செவ்வாய், 9 மே, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதாபதி - மாலா மாதவன் -


     மனதை நெகிழ வைத்த கதை ஒன்றை முன்னர் எங்களுக்கு  - நமக்கு -  அளித்த மாலா மாதவன் அவர்கள் சீதை ராமனை மன்னிக்கும் கதைத் தொடரில் தனது படைப்பைக் கொடுத்திருக்கிறார்.



============================================================


சீதாபதி
மாலா மாதவன்


அந்த அரங்கில் ஒரே ஆரவாரம். பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பக்கத்தில் தான் வீடு ஆகையால் தமாவுக்கு அனைத்தும் காதில் விழுந்து கொண்டிருந்தது.

பள்ளித் தாளாளர் உரையாற்றிய பின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. நண்டும் சிண்டுமான

குழந்தைகள் அழகழகாய் உடையணிந்து நடனம் ஆடுவதற்காகச் சென்றதை சற்றுமுன் தான் ஜன்னல் வழியே கண்டாள்.

திடீரென உச்சத்தில் ஒலித்த ஸ்பீக்கரில் மெய்மறந்தாள்..தமா.

சீதா கல்யாண வைபோகமே! என்ற ஆரம்பித்த பாடலில் அவள் தன்னிளமைப் பருவத்துக்கே சென்று விட்டாள். பாடலும் நடனமும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். கற்றுக் கொள்ள சமயம் வாய்க்க வில்லை.

'ஜன்னலைத் திறந்துண்டு மெய் மறந்தாச்சா? விடிஞ்சாப்ல தான்!'  உஷ்ணமாக வார்த்தைகள் விழுந்தது பரசுவிடமிருந்து.  பரசு அவள் மாமனார்.  கூடவே இடுப்பில் கை வைச்சுண்டு முறைத்தபடி மாமியார் கனகம்.

'விடியாட்டாலும் இவர் என்ன செய்யப் போறாராம்?'  வழக்கம் போல் மனதில் பேசினாள் தமா.

அவள் அப்படித்தான். ஆயிரம் கூரம்பு அவளை வலி கொண்டு தாக்கினாலும் துடைக்க கை நீளாததால் சதுப்பு நிலத்தில் வாழ பழகிக் கொண்டாள்.

என்ன,  சமயத்தில் கழுத்து வரை இறுக்கும் பிரச்சனைகள். ஆனாலும் அசர மாட்டாள்.

தமாவுக்கு இரு நாத்தனார்கள். எல்லோரும் அதே தெருவில்.  சொல்ல வேண்டுமா என்ன?

நெருப்பின் கங்குகள் அணைந்து விடுமோ என அவ்வப்போது வந்து ஊதி விட்டுப் போகும் ப்ரகிருதிகள்.

கணவன் விசு அம்மா பிள்ளை.  அம்மா என்ன சொன்னாலும் செய்வான். தமாவை கல்யாணம் பண்ணும் வரை நல்ல வேலையில் தான் இருந்தான். கை நிறைய சம்பளம். நல்ல பையன் என்றே தமாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்தனர். அவன் அம்மா பிள்ளையாகத் தான் இருந்தான்.

அம்மாவிற்கு மட்டும் பிள்ளையாக.

திருமணம் முடிந்த அடுத்த நாள் நடுக்கூடத்தில் கூட்டம் கூட்டப் பட்டது.

தமாவுக்கு ஒரே அதிசயமாக இருந்தது. தாய் வீட்டில் நடுக் கூடத்தில் எந்த கூட்டமும் நடந்ததில்லை. அம்மாவும் அப்பாவும் கலந்து பேசுவார்கள். வேண்டுமெனில் பெரியவர்களிடம் கலந்து பேசுவார்கள். அவ்வளவே.

இங்கு என்னடாவென்றால் குற்றவாளி கூண்டில் ஏறி 'மை லார்ட்' என கூவாத குறை.

சுவராஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

கனகம் தான் சீஃப் ஜட்ஜ் .  ஆரம்பித்தாள்.

'இந்தாம்மா தமா, உன் ஆபீஸ் இங்கேயிருந்து எவ்வளவு தூரம்? எப்படி போவ?'

'ஏன் அத்தை?  உங்க புள்ள வேலைக்குப் போகும் போது என்னையும் விட்டுட்டு போனா பஸ், கேப் கூட வேணாம் அத்தை.  ஆனா எங்க வீட்டுல இருக்கும் போது கேப்ல தான் போவேன்.' என்றாள் தமா.

'உனக்கு என்ன ஒரு எழுபதாயிரம் வருமா சம்பளம்?'  -  இது பெரிய நாத்தனார் ராணி.

'எனக்கு பிடித்தம் போக ஒரு லட்சம் வருதே அண்ணி'  என்று அவளுக்கும் பதில் கூறினாள் தமா.

'ஒரு லட்ச ரூவாயா?  அப்ப க்வாட்டர்ஸ், கார் எல்லாம் கொடுப்பாங்களா?'  கண்கள் விரிய கேட்டாள் சின்ன நாத்தனார்.

'இல்லை அண்ணி.  இந்தக் காலத்துல இதெல்லாம் சின்னக் காசு தானே என சிரித்தபடி கூறின தமாவை வெறித்தன அனைவர் கண்களும்.

மாமனார் மாமியாரைப் பார்க்க, மாமியார் பெண்களைப் பார்க்க,  ஒரு நாடக பாவனை தமாவுக்கு தோன்றியது.  கணவன் விசு இதிலெல்லாம் பட்டுக் கொள்ளாது பேப்பர் படிக்கும் பாவனையில் அமர்ந்திருந்தான்.

'ஆக, லட்சாதிபதி நாங்க!'

'இராத்திரிக்கு பாவம் நான் பார்த்துக்கறேன்.. நீ வேலைக்கு போய்ட்டு களைச்சுப் போய்ட்டு வருவ..  ஆனா சனி, ஞாயிறு லீவு நாள்ல நீ தான் இராச் சாப்பாடும் செய்யணும்.  எல்லாம் புரிஞ்சுதா?'

உரக்க கேட்ட கனகத்திடம் 'அதெல்லாம் சரி அத்தை!  இவர் என்னதுக்கு வேலையை விடணும்?'

'சும்மா தாண்டியம்மா!  வேண்டுதல்!  கல்யாணம் ஆகி மருமகப் பொண்ணு வந்தால் பிள்ளையை வேலையை விடச் சொல்றேனிட்டு.  சும்மா இதையே கேட்டுகிட்டு!  ஏன் நீ தான் சம்பாதிக்கிறங்கற திமிரா?  கேள்வி கேட்கற?'  என்றார் முறைத்த மாமனார் உள்ளே சென்ற படியே..

'எம் புள்ளைக்கு ரெஸ்ட் வேணும் மருமகளே.  ஆணும் பெண்ணும் சமமின்னு கூவறாங்களே! ஒரு சேஞ்சுக்கு எம் மவன் வீட்டை பாத்துக்கட்டும். நீ உலகத்தை பாத்துக்கோ'

'சரி' யென்று அன்னிக்கு அசைந்த தலை இதோ இன்று மட்டும் அசைந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் என்றால் இவளுக்கு ஏக்கம்.  உயிரும் கூட.  எங்கே  பேருக்கு நடந்த கல்யாணத்தில் எங்கே இவள் படுக்கை மாமியார் பக்கத்தில்.  விசுவும் பரசுவும் தனி ரூம்.  எங்கே நடக்கும் இந்த கூத்து!

போதாக் குறைக்கு மாமியார் கனகம் பணப்பசியை விசுவிடம் நன்கு தூண்டி விட்டிருந்தாள்.

'பிள்ளை குட்டின்னெல்லாம் ஆசைப் படாதடா.  எவ்வளவு வேணாலும் வெளியே ஜாலியா இருந்துக்கோ.  உன் பொண்டாட்டி மாசமானா ஆஸ்பத்திரி செலவு, அப்புறம் பிள்ளைக்கு செலவு, படிக்க வைக்க செலவு, அதுக்கு கல்யாணம் பண்ண செலவு.. போதும் போதும்..  நினைக்கவே பயமா இருக்குடா விசு.'

'அள்ளாம கொள்ளாம அப்படியே வர்ற பணத்தை வட்டிக்கு விட்டா வர்ற குட்டியை பெருக்கினா பத்து வீடு வாங்கலாம்டா மகனே.'

வழக்கம் போல் தலையாட்டி அப்பா ரூமே கதின்னு கிடந்தான் விசு.

அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த கம்பெனியின் புது மேலாளர் தன் மூக்குக் கண்ணாடியை மேல் தூக்கி விட்டுக் கொண்டு அன்றைய கூட்டத்தில் சிறப்புரையாற்ற ஆரம்பித்தார்.

'பெண்கள் தினத்திற்காக கூட்டப் பட்ட கூட்டத்தில் வாழ்வில் தோற்றுப் போன பெண்ணாய் நான் உரையாற்றுவது மிகப் பொருத்தம்' என்று ஆரம்பித்த அவர் பேச்சு....

'பணத்திடம் நான் தோற்றுப் போனேன்.  இல்லற வாழ்வில் பணத்தை பணயம் வைக்காதீர்கள்' என முடித்த போது தமாவுக்கு கைதட்டல்கள் பறந்தன.

ஆம் ! தமா இப்போது இன்னும் பல படி வேலையில் ஏறி விட்டாள்.  முதுமை நரைகள் எட்டிப் பார்க்க தொடங்கி விட்டன.

மெனோபாஸ் சமயத்தில் 'உதிரப் போக்கு அதிகமாக கர்ப்ப பை எடுத்தடலாம்மா' என்ற டாக்டருக்கு உடனே ஓத்துப் பாடிய மாமியார் கனகம்..  'யூஸே இல்லாத உறுப்பு அது . என்னதுக்கு உனக்கு . அறுத்து எறி' என வற்புறுத்த.. அதுவும் ஆச்சு.

இத்தனைக்கும் காரணமான விசுவை அவள் மனதார வெறுத்தாள்.

ஆபீஸ் ஒன்று இருக்கோ..  அவள் ஆசுவாசப் படுத்தி கொள்கிறாளோ..  எவரிடமும் அவள் குடும்பக் கதையை பகிர்ந்ததில்லை.

இன்று வரை என்ன சம்பாதித்தோம் என்பதும் அவளுக்கு தெரியாது.  அதெல்லாம் கனகமும், விசுவும் பார்ப்பார்கள்.

இனி என்ன? எல்லாம் முடிந்தது. ரிடையர்மெண்ட் வரை பொழுது போகும். அப்புறமும் ஏதாவது சம்பாதிக்கச் சொல்வார்கள் இவர்கள்.

'என்னமோ !  விதி.  அவ்வளவு தான்' என்றபடி எழுந்த தமாவை அவளது மொபைல் அழைத்தது.

'தமாவா? பக்கத்து வீட்டு விஜி பேசறேம்மா. உன் வீட்டுல ஏதோ சண்டை போல. பாத்திர பண்டமெல்லாம் பறக்குது. உடனே வா' என கூற..

விரைந்து காரில் வந்தாள் தமா.

அங்கு கண்ட காட்சி..

மாமியாரும் மாமனாரும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். வீடு ஒரு பெரிய போர் நடந்து முடிந்ததன் அடையாளமாய் இருந்தது.

விசு ஆங்காரமாய் கத்திக் கொண்டிருந்தான்.

'என் பொண்டாட்டி கஷ்டப் பட்டு உழைச்ச காசு. எல்லாத்தையும் ஏமாத்திட்டீங்களே..'

கனகம் பதிலுக்குக் கத்தினாள்.  'இப்ப என்னடா ஏமாத்தினோம்.  நீயா ஆசைப்பட்டு எங்க பேர்லயும் , உன் தங்கச்சிங்க பேர்லயும் வீடா வாங்கிக் கொடுத்த.. அதை நாங்களே எடுத்துக்கிட்டோம். இந்தா இவ்வளவு நகை தமாவோடது.  என்னதுக்கு அவளுக்கு. போட புள்ள குட்டியில்லை. அவளுக்கும் கிழடு தட்டிப் போச்சு. இதோ எம் பேத்திகளுக்குன்னு கொடுத்தேன்.'

பிரமித்தான் விசு.  இவளையா நான் ரொம்ப நம்பினேன்?

அவனைச் சூழ்ந்த தங்கைகள்  'நீ கொடுத்த வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டா தான் எங்க வீட்டுக்காரர்கள் உட்கார்ந்து சாப்பிட முடியும். அதனால இருக்க இந்த பூர்வீக வீட்டையும் தா' என ஒரு பேப்பரில் கையெழுத்து போட வற்புறுத்தினர்.

கை கட்டி பார்த்திருந்தாள் தமா.

'ம்க்கும்!  உனக்கென்ன பிள்ளையா குட்டியா?  இந்த வீட்டை வைச்சு நீ என்ன செய்யப் போற? கையெழுத்தை போட்டுட்டு காலி பண்ணு...'

'பார்த்தியாடி!  மாசா மாசம் நோட்ட கொண்டு வந்து நீட்டறா பொண்டாட்டி. உட்கார்ந்து கால் மேல கால் போட்டுகிட்டு குடித்தனம் பண்ற சொகுசு ஒரு சின்ன கையெழுத்தை போட யோசிக்குது'

தங்கைகளை நிமிர்ந்து பார்த்த விசு 'சே ! அவ்வளவு தானா வாழ்க்கை' என நொறுங்கிப் போனான்.

தன் உழைப்பை விட்டான்.  தன் மனைவி காசையும் விட்டான்.  சுயமிழந்து நின்றான்.

'பணம் பணம் என்று இருந்தேனே.. தாங்க ஒரு பிள்ளை இருந்திருந்தால்...'

'அய்யோ! என் பிள்ளை!'

நாலாய் , எட்டாய் மடங்கி விழுந்தான் விசு.

மெல்லக் கண்விழித்தவன் ஆஸ்பத்திரி நெடியை நுகர்ந்து விட்டு,

'தமா !'

'என்னங்க! இதோ இருக்கேன்!'

'என்னாச்சும்மா எனக்கு? ஏன் எதையும் அசைக்க முடியல?'

'ஒண்ணுமில்லங்க. சரிப் படுத்திடலாம். ஷாக் தான்.  அதில் ஒருபக்கம் செயலிழந்து போச்சு.  டீரிட்மெண்ட் இருக்கே. தவிர ...' அவன் கண்ணை உற்றுப் பார்த்து விட்டு சொல்கிறாள்..

'நான் இருக்கேனே!'

ஆம்! சீதை ராமனை மன்னித்து விட்டாள்.

33 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    கதை நகர்த்திய விதமும் கதைக்கருவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.பகிர்வுக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பொறுமையில் சீதாதேவி என்பார்கள் இவ்வளவு பொறுமை அவசியமா? என்று நினைக்க வைத்தார்,
    பின் விசுவை மன்னித்து மேலும் உயர்ந்து விட்டார்.
    பணம் ஒன்றே குறி தமாவின் மாமியாருக்கு ,அன்பில்லா குடும்ப உறுப்பினர் எப்படி வாழமுடிந்தது ?
    இந்தகாலத்திலும் இப்படி பெண்கள் இருப்பது அதிசயம் தான்.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் அசாதாரணமான கதையாத்தான் தோணுது. படிச்சு பெரிய பொசிஷனுக்கு வரும் திறமை கொண்டவள், அதீதப் பொறுமைசாலியாவும், பொம்மைக் கணவனை மன்னிக்கும் விசாலமனமுமா இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தொட்ட கதை. இப்படியுமா என்று வியப்பை அளித்த கதை! வாழ்த்துகள் ஆசிரியருக்கு!

    கீதா: முதல் வரியே பல விஷயங்களைச் சொல்லிவிட்டது!!! மனதை என்னவோ செய்தது. தமாவின் பொறுமை அதீதம்தான். அன் கண்டிஷனல் லவ் பற்றி அதிகம் பேசுபவளான எனக்கே தமாவின் மீது சற்றுக் கோபம் வந்ததுதான்.....அதுவும் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் பெண் தன் சுயத்தை அடையாளப்படுத்திக்கத் தெரியாமல்??!! அதுவும் தனது கணவுடனான உறவையும் விட்டுக் கொடுத்து??!!! அவளது முடிவாக இருந்தால் ஓகே...ஆனால் வீட்டாரின் முடிவு அதுவும் கணவன் அதற்கு ஒத்துக் கொண்டது.....தமா பிரமிக்க வைக்கிறாள்!!! அதுவும் இறுதியில் கணவனை மன்னித்து!!! எந்தவித எதிர்பார்ப்புமற்ற அன்பிற்குச் சிறந்த உதாரண கதாபாத்திரமாகிவிட்டாள் தமா!!!! இப்படியும் உலகில் எங்கேனும் ஒரு சில சீதைகள் இருப்பார்கள்தான்!!!

    கதாசிரியருக்கு வாழ்த்துகள்!! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. அதீதப் பொறுமையாக இருக்கே. மாலும்மா.
    இவள் சீதைக்கு மேலே ஒரு படி போய்விட்டாள்.
    அன் கண்டிஷனல் லவ். கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இனிமேல் விசுவுக்கும் இந்தக் காதல் வருமோ.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை நகர்வு ஆசிரியருக்கு வாழ்த்துகள் எமது...

    பதிலளிநீக்கு
  7. >>> நான் இருக்கேனே!..<<<

    கதையின் சிகரம்!..

    இன்னும் பல இல்லங்களில் தாம்பத்யம் இனித்திருப்பது இந்த வார்த்தைகளினால் தான்!..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. மாலா மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! கேட்டு வாங்கி போட்ட எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை. வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாக்கிற்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பின்பு வந்து ஆறுதலா கதை படிச்சு கொமெண்ட்ஸ் போடுறேன்.. அதுக்கு முன் இவ எங்கட, அறுசுவை மாலா அக்காவோ? முழுப்பெயர் மறந்திட்டேன்ன்.

    பதிலளிநீக்கு
  11. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  12. அருமையான நடையில் அற்புத கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. என்னால் தமாவை மன்னிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  14. தமா மாதிரி பெண்களை சென்ற தலைமுறையில் கண்டதுண்டு. நெகிழ்ச்சி யான கதை.

    பதிலளிநீக்கு
  15. எனக்கெல்லாம் இவ்வளவு பொறுமை கிடையாது! :)))) இது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. படித்து நல்ல வேலையில் நல்ல பதவியில் இருக்கும் பெண் இவ்வளவு பொறுமை காத்திருப்பது அதிசயம் தான். பெற்றோருக்கோ அக்கம்பக்கமுமோ கூடத் தெரிஞ்சுக்காமல் இருந்திருக்காங்களே! என்னால் தமாவை மன்னிக்க முடியும்னு தோணலை! கோழை என்றே தோன்றுகிறது! அதோடு மாமனார், மாமியார் மட்டும் எப்படி இவ்வளவு வருஷங்கள் உயிருடனும், தெம்பாகவும் இருக்கிறார்கள்? அவங்களுக்கும் வயசாகி நம்ம குடும்பம், நம்ம பிள்ளை, நம் குடும்ப வாரிசு என்று தோன்றாதோ! என்னவோ போங்க! பணம் தேவை தான். ஒரே பிள்ளையின் வாழ்க்கையை அழிச்சுப் பெண்களுக்குச் செய்யும் அம்மாக்கள், அப்பாக்களும் இருக்காங்க என்று நினைக்கையில்! :(((((

    பதிலளிநீக்கு
  16. பக்கத்து வீட்டு விஜிக்கு வீட்டிலே சண்டை என்பது தெரிந்திருக்கையில் விபரங்கள் தெரிந்திருக்கணுமே! அவளாவது எடுத்துச் சொல்லி இருக்க மாட்டாளோ!

    மோதி மிதித்திருக்க வேண்டாமோ? உண்மையில் இப்படி யாரிடமும் மனம் விட்டுப் பேசாமல் உள்ளேயே அடக்கி வைத்திருந்தால் தமாவுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கணும். இந்தக் கதையைப் படித்ததிலிருந்து மனம் பல கோணங்களில் அலசுகிறது! :) மனைவி என்னும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. கோர்ட் வரை போயிருக்கணும்.

    பதிலளிநீக்கு
  17. ஹிஹிஹி, கதைக்கே இப்படிக் கோபம் வருது எனக்கு! நேரிலே பார்த்திருந்தேன் என்றால் நானே போய்ப் புகார் கொடுத்திருப்பேனோ என்னமோ! :))))

    பதிலளிநீக்கு
  18. @Geetha Sambasivam akkaa ..காலைலேருந்து உங்க பின்னூட்டத்துக்காகவே நான் காத்திட்டிருந்தேன் என் மனதில் தோன்றியதை சொல்லிட்டிங்க

    பதிலளிநீக்கு
  19. @ஏஞ்சலின், கதை வந்தப்போ எனக்குத் திங்கட்கிழமை சாயந்திரம் தானே. தெரிந்தவர்கள் வீட்டுக்குப் பொண்ணு கூட்டிப் போயிருந்தா. அங்கேருந்து வந்து சாப்பிட்டுப் படுத்துட்டேன். இப்போக் காலை தான் இதைப் படித்தேன். :) அதான் தாமதம்!

    பதிலளிநீக்கு
  20. இன்னும் நிறையத் தோன்றுகிறது. :)

    பதிலளிநீக்கு
  21. மாலா மாதவன் கதையும் எழுத்து நடையும் மிகவும் அருமை ஆனால் இந்தவிசு போன்றவர்களை கூட மன்னிக்கலாம் ஆனால் அதி முட்டாள் சென்டிமென்டல் fool தமா போன்றோரை மன்னிக்கவே கூடாது இவர் போன்றோர் பெண்களுக்கு தவறான முன்னுதாரணம் ..கல்வி என்பது ஒரு பெண்ணுக்கு சுயமாய் முடிவெடுக்கும் போராடி வாழும் குணத்தை தராதா இதற்க்கு படிக்காத கூலி மெஷின் ஓட்டும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பெண்களே மேல் என தோன்றுகிறது ..இவரின் அன்பையும் அனுசரணையையும் பெற அந்த விசுவுக்கு எள்ளளவும் தகுதியில்லையே :( ..லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பெண்ணுக்கு சுயமாய் சிந்திக்கும் அறிவு இல்லாமற்போனதே ..
    ஆனால் நிச்சயமாக இன்னும் தமா போன்றோர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது இந்த முட்டாள்கள் மன்னிப்பு என்ற போர்வையில் மீண்டும் சகதியில் விழுந்து கொண்டிருக்கிறார்கள் நாளை கனகம் நோயில் விழுந்தாலும் ஓடி சென்று கவனிக்கும் இந்த தமா ..நான் இப்படிப்பட்ட சில தமாக்களை பார்த்திருக்கிறேன் ..

    இத்தனைநாளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்த தமா இனி வெள்ளி சங்கிலியில் கட்டுண்டு இருக்கப்போகிறார்
    சங்கிலி என்பது இங்கே ஆர் .கே நாராயணன் எழுதிய பிளைன்ட் dog கதையில் வரும் சங்கிலியை சொன்னேன்

    பதிலளிநீக்கு
  22. பெண் எப்படி இருக்கக் கூடாதுன்னு என்பதற்கு 'தமா'வை உதாரணமாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் ,என் 'த ம' ஏழாவது வாக்கு மூலமாய் வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  23. இனிமே அவள் மன்னிக்க என்ன இருக்கு? எழுத்தாளர்களே, இம்மாதிரி காதில் பூ சுற்றாதீர்கள்! மாசம் ஒரு லட்சம் வாங்குகிறவள், கணவனை வீட்டில் உட்கார வைத்து சோறு போடுவாளா? ஆந்திராவில் கூட இப்படி நடக்காது...முதலாவது அவ்வளவு பெரிய வீட்டில் வாழ்க்கைப்பட அவள் சம்மதித்தே இருக்கமாட்டாள்! (ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதை சொன்னேன்...கோபிப்பார்களோ?)

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  24. அலுவலகத்தில் சிறப்புரையாற்றும்போது பலர் முன்னிலையில் இல்லறத்தில் தோற்றதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்போது கட்டிய கணவனிடம் கொஞ்சம் பேசிப் பார்த்திருக்கலாமோ! மனதில் ஏதோ நெருடுகிறது! உண்மையில் கிட்டத்தட்ட இந்தக் கருவை வைத்து அதாவது மகன் சம்பாத்தியம் மருமகளுக்கும் அவள் பெற்ற குழந்தைகளுக்கும் போகக் கூடாது என்னும் கருவை வைத்து ஒரு மாமியாரைப் பற்றிய கதை நானும் எழுதினேன். ஆனால் அதில் இல்லற வாழ்வில் மாமியார் குறுக்கிடவில்லை. சில இடங்களில் உண்டு தான்! ஆனால் வெளியே சென்று வேலை செய்யும் பெண் ஒரு மாசம், ஒரே ஒரு மாசம் தன் சம்பளத்தை மாமியாரிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ! எல்லாவற்றையும் மாமியாரிடம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? கொஞ்சமானும் தனக்கென ஒதுக்கிக் கொள்ளவில்லையா?

    பதிலளிநீக்கு
  25. உண்மையில் இதை எல்லாம் எழுதுவதற்கு முன்னர் ரொம்பவே யோசித்தேன். ஆனால் இங்கே ஓரிருவர் மறைமுகமாக "தமா"வின் முடிவை அல்லது அவள் நடத்தையை ஏற்கவில்லை என்பது புரிந்ததும், மாலா மாதவன் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் சொல்லி இருக்கேன். தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. இன்று என்னால் முடியவே முடியல்ல.. மிகவும் லேட்டாகிட்டேன் இங்கு வர... இப்போதான் கதையைப் படிச்சு முடிச்சேன்.. நன்றாக நகர்த்தி.. அழகாக முடிச்சிட்டா கதாசிரியர்.. ஒவ்வொரு மனிசர் ஒவ்வொரு விதம்..

    பதிலளிநீக்கு
  27. இக்காலத்தில் இது நம்ப முடியாத கதை
    ஒருவேளைஅக்காலம் எனக் கொள்ளலாம்
    என நினைத்தால் சம்பளம் உதைக்கிறது

    ஆனாலும் சொல்லிச்சென்ற விதமும்
    முடித்த விதமும் அருமை

    கதை எழுதி விட்டு தலைப்பை
    யோசித்தால் அது சரியாகப் பொருந்தும்

    தலைப்பை வைத்து கதை என்றால்
    இப்படி ஆகவே அதிகச் சாத்தியம்
    என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  28. கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. அக்காலத்துப் பெண்ணின் மனோபாவத்தை எதற்கெடுத்தாலும் வாய் மூடி மௌனமாக நகர்வதை இக்காலத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்ணில் புகுந்த நினைத்து எழுதிய கதை. கதை கதை மட்டுமே. வாய்ப்பளித்த ஸ்ரீராம் சார் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கதைமட்டுமில்லை.சிறிய வயதில் அடங்கிப்போகும்படியான ஒரு நல்ல குணம் வேண்டும் என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள்.அதன் தாக்
    கமாகக் கூட இருக்கலாம். எந்த சூழ் நிலையில் அவள் அப்படி இருந்தாளோ? படித்த அசடுகளும்,படிக்காத ஸாமர்த்தியசாலிகளும் .பெண் வர்கத்தில் உண்டு. நான் இப்படித்தான் என்று இருக்கும் பெண்களும் இருப்பார்கள் அதிசயமாக என்று நினைத்தேன். புனைவுதானே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும் வரிகளுடன் கதை வேண்டும் என்று கேட்டவுடன் எனக்கு மனதில் எழுந்த எண்ணம் இது: மோசமான கணவனை மையமாக வைத்து 'கள்-ஆனாலும் கணவன்; ஃபுல் ஆனாலும் புருஷன்' என்பது போல நிறைய கதைகள் வரக்கூடும்' என்று. இதோ அப்படி ஒருகதை. என்னால் ஒரு சதவிகிதம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஸாரி மாலா மாதவன் கதை என்றாலும் கூட இப்படி ஒரு பாத்திரத்தைப் படைக்க எப்படி மனம் வந்தது? வருத்தம், வருத்தம், வருத்தம்.

    பதிலளிநீக்கு
  31. தமா விசுவை மன்னித்திருக்கலாம் - ஏனோ என்னால் தமாவினை மன்னிக்க முடியவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.....

    பதிலளிநீக்கு
  32. ராமனின் தவறு என்னவென்று புரியவில்லையே? இந்த சீதை கொஞ்சம் மந்தமோ/

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!