திங்கள், 6 மே, 2013

காசு டப்பா


 'பொன்னியின் புதல்வர்' புத்தகம்  எழுதிய சுந்தா நூற்றாண்டு விழாவில் பேசிய திருமதி சீதாரவி குறிப்பிட்ட தகவல் என்று கல்கியில் படித்தது : "சம்பளத்தை வாங்கிக் கொண்டுவந்து அப்படியே ஒரு பெட்டியில் போட்டு விடுவாராம் சுந்தா. மனைவி, மகள்கள் என்று வேண்டுவோர் வேண்டுகிற பணத்தை எடுத்துக் கொண்டு செலவு போக மீதியை அதிலேயே போட்டு விடுவார்களாம் இப்படி எத்தனை வீடுகளில் பார்க்க முடியும்?"

                                                           

எங்கள் வீட்டில் பார்க்க முடியும். 

இந்த வரிகளைப் படித்தவுடன் எங்கள் வீட்டு ஞாபகம் வந்து விட்டது!

அப்பா சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்கு வந்து பணத்தை சுவாமிக்கு முன்னாடி வைத்து விடுவார். அப்புறம் கை கால் அலம்பிக் கொண்டு வந்து, அவருடைய பீரோவிலிருந்து காசு டப்பாவை எடுத்துக் கொண்டு வருவார் அப்புறம் அந்தப் பணத்தை அம்மாவை விட்டு எடுத்து வரச் செய்து, அம்மா கையாலேயே 'காசு டப்பா'வில் வைக்கச் சொல்வார்.அந்தக் காசு டப்பா என்பது அலுமினியத்தாலான ஒரு மெல்லிய பழங்காலத்து சிகரெட் பெட்டி. என்னுடைய தாத்தா உபயோகித்தது என்று ஞாபகம். (சிகரெட் பிடிக்க அல்ல!) அதில் வைக்குமளவுதான் சம்பளம் வரும்.

                                                       

எப்போதுமே அம்மாதான் காசு டப்பாவில் சம்பளப் பணத்தை வைப்பார் என்றாலும், சில சமயங்களில் எங்களைக் குஷிப் படுத்தவும், சில சமயம் அந்த மாத அதிருஷ்டத்தை எங்கள் மூலம் சோதிக்கவும், ஒன்றிரண்டு சில்லறை நோட்டுகளை எங்கள் கையாளும் உள்ளே வைக்கச் சொல்வார். சில சிறிய டினாமிநேஷன் நோட்டுகள்தான்! பெரிய நோட்டுகள் எப்பவுமே அம்மா கையால்தான்.

                                                    

நாங்கள் யார் வேண்டுமானாலும் காசு டப்பாவில் கை வைக்க முடியாது என்றாலும் செலவென்ன என்று சொன்னால் அம்மா மூலம் சொல்லப் பட்டு மறுநாள் காலை அப்பா அலுவலகம் செல்லுமுன் செலவுகளின் அவசியங்கள் ஆராயப் பட்டபின் வழங்கப் படும். சில சமயம் குறைக்கப்படும், அல்லது மறுக்கப்படும், அல்லது ஒத்தி வைக்கப்படும்!

          

அடுத்த மாத சம்பளம் வரும்வரை சம்பளம் தீர்ந்து விட்டாலும் (காசு காலியாகி விட்டாலும்!) ஒரு ஒரு ரூபாய் நோட்டாவது டப்பா துடையாமல் அதில் இருக்கும்! 25 தேதிக்குமேல் அடிக்கடி ஒரு ரூபாய்தான் அதில் இருக்கும்!

                                               

இப்போது எங்கள் வீட்டிலும் பணம் மொத்தமாக ஒரு பையில் வைக்கப் பட்டிருக்கிறது, பணப்பை! குடும்ப அங்கத்தினர்கள் என்ன செலவு என்று சொல்லி விட்டு யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள்!

திருமணமான புதிதில் சம்பளம் வந்தவுடன் மளிகைக்கு இவ்வளவு, பாலுக்கு இவ்வளவு, காபிப்பொடி வெண்ணெய்க்கு இவ்வளவு, என்று ரப்பர் பேன்ட் கட்டி சிறு பேப்பரில் எழுதி வைத்துச் செலவு செய்து கொண்டு இருந்தோம். மிசலேனியஸ் என்று போட்ட கட்டில் மீதி இருக்கும் பணத்தைக் கட்டி வைத்து விட்டு அதிலிருந்துதான் எக்ஸ்ட்ரா செலவுகள் செய்வோம்!!!

                                      
 
இப்போது அப்படி இல்லை! அதெல்லாம்,  அந்தக் காலமெல்லாம் போச்!

25 கருத்துகள்:

 1. காசு டப்பா... இனிய நினைவுகள்...

  ஒரு பேக்-ல் தான் நானும் போட்டு வைப்பேன்..... இப்போது எல்லாம் வங்கியில். தேவைப்படும்போது ஏடிஎம் தான் கொடுக்கும் வள்ளல்......

  பதிலளிநீக்கு
 2. En appavum oru pirivukal ulla cash boxil pottu vaiththiruppar - Yaar vendumaanaalum edukkakam - aannal pichaikararukku 10 paisa poduvathaaga irunthaalum kanakku notil ezhuthanum!!
  En veetil ippothu kanakku note mattum illai!

  பதிலளிநீக்கு
 3. என் வீட்டிலும் ஒரு காலத்தில். நானோ என் சம்பள பணத்தை கண்டதே கிடையாது, எல்லாமே வங்கி கணக்கில் எண்கள் தான், எண்களாகவே செலவும் ஆகி விடுகிறது, தாளாக மாறுவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 4. எங்க வீட்லயும் ஒரு பெட்டி இருந்தது நான் சின்னசிறு பிள்ளையா இருக்கும்போது ..அது நியூட்ரின் சாக்லேட் பெட்டி ..அம்மா அதில் தான் பணம் வைப்பாங்க ..

  இப்ப இரண்டு ரூப நோட்டெல்லாம் புழக்கத்தில் இல்லைதானே போன முறை ஊருக்கு போனப்ப தங்கை ஒரு இரண்டு ரூபாத்தாளை கொடுத்தா ..மகளின் காயின் /நோட்ஸ் கலக்ஷனுக்கு

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. எங்கள் வீட்டில் பார்க்க முடியும். //

  இப்போவும் இன்னிக்கும் அப்படித்தான்.


  //திருமணமான புதிதில் சம்பளம் வந்தவுடன் மளிகைக்கு இவ்வளவு, பாலுக்கு இவ்வளவு, காபிப்பொடி வெண்ணெய்க்கு இவ்வளவு, என்று ரப்பர் பேன்ட் கட்டி சிறு பேப்பரில் எழுதி வைத்துச் செலவு செய்து கொண்டு இருந்தோம். மிசலேனியஸ் என்று போட்ட கட்டில் மீதி இருக்கும் பணத்தைக் கட்டி வைத்து விட்டு அதிலிருந்துதான் எக்ஸ்ட்ரா செலவுகள் செய்வோம்!!!//

  இதுவும் இப்படித்தான். ஆனால் மளிகை மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்துக்கு ஒரு முறை தான். காப்பிப் பொடி கொஞ்சமாக வாங்குவதால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வாங்க வேண்டி இருக்கும். :))) வேலைக்காரி இல்லாததால் அவளுக்கு என ஒதுக்குவதில்லை. மற்றபடி பால், வீட்டு வாடகை, மெயின்டனன்ஸ், என ஒதுக்கி விடுகிறோம். ஒருத்தர் செலவை மற்றவருக்குச் சொல்லிடுவோம்.

  பதிலளிநீக்கு
 7. காசு டப்பா ஒரு வெங்கடாஜலபதி படம் வரையப்பட்ட சாக்லேட் பெட்டிதான். அதிலே தான் எல்லா முக்கிய சமாசாரங்களும் இருக்கும். :)))))

  பதிலளிநீக்கு
 8. எங்கள் வீட்டில் அம்மாதான் பணப் பையைக் கையாள்வது. இதைப் படிக்கையில் மனதினுள் மலரும் நினைவுகள்!

  பதிலளிநீக்கு

 9. In our house we will keep a minimum of Rs1000/= for the purchase of vegetables,for smaller items to meet urgent needs otherwise our credit card and ATM will play the major role.

  பதிலளிநீக்கு
 10. எங்கள் வீட்டில் பார்க்க முடியும். //

  எங்கள் வீட்டிலும் அப்படித்தான் ஸ்ரீராம்.
  //அப்பா சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்கு வந்து பணத்தை சுவாமிக்கு முன்னாடி வைத்து விடுவார். //
  எங்கள் வீட்டிலும் அப்படித்தான் ஏதாவது பழம் வைத்து சாமி கும்பிட்டு விட்டு மாதா மாதம் குலதெய்வத்திற்கு . பணம் எடுத்து வைத்து விட்டு பின் காசு டப்பாவில் வைக்க படும். சமபளம் வாங்கி வந்தால் பூ பழம் வாங்கி வரப்படும் இப்போது இல்லை.(நான் ஏதாவது வாங்கி வைத்து இருப்பதை வைத்து வணங்குவேன்)
  என் அப்பா சமபளம் வாங்கி வரும் போதே குழந்தைகளுக்கு பிஸ்கட், மிட்டாய் என்று தடபுடல் செய்வார்கள். என் கணவரிடம் சொல்லி சொல்லிப் பார்த்து அலுத்து விட்டது. என் கணவர் முன்பு கணக்கு எழுதி வைத்துக் கொண்டு இருந்தார்கள் இப்போது அதுவும் இல்லை. முன்பு மகள் வீட்டில் இருந்த போது அவளிடம் கொடுப்பார்கள், இப்போது என்னிடம் கொடுக்கிறார்கள் சம்பள பணத்தை.

  எல்லோரும் எடுத்து செலவு செய்யலாம் ஆனால் கணக்கு சொல்லிவிடுவோம்.

  கல்யாணத்தின் போது வெற்றிலை செல்லம் என்னும் டப்பா கொடுக்கபடும். (அது அவர் அவர் வசதிக்கு ஏற்றவாறு , வெள்ளி, பித்தளை, எவர்சில்வர் போன்றவற்றால் கொடுக்கப்படும்) அதில் குடித்தனம் வைக்கும் போது பூஜை அறையில் வைக்கப்படும், அதில் எல்லோரும் வாழ்த்தி பணம் வைப்பார்கள். அது பல்கி பெறுகும் என்ற நம்பிக்கை.


  சம்பளம் வந்த உடன் பட்ஜெட் போடுவது புதிதாக பொருள் வாங்குவது, குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற போட்டுவைத்த திட்டங்கள் படி(எதை இந்த மாதம், எதை அடுத்தமாதம்) நிறைவேற்றுவது என்று அது ஒரு பொற்காலம் தான்.

  உங்கள் மலரும் நினைவுகள் அருமை, எங்கள் மலரும் நினைவுகளை எழுப்பிவிட்டது.

  பதிலளிநீக்கு
 11. பழைய சினிமா ஒன்று : ‘நம்ம குழந்தைகள்’ என்று நினைக்கிறேன்,
  ஒளவையார் அகவலை சீர்காழி கோவிந்தராஜன் பாடுவார் அந்த படத்தில்.சுந்தர்ராஜன், பண்டரிபாய், மாஸ்டர் ஸ்ரீதர், மற்ற இரண்டு குழந்தைகள் நினைவில் இல்லை எல்லோரும் மிக அருமையாக நடித்து இருப்பார்கள்.
  பூவண்ணன் அவர்கள் எழுதிய ’ஆலம்விழுதுகள்’ என்ற கதை பெயர் மாற்றம் செய்யப்பட்டு படமாக்க பட்டது, என் சிறு வயதில் பார்த்தது.
  அதில் அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் அவர்கள் ஆசைகளை பட்ஜெட் காட்டி அப்பா நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் போது அப்பா சொல்வது உங்களிடம் பணம் கொடுத்து விடுகிறேன் நீங்களே குடும்பத்தை நடத்தி மீதி இருந்தால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பார். மூன்று குழந்தைகளும் குடும்பத்தை நடத்தி மிச்சம் இருப்பதை குருவி சேர்ப்பது போல் சேர்ப்பதும், அது உறவினர் பையனால் களவாடபடுவதும் இறுதியில் தங்கள் பெற்றோர்களின் கஷ்ட நஷ்டங்களை குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள். இப்போது குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கி தரும் வசதி படைத்த பெற்றோர்கள் இருப்பதால் அவர்களுக்கு கஷ்டம் தெரிய மாட்டேன் என்கிறது எல்லா நாளும் முதல் தேதி தான் சிலர் வீட்டில்.

  // 25 தேதிக்குமேல் அடிக்கடி ஒரு ரூபாய்தான் அதில் இருக்கும்!//

  //முதல் தேதி படத்தில் கலைவாணர்
  ஒண்ணுலேயிருந்து இருபது வரைக்கு
  கொண்டாட்டம் -- இருபத்
  தொண்ணுலேயிருந்து முப்பது வரைக்கு
  திண்டாட்டம் .//
  அவர் 21லில் காலியாகி விடும் என்பார்.
  பாமாவிஜயத்தில் வரவுக்குள் செலவு பற்றி விளக்குவார்கள்.

  //செலவுகளின் அவசியங்கள் ஆராயப் பட்டபின் வழங்கப் படும். சில சமயம் குறைக்கப்படும், அல்லது மறுக்கப்படும், அல்லது ஒத்தி வைக்கப்படும்!//
  இப்படி குடும்ப அங்கத்தினர் அனைவரும் கலந்து பேசி செலவுகள் வரையறை செய்யப்பட்டால் தான்
  நன்றாக இருக்கும் குடுமபம்.
  நல்ல பதிவை கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ரூபக் சொல்வது மிகச் சரி... எனது மொத்த சம்பள பணத்தையும் ஆசை தீர அள்ளி முகர்ந்தது இல்லை. எண்களாக வங்கியில் ஏறி எண்ணம் போல் செலவாகிக் கொண்டுள்ளது...

  ஆனால் சிறுவயதில் கிடைக்கும் சில்லறைக் காசுகளை கையில் கிடைக்கும் வித்தியாசமான டப்பாகளில் எல்லாம் போட்டு சேமித்து வைப்பேன்...

  பதிலளிநீக்கு
 13. சம்பளம் நேரடியா வங்கிக் கணக்குல வரவு வைக்கப் படுகிறது..
  அப்புறம்.. எப்பப்ப வேணுமோ.. (மாச ஆரம்பத்தில அதிகமா ! ).. அதற்கேத்தா மாதிரி.. ஏ .டி .எம் லேருந்து எடுத்துக்கறோம்..... எடுக்காத பணத்துக்கு ஆடமேடிக்க வட்டி கெடைக்குதே..

  பதிலளிநீக்கு
 14. //வேண்டுவோர் வேண்டுகிற பணத்தை எடுத்துக் கொண்டு செலவு போக மீதியை.. //

  அதெப்படி முடியும்?.. வாங்கின சம்பளத்திற்குள் அடங்குகிற மாதிரி தானே வேண்டுவோர் வேண்டுகிற வேட்கையெல்லாம் இருந்திருக்க முடியும்? ஆக, யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்று தெரிகிறது.

  அப்படி நம்புவதற்காக இந்தப் பதிவில்லை என்றும் தெரிகிறது.
  எல்லாமே ஒன்றைச் சார்ந்து ஒன்று தான். அது மாதிரி என்று ஆரம்பித்து
  எது மாதிரி இது என்று சொல்வது தான். நாம் சொல்லப் போகிறதுக்கு ஏற்ற மாதிரியான ஒரு முன் மாதிரியை தேர்ந்தெடுத்துக் கொண்டு பின்னால் நாம் சொல்லநினைப்பதைச் சொல்வது. அப்படி முன் மாதிரியைத் தேர்வு செய்வதில் தான் விஷயமே இருக்கிறது. சொல்ல நினைப்பதை விஞ்சுகிற மாதிரி முன் மாதிரி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நாம் சொல்லப்போவது அடிபட்டுப் போய்விடும். நாம் சொல்லப்போவது க்கு ஒரு மாற்று குறைச்சலான முன்மாதிரியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவதே சாமர்த்தியம்.

  அந்த சாமர்த்தியத்தை இந்தப் பதிவில் கண்டேன். உங்கள் விவரிப்பில், சுந்தா, சீதாரவி, பொன்னியின் புதல்வர் புத்தகம் என்று எல்லாமே சுத்தமாக மறந்து போயிற்று.

  பதிலளிநீக்கு
 15. அழகான நினைவுகள். அருமையான உண்மைகள். எங்க வீட்டுல தி நைனா ஒரு அலுமினிய பெட்டி வெச்சிருந்தார். அந்த காலத்துல ஸ்கூலுக்கு அந்த மாதிரி பெட்டி தான் எடுத்துண்டு போவாங்க. அந்த பெட்டியை திறந்தாலே கம்முன்னு வாசனையா இருக்கும். அதுல பணம் வெப்பார் கூடவே பழைய வாட்சு, அப்பாவின் சர்ட்ஃபிகேட்ஸ், வரலக்ஷ்மியின் காதோலை கருகமணி, பாங்க் ஸ்டேட்மெண்ட்ஸ் இதெல்லாம் இருக்கும். சில பழைய புகைப்படங்களும் இருக்கும். அந்த பெட்டியை திறந்தாலே, நானும் தங்கையும் கிட்டே போய் நின்னு பார்ப்போம்.
  //
  அதெப்படி முடியும்?.. வாங்கின சம்பளத்திற்குள் அடங்குகிற மாதிரி தானே வேண்டுவோர் வேண்டுகிற வேட்கையெல்லாம் இருந்திருக்க முடியும்? // நிச்சியமா, அப்பெல்லாம் அப்படித்தான். சின்னச்சின்ன அற்பச்செலவுகள் தான். இப்போ மாதிரி இவ்ளோ விலையில்லையே!இப்போ தேவைகளும் அதிகம்- அனாவஸ்ய செலவுகளும் அதிகம் தான்.

  பதிலளிநீக்கு
 16. //அதெப்படி முடியும்?.. வாங்கின சம்பளத்திற்குள் அடங்குகிற மாதிரி தானே வேண்டுவோர் வேண்டுகிற வேட்கையெல்லாம் இருந்திருக்க முடியும்? ஆக, யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்று தெரிகிறது.//

  காசு டப்பாவோ திறந்த பெட்டி. ஆனாலும் அந்தக் காலங்களில் குழந்தைகளுக்கு பஸ் சார்ஜ், ரயிலில் போகணுமானால் பாஸ் வாங்க காசு முதற்கொண்டு பெரியவங்க தான் எடுத்துக் கணக்குப் பார்த்துக் கொடுப்பாங்க. சின்னவங்க திறந்த டப்பாவாகவே இருந்தாலும் தைரியமா எடுக்க மாட்டாங்க. ஆக அதிலே எவ்வளவு பணம் போட்டோம், எவ்வளவு பணம் எடுத்தது என்ற விபரங்கள் கட்டாயம் பெரியவங்களுக்குத் தெரியும். தேவைக்கு மேல் எடுக்க மாட்டாங்க. தவிர்க்கமுடியாமல் போனால் தவிர. :)))))

  அதோடு அப்போல்லாம் இப்படி ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடையாது என்பதால் வாங்கற சம்பளத்துக்குள்ளே செலவைக் கட்டுப்படுத்துவது நியாயமான செலவாகவே இருந்தாலும் கஷ்டமான ஒன்றாய்த் தான் இருந்திருக்கு.

  வரவுக்கு மிஞ்சி இப்போத் தான் செலவு. இப்போ தேவைகளும் அதிகம். :))) செலவுகளும் அதிகம். அரசாங்கமோ வாங்கும் சக்தி அதிகமாகி விட்டதுனு சொல்வாங்க. :))))

  பதிலளிநீக்கு
 17. அப்போல்லாம் தெருவிலே போகிற ஸ்டேட் ஐஸ் தான் ஒசத்தி. அதிலே பால் ஐஸ் ரொம்ப ரொம்ப ஒசத்தி. அதையே மாசம் ஒரு தரம் வாங்கினால் பெரிய விஷயம். இப்போன்னா ஐஸ்க்ரீம் பெட்டியோடு வாங்கிக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறாங்க.

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு. அன்று செலவழித்த முறைகளுக்கும் இன்றைய வழக்கத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள்.

  பதிலளிநீக்கு
 19. எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் தலைக்கு வைத்துக் கொள்ளக் கூடிய ஸ்லைடு (ஹேர்பின் மாதிரி நெளி நெளியா நடுவில் வழவழ பிளாஸ்டிக் சமாச்சாரம்) அதிகம் வாங்குவார்கள்.
  பிற்காலத்தில் அவர்கள் அதிகம் வாங்குவது விதவித வண்ணங்களி லான ஸ்டிக்கர் பொட்டு ஆயிற்று. அடிச்சுச் சொல்வேன், இன்றைக்கும் ஸ்டிக்கர் பொட்டிற்கு இருக்கும் மரியாதை வேறு எதற்கும் கிடையாது என்பேன். ஸ்டிக்கர் பொட்டுக்கு பெரிய பெரிய இண்டஸ்ட்டிரியே இருக்கும் என்று நினைக்கிறேன். இதன் டிமாண்ட் & சப்ளை நம் கற்பனையை மிஞ்சியது. அட்டையில் கிளேஸ் காகிதமிட்டு அடைக்கப்பட்டு பெட்டி பெட்டியாக அம்மாடி.. எத்தனை ரகம்? எத்தனை விதம்?.. விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. இனி பத்து ரூபாய் நோட்டும் கிடைக்காதாம்.நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 21. பொற்காலம் பெருங்காய டப்பாவில் அப்பா வைக்கும் பணம்.
  அம்மா எழுதும் செலவுக் கணக்கு.
  பெருமாள்.....8 அணா
  என்று ஆரம்பிக்கும்.
  எங்கள் காலத்தில் இவர் பர்சோட சம்பளத்தைஅலமாரியில் வைத்துவிடுவார்.அலமாரியில் லக்ஷ்மி,பாலாஜி பெருமாள் படங்கள் இருக்கும்.
  போனஸ் வரும் வேளை சுறு சுறுப்பாவோம்.:)
  சுற்றுலா செலவுகளுக்கு வைத்துக் கொள்வோம்.
  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 22. //எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் தலைக்கு வைத்துக் கொள்ளக் கூடிய ஸ்லைடு (ஹேர்பின் மாதிரி நெளி நெளியா நடுவில் வழவழ பிளாஸ்டிக் சமாச்சாரம்) அதிகம் வாங்குவார்கள்.
  பிற்காலத்தில் அவர்கள் அதிகம் வாங்குவது விதவித வண்ணங்களி லான ஸ்டிக்கர் பொட்டு ஆயிற்று. //

  ஹிஹிஹி, பூவைச்சுக்கக் கூட ஹேர்பின் பயன்படுத்தியதில்லை. அது என்னமோ தலையிலே குத்தறாப்போல் தர்மசங்கடமா அதே நினைப்பா இருக்கும். ஒரு சமயம் ஸ்கூல் ட்ராமாவுக்காக தேவதை வேஷத்துக்குத் தலையில் துணியைப் போட்டு ஹேர்பின் வைச்சுப் படாத பாடு படுத்தினதிலே இருந்து, ஸ்கூல் ட்ராமாவுக்கெல்லாம் பெயரே கொடுக்கிறதில்லை. :)))))

  ஸ்டிக்கர் பொட்டு வாங்கிக் கொடுக்கிறேன் நவராத்திரியில் குழந்தைகளுக்கு விதவிதமாக, வண்ண வண்ணமாக. ஆனால் உபயோகிப்பதில்லை. 25 வயசு வரைக்கும் சாந்து தான் (வீட்டில் கூட்டினது) வைச்சுண்டிருந்தேன். டைஃபாய்ட் வந்தப்புறம் வியர்வை ஜாஸ்தியாக, சாந்தெல்லாம் கரைஞ்சு முகமெல்லாம் வழிய, குங்குமத்துக்கு மாறினேன். இப்போவும் குறிப்பிட்ட ப்ரான்ட் குங்குமம் தவிர வேறு வைச்சுக்கறது இல்லை. யு.எஸ். போனப்போக் கூட குங்குமம் தான். ஸ்டிக்கர் பொட்டு கைவசம் இருக்கும். ஆனாலும் பயன்படுத்தியது இல்லை. அதனால் அதன் பயன்பாடு குறித்து அதிகம் தெரியாது.

  பதிலளிநீக்கு
 23. குங்குமம்ன்னு நீங்க சொன்னவுடனே உங்கள் ஊர் கோயில் பிராகாரத்து தாழம்பூ குங்குமம் தான் நினைவுக்கு வந்தது.

  குங்குமம் தான் அழகு. இருந்தாலும் அதுவும் சிலருக்கு அலர்ஜியாகி விடுவதால் இந்த கூட்டமும் சேர்ந்து ஸ்டிக்கர் பொட்டு காட்டில்அடைமழை மகளிர் ஹேண்ட்பாக்கை குடைந்தால் ஸ்டிக்டர் பொட்டில்லாத Bag வெகு அரிதாகத் தான் இருக்கும் என்பது ஒரு ஹேண்ட்பாக் ஜோதிடம்.
  திலக சமாசாரங்கள் எத்தனையோ இருந்தாலும் குழந்தைகளுக்கென்றால் கொட்டாங்கச்சி சாந்தை பீட் பண்ணிக்க எதுவுமில்லை.நெற்றியில் ஒன்று, கன்னத்தில் ஒன்று என்று டாட் பொட்டு வைத்து விட்டால்--
  குழந்தைகள் சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழி வேறு விழுமா-- அப்போ அழகு கொஞ்சோ கொஞ்சோவென்று கொஞ்சும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!