சமீபத்தில் நிகழ்த்திய (!) ஒரு ஆன்மீகப் பயணம்! மயிலை கபாலி கோவிலில் தொடங்கி அந்த ஏரியாவில் சில கோவில்களைச் சுற்றினோம்.
கபாலியையும் கற்பகாம்பாளையும் இவ்வளவு சுலபமாக சமீப காலங்களில் பார்க்க
முடிந்ததில்லை! காலை 7 மணிக்கு, அதுவும் செவ்வாய்க் கிழமை என்பதாலோ என்னமோ
கூட்டம் எதுவும் இல்லை. இருவரையும் கண்குளிர தரிசிக்க முடிந்தது. உள்ளே சுற்றி வந்த பறவையின் பெயர் போந்தாக் கோழி என்று நினைவு.
அடுத்து அங்கிருந்து நேராக சாய்பாபா கோவில்.
இந்தக் கோவிலிலிருந்து
திரும்பும்போது ஏதாவது ஒரு நல்ல கடையில் டிபனை முடித்துக் கொள்வோம் என்று
எண்ணியிருந்தோம். ஆனால் கோவிலில் கொடுத்த திவ்யமான வெண்பொங்கல் அதற்குத்
தேவையில்லாமல் செய்தது. வலது பக்கமாகச் சென்று ஷிர்டி பாபாவின் கால் பற்றி
வணங்க முடிகிறது.
என் நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து பாபா சிரித்ததாகச் சொன்னார். இன்னொரு நண்பர் கண் சிமிட்டுவது போல இருந்ததாகச் சொன்னார். என்னைப் பார்த்தும்
சிரிக்கிறாரா, கண் சிமிட்டுகிறாரா என்று பார்த்தேன். ஊ ஹூம்! அருகில்
சென்று கால் தொட்டு வணங்கும்போது பாதத்தை நைசாக கிச்சு கிச்சு மூட்டியும்
பார்த்தேன், அப்போதாவது சிரிக்கிறாரா என்று பார்த்தேன்!! ஊ.....ஹூம்! ! எட்டி உதைக்காமல் விட்டாரே என்று வேகமாகக் கிளம்பி விட்டேன்! :)))
சுற்றி வரும்போது பின் ஹாலில் தியான மண்டபம் இருக்கிறது.
அங்கு(ம்) அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்துக் கொண்டு தியானத்தில்
அமரலாம். அந்த ஹால் வாசலில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மரங்களோடு
நட்சத்திரப் பெயர்கள் எழுதி அந்தந்த மரத்தில் தொங்க விட்டிருந்தார்கள்.
எங்கள் நட்சத்திரங்களுக்கு என்ன மரம் என்று பார்த்துக் கொண்டோம்.
தரிசனத்தின்போது ஒலித்துக் கொண்டிருந்த அனுராதா ஸ்ரீராம் பாடிய 'அன்பே
சாய்' பாடல்களால் கவரப் பட்டு அந்த சி டி ஒன்று வாங்கிக் கொண்டோம்!
பிரமாதமான பொங்கல். கடைகளில் கூட அப்படிச் சாப்பிட்டதில்லை. தரமான
தயாரிப்பு. என்ன, தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் இல்லாததுதான் குறை! இதைச்
சொன்னபோது எங்கள் சாய் பக்த நண்பர்கள் அங்கு மதியங்களில் வழங்கப்படும்
சாப்பாடு பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னார்கள். இங்கு தவிர
ஈஞ்சம்பாக்கத்திலும் இருக்கும் பாபா கோவிலில் சாப்பாடு இன்னும் பிரமாதமாக
இருக்குமாம்!
வெளியில் வந்து டிபன்தான் சாப்பிடவில்லை, காபியாவது சாப்பிடுவோம் என்று
அருகிலேயே அமைந்திருந்த 'கும்பகோணம் டிகிரி காபி' கடையில் காபி
சாப்பிட்டோம். ஒரு காபி15 ரூபாய். நெளியாத அழகான பித்தளை டபராத் தம்ளர்களில் நுரை பொங்க காபி தருகிறார்கள்.
அங்கிருந்து பொடி நடையாக ராஜ் டிவி புகழ் (!) நவசக்தி கணபதியைத் தரிசனம்
செய்து கொண்டு, லஸ் ஆஞ்சநேயரை அடைந்தோம். சிறிய கோவில். புகழ் பெற்ற
கோவில். ஆஞ்சியும், ராமரும் அருகருகே அருள் பாலித்துக் கொண்டிருந்தனர்.
சுற்றி வரும்போது புளியோதரை கிடைக்குமா என்று ஜொள்ளு வழியப் பார்த்த/கேட்ட
போது 'வடைதான் இருக்கு 8 வடை 10 ரூபாய்' என்றார் மடைப்பள்ளி மாமா! ஆவலாக
வாங்கினால் தட்டை போன்ற ஆஞ்சி வடை! சற்றே அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்
கொண்டிருக்கும்போது இரண்டு பக்தர்கள் புயலென உள்ளே நுழைந்து ஆஞ்சி
உம்மாச்சியின் முன் தண்டனிட்டார்கள். உள்நாட்டு ஆணும், வடநாட்டு அல்லது
வெளிநாட்டுப் பெண்ணும். (ஹிஹி... சரியா அனுமானிக்க முடியலீங்க) கைகள்
நடுங்க, உடம்பு அதிர அந்த இரு 'ஜீன்ஸ் - டி ஷர்ட்' வாலாக்களும் ஒரு யோகம்
போல நிறுத்தி, நிதானமாக கைகளை நெஞ்சுக்கு நேரே கூப்பி, கொஞ்சம் கொஞ்சமாக
நடுங்கும் கரங்கள் அதிரும் உடம்புடன் நெற்றி வரைக் கொண்டு வந்து, மீண்டும்
நெஞ்சுக்கு நேரிலிருந்து மறுபடி கூப்பி, சாமி கும்பிட்டது கண்களைக் கட்டி நிறுத்தியது சற்று நேரம்.
அங்கிருந்து மாதவப் பெருமாள் கோவில்.
அழகிய பெருமாள் தரிசனம். அருகிலேயே
தாயார் சன்னதி. கேசவப் பெருமாள் கோவில் திறந்திருக்குமா என்று அங்கிருந்த
பட்டரிடம் கேட்டோம். அப்போது மணி 11. 'வாய்ப்பில்லை, சிவன் கோவில்கள்தான்
உச்சி கால பூஜைகளை முன்னிட்டு 12 மணி வரை திறந்திருப்பார்கள், நாங்கள் 11
மணிக்கு நடை சாத்தி விடுவோம்' என்றார்கள். இங்குதான் கொஞ்சம் புகைப் படம் எடுத்துக் கொண்டோம். கபாலி கோவில் குளம் ஒன்று எடுத்தோம். அப்புறம் இங்கு. ஏனோ அவ்வளவாகப் படம் எடுக்கத் தோன்றவில்லை.
வெளியில் வரும்போது வழிமறித்த பெண்மணி 'சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமா'
என்று கேட்டார்.
வீடுகளுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு வேண்டுமானாலும்
வந்து விடுவாராம். உதவி செய்யுங்கள் என்றார். அதே ஏரியாவாக இருக்கும் பட்சத்தில் 'மாதம் 6,000 கொடுங்கள்' என்றார். கணவர்
சமஸ்கிருதக் கல்லூரியில் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு சமையல்
செய்பவராம். அவர் பெண் கடைசி வருடம் BE படிக்கிறாராம். மகளுக்கு நல்ல வேலை
வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகக் கூறினார். படமெடுத்து ப்ளாக்கில் போடுவோம்
என்றதும் தயக்கத்துடன் நின்று, அலைபேசி எண் கொடுத்தார்.
கேசவப் பெருமாள் கோவில் செல்ல முடியாது என்றாலும் அருகிலேயே இருந்த முண்டகக் கண்ணி அம்மன் ஆலயம் அடுத்து.
முதலில் அரை லிட்டர் பால் வாங்கி அம்மனுக்குக் கொடுத்த பிறகு பாஸ் சற்றே யோசித்து இன்னொரு அரை லிட்டர் பால் வாங்கி அங்கிருந்த நாகப் பிரதிமைகளுக்கு விட்டார்.
கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து வெளியில் வந்ததும் அங்கிருந்து கேசவப் பெருமாள்
கோவிலிலிருந்து தொடங்கியிருந்தால் எல்லாக் கோவில்களும் கவர்
செய்திருக்கலாம் என்று நண்பர் ஒருவர் அப்புறம் சொன்னார்!
வழியில் ஒரு பாலத்தைக் கடக்கும்போது டிராஃபிக்கில் வண்டி நின்றபோது
பாலத்தில் ஒரு எருமை மாடு நின்றுக் கொண்டிருக்க, ஒரு பைக் காரர்
'வாகனங்களுக்கு மட்டும்' என்று போர்ட் போட்டிருக்கு... இது ஏன் வந்தது?'
என்றார். இன்னொரு சாதாரண பைக்கர்,' அதுக்குப் படிக்கத் தெரியாதுல்ல...
அதான்' என்றார். அருகிலிருந்த மற்றுமொரு ஸ்பெஷல் பைக்கர் சொன்னார்..'ஏங்க..
என்ன தப்பு? அதுவும் வாகனம்தானே? எமனோட வாகனம்!' என்றார். (உண்மையில்
பத்திரிகையில் வருவது போலச் சொல்ல வேண்டுமென்றால் இங்கு 'என்றாரே
பார்க்கலாம் என்று முடிக்க வேண்டும்!)
சாய்பாபா கோவில் படங்கள் : நன்றி இணையம்.