செவ்வாய், 19 அக்டோபர், 2021

சிறுகதை : நெஞ்சில் பூத்த நித்திலம் - துரை செல்வராஜூ

 

நெஞ்சில் பூத்த நித்திலம்

- துரை செல்வராஜூ -

நாற்பத்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒருநாள்..


தஞ்சாவூர் ஜில்லாவில் பசுபதீஸ்வரம் என்ற சிற்றூர்.. அவ்வூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு...

முதல் பாடவேளை..

தமிழாசிரியர் பாலசுந்தரம் ஐயா  அவர்கள் நாற்காலியில் இருந்தபடியே அப்பர் பெருமானைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஓய்வு பெறும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஐயா அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவ மாணவிகளுள் - யாராவது ஒருவர் ஏதாவது ஒரு திருக்குறளை மொழிய வேண்டும்..

அந்தத் திருக்குறளை அனைவரும் வழிமொழிந்த பின் மாணவ மணிகளுக்கு வணக்கம் சொல்லியபடி அமர்வார்..

புத்தகத்தைப் புரட்டாமல் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், சிலப்பதிகாரம், நாலடியார் - என்று அனைத்திலும் குற்றால அருவியாய் பொங்கிப் பெருகக் கூடியவர்..

சீமை ஓடு வேயப்பெற்ற இரண்டு காரைக் கட்டிடங்களையும் கூரைக் கொட்டகை ஒன்றையும் உடையதாகிய பள்ளியில் - நவீன சிமெண்ட் கட்டிடம் ஒன்றே ஒன்று.. அந்த ஒன்றில்  மட்டுமே மின் வசதி..  தலைமை ஆசிரியர் அலுவலகம், நூலகம், வேதியியல் ஆய்வுக் கூடம், உயிரியல் மாதிரி காட்சிக் கூடம் - எல்லாமும் அந்தக் கட்டடத்தில்தான்... உயிரியல் காட்சிக் கூடத்திற்குள் நுழைவது என்றாலே பசங்களுக்கு வயிற்றைக் கலக்கும்...

ஆறடி நீளத்துக்கு நல்ல பாம்பு ஒன்று..  இத்தனைக்கும் பச்சைப் பசேல் எனப் பளபளக்கும் வயற்காட்டுக்கு நடுவிருக்கும் கிராமம்தான் பசுபதீஸ்வரம்..

தினசரி ஏதாவதொரு பாம்பு வந்து வாசற் புறத்தில் தலையைக் காட்டி விட்டுப் போகும்..

சின்னப் பசங்கள் கூட சர்வ சாதாரணமாக பாம்பைப் பிடித்து சுழற்றி எறிவார்கள்..

இருந்தாலும்,  பக்குவம் செய்யப்பட்ட அந்த பாம்பின் திறந்த வாயும் தோற்றமும் அப்படி...

அடுத்து  - கண்ணாடிப் பேழைக்குள் ஏதோ ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஆறு மாத சிசு.... அந்தப் பேழை மட்டும் துணியால் மூடப்பட்டிருக்கும் என்றாலும்  அக் குழந்தையின் ஆவி அந்த அறைக்குள் சுற்றுவதாகவும் நள்ளிரவில் பால் கேட்டு அழுவதாகவும் ஒரு புரளி..

மூன்றாவதாக கண்ணாடிக் கூண்டுக்குள் தொங்கும் எலும்புக்கூடு.. அதை எடுத்து மேஜையில் கிடத்தி - அறிவியல் வகுப்பில் உடற்கூறியல் பாடம் நடத்துவார் திரு. KK சார்..

இப்படியான பள்ளிச் சூழலில் பதினொன்றாம் வகுப்பு..

விறுவிறுப்பாக பாடம் நடந்து கொண்டிருக்கிறது...

" போருக்குச் சென்ற கலிப்பகையார் எதிர்பாராத விதமாக.. "

" ஐயா.. வணக்கம்.. ங்க... " குறுக்கிடல் கேட்டுத் திரும்பினார் ஐயா...

வகுப்பறை வாசலில் அலுவவலகப் பணியாளர்...

" என்ன சாரங்கன்?.. "

" புதுசா ஒரு பையன்... இப்போ சேர்ந்திருக்கிறான்... " - சொல்லிக் கொண்டே கட்டணம் செலுத்தப்பட்ட ரசீதை நீட்டினார்..

" தம்பி... இங்கே வா.. இதுதான் உன்னோட வகுப்பு!.. " - சொல்லி விட்டு நகர்ந்தார்..

புதியவன் ஏதோ பிள்ளைப் பூச்சி மாதிரி இருப்பான் என்று பார்த்தால் - உருண்டு திரண்ட தோள்களும் முன்கைகளும் வாட்டசாட்டமாக - தும்பைப் பூ போல வெள்ளைச் சட்டையும் நாலு முழ வேஷ்டியும் அணிந்திருந்த அவன் கதவுக்குப் பக்கமிருந்து, " வணக்கம் ஐயா!.. " - என்றபடி வந்து நின்றான்...

மேலுதட்டின் மேல் கரிக் கோடாக மெல்லிய மீசை..

மேழி பிடித்து உழைத்ததால் உரம் ஏறிய கைகள்..

கதிர்க் கட்டுடன் வரப்பில் ஓடி களத்தில் போட்டு அடித்துப் புரட்டி நெல் அளந்ததால் வைரம் பாய்ந்திருந்த தோள்களும் மார்பும்..

ஆனாலும், வயல்வெளியில் வேலை செய்பவர் எல்லாருக்கும் இப்படியான உடல் வாகு அமையாது..

" யார்றா இவன்?.. காத்தவராயன் மாதிரி!.. " - பசங்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள்...

அவனுக்கு வயது பத்தொன்பது நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை...

" உள்ளே வாப்பா!... " - என்று அவனை வரவேற்ற ஐயா,

" வகுப்பெல்லாம் ஆரம்பிச்சு இருபது நாளாச்சு... இப்போ வந்திருக்கே!... எந்த ஊர் உனக்கு?.. "  - வினவினார்..

" சோழபுரம்.. "

" சோழபுரமா!... அங்கே இருந்தா வருகிறாய்?..  "

இங்கிருந்து பத்து மைல் தொலைவில் அந்த ஊர்..

அதனால் ஆச்சர்யம் ஐயாவுக்கு..

" இல்லீங்க ஐயா.. இங்கே சித்தப்பா வீட்டில் தங்கி இருக்கிறேன்... "

" ம்... உம் பேரு?... "

" ராஜேந்திரன்.. ஐயா!.. "

" கங்கை கொண்ட சோழனைப் போல் சிறப்புற்று வாழ்க.. திருக்குறள் தெரியுமா?.. "

" தெரியும் ஐயா!.. "

 " குறள் ஒன்றைச் சொல்லி விட்டு அந்த மூன்றாவது பலகையில் உட்கார்!.." -  என்றார்...

கணீரென்ற குரலில் குறள் ஒன்றைச் சொன்ன ராஜேந்திரன் அதன் பொருளையும் கூறினான்..

ஐயாவுக்கு மிகவும் மகிழ்ச்சி..

மூன்று நான்கு நாட்கள் கழிந்தன...

ஐயா வகுப்பினுள் நுழைந்ததுமே அன்று புதிதாய் சேர்ந்திருந்த மாணவியைக் கண்டார்.. அவளது குறள் முழக்கத்தைக் கேட்டார்...

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்!..."

மகிழ்ச்சியுற்ற ஐயா - அந்த மாணவியின் பெயரை விசாரிக்க - " பொற்கொடி!.. " - என்றாள் புன்னகையுடன்..

திருத்தமான முகத்தில் மெல்லியதாக மஞ்சள் பூச்சு... தீச்சுடர் போல செஞ்சாந்துத் திலகம்.. கழுத்தில் இரட்டையாய் பொற்சங்கிலிகள்.. கைகளில் ஒற்றை ஒற்றையாய் வளையல்களும் விரல்களில் மருதாணிச் சிவப்பும்...


" பெண்கள் தான் குடும்பத்தின் கண்கள்.. நல்லாப் படிக்கணும்!.. " - என்றார் ஐயா..

" சரிங்க ஐயா!.. "

சில நாட்கள் சென்றன..

அன்று மத்தியானம்... இடைவேளை மணி அடித்த சில நிமிடங்களுக்கெல்லாம் சாரங்கன் ஓடி வந்து   ஓய்வு அறையில் இருந்த ஐயா அவர்களிடம் குனிந்தபடி முணுமுணுத்தான்...

" இது ஏதடா வம்பு!.. " - என்றபடி வெளியே வந்து பள்ளிக் கட்டிடத்தின் பக்க வாட்டில் இருந்த புங்க மரத்தை நெருங்கினார்...

பின்னாலேயே சாரங்கனும்...

புங்கையின் நிழலில் விரிக்கப் பட்டிருந்த ஜமக்காளத்தில் ராஜேந்திரனும் பொற்கொடியும் எதிர் எதிராக அமர்ந்து புன்னகைப் பூக்களாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்...

" இதுங்கல்லாம் உருப்படறதுக்கா..  ஸ்கூலு வெளங்கின மாதிரி தான்... "
சாரங்கன் கடுகடுத்தான்..

" நீ சும்மா இரு... கொஞ்ச நேரம்!.. " -  அதட்டியபடி மேற்கொண்டு பேசுவதற்குள் - எதிர்த் திசையில் இருந்து நடுத்தர வயதுடைய பெண்மணி கையில் கூஜாவுடன் வந்து கொண்டிருந்தார்..

பள்ளிக்கூடத்தின் பக்கமிருந்து இவர்கள் பார்ப்பதைக் கவனித்து விட்ட அந்தப் பெண்மணி கைகளைக் கூப்பினார்... 

இதைக் கண்ட ராஜேந்திரனும் பொற்கொடியும் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க - பாலசுந்தரம் ஐயா அவர்கள் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தனர்...

உடம்பு நடுங்கியது இருவருக்கும்...

" எங்க புள்ளைங்க தாங்க!.. "

" எங்க புள்ளைங்க... ன்னா?.. "

சாரங்கன் கேள்விக் கணையை வீசினான்...

" இவன் எம் மகன்... இந்தப் பொண்ணு மருமக... "திடுக்கிட்டார் பாலசுந்தரம் ஐயா...

" எம் மாமியார் எம்பது வயசுல பேரன் கல்யாணத்தைப் பார்க்கணும்... ன்னு மூச்சு இழுத்துக்கிட்டு கிடக்கறப்போ வேற வழியில்லாம ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்த எங்க அண்ண மகளப் புடிச்சு கட்டி வைச்சோம்... கல்யாணம் ஆன நாலாம் நாளு மாமியார் எழுந்திருச்சி உட்கார்ந்துட்டாங்க... இதென்னடா கெரகம்... புள்ளங்க படிப்பு கெட்டுப் போகுமே... ன்னு - இங்க இருக்குற கொழுந்தனார் ஊட்ல தங்கி படிக்கிறதுக்காக ராசேந்திரன அனுப்பி வைச்சோம்... ஆனா.. " மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்த அந்த அம்மா நிறுத்தினார்கள்..

பாலசுந்தரம் ஐயா அவர்கள் இன்னும் வியப்பிலிருந்து மீளவில்லை...

" அன்னைக்கு சாயங்காலமே மருமகளுக்கு காய்ச்சல் வந்துடுச்சு.. ராத்திரியெல்லாம் ஒரே அனத்தல்.. புள்ளைக்கு ஏதாவது கோளாறு ஆய்டுமோ... ன்னு எல்லாருக்கும் பயமா போச்சு.. "

" சரி.. நடக்கிறது நடக்கட்டும்...  படிக்கிற படிப்பு வீணா போய்டக்கூடாது... ன்னு இந்தப் புள்ளையையும் இங்கே கொண்டாந்து சேத்துருக்கோம்... கேணித் தண்ணிய வெள்ளம் கொண்டு போயிடாது.. ஆக்கப் பொறுத்த நீங்க ஆறப் பொறுக்கணும்.. இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம்.. ன்னு பசங்க கிட்டே சொல்லி வச்சிருக்கோம்... எங்க ஊட்டுக்காரர் நாலெழுத்து எழுதுவாருங்க..  எனக்கு பால் வித்த கணக்கு.. முட்டை வித்த கணக்கு... ன்னு செவுத்துல கரிக்கோடு போடத்தான் தெரியும்... அது அந்தக் காலம்.. இப்போ அப்படி இல்லீங்களே.. "

" ஒம்பதாங் கிளாஸ் படிக்கிறப்போ எம்மவனுக்கு மகமாயி வந்து இறங்கி மேலெல்லாம் ஆங்காரமா  வெளையாடிட்டா..  தஞ்சாவூருக்குப் போயி அவளோட கோயில்..லயே படுத்துட்டோம்.. நாப்பத்தைஞ்சு நாள்... மகமாயி மடிப்பிச்சை கொடுத்தா.. பையனும் பொழச்சுக்கிட்டான்.. இருந்தாலும் ஆறு மாசத்துக்கு வெயிலைப் பாக்கப் படாது.. ன்னு சொல்லிட்டாங்க.. அப்படி இப்படி.. ன்னு ஒன்ரை வருசத்துக்கு மேல படிப்பு கை நழுவிப் போச்சு.. ராசேந்திரனும் படிக்கிறதுக்கு ஆசையா இருந்தான்.. சரி ன்னு  ஸ்கூல்ல சேத்து விட்டோம்..  மறுபடியும் ஒம்பதாங் கிளாஸ்ல  இருந்து படிச்சு இன்னைக்கு எஸ்ஸெல்சி வந்துருக்கான்.. "

" எங்கள மாதிரியே எங்க பசங்களும் ஆயிடக் கூடாதுங்க.. இவங்களுக்காகத் தான் காட்லயும் மேட்லயும் கஷ்டப் படுறோம்... திடீர் கலியாணத்தால சின்னஞ் சிறுசுங்களோட படிப்பு கெட்டுப் போய்டக்கூடாது.. ன்னு தான் ஒரே ஸ்கூலா சேர்த்துருக்கோம்...  இது ஒரு பக்கம் இருந்தாலும்  கூடப் படிக்கிற புள்ளைங்களோட நிதானம் குறைஞ்சிடுற மாதிரி நீங்க  நடந்துக்கக் கூடாது... ன்னும் ஒருத்தருக்கொருத்தர் யாரோ எவரோ.. ங்கிற மாதிரி இருந்துக்கணும்... ன்னும் சொல்லி வெச்சிருக்கோம்... மத்தவங்க கண்ணுக்குத்  தெரியப்படாது.. ன்னு தான் மாங்கலியத்தை சங்கிலில கோத்து உள் மடிப்பா போட்டிருக்கோம்.. " பெருமூச்சுடன் நிறுத்தினார்கள் அந்த அம்மா...

' என்னென்ன சிந்தனைகள்...  எப்படி எல்லாம் மனிதர்கள்!.. ' -  ஐயா அவர்களின் வியப்பு அடங்க வில்லை..

" மனையில இருந்து மஞ்சக் கயிறு கட்டி நெத்தியில பொட்டு வச்சதோட சரி... அக்னி சுத்தி அம்மி மிதிச்சு ஆகாயத்துல அருந்ததி பார்த்ததோட சரி.. இன்னும் குத்து விளக்கேத்தி குடித்தனம் வைக்கலை.. புள்ள்ளைங்க ரெண்டும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் இன்னமும் பார்த்துக்கலை..  சின்னஞ் சிறுசுகளை பிரிச்சு வெச்சிருக்கோம்... இருக்குற பாவம் போதாது.. ன்னு இது வேற!...  எங்க போயி இதத் தீர்க்கிறது.. ன்னு தெரியலை... " அந்தத் தாயின் கண்களில் கண்ணீர்...

" அம்மா.. எப்பேர்ப்பட்ட புண்ணியம் இது.. குல விளக்கு.. ன்னு பெண் பிள்ளைகளுக்கு பேரும் பெருமையும்.. அப்பேர்ப்பட்ட குல விளக்கு கையில படிப்பு.. ங்கற ஒளி விளக்கைக் கொடுத்திருக்கீங்க... பாவம் ஏதம்மா உங்களுக்கு?.. புண்ணியம்  தான் கோடி!.. " மனம் நெகிழ்ந்து பேசினார் பாலசுந்தரம் ஐயா...

இதற்குள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்த மாணவர்கள் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர்..

" மனசு தாங்காம சோறு எடுத்துக்கிட்டு வந்து பரிமாறிட்டேன்... தப்பு தாங்க... மன்னிச்சுடுங்க..  ஒருத்தருக்கும் தெரியாத மாதிரி நடந்துக்கணும்... ன்னு சொல்லி இருந்தது தடுமாறிப் போச்சு.. நீங்க பெரியவங்க.. மக்களப் பெத்த மகராசனா இருந்து மன்னிக்கணும்.. புள்ளைங்களை ஆதரிக்கணும்.. ஆசீர்வதிக்கணும்... வாத்தியார் ஐயாவைக் கும்பிட்டுகோங்க புள்ளைங்களா!.. " - என்றபடி கைகூப்பிய தாயின் கண்களில் நீர்..

தாயின் சொல்லைக் கேட்டு - தாள் வணங்கிப் பணிந்த அந்த இளம் பிஞ்சுகளை வாஞ்சையுடன் தொட்டு வாழ்த்திய ஐயாவின் கண்களிலும் நீர்...

நீரில் பூக்கும் தாமரையாய் ஐயா அவர்களது நெஞ்சகத்தில் இருந்து 
நித்திலம் ஒன்று பிறந்தது..

ஐயா அவர்களது திருவாக்கில் வாக்கு ஒன்று மலர்ந்தது..

" தங்கம் என்ற மனம் செழிக்க
திங்கள் என்ற குணம் கொழிக்க
செங்கை கொண்ட  நம்பியை
அங்கை கொண்ட நங்கையை
கங்கை வென்ற தமிழ் காக்க..
கங்கை கொண்ட சிவம் காக்க!.. "

கூடி நின்ற மாணவர்கள் உற்சாகத்துடன் ஆரவாரித்தார்கள்...

= = = = =

70 கருத்துகள்:

  1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு
    வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    அழகான சித்திரம் கொண்டு சீர் செய்த அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அன்பின் துரைக்கும்,இன்னும் வரப்போகும் அனைவருக்கும்
    இனிய காலை நல் வாழ்த்துகள்.
    என்றும் ஆரோக்கியம் ,அமைதி,ஆனந்தத்துடன்
    வாழ இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. மங்கலமான மங்களமான கதை. இப்படியொரு களனை
    துரை அவர்களால் தான் எழுத முடியும்.

    என்ன நேர்த்தியான வாழ்க்கை.
    ராஜேந்திரன், பொற்கொடி இவர்கள் கற்றுத்தேறி
    அவர்கள் குழந்தைகளும்
    கல்விமான்கள் ஆகி இருப்பார்கள்.
    பள்ளிப் படிப்பின் உயர்வை உணர்ந்த தாயின் வார்த்தையே
    அமுதம் போல ஒலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      //பள்ளிப் படிப்பின் உயர்வை உணர்ந்த தாயின் வார்த்தையே
      அமுதம் போல ஒலிக்கிறத்ய்..//

      அன்பின் கருத்துரைக்கு நன்றியம்மா..

      நீக்கு
  7. ''திருத்தமான முகத்தில் மெல்லியதாக மஞ்சள் பூச்சு... தீச்சுடர் போல செஞ்சாந்துத் திலகம்.. கழுத்தில் இரட்டையாய் பொற்சங்கிலிகள்.. கைகளில் ஒற்றை ஒற்றையாய் வளையல்களும் விரல்களில் மருதாணிச் சிவப்பும்...''

    அழகான பெண்ணை அருமையாகச் சித்திரமாகப்
    பதிந்திருக்கும் கௌதமன் ஜிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பள்ளிச் சூழல். நிஜமான உயிரியல் கட்டிடம்.
    நல்ல தமிழாசிரிய திரு. பாலசுந்தரம்
    எல்லாமே கண்முன்னே தெரிகிறார்கள்.

    இளங்காளையாக வரும் ராஜேந்திரனும் பொற்கொடியும்
    கட்டுப்பாடுடன் படிக்க வந்திருப்பது

    பெற்றோர் செய்த புண்ணியம் . நம் நாட்டில் நல்ல
    வாழ்வு சிறக்கிறது என்பதற்கு இந்தக் கதை
    உதாரணம். 45 ஆண்டுகளுக்கு முன்பான
    கதை என்றாலும் இன்றும் அதே நடக்க
    இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.
    நன்றி துரை. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பெற்றோர் செய்த புண்ணியம் //நம் நாட்டில் நல்ல வாழ்வு சிறக்கிறது என்பதற்கு இந்தக் கதை உதாரணம். //

      மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  9. நல்லதொரு சிறுகதை இந்த காலையில் படித்து மகிழ்ந்தேன். ஓவியமும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. சகோதரர் அவர்களின் சிறுகதை அருமை! செந்தமிழில் கதை சொல்லும் பாங்கு இனிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. நெகிழ்வான பழைய நிகழ்வு என்றே மனம் நினைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி..

    நான் படித்த உயர்நிலைப் பள்ளியின் சூழலைச் சொல்லியிருக்கின்றேன்..

    ஐயா பாலசுந்தரம் அவர்கள் எனது தமிழாசிரியர்.. அறிவியல் ஆசிரியர் திரு. K.குஞ்சிதபாதம் (Kk).. அலுவலகப் பணியாளர் திரு. சாரங்கன்..

    ராஜேந்திரன் எனது நண்பன்..

    அன்புடைய அம்மா, பொற்கொடி -
    ஏனையவை மட்டுமே கற்பனை..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக் காண்பிக்கும் நிகழ்வுகள். படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கூடத்தின் சூழலை விவரிக்கும் போது உங்கள் வார்த்தைகளின் மகிமை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கே அழைத்துச் சென்றது. நல்ல வாழ்க்கை நெறிகளுடன் உங்கள் உயர்நிலைப் பள்ளிக்கூட வாழ்க்கை அமைந்திருந்தற்கும் வாழ்த்துகள். இது போன்ற அன்புடன் கூடிய அறவழியில் செல்லும் நல்ல கதைகளை எங்களுக்குத் தருவதில் நாங்கள் மனமார்ந்த நன்றி கூறிக் கொள்கிறோம்.உங்கள் கற்பனை ஆக்கங்கள் (கவிதைகள், கதைகள்) அனைத்துமே சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்ல வாழ்க்கை நெறிகளுடன் உங்கள் உயர் நிலைப் பள்ளிக்கூட வாழ்க்கை.. //

      தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. வணக்கம் கௌதமன் சகோதரரே.

    இந்தக் கதைக்கு ஏற்ற பொருத்தமான ஓவியத்தை தந்திருக்கிறீர்கள். கதையில் துரை சகோதரர் குறிப்பிட்ட பொற்கொடியின் முக அழகு தாங்கள் வரைந்த படத்திலும் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் .

    பதிலளிநீக்கு
  18. தமிழ் அன்னை தானே எழுதியது போல, தமிழ் கொஞ்சி விளையாடும் அருமையான கதை! கதையின் கருவாய் கலை மகளே நித்திலமாய் பூத்து நிற்கிறாள்! மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. கல்வி அன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதில் கிட்டியதில்லை.இத்தகைய பெற்றோர் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும். பெற்றோர் மனங்குளிர ,மங்கையரின் மாண்பும், வீரம் கொண்ட இளம் சிங்கங்களின் வாழ்வும் கல்வியால் சிறக்கட்டும்... துரை செல்வராஜூ ஐயாவிற்கு நன்றி! இக்கதையில் இடம்பெற்ற திரு பாலசுந்தரம் ஐயாவாகவே உங்களை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வானம்பாடி..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது கருத்துரை அழகு..
      ஆயினும் ஐயா பாலசுந்தரம் அவர்களுக்கு நான் ஈடாவேனோ?...

      அவர்களால் தமிழ் பயின்றேன்..

      எனது தமிழாசிரியர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்..

      தங்களது அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  19. அருமையான ஆக்கபூர்வமான எண்ணங்களைத் தூண்டி விடும் கதை! இரட்டைச் சங்கிலிகள் படிக்கையிலேயே மனதைக் கவர்ந்தது, அதுக்குத் தனிப் பொருள் இருக்கணும்னு! கதையின் கடைசியில் புரிந்தது. இருவரும் நல்லபடி பள்ளிப்படிப்பை முடித்து நல்ல இல்வாழ்க்கையை வாழ்ந்து அருமையான குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக ஆக்கி இருப்பார்கள். அந்தக் காலக் கிராமத்துப் பள்ளியின் காட்சியைக்கண் முன்னே கொண்டு வந்து விட்டார் துரை. திரு கௌதமன் அவர்களின் ஓவியமும் அருமை. முகநூலிலும் பார்த்தேன். எ.பி.வாட்சப் குழுமம் வாயிலாக மொபைலில் காலையிலேயே படித்தேன். கருத்துச் சொல்ல முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இருவரும் நல்லபடியாக பள்ளிப் படிப்பை முடித்து நல்ல இல்வாழ்க்கையை வாழ்ந்து அருமையான குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக ஆக்கி இருப்பார்கள்..//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா..

      அனைவரது நலத்திலும் அன்பின் எதிர்பார்ப்பு..

      கருத்துரைக்கு நன்றியுடன்..

      நீக்கு
  20. திருத்தமான முகத்தில் மெல்லியதாக மஞ்சள் பூச்சு... தீச்சுடர் போல செஞ்சாந்துத் திலகம்.. கழுத்தில் இரட்டையாய் பொற்சங்கிலிகள்.. கைகளில் ஒற்றை ஒற்றையாய் வளையல்களும் விரல்களில் மருதாணிச் சிவப்பும்...//

    இந்த இரட்டைப்பொற்சங்கிலிகள் என்றதும்...கொஞ்சம் புரிந்தது ...அதுவும் அதற்கு முன்னர் ஹீரோ என்ட்ரி!!!! ஹாஹாஹா...வர்ணனை...இப்பெண்ணின் அறிமுகம் பின்னர் வந்ததும் புரிந்து விட்டது....இவங்கதான் ஹீரோயின் அப்படினு...கல்யாணம் இந்த வயசில்? சின்ன சந்தேகம் முளைத்தது. இறுதியில் உறுதியானது!!

    துரை அண்ணாவின் அழகான தமிழ் விளையாடும் அருமையான கதை. எப்படியோ ரெண்டு பேரும் அந்த வயதிற்குரிய உணர்வுகளில் புகுந்துவிடாமல் படிக்க வேண்டும். பெரியோர் அதற்குத் துணைபுரிவார்கள்.

    கொஞ்சம் உண்மை நிகழ்வு. அண்ணா படித்த பள்ளியோ? அதை வர்ணித்த விதம் சொல்கிறது. அதோடு கூடிய கற்பனை!!! அருமை.

    ரசித்து வாசித்தேன் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அண்ணா படித்த பள்ளியோ? அதை வர்ணித்த விதம் சொல்கிறது.. //

      நான் படித்த பள்ளியே தான்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  21. கௌ அண்ணா ஒவியம் அழகு. ரெட்டைப் பொற்சங்கிலியைத் தேடினேன்...கூர்ந்து பார்த்ததும் தெரிந்தது!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. பொற்கொடியின் கழுத்தில் இரண்டு தங்கப் பொற்கொடிகள்! தங்கமான பெண்ணிற்கே தங்கம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நல்லதொரு கதை சிறப்பாக வர்ணித்துக்கொண்டு சென்றுள்ளார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. கதை மிக அருமை.

    அப்படியே நேரில் பார்ப்பது போல விவரிப்பு அருமை.
    நல்ல கதை, வாழ்த்துக்கள்.

    //பச்சைப் பசேல் எனப் பளபளக்கும் வயற்காட்டுக்கு நடுவிருக்கும் கிராமம்தான் பசுபதீஸ்வரம்..//

    ஊரின் விவரிப்பு அருமை.


    //திருத்தமான முகத்தில் மெல்லியதாக மஞ்சள் பூச்சு... தீச்சுடர் போல செஞ்சாந்துத் திலகம்.. கழுத்தில் இரட்டையாய் பொற்சங்கிலிகள்..//

    மஞ்சக் பூசிய முகம் அருமை. பொன்னிற உடம்பில் , பொற்சங்கிலி அழகு தெரியவில்லை .
    சார் வரைந்த ஓவியத்தில்.

    " போருக்குச் சென்ற கலிப்பகையார் எதிர்பாராத விதமாக.. "//

    திலகவதியார், திருநாவுக்கரசர் பாடமாக. அருமை.


    பதிலளிநீக்கு
  25. //ஐயா அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவ மாணவிகளுள் - யாராவது ஒருவர் ஏதாவது ஒரு திருக்குறளை மொழிய வேண்டும்..//

    எங்களுக்கு இப்படி எல்லாம் வகுப்புகள் அமையவில்லையே என்ற ஏக்கத்தை வரவழைத்த வரி. பள்ளியைப் பற்றிய விவரணம் எல்லாம் உட்பட.

    துரை செல்வராஜு சாரின் கதை மிக அருமையாக நேர்மறையான எண்ணத்தைத் தூவும் கதை. சில குடும்பங்களில் இப்படி எதிர்பாரா விதமாகச் சிறு வயதில் திருமணங்கள் செய்யப்படுவதைக் கேட்டதுண்டு.

    அதை இங்கு அழகாகச் சொன்னவிதத்திற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    கதைக்கான கௌதம் சார் அவர்களின் படம் சிறப்பாக உள்ளது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எங்களுக்கு இப்படி எல்லாம் வகுப்புகள் அமையவில்லையே என்ற ஏக்கத்தை வரவழைத்த.. //

      அந்தக் காலத்துத் தமிழாசிரியர்கள் தமிழாகவே வாழ்ந்தவர்கள்..

      உண்மையில் அந்த நாட்கள் எல்லாம் பொன் மயமானவை..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. அந்தக் கால நினைவுகளுக்குள் கொண்டு சென்றுவிடுகிறார் துரை செல்வராஜு சார்... 7ம் 8ம் வகுப்பு நினைவுகள் வந்து போயின.

    கிராமத்துக் கதைகளில் மனிதம் ஒளிந்திருப்பதையும், அப்போதிருந்த ஆசிரியப் பெருமக்கள் நெறியையும், தன் பணி மாணாக்கர்களை வழிநடத்தி பெரியவர்கள் ஆக்குவது என்று புரிந்து அதற்கு ஏற்பப் பணி புரிந்ததையும் அழகாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார்.

    மாணவர்களுடனான, அவர்கள் பெற்றோர்களுடனான தொடர்பை ஏன் பிற்காலத்து ஆசிரியர்கள் தொலைத்துவிட்டனர், அத்துடன் நெறியையும் என்பதெல்லாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களின் பார்வையில், மாணவர்கள், மாணவர்களாகவே நடந்துகொள்வதில்லை, அவர்களின் பெற்றோர்களுக்கும் மாணவர்கள் மீது அக்கறை கிடையாது என்றே சொல்கிறார்கள்.

    வெறும்ன மதுப்பழக்கம் என்று சொல்லி இதனைக் கடந்துவிட முடியாது. ஆசிரியர்கள் காட்டின வழிதான் மாணவர்களின் மதுப்பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாணவர்களுடனான, அவர்கள் பெற்றோர்களுடனான தொடர்பை ஏன் பிற்காலத்து ஆசிரியர்கள் தொலைத்து விட்டனர்?.. //

      இதுதான் காலத்தின் கோலம்..

      அன்பின் நெல்லை .. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  28. நான் 11 வது படிக்கும் போது (திருவெண்காடு பள்ளியில்) தினம் காலை பிரேயர் ஹாலில் தினம் ஒரு மாணவி பாட வேண்டும், ஒரு மாணவி ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும். ஒரு மாணவி அன்றைய முக்கிய செய்தி வாசிக்க வேண்டும்.

    தமிழாசிரியர் மூவர் இருந்தார்கள். ஓரே வருடத்தில் மூவரிடம் பயின்றோம். ஒருவர் திருமணம் செய்து கொண்டு வேலையை விட்டு விட்டு சென்றார், ஒருவர் தற்காலிக பணிக்கு வந்தார். அடுத்து ஒருவர் வந்தார். மூவரும் நன்றாக பாடம் நடத்துவார்கள். சில நேரம் பாடல், கதைகள் எல்லாம் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் விவரங்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. தங்களது மீள் வருகையும் மேலதிகச் செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  29. ஐயா அவர்கள் திருவாக்கில் வந்த உங்கள் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை எழுதிக் கொண்டு வரும்போது இயல்பாக வெளிப்பட்டது அந்தக் கவிதை..

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  30. மனதை வருடும் அழகான நடையில் சிறப்பான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. இனிய கருத்துரைகளால் இன்றைய கதைக் களத்தினை சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    சரியான தூக்கம் இன்மையாலும் பணியிடத்தில் ஏற்படும் மன உளைச்சலாலும் சற்றே தளர்ந்திருக்கின்றேன்..

    அனைவரது கருத்துகளுக்கும் நாளைக்கு வருகின்றேன்..

    மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!