"பள்ளித் தல மனைத்தும் கோவில் செய்குவோம்..."
பாரதியின் வரிகள். அதே
பாரதியார் தான் "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்..." என்று தொடங்கி, "அன்ன
யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.." என்றும்
பாடியுள்ளார். ஏன் இந்த முரண்பாடு?
இதை நான் கேட்கவில்லை. 'கலாரசிகன்' கேட்கிறார்.
முன்னர்
ஒருமுறையும் தினமணி ஞாயிறு பகுதிகளைச் சிலாகித்து எழுதிய ஞாபகம்
இருக்கிறது. இப்போது மறுபடியும் பகிர ஒரு விஷயம் கிடைத்து விட்டது!
தமிழ்நாட்டில்,
குறிப்பாகச் சென்னையில் தமிழ் சம்பந்தமாக எந்த ஒரு விழா நிகழ்வு
நடந்தாலும் அதில் தினமணி எடிட்டர் திரு கே எஸ் வைத்தியநாதன் அவர்களைக்
கட்டாயம் பார்க்கலாம். நல்ல தமிழ் ஆர்வலர்.
முன்பெல்லாம் தினமணி நாளிதழைப் படிக்கவே தோன்றாது. அதன் எழுத்துருவும்,
செய்திகளும் 'போர்' அடிக்கும்! ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. அதுவும்
ஞாயிறு தினமணியில் படிக்க, சுவைக்க ஏராளமான பகுதிகள். அதில் ஒன்று
கலாரசிகன் என்ற பெயரில் திரு கே எஸ் வைத்தியநாதன் எழுதும் பகுதி.
பெரும்பாலும் அடுத்த நாள் திங்கள் தினமணியில் வர வேண்டிய அறிமுகம்
பகுதியில் வரவிருக்கும் புத்தகங்கள் பற்றி இருக்கும். கடைசியாக அவர் ரசித்த
ஒரு கவிதை அறிமுகம் இருக்கும்.
அந்தப் பகுதியில்தான் இந்த வாரம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
கேள்வியும் அவருடையது அல்ல! வாலி குமுதத்தில் அந்தக் கேள்வியை எழுப்பி,
பதிலும் சொல்லியிருக்கிறாராம்.
முகநூலில் ஜெயராமன் ரகுநாதன் அவர்கள்
குமுதம் பற்றிய பழைய நினைவுகளை அசை போட வைத்திருந்தார். குமுதத்தில் அந்தக்
காலத்தில் வந்த உடல், பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, என்று இன்னும்
பல படைப்புகளை நினைவு கூர்ந்திருந்தார்.
இப்போது குமுதம் பக்கம் போகவே முடியவில்லை என்றும்
சொல்லியிருந்தார்.அதுதான் என் அபிப்ராயமும்.
விகடன் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும். ஜீவி ஸார் குங்குமம்
பத்திரிகையை சிபாரிசு செய்திருந்தார்.
'கே எஸ் வை' குமுதம்
சிபாரிசு செய்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள். இசைஞானி இளையராஜா,
துக்ளக் ஆசிரியர் சோ, வாலி அவர்களது கட்டுரைகள் வருவதால் என்கிறார்.
இம்மூவரின் படைப்புகள் குமுதத்தில் வருவதால் நானும் குமுதம் வாங்க எண்ணம்!!
அந்தக் குமுதத்தில் வாலி இந்தக் கேள்வியை எழுப்பி, பதிலும்
சொல்லியிருக்கிறாராம். இவர் அவரின் படைப்பிலிருந்து எடுத்துக்
காட்டியிருக்கும் வரிகள் இழுக்கின்றன!! "ஒருத்தி ஒரு செருக்கனோடு வாழலாம்;
தருக்கனோடு வாழலாம், கெட்டவருக்கனோடு வாழலாம்! ஆனால், எப்போதும் எதையேனும்
கிறுக்கு கிறுக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக்
கிறுகிறுக்க வைக்கும் விஷயம்!" என்று சொல்லி அந்தக் கேள்விக்கு பதிலைச்
சொல்லியிருக்கிறாராம். பதிலையும் கலாரசிகன் எடுத்துப் போட்டிருக்கிறார்.
ஓரிரு வாரம் குமுதம் வாங்கிப் பார்க்க வேண்டும்!
இதே தினமணியில்
சொல்வேட்டை என்ற தலைப்பில் நீதியரசர் வெ. இராமசுப்ரமணியன் எழுதும் தொடர்
ஒன்று வருகிறது. ஒரு ஆங்கிலச் சொல்லைச் சொல்லி அதற்கு இணையான ஒரு தமிழ்
வார்த்தையைச் சொல்லச் சொல்கிறார். அடுத்த வாரம் அந்த வார்த்தையை அலசி,
பொருத்தமான வார்த்தையை முடிவு செய்கிறார். உதாரணமாக 'ஆசிட் டெஸ்ட்' என்ற
ஆங்கிலச் சொல்லுக்கு 'கடுந்தேர்வு' என்ற தமிழ்ச்சொல். அடுத்த வாரம்
கேட்டிருப்பது 'லிட்மஸ் டெஸ்ட்' வார்த்தைக்கு தமிழில் என்ன சொல்லலாம்
என்று! 'of course' என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன தேர்ந்தெடுத்திருப்பார்
என்று நினைக்கிறீர்கள்? நிறைய பேர் படித்திருக்கக் கூடும்!
இந்த வார கதிரில் வந்திருக்கும், ஜி மீனாக்ஷி எழுதிய 'பிறவிப்
பெரும்பயன்' கண்கலங்க வைத்தது. கரு எல்லோருக்கும் தெரிந்த உறுப்பு தானம்,
உடல் தானம் பற்றியதுதான். ட்ரீட்மென்ட் என்று சொல்லப்படும் - கதையை
எப்படிச் சொல்கிறோம் - என்பதில்தான் கதையின் வெற்றி இருக்கிறது என்பதை
உணர்த்தும் கதை.
============================== ==
ஏற்கெனவே மகாபாரதம்
புத்தகம் வகைவகையாக வீட்டில் இருக்கிறது. இதில் முழுமையாக இருக்குமா, அது
சுவாரஸ்யமாகச் சொல்லுமா என்றே வாங்கி வைத்தவை. தற்போது லிஸ்ட்டில் புதிதாக
ஒன்று.
பி ஆர் சோப்ராவின் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரை 'துக்ளக்' வெங்கட் மிக
அருமையாக தமிழாக்கம் செய்திருக்கிறாராம். வாங்கலாமா என்ற ஆவலை விலை
மட்டுப் படுத்துகிறது. 1320 பக்கங்கள் கொண்ட புத்தகம் 850 ரூபாயாம்.
==============================
சமீபத்தில் 'ஹோம் தியேட்டரில்' (ஹிஹி...) பார்த்த 'சமர்' திரைப்படமும்
'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படமும் கொஞ்சம் கவர்ந்தன. இரண்டுமே
வித்தியாசமான கதையம்சம் கொண்டவை. ஐ பி எல் கூத்துகளைப் பார்க்கும்போது சமர்
கதை நினைவுக்கு வந்தது!
============================== ==
விகடனில் சுகா எழுதிய
'மூங்கில் மூச்சு' முடிந்ததும் அதை ஈடுகட்ட வந்தது ராஜு முருகனின் 'வட்டியும்
முதலும்'. இப்போது அது முடிந்ததும் ஆரம்பித்திருக்கும், மாரி
செல்வராஜ் எழுதும் 'மறக்கவே நினைக்கிறேன்' படிக்கத் தோன்றவில்லை!
விகடனில் 'இளையராஜா' என்ற தலைப்பில் வந்துள்ள கதை கவர்ந்தது.
விகடன் சினிமாச் செய்திகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
==============================
கல்கி
சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ள இணைக்கவேண்டிய அந்தப் படிவம் எடுத்து
வைத்திருக்கிறேன். பேப்பர், பேனா எல்லாம் தயார்! கதைதான் ஒன்றும்
தோன்றவில்லை!
=================================
குமுதம் வாங்கி விட்டேன்.
அந்தக் காலத்து முத்து காமிக்ஸ் சைசில் இருக்கிறது. ஆனாலும் பனிரண்டு
ரூபாய். நான் வாங்கிய இதழில் இளையராஜா தொடர் இல்லை. வாலியும், துக்ளக் சோ
வும் மட்டும்.
வாலி வழக்கம்போல வார்த்தை ஜாலம்.
சோ எம் ஜி ஆரின் ஈகைக்
குணங்கள் குறித்து எழுதி இருக்கிறார். 17 வது வாரம் என்கிறது தொடர். மிச்ச
16 இதழ்களுக்கு எங்கே போக!
முகநூலில் ஜெயராமன் ரகுபதி அவர்கள் குமுதம் பற்றிய பழைய நினைவுகளை அசை போட வைத்திருந்தார். குமுதத்தில் அந்தக் காலத்தில் வந்த உடல், பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, என்று இன்னும் பல படைப்புகளை நினைவு கூர்ந்திருந்தார். இப்போது குமுதம் பக்கம் போகவே முடியவில்லை என்றும் சொல்லியிருந்தார்.அதுதான் என் அபிப்ராயமும். விகடன் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும். ஜீவி ஸார் குங்குமம் பத்திரிகையை சிபாரிசு செய்திருந்தார்.//
பதிலளிநீக்குஅடடா?? மின்னல், மழை, கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீரங்கத்திலே. அப்போக் கூட இந்த மின்னல், மழை, மோகினி தான் நினைவில் வந்தாள். உடல்,பொருள், ஆனந்தி இரண்டாம் முறையாகக் குமுதத்தில் வந்தப்போ கிழிச்சு வைச்சது எங்கோ காணோம்.!:((
எந்த வாரப் பத்திரிகையும் படிக்க லாயக்கில்லை என்பதே என் கருத்தாகி விட்டது. குங்குமத்தைப் படிச்சே பல ஆண்டுகள். குமுதம், விகடனெல்லாம் நிறுத்தியாச்சு. இப்போ துக்ளக் வரும் வாரத்தில் இருந்து குமுதம் பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக வரப் போகிறது. ஆகவே "சோ" அதில் எழுதுவது ஆச்சரியம் இல்லை. என்றாலும் குமுதம் படிக்கத் தோன்றவில்லை.
பதிலளிநீக்குபி.எம். கண்ணன் என்றொரு எழுத்தாளர் முன்னே குமுதத்தில் எழுதுவார். அற்புதமான கதைகள். அதோடு ரா.கி.ர.. எஸ்.ஏ.பி. ஜாவர் சீதாராமன், ஜ.ரா.சு. போன்றவர்கள் எழுதுவதை/எழுதினதை எல்லாம் படிச்சுட்டு, இப்போ......:((((
பதிலளிநீக்குமின் தமிழ்க்குழுமத்தில் தாரகை என்னும் பெயரில் ஒளவை நடராசன் அவர்களின் மகன் தினமணியின் கலாரசிகன் பதிவுகளையும், சொல்வேட்டையையும் எடுத்துப் போடுவார். இப்போச் சில மாதங்களாகப் பகிர்வதில்லை. முன்பெல்லாம் ஞாயிறு வந்தாலே ஆவலோடு காத்திருந்து படித்து வந்தேன். தினமணிப் பத்திரிகை தான் ஒரு காலத்தில் நல்ல பெயரோடு இருந்தது. நடுவில் கொஞ்சம் மங்கி இப்போ மீண்டும் வந்திருக்கு. ஏ.என்.எஸ். அவர்கள் கணக்கன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளை எல்லாம்கிழித்து வைத்துக் கொண்டு படித்த காலம் உண்டு.
பதிலளிநீக்குபி எம் கண்ணன் பெயர் கேட்ட மாதிரி இருக்கிறது. ஏதாவது ஒரு கதைத் தலைப்புச் சொன்னால் தெரியலாம் நினைவுக்கு வரலாம்.
பதிலளிநீக்குதினமணி ஞாயிறுகளில் சுவைக்கிறது, இனிக்கிறது!
சோ தொடர் 17 வாரங்களாக வந்து கொண்டிருக்கிறது!
அவர் மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்.குமுதம் ஆரம்பித்த காலத்திலிருந்து 1966 வரை நாவல்கள் எழுதியவர். முள் வேலி, ஜோதிமின்னல்,பெண்ணுக்கொரு நீதி, பெண்தெய்வம், வாழ்வின் ஒளி(கே.எஸ். கோபாலகிருஷ்ணன் சாரதா திரைப்படத்தின் கரு), நாகவல்லி.( கல்யாண பரிசு படத்தின் கதை), கன்னிகாதானம் ( அவளுக்கென்று ஒரு மனம் படக்கதை).
நீக்குமற்றும், இன்ப புதையல், நிலவே நீ சொல்.
நன்றி.
நீக்குபல்சுவை தகவல்கள்... நன்றி...
பதிலளிநீக்கு/ 'ஹோம் தியேட்டரில்' (ஹிஹி...) பார்த்த 'சமர்' திரைப்படமும் '//
பதிலளிநீக்குசமர் நல்ல கதை; ஆனா, முடிவத்தான் கொஞ்சம் சொதப்பிட்டாங்க. :-)
//ஏன் இந்த முரண்பாடு?//
இந்த கேள்விக்கு, //எப்போதும் எதையேனும் கிறுக்கு கிருக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயம்// - இதுவா பதில்? (அவ்வ்வ்வ்...)
பதில் புரியலையே? என்னப் போல படிக்காதவங்களுக்கும் விளங்கும்படி தெளிவாச் சொல்லப்பிடாதா? :-)))
//பதில் புரியலையே? என்னப் போல படிக்காதவங்களுக்கும் விளங்கும்படி தெளிவாச் சொல்லப்பிடாதா? :-)))//
பதிலளிநீக்குஅது பதில் இல்லீங்க.... வாலியின் எழுத்துகளை எடுத்துப் போட்டிருக்கிறார். அவ்வளவுதான். அந்தக் கேள்விக்கான வாலியின் பதிலை நான் டைப் செய்யவில்லை!! :))
பி.எம்.கண்ணன் குமுதத்தில் ' இன்பப்புதையல்' என்ற தொடரை எழுதினர். அது மிகவும் பிரபலமான நாவல். லதா வாராவாரம் அழகிய ஓவியங்கள் தீட்டுவார்!
பதிலளிநீக்குகுமுதம் சினிமா இதழாகி ரொம்ப காலமாகி விட்டது. விகடனும் தற்போது அந்த இடத்துக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. தனி நபர் பற்றிய அக்கப்போர்கள் ஏராளம்! அழகான ஓவியங்கள், கருத்தாழம் மிக்க சிறுகதைகள், சுவாரஸ்யம் தொய்வில்லாது அருமையாய் நகர்ந்து போன நாவல்கள், நகைச்சுவைத்தொடர்கள் எல்லாமே காணாமல் போய் பல வருடங்களாகி விட்டன!
வாரப் பத்திரிகைகள் படித்து நெடுங்காலம் ஆகிவிட்டது. சில சமயத்தில் நூலகத்தில் பார்த்தாலும் ஒரு புரட்டு புரட்டி மேலோட்டமாக பார்த்து விடுவதோடு சரி!
பதிலளிநீக்கு//அதில் தினமணி எடிட்டர் திரு கே எஸ் வைத்தியநாதன் அவர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.// அங்கே உங்களைப் பார்க்க முடியுமா ?
பதிலளிநீக்கு// 'சமர்' திரைப்படமும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படமும் கொஞ்சம் கவர்ந்தன.// எப்பாடி இப்படியாது பாக்கணும்ன்னு தோனுச்சே
பாஸ்வர்ட் கூட கிட்டத்தட்ட வ மு மாதிரி தான் இருக்கு பிடிகல
// கதைதான் ஒன்றும் தோன்றவில்லை!// ஹி ஹி எனக்கு அது கூட தோனல
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம். குமுதம் என்றில்லை. இன்றைய வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றுக்கும் ஒரே முகம்தான்! சினிமா 70%. இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் வலைப் பக்கங்களிலிருந்து எடுத்துப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த குமுதத்தில் கூட அரசு பதில்கள் பகுதியில் முகநூலிலிருந்து என்று சொல்லியே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் 'இன்பப் புதையல்' நான் கேள்விப் பட்டதில்லை. ஆனால் லதா ஓவியங்கள் சரித்திரக் கதைகளுக்குத்தான் ஸ்பெஷலிஸ்ட்..! இல்லை?
வாரப் பத்திரிகைகள் எல்லாம் படிக்கவில்லை என்றாலும் கல்கி துக்ளக், விகடன் படிக்கிறேன் வெங்கட் நாகராஜ். அவ்வப்போது மங்கையர் மலர், ஜூவி, போன்றவை ஓசியில் கிடைக்கும்!
கூட்டங்களுக்கெல்லாம் விடாமல் போகுமளவு நான் அவ்வளவு பெரிய தமிழ் ஆர்வலர் இல்லை சீனு... செய்தித் தாளில் படம் பார்த்துத் தெரிந்து கொள்வதுதான்! என்னுடைய ஹோம் தியேட்டரில் அடுத்து 'நான்' படமும், 'நீர்ப்பறவை'யும் வெயிட்டிங்! :))
வாரப்பத்திரிக்கைகள் விமரிசனம் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
பதிலளிநீக்குநானும் தினமணி வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
பகிர்விற்கு நன்றி.
இன்பப்புதையல் என் மூத்த சகோதரியின் இளம் பருவத்தில் குமுதத்தில் தொடராக வெளி வந்தது. பின்னாளில் படிக்க முனைந்த எனக்கு அவ்வளவாக ஈர்ப்பைத்தரவில்லை. இருந்தாலும் லதாவின் ஓவியத்திற்காகவும் பிற்காலத்திற்காகவும் வாங்கி வைத்து விட்டேன். திருச்சியில் ஒரு பழைய புஸ்தகக்கடை இருக்கிறது. அங்கு சென்று இதைத்தேடி வாங்கி வந்தேன். சரித்திரக்கதைக்குத்தான் லதா பிரசித்தம் என்றாலும் கல்கியில் வெளி வந்த 'குறிஞ்சி மலருக்கு' [நா.பார்த்தசாரதி] லதா மிக அழகாக ஓவியங்கள் வரைந்திருப்பார்!
பதிலளிநீக்குபி.எம்.கண்ணனின் மாஸ்டர் பீஸ் நாவல் 'முள் வேலி'. இது குமுதத்தில் வெளிவரும் பொழுது மாதத்திற்கு மூன்று இதழ்கள் குமுதம். இதழின் விலை 4 அணா. (25 காசுக்கு சமம்)
பதிலளிநீக்குஜாவரின் நாவல் 'சொர்க்கத்தின் புயல்'. கோவையிலிருந்து வெளிவந்த 'வான்மதி' இதழில் இந்த நாவல் தொடராக வந்தது. நானும் அந்த சமயத்தில் அந்த இதழில் 'சில கசப்பான உண்மைகள்' என்று ஒரு தொடர்கதை எழுதி வந்தேன்.
பதிலளிநீக்கு'வான்மதி' இதழ் பற்றி சொல்ல வேண்டும். கோவை உப்பிலிப் பாளையத்திலிருந்து வெளிவந்த இதழ். தமிழ் ஆர்வலர் இராம. அரங்கநாதன் அவர்கள் பத்திரிகை யின் ஆசிரியர். எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் துணை ஆசிரியர். வெகுஜன இதழ்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இந்த இதழ் சில சாதனைகளைச் சாதித்திருக்கிறது.
ஓ, குறிஞ்சி மலருக்கு லதா ஓவியமா?? நான் குறிஞ்சி மலர் மிக தாமதமாய்ப் படித்ததால் வெளியீட்டிலேயே படிக்க நேர்ந்தது. ஆகையால் படம் வரைந்தது வினுவாய் இருக்கும்னு நினைச்சேன்.
பதிலளிநீக்குநான் சொன்ன பி.எம்.கண்ணன் கதைக்கு குமுதத்தின் ஆஸ்தான ஓவியர் வர்ணம் தான் வரைந்திருந்தார். கதாநாயகி மாதவியின் அம்மா பாத்திரத்தை வரைந்திருந்தது நன்கு நினைவில் உள்ளது. இன்பப் புதையல் பெயர் கேள்விப் பட்ட மாதிரி இருக்கு. சோகக் கதைகள் எழுதுவதிலும் பி.எம்.கண்ணன் தேர்ந்தவர். அப்படி ஒரு கதை எழுதி என் அம்மா அழுது கொண்டே இருந்ததும் நினைவில் இருக்கு.
குமுதத்தில் நான் முதல் முதல் படிக்க ஆரம்பித்தது "புதிருக்குப் பெயர் ரஞ்சனா!" படக்கதையாக வந்தது. :)))) யார் எழுதினதுனு நினைவில் இல்லை. ஆனால் நன்றாக இருக்கும்.
நல்ல அலசல். சிறந்த தொடர்களை ஒரு காலத்தில் தந்த பத்திரிகைகளா இவை என நம்ப சிரமமாக இருக்கிறது.
பதிலளிநீக்குhttp://tinyurl.com/pymtno4
பதிலளிநீக்குhttp://archive.org/details/orr-12371_Maru-Janmam
ஸ்ரீராம், மேற்கண்ட சுட்டிகளுக்குச் சென்று பார்க்கவும். நீங்க டவுன்லோட் பண்ணினால் எனக்கும் சொல்லுங்க. :))) நேத்திலே இருந்து டவுன்லோட் பண்ணறது கொஞ்சம் பிரச்னையா இருக்கு! :)))
கீதா மேடம், அடேங்கப்பா... சர்....ரியான தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மறுஜென்மம் 1.97 MB size file ஐ தரவிறக்கி விட்டேன். நன்றி!
பதிலளிநீக்குhihihi one day delay ayiduchu! maranthu poyiten. ipo than draft le parthen! :)))))
பதிலளிநீக்குஒரு காலத்தில் குமுதம், விகடன், எங்கள் வீட்டில் ரெகுலராக வாங்குவோம்! இப்போது இரண்டுமே சினிமாவிற்கு தாவியதால் நாங்கள் நிறுத்திவிட்டோம்! எப்போதாவது விகடன் வாங்குவேன்! குமுதம் மீண்டும் வாங்கிப் பார்க்கிறேன்!
பதிலளிநீக்குஎல்லாம் நிறுத்தியாகிவிட்டது.
பதிலளிநீக்குவருடத்துக்கு ஒன்று இரண்டு ஆனந்தவிகடன் வாங்குவோம்.
இன்று வந்த விகடன் விரல் அளவு வீக்கம் கூட இல்லை.
பதிலளிநீக்குகாதல் சினிமா,பொக்கிஷம்,ஒரு சிறுகதை.
பி.எம் கண்ணன் கதைகள் லேசாகத்தான் நினைவில் இருக்கின்றன.அமோகமாக விற்றுக் கொண்டிருந்த குமுதம் ஏன் இந்த மாதிரி அயிற்று.
தில்லானாமோஹனம்பாளும்,கொத்தமங்கலம் சாரின் நாடோடிப் பாடல்களும் நிறைவாக நடைபோட்ட பிறகு ,சேவற்கொடியோனின் காதல் கதைகளும் தொடர்ந்தன,மணியனின் கதைகள் வந்தன.
கல்கியிலும் சாண்டில்யன் கதைகளுக்கும் லதாமோதரன் படம் போடுவார், கண்களே மயக்கும். எங்கள் சிறுவயதில் ஆக்கிரமித்த பத்திரிகைகள் இப்போது இல்லை.
எங்கள் வீட்டில் விகடன் வாங்குவார்கள், வெள்ளிக்கிழமை விகடனுக்கு எதிர்பார்த்த காலமுண்டு.
பதிலளிநீக்குமங்கையர்மலர், கல்கி, எல்லாம் வாங்கினேன் நான், இப்போது ரயில் பயணங்களுக்கு பத்திரிக்கைகள் வாங்குவது என்று ஆகி விட்டது.
உடல், பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, கதைகளை அம்மா தொகுத்து வைத்தபின் படித்து இருக்கிறேன். கொஞ்சம் நினைவு இருக்கிறது.
வான்பதி பத்திரிகையில் அப்பா ஆசிரியராக இருந்தார்...ரங்கநாதன் அவர்களும் அப்பாவும் மிக நெருங்கிய நண்பர்கள், ஒன்றாக படித்தவர்கள்..
பதிலளிநீக்கு