Saturday, May 5, 2012

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....

                   
ஆதித்த கரிகாலன் கொலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்குகிறது!
          
பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லோருமே படித்திருப்போம். அப்புறம் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து  நாயகியும் சிலர் படித்திருக்கலாம். இந்த இரண்டு கதைக் களமுமே ஒன்றுதான். பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை ! (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது!)
            
கடைசிப் புத்தகக் கண்காட்சியில் முன்னுரையைப் படித்து விட்டு தியாகு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு என்னிடம் கொடுக்க, நானும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். 
            
எந்தப் புத்தகம்? 
    
சங்கதாரா... காலச்சக்கரம் நரசிம்மா எழுதியது. வானதி பதிப்பகம். 


முதலில் தியாகு, புத்தக அறிமுகம் அலைபேசியில் தந்து விட்டு புத்தகத்தைத் தர, ஆதித்த கரிகாலன் பற்றிய மர்மங்களை இந்தப் புத்தகத்தில் விடுவிப்பதாகப் படித்ததும் மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது. 
                    
(இதைப் படித்த எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர் ஒருவர் 'கடல் கொண்ட காதல்' என்ற புத்தகத்தையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வதோடு அது பற்றித் தெரிந்தவர்கள் எந்த பதிப்பகம், எங்கு கிடைக்கும் என்று விவரம் சொல்ல வேண்டுகிறார்....முனைவர் தமிழரசி என்பவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தற்செயலாக ஒரு பயணத்தின்போது தான் படித்ததை நினைவு கூர்கிறார் அவர்)
               
இதன் ஆசிரியர் டி ஏ. நரசிம்மா,  'தி இந்து' பத்திரிக்கையின் தமிழ்நாட்டுப் பிரிவின் செய்தி ஆசிரியராகவும் சீனியர் அஸிஸ்டன்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருவதாக ஆசிரியர் அறிமுகம் சொல்கிறது. 91 க்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் பணியாற்றியுள்ள இவரின் கதைகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் சொல்கிறது. இவரது தந்தை 'சித்ராலயா' கோபு. தாய் நாவலாசிரியை கமலா சடகோபன். 


முன்னுரை ஆதித்த கரிகாலன் பேசுவதாக அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அந்த முன்னுரையே நமது ஆவலைத் தூண்டுவதற்குப் போதுமானது. 

நான் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். நந்திபுரத்து நாயகி படிக்க வேண்டும்! அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது! அதில் (பொன்னியின் செல்வன்) ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்டிய நாட்டு ஆபத்துதவிப் படைகள், ரவிதாஸன்' என்று யூகிக்கும் வண்ணம் கதைப் போக்கு அமைந்திருக்கும்.வரலாறும் அவ்வாறு அறியப் பட விரும்பியதாகவே அமைக்கப் பட்டிருப்பது போலத் தோன்றுவதைச் சில காரணங்கள், கல்வெட்டுகள், தர்க்கங்கள் கொண்டு மறுக்கிறார் சங்கதாரா ஆசிரியர் நரசிம்மா.
               
ரவிதாஸன் ஆதித்தகரிகாலனைக் கொன்றான் என்றால் அருண்மொழிக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்கிற மதுராந்தகன் ஆட்சியில் சோழ உயர் பதவி அவருக்கு ஏன் அளிக்கப் பட வேண்டும்?  ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும்  ரவிதாஸன் சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டு ஏன் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்?
                 
அருண்மொழிக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று குந்தவைக்குத் தெரியவில்லை. ராஜேந்திரச் சோழன் இதை பின்னால் புரச நாட்டுக் கல்வெட்டுகள் மூலம் (தற்போதைய மலேயா) அறிகிறார்.
            
குந்தவை என்ன நினைத்திருக்கிறாளோ அது தவறு என்பது வந்தியத் தேவருக்குத் தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.
            
குந்தவையின் தோழி தெட்டக்கனி மட்டும் தான் சந்தேகப் பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கலாம். 
                     
பதினாறு வயதில் ஆதித்த கரிகாலன் கொல்லப் பட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ள தகவலே தவறு என்றும் அவர் கொல்லப் பட்டது அவரின் இருபத்தாறாம் அகவையில் என்றும் சொல்லப் படுகிறது.

'அருண்மொழியைப் போலவே நானும் அழகானவன்தான். ஏனோ சரித்திர ஆசிரியர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது' என்று ஆதித்த கரிகாலன் சொல்வதாக எழுதியிருக்கிறார் நரசிம்மா. அரசு கட்டில் ஏற முடியாத சோழர்குல வாரிசுகளை ஆதித்த கரிகாலன் என்ன செய்தான் என்று அறியும்போதும், ரவிதாஸன் யார், இந்தக் கொலையில் அவன் பங்கு என்ன என்று அறியும் போதும் அல்லது படிக்கும் போதும் ஆச்சர்யம்.  குறிப்பாக ரவிதாஸன் பற்றிய விவரங்களுக்கு ஆசிரியர் பல ஆதாரங்கள் அடுக்குகிறார்!
                   
கல்கி இந்த விவகாரங்களைத் தொடாமல் அல்லது தொட விரும்பாமல் இந்தப் பகுதிகளை நாசூக்காக ஓரமாக மட்டும் தொட்டுச் சென்று விட்டார் என்கிறது இந்தப் புத்தகம். 
             
சங்கதாரா என்பது சோழ மன்னர்கள் பட்டாபிஷேகத்தில் நீர் வார்க்கப் பயன் பட்ட ஒரு பஞ்சசன்னிய சங்கு. அது இருக்குமிடம் சங்கதாரா. புரச இலையை சிரசில் வைத்து, கரத்தில் புரசக் குச்சியைத் தந்து இந்தச் சங்கால் நீர் வார்த்து பட்டாபிஷேகம் நடைபெறும் என்று கல்வெட்டுகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.  
      
வீரபாண்டியன் தலையை வாங்கும்போது ஆதித்த கரிகாலன் வயது, குந்தவையின் வயது, நந்தினி என்று அழைக்கப் படும் நந்தா விளக்கு, உண்மையில் யார் மகள் நந்தினி, அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் உண்மையில் யார், வந்தியத் தேவன் நல்லவனா, கெட்டவனா....

நாம் படித்ததிலிருந்து ஏகப்பட்ட மாறுதல்களுடன் இந்த நாவல். ஆங்காங்கே வரலாற்று ஆதாரங்களையும் சொல்கிறார் என்றாலும் அது போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்வியும் வருகிறது. குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல். 

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று அறியும்போது ஓரளவு எதிர்பார்க்கும் அளவில் வைத்தாலும்,  சுவாரஸ்யம் குன்றாமல் திடுக்கிட முடிகிறது. சின்னச் சின்ன ஆனால் முக்கியமான திருப்பங்கள், ஆங்காங்கே சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு வந்து கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது நாம் எதிர்பார்த்த சில, எதிர்பார்க்காத சில என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது நாவல். ராஜ ராஜ சோழன் உண்மையில் யார் உண்மையில் ராஜராஜ சோழன் பிறந்த தினம் எது, என்று அறியும்போதும் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வரலாற்று ஆதாரம் என்று சரியாகக் காட்டாமல் ஒரு துப்பறியும் நிபுணரின் திறமையோடு அவற்றை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர். சில புதிய கேரக்டர்கள் உண்டு.
                  
மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனைப் பற்றிய குறிப்புகளில் மட்டும் ஒரு சிறு குழப்பம். தளிக்குளத்தார் கோவில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப் பட்டது என்றும் அதற்கான காரணமும் மனித மனதின் அழுக்குகளைச் சொல்கிறது. அதை விளக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு "பெரிய கோவில்; சிறிய புத்தி"
              
ஆங்கிலப் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்த நரசிம்மா தன் மனைவி கொண்டு வந்த புத்தகக் களஞ்சியங்களில் பொன்னியின் செல்வன், கடல் புறா எல்லாம் கிடைக்க, படித்து மகிழ்ந்தாராம். 
             
"அமரர் கல்கி ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் தனது பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலில் இருந்த 'சுழல் பகுதிகளை' ஆபத்தானவை என யூகித்து தனது 'கற்பனை' எனும் பாயமரக்கப்பலை, ஆபத்தில்லாத பக்கமாகச் செலுத்தி, சுழல் பகுதிகளைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் தனது கலத்தைச் செலுத்தியுள்ளார். மற்ற சரித்திர நாவலாசிரியர்களும் அவரைப் பின்பற்றி ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்து விட்டனர். எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை.பெரிய நாவலாசிரியர் என்ற பெயர் வாங்குவதற்காக நான் எழுதவில்லை. எனது பத்திரிகைப் பணியின் பாரத்தைக் குறைக்கவும் உண்மைகளை அறியும் ஆர்வத்தினாலும்தான் எழுதுகிறேன்...." என்கிறார் ஆசிரியர் நரசிம்மா.
            
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இவரது மற்ற இரண்டு படைப்புகளான 'காலச்சக்கரமும்', 'ரங்கராட்டினமு'ம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. "இந்த நாவலை எழுதியதற்காகவே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்" என்று ஒரு மூதாட்டி திருவரங்கத்திலிருந்து கதறியபடி தொலைபேசியதாகச் சொல்கிறார் நரசிம்மா, தனது 'ரங்கராட்டினம்' நாவலைப் பற்றி.


பொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்!
   
இந்தப் புத்தகம் சொல்லும், விளக்கும், விடுவிக்கும் பலப் பல மர்மங்களைச் சொல்வது நியாயமாகாது.  சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி! கண்டிப்பாகப் படிக்க வேண்டியப் புத்தகம்!
               
'சங்கதாரா'
ஆசிரியர் : 'காலச்சக்கரம்' நரசிம்மா.
வானதி பதிப்பகம்
450 பக்கங்கள்.
விலை : 150.00 
பின் குறிப்பு: இந்தப் புத்தகத்தை ஆன்-லைனில் வாங்க, உடுமலை.காம்  என்ற வெப்சைட்டில் பதிவு செய்து வாங்கலாம். இந்தியாவுக்குள் வாங்க முப்பது ரூபாய் தபால் செலவு சேர்த்து நூற்று எண்பது ரூபாய் ஆகும். பணத்தை, புத்தகம் கைக்கு வந்ததும் கொடுக்கலாம். 
                        

37 comments:

இராஜராஜேஸ்வரி said...

பொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் பதிவு.. பாராட்டுக்கள்..

மோகன் குமார் said...

ஒரே கிரிக்கெட் மேட்சா பார்த்து சங்ககாரா என படிச்சிட்டேன் !

வரலாற்று கதை படிச்சு ரொம்ப நாளாச்சு. நீங்க எழுதினதை பார்த்தா இந்த புத்தகம் படிக்கலாம்னு தாணுது. பார்சல் ப்ளீஸ்

அமைதிச்சாரல் said...

படிக்கணும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுது இந்தப்புத்தகம்..

இப்ப மறுபடியும் பொ.செல்வனை வாசிக்கணும் போலிருக்கே..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

அந்த மர்மங்களை தெரிஞ்சுக்கிறதுக்காகவாவது இந்தப்புத்தகத்தை வாங்கணும்..
நட்புடன்
கவிதை காதலன்

RAMVI said...

புத்தகத்தை உடனடியாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதமாக இருக்கு உங்களுடைய புத்தக விமர்சனம். புத்தகத்தை வாங்குவதற்குள் பொன்னியின் செல்வனை ஒரு முறை படித்து விடுகிறேன்.

மிக்க நன்றி சுவாரசியமான புத்தக அறிமுகத்திற்கு.

ராமலக்ஷ்மி said...

ரசித்ததை மிக சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

கணேஷ் said...

சும்மாவே ஆடற குரங்கு நான், கள்ளைக் குடிச்சுட்டா... உங்களோட இந்த விரிவான அழகான அறிமுகத்தைப் படிச்சதும் உடனே புத்தகத்தைப் படிக்கணும்னு தோணுது, இந்த மாச பட்ஜெட்ல 150 ரூபா துண்டு விழ வெச்சதுக்கு உடனே எனக்கு எம்,ஓ, பண்ணிடுங்க, ஹி... ஹி...

Madhavan Srinivasagopalan said...

என்னாது... ஆதித்த கரிகாலன கொன்னுபுட்டாங்களா ?
எப்போ ?

Let's wait for postmortem report .. keeping finger crosse.. !!

எங்கள் பிளாக் said...

நன்றி ராஜராஜேஸ்வரி, மோகன்குமார், (கிரிக்கெட் ரொம்ப ஓவர் டோஸா ஆனா இப்படித்தான்!) அமைதிச்சாரல், கவிதைக் காதலன் - மனிகண்டவேல், ராம்வி, ராமலக்ஷ்மி, கணேஷ்...(உங்களுக்கென்ன கணேஷ் துண்டு விழறது... தள்ளுபடியிலேயே கிடைக்குமே உங்களுக்கு...!) மாதவன்...(லொள்ளு...!)

அப்பாதுரை said...

பொன்னியின் செல்வன் படித்ததில்லை. (பாலகுமாரனுக்குச் சொன்ன அதே காரணம்).
நீங்கள் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கும் விதம் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது.

மாதவன் :-)

middleclassmadhavi said...

ஆவலைத் தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீர்கள்! படிக்க முயற்சி செய்கிறேன்.

ரிஷபன் said...

ஆர்வம் தூண்டும் அறிமுகம்.

வல்லிசிம்ஹன் said...

திகில் கதை படித்த த்ரில் நீங்கள் புத்தகத்தை வர்ணித்திருப்பது..இல்லை இல்லை விவரித்திருப்பது. பொன்னியின் செல்வன் இருக்கட்டும்.
இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும். மனதில் ஐடல்களாக உலவி வரும் குந்தவை வந்தியத்தேவனுக்கு இழுக்கு வருமோ என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.

என்னது கமலா சடகோபன் ,சித்ராலயா கோபுவின் மனைவியா????????????????
சரியான கிணற்றுத்தவளையாக இருக்கிறேனே:)
நன்றி ஸ்ரீராம்.

ஜீவி said...

தலைப்பு, ஒரு மிலியன் டாலர் கேள்வி அல்லவோ?.. 'பொன்னியன் செல்வன்' வாசிப்பு அனுபவம் பற்றி எவ்வளவோ எழுதியாயிற்று. 1956-ல் எனது முதல் வாசிப்பு! 'மணியம்' ஓவியங்களுடன், திருநெல்வேலியில்!
எனது பதிமூன்றாவது வயதில்!

//குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.//

இது தான் கோளாறே! ஏற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள், மனத்தில் பதியவே மறுக்கும்!

அதுசரி, இந்த நாவலின் ஆசிரியர்
'குந்தவை' என்று வரும் இடங்களில் எல்லாம், 'குந்தவை' என்று எழுதியிருக்கிறாரா, அல்லது 'குந்தவ்வை' என்றா?..

'குந்தவ்வை' என்று தான் பெரியவர் விக்கிரமன் தனது 'நந்திபுரத்து நாயகி'யில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பெயர் மாற்றவே எனக்கு ரொம்பவும் உறுத்தியது. பொறுத்துக் கொள்ள முடியாமல், விக்கிரமனை ஒரு தடவை நேரில் பார்த்த பொழுது கேட்டே விட்டேன்! அதற்கு அவர் சொன்ன விளக்கம், இன்னொரு பெரிய வரலாற்றுச் சுருக்கம்!

//என்னது கமலா சடகோபன்..//

ஆமாம், வல்லிசிம்ஹன்! 'கதவு'
கமலா சடகோபன் தான்!

பாலராஜன்கீதா said...

//வி said..
'கதவு'
கமலா சடகோபன் தான்! //
கலைமகள் இதழில் நாவல் போட்டியில் பரிசு பெற்ற கதைதானே அது ?

HVL said...

படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள். படித்துவிடுகிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஜீவி!!!:)
ஆமாம் பாலராஜன் கீதா.

கணேஷ் said...

‘‘என் வொய்ஃப் கதவுன்னு ஒரு கதை எழுதினா. அது கலைமகள்ல பரிசு வாங்கிச்சு. அடுத்தது சுவர்ன்னு ஒரு கதை எழுதினா அதுக்கும் பரிசு கிடைச்சடுத்து. என் பையன் ‘என்னம்மா.. அடுத்த கதை ஜன்னல்ன்னு எழுதப் போறியா’ன்னு கிண்டல் பண்ணினான். அந்தப்பேர்ல அவ எழுதலை’’ன்னு சித்ராலயா கோபு ஸார் தன் மனைவி கமலா சடகோபனைப் பத்தி ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நடத்தின விழாவுல பேசி சிரிக்க வெச்சார் வல்லிம்மா!

எங்கள் ப்ளாக் said...

அப்பாஜி...
நீங்கள் பொ. செ. படிக்கவில்லை என்று சொல்வது நம்ப முடியவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது.

நன்றி middleclassmadhavi

நன்றி ரிஷபன் சார்,

நன்றி வல்லிம்மா.... புத்தகம் வாங்கி விட்டீர்களா...! "அரசியலுக்கு ஒரு குந்தவை" தானே....மனதின் முதல் பிம்பங்கள் அழியும் சூழ்நிலை ஏற்படும்போது ஏற்க மனது மறுக்கும்தான்! இந்த காரணத்தினாலேயே என் உறவினர் ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படிக்க மாட்டேன் என்றே கூறி விட்டார்!

ஜீவி சார்,
முதலில் மனதில் ஏற்பட்ட பிம்பங்களை எந்த ஆதாரத்தின் பேரில் நம்பினோம்? அரசியலில் இருப்போர் எந்த அளவு 'அரசியல்' செய்ய வேண்டியிருக்கும் என்பது இப்போதைய ஜனநாயக காலத்திலேயே தெரிகிறது. அந்தக் கால 'அரச ஆணவ'க் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது! சாத்தியம் என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலில் குந்தவை என்றுதான் எழுதுகிறார். 'வ்' இல்லை! பழகிப் போன குந்தவை பெயரில் வ் சேர்ந்தால் உறுத்துகிறது. நம்மில் எத்தனை பேர் காவஸ்கர், வாஜபேயி பெயர்களை சரியாக உச்சரிக்கிறோம். கவாஸ்கர், வாஜ்பாய் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கிறது! விக்ரமன் என்ன சொன்னார் என்று சுருக்கமாகவாவது அறிய ஆவல். நந்திபுரத்து நாயகி இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்து விடுவேன்! 'கடல் கொண்ட காதல்' புத்தக விவரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது! 'கதவு'ம் படித்ததில்லை.

நன்றி HVL,

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணேஷ்....

அப்பாதுரை said...

படிக்க ஆசையும் வந்ததில்லை.

அப்பாதுரை said...

என்னுடைய தமிழ் வாசிப்பு ரொம்ப ரொம்பக் குறுகியது :)
தமிழில் நான் படித்தது 90% சுஜாதா, பாக்கியம் ராமசாமி; 10% மற்றவர்.

மனோ சாமிநாதன் said...

சங்கதாரா புத்தகத்தின் அறிமுகத்திற்கு மிகவும் நன்றி! அவசியம் படிக்க வேண்டும். அடுத்த மாதம் சென்னை வரும்போது வாங்கி விடுவேன். நீண்ட‌ ப‌திவு! ஆனால் மிக‌வும் சுவார‌ஸ்ய‌மாக இருந்த‌து ப‌டிக்க‌!!

பொன்னியின் செல்வனை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். அதில் நூற்றில் ஒரு மடங்கு கூட என்னால் நந்திபுரத்து நாயகியைப் படிக்க முடியவில்லை. உடையாரையும்கூட கடைசி வரை பொறுமையாக படிக்க முடியவில்லை. பாலகுமாரன் கூட, உத்த‌ம சோழனின் தாயாரை, கல்கி சித்தரிந்த‌தற்கு நேர்மாறாக, கதைக்களத்தின் வில்லியாக சித்தரித்திருப்பார். ஆதித்த கரிகாலனின் கொலையைச் செய்தது யார் என்பதை கடைசி வரை ஊகத்திற்கே விட்டு விடும் க‌ல்கி, பழுவேட்டையரிலிருந்து நந்தினி வரையும்கூட அந்த ஊகத்தில் அடக்கியிருப்பார். முதலில் சங்கதாரா படித்து விட்டு, பிறகு பொன்னியின் செல்வனை ம‌றுபடியும் படிக்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

ஆதித்த கரிகாலன் பற்றிய சில தகவல்கள் கீழுள்ள இணைப்பிலும் இருக்கின்றன.

http://tamilepicnovels.blogspot.சொம்/

KAALACHAKRAM NARASIMMA said...

அன்பர்களுக்கு வணக்கங்கள்
நான் காலச்சக்கரம் நரசிம்மா. உங்கள் இணையத்தில் எனது நாவல் சங்கத்தாரா அறிமுகம் கண்டேன். உற்சாகம் கொண்டேன். ஒரு பத்திரிகையாளனாக நடுநிலைமையுடன் உண்மைகளை ஆராய்ந்து, எந்த சரித்திர கதாபாத்திரத்தையும் சுத்த சத்வ பொருளாக சித்தரிக்காமல், அன்றைய அரசியல் சூழ்நிலையில் நிகழ்ந்த சூது வாது போராட்டங்களை அப்படியே எனது நாவலில் பதிவு செய்துள்ளேன்.

பொன்னியின் செல்வன் என்கிற கருப்பு குளிர் கண்ணாடியை போட்டு கொண்டு சோழர் சரித்திரத்தை நோக்கி வந்திருக்கிறோம். எனவே பலருக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். அதற்காக, கல்கி அணிவித்த கண்ணாடி வழியாகத்தான் சோழர் சரித்திரத்தை பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்காக இந்த நாவல் எழுதப்பட வில்லை.

சரித்திரம் என்றுமே பதவியில் இருப்பவர்களை இந்திரன் சந்திரன் என்று போற்றத்தான் செய்யும். இன்றைய அரசியல் நிகழ்வுகள் நாளைய சரித்திரம் ஆகும் பொழுது, இன்றைய ஊழல் மனிதர்கள் காப்பிய நாயகர்களாக சித்தரிக்கபடுவர்கள். இவர்கள் தகிடு திட்டங்கள் குறிப்பிட படாமல் போகும்.

திரைப்பட கதாநாயகர்களை சத்வ புருஷர்கள் என்று நம்பும் நம் மக்கள், சோழர் சரித்திரத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் நோக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

எனது மூன்று நாவல்களும் (காலச்சக்ரம், ரங்கராட்டினம், ஷங்கதார) பெரும் மர்மங்களை உடைத்து உள்ளது. முதல் இரண்டு நாவல்களும் அமோக ஆதரவை பெற்றன.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்
காலச்சக்கரம் NARASIMMAA

\

எங்கள் ப்ளாக் said...

எங்கள் பதிவைப் படித்து, வாசகர்களின் கருத்துரைகளை மதித்து, இந்தப் பதிவிற்கு பின்னூட்டமிட்ட காலச்சக்கரம் நரசிம்மா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. எங்களுக்கு அவருடைய கருத்துரை டானிக் சாப்பிட்டது போல இருக்கின்றது. நன்றி.

தனிமரம் said...

இந்தப்புத்தகத்தைப்படிக்க தூண்டும் பதிவு . அடுத்தமுறை வரும் போது வாங்கிவிட்டால் படிக்கலாம் ஒன் லைனில் சாத்தியம் இல்லை!

எல் கே said...

இந்த புத்தகம் எங்க கிடைக்கும் ? பொன்னியின் செல்வன் பல முறை வாசித்துவிட்டேன் ... நந்திபுரத்து நாயகி , இருமுறை (பள்ளி பிராயத்தில் தர்மபுரியில் எனது சின்ன பாட்டி வீட்டில் படித்த நினைவு)..

உடையார் பக்கம் போக விருப்பம் இல்லை

இதையும் படித்து விடவேண்டியதுதான்

எங்கள் ப்ளாக் said...

எல் கே சார். 9445901234 / 9445979797 ஆகிய எண்களுக்கு ஃபோன் செய்து வானதி பதிப்பகம், சங்கதாரா, காலச்சக்கரம் நரசிம்மா எழுதியது ஆகிய விவரங்கள் கூறி, புத்தகத்தை வாங்கலாம். (இந்த அலைபேசி எண்கள் 'இட்லி வடை'யின் சைடு பாரிலிருந்து கிடைத்த விவரம்)

Geetha Sambasivam said...

பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை ! (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது!)//

நல்லவேளையா உடையார் படிக்கலை இன்னமும். படிக்கலாமானு யோசிச்சுட்டு இருந்தேன். பாலகுமாரனைப் படிக்கும் ஆவலே இப்போதெல்லாம் இல்லாததால் அவ்வளவாய் ஏமாற்றமும் இல்லை. பிழைச்சேன். :)))))

சங்கதாரா கட்டாயமாய்ப் படிக்கவேண்டும். இங்கே கிடைக்கிறதானு பார்க்கிறேன்; இல்லைனா உங்க புத்தகத்தைக் கொடுத்துடுங்க. படிச்சுட்டு விமரிசிக்கலாம். எனக்கு அப்படி ஒண்ணும் கல்கி எழுத்துத் தான் சரினு எல்லாம் அபிப்பிராயம் இல்லை; அதனால் அவ்வளவாய் பாதிப்பெல்லாம் இருக்காது. ஏற்கெனவே பொன்னியின் செல்வனை லக்ஷம் தரம் படிச்சாச்சு! சங்கதாராவுக்கு அப்புறம் மறுபடி பார்க்கலாம். :))))))

அஹோரி said...

//ஒரே கிரிக்கெட் மேட்சா பார்த்து சங்ககாரா என படிச்சிட்டேன் !//

Same blood.

வெங்கட் நாகராஜ் said...

சமீபத்திய எனது சென்னைப் பயணத்தின் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தப் புத்தகத்தினைக் காண்பித்து நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் என அறிமுகம் செய்தார் நண்பர் மின்னல் வரிகள் கணேஷ். உங்கள் பக்கத்திலும் படித்த பிறகு உடனே படித்து விடத் தோன்றுகிறது. இன்றே உடுமலை பக்கம் சென்று ஆர்டர் செய்கிறேன்.

நல்ல புத்தகத்தினைப் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி.

BhanuMurugan said...

The writer has done an amazingly extensive research about the Chozha dynasty. The darker side of their history, usually ignored by other writers were brought to light.

He has wasted his valuable research results and a thrilling plot with his immature writing skills.  He could have written this novel along with a good writer and brought out a better novel.

ஆதித்த கரிகாலனுக்கு சரித்திர நாவலாசிரியர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் கண்டராதித்தரில் தொடங்கி ராஜேந்திர சோழன் வரையிலும் சவட்டி எடுத்து விட்டார்.  பாவம், they are going to turn in their graves.

இரண்டு வரிகளில் புரிய வைக்க வேண்டியதை எல்லாம் (புரிந்து விட்டதை எல்லாம்) இரண்டு பக்கங்களுக்கு வளவளத்து, வாசகர்களின் புத்திக் கூர்மை மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். உதாரணம் - முருங்கல், முருக்கல்.  குழந்தைத் தனமான பாடல் வரிகள், இதற்குத் தனியாகப் பொருள் விளக்கம் வேறு. 

குந்தவையும் வந்தியத்தேவனும் சேர்ந்து ஆதித்த கரிகாலனைப் போட்டுத் தள்ளியிருப்பார்கள் என்கிற concept கொலை நடந்த காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுதான், புதிது அல்ல. காரணமும் complicated அல்ல.  அவர்கள் பெண்ணை ராஜராஜன் மணந்து இருந்தான்.  இவர் கணக்குப் படியே, 14 வயது மூத்தவளான குந்தவை தம்பிக்குப் பெண் கொடுத்ததில் முரண் ஒன்றும் இல்லை.

ஆவணி சதயத்திற்கு அடுத்த மாதம் ஐப்பசி சதயம் என்கிறார். ஒன்யும் புரீல.
ஆதித்தனுக்கு அத்தைப்பெண் குந்தவையின் மகனுக்கு எப்படி சகோதரியாவாள் ? அதும் புரீல்ல.

பெற்ற தாய் தந்தைக்குக் குழந்தையின் மார்பில் திடீரென்று தோன்றிய மச்சம் தெரியவில்லையாம், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணனுக்கு மட்டும் தெரிந்ததாம்.  ரேகை படிப்பவர்கள் விடுப்பில் போய் விட்டார்கள் போலும். 

இவரின் முந்தைய நாவலைப் படித்த மூதாட்டி ஒருவர் பாராட்டிய செய்தியைப் படித்து விட்டு, அடுத்து அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்றிருந்தேன்.  அந்த ஆவல் இப்போது.... ஹூம், பார்க்கலாம். 

கோவை மு சரளா said...

பாலகணேஷ் சாரின் தளம் மூலம் இந்த தளம் எனக்கு அறிமுகம்,
நூல் அறிமுகம் பாராட்டக்கூடிய வகையில் அமைந்திருகிறது வரவேற்கவேண்டிய விஷயம் கூட எங்கு பார்த்தாலும் சினிமா மோகத்தில் திளைத்திருக்கும் இன்றைய தலைமுறையை நம் வரலாற்றை நோக்கி திசை திருப்பும் வகையில் பல நூல்களை அறிமுகம் செய்து வைக்க வாழ்த்துகிறேன் .நன்றி

Geetha Sambasivam said...

இப்போத் தான் படிச்சு முடிச்சேன். வாழ்க கிரஹணம்! :)

பானுமுருகனின் இந்த சந்தேகம் எனக்கும் வந்தது.
//ஆவணி சதயத்திற்கு அடுத்த மாதம் ஐப்பசி சதயம் என்கிறார். ஒன்யும் புரீல.
ஆதித்தனுக்கு அத்தைப்பெண் குந்தவையின் மகனுக்கு எப்படி சகோதரியாவாள் ? அதும் புரீல்ல.//

ஆவணிக்குப் பின்னர் புரட்டாசி சதயம் அப்புறமாத் தானே ஐப்பசி சதயம் அதுக்குள்ளே ஆவணி சதயத்திலே பிறந்த குழந்தைக்கு 2 மாசம் ஆகி இருக்கும். பிறந்த குழந்தைக்கும், பிறந்து 2 மாசம் ஆன குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்திருக்கும்? புரியத் தான் இல்லை! :)

அதே போல் ஆதித்தனின் அத்தைப் பெண் என்றால் குந்தவைக்கும் அத்தை பெண் தான். குந்தவையின் மகனுக்கு சகோதரி முறை எப்படி வரும்? புரியலை! மண்டையைக் குழப்பிக் கொண்டேன். தாயின் அத்தை பெண் என்னும் முறை தான் வரும். ரொம்பக் குழம்பிப் போச்சோ எனக்கு? ம்ம்ம்ம்ம்>

THILAKAVATHI T C CHANDRAN said...

பொன்னியின் செல்வனுக்கு எதிராகவே பயணிக்கிறது , படிக்கவே அருவருப்பாக இருந்தது, கல்கிக்கு மாற்றாக தன்னை வாசகர்கள் நினைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. அது எப்படி கல்கி யாரை நல்லவர்கள் என்று சொல்கிறாரோ அவர்கள் அனைவரும் சதிகாரர்கள் ஆனார்கள். சதிகாரர்கள் அனைவரும் நல்லவர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை........?

'நெல்லைத் தமிழன் said...

'நான் மூன்று நாவல்களையும் படித்துள்ளேன். 'நரசிம்மா அவர்கள் 'சங்கதாரா'வை விறுவிறுப்பாகப் படைத்துள்ளார். ஆனால், நாவலின் அடி'நாதமான, குந்தவை, அண்ணனை விட தம்பியை ஆதரித்ததன் காரணம், வெகு குளறுபடியாகிவிட்டது. ராஜராஜன் குந்தவையின் மகன் என்றும், அரசகுமாரனை ஆள்மாறாட்டம் செய்துவிட்டார் என்பதும் மொத்த நாவலின் ரசனையை அழிக்கிறது. அந்தப் பெரிய பூச்சுத்தல், நம்பகத்தன்மையைக் குலைக்கிறது. மற்றபடி எழுத்து நடை, Plot போன்றவை அவர் திறமையைப் பறைசாற்றுகிறது.

கல்கி அவர்கள், குந்தவையை மிக மேன்மைகுணம் கொண்டவராகச் சித்தரித்திருப்பார். நரசிம்மா அவர்கள் குந்தவையை, பெண் என்பதால் அரசாட்சி தன் கையை விட்டுப் போய்விட்டதே என்று ஏங்குபவளாகச் சித்தரித்திருப்பார். அப்படி நடந்திருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லை. நரசிம்மா, அரசியல் பேச்சுக்களை நன்றாகவே கொண்டுவந்துள்ளார். ஆனால், நாவலின் அடிவேரே, கடைசிப் பகுதியில் தகர்ந்துவிடுகிறது. அதுவும்தவிர, ஆதித்த கரிகாலனின் மரணம் போன்றவை ரொம்ப டிராமாவாகத் (நடக்கமுடியாத) தோன்றுகிறது. குந்தவை ஆசைப்பட்டு மணந்ததாகக் கூறப்படும் வந்தியத்தேவன் 10 வருட கடுங்காவல் தண்டனை அடைந்ததாகவும், அவருடைய ஊரில் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாகவும், அதற்கு அப்புறமும் அரசமகளிரான குந்தவையுடன் தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்படுவது ஜீரணிக்க முடியாதது (இத ஒரு தனிப்பட்ட நாவலாகப் பார்த்தாலும்). பாலகுமாரன், அவருடைய உடையார் நாவலில் இதை ஓரளவு லாஜிக்கலாகக் கையாண்டுள்ளார். கல்கி, வரலாற்றுச் செய்தியை ('நிறைய காலத்தை) 5 பாகமாக சுவையாக நிறைய கற்பனை வருணனைகளோடு தந்திருப்பார். பாலகுமாரன், சில வருடங்களில் நடந்ததை (கோவில் கட்டுவதை) நிறைய நடப்புச் செய்திகளைக் கற்பனை செய்து, சுற்றி இருக்கும் மனிதர்களின் வாழ்வியலை உற்று நோக்கி விவரித்திருப்பார். இது நடந்திருக்கும் என்று நம்பும்படியாக இருக்கும். தளிக்குளத்தார் கோவில், ராஜராஜேஸ்வரமானது என்ற நரசிம்மாவின் தியரி ஒப்புக்கொள்ளக்கூடியது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கல்கி, வரலாற்றைப் பழுதுபடுத்தாமல், நமது முன்னோர் நம்மைவிட மேம்பட்டவர்கள் என்ற நோக்கில், சுவாரசியமாக நமக்குச் சோழ ராஜ்ஜியத்தை அறிமுகம் செய்திருப்பார். நரசிம்மா, அரசியல் என்ற பார்வையில் அதனை அறிமுகம் செய்கிறார் (திருப்பம் உண்டாக்கும் இடங்களை ஜீரணிக்கமுடியவில்லை. இப்படி நடந்திருக்காது என்று நிச்சயமாகச் சொல்லத் தோன்றுகிறது). பாலகுமாரன், வாழ்வியலைத் தூக்கிப்பிடித்திருப்பார் (அவர்களும் மனிதர்கள் என்ற நோக்கில்). என்னுடைய மதிப்பீடு, கல்கி-100, பாலகுமாரன்-60, நரசிம்மா-40

'நெல்லைத் தமிழன் said...

என்னுடைய பின்னூட்டத்தில், கல்கி-100 என்பது, |கல்கியின் நாவலுக்கு 100 மதிப்பெண்கள் என்று வைத்துக்கொண்டால்" என்பதுதான் அர்த்தம். அவரும், பாலகுமாரனும், கதை நடந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து எழுதியிருப்பதால், ஓரளவு உண்மைக்கு அருகில் வருகிறார்கள். கதையின் நம்பகத்தன்மை கூடுகிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!