இது படித்ததின் பகிர்வே தவிர விமர்சனம் அல்ல!
வரலாற்றுப் புதினங்கள் படிக்க எப்பவுமே ரொம்பப் பிடிக்கும். சாண்டில்யன்னா ரொம்ப இஷ்டம். அப்புறம் கல்கி.
இப்பல்லாம் காலச்சக்கரம் நரசிம்மா கதைகள் என்றால் விடுவதில்லை. இவர் கதைகள் ஒரு ஸ்பெஷல் டைப். அது படித்தவர்களுக்குத் தெரியும். புதிர்கள் கலந்து த்ரில்லர்கள் எழுதுவதில் வல்லவர். சரித்திர நாவல் எழுதினால் முழுமையான ஆராய்ச்சி செய்து எழுதுவார்.
அவர் அத்திமலை தேவன் எழுதுகிறார் என்றதும் பெரிய சுவாரஸ்யம் காட்டவில்லை நான். அமிர்தசரஸ் குளத்திலிருந்து அத்திவாரதர் அப்போது வெளிவந்த நேரத்தில்
பக்தியினால் உந்தப்பட்டு அவர் பற்றி ஏதோ எழுதுகிறார் என்று நினைத்தேன். அவ்வப்போதுஅந்த புத்தகத்தைப் படித்தவர்கள் பாராட்டிக்கொண்டே இருந்ததை பேஸ்புக்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பாகமாக ஐந்து பாகங்கள் வெளியாயின.
சமீபத்தில் புத்தகம் என்னைத்தேடி வந்தது. "முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் திருப்பிக் கொடுங்க... பத்திரமா கொடுங்க" நான் அவர் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன் என்று தெரிந்த அக்காவின் மாப்பிள்ளை!
சரி, ஆன்மீக வரலாறு என்னதான் சொல்கிறது என்று அசுவாரஸ்யமாய்த்தான் படிக்கத் தொடங்கினேன்.
அவ்வளவுதான்.
சுழல் என்னை இழுத்தது. சூழலை மறக்க வைத்தது. முதல் இரண்டு பாகம் படித்து முடித்த வேகம் தெரியவில்லை. சாதாரணமாக புத்தகம் படிக்கும்போது சில குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். அதுகூட முதல் இரண்டு பாகங்களுக்கு எடுக்க மறந்து போனது. அலுவலகத்தில் பயங்கர டென்ஷன். அதைக்கூட மறந்து இந்தப் புத்தகம் படிப்பதை கிடைத்த நேரத்தில் எல் லாம் தொடர்ந்தேன். நடுவிலேயே திரு நரசிம்மாவிடம் ஓரிரு சந்தேகங்களும் கேட்டுக்கொண்டேன். பொறுமையாக பதிலளித்தார்.
ஒரு சமயம் பார்க்கும்போது பல்லவநாட்டுக்காரராய் இருப்பதால் அதற்கு ஆதரவாக எழுதி விட்டாரோ என்று கூட தோன்றும் அளவு பல்லவ விவரங்கள். பாதகமில்லை. நான் பல்லவ நாட்டில் பிறந்து, சோழ நாட்டில் வளர்ந்து பாண்டிய நாட்டில் கல்வி பயின்று மறுபடி பல்லவத்தில் வாழ்கிறேன்! ஆனால் அவர் என்னவோ எல்லோர் பற்றியும்தான் எழுதி இருக்கிறார். அத்திமலையான் அல்லவோ கதாநாயகன். நம் மனதில் யார் நிற்கிறார்கள் என்பதுதானே முக்கியம்.. சாணக்கியன் முதல் பாகத்தில் மனதில் நிற்பவர். அவர் காஞ்சீபுரத்துக்காரர் தெரியுமோ? எனக்குத் தெரியும். நான் அத்திமலை தேவன் படித்து விட்டேன். சாணக்கியனைப் பற்றிய விவரங்கள் அசர அடிப்பவை.
முதல் பாகம் முடிந்ததும் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லப் போகிறார், இந்த அளவு சுவாரஸ்யம் இருக்குமா என்று பார்த்தால், அது முதல் பாகத்தைவிட சுவாரஸ்யம். கரிகாலன், இளந்திரையன் ஜெயவர்மன், அபராஜிதன் என்று பல பேயர்கள் பரிச்சயமாயின. யோசித்துப் பார்த்தால் பல்லவர்களை பற்றி இவ்வளவு விவரம் வேறு எந்த சரித்திர நாவலாசிரியரும் அளித்ததில்லை என்றே நினைக்கிறேன்.
பல்லவர்கள் மகாபாரத அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதே எனக்கு செய்தி. முன்னர் படித்ததில்லை. பல இடங்கள் நரசிம்மாவின் எழுத்துகள் ரசிக்க வைத்தன. உதாரணமாக காவிரி நதிக்கும், வேகவதி நதிக்கும் வி த்தியாசம் காட்டி பேசும் இடம் மிகவும் ரசித்தேன். அதுபோல இன்னும் ஓரிரு இடங்கள் குறித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். செயயாததால் குறிப்பிட முடியவில்லை.
சில இடங்கள் படித்துக் கொண்டே வரும்போது சிலிர்க்கும் அனுபவம் உண்டா? எனக்கு இந்த கதையில் குதம்பைச் சித்தர் கரிகாலனின் கால் பற்றி சேதி அறிந்ததும் என் உடல் புல்லரித்துப் போனது.
"தெய்வங்கள் நம்முடன் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கின்ற ன. நாம்தான் அவை கூறும் சூசகத் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்." என்கிறார் நரசிம்மா. உண்மைதான் என்று தோன்றுகிறது.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? நாம் அடிக்கடி பிரயோகப்படுத்தும் இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புத்தகத்தில் சொல்கிறார் நரசிம்மா. அதுபோல வேறு சில வார்த்தை விளக்கங்களும் உண்டு. சட்டென நினைவுக்குவ வரவில்லை. மூன்றாம் பாகத் தொடக்கத்தில் தேடவேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டிருந்தேன்.
சங்கதாரா நினைவிருக்கிறதா? அதிலும் ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன், குந்தவை பற்றி எழுதி இருந்தார். அந்தப் புத்தகம் படித்ததன் பகிர்வும் இங்கே வெளியாகி இருந்தது. அதில் நரசிம்மாவே வந்து பதிலும் சொல்லி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.
ஆதித்த கரிகாலன் கொலைவழக்கு இதிலும் அலசி இருக்கிறார். முன்னர் சங்கதாராவில் சோழர்கள் அருகிலிருந்து பார்த்தது, இங்கு வேறு கோணத்தில் தெரிகிறது என்கிறார். இது இவரது சிறப்பு. இப்போது கூட கல்கியில் எழுதும் தொடர்கதை ஆதித்த கரிகாலன் பற்றிதான் என்று நினைக்கிறேன். இப்போது அது வானதி வெளியீடாக முதல் பாகம் புத்தகமாகவே வெளிவந்துவிட்டது.
வரலாற்றில் ஒரு விஷயத்தை - அது மர்மமாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை - ஒரு கோணத்திலிருந்து மட்டும் அணுகாமல் வெவ்வேறு இடங்களில் சொல்லப்படும், சம்பந்தப்பட்ட வெவ்வேறு விஷயங்களுடன் இணைத்து ஆராய்ந்து உண்மை நிலையை கொண்டு வருகிறார் நரசிம்மா. இது நரசிம்மா ஸ்பெஷல். சொல்லப்போனால் தான் நான்காம் பாகத்தில் எழுதிய ஒரு சிறு தகவல் தவறு என்று தனது ஆராய்ச்சியின் விளைவாகவே கண்டறிந்து, அதையும் ஐந்தாம் பாகத்தில் சொல்லி திருத்தம் வெளியிடுகிறார். ஆதித்த கரிகாலன் மரணம் அவன் அந்த பேய் மாளிகையில் பிடிவாதமாகத் தங்கியதும் ஒரு காரணம், அல்லது அதை உபயோகித்துக் கொள்கின்றனர் கொலையாளிகள். ஆனால்... கொலை செய்தவர்கள் யார் என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறார். அதற்கான ஆதாரங்களையும் அடுக்குகிறார்.
இவர் குறிப்பிட்டிருப்பதாலேயே இதுவரை நான் படிக்காமல் வைத்திருக்கும் நந்திபுரத்து நாயகி புத்தகத்தை, அதை வைத்திருக்கும் ஒரு மாமாவிடம் கேட்டிருக்கிறேன். தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். விவரம் கேட்டு விட்டு, அவரும் இன்னும் இரு புத்தகங்கள் சிபாரிசு செய்திருக்கிறார். அவரிடமே இருப்பதால் தருகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். அத்திமலை தேவன் படிக்க அவரும் ஆவலாக இருக்கிறார் இப்போது. அநேகமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கி இருப்பார். இவரிடம் நிறைய சரித்திர புதினங்கள் வாங்கி வைத்திருக்கிறார். விக்ரமன், நாபா, கௌதம நீலாம்பரன், சாண்டில்யன், இன்னும் சிலர் எழுதிய புத்தகங்கள் இவரிடம் இருப்பில் இருக்கின்றன.
உக்ரோதயம் பற்றி மாறுபாடான தகவலை சாண்டில்யன் தனது ராஜதிலகம் கதையில் தந்திருந்தார். அது புலிகேசி அபகரித்து வைத்திருந்ததாகவும் நரசிம்மபல்லவன் அதை மீட்டு தந்தைக்கு கொடுத்ததாகவும். இவர் ஆராய்ச்சியில் அது பற்றிய பல்வேறு விளக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன.
ரணதிலகன் என்பது கொள்ளைக்காரன். களப்பரர் என்று தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு ஆட்சி புரிய நினைத்த கொள்ளைக்காரர்கள். ஆனால் சாண்டில்யன் ஏனோ புலிகேசிக்கு ரண ரசிகன் என்கிற பட்டத்தைத் தந்து விட்டார் போலும்! கற்பனையா, அலலது அவரே அப்படி மாற்றி நினைத்துக் கொண்டாரா?
சாண்டில்யன் சொன்ன கதை (ராஜதிலகம்) இரண்டாம் நரசி ம்மனுடன் ஓரளவு பொருந்துகிறது.
பரமேஸ்வரன் மகனான ராஜசிம்மன்தான் சாண்டில்யன் எழுதிய ராஜதிலகம் கதாநாயகன் என்று தெரிகிறது. பரமேஸ்வரன் அப்பா. ரங்கபதாகா தேவி. உக்ரோதயம்.
உண்மையில் அந்த நேரத்தில் வந்ததது யுவான்சுவாங்காக இருக்க சாண்டில்யன் ஏதோ ஒரு சீன மன்னர் பாரம்பரையைச் சேந்தவர் நரசிம்மவர்மபலலவனுடன் நட்பில் இருப்பதாக எழுதி இருப்பார்.
ரங்கபதாகா தேவியை அவர் வித்தியாசமாக கையாண்டிருப்பார். கைலாசநாதர் கோவிலைக் கட்டிய நரசிம்மவர்ம பல்லவன் தனக்கு உதவியாக இருந்த சீனப்பேரரசரின் உறவினனுக்கு வாக்கு கொடுத்து, சீனம் சென்று, அங்கு ஏதோ கட்டிடம் கட்டிக் கொடுத்ததாக சாண்டில்யன் சொல்வார். அது இங்கு அத்திமலைத்தேவனுக்கு தேவை இல்லாத விவரம் என்று நரசிம்மா சொல்லவில்லை அல்லது அது சாண்டில்யனின் கற்பனை. நரசிம்மா எழுதிய வரலாற்றிலும் நரசிம்மன் ராஜகுடும்பம் இல்லாத ஒரு பெண்ணை மணப்பதாகச் சொல்லி இருக்கிறார். சாண்டில்யனும் மைவிழிச்செல்வியை அப்படி சொல்லி இருப்பார்.
ராஜகுடும்பங்களின் வீரம், பெருமை பற்றி மட்டுமே சொல்லும் மற்ற சரித்திர நாவல்கள். சரித்திரக்கதை எழுதும் மற்ற நாவலாசிரியர்கள் அந்தக் குடும்பங்களின் மன்னர்களின் நெகட்டிவ் பக்கத்தைச் சொல்ல மாட்டார்கள். நமக்கான சரித்திரப் பாடங்களே அப்படிதான் போதிக்கின்றன. அசோகர் மரங்களை நாட்டார். குளங்கள் வெட்டினார் என்று! ஆனால் அசோகர் வெட்டிய முக்கிய மரம் பற்றியோ அவன் கொலை பாதகச் செயல்கள் பற்றியோ வரலாறு பேசுவதில்லை. அதுபோல காஞ்சியில் ஆதிசரஸ்வதி கோவில் இடிபட்டதற்கு, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்படுவதற்கு அவனிசிம்மனிடமும், மகேந்திரவர்மனிடமும் மக்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும்
நியாயம் கேட்டு
தோற்கும் காட் சியையும் சொல்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா.
வேட்டி என்ற சொல் வேஷ்டிதம் என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது. அதற்கு ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருளாம்.
நட்புக்கே துரோகம் செய்யும் சோழன் ஆதித்தன்.
அதேபோல தனது குறிப்புகளில் ஆசிரியர் சொல்வது : ".... ஆனால் உண்மை சரித்திரத்தை அறிய முற்படும்போது பொன்னியின் செல்வன் கதைக்கு எதிராக எழுதவேண்டிய கட்டாயம் பிறக்கிறது. கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் வேறு, உண்மையான சோழ சரித்திரம் வேறு என என்று புரிந்துகொள்ளப் படுகிறதோ அன்றுதான் உண்மைகள் புரிய வரும். பொன்னியின் செல்வன் ஒரு ஃபாண்டஸி ஸ்டோரி. ஆனால் அது சரித்திரம் அல்ல"
ஏனெனில் வாணர்குலத்தைச் சேந்த வந்தியத்தேவன் சோழர்களை பழிதீர்க்க வெஞ்சினத்துடன் வருபவன். அவன் எப்படி சோழர்களுக்கு உதவும் கதாநாயகனாக ஆகமுடியும் என்று கேட்கிறார். அதற்கான காரணங்களையும் செப்பேடுகள் சொல்வதிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.
முறை மாப்பிளை குறை மாப்பிள்ளை - ஆதித்த கரிகாலன்-பார்த்திபேந்திர பல்லவன் - கல்பலதா விவரம் - நரசிம்மமாவின் எழுத்துகள் புன்னகைக்க வைக்கிறது. எழுத்தாளரின் எழுத்து ஜாலம். இந்த கல்பலதா பாத்திரத்தைதான் நந்தினி என்கிற கற்பனைப் பாத்திரமாக மாற்றினாரோ கல்கி என்றும் தோன்றுகிறது.
பார்த்திபேந்திரன் ஏன் மலையமானிடம் தான் கல்பலதாவை விரும்புவதைச் சொல்லவில்லை?
பார்த்திபேந்திரன் கல்பலதாவுக்குக் கொடுத்த ஓலையைக் கைப்பற்றிய ஆதித்த கரிகாலன் ஏன் அதைப் படித்த விவரம் பற்றி ஒன்றும் இல்லை? ஆனால் பின்னர் வெள்ளிப்பேழையில் கிடைக்கும் ஓலை பற்றி படிக்கும்போது ஆதித்த கரிகாலன் அது பற்றிதான் குறிப்பிடுகிறானோ என்றும் தோன்றுகிறது. வெளிப்படையான விவரம் இல்லை.
அதேபோல ஆதித்த கரிகாலன் கொலையாகும் சம்பவத்தை தாண்டிக் குதித்து விடுகிறார் நரசிம்மா. ஆதித்த கரிகாலன் கொலையான விவரம் இதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு வரியில் கொலை செய்யப்பட்டான் என்று வந்து விடுகிறது.
கெடில நதிக்கரையைத் தாண்டி கரிகாலன் வரக்கூடாது என்று சொல்லப்
பட்டிருக்கும்போது, அவனுக்கு பாதுகாப்புக்காகவே கூடவரும் பார்த்திபேந்திரன் அந்த சமயம் விட்டுச் சென்றிருக்கக் கூடாது. நாம் சொல்லி என்ன செய்ய? நடந்தது நடந்து விட்டதே..
தளிக்குளத்தார் ஆலயம் இடிக்கப்பட்டு பெரிய கோவில் எழுப்பப்பட்ட செய்தி எனக்குதான் புதிது, அல்லது கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த விவரங்கள் தெரியாமல் சிவாஜி கணேசன் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் பெருமையாக நடக்கும் / நடிக்கும் காட்சி வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. என்ன செய்ய, அவர் அப்போது வரை தெரிந்த வரலாறை வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்திருந்திருக்கிறார்!
சோழ பிரம்மஹத்தி -- இந்த வார்த்தையை எப்போதோ கேட்டிருக்கிறேன். சிறுவயதில் வீட்டில் அடிக்கடி புழங்கிய வார்த்தையோ என்னவோ! ஆனால் திருவிடைமருதூர் கோவிலில் உள்ளே செல்லும் வழியாக வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் சோழ ப்ரம்மஹத்தி பிடித்துக் கொள்ளும் என்று அம்மன் சன்னதி வழியே வெளியே வர தனி வழி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சோழ ப்ரம்மஹத்தி பற்றி நரசிம்மா எழுதி இருப்பது அமானுஷ்யம்.
ஆமாம், அமானுஷ்யர் யார் என்றே கடைசி வரை சொலல்வில்லையே? "அவர்"தானா?
மைசூர்பாகு உருவானது சென்னை மணப்பாக்கத்தில்தான் என்பது சுவைமிகு தகவல். மண சீர் பாகு, மைசூர் வரை சென்று, மைசூர்ப்பாகு ஆனதாம்!
சர்ப்பதோஷம் என்றால் என்னவென்று தெரியுமோ? எனக்குத் தெரியும்.
தான் சேகரித்துள்ள தகவல்களை வைத்து பன்னிரெண்டு பாகம் வரை எழுதலாம் என்கிறார் நரசிம்மா. உண்மைதான். ஐந்தாம் பாகம் ஒரு அளவுக்குமேல் சடசடவென பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி வரலாற்றுக் குறிப்புகள் போல பறக்கின்றன. முடிக்கவேண்டும் என்று வேகமாக வெண்புரவியில் பறக்கிறார் நரசிம்மா. அது கொஞ்சம் ஏமாற்றம்தான்.
கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு பக்கங்கள். படித்த அலுப்பே தெரியவில்லை. ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. பெரிய முயற்சி. அபார உழைப்பு. இன்னொரு பெரிய புத்தகம் பிப்ரவரியிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டாயிரத்து சொச்ச பக்கங்கள். இன்னும் ஆயிரம் பக்கங்களைத் தாண்டவில்லை!
அத்திமலை தேவனின் சுவாரஸ்யத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அன்பு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
நாம் எல்லோரும் என்றும் பாதுகாப்புடன் இருக்க
இறைவன் அருளட்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுப் பூரணமாகக் குறைந்து அனைவரும் ஆரோக்கியமான நல்வாழ்வு வாழப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஎனக்கும் அகஸ்மாத்தாக நண்பர் ஒருவரால் "அத்திமலைத் தேவன்" கிடைத்தது. படித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று பாகங்கள் முடித்துவிட்டு நான்காம் பாகம் முடியும் நேரம். படித்த பின்னர் அனுபவங்களைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குமுடிச்சுட்டு சொல்லுங்க...
நீக்குஎன் மனதிலும் நரசிம்மா தொண்டை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் பல்லவத்தைத் தூக்கிப் பிடிப்பதாக ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் பொதுவாக எல்லாச் சரித்திர ஆசிரியர்களுமே பல்லவத்தையும், சோழத்தையும் பற்றி எழுதிய அளவுக்குப் பாண்டியத்தைப் பற்றியோ சேரத்தைப் பற்றியோ எழுதினதில்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு தவிர்த்து! பாண்டியம் பற்றி நா.பா. எழுதி இருக்கார். அவரும் மதுரைக்காரர் ஆச்சே!
பதிலளிநீக்குபெரும்பாலும் சோழர்கள். அப்புறம் பாண்டியர்கள் என்று சொல்லலாம்.
நீக்கு//பல்லவர்கள் மகாபாரத அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதே எனக்கு செய்தி. முன்னர் படித்ததில்லை. // எழுபதுகளில் முதல் முதல் காஞ்சிக்குப் போனப்போவே இந்தக் கல்வெட்டு உலகளந்த பெருமாள் கோயிலில் இருந்ததைப் படித்து அதிசயப் பட்டிருக்கேன். அதுவரைக்கும் அரசல், புரசலாகத் தெரியும். முக்கியமாய்ப் பல்லவர்கள், காம்போஜர்களின் சம்ஸ்கிருத அறிவு பற்றிப் படிக்க வந்தப்போ அவங்க அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதைப் பற்றி அறிய நேர்ந்தது. அதன் பின்னரே காஞ்சியில் பார்த்தேன். பின்னர் தெய்வத்தின் குரலில் பரமாசாரியாரும் அதைக் குறிப்பிட்டு எழுதி இருப்பார்.
பதிலளிநீக்குகாஞ்சிபுரம் கோவில்களை அதுவும் நிறைய விடுபட்டுப்போய், அவசர கோலத்தில் ஒருமுறை பார்த்ததுண்டு. ஆற அமர பார்க்கவேண்டும்.
நீக்குஇந்தக் காஞ்சிக் கோயில்களின் கிழக்கு வாயில்/மேற்கு வாயில் பற்றி நானும் முன்னர் கேள்விப் பட்டிருந்தாலும் அது வேறே மாதிரி. அதே போல் சமுத்திர குப்தனால் எழுப்பப்பட்டச் சித்திர குப்தன் கோயில் பற்றியும் அங்கே வேறே மாதிரிச் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்குஆனால் நான் சொல்லி இருப்பது திருவிடைமருதூர் கோவில் பற்றி...
நீக்குநீங்க சொல்வது சோழ தேச பிரம்மஹத்தி பற்றி. நான் கதையில் படிக்கும்போது இப்போது காம்போஜ நாட்டினரால் தூண்டப்பட்டு முதலாம் நந்திவர்மன் கோயில் வாயிலை மாற்றியது பற்றிச் சொல்கிறேன்/சொன்னேன். அதைச் சரியாய்ச் சொல்லலை.
நீக்குசின்ன வயசில் முழங்காலைக் கட்டிக்கொண்டு படிகளில் உட்கார்ந்தாலே சோழ தேசத்து பிரம்மஹத்தி மாதிரி உட்காராதே எனப் பெரியவர்கள் கோவிப்பார்கள். அதனால் அது பற்றித் தெரியும். பின்னர் திருவிளையாடல் புராணத்தின் மூலம் வரகுணபாண்டியனைப் பற்றிப் படித்து முழுக்கதையும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமுழங்காலைக் கட்டிக்கொண்டு உட்காருவதற்கும், சோழ பிரம்மஹத்திக்கும் என்ன சம்பந்தம் என்றும் சொல்லலாமே...
நீக்குஅந்த பிரமஹத்தி அங்கே அப்படி உட்கார்ந்திருந்ததோ என்னமோ? என் பெரியப்பா தான் அடிக்கடி சொல்லுவார், சோழ தேசத்து பிரம்மஹத்தி என்று.
நீக்குசாண்டில்யனின் "ராஜ திலகம்" நான் படிக்கலைனு நினைக்கிறேன். தேடிப் பார்க்கணும். ரங்கபதாகை என்னும் பெயரிலேயே ஓர் நாவல் வந்திருக்கோ? காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியது ராஜசிம்ம பல்லவன் இல்லையோ? இங்கே நீங்க நரசிம்ம பல்லவர் எனச் சொல்லி இருக்கீங்க!
பதிலளிநீக்குரங்கபதாகை எனும் பெயரில் நாவல் - கேள்விப்பட்டமாதிரியும் இருக்கிறது. ஆனால் அவர் கங்கை மன்னன் மகள் என்றளவில் தெரியும். சாண்டில்யன் கதைகளில் சில நான் படித்ததில்லை.
நீக்குரங்கபதாகை சாண்டில்யன் எழுதினதாத் தெரியலை. கங்க மன்னன் மகள்.
நீக்கு3,4 தரம் கைலாசநாதர் கோயில் போயும் படங்கள் எடுக்கவில்லை. அப்போல்லாம் காமிரா இல்லை. காமிரா வாங்கினப்புறமாக் காஞ்சிக்கே போகலை. ஆனால் சுமார் ஏழெட்டுத் தரம் காஞ்சிக்குப் போயிருப்போம்.
பதிலளிநீக்குஆஹா.. நான் பார்த்ததில்லை.
நீக்குபிரமிக்க வைக்கும் எழுத்து. நந்திபுரத்து நாயகி புத்தகம் என்னிடம் இருக்கிறது.
பதிலளிநீக்குஅதை ஒரு தடவை படித்தால் போதாது.
அற்புதக் கதாசிரியர். மிக அருமையாக நீங்களும் விவரித்திருக்கிறீர்கள்.
நந்திபுரத்து நாயகி "அமுத சுரபி"யில் வரும்போதே படிக்க ஆரம்பித்துப் பிடிக்காமல் விட்டு விட்டுப் பின்னர் புத்தகமாக வெளிவந்ததும் படித்தேன். ஆனாலும் அது என்னை அவ்வளவு கவரவில்லை.
நீக்குநன்றி வல்லிம்மா.. எல்லாப் பெருமையும் நரசிம்மா அவர்களுக்கு உரியது. படித்த பிரமிப்பைதான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நீக்குநந்திபுரத்து நாயகிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மாமா தரேன்னு சொல்லி இருக்கார்.
நீக்குமைசூர்பாகு உருவானது சென்னை மணப்பாக்கத்தில்தான் என்பது சுவைமிகு தகவல். மண சீர் பாகு, மைசூர் வரை சென்று, மைசூர்ப்பாகு ஆனதாம்!///😃😃😃😃😃😃😃😃😃😃
பதிலளிநீக்குஇது என்ன புதுக் கதையா இருக்குன்னு சொல்லமாட்டேன். நாவலைப்படித்துப் பார்க்கணும். நான், மண்ணச்சநல்லூரில்தான் முதலில் தயார் செய்தார்களோ என்று நினைத்தேன். இன்னொரு சரித்திரக் கதாசிரியர், இது திருமணஞ்சேரியில்தான் முதல் முதலில், திருமணத்துக்கான (கோவில் பெருமாள் தாயாருக்கு) சீராக, மணையில் வைக்கும் சீராக தயார் செய்து மணைச் சீர் பாகு என்று ஆரம்பித்து மைசூர்பாக், சமீபகாலத்தில் மைசூர்பா என்று பெயர் மாற்றம் பெற்றதுன்னு எழுதிடுவாரோ?
நீக்குபல கதைகள் இருக்கும் என்று தெரிகிறது.
நீக்குஆனால் விக்கி விக்கிக் கொண்டு மைசூரில் மசூர்ப்பருப்பில் செய்யப்பட்ட தின்பண்டம் என்கிறது. ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் தேசியத் தின்பண்டமாகி விட்டது.
நீக்குஜெக சிற்பியன், மதுரை பற்றி எழுதி இருக்கிறார் இல்லையா
பதிலளிநீக்குகீதாமா.?
ஆலவாய் அழகன்? மறந்து போய் விட்டது.
ஆமாம், ஆனந்த விகடனில் வந்தது. ஏழிசை வல்லபி, முக்கோக்கிழானடியாள்! என்றாலும் நா.பா. அளவுக்கு மதுரை பற்றியோ, பாண்டியர்கள் பற்றியோ எழுதியவர்கள் மிகக் குறைவு.
நீக்குஓ... நான் படித்ததில்லை.
நீக்குமீண்டும் வருகிறேன்.
பதிலளிநீக்குசரிம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் கமலா அக்கா.. வாங்க... இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலமே வாக்ஷ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் பதிவு அருமை. சரித்திர கதைகளை பற்றிய அலசல் நன்றாக உள்ளது. நானும் சரித்திர கதைகளை விரும்பி படிப்பவள். ஆனால் உங்கள் அளவுக்கு நினைவு கூர்ந்து சொல்லத் தெரியாது. அப்போது அம்மா வீட்டில்
படித்த காலத்தில் எல்லா புத்தகங்களும் பைண்டிங் செய்யப்பட்டு இருந்தது.
எங்கள் அம்மா இந்த சரித்திர கதைகளை படிப்பதில் ஆர்வம் உடையவர். அப்போது வந்த மாத இதழ்களில் வரும் இதன் தொகுப்பை பைண்டிங் செய்து பத்திரபடுத்தி வைத்திருப்பார். இப்போது அதெல்லாம் எங்கே போச்சோ தெரியவில்லை.
ராஜ திலகம், யவனராணி போன்ற சாண்டில்யன் கதைகளை முன்பு படித்திருக்கிறேன். இப்போது பொன்னியின் செல்வன் (மகன் வாங்கி தந்தது) மீண்டும் படித்துக் கொண்டுள்ளேன். ஆகா.. என்ன மீண்டும் ஒரு ஒற்றுமை.. என் இந்த புத்தக படிப்பிற்கும், தங்கள் வியாழன் பதிவுக்கும். இந்த நிகழ்வே எனக்கு அதிசயமாகத்தான் உள்ளது.
இப்போது நீங்கள் விமர்சித்த இந்த அத்திமலைத் தேவன் புத்தகத்தை வாங்கி கண்டிப்பாக படிக்க வேண்டுமென்ற ஆவலும் கூடி விட்டது. பொன்னியின் செல்வனை படித்து முடித்ததும் அதையும் வாங்கி படிக்க வேண்டும். நேரம் கிடைப்பதுதான் சென்ற பதிவில் தாங்கள் விவரித்தது போல் சிரமமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆச்சர்யம்தான் கமலா அக்கா.. நீங்களும் சரியாக இதையே படிக்கத் தொடங்கி இருப்பது. இந்தப் புத்தகம் கண்டிப்பாகப் அப்பிடித்துப் பார்க்கலாம். வெகு சுவாரஸ்யம்.
நீக்குஅத்திமலைத் தேவன் ஐந்து பாகங்கள். எல்லாமும் சேர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேல் ஆயிடும். நரசிம்மாவின் புத்தகங்களே நம்மால் (அதாவது என்னால்) வாங்க முடியாதவை. ஓ.சி.யில் கிடைப்பதைப் படிப்பதே எனக்கு வசதி!
நீக்குசரித்திர நாவல்கள் சிறு வயதில் ஆர்வமாக படித்தேன் இப்பொழுது எல்லாமே மாற்றமாகி விட்டது.
பதிலளிநீக்குஇல்லை ஜி. இப்பவும் சுவாரஸ்யமான கதைகள் வருகின்றன.
நீக்குதாய்த்திரு நாடு வாழ்க! வாழ்க! (பாரத் மாதா கி ஜே!) காலம் இது!
பதிலளிநீக்குநீங்கள் என்னடாவென்றால் பல்லவ நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று!.. :))
இது சில பேருக்குப் பிடிக்கும் அது சில பேருக்குப் பிடிக்கும்.. இல்லையா ஜீவி ஸார்?
நீக்குகல்கி மாதிரி சரித்திர கற்பனைகளில் சுவாரஸ்யத்தைக் கூட்ட இன்னொருவர் இது வரை
பதிலளிநீக்குதமிழ் எழுத்துலகில் தோன்றிடவில்லை என்பதே என்னளவில் கருத்து. என்னளவில் என்பதனை அடிக்கோடிட விரும்புகிறேன்.
அப்படி சட்னு சொல்லிடமுடியாதுன்னு நினைக்கிறேன் ஜீவி சார்... கல்கியை ஒரு பெஞ்ச் மார்க் என்றளவில் பார்க்கலாம். நிறைய பேரின் சரித்திர நாவல்களும் நன்றாக இருந்திருக்கிறது. (சாண்டில்யன் ரொம்ப ரொம்ப வருணணைகள் இருந்தாலும், கதை என்பது 4 பக்கத்தை மிகாது. ஆனால் கல்கி நிறைய சம்பவங்களைக் கற்பனை செய்து எழுதியிருப்பார். பாலகுமாரன், சரித்திர நாவலாசிரியரும்கூட என்று ஒத்துக்கொண்டால், ஒவ்வொரு நாள், நிகழ்வுகளை கற்பனை செய்து கொஞ்சம் சப்பென்று, எழுதியிருப்பார். நரசிம்மாவும் விறுவிறுப்பாக எழுதியிருப்பார், படித்து முடித்த பிறகு, இது என்னடா புதுக்கதை என்றும் தோன்றும் ஹாஹா. இதுபோல பலரைப் பற்றியும் விமர்சிக்கலாம்)
நீக்குஎன்னளவில் என்று அதற்காகத் தான் குறிப்பிட்டிருக்கிறேன். என் ரசனை வேறுபட்டது நெல்லை.. (அடுத்த எனது பின்னூட்டத்தைப் பாருங்கள்)
நீக்குகல்கி சுவாரஸ்யமாக எழுதவில்லை என்று யாருமே சொல்ல மாட்டார்கள் ஜீவி ஸார்.
நீக்குபொதுவாகச் சொல்லப் போனால் கல்கி சரித்திர நாவல்களைத் துவங்கும்வரை பெரும்பாலானோர் வட நாட்டுச் சரித்திரங்கள் பற்றிய கதைகளையே அதிகம் படித்ததாகச் சொல்வார்கள். சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சியாகக் கருதப்படும் "பார்த்திபன் கனவு" நாவலைத் தான் கல்கி தன் முதல் சரித்திர நாவலாக எழுதினார். அது வரவேற்பைப் பெறுமா என்னும் சந்தேகம் அனைவருக்கும் இருந்ததாம். அது மாபெரும் வரவேற்பைப் பெற்றதுமே கல்கி அவர்கள் அடுத்ததாக "சிவகாமியின் சபதம்" எழுதி இருக்கார். அதுவும் பெருமளவில் வரவேற்பைப் பெறவே சோழர் காலச் சரித்திரத்தை எழுதும் ஆவலுடன் "பொன்னியின் செல்வன்" எழுதினாராம். இதைத் திரு கல்கி அவர்களே அந்தக் காலத்து மங்கள நூலகம் வெளியீடான தன் "பார்த்திபன் கனவு" நாவலின் முன்னுரையில் சொல்லி இருப்பார். சித்தப்பா வீட்டில் படித்திருக்கிறேன். இப்போது மங்கள நூலகமும் இல்லை. இந்த முன்னுரைகள் வருகின்றனவா இப்போதைய வெளியீடுகளில் என்பதும் தெரியவில்லை.
நீக்குவெண்புரவி நரசிம்மா ஸ்பெஷல் நன்றாகவே உள்ளது...
பதிலளிநீக்குவாசித்து முடித்தவுடன் "இன்று வியாழன் தானே...?" என வியந்தேன்...!
ஹா.. ஹா.. ஹா... வியாழனே DD.
நீக்கு//ஏனெனில் வாணர்குலத்தைச் சேந்த வந்தியத்தேவன் சோழர்களை பழிதீர்க்க வெஞ்சினத்துடன் வருபவன். அவன் எப்படி சோழர்களுக்கு உதவும் கதாநாயகனாக ஆகமுடியும் என்று கேட்கிறார். //
பதிலளிநீக்குவேண்டுமானால் இவர் (ஸ்ரீமான் நரசிம்மா) முழுக்க முழுக்க தன் கற்பனை என்று ஒரு சரித்திர நாவலைப் படைத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. கல்கி அவர்கள் எழுதியவைகளைச் சுட்டி இவர் ஏன் எழுத வேண்டும்?..
எங்கள் இளம் வயதில் எங்களைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு ஆசை ஆசையாய் எங்களை சோழ சாம்ராஜ்ய கனவுகளில் ஆழ்த்தி கதை சொன்ன, கல்கி அவர்கள் எங்களில் விதைத்த கனவுகளை இவர் ஏன் கலைக்க வேண்டும்?..
உங்கள் இந்த பாயிண்ட் சரிதான். ஒவ்வொருவரின் குணாதிசயங்களை நம் மனதில் கல்கி விளைவித்துப் போயிருக்கிறார். நானும் சரித்திரக் கதை எழுதறேன் என்று ஆரம்பித்து, இராஜேந்திர சோழனுக்கும் இராஜ இராஜ சோழனுக்கும் கடுமையான விவாதம், பிடிக்காமல் இருந்தது, சும்மா ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்காமல் இருப்பதும் அதன் காரணம். அதனால்தான் தந்தை கட்டிய பெரியகோவிலைப் புறக்கணித்து, தஞ்சையும் புறக்கணித்து, வேறு ஒரு இடமான கங்கைகொண்ட சோழபுரத்தை ஸ்தாபித்து அங்கும் போட்டிக்காக ஒரு பெரியகோவிலைக் கட்டினான், ஆனாலும் அது அகங்காரத்தில் கட்டப்பட்டதால், கங்கைகொண்ட சோழபுரக் கோவில் பாழ்பட்டது, பெரியகோவிலைப் போல புகழ் பெறவில்லை .... என்று கதைவிட்டு சரித்திரக் கதை எழுதினால் சரிவருமா? இல்லை, மக்கள் விரும்பியதால் ராஜராஜனுடைய சித்தப்பா முதலில் பதவியேற்றார். பிறகு அவரே தனக்கு சிம்மாதனத்தில் ஆசை இல்லை என்று பிறகு சொன்னதால், அதற்குப் பிறகு ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தான் என்றெல்லாம் எழுதினால், அது சரித்திரக் கதையா இல்லை தரித்திரக் கதையா என்று ஆகிவிடும்.
நீக்குஉங்கள் கருத்துக் சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமையில்லை ஜீவி ஸார், நெல்லை.. நான் படித்ததை இங்கு பகிர்ந்திருக்கிறேன். நான் நரசிம்மா ஸார் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.
நீக்குகங்கை கொண்ட சோழபுரம் கட்டியதற்கு வேறு காரணம் சொல்லுவார்கள். ஆனால் திரு அகிலன் தன்னுடைய "வேங்கையின் மைந்தனில்" வேறு மாதிரிக் குறிப்பிட்டிருப்பார். தஞ்சைப் பெரிய கோயிலும் சமீப காலங்கள் வரை யாருமே போகாமல் வழிபாடுகள் அதிகம் இல்லாமல் இருந்தது தான். நாங்கள் எண்பதுகளில் சென்றபோது தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் உள்ளே போய்/உள்ள என்ன? பிரகாரத்திலேயே சுற்ற முடியாது. கொதிக்கும் வெயிலில் அவசரம் அவசரமாகப் பார்த்திருந்தோம். பின்னர் தஞ்சை மன்னரின் பெரும் முயற்சியின் பேரில் நடைபெற்ற கும்பாபிஷேஹத்துக்குப் பின்னரே அங்கே முறைப்படியான வழிபாடுகள், மக்களை உள்ளே வழிபட அனுமதித்தல் என்று ஆரம்பம் ஆனது. அந்தக் கும்பாபிஷேஹத்தின் போதும் பந்தல் பற்றி எரிந்து சகுனத்தடை என்றெல்லாம் பேசப்பட்டது. கோயில் கருவறை மகுடாகம முறைப்படி கட்டியது. ஆனால் வழிபாடுகள் அந்த முறைப்படி செய்கின்றனரா என்பது சந்தேகமே. ஏனெனில் மகுடாகமம் தெரிந்தவர்கள் இப்போது அதிகம் இல்லை என்கின்றனர். ஒரு சாரார் ஆவுடையாரைப் பிரித்து உள்ளே எடுத்துச் சென்றதாகச் சொல்கின்றனர். இன்னொரு சாரார் முதலில் பிரதிஷ்டை முடிந்து பின்னரே கோபுரம்/விமானம் எழுப்பப் பட்டது என்கின்றனர். லிங்கத்துக்கு நேர்கோட்டில் மேலே உள்ள வெட்ட வெளி தான் தஞ்சைக் கோயிலின் ரகசியம். அதை அப்படி அமைக்கச் சொன்னவர் கருவூர்ச் சித்தர் என்பார்கள்.
நீக்குஇன்னும் பல இருக்கின்றன... வெளியில் சொன்னால் அப்படியில்லை என்பார்கள்..
நீக்குஎல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் அதிகமானதன் விளைவு...
எனக்கு இப்பொழுது வயது 78. என் பதினைந்து வயதில் பொன்னியின் செல்வனை கல்கியில் தொடராகப் படித்தது.
பதிலளிநீக்குஇப்பொழுது அமெரிக்காவில் இருக்கும் எனது 14 வயது பேத்தி (பையனின் பெண்) கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று அத்தனை வரலாற்று நாவல்களையும் தன் தந்தை வாசிக்கத் தான் கேட்டு தான் கேட்டவற்றை என்னிடம் ஆர்வத்துடன் சொல்வதையெல்லாம் நானும் கேட்டு அவளது சில சந்தேகங்களுக்கும் எனக்குத் தெரிந்த அளவில் பதிலும் அளிக்கிறேன்.
கல்கி அவர்கள் தலைமுறை தலைமுறை தாண்டி இன்னும் தன் கற்பனைகளில் தன்னை வாசிப்பவர் மனசில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது!..
உண்மை ஜீவி ஸார்.. கல்கியின் நடை, சுவாரஸ்யம், கற்பனை எதையுமே நானும் குறை சொல்லவில்லை.
நீக்குஅண்ணா ஜீவி அவர்களது கருத்து அருமை...
நீக்குகல்கி அவர்கள் சிரஞ்சீவி!...
ஜீவி சார்! நீங்கள் பதினைந்து வயதில் வாசித்து லயித்த ஒரு கதையை, தன் தந்தையின் மூலமாகக் கேட்ட உங்கள் கிட்டத்தட்ட அதே வயதில் இப்போதிருக்கும் உங்கள் பேத்தி, உங்களுடன் பகிர்ந்துகொள்வது, மேலும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்பது அதிசயம். உங்களின் பாக்யம். உங்களது பேத்தியும் கொடுத்துவைத்தவள்.
நீக்கு@ தம்பி துரை
நீக்கு//கல்கி அவர்கள் சிரஞ்சீவி //
ஹஹ்ஹ்ஹாஹா.. சந்தேகமேயில்லாமல்...
இன்றும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்கும் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கென்று நிரந்தர இடம் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
இதனால் தமிழகத்தின் பல பிரபல பதிப்பகங்கள் பொன்னியன் செல்வனை தங்கள் பதிப்புகளாக வெளியிட்டு லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒலி நாடா, ஸி.டி. என்று நவீன காலத்திற்கேற்ற இன்னொரு பக்க வசூலும் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறது.
பலருக்கு சிவகாமியின் சபதம் மிகவும் பிடிக்கும். ஆனால் விற்பனையில் என்னவோ பொன்னியின் செல்வன் தான்!
@ ஏகாந்தன்
நீக்குநான் உணர்ந்த உணர்வை அதே அலைவரிசையில் நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். மனம் நெகிழ்ந்தது. நன்றி, சார்.
என்னை பொறுத்தவரைசரித்திரக்கதைகள் எழுதுபவர் பலரும் வாயால் வடை சுடுபவ்களாகததான் இருக்க வேண்டும்கல்கிதன் எழுத்துகளில் உ ண்மை இருக்குமோ என்று நினைக்க வைப்பவர்
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... உங்கள் அபிப்ராயம் புன்னகைக்க வைக்கிறது ஜி எம் பி ஸார்...
நீக்குசரித்திரத்தில் மட்டும் எதுவும் நம் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. சரித்திரக் கதாபாத்திரங்களை வைத்துப் பல நாவல்கள் எழுதலாம். அது வேறு. உண்மை என்பது வேறு. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி சரித்திர உண்மை என்பதைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்கின்றன.
நீக்குஎன்னை பொறுத்தவரைசரித்திரக்கதைகள் எழுதுபவர் பலரும் வாயால் வடை சுடுபவ்களாகததான் இருக்க வேண்டும்கல்கிதன் எழுத்துகளில் உ ண்மை இருக்குமோ என்று நினைக்க வைப்பவர்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவாங்க வானம்பாடி.. வணக்கம். பதிலுடன் வருவதற்குள் பின்னூட்டத்தை நீக்கி விட்டீர்களே!
நீக்குஅனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள். நலம் வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றேன். இன்றைய சரித்திர நாவல்கள் பற்றிய பதிவு அருமை! கல்கியின் சரித்திர நாவல்கள் பிடிக்காதவர் உண்டோ? நம் வாழ்வில் கலந்த கதாபாத்திரங்கள் நிறைய. எனக்கு தெரிந்து கல்கியின் சரித்திர கதாபாத்திரங்களில் ஒன்றி தங்கள் பிள்ளைகளுக்கு அப்பெயர்கயே வைத்தவர்கள் பலர்.
பதிலளிநீக்குவந்தியத்தேவனை சோழ தேசத்தின் எதிரியாக கற்பனை கூட செய்ய இயலவில்லை.சரித்திரக் கதைகளில் கற்பனை கதையின் ஓட்டத்திற்காகவும், இனிமைக்காகவும் சேர்க்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். ஆயிரம் வருட சரித்திரக் கதையை விடுங்கள். கடந்த சில நூற்றாண்டுகளிலேயே எத்தனை திரிபுகள்? காலச்சக்கரம் , சூரியனை, சந்திரனைப் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என நினைக்கத்தோன்றுகிறது. காந்தியையும் , நேருவையும் சரித்திர நாயகர்களாக்கி, சுபாஷ் சந்திர போஸையும் , பலப் பல நாட்டு பற்று கொண்ட வீரர்களையும் மறக்கடித்ததேன் ?
அக்கால மன்னர்கள் மக்களுக்காக கோவில்களையும், கல்லணையும் கட்டி வைத்து இறையிலி நிலம் கொடுத்து சரித்திரத்தில் இடம் பிடித்தனர். காலச்சக்கரம் எத்தனை ராஜதந்திரிகளை, சூழ்ச்சிகளை , மக்களை காத்த வீரர்களை கண்டிருக்கும். திரிபுகளை ஒருபுறம் ஒதுக்கி நமக்கு தேவையானதை மட்டும் உள்வாங்கி, வாசிப்பை நேசிப்போம் !
வாங்க வானம்பாடி.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். நரசிம்மமாவின் படைப்புகளை அவசியம் படியுங்கள் வானம்பாடி. சங்கதாராவிலிருந்து தொடங்குங்கள். சுவாரஸ்யமாய் இருக்கும்.
நீக்குசரித்திரத் திரிபுகள் பற்றி நன்கு சொல்லி இருக்கிறீர்கள். நான் வேள்பாரி படிக்கவில்லை. பின்னர் படிக்க வேண்டும்.
வானம்பாடியின் கூற்றை நான் கன்னா/பின்னாவென ஆதரிக்கிறேன். நரசிம்மாவின் சங்கதாரா படித்த பின்னரும் "பொன்னியின் செல்வன்" இருமுறைகள் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அந்த அளவுக்குக் குந்தவையும், வந்தியத் தேவனும், நந்தினியும், வானதியும் நெருக்கமானவர்கள். நரசிம்மாவைப் படித்ததால் கல்கியின் எழுத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இவர் பாணி வேறு அவர் பாணி வேறு. சரித்திரத் திரிபுகள் வானம்பாடி சொன்னாப்போல் தானே நடந்திருக்கின்றன? இதற்குத் தமிழ்நாடே ஒரு சாட்சி அல்லவோ?
நீக்குமிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கீதா அக்கா... நான் இன்னும் பலமுறை பொன்னியின் செல்வன் படிப்பேன். கல்கி எழுத்தை யாரால் குறைகூற முடியும்? சுவாரஸ்யம் வேறு, (ஒரு குறிப்பிட்ட) உண்மை வேறு...
நீக்குஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குநரசிம்மாவின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்கிற ஆவல் மிகுகின்றது. அதற்கு நேரம் தான் கிடைக்கவில்லை. புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து , செல்ல இயலவில்லை என்பது ஒரு குறை தான் எனக்கு.
நீக்குநான் 'டயல் ஃபார் புக்ஸ்'க்கு தொலைபேசி சமயங்களில் விரும்பும் புத்தகத்தை வீட்டுக்கே வரவழைத்து விடுவதுண்டு.
நீக்கு// ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //
நீக்கு:-)
நீண்ட நெடும் பதிவு - அத்திமலைத்தேவன் வீட்டில் படித்து விட்டார்கள்.இவரது நூல்களில் சிலவற்றை நானும் படித்து ரசித்திருக்கிறேன் - எனது பக்கத்தில் வாசிப்பனுபவம் குறித்து எழுதியும் இருக்கிறேன். ரசனையான எழுத்துக்குச் சொந்தக்காரர். ஒரு முறை பாலகணேஷ் உடன் சென்று இவரை இவரது வீட்டிலேயே சந்தித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅடுத்த தமிழகப் பயணத்தில் அத்தி மலைத் தேவன் படிக்க வேண்டும் - நேரமெடுத்து!
பதிவு ரொம்ப நீளமாயிடுச்சோ...! சுவாரஸ்யமான புத்தகம் படித்த பரபரப்பு... அதுதான்! நீங்கள் அவரை சந்தித்திருக்கிறீர்களா? என்ன பேசினீர்கள்? நன்றி வெங்கட்.
நீக்குமிக அருமையான விவரிப்பு! உங்கள் பதிவே ஒரு சுவையான நாவல் படிப்பது போல இருந்தது!
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குயாரங்கே!.. நடன நாரீமணிகள் எங்கே போய்த் தொலைந்தார்கள்!?...
பதிலளிநீக்கு@#@#@#@#@#@#@#
விடியக் காலையில ஸ்ரீராம் அவங்களோட பதிவைப் படிச்ச மயக்கம் இன்னும் உங்களுக்குத் தீரலை ஐயா!...
:-))
நீக்குஅது சரி...
பதிலளிநீக்குஅவங்க அவங்களுக்கு
அவங்க அவங்களோட நியாயம்!...
:-)
நீக்கு.... இருந்தாலும் சும்மா இருந்தாலும்
பதிலளிநீக்கு.... வாலு சும்மா இருக்காதாம்!...
அது மாதிரி ஒரு வார்த்தை...
வீரமங்கை குயிலியைப் பற்றியும் வேலு நாச்சியாரைப் பற்றியும் தமிழ்நாட்டுப் பாட நூல்களில் இல்லை என்றொரு பிலாக்கணம்
இங்குண்டு..
ஐம்பது வருடங்களாக திராவிடங்கள் தானே இங்கு கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன..
ஏன் அவர்களைப் பற்றி முன்னெடுத்துச் சொல்லவில்லை?..
டம்ளனுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது தானே கண்!..
எவனெவனோ டம்ளன் என்று பிதற்றிக் கொண்டிருக்க தியாக சீலர்கள் மறக்கடிக்கப் படுவதும் வரலாற்றுத் திரிபு தானே!...
தமிழ்நாட்டுப் பாட நூல்களிலே இவை மட்டுமா இல்லை? ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், ஐம்பெரும் காப்பியங்கள் (இதில் போனால் போகுது சிலப்பதிகாரத்துக்கு மட்டும் இடம்னு கேள்வி) தேவார, திருவாசகங்கள், திவ்யப்ரபந்தங்கள், கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்றவை கூட இல்லை தான். தமிழ் சேச்சே தமில் வலறாமல் என்ன செய்யும்?
நீக்குஇந்தப் பெயர்களாவது இன்றைய மாணவமணிகளுக்குத் தெரியுமா? சந்தேகமே! போனால் போகுதுனு திருக்குறளை ஒத்துண்டு இருக்காங்க போல! அதிலும் ஒருசாரார் வள்ளுவரைச் சமணர் என்பதும் இன்னொரு சாரார் எந்தச் சமயத்தையும் சாராதவர் என்பதும்! ஆதி, பகவனுக்கும், வாலறிவனுக்கும் கொடுக்கும் புத்தம்புதிய விளக்கமும்! திருவள்ளுவர் இருந்திருந்தால் எழுத்தாணியாலேயே தன்னைக் குத்திக் கொண்டிருப்பார். :(((((
நீக்குஇதில் ஓரளவைச் சொல்வதற்கு நினைத்தேன்... ஓடும் பேருந்தில் இருந்து கொண்டு என்னால் இயன்றது அது தான்...
நீக்குகருத்துரையை மேலெடுத்துச் சொன்னதற்கு நன்றியக்கா..
துரை சார்! சரித்திரக் கதாஉலகிலிருந்து டம்ளனுக்கு டபக்குன்னு வந்துருச்சே கதை.. பயப்படவேண்டாம், இந்த டம்ளனும் ஒரு நாள் சரித்திரமாயிடுவான்!
நீக்குமேலே ஜிஎஸ்-ஸின் பின்னூட்டத்தைப் படித்ததும் மனதில் ஒரு கேள்வி.. வள்ளுவரைச் சமணர் என்று சிலர் சொல்கிறார்கள்.. ஏனோ? சம்மணம் போட்டு எப்போதும் உட்கார்ந்திருந்தால் சம்மணர் என்று சொல்லத்தானே தோன்றும்? அவசரத்தில் ம்-ஐ விட்டுவிட்டு அப்பிடிச் சொல்லிப்போட்டிருப்பானோ நம்ம டம்ளன் ?
ஹாஹாஹா! ஏகாந்தன், விவிசி, விவிசி!
நீக்குஇராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழ புரம் என்று நிர்மாணிக்காமல் இருந்திருந்தால் சுந்தர பாண்டியனால் தஞ்சை அழிபடாது இருந்திருக்கும்...
பதிலளிநீக்குதஞ்சையிலிருந்து வடக்கு நோக்கிப் படை நடத்துவதுவதற்கு கொள்ளிடப் பேராறு இடையூறாக இருந்தது.. அதனாலேயே புதிய தலைநகரம் என்று சொல்வாரும் உண்டு..
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடக்கே தானே கெடிலப் பேராறும் பெண்ணைப் பெரு நதியும்!...
அவை மட்டும் கடப்பதற்கு இலகுவாக இருந்தனவா?..
தஞ்சைக்கு நாகை துறைமுகம்..
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எது துறைமுகம்?..
அங்கிருந்து நாகைக்கு வருவதென்றால் கொள்ளிடப் பேராறு மறுபடியும் இடையூறு செய்யாதா?...
படிப்பவர்கள் ஏதும் அறியாதவர் என்ற இறுமாப்பில் சிலர் எப்படியெல்லாமோ கொளுத்திப் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்...
எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்.
நீக்குகாலச்சக்கிரம் இருக்கும் இடத்தில் விவாதங்களுக்குக் குறைவில்லை.
சங்கதாரா படித்த பிறகு ஏதோ வஞ்சிக்கப்பட்ட மன நிலை. அவ்வளவு பாசம் குந்தவை,வந்தியத்தேவன், பூங்குழலி,அருண்மொழி,வானதி
மேல்.
சரித்திரம், கல்வெட்டு எல்லாமே அந்தந்த அரசர்களால்
பொறிக்கப் பட்டவை.
கோபுலு அவர்களின் பெரிய அளவு காலண்டரில்
ராஜராஜன் ,பெரிய வாளுடன் தஞ்சைப் பெரிய கோயிலைக்
கண்ணுறும் காட்சி மனதை விட்டு அகலாது பதிந்தது.
யார் யாரெல்லாமோ இப்போது வீதிஎங்கும்
சிலையாக நின்று நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டுக்கு நன்மை செய்தவர்களை
நினைத்து வணங்கலாம்.
அருமையாகப் பிரமித்து அதை வெளியிட்ட விதம்
நல்லது ஸ்ரீராம்.
இவரைப் படித்த பிறகு ,பொன்னியின் செல்வன் திரைப்படம்
எப்படி இருக்குமோ என்று பயப்படுகிறேன்.
தூக்கி எறிஞ்சுட்டாங்க'' சொல்லியே கர்ணனை
நியாயப் படுத்திய படம்:)
பத்தாண்டுகளுக்கு முன்பு என் பிள்ளைகளுக்கு நான் பரிசளித்தது பொன்னியின் செல்வன் நூல் தொகுப்பு!...
நீக்குஎங்க குழந்தைகளுக்குப் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்பை வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தோம். தமிழில் நான் கதையைச் சொல்லி இருக்கேன். அநேகமாகப் பிரபல எழுத்தாளர்களின் கதைகளைப் படிச்சுச் சொல்லிடுவேன்,
நீக்கு2000 ல் தியானமும் உபாசனையும் கைவந்த பிறகு பல விஷயங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்... தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிக் கேட்ட பிறகு சில விஷயங்களைச் சொல்லி விட்டு இதைப் பற்றி வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள்.. அதற்கான தரவுகள் உன்னிடம் இல்லை - என்று பதில் வந்தது...
பதிலளிநீக்குதரவுகளைத் தாருங்கள் என்றதற்கு கிடைத்த பதில்கள் பிறரால் நம்புதற்குக் கடினமானவை...
இதைப் படித்த பிறகு -
யாரடா.. இவன் கிறுக்கன்!... - என்று தோன்றுகின்றதா!...
அப்படி எல்லாம் இல்லை. நீங்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே...
நீக்குநான் பிறகொரு நாள் தங்களுக்கு மட்டும் சொல்கிறேன்...
நீக்குதஞ்சை வடவாற்றின் கரையில் தான்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் துறவறம் ஏற்றுக் கொண்டார்..
பின்னாளில் ஆங்கொரு பிருந்தாவனம் அமைக்க முற்பட்டபோது நடந்தவை அற்புதம்...
ஸ்வாமிகள் அமர்ந்து தவம் இயற்றிய இடம் எது என்று தெரியவில்லை... பக்தர்கள் குழப்பமுற்றபோது ஐந்தலை அரவு அங்கு தோன்றி சரியான இடத்தை மண்டலமிட்டுக் காட்டியதாக வரலாறு...
தஞ்சைக் கோட்டைக்குள் நாகம் தீண்டுவதில்லை... கோட்டை வடக்கு வாசல் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலுக்குள் ஐந்தலை அரவின் சிலாரூபம் உள்ளது...
காலச்சக்கரம் நரசிம்மாவின் படைப்புபற்றி -அவர் இவ்வளவு சரித்திரக் கதைகள் எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்ரீராமின் கைங்கர்யத்தினால் இன்றுதான் தெரிந்துகொள்கிறேன். 2000, 3000 என நாவலின் பக்கங்களா? அப்பா, என்ன விட்டிருங்க.. நான் இந்த வெளயாட்டுக்கு வரல!
பதிலளிநீக்குஇருந்தும், சரித்திர நாவல்களில் ஆர்வமுண்டு. சின்னவயதில், சாண்டில்யனைக் கொஞ்சம் படித்திருக்கிறேன். நாம் இழந்துவிட்ட ஒரு அபூர்வ காலகட்டத்தின் நாட்டு நடப்பு, வாழ்வுச் சூழல், நளினம், அழகு, அதகளம் என விவரித்துச் செல்லும் வர்ணனை வார்த்தைகள் ஒருவித மயக்கத்தை மனதில் உண்டுபண்ணுகின்றன என்பது உண்மைதான். காணாமற்போன ஒரு காலத்தை மீள்-சிருஷ்டிக்க, தனித்திறன் வேண்டும் படைப்பாளிக்கு.
வாங்க ஏகாந்தன் ஸார்... நரசிம்மா சங்கதாரா, காலச்சக்கரம், பஞ்சநாராயனக்கோட்டம் என்று நிறைய எழுதி இருக்கிறார். எல்லாமே சுவாரஸ்யம் மிகுந்தவை. ஒரு பாகத்துக்கு 650 பக்கங்களிலிருந்து 750 பக்கங்கள் வரை. தோராயமாக எல்லாம் சேர்த்து சுமார் 3500 பக்கங்கள் இருக்கும்!
நீக்குகல்கி அவர்களது பொன்னியின் செல்வனை அரசுடைமை ஆக்கியிருக்கக் கூடாது!..
பதிலளிநீக்குஏன் அப்படிச் சொல்கிறீர்கள் துரை செல்வராஜூ ஸார்?
நீக்குஆளாளுக்கு அர்த்தமும் பொழிப்புரையும் பதவுரையும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்களே!..
நீக்குமிகவும் ஆர்வமுடன் உணர்ந்து ரசித்து புத்தகத்தை பற்றி எழுதியிருக்கீங்க .
பதிலளிநீக்கு//சோழியன் குடுமி சும்மா ஆடுமா? நாம் அடிக்கடி பிரயோகப்படுத்தும் இந்த வார்த்தை//எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க ..இதன் அர்த்தம் ன்னனு தெரியாமையே naanum யூஸ் பண்ணியிருக்கிறேன் !!! ///மண சீர் பாகு, மைசூர் வரை சென்று, மைசூர்ப்பாகு ஆனதாம்!/
புதிய அறியாத தகவல் !!
///கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு பக்கங்கள். படித்த அலுப்பே தெரியவில்லை. ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. ///அஆவ் நான் அப்படியே மயங்கிட்டேன் புத்தகத்தை திறக்கவே எனக்கு நேரமில்லை நியூஸ் பேப்பரை திறந்தா 2 பக்கம் திருபரத்துக்குள்ள கண்ணு சொக்குது ..பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு தொடர்ந்து படியுங்க படித்தவற்றில் சின்ன குறிப்புகளையாவது பகிருங்கள்
நன்றி ஏஞ்சல். ஐந்து பாகங்களும் சேர்த்து அவ்வளவு பக்கங்கள். இடைவெளி விட்டு விட்டுதான் படித்தேன். குறிப்புகள் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அனால் பாவம் எழுத்தாளர் நொந்து போவார்!!
நீக்குசம்மணம் இட்டு அமர்ந்திருந்ததால் வள்ளுவர் சமணர் ஆனாரோ என்றொரு ஐயம் அன்பின் திரு ஏகாந்தன் அவர்களிடமிருந்து...
பதிலளிநீக்குஅப்போது (1966) பள்ளிகளில் சைவத் துறவியைப் போன்ற ஓவியங்கள் திருவள்ளுவரைக் குறித்து இருந்தன..
திமுக ஆட்சிக்கு வந்ததும் வெண்ணிற மேல் துணியுடன் புதிய வள்ளுவர் அறிமுகம் செய்யப்பட்டார்..
இன்றைக்கு அவரை ( வெள்ளைத் துணி போட்டிருப்பதாலா!..) சமணர் என்றும் சொல்கின்றார்கள்... நல்ல வேளை வள்ளலாரை விட்டு விட்டார்கள்...
மைலாப்பூரில் (திருமயிலையில்) வள்ளுவருக்கு கோவில் உண்டு.
நீக்குவேலை வெட்டி இல்லாதவங்க, புதுசு புதுசா வள்ளுவர், சமணசமயத் துறவின்னு அடிச்சு விடறாங்க. தங்கள் இஷ்டத்துக்கு உடை அணிவிக்கறாங்க. குறள்களுக்கும் தங்கள் இஷ்டப்படி பொழிப்புரை சொல்றாங்க. வள்ளுவன் என்றொரு சாதி இருந்ததே, திருக்குறளுக்கு மொழிபெயர்ப்பு/பதவுரை சொன்னவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று புரிவதற்கே கஷ்டமாக இருக்கிறதே, ஆனால் திருக்குறள் சுலபமாக புரியும்படி இருக்கிறதே என்றெல்லாம் கேள்வி கேட்டால், காணாமல் போயிடுவாங்க.
வள்ளுவ குலமே வருங்காலத்தை உரைப்பதில் திறமைசாலிகள். அவங்களுக்குப் பூணூலும் உண்டு. மதுரை திருவள்ளுவர் மண்டபத்தில் வள்ளுவர் பூணூலோடு இருந்த நினைவு. ஆனால் இப்போது தெரியவில்லை. வள்ளுவரின் முற்கால ஓவியம் ஒன்றை அவரின் சந்ததியார் எனச் சொல்லுபவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தனர். அந்தப் படத்தை நானும் பகிர்ந்திருந்தேன்.
நீக்குஎன் சின்னமனூர்ச் சித்தப்பாவுக்கு வள்ளுவர்களின் ஜோசியத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு. எனக்கும் அவர் ஜோசியம் பார்த்து வருங்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டறிந்திருக்கிறார். வள்ளுவன் சொன்ன மாதிரித் தான் எனக்குக் கணவன் அமைந்தார்.
நீக்குஇதுல இன்னொரு கூட்டம் கடல் தாண்டி வந்த ஒருத்தர் சொல்லித்தான் திருக்குறளை எழுதினார் வள்ளுவர்..ன்னு..
பதிலளிநீக்குஅப்போது மயிலை ஆர்ச் பிசப் அருளப்பா..ன்னு ஒருத்தர் செஞ்ச வேலையெல்லாம் இப்போது ஒரு சிலருக்காவது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்...
https://thomasmyth.wordpress.com/2015/10/18/why-and-how-arulappa-became-applicant-in-acharya-paul-case/
நீக்குநினைவுபடுத்திக்கொண்டால் போகிறது! சரிதானே துரை செல்வராஜூ சார்!
நன்றி.. நன்றி..
நீக்குஆமாம், தம்பி துரை. இதைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகள் முன்னரே மின் தமிழில் காரசாரமான வாதம் நடந்தது. நினைவில் இருக்கிறது.
நீக்குவள்ளுவர் சமணர்..ன்னா அவர் எதுக்காக ஹிந்து புராணங்களின் செய்திகளைச் சொல்லிச் செல்ல வேண்டும்!?..
பதிலளிநீக்குதிருவள்ளுவர் வேள்வி, தெய்வங்களைப் பற்றிச் சொல்கின்றார் என்று சொன்னதால் குழாயடிச் சண்டை நடந்திருக்கிறது...
ஆமாம், ஆமாம்! அந்தணர்கள் பற்றி வள்ளுவர் சொல்லி இருப்பதையும் யாரும் ஏற்கவே இல்லை.
நீக்குஇப்போதும் வள்ளுவர் யார் என்பதைப் பற்றிய வாதங்களும், அவருக்குக் கட்ட வேண்டியது வெள்ளை வேட்டியா/காவி வேட்டியா என்பது பற்றிய வாதங்களும் தொடர்கின்றன. ஆகவே இதைப் பற்றிக் கட்டாயமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்கிறது. திருவள்ளுவர் யார் என்பதில் உள்ள மாற்றுக் கருத்தைப் பற்றித் தானே/அதன் அடிப்படையில் திருக்குறளின் பொருள் மாற்றப்படுவதைக் குறித்தும் தானே சொல்ல முடியும்!
நீக்கு//தெய்வங்கள் நம்முடன் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் அவை கூறும் சூசகத் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்." என்கிறார் நரசிம்மா. உண்மைதான் என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குஉண்மைதான்.
புத்தக விமர்சனம் அருமையாக இருக்கிறது.
படிக்கும் ஆவலை தூண்டுகிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குதிருக்குறள் பற்றி, அதன் உள்ளடக்கம் பற்றிச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். மாற்றுக் கருத்து இருந்தால் பதியலாம். அதை விட்டு விட்டு தெய்வப் புலவர் பற்றியே எழுதி மடை மாற்றுவது முன்னால் செய்தவர் தவறையே மீண்டும் மீண்டும் செய்வதாகும்.
பதிலளிநீக்குஎன் தளத்தில் மொழி பற்ரிய தொடரில் திருக்குறளின் படைப்பாக்கம் பற்றி எழுத இருக்கிறேன்.
பொன்னியின் செல்வன்
பதிலளிநீக்குஈடு இணையில்லா நூல்
நன்றி நண்பரே...
நீக்குவரலாற்றுப்புதினங்களின் வரிசையில் எனக்குப் பிடித்தவர், முதலிடம் வகிப்பவர் கல்கியே.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஸார்.
நீக்குநீங்கள் சொல்லியிருப்பதைப் போல ஆசிரியரின் உழைப்பு பிரமிப்பைத் தருகிறது. எவ்வளவு சுவாரஸ்யத்துடன் வாசித்தீர்களோ அதே சுவாரஸ்யத்துடன் நூலைக் குறித்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் வாசிப்பு ஆர்வத்திற்கும் எனது பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு