சனி, 12 பிப்ரவரி, 2022

சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது - நான் படிச்ச கதை

 






= = = = 
சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது.



சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

தெற்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியருக்கு, 2019ல் பிறந்த மகள் ரியா. பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு கல்லீரலில் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.குழந்தைக்கு ஒரு வயதான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கல்லீரல் தானம் வழங்கும்படி கேட்டு, பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விற்பனை பிரிவு அதிகாரி சக்திபாலன் பாலதண்டாயுதம், 28, உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டார். பின், தன் கல்லீரலின் 23 சதவீதத்தை குழந்தைக்கு 2020 செப்., மாதம் தானம் வழங்கினார். இதையடுத்து நடந்த அறுவை சிகிச்சை முடிவில், குழந்தையின் நோய் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.

இந்நிலையில், பாலதண்டாயுதத்திற்கு 2021ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் சிறந்த நபர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.அவரிடம் விருது மற்றும் 11 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கி பாராட்டினார்.

= = = =


வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்



வாஷிங்டன் : 'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், 'பார்க்கர்' விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.

சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, 'பார்க்கர்' விண்கலத்தை, நாசா 2018ல் விண்ணில் ஏவியது. இது 2025ல் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் உள்ளது. இந்நிலையில், சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் பார்க்கர் விண்கலம் வெள்ளி கிரகத்தை கடக்கையில், அதன் மேற்புறத்தை ஏற்கனவே மூன்று முறை புகைப்படம்எடுத்துள்ளது.

ஆனால், வெள்ளி கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள அடர்த்தியான மேக கூட்டங்களால், அதன் மேற்புற காட்சிகள் சரிவர பதிவாகாமல் இருந்தன. சமீபத்தில் நான்காவது முறையாக வெள்ளி கிரகத்தை பார்க்கர் விண்கலம் கடந்தது. அப்போது, அதன் மேற்புறம் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது வெள்ளி கிரகம் குறித்த ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

'இதன் வாயிலாக, வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம், அங்கு உள்ள வளங்கள், மண்ணின் தன்மை, எரிமலைகள் குறித்து மேலும் துல்லியமாக ஆய்வு செய்ய, இந்த புகைப்படம் பேருதவியாக இருக்கும்' என, ஆய்வாளர்கள்கருதுகின்றனர்.

= = = = ====================================================================================================================




நான் படிச்ச கதை


ஜெயக்குமார் சந்திரசேகரன் 



பாச்சி




கேரளத்தில் அதுவும் திருவனந்தபுரத்தில் தமிழ் எழுத்தாளர்கள் இருந்தனர் என்பது எ பி வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் என்று சொல்லமுடியாது. . இவர்களில் சிலர் சாஹித்திய அகாதமி விருது பெற்றவர்கள் என்பதும் அவர்களுக்கு வியப்பூட்டும். நகுலன், நீல பத்மநாபன், ஆ. மாதவன் ஆகியோர் திருவனந்தபுரத்து தமிழ் எழுத்தாளர்கள். இவர்களில் நகுலன், மாதவன் ஆகியோர் இன்று இல்லை. இன்று நாம் காணப்போவது இவர்களில் ஒருவரான ஆ. மாதவன் எழுதிய ஒரு சிறுகதை பற்றிய ஆய்வு.

ஆ. மாதவன் (1934-2021) திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். வணிகம் அவரது தொழில். முக்கிய கடைவீதியான சாலையில் செல்வி ஸ்டோர்ஸ் என்று ஒரு பாத்திரக்கடையின் உரிமையாளர். சாஹித்ய அகாதமி விருது பெற்றவர்.

காவியம், மரபு, யதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று மணிக்கொடி காலம் முதல் சென்ற வருடம் வரை பலரது எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தவர், எழுத்தாளர்களுடன் பழகியவர். திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவர். இதைப்பற்றி ஒரு பேட்டியில்

“எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, கடவுள்களிடம் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்து மதம் தான் ஆழமான தத்துவ சாரம் கொண்டது. “

 என்று கூறுகிறார்.

இவரை மற்ற எழுத்தாளர்கள் கடைத்தெருவின் கதைசொல்லி என்று கூறுவார்கள். இவர் பற்றிய விவரங்களை

https://en.wikipedia.org/wiki/A._Madhavan

https://ta.wikipedia.org/s/1haq

தளங்களில் காணலாம்.

இவரது கதைக்களம் கடைத்தெரு என்பதால் அதை பற்றிய சில விவரங்கள் தர வேண்டியிருக்கிறது.

சாலைத்தெரு மன்னர் காலத்தில் இருந்தே பிரசித்தி பெற்றது. சுமார் 350 வருட பழமை.

 திருச்சியில் பெரிய கடைத்தெரு மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் துவங்கி காந்தி மார்கெட்டில் முடியும். பல கிளைத்தெருக்கள் சந்துகள் நிறைந்தது. அதே போன்றது தான் சாலைத்தெருவும். பத்மநாப சாமி கோயில் கிழக்கு கோபுரம் முதல் கிள்ளி ஆறு பாலம் வரையிலும் நீண்ட தெரு. கிளை தெருக்களும் சத்துக்களும் உண்டு.

திருவனந்தபுரம் தமிழ் மலையாளம் கலந்ததாக இருக்கும். காரணம் சில சொலவடைகளுக்கும் சில வார்த்தைகளுக்கும் நேரடி தமிழ் கிடையாது. அதே போன்று ஒரே சொல் பல அர்த்தங்களில் உபயோகிக்கப்படும். உதாரணமாக சரக்கு என்ற வார்த்தை. இந்த வார்த்தை சொல்லும் இடத்தைப் பொருட்டு சொல்லும் முறையைப் பொறுத்து அர்த்தம் மாறுபடும். சாமான், விலைமாது, சாராயம், நண்பன் போன்ற அர்த்தங்களில் பிரயோகிக்கப்படும்.

இதுபோன்ற திருவனந்தபுரம் தமிழில் தான் மாதவன் யதார்த்தமாக இந்த கதையை எழுதியிருக்கிறார்.

இவரது சிறப்பம்சம் கதையை கதைச் சித்திரமாக அல்லது சித்திரக்கதை போன்று (டாக்குமெண்டரி) மாதிரி விவரிப்பது. ஆகவே சில நிகழ்வுகளை வாசகர்களின் குறிப்புணர்வுக்கே விட்டு விடுகிறார்.

பாச்சி என்பது நாய் என்று அவர் கதையில் எங்கும் குறிப்பிடவில்லை. சில பத்திகள் கழிந்தபின்

  விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.

 என்று வாசிக்கும்போது தான் பாச்சி ஒரு தெரு நாய் என்று தெரிய வருகிறது.

அதேபோன்று பாச்சி செத்து போனதும் காவல்காரன் நாணுவுக்கு ஏன் அவ்வளவு துக்கம் என்பதை கதையின் கடைசியில் தான் சொல்கிறார். ஆம் யதார்த்த காவல்காரன் பாச்சி தான்.

இந்தக்கதையின் முழு சாரமும்  இந்த ஒரு படத்தில் அடங்கிவிடும். படம் இணையத்தில் சுட்டு எடுத்தது.



பாச்சி செத்துப் போனாள்.

இப்படித்தான் கதையே ஆரம்பிக்கிறது. அதே போன்று கதையின் கடைசி வரியும்

பாச்சி செத்துப் போனாள்.

இனி பாச்சியும் நாணுவும் எப்படி ஒன்றானார்கள் என்பதை பார்ப்போம்.

பாச்சி நாணு விடம் வந்த கதை

இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான்.

அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான்.


இனி நாணுவின் கதை

இன்னும் யார் இருக்கிறா? சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது…

ஆக இரண்டு அநாதைகளும் சேர்ந்து

நீ ஒரு அநாதை

நான் ஒரு அநாதை

நாம் இருவர் அல்ல

இனி ஒருவர் தான்

பிரியமாட்டோம்.

என்று காலத்தை நகர்த்தியபோது தான் இந்த அபகடம் நடந்தது.

பாச்சி செத்துப் போனாள்!

நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.”

நாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”

பாச்சி செத்துப் போனாள்

நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

பாச்சி இல்லாமல் நாணு  எங்ஙனம் காவல் புரிய முடியும். ஜீவிக்க முடியும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறார்.


பாச்சி - கதையை இங்கு க்ளிக் செய்து படிக்கலாம்.

எஸ்ரா இவரைப்பற்றியும் இவரது இன்னொரு படைப்பான வேஷம் என்ற சிறுகதை பற்றியும் கூறுவதை

https://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_15.html

என்ற சுட்டியில் காணலாம்.

சில சொற்களுக்கு விளக்கம்

 மறிமாயம் : கண்கட்டி  வித்தை.  அலமலங்கள் : ஹரி பரி

ஏச்சுபிட்டோம் : ஏய்த்து விட்டோம். ஸக்காத்து : ஓசி  

ஆங்காரம் : பலம் தெம்பு . பதனமாயிருக்கணும்: கவனமாக இருக்கணும்  

தூம்பா : மண்வெட்டி போல் நீள கைப்பிடி உடையது.

 

சவத்துப் பயலுக : கட்டையிலே  போறவங்க

வள்ளக்கடவு : boat jetty . சுமட்டுக்காரன் : load man

மடிச்சிறாதே: மடிக்காதே. Don’t avoid. மேத்தன் : துலுக்கன்

அபகடம்: accident 


44 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. திரு.சக்தி பாலன் பாலதண்டாயுதம் அவர்களின் செயல் துணிச்சலானது.
    அவரது தொண்டுள்ளம் வாழ்க வளர்க!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திட எனது பிரார்த்தனைகள்.

    இன்றைய பதிவு வழி பகிர்ந்த செய்திகள் மற்றும் திரு மாதவன் அவர்களது சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவமும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை அறிமுகம். மாதவன் பற்றி பலர் எழுதியதைப்்படித்திருக்கிறேன். அவர்்படைப்பை இன்று படிக்கணும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் நிம்மதியும் மேலோங்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

  7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோய் பரவாமல் இறைவன் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மருத,துவ குணம் உள்ளது சின்னவெங்காயம்தான். சின்ன வயதில் வேப்பிலைக் கொழுந்து உருண்டை தருவார்கள். வளர்ந்தபின் பறித்துச் சேப்பிட்டிருக்கிறேன்.

    வெள்ளி என்ற பெயர் பொருந்தும்படி இருக்கே

    பதிலளிநீக்கு
  9. சிங்கப்பூரின் சக்தி பாலன் தண்டாயுதம்,

    நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்
    கொண்டு நல் வாழ்வு வாழ வேண்டும்.

    இதுபோல ஆரோக்கியமானவர்கள் முன் வந்தால் உலகமே
    நற்பலன் பெறும்.
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. வேப்பங்காரம் என் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கேன். இதே போல் வெற்றிலையிலும் கொடுத்திருக்கேன். பகிர்வுக்கு நன்றி. மூல நோய்க்கும் சின்ன வெங்காயம் நல்லது என்பார்கள். குழந்தைக்கு உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு வாழ்த்துகள். இருவரும் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும். வெள்ளி கிரஹ ஆய்வுகள் சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. ஆ.மாதவன் பற்றியும் அவர் கதைகள் குறித்தும் அறிந்திருக்கேன். படிக்கவும் படிச்சிருக்கேன். நகுலன், நீல.பத்மநாபன் ஆகியோரும் பிடித்த எழுத்தாளர்கள். இங்கே விமரிசித்திருக்கும் கதையையும் படிச்சிருக்கேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வெள்ளியன்று எனக்கு சுக்கிரனார் தரிசனம் கிடைத்தது.:)

    வியந்து போகும் அளவில் விஞ்ஞான அறிவு
    வளர்ந்திருக்கிறது. தினமும் ஆச்சர்யங்கள்
    காத்திருக்கின்றன.

    படங்கள் அருமை.
    குடும்பத்தை விட்டு வானில் வருடக்கணக்கில்

    காலத்தைக் கழிக்கும் விண்வெளி வீரர்களுக்கு
    வணக்கங்களும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். குழந்தைக்கு தன் கல்லீரலின் ஒரு பகுதியை அளித்த இந்திய வம்சாவளி இளைஞர் பாலன் வாழ்க வளமுடன்!
    கல்லீரல் மீண்டும் வளர்ந்து விடும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  14. நகுலன் அவர்களின் கதைகள் பிடிக்கும். அ.மாதவன் படித்ததில்லை.
    திரு ஜெயக்குமார்
    கதையின் கருவைக் குறித்துக் கொடுத்திருப்பது
    மிக அருமையாக இருக்கிறது.

    பாவம் அந்தச் செல்லமும் அதன் தோழன் காவல்காரனும்.
    பாசப்பிணைப்பினால்
    அடைந்த மகிழ்ச்சியும் பிரிவில் அடையும் துன்பமும்
    சிறப்பாகக் கதை முழுவதும் செல்கிறது.

    பதிலளிநீக்கு
  15. என் மகள் குழந்தையாக இருந்த பொழுது அவளுக்கு சளி பிடித்த பொழுது ஒரு தோழி வெங்காய சாறு கொடுத்தால் நல்லது என்று சொன்னதால் வெங்காய சாறு கொடுத்ததில் அவள் சளி அதிகமாகி விட்டது. அப்புறம் பக்கத்து வீட்டு மாமி,"வெங்காயம் குளுமை, ஜலதோஷம் இருக்கும் பொழுது கொடுக்கக்கூடாது, அம்மை போட்டினால் கொடுக்கலாம்" என்றார்.
    அது போல வேப்பம் கொழுந்து தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டதில் எனக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது. வேப்பம் கொழுந்து, துளசி சாறு போன்ற எல்லாமே மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருந்தும் மருந்தும் மேன்று நாட்கள் - என்பதை எப்படி மறந்துபோனீர்கள்? உணவிலும் அமேதான்... கீரை, தண்டு, நெல்லி, எலுமி, மிளகு சீரகம்..

      நீக்கு
  16. நல்ல உள்ளங்கள் வாழ்க... பாச்சி கதை அருமை...

    பதிலளிநீக்கு
  17. நீல.பத்மநாபன் கதைகள் படித்திருக்கிறேன். ஆ.மாதவன் கதையை. படித்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்த வாரம் செய்திகள் எல்லாம் மருத்துவம் பற்றிய செய்திகள் ஆக உள்ளன. எதற்காவது மருத்துவரிடம்  செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதா? 

    பாச்சி பற்றிய விமரிசனம் வெளியிட்டமைக்கு  நன்றி.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  19. குழாயடியில் மாதிரி செய்தி ஊடகங்களிலும் டுபாக்கூர் வைத்தியக் குறிப்புகள் பெருகி விட்டன...

    பித்த, வாத, சிலேட்டுமம் என்றார்கள் அன்றைய நாட்களில்... இதெல்லாம் என்ன என்று புரியாமலேயே ஒரு கும்பல் சமூக ஊடகங்களில்!..

    குருவின் வழிகாட்டுதல் & வழிபாடு இன்றி மூலிகைகளைப் பறிக்கக் கூடாது.. நாள் நட்சத்திரம் பார்க்காமல் மருந்து அரைக்கக் கூடாது - என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன...

    ஆபத்துதவி மாதிரி நடு ராத்திரியில் ஏற்படும் துன்பங்களுக்கு வேறு மாதிரியான சிகிச்சை..

    சில சிகிச்சை முறைகளை வெளியே சொல்லக் கூடாது என்பார்கள்... காரணம் ஒருவருக்கு ஒத்துக் கொண்ட மருந்து வேறொருவருக்கு ஒத்து வராது என்பதே!...

    ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை..

    xxx ஊடகங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை சொல்கின்றன என்றால் கலிகாலம்!..

    பதிலளிநீக்கு
  20. இன்றைய ஊடகங்கள் ஊரில் நடந்தவைகளையே ஒழுங்கா தர்றது இல்லை.. இதில் மருத்துவக் குறிப்புகள் ஒரு கேடு..

    பதிலளிநீக்கு
  21. மருத்துவத் தகவல்கள் நன்று. வேப்பிலை காரம் சாப்பிட்டதுண்டு மகனுக்கும் கொடுத்ததுண்டு ஆனால் குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் மருத்துவ குணங்கள் நிறைய கொண்டது. என்றாலும் எல்லாமே அளவுதான்.

    பால தண்டாயுதம் வாழ்க, போற்றுவோம் கல்லீரல் மீள் திறன் உள்ளது 2,3 மாதங்களுக்குள் வந்திடும்...வந்திட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜெகே அண்ணாவின் விமர்சனம் சூப்பர்.

    நான் என் செல்லம் கண்ணழகி இருந்த போதே பாச்சி கதை வாசித்திருக்கிறேன் அதை முழுவதும் ஒரே அடியில் வாசிக்க முடியவில்லை. எப்படியோ வாசித்து முடித்து அந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது. என்னால் உடனே அதிலிருந்து விடுபட முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஆக இரண்டு அநாதைகளும் சேர்ந்து


    நீ ஒரு அநாதை

    நான் ஒரு அநாதை

    நாம் இருவர் அல்ல

    இனி ஒருவர் தான்

    பிரியமாட்டோம்.


    என்று காலத்தை நகர்த்தியபோது தான் //

    இந்த வரிகளும் அண்ணா தேர்ந்தெடுத்திருக்கும் படமுமே கதையைச் சொல்லிவிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஆ.மாதவனுக்கு சாலைத் தெரு, அதன் சுற்று சூழல் வர்ணிப்பு இதெல்லாம் தான் முக்கியம். அதென்ன ரகசியமோ தெரிலே. எத்தனை கதை எழுதினாலும் இன்னும் இன்னும் பாக்கி இருக்கிற சாலைத் தெரு வர்ணிப்பு இருந்து கொண்டே இருக்கும். நமக்கும் சலிக்காது சாலைத் தெரு வர்ணிப்பு ஒவ்வொரு கதைக்கும் புதுசு புதுசா தோற்றம் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் சுவாரஸ்யம்.

    மற்றபடி கதையெல்லாம் தொட்டுக் கொள்ள ஊறுகாய் தான். மொத்த வட்டில் சாதமும் சாலைத் தெரு தான்.
    பாச்சியைத் தொட்டு அப்பு, பால்காரி உறவு சமாச்சாரம் கிடைத்த மாதிரி
    அ.மா.வுக்குன்னே துண்டு துக்கடா
    விஷயங்களெல்லாம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவருக்கென்னவோ அந்த சாலைத் தெரு தான் முக்கியம். நமக்கும் சாலைத் தெருவை ஒட்டி அவர் எவ்வளவு சொன்னாலும் சலிக்காது.

    பதிலளிநீக்கு
  25. மாதவன் சார் கதைகள் படித்துத் தான் திருவனந்தபுரம் ஒரு தடவை சென்றிருந்த பொழுது பத்மநாப சுவாமி தரிசனம் முடிந்ததும் கூட வந்திருந்த கேரள நண்பரைக் கூட்டிக் சாலைத்தெருவைப் பார்க்கக் கிளம்பி விட்டேன். செல்வி ஸ்டோரை தேடி அலைந்து கண்டு பிடிக்க முடியாமல் சாலைத்தெரு நினைவாக வேறோரு பாத்திரக்கடையில் கேரள குத்து விளக்கு வாங்கிக் கொண்டுத் திரும்பினேன். இதெல்லாம் 1965-ம் வருட நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  26. இந்தப் பகுதிக்கென்று ஜெயக்குமார் ஸார் கிடைத்து விட்டதில் எனக்கு பரம சந்தோஷம். தொடர்ந்து எழுதுங்கள்
    நண்பரே! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அய்யாவின் பாராட்டுகளுக்கு நன்றி. 

      சாலைத்தெருவின் தற்போதைய நிலை பரிதாபம். சூப்பர் மார்கெட்டுகள் வரவால் பாதி வியாபாரத்தை இழந்த சாலை கொரோனா வந்தபின் முழுதுமாக படுத்து விட்டது.

      Jayakumar

      நீக்கு
  27. காஞ்சிபுரத்திலும் ஒரு சாலைத்தெரு உண்டு. அகண்ட விஸ்தாரமான தெரு. அங்கு தான் சங்கர மடம் உள்ளது. வெகு அருகில் நாங்கள் வசித்து வந்ததால் சாலைத் தெரு என்ற பெயர் மனசில் மிகவும் பழக்கபட்ட பெயர் ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  28. இங்கேயும் ஒரு சாலை ரோடு/சாலை/சாலை :) இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. திருச்சி உறையூரில் இருக்கும் சாலை ரோட்டை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அங்கு ஒரு காலத்தில் நிறைய மரங்கள் இருந்ததால் சோலை ரோடு என்ற பெயரே நாளடைவில் சாலை ரோடு என்று மருவியது என்று எங்கள் தமிழாசிரியர் கூறியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை பானுக்கா ...மாதவன் அவர்களின் கதைகள் பெரும்பாலும் திருவனந்தபுரம் சாலையும் அங்குள்ள சாதாரண மக்கள் ஒட்டியதாகவே இருக்கும்...

      கீதா

      நீக்கு
    2. பானுமதி எனக்கு பதில் சொல்லி இருக்கார் தி/கீதா. மாதவன் எழுதிய சாலை ரோடைப் பற்றி இல்லை. இங்கே திருச்சியிலும் ஒரு சாலை ரோடு இருப்பதை நான் குறிப்பிட்டிருப்பதால் அதற்கான பதில் பொதுவாக வந்திருக்கு.

      நீக்கு
    3. இங்கு இருக்கும் சாலை மெய்வழிச்சாலை என்று நினைக்கிறேன். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலை ராஜேந்திரன், சாலை இளந்திரையன் என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள். அதாவது அவர்கள் பெயருக்கு முன்னால் சாலை சேர்த்துக் கொள்வார்கள்.

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே இருப்பது மெய்வழிச்சாலை எல்லாம் இல்லை. கரூர் பைபாஸ் ரோடிலிருந்து தில்லை நகர் செல்லும் வழி.

      நீக்கு
  30. மாதவன் படித்ததில்லை. (கேள்விப்பட்டதில்லை)
    அழியாச்சுடர்கள் நல்ல தளமாக இருக்கும் போலிருக்கிறதே? நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தளம் நல்லாருக்கும் நிறைய கதைகள்...ஆனால் வாசிப்பதுதான் பாரா பிரிக்காம போட்டிருப்பாங்க கொஞ்சம் சிரமமா இருக்கும்

      கீதா

      நீக்கு
  31. தகவல்கள் பயனுள்ளவை. இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் தைரியமாக முன்வந்து கல்லீரல் தானம் செய்ததைப் பாராட்டுவோம்.

    கதை விமர்சனம் மிகவும் வித்தியாசமானதாக சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. ஜெயகுமார் சாருக்கு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!