செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : கேட்ட வரம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

கேட்ட வரம்
- பானுமதி வெங்கடேஸ்வரன் - 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 


"எதைப்பார்த்து இத்தனை சந்தோஷம் உங்களுக்கு?"  குரல் கேட்டதும்தான், கௌசல்யா அங்கு வந்திருப்பதை உணர்ந்தார். 

"அங்கே பார், நம் குழந்தைகளின் சந்தோஷத்தை? அதை விட வேறு எது நமக்கு மகிழ்ச்சி தரும்?"

தசரதர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த கௌசல்யா,"நம் குழந்தைகளாகவே இருந்தாலும், தனிமையில் இருக்கும் தம்பதிகளை கவனிப்பது தவறு. மேலும், பெற்றோர்களின் கண் மிகவும் பொல்லாதது. அவர்களுக்கு கண்ணேறு பட்டு விடப்  போகிறது நகர்ந்து வாருங்கள்." கணவரை நகர்த்தி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்தாள். 

" நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது...! விஸ்வாமித்திரர் வந்து தன் யாகத்தை பாதுகாக்க ராமனை துணைக்கு அழைத்தது, நான் தயங்கியது, பிறகு வசிஷ்டர் ஆலோசனைப்படி அனுப்பி வைத்தது, பிறகு ராமன் ஜனகரின் சிவ தனுசை முறித்து சீதையை மணக்கும் வாய்ப்பை பெற்று விட்டான் என்று செய்தி வந்தது...எல்லாம் நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது." பழைய நினைவுகளில் ஆழ்ந்த தசரதர் தொடர்ந்து, "அப்போது குழந்தை பருவத்தை கடந்து, யுவனாக மாறிக் கொண்டிருந்த ராமன், இன்று கட்டிளம் காளையாகி விட்டான், அவனுக்காகவே பிறந்தது போன்ற, எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடான மனைவி சீதா. சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள், என்றாலும்.. " என்று இழுத்து நிறுத்த, 

"அவர்களின் சந்தோஷத்திற்கு சாட்சியாக இன்னும் ஒரு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை என்பதுதானே உங்கள் வருத்தம்?" என்ற கௌசல்யா, தொடர்ந்து "என்ன செய்வது இது சூரிய வம்சத்திற்கு ஏற்பட்ட சாபமோ? ஹரிச்சந்திர மஹாராஜாவுக்கே நீண்ட காலம் கழித்துதான் லோகிதாசர் பிறந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பாட்டனார் திலீப சக்ரவர்த்திக்கும் இது நிகழ்ந்தது, நமக்கும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பிறகுதானே மழலைச் செல்வம் வாய்த்தது? ராமனுக்கும்  பிறக்கும். ஆனால் அதற்கு முன்னால் ராமனுக்கு இன்னும் கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது நல்லதில்லையா?"

"பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்து விட்டால் இறக்கி வைக்க முடியாது கௌசல்யா, பாவம் அவன் குழந்தை, இன்னும் சிறிது நாட்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே. நான் திடமாகத்தானே இருக்கிறேன்.."ஊஞ்சலில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் போட்டுக்கொண்டார்.

பதில் எதுவும் சொல்லாத கௌசலை, மெல்ல சிரிப்பதை பார்த்த தசரதர்,"எதற்காக இந்த சிரிப்பு?" என்றதும்,

"வேறு ஒன்றும் இல்லை, பெண்களைப் பெற்றவர்களுக்கும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்தேன், சிரிப்பு வந்தது"

"என்ன வித்தியாசம்?"

"பெண்ணைப் பெற்றவர்கள், அந்த பெண்ணை குழந்தையாக கருதுவது சொற்ப காலத்திற்குத்தான். மிகச்சிறிய வயதிலிருந்தே எதிர்காலத்தில் அவள் ஒரு குடும்பத்தலைவியாக விளங்க வேண்டியதற்காக அவளை தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்."

"நீ ஏதோ பூடகமாக பேசுகிறாய் கௌசல்யா.."

"இல்லை அரசே, தெளிவாகத்தான் கூறியிருக்கிறேன். எனக்கு மாலை நேர பூஜைக்கு நேரமாகி விட்டது, வருகிறேன்"

"பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் விட்டுவிட்டு செல்வது தவறான பழக்கம்"

"என்ன செய்வது? அரங்கன் அழைக்கிறானே..?"

"ம்ம்.. நீ ரங்கநாதனை பூஜித்து, பூஜித்து, அவனே கீழே இறங்கி வந்து விடப் போகிறான்.."

"அப்படி வந்தாலும் வந்திருப்பது அவன்தான் என்று புரிந்து கொள்ளும் ஞானம் வாய்க்க வேண்டாமா?"

"என்ன, இன்றைக்கு ஏதோ பூடகமாகவே பேசுகிறாய்?"

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கௌசல்யா சென்று விட, தசரதனின் மனதுக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் , ரிஷி பத்தினியாகியிருக்க வேண்டியவள் நாடாளும் அரசனின் பட்ட மகிஷி ஆகி விட்டாள். என்ன சொல்கிறாள்? ராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்கிறாளா? எதையும் உடைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவள் மனதில் உள்ளது சுமித்ராவுக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவள் தனக்கென்று கருத்து எதுவும் இல்லாதவள். கைகேயிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு முன்னால் நம் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை பெற்று வரலாம்.

*******************************************************************************************
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு அரசர் தசரதர் வரப்போகிறார் என்பதை அறிந்து அங்கிருந்த மாணாக்கர்கள் பரபரப்பு அடைந்தார்கள். 

"தசரத சக்கரவர்த்தி வருகை தரப்போகிறாராமே? என்ன விஷயம்? ஏதாவது அரசாங்க ஆலோசனையா? நம்மால் அவரை அருகில் பார்க்க முடியுமா? பேச முடியுமா?" ஏகப்பட்ட யூகங்கள், ஹேஷ்யங்கள், ஆனால் அரசர் வரும்பொழுது அவர்கள் யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. சற்று தொலைவில் இருந்தபடிதான் அரசரை பார்க்க முடிந்தது.

வந்து தன்னை வணங்கிய தசரதனை ஆசிர்வதித்த வசிஷ்டர், எதுவும் பேசாமல் அருகிலிருந்த மரத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அதில் தாய்  பறவை ஒன்று கொஞ்சம் வளர்ந்து விட்ட தன் குஞ்சிற்கு பறக்க கற்றுக் கொடுப்பதை தீவிரமாக வேடிக்கைப் பார்த்தார். 

தாய்க்கு அருகில் உட்கார்ந்திருக்கும் குஞ்சினை பலவிதமாக பறக்கத் தூண்டும் தாய் பறவை, அதை சுற்றி சுற்றி பறந்து, குஞ்சின் கண்ணிற்குப் படாமல் மறைந்து கொள்ள, குஞ்சு பறக்கத் தொடங்கியது. 

"பார்த்தாயா தசரதா? பறவைகள், விலங்குகள் எல்லாமே உரிய பருவம் வந்ததும் தம் குழந்தைகள் சுயமாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் செயல்படுகின்றன.  தன்னையே சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை."  என்று கூறியதும், தசரதனுக்கு சட்டென்று மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. 

"நீ வந்த விவரத்தை கூறவே இல்லையே? என்ன விஷயமாக வந்தாய்?"

"இப்போது இந்த பறவை செய்ததைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன். ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன். அதுவும் கூடிய விரைவில் அதை நடத்த முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி. அதற்கு ஒரு பொருத்தமான நாளை தாங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும்." 

முகம் மலர தசரதனை மீண்டும் ஆசிர்வதித்த வசிஷ்டர், "சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஜோதிடம் பார்க்கக்கூடாது. நாளை காலை நானே அரண்மனைக்கு வருகிறேன், அப்போது முடிவு செய்யலாம்." என்றதும், ஒரு விடுதலை உணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், தசரதன் நிம்மதியாக உறங்கச் செல்ல, தன் அரண்மனையில், உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ராமன்.

*******************************************************************************************
ராமா என்ன இது?  உன் தந்தை உனக்கு பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவா நீ இங்கு வந்தாய்? கர தூஷணர்களை அழிக்க வேண்டும். கபந்தனுக்கு மோட்சம் அளிக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் விட ராவண சம்ஹாரம். நமக்கு உதவி செய்வதற்காக வந்த வாலி, வந்த நோக்கத்தை மறந்து எதிரியோடு கை கோர்த்துக் கொண்டு விட்டான், அவனை அவனறியாமல் அப்புறப் படுத்த வேண்டும். அது மட்டுமா? எத்தனை ரிஷிகள் உனக்காக வனத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? சபரி உனக்காகவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றையும் மறந்து நீ பட்டம் கட்டிக் கொண்டு அரச போகத்தை அனுபவிக்கப் போகிறாயா? இந்த பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது. பலவிதமாக சிந்தித்த ராமன் பட்டாபிஷேகத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தான். மிகவும் மகிழ்ச்சியோடு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் தந்தையிடம் எப்படி இதை கைவிடுங்கள் என்று சொல்வது? இதற்கு சிற்றன்னை கைகேயிதான் உதவ முடியும். ராமன் கைகேயியை சந்திக்க முடிவு செய்தான். 

அவன் சிற்றன்னை கைகேயியின் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது, அவனை வணங்கி, நின்ற தாதிப்பெண்களை ஜாடைக் காட்டி, வெளியே போகச்சொன்னான். தன் பஞ்சணையில் அமர்ந்து தன்னுடைய குதிரைக்காக வாங்கியிருந்த கழுத்து மணியை அழகு பார்த்துக் கொண்டிருந்த கைகேயியின் பின்புறமாகச் சென்று அவள் கண்களை பொத்தினான். 

பஞ்சு போன்ற அதே சமயத்தில் உறுதியான கரங்கள். மேனியிலிருந்து புறப்பட்ட சுகந்தம், "ராமா, என்ன இது விளையாட்டு? சிறு குழந்தை போல? 

"உங்களுக்கு நான் எப்போதுமே குழந்தைதானே அம்மா?"

"சரிதான், இதை சீதா கேட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்? ஆமாம், என்ன நீ மட்டும் வந்திருக்கிறாய்? சீதா எங்கே?" 

"ஏன்? நான் தனியாக வந்தால் ஆகாதா? பரதன் வேறு மாமா வீட்டிற்கு சென்றிருக்கிறான், தனியாக இருப்பீர்களே? பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தால்.." ராமன் போலிக் கோபத்தோடு எழுந்திருக்க, 

"இன்னும் நீ அதே பழைய ராமன்தான். சிடுக்கென்று வரும் அதே கோபம். நீ சிறுவனாக இருந்த பொழுது, பரதன் என் மடியில் அமர்ந்தால் உனக்கு காணப்  பொறுக்காது.."கைகேயி சிரித்துக் கொண்டே ராமன் தோளில் கை வைத்து இருக்கையில் அமர வைத்தாள். 

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கை தட்டி தாதியரை அழைக்க முற்பட, அவளை தடுத்த ராமன்," எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்.." என்று இழுத்து நிறுத்த, 

"வேறு என்ன வேண்டும்?" என்று அவனை கூர்மையாக பார்த்தபடி அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்த கைகேயியை பார்த்த ராமன் மனதுக்குள் வியந்தான். இந்த கூர்மைதான் தந்தைக்கு இவள் மீது அதிக ப்ரேமையை உண்டாக்கியதோ? அழகு, ஆளுமை, போர் களத்தைக் கண்டு அஞ்சாமல் லாகவமாக தேரை செலுத்தும் திறமை, எந்த அரசனுக்குத்தான் பிடிக்காது? அரசப்பதவி என்பது யானையின் மீது சவாரி செய்வதைப் போன்றது. கீழிருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் கம்பீரம் மட்டுமே தெரியும், அதிலிருக்கும் ஆபத்தையும், சிரமங்களையும் உணர்ந்து நடந்து கொள்ளும் மனைவியை கொண்டாடத்தானே தோன்றும். 

எதுவோ சொல்ல வந்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னையே வெறித்து  பார்த்தபடி அமர்ந்திருக்கும் மகனை பார்த்த கைகேயி," "என்ன ராமா? ஏதோ வேண்டும் என்றாய்..?"

சிற்றன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வைத்திருந்த குதிரைக்கான கழுத்து மணியை கைகளில் எடுத்துக் கொண்ட ராமன்,"குதிரைகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிரேமை இன்னும் குறையவே இல்லை"

"ஆமாம், ஏழு சகோதரர்களுக்குப் பிறகு ஒரு சகோதரியாக பிறந்ததாலோ என்னவோ ஆண்களைப் போலவே அவர்களுக்குரிய எல்லா விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டேன். குறிப்பாக, குதிரை ஏற்றமும், தேர் ஓட்டுவதிலும் தனி ஈடுபாடு". 

"அந்த திறமையை கொண்டுதான் சம்பாசுரனுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் என் தந்தைக்கு தேர் ஓட்டி உதவினீர்களோ?"

"அதெல்லாம் பழைய கதை. நீ என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாய், அதை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைக்கிறாய்"

"சில நொடிகள் தாமதித்த ராமன், அரசாங்கம் என்றால் எத்தனை போர்? எதற்கு இவ்வளவு யுத்தம்?

"சரிதான், விரைவில் பட்டம் சூட்டிக்கொண்டு நாட்டை ஆள வேண்டியவன் பேசுகிற பேச்சா இது?"

"அம்மா, உண்மையில் என்னை விட பரதனுக்குத்தான் நாட்டை ஆளும் தகுதி நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது."

"ராமா, என்ன ஆயிற்று இன்று உனக்கு? இது என்ன பேச்சு? மூத்தவன் நீ இருக்க, இளையவன் பரதன் அரசனாவதா? உன் தந்தை உனக்கு விரைவில் பட்டம் கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்".

"எனக்கும் அது தெரியும் தாயே" என்று கூறியபடியே தன் ஆசனத்தில் இருந்து எழுந்த ராமன், கைகேயியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவள் கண்களை உற்றுப் பார்த்து, "ஆனால் அது நடக்கக் கூடாது.தாங்கள்தான் என் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும்" என்றதும், 

"ராமா என்ன பிதற்றுகிறாய்?" 

"இல்லை தாயே, நான் வந்த நோக்கம் அயோத்தியில் அரசனாக ராஜா போக வாழ்க்கையை இப்போது அனுபவிப்பது அல்ல, எனக்கு வேறு சில கடமைகள் இருக்கின்றன."

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலுவது போல அப்படி என்ன பொல்லாத கடமை. 

அம்மா, எல்லாவற்றையும் உடைத்துக் கூற முடியாது. சில வருடங்கள் நான் வனவாசம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

ராமன் கூறியதை கேட்ட கைகேயி காதுகளை பொத்திக் கொண்டாள். "என்ன விபரீதம்? நாடாள வேண்டியவன் காட்டிற்குச் செல்வதா? ராஜாங்கம் என்னவாகும்? 
"அதற்குத்தான் என் தம்பி பரதன் இருக்கிறானே?"

"கொஞ்சம் கூட நியாயமில்லாத செயல். அதற்கு பரதன் உடன்படுவான் என்று எப்படி நினைக்கிறாய்?" 

"பரதன் தன் பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டான். நான் சொன்னால் ஏற்றுக் கொள்வான். அவனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு."

"இந்த அடாத செயலுக்கு உன் தந்தை உடன்படுவாரா?"

"அவரை உடன்படச் செய்யத்தான் உங்களை வேண்டுகிறேன். உங்களால்தான் அது முடியும்." 

"உங்கள் அரசியல் சதுரங்கத்தில் என்னை பகடைக் காயாக்கப் பார்க்கிறாய்." 

ராமன் கைகேயியின் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். "வேறு வழியில்லை அம்மா. என்னை மன்னித்து விடுங்கள்". 

ராமனின் பார்வையும், ஸ்பரிசமும் கைகேயியின் வாதிடும் குணத்தை மாற்றின. 

"நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" 

"எனக்கு பட்டம் கட்டப் போவதாக தந்தை கூறினால், அதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். அது போதும்." 

"இப்படி ஒரு இழி செயலை புரிந்த என்னை காலமெல்லாம் உலகம் தூற்றாதா?" 

"என்ன செய்வது அம்மா? காரணமில்லாமல் காரியம் இல்லை. எல்லா செயல்களும் நல்லதா கெட்டதா என்பதை அது நிகழும் நேரத்தை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.  மேலும் சில நன்மைகள் நடக்க வேண்டுமென்றால், சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவிகளை வகிப்பார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளிலும் அவர்கள் தன் முத்திரையை பதிப்பார்கள்." 

"இதுதான் உன் சங்கல்பம் என்றால் அது நிறைவேற தடையேது சீதாராமா?" பேசிக்கொண்டே கைகேயி உறக்க நிலைக்குச் செல்ல, அவளை படுக்கையில் கிடத்திய ராமன் மின்னலென வெளியேறினான்.

அவன் செல்லும் வழியில் தூரத்தில் மந்தரை வருவதைப் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டான். மனதிற்குள் சரஸ்வதி தேவியை துதித்தான். "வாக் தேவி தாயே, என் சிற்றன்னை கைகேயியை பார்க்கச் செல்லும் இந்த மந்தரையின் வாக்கை செல்லும் வாக்காகச் செய். இவள் சொல்வதை என் தாய் கைகேயி கேட்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்தான். 

அங்கே   கண் விழித்த கைகேயி குழம்பினாள்."என்ன இது பகலில் இத்தனை நேரம் தூங்கி விட்டேன்? என்னென்னவோ கனவு. அது கனவா? நிஜமா? ராமன் மட்டும் வந்தது போல இருக்கிறது. என்னென்னவோ பேசினான். அவனுக்கு பட்டாபிஷேகமாம், ஆனால் பரதன்தான் அரசனாக வேண்டுமாம், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போலக்கூட தோன்றியது... என்ன கனவு இது? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, ஒரு தேவ நாடகத்தை அரங்கேற்ற மந்தரை அவள் அரண்மனைக்குள் நுழைந்தாள்.


70 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. என்னடா இது...வம்பாோச்சு...முகநூலிலும்..ஏனய மற்ற பிற தடங்களிலும் வரும் கருத்துப்பதிவுளை படித்து..நிறய மண்டடைச்சல்...இதில்கைகேயி கணவா இல்லை ராமனின் உண்மை சம்பவமா..ஆஹா...நல்ல கதை ...

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  அட! இன்று பானுக்காவின் கதையா...சூப்பர்!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழிமொழிந்து வரவேற்கிறேன் நானும் அனைவரையும்.

   நீக்கு
  2. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் தினம் தினம் நான் வரவேற்கவில்லை எனக் குறைப்படும் நெ.த.வுக்கும் நல்வரவு, வாழ்த்துகள், வணக்கம், பிரார்த்தனைகள். நெ.த. சிதம்பரத்திலிருந்து கிளம்பியாச்சா? பக்கத்தில் காட்டுமன்னார்குடியில் வீரநாராயணப் பெருமாளையும் வீராணம் ஏரியையும் போய்ப் பார்க்கக் கூடாதோ?

   நீக்கு
 4. காரணம் அல்லாத காரியம் இல்லை...

  இதுதான் சாரம்..

  உண்மையை உணர்ந்து கொள்பவர்களுக்கு ஒருநாளும் துயரம் இல்லை...

  பதிலளிநீக்கு
 5. சம்பராசுர யுத்தத்தின் வெற்றிக்குக் காரணமானவள் கைகேயி...

  தசரதனின் அதீத அன்பினைப்
  பெற்றிருந்ததும் கைகேயியே!...

  பதிலளிநீக்கு
 6. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று என்னுடைய கதையா? கருத்துரைகளுக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. படிக்கச் சுவையாக இருக்கிறது. என்ன, கம்பர் கோபித்துக் கொள்வார்.அவ்வளவ்தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கோபத்தை கம்பர் மீது ஏற்றி விட்டீர்களோ..? ஹாஹாஹா! எனிவே நன்றி.

   நீக்கு
 9. பானுக்கா கதை ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க.

  கௌசல்யா அரங்கன் பக்தை என்பதும் கைகேயியின் திறனும் இப்போதுதான் அறிகிறேன்.

  //குதிரைக்காக வாங்கியிருந்த கழுத்து மணியை அழகு பார்த்துக் கொண்டிருந்த கைகேயியின் //

  செம! மிகவும் ரசித்தேன். அது போல பறவைகளைச் சொல்லிய இடத்தையும் மிகவும் ரசித்தேன்.

  பறவைகள், விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை அதன் குணாதிச்யங்களை கதைகள் வடிவில் என் மகனுக்கு நிறைய சொல்லி உதாரணமாகச் சொல்லி அவன் தனித்தும் செயல்பட வேண்டும் என்பதற்குச் சொன்னதெல்லாம் நினைவுக்கும் வந்தது.

  அருமை பானுக்கா. வாழ்த்துகள் பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   பானுமாவின் கதை இராமர் காலத்துக்கு அழைத்துச்சென்றூ
   விட்டது.
   கோர்வையாக நிகழ்ச்சிகளைக் கோர்த்திருக்கிறீர்கள்.

   ராமன் எப்பொழுதுமே தன்னை தெய்வமாக உணர்ந்ததில்லையே.
   நீங்கள் வேறு கோணத்தில்
   அருமையாகச் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.
   கைகேயின் மேல் பாசம் எழச் செய்து விட்டீர்கள்.
   மனம் நிறை வாழ்த்துகள் பானுமா.

   நீக்கு
  2. அரங்கன் இக்ஷ்வாகு குலதனம் என்பதும் அவனைத் தான் விபீஷணனுக்கு ஸ்ரீராமர் பரிசாகக் கொடுத்தார் என்பதும் ஸ்ரீரங்கம் வரலாற்றின் மூலம் நாம் அனைவரும் அறிந்திருப்போமே!

   நீக்கு
  3. நன்றி கீதா. பாராட்டுவதில் நீங்கள் வள்ளல். மிக்க நன்றி.

   நீக்கு
 10. பொதுவாகக் கூனி, கைகேயி இருவரையும் வில்லிகளாகத்தான் பார்க்கப்படுவார்கள். ஆனால் உங்கள் கதையில் பாசிட்டாவாகச் சொன்னதற்கும் பாராட்டுகள்.

  ஆனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்பதையும் இதில் ஒரு பாடமாகக் கொள்ளலாம். நம் வாழ்க்கையிலும். அப்போது எவரிடத்தும் நமக்குக் கோபம், பழிவாங்கும் உணர்ச்ச் வராது இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
 11. கேட்ட வரம் என்னும் தலைப்பு இதே தலைப்பில் "அநுத்தமா" அவர்கள் எழுதிய நாவலை நினைவூட்டியது. அதிலும் ஸ்ரீராமன் பற்றித் தான்! ராமநவமிக் கொண்டாட்டங்கள் பற்றி வரும். இதிலே ராமனே வந்துவிட்டான். இம்மாதிரி ஒரு கருவை முன்னரும் படித்த நினைவு. திருப்பூர் கிருஷ்ணன் எழுதினாரோ? நினைவில் இல்லை. இதில் ஸ்ரீராமன் தன்னுடைய அவதார மகிமையைத் தெரிந்து கொண்டு செயல்படுவதாக வருகிறது. நல்ல ஓட்டம். விவாதத்துக்கும், பட்டி மன்றக் கருவுக்கும் ஏற்றதொரு கட்டுரை. தன் வழக்கத்தை மீறி (ராமாயணம் என்பதாலோ) நீளமாக எழுதி இருக்கார் பானுமதி! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இம்மாதிரி ஒரு கருவை முன்னரும் படித்த நினைவு. திருப்பூர் கிருஷ்ணன் எழுதினாரோ?// அப்படியா? நான் படித்ததில்லை. இந்த கருத்து தன்னுடைய ஆன்மீக குரு கூறியதாக என் மாப்பிள்ளை கூறியது.

   நீக்கு
  2. தினமலர் "ஆன்மிக மலர்" வரும் வாரங்களில் திருப்பூர் கிருஷ்ணன் ராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளின் காரண, காரியங்களை அலசி ஆராய்ந்து எழுதி இருப்பார். அதில் கைகேயி பற்றியும் எழுதி இருந்தார். எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் தேடணும்! :))))) இது சுமார் நாலைந்து வருடங்கள் முன்னர் வந்தவை! அதிலே தான் இந்த ஜோசியம் குறித்தும், ராமன் உயிரைக் காக்கவேண்டியே கைகேயி இத்தகைய வரம் கேட்டாள் எனவும் சொல்லி இருப்பார்.

   நீக்கு
 12. இதே போல் கைகேயிக்கு ஜோசியம் தெரிந்து கொண்டே ராமன் அரியணையில் அமரக்கூடாது என வரம் வாங்கிக் கொண்டாள் என்னும் கருவிலும் ஓர் கதை படித்துள்ளேன். அயோத்தி அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னருக்கு அப்போது ஜோதிட ரீதியாக உயிருக்கு ஆபத்து எனவும், ராமன் அரியணையில் அமர்ந்தால் அவனுக்கு ஏதேனும் ஏற்படும் என்பதால் கைகேயி ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு தசரதரையே இழந்ததாகவும், தன் மகன் பரதனைக் கூட இழக்கத் தயாராக இருந்ததாகவும் எழுதி இருப்பதைப் படித்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அப்படியா? இதை நான் கேள்விப்பட்டதில்லை.

   நீக்கு
  2. சக்தி விகடனில் வந்தது. பி.என்.பரசுராமன் எழுதி இருந்த நினைவு! திருப்பூர் கிருஷ்ணனும் எழுதி இருக்கார்.

   நீக்கு
 13. கைகேயியின் போர்ப்பயிற்சி சிறப்பாகச் சொல்லப்படுமே! அதனால் தானே அவள் தசரதனுக்குத் தேரோட்டும்போது வரங்கள் வாங்க முடிந்தது. தேரின் அச்சாணி கழன்று போய்த் தன் ஆள்காட்டிவிரலையே அச்சாணியாகப் பயன்படுத்தினாள் என்றும் சொல்வார்கள். அந்த விரலுக்கும் ஓர் கதை உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...

   கைகேயி துள்ளித் திரிந்த பருவத்தில் கேகய நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார் துர்வாசர்..

   ஒருநாள் துர்வாசர் நிஷ்டையில் இருக்கும் போது

   அவரது சுவாசத்தை தனது வலது சுட்டுவிரலை நீட்டி ககேயி சோதிக்க
   வழக்கம் போல துர்வாசர் சாபம் கொடுத்தார்..

   உணர்ச்சியற்ற இரும்பாகட்டும் என்று..

   அதற்கப்புறம் தான் விதிவிலக்கு..

   ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பொழுது இரும்பாக இருந்து சாபம் விலகட்டும் - என்று....

   நீக்கு
  2. ஆஹா! கீதா அக்கா எடுத்துக் கொடுக்க, துரை சார் முடித்து விட்டார். நமக்கு கிடைத்தது ஒரு புது செய்தி. நன்றி நன்றி.

   நீக்கு
  3. ஆமாம், துரை சொல்லி இருப்பது தான். நான் எழுதினால் கருத்து நீளமாக ஆயிடும்னு எழுதலை. துரை சுருங்கச் சொல்லிவிட்டார். :)

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. யுத்தத்தின் வெற்றியில் களித்திருந்த தசரதன் தான் சும்மா இருக்க மாட்டாமல் வரம் என்ன வேண்டும் கேள் .. என்று..

  அதற்கப்புறம் கூட அதில் நாட்டமில்லாத கைகேயி அப்புறமாக வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அதையும் மறந்து விட்டாள்..

  காலம் தான் மந்தரை வடிவில் வந்து
  இன்ன மாதிரியாகக் கேள் என்று தூண்டி விட்டது..

  ஆனாலும் -
  இதெல்லாம் முன்னமே வைகுந்தத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாடகம்...

  பதிலளிநீக்கு
 16. கதை வித்தியசமான கோணத்தில் அருமை.

  பட்டிமன்றத்தில் ஒவ்வொருவரும் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வலு சேர்ப்பார்கள்.

  //
  "பெண்ணைப் பெற்றவர்கள், அந்த பெண்ணை குழந்தையாக கருதுவது சொற்ப காலத்திற்குத்தான். மிகச்சிறிய வயதிலிருந்தே எதிர்காலத்தில் அவள் ஒரு குடும்பத்தலைவியாக விளங்க வேண்டியதற்காக அவளை தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்."//


  "ம்ம்.. நீ ரங்கநாதனை பூஜித்து, பூஜித்து, அவனே கீழே இறங்கி வந்து விடப் போகிறான்.."

  "அப்படி வந்தாலும் வந்திருப்பது அவன்தான் என்று புரிந்து கொள்ளும் ஞானம் வாய்க்க வேண்டாமா?"

  // மேலும் சில நன்மைகள் நடக்க வேண்டுமென்றால், சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவிகளை வகிப்பார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளிலும் அவர்கள் தன் முத்திரையை பதிப்பார்கள்." //

  இந்த கதையில் அனைத்து பாத்திரங்களும் உறையாடுவது அருமை. ராமனுக்கும் கைகேயிக்கும் இப்படி உரையாடல் நடந்து இருக்குமா என்று நினைக்கும் போது அது கனவு என்று சொல்லி இருப்பதும் அருமை.


  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும் போல் விரிவாகவும், அழகாகவும் விமர்சனம் செய்துள்ளீர்கள். நன்றி.

   நீக்கு
 17. 'பூடகமாக பேசின பேச்சு' மிகவும் பிடித்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? அதற்கு பொருத்தமாக தோன்றிய பாடலை குறிப்பிடவில்லையே? நன்றி.

   நீக்கு
 18. இனிய காலை வணக்கம்.

  ஆஹா இன்றைக்கு பானுமதி அம்மா எழுத்தில் ஒரு கதை.

  நல்ல கதை. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை என்றுணர்த்தும் கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 19. //காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லா செயல்களும் நல்லதா கெட்டதா என்பதை அது நிகழும் நேரத்தை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது//

  அருமை இது இன்றைய காலத்துக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா காலத்திற்கும் பொருந்தும் சகோ. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 20. கேட்ட வரம் என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே சடக்கென்று அநுத்தமா அவர்கள் நினைவு தான் வந்தது. பரமாச்சாரியாரே படித்துப் பாராட்டிய, பஜனை சம்பிரதாயங்களை வைத்து எழுதிய நாவல் அவரது கேட்டவரம். கேட்டவரம் பாளையம் என்ற ஊரை நிலைக்களமாகக் கொண்டதினால் நாவலுக்கும் கேட்டவரம் எனப்தே பெயராயிற்று.

  உங்களின் கேட்டவரத்திற்கு நிலைக்களம் அயோத்தியா?.. புராணக் கதையில் கை வைத்திருக்கிறீர்கள் என்றவுடனேயே கூடுதல் கவனம் வேண்டுமே என்ற கவலை. ஏனென்றால் நமது இதிகாசங்கள் இரண்டுமே கதை நெசவுகள் தாம். தறியில் புடவையை நெய்கிற மாதிரி. ஊடும் பாவுமாய் இங்கே விட்டதை அங்கே பொருத்தி, அங்கே சொன்னதை இங்கே சேர்த்து சரி பண்ணி, அந்த நெசவில்
  சிடுக்கே இல்லாமல் எப்படித் தான் ஒரு மாபெரும் கதையை நெய்தார்களோ என்ற பிரமிப்பு தான் மிஞ்சுகிறது. அந்த பிரமாதமான நெசவில் நாம் எங்கேயாவது கை வைக்கப் போய்.. அதான் கவலை.

  'ராமா என்ன இது? (என்று ஆரம்பிக்கும் இடத்திலிருந்து) பட்டாபிஷேகம் நடக்கக் கூடாது.. (என்று முடியும் வரை) -- பலவிதமாக சிந்தித்த ராமன் என்று தொடர்ந்து வருவதால் ராமன் என்ற இதிகாச புருஷனில் தெய்வ சிந்தனையா?.. ஓக்கே. ஓக்கே.

  கைகேயின் பாத்திரப் படைப்பில் மெருகேற்ற வேண்டும் என்று தீர்மானித்தது சரியே.. அவள் அளவுக்கு கரம் பிடித்தானுக்கு கை கொடுத்தவள் வேறு யாருமில்லை..

  அப்படியிருக்க அவள் ஏன் 'இராமனைக் காட்டுக்கு அனுப்பும் சிக்கலில்'
  பகடைக்காய் ஆனாள் என்பதற்கும் இன்னொரு கதையும் இருக்கக் கூடும்.

  'ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..' என்ற கவியரசரின் பாடல் வரியில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்து
  'நீ நடத்தும் நாடகத்தில் நீயும் உண்டு..' என்று தான் நினைக்கத் தோன்றியது.

  வாழ்த்துக்கள், சகோதரி!

  பதிலளிநீக்கு
 21. //அந்த பிரமாதமான நெசவில் நாம் எங்கேயாவது கை வைக்கப் போய்.. அதான் கவலை// இந்த விஷயம்தான் என்னை மிகவும் பயப்பட வைத்தது. ஒப்பேற்றி விட்டேன் போலிருக்கிறது.
  உங்களின் விரிவான அலசலும், பாராட்டும் மகிழ்ச்சி யளிக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. 'கேட்ட வரம்' என்னும் பெயரை தேர்ந்தெடுத்த பொழுது எனக்கும் அநுத்தமா எழுதிய கேட்ட வரம் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறு வயதில் படித்த கதை. கேட்டவரம்பாளையம்தான் அநுத்தமாவின் ஊர். அங்கிருக்கும் ராமர் கோவிலும், அதில் நடக்கும் சீதா கல்யாண உற்சவமும் இப்போதும் சிறப்புதான்.
  கைகேயி கேட்ஞ வரம், அதற்கு முன் அவளிடம் ராமன் கேட்ட வரம் என்பதால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

  பதிலளிநீக்கு
 23. //அப்படியிருக்க அவள் ஏன் 'இராமனைக் காட்டுக்கு அனுப்பும் சிக்கலில்'
  பகடைக்காய் ஆனாள் என்பதற்கும் இன்னொரு கதையும் இருக்கக் கூடும். //

  இது பற்றி தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் தேவலை.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரி

  நல்ல அழகான கதை. மிக அருமையுடன் கதையுடன் கோர்வையாக இணைத்து அற்புதமான நடையுடன் எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன். கனவில் வருவது போல் வந்து தான் பிறவி எடுத்ததின் உண்மையை ராமர் சுட்டிக் காண்பித்த மாதிரி கைகேயிற்கு தோன்றியது என்றவிடத்தில் தங்கள் கற்பனை சாதுர்யம் பிரமிக்க வைத்தது. மிகவும் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

  அகில உலகங்களையும் கட்டிக் காத்து வரும் வைகுண்டபதியான ஸ்ரீ மன்நாராயணன் அநீதியை அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட ஸ்ரீராம பிரானாகவும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாகவாகவும். மானிடப் பிறவியாக அவதாரம் எடுத்து வாழ்ந்ததோடு மட்டுமின்றி, இப்பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும், இப்படித்தான் விதி என்ற ஒன்றின் எழுத்துப்படி சுக துக்கங்களை சமமாக பாவித்து வாழ்ந்ததாக வேண்டுமென்ற உண்மையையும் சுட்டிக் காட்டியவர்கள். அப்படி அந்த விதியின் கருவிகளாக அன்று கூனியும், சகுனியும் அவர்களாலேயே படைக்கப்பட்டு அவர்களுடைய தக்க தருணங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். கருவிகளின் செயல்பாடின்றி எந்த ஒரு செயலும் பூர்த்தியானதாக சரித்திரம் இல்லையே.! இதோ இப்போதும் ஒவ்வொரு மனிதரின் விதியின் கருவிகளாக அவரவர் போன பிறவிகளில் செய்த பாவ,புண்ணிய செயல்கள்தானே உடனிருந்து செயல்பட்டு செயல்களை நடத்தி வருகின்றன.

  இதிகாச கதைகளில் ஒன்றுடன் ஒன்றாக ஆயிரம் உப கதைகள் பிணைந்திருக்கிறது. இந்தக் கதையும் மிகப் பொருத்தமாக ரசிக்கும்படி இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒவ்வொரு ஜீவனும், இப்படித்தான் விதி என்ற ஒன்றின் எழுத்துப்படி சுக துக்கங்களை சமமாக பாவித்து வாழ்ந்ததாக வேண்டுமென்ற உண்மையையும் சுட்டிக் காட்டியவர்கள்.// நம் புராணங்கள் இந்த கருத்தைத்தான் பண்ணிப்பண்ணி பேசுகின்றன. நம் மனதில் அது நன்றாக பதிய வேண்டும் என்பதற்காகத்தான் அவைகளை பாராயணம் பண்ண சொன்னார்கள். பிரவசனம் வைத்து கேட்க வைத்தார்கள்.
   நல்ல விமர்சனத்திற்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 25. கைகேயியின் பாத்திரப்படைப்பைக் கம்பனும் வால்மீகியும் கொண்டாடுகிற விதமே அலாதி! கைகேயி ஒரு no non sense, most practical character ஆகத்தான் பேசப்பட்டிருக்கிறாள்.பரதன் திரும்பி வருகிற சமயத்தில் அவனுக்காக தந்தை அரியணையை விட்டுச் சென்றிருக்கிறார் என்று சொல்கிற இடமும் பெற்ற மகனே அவளைத் தகாத வார்த்தைகள் சொல்லி நிந்தை செய்கிற இடத்திலும் கலங்காதவளாக, திடசித்தம் உள்ள ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பு.

  ராமாயணத்தில் படித்த கதைகளுக்கு முரண்தட்டுகிற மாதிரி எதுவும் இல்லாமல் கற்பனையாக ஒரு நளினத்துடன் கதை முடிந்திருக்கிறது என்பதன் பின் அசாத்தியக் கதை சொல்லும் திறமை பளிச்சிடுகிறது. அதற்காகவே பெரு பூங்கொத்துடன் என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் பா.வெ. அம்மா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் தெளிவான விமர்சனத்தையும், பாராட்டுதல்களையும் வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி.🙏🙏

   நீக்கு
 26. கேகயன் மகள்---

  உறுதி மிக்க நெஞ்சினாள்..
  வீர கலைகள் கற்ற பெண்ணாவாள்
  செருக்களத்தில் துணைவனுக்கு துணையாய் இருந்தவள்
  தான் பெற்ற பரதனை விட இராமனிடத்து மாறாத அன்பு கொண்டவள்

  -- இப்படிப்பட்ட வீரப் பெண்மணிக்கு ஏன் இந்த களங்கம்?
  முற்பிறவி, இப்பிறவி என்று எப்பிறவியில் அவள் செய்த தீங்கென்ன?
  ஏன் இந்த தண்டிப்பு?.. எதற்காக இந்த தண்டனை அவளுக்கு?..

  காரணம் -- காரியம் எல்லாம் பேசுகிறோம்.
  இதனால் இது என்று கைகேயிக்கான கதை ஏதாவது உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வியை விதைத்து விட்டீர்கள் பதில் கிடைக்காமலா போய்விடும்? தேடலாம் பெறுவோம்.

   நீக்கு
 27. மிக வித்தியாசமான கோணத்தில் ஒரு படைப்பு ...

  மேலும் மறு மொழிகளிலும் பல செய்திகள் ...மிக விறு விறுப்பாக..

  மிக சிறப்பு

  பதிலளிநீக்கு
 28. படிக்கும் போதே வேறுகோணத்தில் செல்லப்போகின்றது என புரிந்து கொண்டேன்.சிறந்தநடையில் நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்.
  "உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன்"....சிறந்த பொருத்தமான சிந்தனையாக தந்திருக்கிறீர்கள் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 29. //"உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன்"....சிறந்த பொருத்தமான சிந்தனையாக தந்திருக்கிறீர்கள்// இதை யாருமே குறிப்பிடவில்லையே என்று நினைத்தேன், கவனித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. படித்த எல்லோரும் கதையை அலசிவிட்டார்கள். நான் வேறு என்ன எழுதுவது? படித்து உடனே பானுவை கூப்பிட்டு பாராட்டியும் ஆயிற்று.
  கதையை ரசித்ததடன் கதையில் வரும் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ராமனும் சீதையும் நடந்து செல்லும் காட்சி,தசரதன் ஊஞ்சலில் இருகைகளையும் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்து இருப்பது என்று சித்திரக் கதையாக வடிப்பதற்குத் தோதாக எழுதியிருக்கிறீர்கள். அரசர் வரப்போகிறார் என்றதும் வசிஷ்டர் ஆச்ரமத்தில் ஏற்படும் பரபரப்பு, அரசரை அருகில் பார்க்க முடியுமா என்ற மாணவர்களின் எண்ணக் கேள்விகள் ஆ! மறந்து விட்டேனே தாய்ப் பறவை குஞ்சிற்குப் பறக்கச் சொல்லிக் கொடுக்கும் காட்சி - நேரிலேயே பார்த்து அதிசயத்திருக்கிறேன் - அதனால் அதிகம் ரசிக்க முடிந்தது.
  பாராட்டுகள் பானு.
  கோசலைக்கும் ராமனின் அவதார ரகசியம் தெரியுமோ?
  எப்படியோ கைகேயியை நல்லவள் ஆக்கிவிட்டீர்கள்.
  ஜீவி ஸார் கொடுத்திருக்கும் இழையைக் கொண்டு யார் கதையை எழுதப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவைகளையேதான் நானும் நினைத்து ரசித்திருந்தேன்.பானு அக்காவிடமும் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 31. இதே போல் தசரதனுக்கு ஒரு சாபம் உண்டு. புத்திர சோகத்தால் அவதிப்படுவாய் என்று. தசரதன் மகிழ்ந்தாராம். அப்படியாவது எனக்கு புத்திர பாக்கியம் உண்டு என்று தெரிகிறதே.

  வால்மீகியில் கைகேயி பற்றி இருக்கிறதா தெரியவில்லை. இப்படி ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் எழுத்தில் மிகச் சரளமாய் அழகாய் வந்திருக்கிறது.

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 32. சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!