சனி, 25 மே, 2013

பாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =    
    
1) அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாகும் இந்தியர்  
             
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன், அமெரிக்க நீதி மன்றத்தின் நீதிபதியாகிறார். ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகாரில் பிறந்தவர். அமெரிக்காவில் அவர் கட்சி பாகுபாடின்றி ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர் ஆவார். 
     

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரபல வக்கீல் ஸ்ரீகாந்த் சீனிவாசன் (46). தற்போது இவர் அரசின் துணை சொலிசிடர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார். 

                  
இவரை கொலம்பியா Circuit Court நீதிபதியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமனம் செய்து உத்தரவிட்டார். காலியாக இருக்கும் 4 நீதிபதி பணியிடங்களில் ஒரு நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
                    
இந்நிலையில் ஸ்ரீகாந்த் சீனிவாசனின் நியமனத்துக்கு 18 உறுப்பினர்கள் கொண்ட செனட்சபை நீதித்துறை கமிட்டி சென்ற வாரம் ஒப்புதல் அளித்தது. இதுபற்றி கமிட்டி தலைவர் செனட்டர் பாட்ரிக் லீசேய் கூறும்போது, ‘இரு கட்சி சேர்ந்த பிரதிநிதிகளும் ஆய்வு செய்து இந்த நியமனத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தோம்’ என்று குறிப்பிட்டார். 

              
           
இதனை அடுத்து கொலம்பியா Circuit Court நீதிபதியாக ஸ்ரீகாந்த் சீனிவாசன் பதவி ஏற்கிறார். இது அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டுகளுக்கு அடுத்த 2-வது பெரிய கோர்ட்டு ஆகும்.   

               

இதன் மூலம் அமெரிக்காவிலுள்ள உயர் கோர்ட்டுக்கு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த பெருமை ஸ்ரீகாந்த் சீனிவாசனுக்கு கிடைத்திருக் கிறது.
                    
ஒரு இந்தியனுக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய பதவிக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவிப்போம்.. நீதிபதியை பாராட்டுவோம்! (முகநூல்)

                       
2)  சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.
                   
அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.
ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம், "ஜகூ' என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.
               
எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
                
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.

இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.  
            
தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.
               
கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.
                        
தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ...தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா
   
ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.
    
வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,
வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது.
    
மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது...
      
தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.
     
இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
       
யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.
             
இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.
                
இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.
    
இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.    
        
வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.
    
(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)  
    
விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது

"நன்றி!அண்ணா''! (தினமலரில் எல் முருகராஜின் கட்டுரைச் செய்தி.)

3) இந்த நேரத்தில் இந்த பாசிட்டிவ் செய்தி :

20 லிட்டர் மினரல் வாட்டரை, வெறும், 7 ரூபாய்க்கு விற்பனை செய்யும், வாட்டர் லைப் நிறுவனத்தின், மனோகர்: புதுச்சேரியில், சுனாமிக்கு பிறகு, நிலத்தடி நீரின் தன்மையும், அதன் சுவையும் மாறியதால், தரம் மிகவும் குறைந்து விட்டது.

"போர்வெல்' மூலம் கிடைக்கும் நீரும், மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை. எனவே, இக்குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, புதுச்சேரி அரசுடன் இணைந்து, நிலத்தடி நீரை சுத்திகரித்து, குறைந்த விலையில், "மினரல் வாட்டர்' வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினோம்.

பொது மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி அரசு உதவியுடன், நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்தோம். பொதுப்பணித் துறை உதவியால், போர்வெல்லில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, "ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' எனும், எதிர் திசை சவ்வூடு பரவல் முறையில் சுத்தம் செய்வதால், குடிப்பதற்கு ஏற்ற, சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட, 20 லிட்டர் தண்ணீரை, வெறும், 7 ரூபாய்க்கே தருகிறோம்.
   
புதுச்சேரியை சுற்றி, மொத்தம், 19 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு நிலையத்திலும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சம், 24,000 லிட்டர் குடிநீரை சுத்திகரித்து, கேன் ஒன்றுக்கு, 20 லிட்டர் என்ற அளவில், 1,200 கேன்கள் வரை, பொது மக்கள் பெற முடியும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, இத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது.
   
விரைவில், கிராமப் பகுதியிலும், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.வார நாட்களில், தினமும் காலை, 7:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரையும், பின், மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, பொது மக்கள் எங்களிடமிருந்து, தண்ணீரை பெற முடியும்.
     
ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பகல், 12:00 மணி வரை, தண்ணீர் பெறலாம். எங்கள் சேவை மற்றும் தரத்தில், ஏதேனும் குறை மற்றும் தகவல் தேவைப்பட்டால், 1800 420 9696 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனடியாக அக்குறையை சரிசெய்வதுடன், தேவையான தகவலும் தருகிறோம்.
    
4)  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, புத்தகங்களை இலவசமாக டோர் டெலிவரி செய்யும், சேதுராமன்: நான், சென்னை, அம்பத்தூரில் வசிக்கிறேன். இளம் தலைமுறையினரிடம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓய்வு நேரத்தில், புத்தகங்கள் வாசிக்காமல், "டிவி' பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதிலேயே, நேரங்களை செலவிடுவதால், தாய் மொழியான தமிழை கூட, மாணவர்கள் சிரமப்பட்டே படித்ததால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முயற்சித்தேன். இன்றைய சூழலில், பலருக்கு போதிய நேரம் இல்லாததால், நூலகத்திற்கு நேரடியாகச் சென்று படிக்க முடியாது.
      
குழந்தைகளுக்கு நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில், பெற்றோருக்கும் பல சிரமங்கள் உள்ளதை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய எண்ணி, டி.சி.எஸ்., நிறுவனத்தில், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பள வேலையை, ராஜினாமா செய்து, "பேன்யன் ட்ரீ' என்ற நூலகத்தை, நண்பர்கள் உதவியுடன், 2010ம் ஆண்டு, புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்தேன். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப, புத்தகங்களின் விவரங்கள் பற்றிய குறிப்பை, "ரீடர்ஸ் கிளப்' என்ற, எங்களின் இணையதளத்தில் வெளியிட்டோம். வேலைச் சுமை காரணமாக, நூலகத்திற்கு நேரடியாக வர முடியாதவர்களுக்குத் தேவையான புத்தகத்தை, நாங்களே அவர்களின் வீடு தேடிச் சென்று இலவசமாக, "டோர் டெலிவரி' செய்கிறோம். தேவையான புத்தகத்தை, தொலைபேசி அல்லது இணையதளம் மூலம், எங்களுக்கு தகவல் தந்தால் மட்டும் போதும். லாப நோக்கத்தை தவிர்த்து, ஒரு சேவையாக, இந்நூலகத்தை நடத்தி வந்தாலும், புத்தகங்களின் விலை உயர்வு, புத்தகத்தை, "டோர் டெலிவரி' செய்வதற்கான, ஆட்களின் மாத ஊதியம் மற்றும் வாகனங்களுக் கான பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க, ஒரு நபருக்கு, மாத சந்தாவாக, 60 ரூபாய் வசூலிக்கிறேன். தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், எங்களிடம் சந்தாதாரர்களாக உள்ளனர். தொடர்புக்கு: 99621 00032.
                  
5) நடிகர் லாரன்ஸ் தீவிரமான ராகவேந்திரர் பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... இவர் சென்னை அம்பத்தூரில் ராகவேந்திரருக்கு ஒரு கோவில் கட்டியுள்ளார். இக்கோவில் கட்டி நான்கு ஆண்டுகள் சமீபத்தில்  நிறைவடைகிறது. அன்றைய நாளிலேயே ராகவேந்திரரின் பிறந்தநாளும் வருகிறது.  
                                            

இதையொட்டி, ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கும் லாரன்ஸ், புதிதாக கட்டியுள்ள இலவச பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறாராம். இந்த பள்ளியின் மூலம் 100 மாணவர்களுக்கு இலவச கல்வி வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்துள்ளார்.  
                               
5)  இலவச வாகன உதவிகள்!  
 
மாற்றுத் திறனாளிகளுக்கான, இலவச மோட்டார் வாகனங்களை பெறும் முறைகளை விளக்கும், சூர்ய.நாகப்பன்: 
    

நான், "காலிப்பர்' என்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தை, கோவையில் நடத்தி வருகிறேன். மாற்றுத் திறனாளிகள், தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களுக்கு எளிதில் சென்று வர, அரசு உதவியுடன், இலவசமாகவே, மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை பெறலாம். 18 வயது பூர்த்தியடைந்த, மேற்கல்வி பயில்வோர், சுயதொழில் செய்பவர் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. 
    
தாங்கள் பயிலும், கல்லூரி அல்லது கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து அத்தாட்சியும், மாற்றுத் திறனாளி என்பதற்கான, தேசிய அடையாள அட்டையின் நகலையும் இணைத்து, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நல அலுவலர், விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து, சான்றிதழ்களின் உண்மை தன்மையை விசாரித்து, மருத்துவ பரிசோதனை செய்வர். அதன் முடிவுக்கு ஏற்ப, உடற் குறைபாட்டை பொறுத்து, முன்னுரிமை கிடைக்கும். ஆனால், மூன்று சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் அளவிற்கு, கரங்கள் வலு உள்ளதாக இருப்பது அவசியம். 
                 
ஒவ்வொரு ஆண்டும், மாநில அளவில் தேர்வு செய்யப்படும், 1,000 பயனாளிகளுக்கு, சுதந்திர தினம், குடியரசு தினம், மாற்றுத் திறனாளிகள் சர்வதேச தினமான, டிச., 3ம் தேதி, ஆகிய நாட்களில், மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், இலவசமாக வழங்கப்படும். அலுவலர் பரிசீலித்த பின்னும், வாகனம் வழங்க தாமதித்தால், மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், முதல்வரின் தனி பிரிவுக்கும், மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்து, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறலாம். ராஜிவ் காந்தி மெமோரியல் டிரஸ்ட், கார்ப்பரேட் நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்ற தனியார் அமைப்புகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மோட்டார் வாகனங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.    
 
7) ஏப்ரல் 12, 2011: உத்திரப்பிரதேசத்தின் பரைலி நகரிலிருந்து தில்லி வரும் பத்மாவதி எக்ஸ்பிரஸ். குண்டர்கள் சிலர் தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எதிர்த்துப் போராடினார் அருணிமா சின்ஹா. கோபம் கொண்ட அந்தக் கயவர்கள் ஓடும் ரயிலிருந்து அருணிமாவைக் கீழே தள்ளிவிட எதிர் பக்கத்திலிருந்து வந்த மற்றொரு ரயிலில் அவரின் கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பயங்கர அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருணிமாவின் உயிரைக் காப்பாற்ற அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
   
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இருக்கும் ஒரு சிகரம் சாம்சேர் காங்க்ரி. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 21710 அடி. கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அருணிமா சின்ஹா என்ற பெண்ணும் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினரும் இச்சிகரத்தின் 21110 அடி வரை சென்றிருக்கிறார்கள். இன்னும் 600 அடி சென்றால் சிகரத்தினைத் தொட்டிருக்க முடியும் – ஆனால் இடைவிடாத பனிப்பொழிவும் மழையும், போதிய வெளிச்சம் இல்லாமையாலும் அவர்களால் இன்னும் 600 அடி ஏறி சிகரத்தினைத் தொடமுடியவில்லையாம். தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!
   
பச்சேந்த்ரி பால் அவர்களிடம் மலையேற்றத்திற்கான பயிற்சி பெற்ற இந்த தன்னம்பிக்கை மனுஷி, சென்ற 21 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தினைத் தொட்டிருக்கிறார். தனக்குக் கால் இல்லையென எல்லோரும் பரிதாபமாய் பார்ப்பதைத் தவிர்க்க ஏதாவது செய்தே தீரவேண்டும் என நினைத்து விடாமுயற்சியுடன் பல இன்னல்களைக் கடந்து சிகரம் தொட்ட இந்தப் பெண்மணிக்கு மனதார வாழ்த்துகளைத் தெரிவிப்போம். (வெங்கட் நாகராஜ் பக்கத்திலிருந்து)
       

12 கருத்துகள்:

 1. நீதிபதி ஸ்ரீகாந்த் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  ஜெகதீஷ் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள். உடற்குறையை நினைக்காமல் சாதனை செய்து வரும்அவருக்கு வாழ்த்துக்கள்.
  வாட்டர் லைப் நிறுவனத்தின், மனோகருக்கு வாழ்த்துக்கள். நல்ல சேவை செய்கிறார்.
  சேதுராமன் அவர்கள் நூலகம் அருமை முன்பே படித்து இருக்கிறேன்.அவருக்கும் வாழ்த்துக்கள்.
  நடிகர் லாரன்ஸ்அவர்கள் இலவச பள்ளிக்கும், அவருக்கும் வாழ்த்துக்கள்.

  சூர்ய.நாகப்பன் அவர்கள் நடத்தும் "காலிப்பர்' என்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்திற்கு வாழ்த்துக்கள்.
  சிகரம்தொட்டஅருணிமாசின்ஹா
  அவர்களுக்கு பூங்கொத்து.
  நல்ல செய்திகளை சொன்ன உங்களுக்கும் பூங்கொத்து.


  பதிலளிநீக்கு
 2. எல்லாம் வல்ல ஜகதீசருடைய பெயரை வைத்துக் கொண்டிருக்கும் ஜகதீஷ்க்கு மனவளம் இருப்பது போல அவரது திறமையை நிரூபிக்கச் சந்தர்ப்பங்கள் வரவேண்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  //
  இதன் மூலம் அமெரிக்காவிலுள்ள உயர் கோர்ட்டுக்கு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த பெருமை ஸ்ரீகாந்த் சீனிவாசனுக்கு கிடைத்திருக் கிறது.//
  நம் வீட்டுக்குக் கிடைத்த பெருமையாக நினைக்கிறோம். வாழ்த்துகள் ஸ்ரீனிவாசன்.

  நம் லாரன்ஸ் ராக்வேந்திரருக்கு மனம் விசாலமாக இருக்கிறது. அவரது படத்தில் முகம் அகத்தில் ஒளிவிடும் புண்ணியபலனைக் காட்டுகிறது.ஆசிகள் பல.

  பாண்டிச்சேரி தண்ணிர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் ஸ்தாபனத்துக்கு நன்றி.

  பான்யன் ட்ரீ. அற்புதமான வேலையை ஆரம்பித்திருக்கிறது.
  ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.


  மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்ய முன்வந்திருக்கும் சூரியநாகப்பனுக்கு அவர் தொழில் விருத்தியடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  இவ்வளவு நல்ல செய்திகளைக் கொடுத்து எங்கள் காலத்தை வளமாக்கும் எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீகாந்த் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பெருமைப் பட வேண்டிய தகவல்...

  கோவை ஜெகதீஷ் ஆச்சரியப்பட வைக்கிறார்... பலருக்கும் ஒரு பாடம் அவர்... வாழ்த்துக்கள்...

  60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தை உதறித் தள்ளி சேவை செய்யும் சேதுராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ராகவேந்திரர் பக்தரின் சேவைகள் தொடரட்டும்...

  மற்ற அனைத்து + செய்திகளுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 4. லாரன்ஸின் சேவை தொடரட்டும்..எங்கள் ஊர் செய்திக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 5. இன்டி ப்ளாகர் என்னும் அமைப்பின் ஒரு கூட்டம் சென்னையில் நாளை ஞாயிறு தேனாம்பேட்டை ரயாட் ரெசிடன்ஸியில்
  மதியில் 1 மணி அளவில் நடக்கிறது. என்ன பொருள் பற்றி என்றெல்லாம் போடவில்லை.

  இது வலைப்பதிவாளர்கள் அமைப்பின் கூட்டம் . இதுவரை சுமார் 200 பேர் பதிவு செய்துள்ளனர். அந்த பெயர்களைப் படித்தால் பல பெயர்கள் நமது தமிழ் உலகப்பதிவாளர்கள் நமக்குத் தெரிந்த சென்னைப்பதிவாளர்கள் போல் உளர்.
  தமிழைத் தவிர இதர மொழிப்பதிவாளர்களும் இதில் இருக்கின்றனர்.

  அம்பி புர் என்னும் ஒரு வாசனை திரவியமோ அல்லது ப்யூரிஃபையர் நிறுவனமோ அதன் ஸ்பான்சர்ஷிப்பில்
  இந்த கூட்டம் நடக்கிறது எனக்கேள்விப்படுகிறேன்.

  சும்மானாச்சும், இதுலே என்னதான்யா நடக்குது அப்படின்னு போவலாம்னு இருக்கேன்.

  விவரங்கள் இங்கே:
  www.indiblogger.com/meets

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரத் தயார்


  ஒரு பக்கம் சீனிவாசன் பெயர் நாறுகிறது, இன்னொரு பக்கம் ஜொலிக்கிறது....
  ஜெகதீஷ் என்னும் அருமையானா மனிதனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை
  வாழ்க லாரன்ஸ்..

  அவர் கட்டியா ராகவேந்திரா கோவிலுக்கு போயிருக்கீங்களா...மிக ரம்யமாய் இருக்கும்

  பதிலளிநீக்கு
 7. //இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரத் தயார்
  //

  இது எனது பேஸ்புக் நிலைத்தகவலுக்காகா டைப்பியது குழம்ப வேண்டாம்

  பதிலளிநீக்கு
 8. ஜெகதீஷ் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்.

  நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. எனர்ஜி ஊட்டும் அருமையான செய்திகள்! பலது அறிந்தவை என்றாலும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!