே ரொம்ப அசத்தல்.. ஏதோ ஒரு கவலைல இருக்கும்போது எதிர்ப்பார்க்காதப்ப சட்டுனு கடவுள் எதிர்ல வந்தா அப்ப என்ன மனசுல இருக்கோ அதை தான் கேட்போம் என்பது மிகச்சரியே....

    நிறைய விஷயங்கள் நம்மை நாம் அறிய ரொம்ப ஆழ்ந்து யோசிக்கும்போது இதோ நீங்கள் இங்கே எழுதியது போல நடக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு..

    அசந்துவிட்டேன் நீங்கள் எழுதியதை படிக்கும்போது.. இப்படி தான் இப்படியே தான் நினைப்பதுண்டு... இறந்தப்பின் எங்கே போவோம்? திரும்ப ஜனிப்போமா? இப்படி நிறைய கேள்விகள் குடையும் மனதில்....

    கடமைகள் முடித்துவிட்டதால் வருத்தமோ எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லைன்னு நீங்க எழுதியது எத்தனை சத்தியமான வார்த்தை தெரியுமா? உண்மையே.. வயதானப்பின் சட்டுனு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு விட்டு போகிறது.... தனிமையை மெல்ல நாடுகிறது...

    குட்டி குட்டி ஆசைகள் பீச்ல உட்கார்ந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவது... ஆனால் பாராட்டத்தோன்றியது ஆசைகள் எல்லை மீறாதவை என்ற வார்த்தையை படித்தபோது...

    முடிவு நச் நு முடிச்சீங்க... பிடிச்சிருந்தது ஸ்ரீராம்....

    அசத்தலான பதிவுக்கு அன்பு நன்றிகள்பா...

    கருடபுராணம் நானும் படிச்சு பயந்துட்டேன்.. ஐயோ பகவானே இத்தனை கொடுமைகள் இருக்கா என்று...

    பதிலளிநீக்கு
  11. வித்தியாசமான சிறுகதை. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. அசத்தலான பின்னூட்டம் மஞ்சுபாஷிணி.
    (அப்புறம்.. புருடா புராணம் படிச்சு ரொம்ப பயந்துராதீங்க..)

    பதிலளிநீக்கு
  13. இன்னும் 15 வருஷமா.. எப்படி நேரத்தைக் கழிக்கிறதுன்னு யோசிக்(கப் போ)கிற அவர்கிட்டே ப்ளாக்/ஃபேஸ்புக்/டிவிட்டர்/ஜிப்ளஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லுங்கோ.. :-))))))

    பதிலளிநீக்கு
  14. பல வரிகளைத் திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன். பாசத்தை அனுபவங்கள் அறுக்கின்ரன; ஆசையையும் கடமையையும் வரையறுத்த விதம் என்று பல வரிகளைச் சொல்லலாம். வீட்டிற்கு வரும் விருந்தாளியை உபசரிக்க தயாராவதுபோல் மரணத்தை எதிர்பார்த்து இருப்பது சுவை.

    பதிலளிநீக்கு
  15. அசத்தல்ன்னு ஒரு வரியில் சொல்லிர முடியலை. நிறையவே யோசிக்க வைச்சது.

    பதிலளிநீக்கு
  16. //அப்பாதுரை said...
    அசத்தலான பின்னூட்டம் மஞ்சுபாஷிணி.
    (அப்புறம்.. புருடா புராணம் படிச்சு ரொம்ப பயந்துராதீங்க..)//

    அச்சச்சோ நிஜம்மாவா?

    அன்பு நன்றிகள் அப்பாதுரை...

    பதிலளிநீக்கு
  17. //ஹுஸைனம்மா said...
    இன்னும் 15 வருஷமா.. எப்படி நேரத்தைக் கழிக்கிறதுன்னு யோசிக்(கப் போ)கிற அவர்கிட்டே ப்ளாக்/ஃபேஸ்புக்/டிவிட்டர்/ஜிப்ளஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லுங்கோ.. :-))))))//

    ஹுசைனம்மா ரொம்ப ரொம்ப ரசித்தேன்பா இந்த வரிகளை....

    பதிலளிநீக்கு
  18. "ஹையா!.. இன்னும் பதினைந்து வருடங்களா?"

    "ஆம். அதான் என் கணக்குப்படி உன் கணக்கு.."

    "அம்மாடி.." என்று நிம்மதிப் பெருமூச்சு உயிர்மூச்சாய் நீண்டது.

    சுஜாதா சொன்னாராமே, சாகற நாள் தெரிஞ்சால் வாழற நாள் நரகமாயிடும்ன்னு!

    எவ்வளவு பொய்?..

    பதிலளிநீக்கு
  19. //மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா?//
    மரணத்திலாவது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து நிம்மதி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு வேளை சிதைந்து போக வாய்ப்புண்டு. மரணத்திற்கு பிறகு வேறு புதிய
    சிக்கல்கள் தொடங்கும் என்றிருந்து அது தெரிய வந்தால்? அது இன்னும் விபரீதம்.
    //பாசங்களை அனுபவங்கள் அறுக்கின்றன. நீக்குகின்றன.//
    முற்றிலும் உண்மை.

    //நம்மால் இருந்த உபயோகம் தீர்ந்த போது நம்மை நாடி வருபவர்கள் யாருமில்லை. //

    //என்னால் எந்த பயனும் என் உறவுகளுக்கு இல்லை என்றறிந்து நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன். அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் குறையுமில்லை. அவர்களுக்கு என் மேல் மலையளவு குறையிருக்கலாம். என்னைப் போல அவர்களும் குறையற்று இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை. //

    பிரமாதம்! பலமுறை படித்தேன். ரசித்தேன்.

    கலக்கல் பதிவு!

    பதிலளிநீக்கு
  20. கீதா சாம்பவசிவம் போல் நானும் உணர்ந்தேன். கண்ணதாசன் அவர்கள் ஒருமுறை தான் இறந்தால் நமக்கு தெரிந்தவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று ஒரு முறை தான் இறந்ததாக வதந்தி கிளப்பி விட்டாராம். முதலில் வந்தது எம்.ஜி.யார் தானாம் !

    "இருக்கும் ஒரு வீட்டையும் இரண்டு மனைகளையும் யாருக்குச் சேர வேண்டும் என்று எப்படி எழுத வேண்டுமோ அபபடி எழுதி வைத்தேன்"

    அட, நம்ம கதை போலே இருக்கே !!

    போன வருடம், கையில் ஒரு ஆபேரஷன் அதற்கு முன் "நீ இறந்தால் உயில் எழுதி வைத்து இருக்கின்றாயா, உன் உற்றார் எங்களை எதுவும் கேட்க கூடாது" என்று எல்லாம் என்னிடம் கையெழுத்து வாங்கி செய்தார்கள்.... உள்ளே நுழையும்போது எனக்கும் ஐயோ உயில் எழுதவில்லையே என்று தோன்றியது....

    அதைவிட, போன வருடம் - இங்கே கார் ஒட்டி செல்லும்போது நெஞ்சில் வலி வந்து வண்டியே ஓட்ட முடியவில்லை, வேர்த்து விறுவிறுத்து, பேச்சு குளறி வந்தபோது - ஐயோ காலி என்று நினைத்தேன்....

    இல்லை மகனே, நீ இருந்து படுத்த வேண்டியது நிறைய இருக்கு என்று எனக்கு கடவுள் இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுத்து இருக்கின்றார்.....

    அடுத்த முறை இந்திய செல்லும்போது உயில் எழுதிவிட வேண்டும்....


    /ஹுஸைனம்மா said...
    இன்னும் 15 வருஷமா.. எப்படி நேரத்தைக் கழிக்கிறதுன்னு யோசிக்(கப் போ)கிற அவர்கிட்டே ப்ளாக்/ஃபேஸ்புக்/டிவிட்டர்/ஜிப்ளஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லுங்கோ.. :-))))))//

    ஹுசைனம்மா ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை !

    - சாய்

    பதிலளிநீக்கு
  21. வித்தியாசமான கதை.இன்னும் 15 நாட்கள் என்று தெரிந்துவிட்டால் முடிந்தவரை நம்மை.நம்மைச் சூழ்ந்த எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக்கொள்ள கால அவகாசம் கிடைத்திருக்கிறது.கதையில்லாமல் நிஜத்தில் தெரிந்துகொண்டாலும் நல்லதோ என நினைக்கவைக்கிறது கதை !

    பதிலளிநீக்கு
  22. ஹேமாவின் புதுக் கணக்கு நிஜமானால் நம் கதா நாயகனுக்கு என்றில்லை, எல்லோருக்குமே மகிழ்ச்சி தான் !

    பதிலளிநீக்கு
  23. எழுதினது யார்?போனஸ் பதினைந்து வருஷங்களை என்ன செய்வதாக உத்தேசம்.:)
    //அடுத்த முறை இந்தியா செல்லும்போது உயில் எழுதிவிட வேண்டும்,./
    @சாய்

    நீங்கள் நிறைய நாட்களுக்கு நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. மோகன் குமார், கீதா சாம்பசிவம், அப்பாதுரை, திண்டுக்கல் தனபாலன், சிவகுமாரன், middleclassmadhavi, வெங்கட் நாகராஜ், ராமலக்ஷ்மி, சீனு, மஞ்சுபாஷினி, ஹேமா (HVL), vinoth kumar, ஹுஸைனம்மா, கீதா சந்தானம், அமைதிச்சாரல், ஜீவி சார், மீனாக்ஷி, சாய், ஹேமா, வல்லிசிம்ஹன்...

    படித்து, ஆதரவு தந்து, ஊக்கப் படுத்தி உற்சாகமூட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!