Saturday, May 25, 2013

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி


TMS

                                  

தமிழக மக்கள் மறக்க முடியாத மூன்றெழுத்து. 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று பாடியவர் தன மூச்சை நிறுத்திக் கொண்டார் இன்று.
தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களைப் பெற்றிருப்பவர். அவர் பாடிய பாடல்களை ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற பாடல்களை பட்டியலிட முடியுமா? அவர் குரலிலேயே சொல்ல வேண்டுமென்றால் 'ஒன்றா, இரண்டா,  சொல்ல?'
தமிழ்நாட்டில் இருப்போருக்கு சிவாஜி, எம் ஜி ஆர், போன்றே மிகப் பழக்கமான மூன்றெழுத்து TMS. 

நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் சிரஞ்சீவியாய் உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில், மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

எங்கள் துன்ப வேளைகளையும் உங்கள் குரலால் இன்ப நேரமாக மாற்றிய பெருமானே... உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

- துகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தர்ராஜன்.

- மார்ச் 24, 1922. புரோகிதக் குடும்பம். இரண்டாவது மகன். சின்னக்கொண்ட சாரங்கபாணி பாகவதரிடம் முதலில் சங்கீதப் பாடம். பின்னர் அரியக்குடியிடம் சிட்சை.

- 21 வயதில் கச்சேரி. MKT பாகவதர் குரலை இமிடேட் செய்வது வழக்கம். குரல் உடையவில்லை என்று வாய்ப்பு மறுக்கப் பட்ட டி எம் எஸ் சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் வேலைக்குச் சேர்ந்து எஸ் எம் சுப்பையா நாயுடுவிடம் அறிமுகப் படுத்தப்பட்டு, 1946 இல் நரசிம்ம பாரதி நடித்த கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே உனக்குக் கோபம் உள்ளிட்ட 5 பாடல்கள் பாட வாய்ப்பளிக்கப் பட்டார்.

- மறுபடி எம் கே டி குரல்தான்! படம் என்னவோ 50 இல்தான் வெளிவந்தது. அப்புறம் எத்தனையோ சிறு பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடியிருந்தாலும் தூக்குத் தூக்கியில் சந்தேக (பொருந்துமா) சிவாஜியுடன் பேசிக் குரலை ஸ்டடி செய்து அவர் பாடிய 'சுந்தரி சவுந்தரி' 'ஏறாத மலைதனிலே' பாடல்கள் சூப்பர் ஹிட்டாக, அவர் தேடிக் கொண்டிருந்த புகழ் அவரை வந்தடைந்தது. கூண்டுக்கிளியில் 


- சிவாஜிக்காக அவர் பாடிய பாடலைக் கேட்டு மயங்கிப் போன எம் ஜி ஆர் அவரைத் தன்னுடைய ஆஸ்தானப் பாடகராக்கிக் கொண்டு, முதலில் மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான்' பாட வாய்ப்பளித்தார்.

- குமுதம் படத்தில் எம் ஆர் ராதா குரலை இமிடேட் செய்து அவர் பாடிய'சரக்கு இருந்தா அவுத்து விடு' அவர் திறமைக்கு ஒரு உதாரணம். அப்புறம் அவர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களின் ஆஸ்தான பாடகராகிப் போனார்.

- 1950 தொடங்கி 1990 வரையிலும் கூட தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர் அவர். எஸ் எம் சுப்பையா நாயுடு, எஸ் வி வெங்கட்டராமன் தொடங்கி ஏ ஆர் ரஹ்மான் வரை அனைவரின் - 52 பேர் - இசையமைப்பிலும் பாடியுள்ளார். கூடுதலாக ஓ பி நையார். நௌஷாத் இசையமைப்பிலும் பாடியுள்ளார்.

- பி சுசீலா, எஸ் ஜானகி போன்றவர்களோடு கூட எம் எஸ் சுப்புலட்சுமி டி கே பட்டம்மாள் எம் எல் வசந்தகுமாரி ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார். 2003 இல் பத்மஸ்ரீ விருது. அவர் பாடிய 'மண்ணானாலும் திருச்செந்தூரில்' பாடல்தான் தென் இந்தியாவின் முதல் ஸ்டீரியோ ரெகார்டிங். ராஜீவ் காந்தியின் முதல் வருட மறைவை ஒட்டி இவர் பாடிய 'உள்ளம் உருகுதையா' கேட்டு சோனியா மிக உணர்ச்சி வசப்பட்டு விட்டாராம்.

- கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். 10,000 த்துக்கும் அதிகமான திரையிசைப் பாடல்கள், 2500க்கும் அதிகமான பக்திப் பாடல்கள், கிட்டத்தட்ட 1991 இல் 'ஞானப்பறவையில் அவர் பாடியதுதான் அவர் குரலில் ரசிகர்கள் கடைசியாகக் கேட்ட திரைப் பாடல். 2007 இல் அவர் குரலில் ஒரு பாடல் பதிவு செய்ததாக அறியப்பட்டாலும் அது வெளியாகவில்லை.

அவர் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிக்க இங்கு செல்லலாம்.

23 comments:

மனோ சாமிநாதன் said...

நானும் இந்த அருமையான குரல் வளமிக்க பாடகருக்கு உங்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவரின் ' நான் பெற்ற செல்வம் ' என்ற பாடலில் ' தொட்டால் மணக்கும் ஜவ்வாது, சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு ' என்று மிகவும் இனிமையாகப் பாடியிருப்பார். மணக்கும், இனிக்கும் எத்தனையோ மறக்க முடியாத, காலத்தால் அழியாத பாடல்கள் தந்து, எத்தனையோ மனங்களை மகிழ்வித்த, அமைதிப்படுத்திய திரு. செளந்திரராஜனின் இனிய குரலுக்கு என்றுமே மரணமில்லை!!

Geetha Sambasivam said...

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா! :(((((

அம்பத்தூரில் இருந்தப்போ நேரில் இவரின் முழுநேரக் கச்சேரியைக் கேட்டிருக்கேன்.

ராமலக்ஷ்மி said...

எத்தனை எத்தனை பாடல்கள்! மறக்க முடியாதவை. தெளிவான உச்சரிப்பு இவரது தனிச் சிறப்பு. அவரைப் பற்றிய தகவல்களுடன் நல்லதொரு அஞ்சலி.

middleclassmadhavi said...

Anjali.

வை.கோபாலகிருஷ்ணன் said...

;(((((

மணக்கும், இனிக்கும் எத்தனையோ மறக்க முடியாத, காலத்தால் அழியாத பாடல்கள் தந்து, எத்தனையோ மனங்களை மகிழ்வித்த, அமைதிப்படுத்திய திரு. T M S அவர்களின் இனிய குரலுக்கு என்றுமே மரணமில்லை!!

அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

Anonymous said...

மனசுக்கு ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு.
'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் எது'. சரிதான்.

இவர் குரல்தான் மனசுக்கு எவ்வளவு சந்தோஷம், ஆறுதல், இதம் தந்திருக்கு. எவ்வளவோ பாடல்களில் சில வரிகளையும், வார்த்தைகளையும் இவர் பாடி இருக்கும் அந்த
அழகிற்காகவே சொக்கி போய் பலமுறை ரசித்து ரசித்து கேட்டிருக்கிறேன். இன்னமும் கேட்கிறேன். 'கள்ளில் உண்டாகும் போதை இவர் குரலில் உண்டாவதேனோ' அப்படின்னு நான் பாடுவேன். என் மன சோர்வை நீக்கும் அருமையான, இனிமையான மருந்து.
இவர் மறைந்தாலும் நான் மறையர வரைக்கும் இவரோட குரல் எனக்கு எல்லா நேரத்திலும், எப்பவும் துணையாதான் இருக்கும். இவர் குரலை இந்த அளவு ரசிக்க எனக்கு வாய்த்ததே நான் பெற்ற பெரும் பேறு என்று மனபூர்வமா நினைக்கிறேன்.

நன்றி எங்கள் ப்ளாக்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

ஸாதிகா said...

மிக குரைந்த இடைவெளியில் சினிமா பாட்டில் கொடி கட்டி பறந்த இரண்டு ஜாம்பாவான்களும் மறைந்தது திரௌலகிற்கு பேரிழப்புதான்.அவர்கள் உடல் மண்ணை விட்டு மறந்தாலும் அவரகள்து குரல் நிலைத்திருக்கும்.பிரிவின் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர் விரைவில் மீண்டு வரவேண்டும்.

T.N.MURALIDHARAN said...

காலையில் சலூன் கடைகளில் இன்னும் இவரது பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன .
கம்பீரமான இவரது குரல் என்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும்

T.N.MURALIDHARAN said...

தனது பாடல்களால் புகழ் பெற்ற எம்.ஜிஆர் சிவாஜி இருவரும் தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற குறை இவருக்கு உண்டு,

பாஹே said...

TMS மறைவுச் செய்தி கேட்டேன். செய்தி கேட்டவுடன் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

சில பேருக்கு மரணம் என்பது நிஜமல்ல.பெளதீகமாக ஒரு வெற்றிடம் என்பதைத் தவிர அவர்கள் என்றும் மறைவதில்லை. MKT க்குப் பிறகு, அவர் குரலையே நகல் செய்தும், இவர் தன குரலுக்குத் தனி மெருகு கொடுத்தான் படவுலகில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெற்று விட்டார்.

மறக்க முடியாதவர்.

அஞ்சலி என்பதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தை. அதற்கெல்லாம் மேலே மனசுக்குள் அழுவதுதான் என் போன்ற சாதா ரசிகர்களால் இப்போதைக்கு முடிந்தது.

முடிந்தது சகாப்தம்.

மனோ சாமிநாதன் said...

இவர் குரல் இறுதியாக பதிவு செய்யப்பட்டது ஏ.ஆர்.ரகுமானின்
' செம்மொழி ' பாடலுக்குத்தான்!!

வல்லிசிம்ஹன் said...

பொழுதுகள்,திருமணங்கள் எல்லாம் இவர் பாடலோடுதான் விடியும். துக்க வீடுகளில் வீடு வரை உறவு கேட்கும். சென்னை வந்த பிறகுதான் காதில் விழவில்லை. எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'' ரொம்பப் பிரபலம்.
மறையாத மறக்க முடியாத குரல்.
மூன்றெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் ஆயிரம் பாடல்கள் வரும்.:(

வல்லிசிம்ஹன் said...

மனோ சாமிநாதனுக்கு மிகவும் நன்றி. நான் மறக்க இருந்த நல்லதொரு பாடலை நினைவுக்குக் கொண்டுவந்தார்.
எத்தனை உணர்ச்சி அவர் குரலில். கடவுளே இது போல நல்ல கேட்கும் அனுபவத்தைக் கொடுத்த உனக்கு நன்றி.

Geetha Sambasivam said...

அட????????????????????மீனாக்ஷி????????????????

Anonymous said...

ஆமாங்கோ!!!!!! நானேதான். :))))

நீங்களும், உங்க ரங்கஸ் அண்ட் ரங்கநாதரும் சௌக்கியம்தானே?

கலியபெருமாள் புதுச்சேரி said...

அவருடைய பாடல்கள் என்றும் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும்.

கோமதி அரசு said...

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத
தெள்அமுதும் தீஞ்சுவை ஆவதில்லையே !முருகைய்யா தீஞ்சுவை ஆவதில்லையே!
என்று அவர் பாடிய பக்தி பாடல் போல் அவர் குரல் திகட்டாத தெள் அமுதுதான்.
நீங்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள்.

//நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் சிரஞ்சீவியாய் உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில், மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.//

நீங்கள் சொல்வது மிக உண்மை.

கோமதி அரசு said...

சிறு வயதில் சிவகாசி ஊரில் பொருட்காட்சியில் இவர் பாடல் கச்சேரியை கேட்டு இருக்கிறேன்.
விருது நகரில் பொருட்காட்சியில் எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் மேடைகச்சேரியில் நிறைய பாடகர் பாடகியுடன் இவரும் வந்து பாடியதை கேட்டு இருக்கிறேன்.

எங்கள் துன்ப வேளைகளையும் உங்கள் குரலால் இன்ப நேரமாக மாற்றிய பெருமானே... உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்.//

மிக உண்மை நீங்கள் சொல்வது. மனம் துயர படும் போது ”உள்ளம் உருகுதய்யா ” கேட்டால் துயரம் மறைந்துவிடும்..
அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்களுக்கு , பாடிய பழைய பாடல்களெல்லாம் எல்லாம் மிக அருமையாக இருக்கும். மகிழ்ச்சியை தரும்.


Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

வலைச்சரத்தில் இந்த பதிவு.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_25.html

கோமதி அரசு said...

வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு.
நன்றி.


http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_25.html

ஸ்ரீராம். said...

வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கும், இங்கு தகவலுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம், ரூபன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!