Wednesday, May 22, 2013

சந்தோஷங்கள்


பழைய நினைவு ஒன்று. நானும் தாத்தாவும் அந்த ஹோட்டலுக்குள் நுழைகிறோம். என்னென்னவோ வாசனைகள் நாக்கின் சுவை நரம்பைத் தூண்டி எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.

தாத்தா ஆர்டர் கொடுக்கிறார். (என்னைக் கேட்காமலேயே)

                                            

"ரெண்டு பேருக்கும் ரெண்டு இட்லி, ஒரு தோசை"

என்னென்னவோ ஹோட்டலில் இருக்கும்போது இவர் ஆர்டர் செய்ய இதுதானா கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறேன்.

அப்புறம் ஒருமுறை மாமாவுடன் ஹோட்டல் சென்றபோதும் இதே அனுபவம்.

என்னவோ அவர்களுக்கெல்லாம் ஹோட்டல் போனால் இதைத்தான்-இதை மட்டும்தான் சாப்பிட வேண்டும் - என்று எண்ணம் போலும்.

                   

பரோட்டா என்கிற வஸ்துவை அப்புறம்தான் பார்த்தேன், சந்தித்தேன்! அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம்? கூகிள் செய்து பார்க்க வேண்டும்!

தோசை, இட்லி, சேவை நாழி வைத்து கிரேசி தீவ்ஸ் படத்தில் வருவது போன்ற தொடர்ச்சியான மென்மையான, அழகான சேவை, உப்புமா வகையறாக்கள் சப்பாத்தி, குருமா என்று சகலமும் வீட்டிலேயே கிடைத்து வந்த நாளில் இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்குப் போயும் இதே இட்லி, தோசையைச் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தது. என்ன செய்ய? அதாவது கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம்.

                                              

ஆனால் இது மாதிரி ஹோட்டலுக்குப் போகும் அனுபவம் கூட வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கலாம், அவ்வளவுதான்! அப்புறம் ஹோட்டலுக்குப் போகும் ஆசை அதிகமானது. அப்பா தஞ்சையிலும் மதுரையிலும் ஆபீசிலிருந்து வரும் வழியில் கேண்டீனிலிருந்தும், மதுரையில் தலைமை தபால் அலுவலகம் அருகே இருந்த பரபரப்பான பஜ்ஜி, போண்டாக் கடையிலிருந்து பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள் கடப்பா மற்றும் சட்னியுடன் வாங்கி வருவது தவிர ஹோட்டல் அனுபவம் எப்போதாவது வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும் சமயங்களில் இருக்கலாம். அப்போதும் பெரும்பாலும் புளியோதரை தயிர்சாதம் அவற்றை அடித்து விடும்!

என் ஹோட்டல் ஆசை அத்தனையையும் அந்நாளில் நிறைவேற்றி வைத்தவர் என் நண்பர் சுகுமார். (பின்னாளில் அவர் எங்களுக்கு உறவுதான் என்றும் தெரிந்தது). மதுரையில் புகழ் பெற்ற டிவி சர்விஸ் நிபுணர். அப்போது டிவி எந்த அளவு கோலோச்சியது என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொட்டும். பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளத் தெரியாதவர். அடுத்தவர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் குணமுள்ளவர். வித விதமான, சின்ன பெரிய எல்லா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று, வித்தியாசமான ஐட்டங்களையும் அறிமுகப் படுத்துவார். மதுரையில் பூச்சி ஐயங்கார்க் கடை சீவல் தோசை, நாராயணா ஹோட்டல் வெள்ளை அப்பம், பஞ்சாபி ஹோட்டல், ஹேப்பி மேன் முந்திரி அல்வா, என்று  சின்னச் சின்ன சந்துகளில் இருக்கும் சுவைகளை எல்லாம் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

எதிர்பாராத விஷயங்களை, எதிர்பாராத நேரங்களில் செய்து திகைக்க வைத்து விடுவார். எங்கள் உறவு வட்டத்திலும் இவர் பிரபலம்.

ஒருமுழம், இரண்டு முழம் பூ வாங்கும் இடத்தில் விற்பவரும், உடன் நிற்பவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்தக் கூடைப் பூவையும் வாங்கி விடுவார். அப்புறமென்ன? அந்தத் தெரு முழுதும் பூ விநியோகம்தான். பூ விற்கும் அந்தப் பையன் அப்புறம் இவர் என்ன வேலை சொல்வார், செய்யலாம் என்று காத்திருந்து முடித்துக் கொடுப்பான்!

ஒரு தாத்தா "புவனேஸ்வரி ஸ்நானப் பவுடர்,ஊது பத்தி " என்று குரல் கொடுத்தபடி ஊதுபத்தி, ஸ்நானப் பவுடர் போன்றவை விற்றுக் கொண்டு வருவார். அப்போது அவருக்கு 70 வயது இருக்கலாம். அவருடைய வயது காரணமாக, அவர் அலையக் கூடாது என்று நினைப்பின் காரணமாக இவர் அவரிடம் உள்ள ஸ்டாக்கில் 80 சதவிகிதம் வாங்கி விடுவார். அவருக்கு தண்ணீர், காபி என்று உபசரணைகள் செய்து அனுப்புவார். வியாபாரத்துக்கு வரும் போதெல்லாம் இவரும் அவரும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....

நன்றாகச் சமைப்பார். ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக் கிழமையில் 'திரட்டுப் பால் செய்யத் தெரியுமா' என்று கேட்டவுடன், அங்கு இருந்த 'ஆவின் பூத்'தில் மீதம் இருந்த பால் பாட்டில் (அப்போதெல்லாம் அரை லிட்டர் பாட்டிலில்தான் பால். அதற்கும் முன்பு பெரிய கேனில் கொண்டு வந்து விநியோகம் செய்வார்கள்!) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார்! இவர் செய்யும் புளிக்காய்ச்சல் போல நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ஒருமுறை எங்கள் அலுவலக விழா ஒன்றுக்கு இவர் செய்து கொடுத்த கல்கண்டு சாதமும், வெஜிடேபிள் சாதமும் எல்லோரையும் கவர்ந்தன.

                                                                                                                  

சினிமாக்களை முதல் நாள் பார்க்க வைத்தார். அவர் வைத்திருந்த வண்டியில் அமர்ந்து ஊர் முழுதும் சுற்றும் அனுபவம் தந்தார்.

இப்போதெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் (எப்போதாவதுதான் போகிறேன்!) நானும் தோசையைத்தான் தேடுகிறேன்.  ரவா தோசை!

                                    

இப்போது சுகுமார் என்னை ஆன்மீகத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேனோபநிஷத், முண்டகோபனிஷத் புத்தகங்கள் தந்து படிக்கச் சொல்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் சொல்கிறார். மகா பெரியவரின் தீவிர, அதி தீவிர பக்தர். தெய்வத்தின் குரல் பலமுறை படித்திருக்கிறார் என்பதால் அதிலிருந்து பல விஷயங்கள் சொல்வார். அவருக்கு எதாவது சந்தேகம் வந்தால், பிரச்னை வந்தால் 'தெய்வத்தின் குரல்' எடுத்து எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்தால் தீர்வு கிடைத்து விடும் என்கிறார். சில சமயங்களில் அப்போது கேட்கும் நொச்சூர், வேளுக்குடி  கூட தீர்வு கிடைக்கிறது என்பார். பயங்கர ஆன்மீகர்.

சமீபத்தில்கூட திருப்பதி சென்று வந்த அனுபவம் பற்றிச் சொல்லி, அங்கு ஒருவர் கூண்டுகளில் காத்திருக்கும் நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமாகச் சொல்ல ஆரம்பிக்க, இன்னொருவரும் கூடவே தொடங்கி விட்டு, ஸ்ரீ சுக்தம், புருஷ சுக்தம் எல்லாம் சொன்னாராம். கொஞ்ச நேரம் கழித்து இவர் அவரிடம் விஷ்ணுசகஸ்ரநாமம் பொதுவில் சொன்னது சரி, மற்றதெல்லாம் இப்படிப் பொதுவில் சொல்லக் கூடாது என்று எடுத்துரைத்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

சும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான்! ராமகிருஷ்ணர் பற்றி, பெரியவர் பற்றி என்று சளைக்காமல் மணிக் கணக்கில் பேசுவார். நான் 'உ..ம்' கொட்டுவதோடு சரி....!

நன்றி சுகுமார்.

24 comments:

kg gouthaman said...

நன்றி சுகுமார்!

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு பரந்த மனது...! சுகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

சந்தோஷ க்ஷணங்கண்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

சீனு said...

நல்ல பசிய கிளப்பி விட்டுட்டு, ஆன்மீகம் அது இதுன்னு ஏமாத்தப் முயற்சி பண்றீங்க... முடியவே முடியாது.. உடனே என்ன ஒரு நல்ல ஹோட்டல் க்கு கூட்டீடுப் போங்க

துளசி கோபால் said...

ஆஹா..... என்ன ஒரு அருமையான நண்பர்!!!

நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்!

எனக்கும் வாசிக்கும்போது மனமெல்லாம் சந்தோஷமே!

geethasmbsvm6 said...
This comment has been removed by the author.
geethasmbsvm6 said...

.//எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....//

எங்க மோதி கண் திறக்கும் முன்னரே எங்க வீட்டுக்கு வந்தான். கண்களைத் திறந்ததும் பார்த்தது எங்களைத் தான். மத்ததுக்கு அப்புறமா.

பால கணேஷ் said...

Santosham - padithathil. Good character he is.

பால கணேஷ் said...

Santosham - padithathil. Good character he is.

வெங்கட் நாகராஜ் said...

எங்களையும் சந்தோஷம் கொள்ள வைத்த பகிர்வு.

sury Siva said...

மல்லியும் முல்லையும் தாம் இருக்குமிடமெல்லாம்
மணமாக்கிவிடும்.
மோர் ஒரு குவளை குடித்தாலும்
மனம் குளிரச் செய்துவிடும்.
தனக்கென்ன வேண்டும் என அலையும் மாந்தரூடே
தருவதெற்கென்ன உளது என நினைக்கும்
இவர்கள் எல்லாம் இவ்வுலகத்தில்
இறைவன் ஈந்த இள நீர்

சுப்பு தாத்தா.

ராமலக்ஷ்மி said...

மற்றவரை சந்தோஷப்படுத்துவதை தன் இயல்புகளில் ஒன்றாகவே கொண்டிருக்கும் சுகுமார் அவர்களின் குணாதிசயங்கள் அனைத்தும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்புகிறது. ஆத்மார்த்தமான உங்கள் பகிர்வும் அருமை. நன்றி.

அப்பாதுரை said...

பரோட்டா சாப்சா உபநிஷதா, எது பிடிக்கும்?

ஸாதிகா said...


சும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான்! //படிக்கையில் எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

Anonymous said...

arumaiyana ungal natpu aandugal pala thodarattum..ungalai parthal poramaiyaga irukkirathu..

Anonymous said...

arumaiyana ungal natpu aandugal pala thodarattum..ungalai parthal poramaiyaga irukkirathu..

s suresh said...

அருமையான ஒரு மனிதரை பதிவின் மூலம் அறிமுகம் செய்து கவுரவித்தமை அழகு! சிறப்பான பகிர்வு! நன்றி!

middleclassmadhavi said...

En naaththanar kanavar gnaapagam varugirathu! Ithe pondra character - ippothu vayathaagi thalarnththu vittaar.

Gnaapagamgal vaazhga!

rajalakshmi paramasivam said...

நல்லார்(சுகுமார்) ஒருவர் இருக்க அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை.

நன்றி பகிர்விற்கு.

HVL said...

ப்ளேஷ் பேக்குகளையெல்லாம் நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். நானும் முறுகலான தோசைக்காக நாவில் நீர் சொட்ட காத்திருந்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உன்னதமான ஒரு செயல்.
பிறர் துனபம்போக்கும்குணமும், மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தும் மனிதநேய மிக்க சுகுமார் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
நல்ல மனிதரைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தலைப்பு பொறுத்தமே!

வல்லிசிம்ஹன் said...

அருமையான மனிதரை நண்பராகப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.
சில நூறு மனிதர்கள் இவரைப் போல இருக்கிறார்கள்.

அநேகமாக எல்லோருக்கும் இந்த ஹோட்டல் அனுபவம் ஒரே போலத்தான் இருக்கிறது.
எங்கள் வீட்டிலும் ஹோட்டலுக்குப் போவது அரிது. பசங்க பெரியவர்கள் ஆனதும் நான் அழைத்துப் போக ஆரம்பித்தேன்.

இப்போது வயிறு இடம் கொடுப்பதில்லை:0
தயாளு என்கிற வார்த்தை உங்கள் சுகுமாருக்குப் பொருந்தும். வாழ்க உங்கள் நட்பு.

ஸ்ரீராம். said...

கே ஜி கௌதமன், DD, RR மேடம் சீனு, சிறப்பு விருந்தினர் துளசி மேடம், அப்பாதுரை, கீதா மேடம், பால கணேஷ், வெங்கட், சூரி சிவா சார், ஸாதிகா, புதுவை கலியபெருமாள், 'தளிர்' சுரேஷ், middleclassmadhavi, ராஜலக்ஷ்மி பரமசிவம், HVL, கோமதி அரசு மேடம், வல்லிம்மா,

அனைவருக்கும் நன்றியோ நன்றிகள். மே 19ம் தேதி சுகுமாரின் பிறந்த நாள். அதை ஒட்டி யோசித்தபோது தோன்றியதுதான் இந்தப் பதிவு. உங்கள் பின்னூட்டங்கள் அவரின் அருமையை எனக்கும் இன்னும் அதிகமாக உணர்த்துகின்றன.

துரை... பரோட்டா சாப்ஸ் சாப்பிட்டு விட்டு உபநிஷத் பற்றிப் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும்! அப்புறம் பைத்தியம் பிடிக்கும்! :))

மோ.சி. பாலன் said...

இப்படியும் ஒரு நண்பரா.
திரு சுகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( ஒரு கூடை பூவுடன் தான்)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!