செவ்வாய், 23 ஜூலை, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : சுற்றுலா வைபோகமே - துரை செல்வராஜூ

சுற்றுலா வைபோகமே..

துரை செல்வராஜூ 

------------------------------------------


விடிவதற்கு முன்பாக இரண்டு மணிக்கே விழித்தெழுந்து எல்லாரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்...

இரண்டு மாதத்துக்கொரு தடவை கோயில் சுற்றுலா!...  தேங்காக்கடை கோவிந்தனோட மகன் நடத்துகிறான்..

காலையில் அஞ்சரை மணிக்கு வெள்ளைப் பிள்ளையார் கோயில்...ல இருந்து புறப்பட்டுப் போய் சம்பந்தப்பட்ட கோயில் எல்லாம் பார்த்துட்டு ராத்திரி ஏழரை மணிக்கெல்லாம் திரும்பி வந்துடுவாங்க...

இந்தத் தடவை - திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், ஐயாவாடி, திருச்சேறை சாரபரமேஸ்வரர், சாரநாதப் பெருமாள், திருவாஞ்சியம், திருவாரூர்... - என, ஒன்பது கோயில்கள்...

திருவாரூர் கோயிலை முழுசாப் பார்க்கவே மூனு நாள் ஆகும்...

இவன் என்னாடா.... ன்னா பதினைஞ்சு நிமிஷத்துல ஜனங்களை விரட்டு விரட்டு...ன்னு விரட்டிக்கிட்டு வந்திடுவான்...

பத்துப் பதினைந்து பேர் கூட்டாக வந்தால் ஒரே நாளில் ஒன்பது கோயில் - நவக்கிரக தரிசனம்...

வியாழக்கிழமைகளில் குருவார தரிசனம்...  வெள்ளிக்கிழமைகளில் சுக்ரவார தரிசனம்!..

சனிக்கிழமை எல்லாம் திருநள்ளாறு தரிசனம்...

ஜனங்களை அழைச்சுக்கிட்டுப் போய் அந்தக் கூட்டத்துக்குள்ள தள்ளி விட்டு பிழிஞ்சு எடுத்து இழுத்துக்கிட்டு வர்றதுல கோயிந்தன் மவனுக்கு அவ்வளவு இஷ்டம்...

அதை விட சந்தோஷம் ஜனங்களுக்கு...

நெரிசல்..ல சிக்கிக்கிட்டு உடம்பு வலியோட திரும்பி வந்து படுத்தாத்தான் நிம்மதி...

அம்மன் கோயில்ல இருந்து ஐயனார் கோயில் வரைக்கும் அத்தனையும் கோயிந்தன் மவனுக்கு அத்துப்படி..

அந்த சுற்றுலாவுல போய்ட்டு வர்றதுக்குத் தான் இங்கே களேபரம்..

மகன் ஆனந்த் .. அவனும் விழித்துத்தெழுந்து கைப்பைக்குள் எதை எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்...

சங்கீதா - அன்பு மருமகள்.. அடுக்களை ராஜாங்கம்..

காமாட்சி - சுந்தரத்தின் மனைவி - சமையலறையில் சங்கீதாவுக்கு அப்படி இப்படி ஒத்தாசை......

ஏதேதோ நடந்து கொண்டிருக்கிறது...

புளியோதரையும் பருப்பு துவையலும் செய்து முடித்து விட்டு கொஞ்சம் தயிர் சாதம் தயாராகின்றது..

அது பேத்திக்கு.. அவந்திகாவுக்கு புளியோதரை பிடிக்காது...

இதெல்லாம் போக - காலை உணவுக்கென இட்லி, கேசரி, இடியாப்பம்...

தேங்காய் சட்னி சீக்கிரம் வீணாகி விடும் என்று தக்காளிச் சட்னியும் வெங்காயச் சட்னியும்!...

அத்துடன் நல்லெண்ணெய்க் குளியலில் இட்லிப் பொடி!...

வழியில் அரைத்துக் கொண்டே போவதற்கு நெய் முறுக்கு.. சோமாசா... சந்த்ரகலா ...

இப்படியெல்லாம் தின்று தீர்ப்பதற்காகவே சுற்றுலா!..  அதுவும் ஆனந்தச் சுற்றுலா... ஆன்மீகச் சுற்றுலா!...

அந்த வகையில் சங்கீதாவைப் பாராட்டத்தான் வேண்டும்...

போகும் வழியில் கண்டதையெல்லாம் வாங்கித் தின்று விட்டு வயிற்றையும் காசையும் கெடுத்துக் கொள்வதை அவள் விரும்புவதில்லை...

ஆனாலும் -  சுந்தரம் மட்டும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு இருக்கிறார்...  அவரிடம் இன்னும் யாரும் சொல்லவில்லை - கிளம்புங்கள் என்று!...

மணி மூன்றரை ஆகிவிட்டது...

இங்கிருந்து போன் போகிறது...  யாருக்கு என்று தெரியவில்லை....

" என்ன கிளம்பியாச்சா?... "

...............  ................!..

" சரி.. சரி.. அப்பாவுக்கு மாத்திரை, டானிக் எல்லாம் மறக்காம எடுத்துக்குங்க!.."

.................  ...............!..

" சீக்கிரம் வந்துடுங்க ... அஞ்சரை மணிக்கெல்லாம் வண்டியக் கிளப்பிடுவான்.. கடங்காரன்!... "

சுந்தரத்துக்கு இப்போது புரிந்தது...

திருவையாற்றிலிருந்து சம்பந்தி வீட்டுக் கும்பலும் வருகிறது!..

அந்தக் கிழவர் - சுந்தரத்துக்கு ஒரு வயது இளையவர்... ஆனாலும் - பலவிதமான நோய்களுக்குச் சொந்தக்காரர்...

சங்கீதாவின் அம்மா... - அம்மாதான்!..  அவர் ஒருவருக்கே இரண்டு வேலையாட்கள் வேண்டும்...

சங்கீதாவின் தங்கை தம்பிகள்..  ஆகா!... அக்மார்க் வானரங்கள்...

இப்படியாகப்பட்ட கும்பல் ஏகபோக சந்தோஷத்துடன் கிளம்பும்போது
சுந்தரத்துக்கு மட்டும் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை...

நடப்பவைகளை ஏக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்....  மனதில் எழுந்த அதிர்வலைகள் அப்படியே அடுக்களைக்குள் போக - அங்கிருந்து காஃபியுடன் வந்தாள் காமாட்சி...

கணவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது..  இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..  ஒன்றும் சொல்ல முடியாது..

காஃபியை இப்படியும் அப்படியுமாக ரெண்டு ஆத்து ஆத்தியபடி சுந்தரத்தின் கையில் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தாள்...

அந்த விடியலிலும் நெற்றிப் பரப்பில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள்...

ஆதரவுடன் துடைத்து விட்டார்...

" காமாட்சி.. நீ இங்கேயே இரேன்!..."

" இருக்கலாம் தான்... வருண் யாருக்கிட்டயும் இருக்க மாட்டான்..  ஒரு வயசு தான் ஆகுது... அதுக்குள்ளயும் எவ்வளவு வெவரம்!...  திருவையாத்துக்காரங்க ஒருத்தர்கிட்டயும் போக மாட்டேங்கிறான்..  நீங்க தான் பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... பால் குடிக்கிற நேரம் போக மத்த நேரமெல்லாம் எங்கிட்டதானே இருக்கான்!..."

" அதுவும் சரிதான்... இருந்தாலும் என்னய இன்னும் கூப்பிடலையே....  நானும் வந்தா ஒரு ஓரமா இருந்துக்குவேன்... ல்ல!...  பட்டீச்சரத்தாளைப் பார்த்து ஆறேழு மாசமாகுது!.. ".

" ம்...   நான் போன தடவையே சொல்லணும்..ன்னு நெனைச்சேன்..  அவுங்க தோதுக்கு நீங்க ஒத்து வரலை... அதான் கூப்பிடலை!... "

நான் ஒரு இடைஞ்சலும் செய்யலையே...

" நீங்க செய்யலை... ஆனா.. உங்க வாய்!...  யாராவது எப்படியாவது போகட்டும்... ன்னு இருக்கமாட்டேங்கிறீங்க!... "

அதற்குள் அடுக்களையிலிருந்து - " அத்தே!.. ". - சங்கீதாவின் குரல்..

" இருங்க வர்றேன்... இல்லேனா.. பண்ட பாத்திரம் உருளும்!.."  -  என்றவாறு எழுந்து சென்றாள் காமாட்சி...

என் வாய் இடைஞ்சலா!?.. - சுந்தரத்துக்கு திக்கென்றிருந்தது...

நினைவுச் சுருளைச் சுழற்றி விட்டார் சுந்தரம்...

இப்படித்தான் - இரண்டு மாதங்களுக்கு முன் - அந்தப் பழைமையான கோயிலுக்கு படை பரிவாரத்துடன் விஜயம்.....

பிரகாரத்தில் சுற்றி வரும்போது அங்கொரு மண்டபத்தில் அழுக்கடைந்து கிடந்த சிம்ம வாகனத்தைக் கண்டு அதன் மீது ஏறி அதகளப்படுத்தின - திருவையாத்து வானரங்கள்.


இவர் மெதுவாகத் தான் சொன்னார்..


" டேய்.. பசங்களா.. அது மேல எல்லாம் ஏறப்படாது!.."  - என்று..

அடுத்த விநாடி அந்த சிங்கத்தின் இற்றுப் போன வால் -  இந்த வானரங்களின் கையில்!..

யார் யாரோ ஓடி வந்தார்கள்.. " விடாதே பிடி!.." - என்றபடி..

ஆயிரம் ரூபாயை திருப்பணிக்கென்று கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து வந்தது தம்பிரான் புண்ணியமாயிற்று..

சுற்றுலா வேனுக்குள் வந்தமர்ந்ததும் சம்பந்தி சொன்னார்..

" பசங்கள் அமைதியாகத் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..
இவர் சத்தம் போட்டதும் அந்த அதிர்ச்சியில் சிங்கத்தின் வால் உடைந்து
போய் விட்டது !..." - என்று...

பட்டீஸ்வரம் துர்கா ஸ்தலம்!.. - என்று யாராவது சொன்னால்

" இது தேனுபுரீஸ்வரர்...ன்னு சிவாலயம்....  ராஜராஜ சோழனோட பாட்டனார் காலத்துக் கோயில்...  இந்த துர்கையும் பைரவரும் பழையாறை அரண்மனையில இருந்த தெய்வங்கள்!.." - என்று, அழகாக விளக்கம் சொல்வார்..

அப்போதைக்கு, ஓஹோ!... என்பவர்கள்.. சுந்தரம் அங்கிருந்து நகர்ந்ததும் ஏளனமாகப் புன்னகைப்பார்கள்...

திருக்குளத்தில் நீராடி விட்டு ஈரத்துணியை அங்கேயே அவிழ்த்துப் போட்டால் சுந்தரத்துக்குக் கோபம் வரும்..

இந்த மாதிரி எல்லாம் தீர்த்தக்கரையில் அசுத்தம் செய்யக்கூடாது... - என்பார்...

வீட்டுல இருந்து அர்ச்சனை திரவியங்களைக் கொண்டு வரணுமே தவிர
கோயில் வாசல்ல விற்கற அர்ச்சனைத் தட்டு, கலப்பட நெய் விளக்கு
இதெல்லாம் வாங்கக் கூடாது...

கோயிலுக்குள்....ள திடு திடு - ன்னு நடக்கக்கூடாது..  சந்நிதிகளில் குறுக்கு மறுக்கா விழுந்து கும்பிடக்கூடாது....

விபூதியைத் தரித்த பின் - ப்பூ!.. - என்று ஊதக்கூடாது..  அம்மன் சந்நிதியில் வாங்கிய குங்குமத்தை அங்கிருக்கும் நந்தி தலையில் போடக்கூடாது...

பிரதோஷ நேரத்தில - நந்தி காதுல சேதி சொல்கிறேன்..ன்னு காதைப் பிடித்துத் தொங்கக் கூடாது...

பொங்கலோ புளியோதரையோ முட்டி மோதிக்கிட்டு வாங்கின பிரசாதத்தை கீழே போடக்கூடாது..

இப்படியெல்லாம் சுந்தரம் நல்லது சொன்னாலும் - யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை...

மூலஸ்தானம் நடை அடைச்ச பிறகு - பிரகாரம் சுற்றுவதோ தண்டனிட்டு வணங்குவதோ தவறு..

ஆனா, இங்கே -


கும்மோணத்துக்குப் பக்கத்துல இருக்குற ஒரு கோயில்... ல வெளிப் பிரகாரத்தில் இருக்கிற உபசந்நிதியில ராகு காலத்துல தான் மேள தாளத்தோட அபிஷேக ஆராதனை நடக்கும்...

அந்தக் கோயில்ல ஒரு அபிஷேக சீட்டுக்கு மூனு பேர் தான்...

இது தெரியாம அபிஷேக சீட்டு வாங்கிக்கிட்டு கூண்டுக்குள்ள போறப்ப
சட்ட திட்டம் உலக நீதி எல்லாம் சொல்லி கடைசியா உள்ளே போன
சுந்தரத்தோட சட்டையைப் பிடித்து அங்கிருந்த வேலையாள் இழுத்து விட -
கோபம் வந்து விட்டது....

ஏதோ தீவட்டித் திருடனை விரட்டுற மாதிரி விரட்டி விட்டார்கள்..

ஒன்றும் சொல்ல முடியாமல் கூட்டத்தின் கடைசியில் நின்று கொண்டு
பால் வெள்ளையாகத் தான் தெரிகிறது என்று சொல்லி விட்டு வந்தார்....

இன்னொரு சமயம் வைத்தீஸ்வரன் கோயில்ல அர்ச்சனைத் திரவியங்களை தாம்பாளத்துல வைச்சுக் கொடுத்தப்போ அங்கேயிருந்த ஐயர் - " கேரி பேக்... ல போட்டுக் கொண்டு வாங்கோ...
தாம்பாளம் எல்லாம் வாங்க முடியாது!"... ந்னு சொல்லிட்டார்...

பத்து நிமிஷம் போராடியும் பிரயோஜனம் இல்லை....  பின்னால நிக்கிறவங்கங்க எல்லாம் கடுப்படிக்கிறாங்க!...

அர்ச்சனைப் பொருட்களைத் தாம்பாளத்துல வெச்சிக் கொடுக்கிறது தான்
சம்பிரதாயம்... ங்கறதை ஜனங்க மனசுல இருந்தே மாத்தியாச்சுங்கற சேதி சுந்தரத்துக்குத் தெரியாமப் போனது...

யாராவது எப்படியாவது கும்பிட்டு விட்டுப் போறாங்க!..  உங்களுக்கென்ன வந்தது?... என்றால்,

நாரதரோட யாகத்துல மந்த்ரம் தவறாப் போனதால விபரீதங்கள் நடந்ததா புராணத்தில சொல்லியிருக்கே!.. - என்று சொல்வார்..

அதெல்லாம் கூட வர்றவங்களுக்கு சுத்தமா பிடிக்காது...

இவருக்கு எதுக்கு தேவையில்லாத வேலை!?...  - மகனுக்கும் மருமகளுக்கும் மிகவும் சங்கடமாக இருக்கும்...

அதுக்கெல்லாம் மேலாக - ஒவ்வொரு சந்நிதியிலயும் தேவாரம், திருவாசகம்.. ன்னு ஒரு சில பாடலாவது பாடணும்...ன்னு சொல்லுவார்...

'' தேவாரம் பாடினால் ஜூரம் தீருமா?. திருவாசகம் பாடினால் பொருள் சேருமா?... திருப்புகழ் பாடினால் வாய் மணக்குமா?.. ''

'' கோயிலுக்கு வந்தோமா.. சாமி கும்பிட்டோமா.. கற்பூரத்தட்டில் காசு போட்டோமா!..  அத விட்டுட்டு தேவாரம் பாடு..  திருவாசகம் பாடு..ன்னு எதுக்கு அட்வைஸ்?... ''

- என்று, உடன் வருபவர்கள் நேருக்கு நேராகவே எள்ளி நகையாடுவார்கள்...

இதனால் சுந்தரத்தின் மனம் வாடிப் போகும்...

இவர்களுக்கெல்லாம் ஆன்மீகம் ஒரு அலங்காரம்..  அவ்வளவு தான்!... - என்று, பேசாமல் இருந்து விடுவார்...

பழைய நினைவுகளுக்கு ஊடாக - மகன் மருமகள் எல்லாம் தயாராகி விட்டார்கள்...

'' மாமா.. உங்களுக்குத் தான் முழங்கால்..ல வலியாச்சே....  வீட்ல இருந்து நல்லா ரெஸ்ட் எடுங்க...

எங்களோட அலைஞ்சு கஷ்டப்படவேண்டாம்!...

டேபிள்...ல எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்... இட்லி, இடியாப்பம் இருக்கு...  புளியோதரைக்கு அப்பளம் பொரிச்சு டப்பா.. வில வெச்சிருக்கேன்...  பால் பிளாஸ்க்..ல இருக்கு!.. காஃபி வேணுன்...னா போட்டுக்குங்க...  சாயங்காலம் ஒன்றரை லிட்டர் பால் வாங்கி வெச்சிடுங்க...  நாங்க போய்ட்டு வந்துடறோம்!... ''

சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோ வந்து நின்றது...

காமாட்சியின் தோளில் தூங்கிக் கிடந்தான் வருண்..

பேத்தி அவந்திகா ஓடி வந்து தாத்தாவுக்கு முத்தம் கொடுத்தாள்...

'' போய்ட்டு வர்றோம்...பா!.. '' - என்றான் ஆனந்த்..

சுந்தரத்தைப் பார்த்து மெல்லத் தலையாட்டியபடி அவர்களைப் பின் தொடர்ந்தாள் காமாட்சி..

ஆட்டோ சென்ற பிறகு வாசல் கதவைத் தாழிட்டு விட்டு வந்து கட்டிலில் சாய்ந்தார் சுந்தரம்...

அவருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது...

WhatsApp - இணைப்பில் திருவையாற்று வானரங்களும்
ஏனைய சொந்தக்காரப் படைகளும் சேர்ந்து குழு போட்டிருக்கிறார்கள்...

அந்தக் குழுவிற்குள் சுந்தரத்தையும் அவர்களாகவே கூப்பிட்டு சேர்த்துக் கொண்டார்கள்...

ஊர்வம்புகளுடன் சேர்ந்து அவ்வப்போது

தஞ்சாவூர் பெரிய கோவிலின் ரகசியம்!..  பெறிய நந்தி வலர்கிற அதிசயம்!..  கோவில் நிழள் கீழே விழுகிறதா?.. மேலே விழுகிறதா?...
விஞ்சானிகளின் திடுக்கிடும் தகவல்..  தமிளனா இருந்தா உடனடியாகப் பகிறுங்கள்!...

- இப்படிப் பெரிய கோயிலைப் பார்த்தே இராத தமிலர்களின் தப்பு தப்பான செய்திகள், ஆலோசனைகள், எச்சரிக்கைகள்!..

எங்க ஊர் ரகசியம் எல்லாம் எங்களுக்குத் தெரியும்...  முதல்ல நீ ஒழுங்காகத் தமிழ் படிச்சுட்டு அப்புறமா வா!..  - என்று, இவர் போட்டுத் தாக்கி விடுவார்...

என்ன ஏது என்று புரியாமல் ஆன்மீகம் என்ற பேரில் எதையாவது பிதற்றுவது...

எங்காவது உள்ள சிவலிங்கத்தை இதுதான் இந்த ஊர் சிவலிங்கம் என்று உளறி வைப்பது...
இதையெல்லாம் நேரடியாகவே கண்டித்து வைத்தார் சுந்தரம்..

இந்த மாதிரி பல தடவைகள்... இது பிடிக்காமல் போக,

ஒரு கட்டத்தில்  - ஊருடன் ஒத்துப் போகாமல் இப்படி மறுத்துப் பேசும் சுந்தரத்தை WhatsApp - குழுவில் இருந்தே விரட்டி விட்டார்கள்...

இப்போது சுற்றுலாவில் இருந்தும் கழற்றி விட்டார்கள்...

உளறுவாயன்கள் சொல்வதை எல்லாம் நம்புகிறவர்கள்  நாம் சொல்வதை நம்புவதற்கு மறுக்கின்றார்களே!...

அப்படியே வருத்தத்துடன் தூங்கிய சுந்தரம் தடதட... - என்ற சத்தம் கேட்டு விழித்தார்...

கடிகாரம் காலை ஆறரை மணியைக் காட்டியது...

கதவைத் திறந்து பார்க்க - வாசலில் கணேச மூர்த்தி நின்றிருந்தார்...  நாலாவது வீட்டுக்காரர்.. ஏழெட்டு வருடங்களாகப் பழக்கம்...

'' வாங்க ... கணேசன்.. என்ன விஷயம்!...''

'' சுந்தரம்!.. திருநெல்வேலியில இருந்து எங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்க...  திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, ஸ்வாமிமலை எல்லாம் தரிசனம் செய்யணும்...''

'' எங்க கூட நீங்களும் வந்து கோயில் பெருமை எல்லாம் சொல்லி
வழிகாட்டணும்.. ன்னு ஆசை... உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே?...''

'' ஆகா.. அதுக்கென்ன வந்துடறேன்... எத்தனை மணிக்கு புறப்படுறீங்க?...''

'' ஏழரை மணிக்கு!.. நாங்க வந்து அழைச்சுக்கிட்டுப் போறோம்!...''

'' சாயங்காலம் வந்துடலாம் இல்லையா?...''

'' மத்தியானமே திரும்பிடலாம்...  ஸ்வாமிமலை...  யில உச்சிக் காலம்
முடிஞ்சதும் நேரா தஞ்சாவூர் தான்!..''

'' ஏன்னு கேட்டா... சாயங்காலம் பால் வாங்கி வைக்க வேணும்!...''

கூடவே, சுந்தரத்துக்கு ஏகப்பட்ட சந்தோஷம்...

" பட்டீச்சரத்தாள் கூப்பிட்டு விட்டாள்!..'' - என்று..


ஃஃஃ

85 கருத்துகள்:

 1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. ஆஹா. இனிய காலை வணக்கம். அன்பு துரை செல்வராஜு, ஸ்ரீராம்,
   கீதா மா எல்லோருக்கும்.
   அற்புதமான கதை.
   பெரியவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.
   இவரைப் போல ஒருவருடன் சுற்றுலா போய் வந்தால் போதுமே.
   ஒரு நாள் இரண்டு கோயில் என்று போய் உளமாரத் தரிசித்து,மனமாற
   நெகிழ்ந்து வரலாமே,.
   துரை உங்கள் கதைதான் யதார்த்தம்.
   இங்கே நான் கூட மெதுவாக நடப்பதால் பல இடங்களுக்கு வர மறுத்து விடுகிறேன்.

   கணவரையே விட்டு விட்டுச் செல்லும் மனைவி காமாட்சியின் நிலை
   பரிதாபம். திருவையாறு வானரங்கள்...ஆஹா.நறுக்கென்ற நகைச்சுவை.
   உண்மையே. பட்டீஸ்வரம் அம்பாள் கைவிட மாட்டாள். அழைத்துவிட்டாளே அன்பரை.

   மிக மிக அருமையாக நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.
   இது உண்மையில் உணவுச் சுற்றுலா.

   ராகு ஸ்தலத்தில் எனக்கும் வெள்ளையாகத்தான் தெரிந்தது.
   ஹாஹ்ஹா. நன்றி நன்றி. ஸ்ரீராமுக்கும் துரை செல்வராஜுவுக்கும்.

   நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

   நீக்கு
  4. தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சியம்மா...

   இதை கதை என்று சொல்வதற்கில்லை... சில நிகழ்வுகளின் தொகுப்பு தான்....

   திருநாகேஸ்வரம் வைத்தீஸ்வரன் கோயில் - இங்கு எனக்கு நேர்ந்ததையே பதிவு செய்துள்ளேன்...

   முன்னிரவில் சென்னையிலிருந்து புறப்பட்டு விடிந்ததும் கும்மோணத்துக்கு வந்து சற்றும் ஓய்வில்லாமல் கோயில் தரிசனம்...

   சில கோயில்களில் பிரதட்சிணம் கூட செய்வதில்லை....

   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி .. நன்றி...

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

  அட ! இன்று நான் நினைத்து வந்தது!! துரை அண்ணாவின் கதையாக இருக்கும் என்று வந்தால் அண்ணாவின் கதையேதான்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழிமொழிந்து, வரவேற்கிறேன் உங்களையும்.

   நீக்கு
  2. வந்தாலும், வராட்டியும் தினம் தினம் வரவேற்கும் துரைக்கு நன்றி.

   நீக்கு
 4. இன்று எனது கதையைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. சுந்தரத்தின் வாய்// அது வரை வாசித்துவிட்டேன்...

  இந்த வாய் சர்க்காஸ்டிக்காக, அல்லது கடும் சொற்களைப் பயன்படுத்தினால் உறவுகள் விலகும் என்பது என் அனுபவப் பூர்வமான ஒன்று

  அல்லது பேரக் குழந்தைகளுக்கு நல்லது சொல்லப்போனால் ம்ம்ம்ம் என்ன சொல்ல....ஓரங்கட்டி விடுவார்கள்.

  இந்த வகை இரு வாய்களும் என் அனுபவத்தில் கண்டது. முதல் வாய் கொஞ்சம் கஷ்டம் தான்

  இரண்டாவது வாய் எல்லார் வீட்டிலும் சகஜம் இருந்தாலும் ஏனோ ஒதுக்கப்படுதல்...

  வருகிறேன் சுந்தரம் எந்த வாய் என்று பார்க்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுந்தரத்தின் வாய் நேர்மையைப் பேசும் வாய்.. நியாயம் எதுவோ அதைச் சொல்லும் வாய்...

   இப்போதெல்லாம் அவற்றுக்குத் தான் மதிப்பு கிடையாதே...

   ஆர அமர வைபவத்தை வாசித்து விட்டு

   பெரியதாக ஒரு பொற்கிழிக்கு ஆயத்தம் செய்ங்கோ!...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா பொற்கிழிக்கு ஆயத்தம் செய்தாச்சு...!!! ஒரு சின்ன பொற்கிழி கீழே கொடுத்தாச்சு!! பாராட்டு வடிவில். மீண்டும் வருகிறேன் பெரிய பொற்கிழியோடு... நானும் சிறு பொழுதில் வருகிறேன். பணிகள்...

   நேர்மைக்கு வாழ்வில்லை என்பதும் என் அனுபவம் அதுவும் கண்கூடாகக் காணும் அனுபவம்தான். என்றாலும் ஆங்காங்கே அதையும் மதிப்பவர்கள் இருக்கிறார்கள் ஏன்று நான் நம்புவதுண்டு. மதிப்பவர்கள் குறைவாக இருந்தாலும் அது போதுமே ..இதோ சுந்தரத்தை மதித்து அழைப்பவரள் உள்ளது போல்!!

   நாம் நம் கடமையைச் செய்துகொண்டே போவோம் அதற்கானது தானாகவே வரும்.

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன் - நேர்மைக்கு வாழ்வும் வாழ்த்தும் வெளியில் எங்கும் கிடைக்காது, சொந்த மகன், மனைவி, கணவனானாலும்.

   நேர்மைக்கு பரிசு ஆத்ம திருப்தி மட்டும்தான்

   நீக்கு
  4. >>> நேர்மைக்கு பரிசு ஆத்ம திருப்தி மட்டும்தான்..<<<

   அது நிறைவாகக் கிடைத்தாலே போதும்..

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம். தலப்பை பார்த்தால் நகைச்சுவை கதை போல தோன்றுகிறது. பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. நல்லதைச் சொன்னால் நாடு கேட்கும்னு சொல்றாங்க...!! நாடு கேட்பது இருக்கட்டும்; வீடு கேட்கிறதா, முதலில்.?? எதைச் செய்தாலும்(பக்தி உள்பட) சிரத்தையுடன் செய்தால் பலன் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

  குடும்பத்தாருடன் போயிருந்தாலும் கிடைக்காத ஆத்ம திருப்தி சுந்தரத்திற்கு கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அழகாக யதார்த்தத்தை உணர்த்துகிற கதை... இல்லையில்லை... நிஜம்...!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் பாரதி..
   தங்களுக்கு நல்வரவு....

   நல்லதைச் சொன்னால் வீடு கேட்கிறதா முதலில்?...

   நியாயமான வார்த்தைகள்...

   எல்லாமே போலி, பகட்டு, ஆடம்பரம் என்றாகிப் போனது...

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. வேலைக்குப் புறப்பட்டு விட்டேன்...
  மீண்டும் சிறு பொழுதில் சந்திப்போம்...

  பதிலளிநீக்கு
 9. அழகாக யதார்த்தத்தை உணர்த்துகிற கதை
  நன்றி

  பதிலளிநீக்கு
 10. அடடா சுந்தரம் பாவம் என்று நினைத்து வாசித்துக் கொண்டே வந்த போது ஆஹா அவருக்கும் அழைப்பு வந்துவிட்டதே!! சூப்பர்! மனம் ஈடுபாடுடன் இருந்தால் எப்படியேனும் ஒரு மார்கம் கிடைத்துவிடும்!

  அழகான கதை. பல கோயில் விஷயங்களையும் கதையில் இணைத்தவிதம் சிறப்பு

  சுந்தரத்தையும் மதித்து அழைத்துச் செல்வோர் இருக்க மதிக்காதவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்

  மகிழ்வான முடிவு!

  பாராட்டுகள் அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. அவரை மதித்து அழைத்ததால் கண்டிப்பாக ரெட்டிப்பு சந்தோஷம் கிடைத்திருக்கும் சுந்தரத்திற்கு. அவர் குடும்பத்துடன் சென்றிருந்தால் கூட யாரும் இவரை மதித்திருக்க மாட்டார்கள்.

  இதுவே நல்லது என்று தோன்றியது. குடும்பத்தார் புரிந்து கொள்ளும் காலம் வராமலா போகும்.!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக அவரைப் புரிந்து கொள்ளும் காலம் வரும்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. ஒரு வேளை பட்டீஸ்வரத்தில் குடும்பம் இவரைச் சந்திக்க நேருமோ?

  ஆஹா கேள்வி எழுப்பிவிட்டேன் இப்போ துரை அண்ணா இதன் தொடர்ச்சியாகக் கதை எழுத அதுவும் வரும் என்று !!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த கதைக்கான விதையை ஊன்றி விட்டீர்கள்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. கற்பூரவாசனை (சுந்தரம்) கணேசமூர்த்தி போன்றவர்களுக்காவது தெரிகிறதே மகிழ்ச்சி.

  அழகிய கதை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. /நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
  எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
  என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு/இதுதான்பிரச்சனையே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. வித்தியாசமான கதைக்களன். சிறப்பான சப்ஜெக்ட்.

  சில சமயம் என்னைப் பார்த்துக்கொண்டேன்.

  நேரமில்லை. பிறகு வந்து எழுதுவேன்.

  பெரும்பாலும் யாரும் எதையும் சின்சியராகச் செய்ய விரும்புவதில்லை. அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து மனச் சமாதானத்தைத் தேடணும்.

  திருப்பதி கோவில்ல உடனேயே ஜரிகண்டி சொல்லி தள்ளி விட்டுடறாங்கன்னு அங்கலாய்ப்பாங்க. சரிடா.. உனக்காக ஐந்து நிமிஷம் தரிசிக்கோன்னா அரை நிமிடத்துல மத்தவங்க மூஞ்சியிப் பார்ப்பாங்க இல்லைனா, கோண்டு பெருமாள் நல்லா தெரியறாரா சேவிச்சுக்கோ என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.

  யாருமே நல்ல இன்ஃபரமேஷனோ ஆலோசனைகளையோ நெறிமுறைகளைச் சொல்லுவதையோ விரும்புவதே இல்லை.

  அதுனால இன்றைய உலகத்தில் சுந்தரம் போன்றவர்கள் பைத்தியக்கார்ர்கள்.

  நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   >>> சுந்தரம் போன்றவர்கள் பைத்தியக்காரர்கள்..<<<

   என்றாலும் அவரையும் மதித்துத் தானே கணேசமூர்த்தி வந்திருக்கிறார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 16. எனக்கு சட்னு நம்ம ஜம்புலிங்கம் சார் நினைவுக்கு வந்தார். தவறா எண்ணிடாதீங்க.

  அவர்கிட்ட இந்தக் கோவில் பக்கத்துல நிற்கறேன். ஒரு மணி நேரம் இருக்கு, என்ன பார்க்கணும்னு கேட்டுப் பாருங்க. எவ்வளவு அருமையா விளக்கி சின்னக் குழந்தைக்குச் சொல்ற மாதிரி சொல்வார். எங்க அப்பாவும் அதுமாதிரி மெடிகுலஸ்.

  உண்மையான ஆர்வம் இல்லைனா இவங்களை மாதிரியான அறிஞர்களை தொந்தரவு செய்யக் கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்புக்குரிய ஜம்புலிங்கம் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 17. மிகச் சிறப்பான அழகான கதை...
  அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 19. அனுபவங்களின் தொகுப்பே கதையாக... அருமை ஐயா...

  கவிஞர் கண்ணதாசன் :-

  இருளில் விழிக்கின்றாய்...
  எதிரே இருப்பது புரிகின்றதா...?

  இசையை ரசிக்கின்றாய்
  இசையின் உருவம் வருகின்றதா...?

  உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
  வெளியே தெரிகின்றதா...?
  வெளியே தெரிகின்றதா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 20. " பட்டீச்சரத்தாள் கூப்பிட்டு விட்டாள்!..'' - என்று..//

  க்ணேசமூர்த்தி வாயிலாக தன் பக்தனை அழைத்து விட்டாள் துர்க்கை அம்மன்.

  கதை மிக அருமையாக இருக்கிறது. இப்போது உள்ளவர்களின் நிலையை அழகாய் எடுத்து சொல்கிறது கதை.

  நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் எதுவும் சொல்லாமல் விஷயம் தெரிந்தவர்கள்.


  இப்போது உள்ள அவசர உலகத்தில் இப்படித்தான் சிலரால் பல கோவில்களை பார்க்க முடிகிறது.

  இந்த கோவில் போனால் இந்த பலன் அந்த கோவிலில் இந்த பலன் என்றால்தான் கோவிலுக்கு கூட்டம் வருகிறது.
  திருவெண்காட்டில் நாங்கள் இருக்கும் போது இவ்வளவு கூட்டம் இருக்காது. அப்போது சுவேதாரணயர் பிரம்மவித்யாபிகை கோவில் என்றால் இப்போது உள்ளவர்களுக்கு தெரியாது புதன் கோவில் என்றால் தெரியும்.

  ஆடி அமாவாசை, தை ஆமாவாசை என்றால்தான் முக்குளம் குளிக்க மக்கள் வருவார்கள்.

  இப்போது நவகிரககோயில் அழைத்து செல்பவர்களால் விளம்பரம் செய்யப்பட்டு இப்போது எப்போதும் கூட்டம் கோயிலில்
  மூலவரை கூட தரிசனம் செய்யாமல் புதனை தரிசனம் செய்து விளக்கு போட்டு அர்ச்சனை செய்து ஓடி விடுவார்கள் கேதுவை தரிசிக்க.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   >>> மூலவரை கூட தரிசனம் செய்யாமல் புதனை தரிசனம் செய்து விளக்கு போட்டு அர்ச்சனை செய்து ஓடி விடுவார்கள் கேதுவை தரிசிக்க...<<<

   உண்மையைச் சொல்லி இருக்கின்றீர்கள்...
   நவக்கிரக தலங்கள் என்று சொல்லப்படும் தலங்களில் இது தான் நிலைமை...
   குறுக்கு மறுக்காக தடுப்புகளை அமைத்து சந்நிதி முறையை மாற்றி விடுகின்றார்கள்...

   ஆன்றோர்களும் அமைதியாக இருப்பது வருத்தத்துக்கு உரியது..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 21. // எங்க கூட நீங்களும் வந்து கோயில் பெருமை எல்லாம் சொல்லி
  வழிகாட்டணும்.. ன்னு ஆசை... உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே?...'//

  இப்படி விரும்பி அழைப்பவர்களுடன் வரலாறுகள் பேசி மகிழலாம்.'

  //எங்காவது உள்ள சிவலிங்கத்தை இதுதான் இந்த ஊர் சிவலிங்கம் என்று உளறி வைப்பது...//

  இப்படி எதையாவது அனுப்பி வைப்பது அதை 10 பேருக்கு பகிரவும் என்று வேறு போடுவார்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> //எங்காவது உள்ள சிவலிங்கத்தை இதுதான் இந்த ஊர் சிவலிங்கம் என்று உளறி வைப்பது...//<<<

   இப்படித்தான் செய்கின்றார்கள் ... நெல்லை அவர்களுக்குக் கூட டில்லியிலுள்ள (ஸ்வாமிமலை) முருகன் கோயிலை தஞ்சை மாவட்டத்து முருகன் கோயில் என்று காணொளியை அனுப்பி வைக்க - அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்...

   இந்தப் பதிவில் காணப்படும் சிவலிங்கம் கூட இப்படி எங்கோ உள்ளது தான்..
   நெல்லை என்பது தவறான தகவல்...

   இன்னும் இது மாதிரி எத்தனை எத்தனையோ...

   நீக்கு
 22. // மூலவரை கூட தரிசனம் செய்யாமல் புதனை தரிசனம் செய்து விளக்கு போட்டு அர்ச்சனை செய்து ஓடி விடுவார்கள் கேதுவை தரிசிக்க.//
  ரொம்ப சரி. திருநள்ளாறு இப்போது சனீஸ்வரன் கோவிலாகி விட்டது. காலக்கொடுமை!
  இன்று காலை கூட காணக்கிடைக்காத ஒப்பிலியப்பன் தரிசனம் என்று ஒரு காணொளி வாட்ஸாப்பில் வந்தது. கடைசியில் அது சிங்கப்பூரில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பல வருடங்களாக சுத்திக்கிட்டிருக்கு. இந்தமாதிரி பொய் செய்திகளை பரப்பறவங்களுக்கு காராக்கரஹம்தான்

   நீக்கு
  2. ஆமாம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்னு யாரோ ஒரு பள்ளி கொண்ட பெருமாளைப் போட்டிருந்தார்கள். இல்லைனு சொன்னதுக்குத் திட்டு! பின்னர் தெரிந்தது அது அடையாறு அனந்தபத்மநாபர் என! அப்புறம் கூட அவங்க மன்னிப்பெல்லாம் கேட்கலை!

   நீக்கு
  3. இப்போதும் கூட உறவில் ஒருவர் என்னை புதை பொருள் ஆராய்ச்சியாளர் எனக் கிண்டல் செய்வார். கண்டுக்கறதே இல்லை. குடும்ப விஷயங்களிலும் பழசை நினைவு வைச்சிருப்பதாலும் இம்மாதிரிக் கோயில்கள் பற்றிய தகவல்களைச் சொல்வதாலும் இந்தப் பெயர்! :)))))

   நீக்கு
  4. @ பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு...
   >>> இன்று காலை கூட காணக்கிடைக்காத ஒப்பிலியப்பன் தரிசனம் என்று ஒரு காணொளி வாட்ஸாப்பில் வந்தது. கடைசியில் அது சிங்கப்பூரில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலாம்.<<<

   ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு யுகாதி அன்றைக்கு அவ்வூர் முஸ்லீம்கள் வந்து தரிசனம் செகிறார்கள்.. அதன் காணொளியும் வந்தது... தஞ்சையம் பதியிலும் பதிவாக வந்தது..

   இப்போது அதை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கோயில் என்று பொய்யான தகவல் பரப்புகின்றார்கள்.....

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 23. //அப்போதைக்கு, ஓஹோ!... என்பவர்கள்.. சுந்தரம் அங்கிருந்து நகர்ந்ததும் ஏளனமாகப் புன்னகைப்பார்கள்... //
  இதெல்லாம் நிறைய பட்டு விட்டேன். அங்கிருந்து நகர வேண்டாம், நாம் அங்கிருக்கும் பொழுதே ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
  "உங்காத்து மாமியின் வியாக்கியானத்தை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று என் கணவரிடம் கூறியிருக்கிறார்கள்.
  ஒரு முறை இப்படி எதிலும் நாட்டமில்லாத ஒரு கும்பலோடு ஒரு கோவிலுக்குச் சென்று விட்டு, அந்த கோவிலிலிருந்த தல புராணத்தை படித்து விட்டு அதைப் பற்றி பதிவு போட்டதும், அந்த குடும்பத் தலைவர்,"கூகுளில் நிறைய விஷயம் திரட்டியிருக்கிறீர்கள் என்று தெரிந்தது" என்று பின்னூட்டமிட்டிருந்தார். என் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா. இதுபோல கீதா சாம்பசிவம் மேடம் எத்தனை பேர்கள்ட வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறாரோ.

   அடுத்தவர்களை மட்டம் தட்டும் ஈனப் புத்தி ஏன்தான் மக்களிடம் இருக்கோ. எந்த முகத்தோட அவங்கள்லாம் கோவிலுக்குப் போயி

   நீக்கு
  2. ம்ம்ம்ம்ம், எனக்கும் நடந்திருக்கு. இப்போ இல்லை. முன்னாலேயே. பிறந்த ஊர்ப் பெருமை தெரியலையேனு ஒருத்தர் கிட்டே சொல்லப் போக அவங்க காய்ச்சி எடுத்துட்டாங்க! அதுக்கப்புறமாத் தான் அவங்களோட எல்லாம் கோயில்கள், சுற்றுலானு போவது இல்லை. கூடியவரை நாங்க தனியாப் போகிறோம்.

   நீக்கு
  3. you are right! :))))))அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த நெருங்கிய சொந்தத்திடம்!

   நீக்கு
  4. @@ பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு...
   >>> உங்காத்து மாமியின் வியாக்கியானத்தை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று என் கணவரிடம் கூறியிருக்கிறார்கள்...<<<

   இதைக் கேட்டு தங்கள் மனம் எவ்வளவு வருந்தியிருக்கும்?..

   நீக்கு
 24. //" பட்டீச்சரத்தாள் கூப்பிட்டு விட்டாள்!..''// சுற்றுலா சென்றவர்கள் அம்மனை பார்த்திருக்கலாம். அம்மனோ உண்மை பக்தனை தரிசிக்க விரும்பி அழைத்திருக்கிறாள். நல்ல முடிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சுற்றுலா சென்றவர்கள் அம்மனை பார்த்திருக்கலாம். அம்மனோ உண்மை பக்தனை தரிசிக்க விரும்பி அழைத்திருக்கிறாள்...<<<

   தங்களது கருத்துரையில் மனம் நெகிழ்ந்தது...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 25. நாம் இறைவனைப் பார்க்க விரும்பும்போது அவனே தன் கோயிலுக்கு அழைப்பான். இதனை நான் பல முறை அனுபவங்களில் கண்டுள்ளேன். தம்பிரான்தோழர் சுந்தரர் எப்படி சிவபெருமானுக்கோ அப்படியே பட்டீஸ்வரம் துர்க்கை எனக்கு. எங்களுக்குள் அவ்வளவு தோழமை. பள்ளிப்பருவத்திலிருந்தே அவளைக் கண்டுவிட்டு வந்தால் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேஇருக்காது. என் வாழ்வின் ஏற்ற இறக்க காலங்களில் அவளிடம் தனியாகச் சென்று பேசிவிட்டு வருவேன், அன்னியோன்னியமாக. இன்னும் தொடர்கிறேன். ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு அவள்மீது எனக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாகச் சொன்னீர்கள். இறையனுபவம் ஒவ்வொருவருக்கும் அவரது மனப் பக்குவம், பக்திய்ன் ஆழ்நிலை ஆகியவற்றுக்கேற்றவாறு நிகழலாம். கடவுளிடம் பக்தன் one-to-one -ஆக நேரடித் தொடர்பில்தான் இருக்கமுடியும். அப்படித்தான் அதுவே நிகழும். இடைத் தரகர்கள் -அவர்கள் யாராயினும்- தேவையில்லை.

   நீக்கு
  2. மேலே ‘மனப் பக்குவம்’ என்பதற்குப் பதிலாக ‘மனத் தூய்மை’ எனக் கொண்டால் சரியெனத் தோன்றுகிறது

   நீக்கு
 26. உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கார் துரை. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். உண்மையில் இந்தக் கதையின் நாயகரான சுந்தரம் அவர்களுக்கு இருக்கும் அறிவுக்குப் பத்திரிகைகளுக்கு எழுதலாம். அப்போக் குடும்பத்தாருக்குப் பெருமை பிடிபடாது. அல்லது அவராகவே வெளியூர்க்காரர்களுக்கு வழிகாட்டியாகப் போயிடலாம். வருமானமும் கிடைக்கும். குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பதற்குப் பதில் சொன்னாப்போலயும் ஆகும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //..அவராகவே வெளியூர்க்காரர்களுக்கு வழிகாட்டியாகப் போயிடலாம். வருமானமும் கிடைக்கும். //

   வயசு எதுவானாலும் ஒருவருக்கு ’வருமானம்’ வந்துகொண்டேதான் இருக்கவேண்டுமா? அது வரவில்லையெனில் ஆள்.. அவ்வளவுதானா!

   நீக்கு
  2. அந்த வயசில் கையில் பணம் இருந்தால் தெம்பும், தைரியமும் அதிகமாகவே இருக்கும். இம்மாதிரி நிகழ்ச்சிகளைத் தூக்கிப் போடச் சொல்லும். எத்தனை வயதானவர்கள் வருமானம் இல்லாமல் பிள்ளையையோ, பெண்ணையோ நம்பிக் கொண்டு இருப்பதால் நொந்து போயிருக்கிறார்கள் தெரியுமா?

   நீக்கு
  3. அவர் சொல்லும் புராணக்கதைகளை ஏற்பவர்கள் இருக்கிறதும், அதற்கான வருமானமும் வருவதுமே குடும்பத்தில் அவரை கௌரவமாக நடத்த வழி தேடிக் கொடுக்கும்.

   நீக்கு
  4. நீங்கள் சொல்வதுபோல், கடைசிக் காலத்தில் பணமின்றி இன்னொருவர் கையை எதிர்பார்த்திருப்பது கொடுமைதான். அந்தத் துன்பம் பலருக்குண்டு நம் நாட்டில்.

   ஏழையாகப் பிறந்து ஏழையாகவே இறந்தவரும் எண்ணற்றவர். வறுமை மனிதனை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகிறது.

   நீக்கு
  5. @ Geetha Sambasivam..
   >>> உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கார் துரை. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். <<<

   அன்பின் அக்கா ...
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 27. அவசர ஆன்மீகத்தை போட்டுத் தாக்கு; அப்படியே வாட்ஸப்பு தலையிலயும் ஓங்கி ஒன்னு போடு - என்கிற சிந்தனைதான் கதையின் கருப்புள்ளியோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன் ...

   >>> அவசர ஆன்மீகத்தை போட்டுத் தாக்கு; அப்படியே வாட்ஸப்பு தலையிலயும் ஓங்கி ஒன்னு போடு - என்கிற சிந்தனைதான் கதையின் கருப்புள்ளியோ? <<<

   ஆமாம் .. இதுதான் கதையின் கரு...
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 28. வணக்கம் சகோதரரே

  மிக அருமையான கதை. சொந்த உறவுகள் இவர் தேவையில்லாமல் பேசுகிறார் என ஒதுக்கி வைத்து அவர் மனதை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும், வந்து அழைத்தவள் அன்னையல்லவா.! பெற்றெடுத்த அன்னையை விட அன்பு காட்டுபவள் இவர் தன்னை பார்க்க வராததை பொறுப்பாளா? வேறு ரூபத்தில் வந்து கைப்பற்றி அன்புடன் அழைத்துப் போகிறாள். கடைசி பாராவை படிக்கும் போதே மனம் சிலிர்த்தது. கதையின்படி பல இடங்களில் நடக்கிறது. நல்லதொரு மனம் லயிக்கும்படியான ஆன்மிக கதையை தந்த தங்களுக்கு பனிவான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> மற்றவர்ஒதுக்கி வைத்து அவர் மனதை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும், வந்து அழைத்தவள் அன்னையல்லவா.! பெற்றெடுத்த அன்னையை விட அன்பு காட்டுபவள் இவர் தன்னை பார்க்க வராததை பொறுப்பாளா?..<<<

   அன்னையின் அன்பினுக்கு நிகரேது...

   தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 29. இக்காலம் சுந்தரத்தின் கருத்துக்களை கேட்கும் பொறுமை இல்லை.அவரவருக்கு நிறம்பத்தெரியும் என்ற எண்ணமும் உள்ளது.

  சுந்தரத்தின் மனம் கோணாமல் நல்லதோர் முடிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சுந்தரத்தின் மனம் கோணாமல் நல்லதோர் முடிவு..<<<

   தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 30. மனைவி கூட கவலைப்படாமல் கிளம்புவது நெருடலையும், வருத்தத்தையும் தரும் நேரம், அதனாலேயே ஆண்டவன் மறுகதவைத் திறக்கிறான் போலும். நம்மை அலட்சியப்படுத்தியவர்கள் முன்னாலேயே நம் முக்கியத்துவம் நிலைநிறுத்தபப்டுவதை விட மனிதனுக்கு மகிழ்ச்சி வேறு உண்டா என்ன! நீதியை தெய்வம் அன்றே சொல்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   காலத்தை - மருமகளை - அனுசரித்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் காமாட்சிக்கு..
   பாட்டியிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பேரன்.. அதுவும் ஒரு சுகமான சுமை தானே..

   >>> நம்மை அலட்சியப்படுத்தியவர்கள் முன்னாலேயே நம் முக்கியத்துவம் நிலை நிறுத்தப்படுவதை விட மனிதனுக்கு மகிழ்ச்சி வேறு உண்டா என்ன! நீதியை தெய்வம் அன்றே சொல்கிறது..<<<

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
  2. //மனைவி கூட கவலைப்படாமல் கிளம்புவது நெருடலையும், வருத்தத்தையும் தரும் நேரம்,// - இல்லை ஸ்ரீராம். நீங்க சொல்றது ப்ராக்டிகல் கிடையாது. ஓய்வுகாலம் வந்த பிறகு, பிறரை அட்ஜஸ்ட் செய்துதான் வாழணும். இளைய தலைமுறைதான் வீட்டிற்கு ராஜா. கணவனுக்காக ரொம்ப பரிஞ்சு பேச மாட்டாங்க மனைவிகள். அவங்க ஊரோடு ஒட்டி வாழத் தெரிந்தவங்க.

   நீக்கு
  3. அன்பின் நெல்லை..

   சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..
   எனக்கு இந்த அளவாகச் சொல்வதற்குத் தெரியவில்லை..

   வாழ்க நலம்..

   நீக்கு
 31. இதை தான் எங்க ஊர்ல சொல்லுவாங்க"கொல்லைப் பக்கத்துக்கு மூலிகைக்கு பலன் இல்லைன்னு". யாரு கண்டா அந்த வீட்டில் கூட அதே போல் ஒரு பெரியவர் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 32. இனிய காலை வணக்கம்.

  சிறப்பான கதை. இப்போது கோவில் போவதே பொழுது போக்காக மாறி விட்டது. நல்லதை யாரும் விரும்புவதில்லை என்பதும் நிஜம்.

  நிதர்சனமான கதை. பாராட்டுகள் துரை செல்வராஜூ ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!