செவ்வாய், 23 மே, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : ராமசாமி தாத்தா - பரிவை சே. குமார் - சீதை 7     மனதை வருடும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான 'மனசு குமாரி'ன் கதை  ஸீதைத் தொடரில்...


=========================================================================


ராமசாமி தாத்தா
பரிவை சே. குமார்

     எங்க ஊர்ல எல்லாருக்கும் பிடித்த மனிதர்... யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார்... ஒரு சிலரைப் போல வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு நிற்கமாட்டார். எந்தக் குடும்பத்தில் பிரச்சினை என்றாலும் தன் குடும்பப் பிரச்சினை போல் அதை சரி பண்ண முயற்சிப்பார். குறிப்பாக சின்னப் பசங்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதுக்கு காரணம் சாயந்தர நேரத்துல கோவில் படியில உக்காந்து கதை சொல்லுவார்... தினம் ஒரு கதை... எல்லாமே நகைச்சுவை இழையோடும் அழகிய
கதைகள்... ஆமாம் அவர் ஒரு அருமையான கதை சொல்லி...  டிஏஎஸ் பட்டணம் மூக்குப் பொடியை எடுத்துச் சுர்ர்ருன்னு ஒரு உறிஞ்சு உறிஞ்சிட்டு... கையை உதறிட்டு... மூக்கைத் தோள்ல கிடக்க துண்டால துடைச்சிக்கிட்டு... ஒரு செருமு செருமிக்கிட்டு... அவர் கதை சொல்ற அழகே தனிதான்.

நான் கூட அவர் கதை கேட்டு வளர்ந்தவள்...  இப்ப அவர் சொல் கேட்டு வாழ்பவள்தான்.

ஊருக்குள்ள பெரியவங்க அவரை முறை சொல்லிக் கூப்பிட்டாலும் இப்ப இருக்க பிள்ளைகளுக்கு எல்லாம் அவர் ராமசாமி தாத்தாதான்.  முடி நிறைய வளர்த்திருப்பாரு... அது சும்மா வெள்ள வெள்ளேருன்னு தும்பப்பூக் கணக்கா அவ்வளவு அழகாக இருக்கும். மீசை இருக்காது... இந்த வயசிலும் நல்ல ஆஜானுபாகுவான உடல் வாகு. அவரு பொண்டாட்டி பொன்னாத்தா, பூவும்
பொட்டோட போயி வருசம் ஏழாச்சு. ரெண்டு பொம்பளப்புள்ளங்களும் பேரம் பேத்தி எடுத்துட்டாங்க...  தங்களோட வச்சிக்க வரச்சொல்லி கூப்பிட்டும் இவருக்கு இந்த கிராமத்து வாழ்க்கையை விட்டுட்டு நகரத்துல போயி வீட்டுக்குள்ள அடஞ்சி கெடக்க வாழ்க்கையில துளியும் விருப்பமில்லை...


எப்பவாச்சும் போவாரு... ரெண்டு மூணு நாள்ல திரும்பி வந்திருவாரு... யாராச்சும் ‘அட பேரம்பேத்திககிட்ட இன்னும் ஒரு வாரம் பத்துநாள் இருந்துட்டு வரலாமில்ல... இங்க என்ன கெடக்குன்னு ஓடியாந்தே’ன்னு கேட்டா,  ‘அட வெளிய தெருவ போக முடியலைய்யா... கக்கூஸ்ல இருந்தா பொட்டக்காட்டுல இருக்க மாதிரி வருதில்லைய்யா’ என்பார்.

கதையை ஏதாவது ஒரு வரலாற்றில் ஆரம்பித்து, எங்க ஊரில், பக்கத்து ஊரில், உறவுகளில் வாழ்ந்து மறைந்த யாராவது ஒருவரின் வாழ்க்கைக் கதையை இறுதியில் கொண்டு வந்து முடிப்பதில் கில்லாடி. கதையின் போக்கில் பசங்களைக் கவரும் விதமாக கிராமத்து நையாண்டி, நகைச்சுவைகளையும் இடையிடையே சேர்த்து சுற்றி இருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கவும்... வாய்க்குள் என்ன நுழையுதுன்னு தெரியாம வாய் பிளந்து கேட்கவும் வைப்பதில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லைன்னு சொல்லலாம். வேலு நாச்சியாரையும்... மருது சகோதர்களையும்... கட்டப்பொம்மனையும்... தீரன் சின்னமலையையும்... அழகு முத்துக் கோனையும்... தேவரையும்... இம்மானுவேலையும்... வைத்து அவர் சொல்லும் கதைகள் ஆயிரம்... வரலாற்று நாயகர்களையும் வாழும் நாயகர்களையும் நாங்கள் அறியத் தந்த கில்லாடி அவர்.

எங்க பக்கம்... அதாங்க தென் தமிழகத்துப் பக்கம் கிராமியக் கலைகளுக்கு அதிக மதிப்பிருக்கும்.  கோவில் திருவிழான்னா படாடோப பாட்டுக் கச்சேரிகள் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை...

கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம் அப்படின்னுதான் நடத்துவாங்க...  அந்த சின்ன வயசு வாழ்க்கை ஒரு கனாக்காலம் கூட இல்லை...  கலைக்காலம்ன்னு சொல்லலாம். இப்போ ஒயிலாட்டம் உயிரை விட்டு வருசமாச்சு... கரகாட்டம் கண்றாவி ஆட்டமாயி ரொம்ப நாளாச்சு... இந்த கூத்து...  அதாங்க நாடகம் மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கு...


 எங்க ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழா, ஐயனாரு குதிரையெடுப்பு, கருப்பர் கிடாப்பூசைக்கெல்லாம் கூத்துத்தாங்க... அதிலும் வள்ளி திருமணத்துகுத்தான் அதிக மவுசு... மத்ததெல்லாம் அழுக வைக்கிற கூத்தாமாம்... ‘எப்பே ஊரே கூடி சந்தோஷமா சாமி கும்பிடும்போது எதுக்கு அழுகாச்சி கூத்தெல்லாம் வச்சிக்கிட்டு...  சந்தோஷமா வள்ளி திருமணம் வைப்போமே’  என்பார்கள்.  இப்ப புதுசு புதுசா கூத்துங்க வந்திருக்கு... சாமி படம் பாக்க போயி தியேட்டர்ல ஆடுறவங்களைப் பாத்திருப்பீங்களே...

தியேட்டர்க்காரன் கூட சாம்பிராணி எல்லாம் போட்டு... ஆட விடுவானே... அப்படி போன வருசம் போட்ட மகமாயி கூத்துல கூட்டத்தை ஆட வச்சிப்பிட்டானுங்க... இப்ப எதுக்கு ராமசாமி தாத்தாவை விட்டுட்டு கூத்துக்குப் பொயிட்டேன்னுதானே நினைக்கிறீங்க... கூத்துக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குல்ல... அதான்.

என்ன தொடர்புன்னு யோசிக்காதீங்க... ராமசாமித் தாத்தா ஒரு கூத்துக் கலைஞர்... வள்ளி திருமணத்துல முருகனா...  அதாங்க ராஜபார்ட்டா நடிச்சவரு...  ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால ராமசாமி தாத்தாவோட கணீர்க்குரல் ஒலிக்காத தென்னகத்து ஊர்கள் இல்லைன்னு சொல்லலாம்.

அவருதான் வேணுமின்னு சொல்லி கூப்பிட்ட ஊரெல்லாம் உண்டு. இன்னைக்கு நம்ம தாத்தாவோட நாடகம்ன்னு எங்கண்ணனும் மத்த பசங்களும் பக்கத்து ஊர்களுக்கு சைக்கிள்ல கிளம்புவானுங்க... நானும் வாறேன்னு சொன்னா எங்கம்மா பொட்டப்புள்ள பயலுகளோட கூத்துப் பாக்க போனாத்தே நல்லாயிருக்கும்ன்னு திட்டிரும்... ஊர்ல வைக்கிற கூத்துல அவரு நடிக்க
மாட்டாரு... வேற ஆளைத்தான் கூட்டியாருவாரு.... வாறவங்க மேடையில தாத்தாவைப் பற்றி பெருமையாச் சொல்லுவாங்க.... எங்களுக்கு கதை சொல்லும் போது நாங்க கெஞ்சிக் கேட்டா  'மேயாத மான்... புள்ளி மேவாத மான்...'; அப்படின்னு கணீர்ன்னு பாடுவாரு... மைக் வைக்காமலே பக்கத்து ஊருக்கு கேக்கும்.... என்ன கம்பீரமான குரல் தெரியுமா..? அந்தக் குரல் வயசானதால
உடைஞ்சி போச்சு...


அதனால இப்ப பசங்களுக்கு கதை மட்டும்தான் சொல்வாரு... பாட்டெல்லாம் விட்டுட்டாரு... இப்பல்லாம் கரகாட்டம் மாதிரி நாடகத்துலயும் கொச்சையா பேசுறதைக் கேட்டுட்டு ‘நாடகமும் மெல்ல மெல்ல கரகாட்டம் போல ஆயிருச்சு மாப்ள... எல்லாரும் ஆபாசமா பேசுறாங்க,.. நடிக்கிறாங்க.... நல்லவேளை நானெல்லாம் இப்ப நடிக்கலை... இல்லேன்னா என்னையும் டான்ஸ்காரிகூட கட்டிப்பிடிச்சி ஆடச் சொல்லுவானுங்க’ அப்படின்னு அப்பாக்கிட்ட அவரு புலம்புறதை நான் கேட்டிருக்கிறேன்.


தாத்தாவுக்கு பாட்டி மேல ரொம்ப இஷ்டம்... பொன்னாத்தாவை பொன்னு... பொன்னுதான் கூப்பிடுவாரு... நாங்க காலேசு படிக்கும் போது பாட்டிக்கிட்ட உம் புருஷன் நாடகத்துல ஜோடி போடுற பொம்பளயில எத்தனை வள்ளிய புடுச்சி வச்சிருக்காரோ... பொன்னு... பொன்னுன்னு உன்னை ஏமாத்துறாருன்னு சொல்லி ஏத்திவிட்டா அது சிரிச்சிக்கிட்டே 'ஏம் புருசன் அவுக பேருக்கு ஏத்தமாதி ராமந்தேன்... அவுகளப் பத்தி தப்பாச் சொல்லாதிகடி சிரிக்களா... நாக்கழுகிப் போயிரும் ஆமா'  ன்னு வெள்ளந்தியாச் சிரிக்கும்.  ரெண்டு பேருக்குள்ளயும் அப்படி ஒரு அந்நியோன்யம்...

இன்னைக்கு ஆதர்ஷ தம்பதிகள்... அப்படி இப்படின்னு எல்லாம் சொல்றோம்...  தொலைக்காட்சிகள்ல இந்த வருடத்தின் சிறந்த தம்பதிகள்ன்னு பரிசெல்லாம் கொடுக்குறாங்க...

ஆனா உண்மையில அந்த ஆதர்ஷ... சிறந்த தம்பதிகள் எத்தனை வருசத்துக்கு ஆதர்ஷமா... சிறப்பா...  சேர்ந்து வாழ்றாங்கன்னு யாருக்காச்சும் தெரியுமா.... ஆனா கிராமங்கள்ல... இன்றைய கிராமமில்லை.... இருபது முப்பது வருசத்துக்கு முந்திய கிராமத்துல வளர்ந்திருந்தீங்கன்னா எத்தனை ஆதர்ஷ தம்பதிகளைப் பார்க்க முடியும் தெரியுமா..? அவ்வளவு அந்நியோன்யத்தை இப்ப பாக்க முடிவதில்லை என்றாலும் கிராமங்களில் அந்தத் தலைமுறைகளின் விளைச்சல் இன்னும் கொஞ்சம்... கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது...


சின்ன வயசுல கல்யாணம் பண்ணி... கிட்டத்தட்ட அறுபது எழுபது வருசம்... வயலிலும் வாய்க்காலிலும் வாழும் அந்த வாழ்க்கை... அந்தத் தம்பதிகள் அனுபவித்த... அனுபவிக்கிற சந்தோஷத்தை இன்றைய தலைமுறை ஐந்து வருசங்கூட அனுபவிக்க முடியலைன்னு எனக்குள்ள வருத்தம் நிரம்பிக்கிடக்கு... வாழ்க்கைய அனுபவிச்சி... அனுசரிச்சி வாழ்ந்தவங்க அவங்க... எனக்கு முன்னாடி அவ போயிறனும்... நா முன்னால பொயிட்டா பொன்னு ரொம்ப செரமப்படுவான்னு சொல்வாரு... அவரு சொன்ன மாதிரி அது முன்னால போயிருச்சு.

அவரு போயி அது இருந்திருந்தாலும் செரமந்தான் பட்டிருக்கும்.

நகரத்து மண்டபத்தை நோக்கி கிராமங்கள் ஓடாத காலத்தில் என்னோட திருமணம்... ஊரில் வீட்டின் முன்னே பெரிய கொட்டகைகள் போட்டு இரண்டு நாள் முன்னரே உறவுகள் எல்லாம் வந்து சேர, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மிக சந்தோஷமாய் நடந்த திருமணம்... திருமணம் முடிந்தும் நாலைந்து நாளைக்கு சொந்தங்கள் சூழ... என்ன ஒரு சந்தோஷமானவை தெரியுமா

அப்போதைய திருமண நாட்கள். இப்ப கிராமத்து திருமணங்கள் எல்லாம் நகரத்து
மண்டபங்களில்... முதல் நாள் மதியம் அவசரமாய் மண்டபத்துக்குள் நுழைந்து மறுநாள் மதியம் அவசரமாய் மண்டபத்தை விட்டு வெளியேறும் திருமணத்தில் உறவின் ஒட்டுதல் இல்லை.. சந்தோஷமில்லை,,, சம்பிரதாயம் மட்டுமே மிச்சமாய்... சாப்பாட்டு நேரத்தில் தலைகாட்டும் உறவுகளால் கடந்து போகும் நாளில் அப்படி என்ன சந்தோஷம் மிஞ்சிவிடும்... ஒன்றுமில்லை...

மொய் வைக்கவே பலர் வருகிறார்கள்... எனக்கொரு ஆசை என் மகளின் திருமணத்தை கிராமத்தில் பெரிய கொட்டகை போட்டு.. சொந்தத்தை எல்லாம் இரண்டு நாள் முன்னரே வரவழைத்து மிகுந்த மகிழ்வோடும் சந்தோஷதோடும் நடத்த வேண்டும் என்பதே... பாருங்க என்னோட திருமணத்தில் ஆரம்பித்து மகளோட திருமணத்துக்கு போயிட்டேன்... இப்படித்தான் மனசு அடிக்கடி டிராக்
மாறும்... சிலரின் வாழ்க்கையைப் போல.

கணவன், குடும்பம் என்ற சந்தோஷ சிறைக்குள் மாட்டிக்கொள்ளப் போவதை நினைத்து நினைத்து வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்த எனக்கு, திருமணமான ஒரு வாரத்திற்கு பின்னர் கணவனின் நடத்தையால் சிறகொடிந்தது.  தினமும் குடித்துவிட்டு வந்து அடி,உதை என மாறிய வாழ்க்கை வெறுத்துப் போய் என்னைத் தற்கொலை எண்ணத்துக்குத் தள்ள, மருந்தைக் குடித்தும் கணவன்
வீட்டாரால் காப்பாற்றப்பட்டேன்....  ‘படிக்கும் போது எவங்கூட பழகுனாளோ இங்க வந்து மருந்த குடிச்சி எங்க பேரை கெடுக்கப் பாத்துட்டா...  நல்லவேளை கருப்பன் இவளக் காப்பாத்தி எங்களை ஊரு வாயில இருந்து தப்ப வச்சிட்டான்’ என்ற அந்த வீட்டாரின் பேச்சும்... ‘என்னைவிட அவன் உனக்கு உயிராடி’ என்ற அவரின் வார்த்தைகளும் என்னை அம்மா வீட்டுக்கு வர வைக்க, திரும்பிப்
போக முடியாதுன்னு சொல்லி அங்கயே தங்கிட்டேன்.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... ஒரு மதிய வேளை... சாப்பிட்டு விட்டு பழைய ராணிப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு நிலைப்படியில் சாய்ந்து அமர்ந்தபோது ராமசாமி தாத்தா வாசலில் நின்று என்னைக் கூப்பிட்டார். எழுந்து போய் என்னன்னு கேட்க, வா தாயின்னு கோவிலுக்கு அருகிலிருக்கும் வேப்ப மரத்தடிக்கு கூட்டிப் போய் ஒரு வேரில் அமர்ந்துகொண்டு என்னைப்
பார்த்தார்.


நானும் அவருக்குப் பக்கத்தில் சற்றே தணிந்திருந்த வேரில் அமர்ந்து அவர் முழங்காலில் தலை சாய்த்துக் கொள்ள, என் தலையைத் தடவியபடி... ‘பொட்டப்புள்ள புருஷன் வீட்டுல இருக்கதுதான் தாயி அழகு... இங்க இருந்தா உனக்கு மட்டுமில்ல... உங்க அப்பனாத்தாவுக்கும் கெட்ட பேர்தான் தாயி' என்றார்.


'அதுக்காக குடிகாரன் கூட வாழச் சொல்றீங்களா தாத்தா....' என்றேன் கோபமாய்.


'இங்க பாரு தாயி... இன்னைக்கு எத்தனையோ பொம்பளைங்க கூத்தியா
வச்சிருவனோட வாழலையா... உம் புருசன் குடிக்கத்தானே செய்யிறான்... திருத்திடலாந் தாயி... ஒரு புள்ளய பெத்து கையில கொடுத்துட்டா அவனே திருந்திருவான்...' என்றார்.


'அட போங்க தாத்தா... குடிகாரனோட வாழச் சொல்றதுமில்லாம... புள்ள வேற பெத்துக்கச் சொல்றீங்க...  என்னால அவனோட வாழ முடியாது...' என்றேன் தீர்மானமாக.

'இங்க பாரு தாயி... குடிகாரனோ... கோபக்காரனோ அவனைத் திருத்துற சூட்சமம் பொம்பளங்க கையிலதான் இருக்கு... எங்கப்பாக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் இல்ல... எல்லா பழக்கமும் இருந்துச்சு... ஆட்டுக் கெட போடப்போற எடத்துல எல்லாம் எவளோடவாச்சும் தொடுப்பு வச்சிப்பாரு... எப்பவும் குடி... குடியின்னா இப்ப மாதிரி பாட்டில் வாங்கி இல்ல... காச்சுற எடத்துல போயி குடிக்கிறது.... சுருட்டு... போயெல... இப்படி எதுவும் பாக்கியிலை... ஆனா அந்த மனுசனும்
சாவும் போது எல்லாக் கெட்ட பழக்கத்தையும் விட்டொழிச்சிட்டு ஊருக்கு மதிப்பும் மரியாதையோடவுந்தான் செத்தாரு... காரணம் யாரு... எங்காத்தா... பதிமூணு வயசுல வாக்கப்பட்டு வந்தவ.... எல்லாம் பொறுத்து அந்தாளுக்கு பதினோரு புள்ளயப் பெத்து... அவர மனுசனாக்கி அவ வாவரசியாப் போய்ச் சேந்தா... அவருக்கு எல்லாமே எங்காத்தான்னு இருந்ததால... எங்காத்தா
போனதும் எங்கப்பாரு நடை பிணமாயிட்டாரு... அன்னைக்கு அவ ஒன்னய மாதிரி பொசுக்குன்னு கெளம்பி போயிருந்தா... யோசி தாயி..'  என்று அவர் சொன்னபோது  

'அன்னைக்குப் படிப்பறிவு இல்ல... இன்னைக்கு எங்கிட்ட படிப்பு இருக்கு... அப்புறம் எதுக்கு குடிகாரனோட வாழணும்'  என்றேன் வேகமாய் கோபத்தோடு.


'ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது தாயி' ன்னு சிரிச்சார்.

கொஞ்ச நேரத்துக்கு ரெண்டு பேரும் எதுவும் பேசலை.... பின்னர் அவர் தான் ஆரம்பித்தார்... ' இங்க பாரு தாயி... புராணங்களும் இதிகாசங்களும் என்ன சொல்லியிருக்கு சொல்லு பாப்போம்' என்றவரை முழங்காலில் இருந்து தலை தூக்கி ஏறிட்டுப் பார்க்க, சிரித்தபடி 'அந்தக் காலத்துல அரசருங்க பதி விரதனாவா இருந்தாங்க... எத்தனை மனைவிகள்... அவங்க மது, மாதுன்னு இருந்தாங்க... அவங்களை கட்டிக்கிட்ட பொண்ணுங்க ஏத்துக்காமய எல்லாரும் ஒரே
அரண்மனையில வாழ்ந்தாக... சொல்லு... காந்தர்வ மணங்கிறது அவங்களுக்கு மட்டுமான சட்டமாயில்லையா அந்தக் காலத்துல.... மாதவி பின்னால போன கோவலனை தொலையட்டும்ன்னு விடாம, அவனோட கஷ்டத்துல தொண நின்னு அவனுக்காக மதுரய எரிக்கலையா கண்ணகி... கணவனை தேவதாசி வீட்டுக்கு கூடையில தூக்கிட்டுப் போகலையா நளாயினி... சூதால் நாடிழந்த நளனுடன் காடுமேடெல்லாம் நடந்து திரியலையா தமயந்தி... பொய்
பேசமாட்டேன் என நாடு நகரத்தைத் துறந்து மனைவி, மகனைத் துறந்து சுடுகாட்டில் பிணம் எரிப்பவனாக வாழ்ந்த அரிச்சந்திரனுடன் சந்திரமுகி மறுபடியும் வாழலையா...' என என் எண்ணத்தை மாற்றும் விதமாக பேசினார்.


'கதை எல்லாம் கேட்க நல்லாயிருக்கும் தாத்தா... வாழ்க்கைக்கு உதவாது' என்றதும் சிரித்தபடி ‘அசடு’ என்றார்.

வேப்ப மர உச்சியை பார்த்து ‘மழ வரும் போல இருக்கு... வரத்தான் மாட்டேங்குது... நல்ல மழயாப் பேஞ்சா ஒரு பத்து நாளக்கி மட தொறக்க வேண்டாம்’ என்றவர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.


'சரி அரசர்களை எடுத்துக்க வேண்டாம்... நம்ம சாமிகளை எடுத்துக்க... நாம வணங்குற தெய்வத்துல பாதிக்கு ரெண்டு பொண்டாட்டிக்கு மேல... கிருஷ்ணன் முதல்ல கட்டுனது ருக்மணி, அப்புறம் பாமா.. ஆனா யாரை முதல்ல சொல்றோம் பாமாவை... அங்க ருக்மணி விட்டுக் கொடுத்தாளா இல்லையா..., அதை விடு நான் முருகனா வேசம் போடுறேனே முருகனுக்கு எத்தனை... ரெண்டு தானே... அங்க தெய்வானை விட்டுக் கொடுத்ததால இரண்டாவதா வந்த வள்ளி முதலிடம் பெற்றாளா இல்லையா...'  எனக் கேட்டார். நான் எதுவும் பேசாமல் இருக்க அவரே
மீண்டும் தொடர்ந்தார்.


'நம்ம ஊர்ல தேனப்பன் இருந்தானே ஞாபகமிருக்கா..?'  என்றார்.


நான் 'ம்...'  என தலையாட்ட,


'அவன் எப்படி விடிஞ்சா எந்திரிச்சாத் தண்ணிதான்.... அதுக்காக அவன் பொண்டாட்டி அவன விட்டுட்டா போனா... இல்லையே.... எட்டுப் புள்ளகள பெத்து படிக்க வச்சி இன்னைக்கு அதுக எல்லாம் நல்லாயிருக்குகளா இல்லயா... எனக்குத் தெரிஞ்சி அவனோட பயலுக ஒருத்தனுக்கு கூட தண்ணியடிக்கிற பழக்கம் இல்லை தெரியுமா.... ஆனா தேனப்பன் சாகுற வரைக்கும் தண்ணிதானே அடிச்சான்... திருந்தவே இல்லை...  அப்படிப்பட்டவனுக்கிட்ட அவம் பொண்டாட்டி
என்ன சொகத்தை அனுபவிச்சிருக்கும்ன்னு நினைக்கிறே... ஒண்ணுமில்ல... இருந்தாலும் கண்ணக் கசக்கிக்கிட்டு ஆத்தா வீட்டுக்குப் போயி அவங்களை கஷ்டப்படுத்தல...


எல்லாரும் ராமன் மாதிரி புருசன் வேணுமின்னு நினைக்கிறது தப்பில்லை.... ஆனா அந்த ராமன் கூட சீதையோட கற்பை நிரூபிக்க தீக்குளிக்கத்தானே சொன்னான்... நாம வேணுமின்னா ஊருக்கு அவ உத்தமின்னு
நிரூபிக்கத்தான் சொன்னான்னு இன்னைக்குச் சொல்லலாம்... ஆனா அப்படி நிரூபிக்க என்ன வந்துச்சுங்கிறேன்... அவன் மனசுக்கு அவ சுத்தமானவன்னு தெரிஞ்சாப் பத்தாதா... என்னையக் கேட்ட ராமனைவிட ராவணனன் நல்லவன்னு சொல்லுவேன்... ஆசைப்பட்டு தூக்கிட்டுப் போனாலும் அவ சம்மதம் இல்லாம தொட மாட்டேன்னு இருந்தவன் அவன்... இப்பக்கூட குடி கூத்தியான்னு இருக்கவனுக பொண்டாட்டி மேல வச்சிருக்கிற பாசத்துல பாதிகூட ராமனா
இருக்கவனுக்கிட்ட... நடிக்கிறவனுக்கிட்ட இல்லை தெரியுமா..?


அன்னைக்கு தன்னை தீயில இறங்கச் சொன்னப்போ, நீயும் காட்டுக்குள்ள திரிஞ்சவன்தானே... நீயும் தீயில் இறங்கி நிரூபின்னு சீதை சொல்லியிருந்தா.... ஆனா அவ சொல்லலை... அவ மனசுக்குத் தெரியும்... இங்க ராமனைவிட சீதைதான் சிறந்தவ... ஆமா அதனாலதான் தன்னோட கற்பை நிரூபிக்க தீயில் இறங்கச் சொன்ன ராமனை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை தாயி... புரிஞ்சிக்க... உம் புருஷன் வேறு பொண்ணத் தேடிப் போகல... குடிக்கிறான்... அடிக்கிறான்... அவ்வளவுதானே... அவனை அன்பால திருத்து... சீதையே ராமனை மன்னிக்கும்போது நீ மன்னிச்சு சேர்ந்து வாழ்றது தப்பில்லை தாயி.. நீ நல்லா இருக்கணும் தாயி' என்றவர் ஆதரவாய் தலையில் தடவினார்.

அதன் பின்னான நாட்களில் மீண்டும் மாமியார் வீடு சென்று சில வருடத்தில் தனிக்குடித்தனம் போய்... இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி... ராமசாமி தாத்தா சொன்னது போல் விட்டுக் கொடுத்து வாழ்ந்து என்னவரை மெல்லத் திருத்தி இன்றைக்கு மதுரையில் ஒரு தொழிலதிபராய் உயர வைத்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆமா எதுக்கு இப்ப இதெல்லாம்ன்னு தோணுதுல்ல... நேற்றிரவு அம்மா போன் பண்ணி  'இராமசாமி தாத்தாவுக்கு ரொம்ப முடியலை... தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு' ன்னு சொன்னாங்க... அதான் காலையிலயே கிளம்பிட்டேன்.... அவரோட நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை அழுது தீர்க்க முடியாமல் உங்ககிட்ட கொட்டிட்டேன்.  எப்படிப்பட்ட மனிதர் தெரியுமா அவர்...


வாழ்க்கையில் மன்னிப்பதால் கெட்டுப் போவதில்லை... சீதையே இராமனை மன்னிக்கும் போது நாம் மற்றவரை மன்னிப்பதில் என்ன தவறு என்ற உயர்ந்த கருத்தை என்னுள் விதைத்தவர்.... எல்லாம் அறிந்த படிக்காத மேதை... இன்றோ... நாளையோ... நிறைவான வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறார். எங்கள் ஊரில் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஜீவன் அவர்... என்றும் எல்லாருடைய மனதிலும் அவர் இருப்பார்.

'முருகா... அந்த போர்டுக்குப் பக்கத்துல லெப்ட்ல திரும்பணும்...'  என டிரைவரிடம் சொல்லியபடி கண்ணாடி வழி வெளியே பார்த்தேன். ஏதோ ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் கம்பராமாயண சொற்பொழிவு நடப்பதாக மாடு பாதி கிழித்த போஸ்டர் பறை சாற்றிக் கொண்டிருந்தது...  அதில் பேசும் தலைப்பாக போட்டிருந்த வரிகளைப் பார்த்து எனக்குள் ஆச்சர்யம்.

கார் மெல்ல சரளை ரோட்டில் திரும்பியது. என்ன தலைப்புன்னு உங்ககிட்ட சொல்லலை பாருங்க... என்னோட டைரியின் முதல் பக்கத்தை எந்த வரி அலங்கரிக்குமோ...  ராமசாமி தாத்தா எந்த வரியைச் சொல்லி என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தாரோ அதே வரிகள்...

 
ஆம் அது 'சீதை ராமனை மன்னித்துவிட்டாள்'.

                                                                                                                   
                                                                                                                                            - 'பரிவை'  சே.குமார்.

30 கருத்துகள்:

 1. அற்புதம் நண்பரே மனதை உலுக்கி விட்டீர்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. ராசாமி தாத்தா மனதில் நிறைந்து விட்டார்.

  கிராமத்தில் மட்டும் இல்லை இப்போது நகரத்திலும் குடிகார கணவனை பொறுத்துக் கொள்ளும் மனைவிகளும் இருக்கிறார்கள்.

  'அன்னைக்குப் படிப்பறிவு இல்ல... இன்னைக்கு எங்கிட்ட படிப்பு இருக்கு... அப்புறம் எதுக்கு குடிகாரனோட வாழணும்'//
    என்று கேட்கும் பெண்களும் இருக்கிறார்கள்.
  கதை தாத்தா மூலம் வாழ்ந்த வாழுகின்றவர்களின் வாழ்க்கையை அழகாய் எடுத்துக் காட்டி விட்டார்.

  அம்மன் கோவில் திருவிழாவில் கம்பராமாயண சொற்பொழிவு நடப்பதாக மாடு பாதி கிழித்த போஸ்டர் பறை சாற்றிக் கொண்டிருந்தது...  அதில் பேசும் தலைப்பாக போட்டிருந்த வரிகளைப் பார்த்து எனக்குள் ஆச்சர்யம்.//

  அருமை.
  குமாருக்கு வாழ்த்துக்கள்.
  ஸ்ரீராமுக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 3. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை
  அருமையான கதை
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 4. குமார் வாழ்த்துகள்! நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்! அருமை...எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி இப்படி எல்லோரையும் ஊக்கப்படுத்தி கதைகளை வெளியிடுவதற்கு...

  கீதா: வழக்கம் போல கிராமீய மணம் தவழும் நல்ல கதை உங்களிடமிருந்து. அதுவும் தாத்தா மனதில் நிற்கிறார். எத்தனை பெண்கள் இறுதிவரை குடிகாரக் கணவனிடம் மாட்டிக் கொண்டு தினமும் மன்னித்துக் கொண்டே வாழ்ந்து வருகிறார்கள்....

  இறுதியில் சொன்ன விதமும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள் குமார்!!!

  பதிலளிநீக்கு
 5. கதை முழுவதும் வியாபித்துள்ள ‘ராமசாமி தாத்தா’ நம் மனதில் பதிந்து போய் விட்டார். அவரைப்பற்றிய அனைத்து வர்ணனைகளிலும் கிராமிய மணம் கமழ்கிறது.

  -=-=-=-

  நான் மிகவும் ரஸித்த ஒருசில வரிகள்:

  (1) ஏதோ ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் கம்பராமாயண சொற்பொழிவு நடப்பதாக மாடு பாதி கிழித்த போஸ்டர் பறை சாற்றிக் கொண்டிருந்தது...

  (2) ‘அட வெளிய தெருவ போக முடியலைய்யா... கக்கூஸ்ல இருந்தா பொட்டக்காட்டுல இருக்க மாதிரி வருதில்லைய்யா’ என்பார்.


  -=-=-=-

  மிகச்சிறப்பான இந்தப் பாத்திரப்படைப்பினை செதுக்கித் தந்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் குமார் அவர்களின் கை வண்ணம் அலாதியானது..

  அவரது படைப்புகளில் மேலும் ஒரு முத்து..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 7. //படிக்கும் போது எவங்கூட பழகுனாளோ இங்க வந்து மருந்த குடிச்சி எங்க பேரை கெடுக்கப் பாத்துட்டா...  நல்லவேளை கருப்பன் இவளக் காப்பாத்தி எங்களை ஊரு வாயில இருந்து தப்ப வச்சிட்டான்’ என்ற அந்த வீட்டாரின் பேச்சும்... ‘என்னைவிட அவன் உனக்கு உயிராடி’ என்ற அவரின் வார்த்தைகளும் என்னை அம்மா வீட்டுக்கு வர வைக்க, திரும்பிப்
  போக முடியாதுன்னு சொல்லி அங்கயே தங்கிட்டேன்.//

  இந்த வார்த்தைகளை மன்னித்து தாத்தாவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து வந்த சீதையை பாராட்ட வேண்டும் தான்.

  வார்த்தைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கணவனின் செயல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று கூரும் பெண்கள் எவ்வளவு பேர் இப்போது?
  சகிப்புதனமை, விட்டுக் கொடுக்கும் பழக்கம் எல்லாம் ஒவ்வொருவருக்கு மாறுபடும்.
  அன்பு இருந்தால் எதையும் சகித்துக்கொள்ளலாம் அன்பில்லா வாழ்க்கை வாழ்க்கை அல்ல.


  பதிலளிநீக்கு
 8. கதை வெகு நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது சந்தேகமில்லை ஆனால் சொல்ல வந்த விஷயம் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது எல்லா ஆண்களும் எப்படி வேண்டுமானாலும் குடித்துச் சீரழியலாம் அவர்களைத் திருத்தி மன்னிப்பது மனைவியரின் கடமையா என்னால் ஏற்க முடியவில்லை. இப்படித்தான் பழங்கதைகளைப் பேசி இளையோர்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர் என்று தோன்று கிறது நன்கு சொன்ன கதைக்கு குமாருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க. ரொம்ப நேர்த்தியும்கூட. ராமசாமி தாத்தா மாதிரி எத்தனையோ படிக்காத ஆனால் உலகம் தெரிந்த அனுபவசாலிகளால் எத்தனையோ வீடுகளில் விளக்கேற்றப்பட்டிருக்கிறது. கதையை ரொம்ப நல்லா கொண்டுபோயிருக்கீங்க. பெண்களுக்கு ஆண் துணையும் ஆதரவும் அவர்கள் ஆயுளுக்கும் தேவைதான், ஆனால் ஒரு வீடு விளங்குவது பெண்களால்தான் என்று நல்லாச் சொல்லியிருக்கீங்க. மூத்தோர் சொல் அமிர்தம். நம் பாரம்பர்யத்தைவிட்டு விலகாத கதை. நல்ல தெரிவு.

  பதிலளிநீக்கு
 10. நிஜமான கதை அருமை. கதைகை விட அதுக்குள் சொன்ன சம்பவங்கள்தான் அதிகம் மனதில் பதிந்துவிட்டது.. எப்பவுமே கிராமியப் பாடல்கள், கிராமப் படங்கள் மனதில் இலகுவில் இடம் பிடிக்கும் ... அப்படித்தான் இக்கதையும் இடம்பிடித்துவிட்டது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. @நெல்லைத் தமிழன்//// பெண்களுக்கு ஆண் துணையும் ஆதரவும் அவர்கள் ஆயுளுக்கும் தேவைதான், ////

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்போல, கிடைச்ச சைக்கிள் ஹப் இல் பிளேன் ஓட்டக் கூடாது:)

  பதிலளிநீக்கு
 12. ஜீ எம் பி ஐயா மாதிரி எனக்கும் அந்த இடத்தில் பொயிங்கோணும் என்றே தோணிச்சுது, சரி மொபைலில் பொயிங்குவது கஸ்டம்.... சீதையைப்போல......... பேசாமல் போயிடுவோம் என விட்டிட்டேன்:).

  பதிலளிநீக்கு
 13. டிஏஎஸ் பட்டணம் பொடி போல நச்சென்று இருந்தது.

  பதிலளிநீக்கு
 14. கதை அருமை.ஆனால் இன்றைய சீதைகள் குடியையயும்,அடி உதையும் பட்டுக்கொண்டு ராமனை மன்னிக்கத் தயாராக இல்லை.அவசியமும் அவர்க்கில்லை

  பதிலளிநீக்கு
 15. பழைய பஞ்சாங்கத்துக்கு ராமசாமி என்பதற்கு பதிலாய் வேறு பெயரையாவது வைத்திருக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 16. நல்ல கதை. பழைய நாட்களில் அனுஸரித்துப்போகும்படிதான் புத்தி சொல்லி வளர்க்கப்பட்டார்கள். எல்லோருமே குடிகாரர்கள் இல்லை. வாய்த்து விட்டாலும் ஒரு மனைவியால்தான் அந்த குடும்பத்தை ஸஹித்து நடத்தி முன்னக்குக் கொண்டுவர முடியும். தப்பு செய்பவர்களையும் திருத்தவும்,குடும்பத்தை நடத்தவும் பெண்களால் முடியும் என்பதுதான் கதையின் சாரம். இதை ராமஸாமி தாத்தா போன்றவர்களால்தான் பிறருக்குச் சொல்ல முடியும். அழகாகப் பின்னியிருக்கிரார் ஆசிரியர். அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. கிராமிய மணம் கமழும் அழகிய கதை .ராமசாமி தாத்தா மனதில் நிற்கிறார் .....வாழ்த்துக்கள் குமார் .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் ..

  பதிலளிநீக்கு
 18. பெண்களுக்கு ஆண் துணையும் ஆதரவும் அவர்கள் ஆயுளுக்கும் தேவைதான், // நெல்லைத் தமிழன் என்னப்பா நீங்களுமா யதார்த்தம் தெரியாமல் சொல்லிவீட்டிர்கள்!!!! ஹஹ்ஹ் கதையிலும் கூட அந்தப் பெண் அட்ஜஸ்ட் செய்து போய் அவனைத் திருத்தி தொழிலதிபர் ஆகிறான் என்றால் அந்த ஆணிற்கு அந்தப் பெண் தானே உறுதுணையாக இருக்கிறால். யதார்த்தத்திலும் இதுதான் பல குடும்பங்களில். பெரும்பான்மையான குடும்பங்களில். ஆனால் அதே சமயம் பெண்கள் தவறு செய்யும் போது அட்ஜஸ்ட் செய்து வாழும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் சதவிகிதம் குறைவுதான்.. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதுதான் உலக நியதி இயற்கையிலும் கூட. என்றாலும் என் தனிப்பட்டக் கருத்து அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்...இருவருமே சரி பாதி ஒருவருக்கொருவர் துணையாய் நிற்பதுதானே நல்லது இல்லையோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. குமாரின் எழுத்து எளிமையானது. கதைக்கோ அதுவே அலங்காரம்.
  மனசை கொஞ்சநாட்கள் சுற்றி வருவார் இந்த தாத்தா.

  பதிலளிநீக்கு
 20. கதை அருமை!மேலும் பல எழுதலாமே! வாழ்த்துகள்! இருவருக்கும்!

  பதிலளிநீக்கு
 21. அருமையான கிராமிய நடையில் கதையைச் செதுக்கி பதிவிட்டமைக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 22. அருமையான கதை நடை

  இராமர்களைச் சீதைகள் மன்னித்தாலும்
  சீதைகளை இராமர்கள் மன்னிப்பார்களா?

  பதிலளிநீக்கு
 23. என்னைப் பொறுத்தவரை பெண்களின் அடாவடித்தனத்தையும், முரட்டுப் போக்கையும் அனுசரித்துச் செல்லும் ஆண்களையே சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. என்றாலும் ஒரு வீடு ஒழுங்காக இருக்க வேண்டுமானால் ஒரு தம்பதியரின் வாழ்க்கை நன்றாகச் செல்ல வேண்டுமெனில் பெண் சரியாக இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  பதிலளிநீக்கு
 24. எங்க குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணின் கணவன் திடீரெனக் குடிக்க ஆரம்பித்துக் குடும்பத்தைக் கவனிப்பதில்லை. காவல்துறையின் கண்காணிப்பில் அவரைக் கூட்டிச் செல்லும்படி ஆகி விட்டது. கணவனை மீட்க, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப என்று அந்தப் பெண் தினமும் வாழ்க்கையில் போராடி வருகிறாள். திருமணம் ஆகிப் பனிரண்டு வருடங்கள் நன்றாக இருந்தவர்கள் இப்போது கஷ்டப்படுகின்றனர். அந்தப் பெண்ணால் தன் வேலையைக் கூடத் தொடரமுடியவில்லை. என்றாலும் கணவனை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறாள்.

  பதிலளிநீக்கு
 25. தலைப்பிற்கேற்ற அருமையான கதை
  கேட்டு வாங்கிப் போட்டமைக்கு
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. வரிக்கு வரி படிக்கத் தூண்டும் நடையும் போக்கும். பாராட்டுக்கள் குமார்.

  (என்ன சீதையோ என்ன ராமனோ போங்க.. அதுக்காக ராமனோட மண்டையைப் பிளக்கனும்னு சொல்லலே.. இருந்தாலும்..)

  பதிலளிநீக்கு
 27. கீதா சாம்பசிவம்: //என்னைப் பொறுத்தவரை பெண்களின் அடாவடித்தனத்தையும், முரட்டுப் போக்கையும் அனுசரித்துச் செல்லும் ஆண்களையே சமீப காலங்களில் பார்க்க முடிகிறது.

  நானும் இதைப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. அப்பாதுரை! ஆமாம், அதுவும் எங்கள் நெருங்கிய உறவினர், நண்பர்கள் வட்டாரத்தில் நிறையவே பார்க்கிறேன். இப்போது ஆண்களே பெரும்பாலும் பொறுமை காக்கின்றனர் என்று அடித்துச் சொல்லுவேன்.

  பதிலளிநீக்கு
 29. இரண்டு நாட்களாகக் க்ரோமிலிருந்து எங்கள் ப்ளாக் வலைப்பக்கமே திறக்காமல் இருந்தது. இன்னிக்கு இப்போத் திறந்திருக்கு! பார்ப்போம்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!