செவ்வாய், 16 மே, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ரெங்கசுப்ரமணி -


     சென்ற மாதம் தனது முதல் கதையையே 'எங்கள் ப்ளாக்'கில்தான் வெளியிடக் கொடுக்கிறேன்.  எனது தளத்தில் கூட வெளியிட்டதில்லை என்று சொல்லி கதை அனுப்பியிருந்த நண்பர் திரு ரெங்கசுப்ரமணி இப்போது மீண்டும் இந்த சீதைக் கதைத் தொடரில் தனது முத்திரையைப் பதிக்கிறார்.


=========================================================


இந்த சீதையும்.. 
ரெங்கசுப்ரமணி


அதிகாலை நேரம், அருணன் மெதுவாக எட்டிப்பார்த்து, சூரியனின் வரவை அறிவித்துக் கொண்டிருந்தான். அயோத்தியின் கோட்டைக்காவலர் தலைவன் பரபரப்புடன் காவலர்களிடம் உத்தரவுகளிட்டான். கோட்டை மதில்மேல் கொடியொன்று மெதுவாக ஏற ஆரம்பித்தது. முக்கியமானவர்கள் வருகையை அறிவிக்கும் பெரிய முரசு  முழங்கியது. கோட்டைக்குள் செல்ல வேண்டி காத்திருந்த மக்கள் அனைவரும் விலக்கப்பட்டு வழியுண்டாக்கப்பட்டது. மரம் முறியும் பெரும் சத்ததுடன் கோட்டை கதவுகள் திறந்தன. 
தூரத்தில் வேகு வேகமாக ஒரு ரதம் வந்து கொண்டிருந்தது மக்கள் கண்ணில் பட்டது. கொடியை பார்த்துவிட்டு அனைவரும் வருவது இளவரவசர் லக்ஷ்மணன் என்று தெரிந்து கொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். இரட்டை குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தை லக்ஷ்மணனே செலுத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தான். ரதத்தை கண்ட காவலர் தலைவன் முகத்தில் குழப்பம். ரதம் கோட்டை பெருவாயிலை கடந்து முற்றத்தில் வந்து நின்றது. காவலர்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பினர். லக்ஷ்மணனின் கோபக்கண்களால் அதன் வேகம் குறைந்தது. காவலர் தலைவன் அருகில் வந்து "அரசர் உங்களை நேரடியாக அவரது அலுவல் அரண்மனைக்கு வரும்படி பணித்தார்" என்று கூறி தலைவணங்கினான். தலையை அசைத்த லக்ஷ்மணனின் ரதம் புறப்பட்டது. 
"இளவரசர் மட்டும் தனியாக வந்திருக்கின்றார், அரசி வரவில்லை", "இவர் முகமும் களையிழந்து போயிருக்கின்றது" என்று காவலர்களிடையே பேச்சுக்கள் மெள்ள கிளம்பின. "வெற்று பேச்சுக்கள் வேண்டாம், தண்டனைக்குள்ளாவீர்கள்" என்று காவலர்தலைவரின் குரல் ஒலித்தது, பேச்சுக்கள் கிசுப்பாக மாறி கரைந்தன. இருந்தும் அவர்களின் கண்கள் அதிகமாகவே பேசிக்கொண்டன.
கோட்டையிலிருந்து கிளம்பிய ரதம் நேராக அரசரின் அரண்மனைக்கு சென்றது. தனது வருகையை அறிவிக்க முயன்ற அணுக்கனை பொருட்படுத்தாது நேராக உள்ளே சென்றான் லக்ஷ்மணன். ராமன் அங்கு உப்பரிகையில் அமர்ந்து கொண்டிருந்தான். சாதரண ஆடை. ராமனின் கண்களை கண்ட போது ராமன் இரவு முழுவதும் உறங்கவில்லை என்பது தெரிந்தது. 
"நீங்கள் சொன்னபடி கங்கை கரையில் அரசியை விட்டு விட்டு வந்துவிட்டேன்" என்று உணர்சியற்ற குரலில் சொல்லிவிட்டு திரும்பினான்.
"ஏதேனும் சொன்னாளா" என்றான் ராமன்.
"தங்களிடம் சொல்ல ஏதுமில்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நீங்கினான். 
பெருமூச்சு விட்ட ராமன், ஒரு அரசனாக தன் நாளை தொடங்க வெளியே சென்றான்.
அங்கிருந்து தோட்டத்திற்கு சென்ற லக்ஷ்மணன், தோட்டத்தின் வழியே தன்னுடைய அரண்மனையை அடைந்தான். அவனை அவ்வழியில் எதிர்பாராத பணியாட்கள் பதறி விலகனார்கள். நேராக தன்னறைக்கு சென்று அங்கிருந்த உப்பரிகையில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, தூரத்தில் தெரிந்த கோட்டையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.மெல்ல மெல்ல சூரியன் எட்டிப்பார்த்தான்.
யாரோ தோள்களை தொட்ட உணர்வில் திரும்பினான் லக்ஷ்மணன். ஊர்மிளை. கோபம் கொந்தளித்து கொண்டிருந்த முகம்.
"இதைத்தான் நீங்களும் அரசரான உங்கள் தமையனாரும் ரகசியமாக முடிவு செய்தீர்களா?" என்றாள் ஊர்மிளை.
லக்ஷ்மணனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை.
"பேசுங்கள், எப்படி அக்காவை காட்டில் விட்டு விட்டு வர முடிந்தது, எப்படி நீங்கள் இதை அனுமதித்தீர்கள்"
"அவர் வார்த்தையை மீறி என் மனம் செயல்படாது என்பது உனக்கு தெரியாதா? தெரிந்தும் என்னை ஏன் துன்பப்படுத்துகின்றாய், அவர் அரசராக எடுத்த முடிவு, கணவனாக அவர் படும் வேதனை சொல்ல முடியாதது, இரவு முழுவது அவர் தூங்கவில்லை" என்றான்.
"அவர் அரசர் என்றால் அவள் எங்களின் சகோதரி, முதல் முறை காட்டிற்கு அவள் சென்ற போதே நான் இங்கு அரண்மனையில் தூக்கமின்றி தவித்தேன், இருந்தும் நீங்களும், அரசரும் துணைக்கு இருப்பீர்கள் என்று நம்பினேன். அதையும் மீறி அவள் துன்பத்தை அனுபவித்தாள். இப்போது யாருமின்றி அனாதைப் போல தனித்து விடப்பட்டிருக்கின்றாள்"
"தனித்து இல்லை, இங்கிருந்தே துணையுடனே சென்றிருக்கின்றார்கள் அரசி"
"என்ன?" புரியாமல் விழித்தாள், பின்பு அறிந்து கொண்டு ஒர் அடி பின் வைத்தாள் "தெரிந்துமா அவளை விட்டு விட்டு வந்தீர்கள்"
"ஆணையிட்டால் அடிபணிவது மட்டுமே என் பணி"
"நீங்கள் எப்படி உங்கள் தமையனார் மீது பக்தி வைத்திருக்கின்றீர்களோ அதே பக்தி எனக்கு தமக்கை மீது உண்டு. என் சகோதரி மீது சந்தேகப்பட்டு அவள காட்டிற்கு அனுப்பியதற்கு இந்த நாட்டை கொளுத்தினால் கூட என் கோபம் ஆறாது. ஆனால் அவளை உத்தேசித்தே நான் அமைதி காக்கின்றேன், இல்லை " என்று கொந்தளித்தவளை லக்ஷ்மணன் புதிதாக பார்த்தான். 
"சந்தேகம் தமையனுக்கல்ல"
"முட்டாள் குடிகள் சந்தேகப்பட்டால் அவனை கழுவிலேற்றியிருக்க வேண்டும், அதை விடுத்து இது என்ன"
"ராம ராஜ்ஜியத்தில் எதுவும் தவறாது. அரசராக அவர் எடுக்கும் முடிவுகள் எதுவும் தவறாக இருக்காது என்று முழுவதும் நம்புகின்றேன் "
"வாருங்கள் உடனே, நான் அவளைப் பார்க்க வேண்டும்"
"அது முடியாது, தேவி அங்கிருந்து வால்மீகி ஆசிரமத்திற்கு சென்றிருப்பாள்"
வால்மீகி முனிவர் தன் முன்பு அமர்ந்திருந்த சீதையை கனிவுடன் பார்த்தார். ஓரத்தில் வைத்திருந்த ஏடுகளைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.
"தாயே நீ இங்கு தங்கிக்கொள்ளலாம், உனக்கு சகல வசதிகளும் செய்துதர நான் என் சீடர்களை பணிக்கின்றேன்" என்றார்.
சீதையின் கண்களில் கண்ணீர். "எதற்கு இந்த துன்பம் குருதேவா, காட்டில் இருந்த காலத்தில் கூட மிகவும் சந்தோஷமாக இருந்தோம், ஆனால் இன்று அவர் செய்த செயல் ஒரு அரசியாக ஏற்று கொள்ள வைத்தாலும் ஒரு பெண்ணாக மிகவும் துன்பப்படுத்துகின்றது"
வால்மீகி முனிவர் ஏதும் பேசவில்லை. தன் அருகிலிருந்த ஏட்டுக்கட்டை எடுத்து சீதையிடம் தந்தார்.
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாச்வதீஸ் ஸமா:
யத் க்ரௌஞ்ச மிதுனாதேக மவதீ: காம மோஹிதம்.    
          
படிக்க படிக்க கண்ணீர் குறைய ஆரம்பித்தது. மெதுவாக முகம் மலர ஆரம்பித்து படித்து கொண்டே வந்தாள். மீண்டும் முகம் மாறி கண்ணீர் பெருக ஆரம்பித்தது.
"குருதேவா, இதில் வரும் ராமனும் சீதையை காட்டிற்கு அனுப்புகின்றாரே" என்றாள் சீதை.
"என்ன செய்வது குழந்தை, அதுதான் விதி, அனைத்து ராமாயணங்களிலும் ராமன் சீதையை காட்டிற்கு அனுப்புவதுதான் நடக்கின்றது, சீதை ராமனை புரிந்து கொண்டு மன்னிப்பதும்தான் நடந்திருக்கின்றது. நீ மட்டும் விதிவிலக்காக முடியுமா" என்றார் வால்மீகி.
"இதுதான் வழக்கமா" என்று பெருமூச்சு விட்ட இந்த சீதை ராமனை மன்னித்தாள்.

33 கருத்துகள்:

 1. புராண இதிகாச நிகழ்ச்சிகள் சிலவற்றை சற்றே கற்பனை கலந்து சொல்லியுள்ள விதம் அருமை.

  உதாரணம்: ’மரம் முறியும் பெரும் சத்ததுடன் கோட்டை கதவுகள் திறந்தன.’ .... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. வேறு கோணத்தில் நன்றாகத்தான் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 3. கதை நல்லாத்தான் இருக்கு. நல்ல நடை, ஆனால் சொன்னமுடிவுக்கு ஏற்றமாதிரி ராமாயணமே கதையாக எழுதப்பட்ட மூன்றாவது கதை இது. வாழ்த்துக்கள் ரெங்கசுப்ரமணி

  பதிலளிநீக்கு
 4. கதை அருமை. நடையும் அருமை! கண்ணில் காட்சிகள் விரிந்தன. ஆனால், எந்தவிதத் திருப்பமும் இல்லாமல் டக்கென்று சீதை மன்னித்துவிட்டது போல் தோன்றுகிறது. ஒரு வேளை நான் பெண் என்பதாலோ என்னவோ! நான் கல்லூரி சமயத்தில் எழுதிய கட்டுரைகளிலும், பட்டிமன்றத்திலும், பேச்சுகளிலும், ராமன் சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்ததையும், அதன் பின் சீதையைக் காட்டிற்கு அனுப்பியதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் பேசியிருக்கிறேன். அவள் பூமிக்குள் புதைந்ததும் கூட கோபத்தினால் என்றுதான் நான் பேசியிருக்கிறேன் அதனாலோ என்னவோ இப்படித் தோன்றியது. இதுதான் விதி என்று சொல்வது மிகவும் எளிது. அப்படித்தான் பல சீதைகள் இன்றும் பல இன்னல்களிடையில், மன்னிப்பதே வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார்கள். யதார்த்தத்தில் உணர்வு பூர்வமான மனம் ஏற்க மறுக்கிறதே!!!!!

  நல்ல எழுத்து! நல்ல எழுத்தாளர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கற்பனையெனினும் கண்கள்முன்
  காட்சிகள் நிதர்சனமாய் விரியும்படியான
  அற்புதமான நடை

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 6. இலக்கியத்துள் இனிய பயணம்!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான சிறுகதை...நன்று

  பதிலளிநீக்கு
 8. படிக்க படிக்க கண்ணீர் குறைய ஆரம்பித்தது. மெதுவாக முகம் மலர ஆரம்பித்து படித்து கொண்டே வந்தாள். மீண்டும் முகம் மாறி கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

  கண்ணீர் பெருகவும் குறையவும் அந்த சம்ஸ்குருத மொழியில் என்னதான் எழுதி இருந்தது

  பதிலளிநீக்கு
 9. முதல் கதையிலே அசத்தியவர் ..மிகவும் அழகாக இந்த இரண்டாம் கதையும் வந்திருக்கு .வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இந்த நிகழ்ச்சியும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு உணர்ச்சி. வித்தியாஸமான கோணத்தில் சிந்தனை. இப்படியெல்லாம்கூட கற்பனை செய்யலாமே என்று தோன்றியது. நல்ல எழுத்துநடை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுகிறது. ராமன்
  சீதையை ஏற்றுக் கொண்டான் என்று ஒரு சீரிஸ் ஆரம்பிக்கலாமே.
  லக்ஷ்மணன் கோபம் ,ஊர்மிளையின் சோகம், ராமனின் ஏக்கம்
  எல்லாம் அழகுற எடுத்துரைத்திருக்கிறார் கதாசிரியர்.

  மா நிஷாத ,ஸ்ரீயைக் கொண்ட நாராயண அம்சம் என்று கதை வருகிறது.
  இங்கோ ராமன் சீதையைப் பிரிவதிலேயே இருக்கிறான்.
  என்ன ஒரு சோகம். ஆனால் அதுதானே இதிஹாசம்.
  இனி யார் மாற்று எழுத முடியும் .

  பதிலளிநீக்கு
 12. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... நோஒ இதுக்கு ஒருபோதும் நான் ஒத்துக்கவே மாட்டேன்.. அந்தச் சீதை ராமனை மன்னித்திருக்கலாம்.. ஆனா நான் இந்த ராமாயணக் கதையில் ராமனை மன்னிக்கவே மாட்டேன்.

  ///"சந்தேகம் தமையனுக்கல்ல"//
  இப்படித்தான் பல விசயங்களுக்குப் பலபேர் கூறித் தப்பிக்கிறார்கள்.. அதாவது எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, ஆனா அடுத்தவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ எனத்தான் பயப்படுகிறேன் என்பார்கள்.

  தனக்கு தைரியமும் நம்பிக்கையும் இருப்பின் அடுத்தவர் வாயைத்தான் அடைக்க வேண்டுமே தவிர, இப்படி அநியாயமாக மனைவியைச் சந்தேகப்படலாமோ? கர்ர்:). அப்படிப் பார்க்கப்போனால், ராமனும் காட்டில் தனியேதானே இருந்தார்.. அவரை ஏன் சீதை சந்தேகப்படவில்லை.. கம்பர் எதுக்கு இப்படி அநியாயம் செய்தார்ர்..... அவர் மட்டும் இப்போ இருந்திருந்தால்ல்ல்ல்.. சரி வாணாம் ஒணும் பண்ணியிருக்க மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்.

  எனக்கு ராமாயணம் மிகவும் பிடிக்கும்.. எங்கள் கம்பன் கழகம் ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.. நெல்லைக் கண்ணன் அவர்களின் ஸ்பீச் வரை அனைத்தும் கேட்பேன்ன்... ஆனா இந்த சீதையில் சந்தேகப்பட்டதுதான் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

  ///"முட்டாள் குடிகள் சந்தேகப்பட்டால் அவனை கழுவிலேற்றியிருக்க வேண்டும், அதை விடுத்து இது என்ன"///

  இதேதான், சந்தேகப்படுவோர் வாயடைக்கும்படியான செயலை செய்ய வேண்டும் அதை விடுத்து தானும் சேர்ந்து காட்டுக்கு அனுப்பி.. பின்னர் ஏற்றுக்கொண்டாராம்ம்ம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 13. // ராமன்
  சீதையை ஏற்றுக் கொண்டான் என்று ஒரு சீரிஸ் ஆரம்பிக்கலாமே.///

  ///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வல்லிம்மா.. ராமன் சீதையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லக்கூடா:) சீதைதான் போனாப்போகுது சந்தேகப்பட்டாலும் என் கணவராச்சே என மன்னிச்சு ராமனை ஏற்றுக் கொண்டாவே தவிர, சீதை வாழ மறுத்திருந்தால், ராமனால் எப்படி ஏற்றுக்கொண்டிருக்க முடியும். நான் அந்நேரம் சீதைக்கு நண்பியாக இருந்திருந்தால்.. டிவோஸ் க்கு அப்ளை பண்ணச் சொல்லியிருப்பேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ராமனைப் பிரிந்து சீதை எவளவு கொடுமைகளை கஸ்டங்களை அனுபவிச்சா, எல்லாம் ராமனை நினைச்சேதானே.. இத்தனைக்கும் அந்நேரம் சீதையின் வயது அதிராவின் வயதாமே:) அதாவது சுவீட் 16 தானாம். அந்த வயதிலேயே அப்படி மனக்கட்டுப்பாடோடு இருந்த பிள்ளையை ஊரவருக்காக ராமன் தீக்குளிக்கவும் காட்டுக்கும் அனுப்பியது சரியா?:)..

  மனைவிக்கு கெளரவம் என்பது கணவனிடம் இருந்துதான் கிடைக்க வேண்டும், அதேபோல கணவனுக்கும் கெளரவம் கிடைக்கச் செய்வது மனைவிதான். கணவன், தன் மனைவியை மதித்தால்தான் ஊரே.. ஏன் பிள்ளைகள்கூட அப்பெண்ணை மதிப்பார்கள்.

  //"என்ன செய்வது குழந்தை, அதுதான் விதி, அனைத்து ராமாயணங்களிலும் ராமன் சீதையை காட்டிற்கு அனுப்புவதுதான் நடக்கின்றது, சீதை ராமனை புரிந்து கொண்டு மன்னிப்பதும்தான் நடந்திருக்கின்றது. நீ மட்டும் விதிவிலக்காக முடியுமா" என்றார் வால்மீகி.

  "இதுதான் வழக்கமா" என்று பெருமூச்சு விட்ட இந்த சீதை ராமனை மன்னித்தாள்.////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்ர்.. “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, அந்த கிணற்றிலிருக்கும் உப்பு நீரையே குடித்துக் கொண்டோரிடம் வாதாடவா முடியும்” என...

  அப்படித்தான் இதுவும்... முன்பு எழுதப்பட்டிருக்கு என்பதற்காக அதையே சரி என, தொடர்ந்து செய்யலாமா?.. சீதை ராமனை மன்னிக்கலாம்.. பெண்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்[ஹையோ எதுக்கு இப்போ ஊரெல்லாம் புகையுதூஊஉ:)].. ஆனா திரும்ப வாழ்ந்திருக்கக்கூடாது, தான் நேர்மையான பெண் என்பதை உலகத்துக்கு நிரூபித்து விட்டு... டிவோஸ் எடுத்திருக்க வேண்டும். ஹா ஹா ஹா... அஞ்சூஊஊஊஊஉ ஹொட்டா ஒரு மங்கோ யூஸ் பிளீஸ்.

  பாவம் சகோ ரெங்கட்சுரமணி பார்த்தால் பயந்திடப்போறார்:).. நான் சொன்னதெல்லாம் ராமாயணத்துக்குத்தான்.. அவரின் கதைக்கு இனித்தான் வரப்போகிறேன்:).

  பதிலளிநீக்கு
 14. //எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுகிறது.

  போறும் போறும்ன்றிங்க..

  பதிலளிநீக்கு
 15. மேலே என் மின்னல் முழக்கமெல்லாம் ராமாயணத்துக்கே... ஆனா பெரிய கண்ணதாசன் கல்கி அப்படிப் பிரபல்யங்களை விடுத்து, வலையுலகில், கிட்டத்தட்ட எல்லோருமே அப்பப்ப கதை எழுதுகிறார்கள், ஆனா போறிங் இல்லாமலும், முடிவுவரை இன்றஸ்ட்டாகவும் படிக்க முடிவது குறிப்பிட்ட சிலரின் எழுத்துக்களைத்தான், அந்த வகையில்.. சகோ ரெங்கட் சுரமணியும் ஒருவர்.

  போன கதையும் சரி, இக்கதையும் சரி, மிக அருமையாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்... உண்மையில் மிகவும் ஆர்வமாகவே படிச்சு முடிச்சேன் பிரேக் போடாமலும்.. பந்திக்குப் பந்தி தாவி ஓடாமலும்... இவரிடமிருந்து இன்னும் பல கதைகளை இங்கு எதிர்பார்க்கிறேன்...

  கையில் மை வச்சிட்டேன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
 16. // “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, அந்த கிணற்றிலிருக்கும் உப்பு நீரையே குடித்துக் கொண்டோரிடம் வாதாடவா முடியும்”

  ஆகா!

  பதிலளிநீக்கு
 17. @அதிரா - 'அன்நேரம் சீதையின் வயது சுவீட் 16 தானாம்" - சீதை, வயதுக்கு வந்ததும் ராமனுக்குத் திருமணம் செய்வித்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள், சீதைக்கு 7 வயது, ராமனுக்கு 11 அல்லது 14 வயது என்று சொல்கிறார்கள். 14 வருட வன வாசம். அதற்கப்புறம் பட்டாபிஷேகம் (இலங்கைல இருந்து அயோத்தி போகணும்). சீதையை, குடிமக்கள் குறை சொன்னார் என்பதற்காக அனுப்பியபோது சீதை கர்ப்பிணி. நீங்க என்னத்தைக் கணக்கு போட்டீங்களோ.

  பதிலளிநீக்கு
 18. ///நெல்லைத் தமிழன் said...//
  ஹா ஹா ஹா அப்படியா? நான் அறிந்தது, சுயம்வரத்தின்போது சீதைக்கு 16, ராமனுக்கு 18 என. அந்த ராவணனின் பிடியில் இருந்து அவஸ்தைப்பட்ட காலம் சுவீட் 16 ஆமே:)..

  ///சீதையை, குடிமக்கள் குறை சொன்னார் என்பதற்காக அனுப்பியபோது சீதை கர்ப்பிணி.///
  ஓ அப்படியா? இது எனக்கு தெரியாமல் போச்சே... கர்ர்ர்:) அப்போ எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறார் சீதையை ராமன். இதை எல்லாம் எப்படி மன்னிச்சா சீதை?:)... ஒருவேளை, அடுத்தவருக்காகத்தான் சீதையை காட்டுக்கு அனுப்பினாராமாம்ம்ம்ம்ம் என்பதுபோல:).. அடுத்தவரின் வற்புறுத்தலுக்காகத்தான் சீதை ராமனை மன்னிச்சாவோ என்னமோ?:) எதுக்கும் சீதையைக் கூப்பிட்டுக் கேட்டால்தான் உண்மை தெரியும்:).

  பதிலளிநீக்கு
 19. ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமாயணம் உண்டு என்றும் அதற்கான அடையாளக் கற்கள் உள்ளே இருக்கின்றன என்றும் காகபுஜண்டர் சொல்வதாகப் படித்திருக்கிறேன். எங்கேனு நினைவில் இல்லை. அதே போல் அனுமனுக்கும் அது தெரியும் என்றும் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே கதைக்கருவை இங்கே ரெங்கசுப்ரமணியும் எடுத்துக் கையாண்டிருக்கிறார். அருமை. சில விஷயங்களை எப்போது நடந்தாலும் மாற்றவே முடியாது! அதே போல் ராமாயணமும் என நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 20. எனக்கும் தோன்றும்! அடுத்த யுகம் என ஒன்று உண்டானால் நாம் இதே பிறவியைத் தான் எடுப்போமா? சுற்றிச் சுற்றி இதே பிறவி தான் வருமா என்றெல்லாம் யோசிப்பேன். ஒவ்வொரு சீதையும் அனுபவித்த துன்பங்களைப் போல இப்போது நாமும் அடுத்த பிறவியிலும் இதே போல் அனுபவிப்போமா என்றெல்லாம் யோசனை வருகிறது. :))))

  பதிலளிநீக்கு
 21. தெய்வங்களும் மனிதராகப் பிறக்கையில் விதியின் வசப்பட்டு நொந்துபோக நேரிடும் என்பது விதிபோலும். பிசிறில்லாமல் சீராகச் சென்ற கதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. யுகங்கள் தோறும் மன்னிக்கும் சீதைகள் இருப்பதால்தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 23. மீண்டும் ராமாயணம் படித்தேன். அழகாய் சொல்லி சென்று இருக்கிறார்.
  எத்தனை பிறவி எடுத்தாலும் பெண்ணாய் பிறந்தவள் மன்னிக்க தான் வேண்டும் என்ற விதி போலும்!

  பதிலளிநீக்கு
 24. காலையில்பின்னூட்டத்தில் விடுபட்டது ..மனதில் தோன்றியதை தைரியமாக வெளிப்படுத்திய ஊர்மிளா rocks :) ..

  பதிலளிநீக்கு
 25. சீதை மன்னிக்காவிட்டலும் என்னதான் நடந்திருக்கப் போகிறது? இராமாயணத்தில் சுவையான பகுதிகள் வேறு எவ்வளவோ உண்டே!

  இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

  பதிலளிநீக்கு
 26. அடுத்தவர் சொல்லி அரைகுறை மனதுடன் செய்தால் அது மன்னிப்பு ஆகாது :)

  பதிலளிநீக்கு
 27. அனைவருக்கும் நன்றிகள் முதலில். முதல் கதைக்கே பதிலளிக்க பலமுறை முயற்சித்தும், ப்ரெளசர் பிரச்சினையில் நான் எழுதிய கருத்துக்கள் காணாமல் போய்விட்டது. இந்த கதைக்கு அடிப்படை இந்த கட்டுரையில் வரும் முதல் பாரா http://www.tamilhindu.com/2010/03/ramayana-fountainhead-of-our-culture/

  சீதையின் பாத்திர சாயலை தற்கால பெண்களில் சேர்ப்பதெல்லாம் சாத்தியமேயில்லை. காரணம் மேலே உள்ள கட்டுரையிலேயே உள்ளது.

  மறுபடியும் நன்றி.

  குறிப்பு

  ஆதிரா அவர்களுக்கு, என்னுடைய பெயர் ரெங்கசுப்ரமணி. வெங்கடசுப்ரமணியை ரெங்கசுப்ரமணியோடு கலந்துவிட்டீர்கள் போல :)

  பதிலளிநீக்கு
 28. சிறப்பான கைவண்ணம்
  நன்றே சிந்திப்போம்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!