புதன், 16 பிப்ரவரி, 2022

கணவன் வீட்டில் வசிக்கும் பெண்ணிற்குப் பிறந்தகத்தின் மேல் பற்று இருப்பது தவறா?

 

கீதா சாம்பசிவம் : 

பொதுவாக அம்மா என்றால் ஓர் புனித பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?

# அம்மா என்றால் அன்பு,  அக்கறை என்பது பெரும்பாலும் உண்மைதானே.  அம்மாவை மிக உயரிய ஸ்தானத்தில் பார்ப்பது நமது பண்பாடு.

& அது சரிதானே! 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது? 

அம்மா எனில் சாதாரணமானவளாக இருக்க மாட்டாளா? எப்போதுமே தியாகி தானா?

# தியாகம்‌ என்பது ஒருசில இடங்களில் காணப்படுவதும் வாஸ்தவம்.  

& சாதாரணமாகவும் இருந்துகொண்டு, தன் குழந்தைகளுக்காக / குடும்பத்துக்காக தியாகமும் செய்யலாம். 

*    உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றுகிறது?

தான் பெற்ற குழந்தைகளையே சரியாகக் கவனிக்காத அம்மாக்களைப் பார்த்திருக்கீங்களா?

# விதி விலக்காக பொறுப்பற்ற அம்மாக்களும் இருக்கக்கூடும். 

& அவருடைய குடும்பத்தில் கணவனால் நிறைய பிரச்சனை இருந்தால்தான் தான் பெற்ற குழந்தைகளையே சரியாக கவனிக்காத அம்மா உருவாகக் கூடும். நான் இதற்கு சில உதாரணங்களை கண்கூடாகக் கண்டது உண்டு. 

பார்த்திருக்கிறேன்.  சமீபத்தில் செய்தித்தாள்களிலும் நிறையவே செய்திகள் கண்ணில் படுகின்றன.

1. திருமணம் ஆன பெண்கள் ஏன் தாய்வீட்டிலேயே கணவனோடு இருக்காமல் கணவன் வீட்டிற்கு வந்து வாழத் துவங்குகின்றனர்? (ஶ்ரீலங்காவில் தமிழர்களில் மாப்பிள்ளை தான் மாமியார் வீடு போகிறார். இங்கே மாமியார் வீடென்றால் அர்த்தமே வேறே!)

# இதெல்லாம் காலம்‌காலமாக இருந்து வரும் பழக்கம். கணவன் வீட்டில் மணப்பெண் எஜமானியாக நுழைகிறாள்.  பிறந்த வீட்டிலேயே தொடர்ந்தால் இந்த மரியாதை கிடைக்காமல் போகலாம். 

& அதே போல - திருமணம் செய்துகொண்ட ஆண் அவனுடைய அம்மா அப்பாவுடனும், பெண் தன்னுடைய அம்மா அப்பாவுடனும் தொடர்ந்து இருந்துகொண்டால் எந்தப் பிரச்னையுமே இல்லாமல் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் பிறந்தால், அவர்கள் யாருடன் இருக்க விருப்பமோ அவர்களுடன் இருந்துகொள்ளலாம். படிக்கும் வயது வந்தவுடன் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடலாம். அம்மா அப்பா இருவருக்கும் வயதாகிவிட்டால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். 

2. கணவன் வீட்டில் வசிக்கும் பெண்ணிற்குப் பிறந்தகத்தின் மேல் பற்று இருப்பது தவறா?

#  தவறு இல்லை என்பது மட்டும் இல்லை அவசியம் கூட. 

* இல்லாமல் இருந்தால்தான் தவறு!

3. பற்று எனில் வாரம் ஒரு முறையாவது பிறந்த வீட்டுக்கு வந்து குறைந்தது 2 நாட்களாவது தங்கிப் போகும் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எங்க வீட்டிலேயே உதாரணங்கள் உண்டு.

# அன்புப் பரிமாற்றம் இருந்தால் இப்படி வந்து போவது ஆனந்தமாகவே இருக்கும்.

& வீட்டிற்கு வந்து தங்கிப் போனால்தான் பற்றா !! தூர இருந்தால் சேர உறவு என்பது உண்மை இல்லையா? 

* எந்த வயதில்?  பாவம் கணவனும் குழந்தைகளும்.

4. உள்ளூரிலேயே பிறந்தகம், புக்ககம் இரண்டும் இருப்பது சரியா? இல்லை சரியாக வராதா?

 # வசதிதான்.

& சண்டை பிடிக்கும் மருமகள்களுக்கு வரப்ரசாதம்.  

* ஆ...   ஆழம் பார்க்கும் கேள்விகள்!

5. இன்றைய திருமணங்கள் ஒப்பந்த ரீதியிலேயே இருப்பதன் காரணம் என்ன?

# பணவசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

6. திருமண பந்தத்தின் முழு அர்த்தமும் புரிந்துதான் இப்போதெல்லாம் திருமணங்கள் நடைபெறுகின்றனவா?

# முழு அர்த்தம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. 

7.சப்தபதி முடிந்த பின்னரும் கருத்து வேறுபாட்டால் மருமகளை அப்படியே விட்டு விட்டுச் சென்றால் அது சட்டப்படி சரியா? அந்தப் பெண் அதன் பின்னர் வேறு திருமணம் செய்துக்கலாமா? அல்லது முறைப்படி விவாகரத்து பெற வேண்டுமா? ஏனெனில் ஹிந்து திருமணச் சட்டபப்டி சப்தபதி ஆனாலே போதும். அந்தத் திருமணம் செல்லும் என்பார்கள்.

# சப்தபதி பற்றிய தீர்ப்பு மிகப் பழையது. இப்போது செல்லுமா தெரியவில்லை. சட்ட வல்லுநர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

* மத, சம்பிரதாய நம்பிக்கைகளில் நீதிமன்றம் சட்டம் இயற்ற / மாற்ற முடியுமா?  

8. மாமியார்/மாமனாரை "லகேஜ்" எனச் சொல்லும் மருமகள்கள் அவங்க பெற்றோரைப் பற்றியும் அப்படி நினைப்பார்களா?

 # மாட்டார்கள். 

* நினைப்பவர்களும் உண்டு.

& மாமியார், மாமனாரை லக்கேஜ் என்று சொல்லும் மருமகள்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நாம் பயணம் செல்லும்போது, நம்முடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எப்போதும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வோம். பாதுகாப்பாகப் பூட்டி வைப்போம். மேலும் பயணங்களில், லக்கேஜ் எப்பொழுதுமே நம் தலைக்குமேலே, உயரத்தில்தான் வைப்போம்.   

9. படிப்புக்கும் புகுந்த வீட்டில் ஒத்துப் போவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கா? படிக்காத பெண் மட்டும் ஒத்துப் போவாளா? இல்லை வளர்ப்பு காரணமா?

# வளர்ப்பு எல்லாம் இல்லை. தனிமனித மனப்பாங்குதான் காரணம்.

& என்னைக் கேட்டால், வளர்ப்புதான் காரணம் என்பேன். 

* காலங்களும் பழக்கங்களும் மாறிவரும் நிலையில் அதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த தலைமுறையாக இருக்கலாம்.  காலம் மாறிக்கொண்டிருக்கிறது.  முன்பெல்லாம் பெரும்பாலும் வீட்டிலேயே சாப்பிட்டு, எப்போதாவது ஹோட்டலுக்குச் செல்வோம்.  இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் ஹோட்டலும் ஸ்விக்கி, ஜோமட்டோவும்தான்!

10.இப்போதைய சிக்கலான மணவாழ்க்கைக்கு ஒரே குழந்தை என்னும் பெற்றோர் எடுத்திருக்கும் முடிவுதான் காரணம் என்பது என் கருத்து. இது சரியா?

# ஒரு குழந்தை எப்படிக் காரணமாக இருக்கும் ? இரண்டு இருந்தால் ஆளுக்கு ஒன்றாக ப் பிரித்துக் கொள்வார்களா என்ன ?

& யாருக்கு சிக்கல்? 

Jayakumar Chandrasekharan: 

வழக்காடு மன்றங்களுக்கு ஏன் பட்டி மன்றம் என்று பெயர் வந்தது?

# வழக்காடு மன்றம் என்பது பிற்காலத்தில் அறிமுகமானது. அதற்கு முன்பு பட்டி மண்டபம் என்றும் பட்டிமன்றம் என்றும் சொல்லப்பட்டு வந்தது . மன்றம் என்ற சொல் மண்டபத்தின் திரிபு என்பது  ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். பின்னர் வந்ததில் இருந்து மன்றத்தை எடுத்து முன்னர் இருந்த மண்டபத்துக்குப் பதிலாக பொருத்தப்பட்டதாகச் சொல்வார்கள்

எம் தில்லை நாயகம்: 

நம் தமிழில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகள் உள்ளதை போன்று மற்ற மொழிகளில் இவை உள்ளனவா? 

# பட்டி மன்றம் போல அந்தக் காலத்தில் Debating Society என்று இங்கிலாந்து நாட்டில் கல்லூரிகளில் பிரசித்தம். அதன் தாக்கம் நம் நாட்டிலும் இருந்தது.  ஆர்.கே.நாராயணன் தமது நாவல் ஒன்றில் கதாநாயகன் விவாத மேடையில்  வெற்றி பெற்ற மகிழ்ச்சி பற்றி எழுதியிருக்கிறார்.

மேலும் தமிழில் பல அர்த்தம் தரும் ஒரே சொல்லால் ஏற்படுவது போன்ற குழப்பங்கள் மற்ற மொழிகளில் உள்ளனவா?

& எல்லா மொழிகளிலும் அந்தக் குழப்பம் உண்டு. 

உதாரணமாக ஆங்கிலத்தில், 

(Homophones are words that sound the same but are different.

Homographs are words that are spelled the same but are different.

Homonyms can be homophoneshomographs, or both.)

Examples for homographs :

 1. Park - A public play area or to bring a vehicle to a stop and leave it temporarily.
 2. Bat - A type of sports equipment or an animal.
 3. Bass - A type of fish or a genre of music.
 4. Minute - Small or a unit of time. (& also angular measurement unit)
 5. Bark - An animal or outer layer of a tree.
 6. Sewer - A drain or a person who sews.
 7. Crane - A bird or a machine used at construction sites.(& பாக்குப் பொட்டலம் !!)
 8. Tear - To rip something, or the liquid that flows from eyes when crying.
 9. Bow - A weapon for shooting arrows or a formal way of greeting or showing respect.
 10. Saw - A sharp tool used for cutting hard materials or past tense for the word 'see'.
 11. Pen - An object which is used for writing or a small area in which animals are kept.
 12. Wave - Seawater coming into shore or a friendly hand gesture.
 13. Fine - A levy of money as a consequence of a wrong action or a high-quality item.
 14. Learned - The past tense of 'learn' or knowledge.
 15. Wound - The past tense of 'wind' or an injury.
 16. Degree - Award conferred by a college or university, a position on a scale of intensity, a measure for arcs and angles, the highest power of a term or variable, a unit of temperature on a specified scale, a seriousness of something. (& நம்ம ஊர்ல கும்பகோணம் டிகிரி காபி) 
 17. Bear - An animal or to endure.
 18. Lead - Starting in front or a metal.
 19. Skip - Jump or to miss out.
 20. Fair - Appearance or equal judgement.

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க : 

1) 


எங்கள் கருத்து : " அம்மா நகராட்சி தேர்தலுக்கு வோட்டு கேட்டு வராங்க. நமக்கு எலக்ஷன் ஐ டி கார்டு, ரேஷன் கார்டு எல்லாம் இருக்கா? "  

2)


" நம்ம பக்கமும் வருவாங்களா? நமக்கும் எலும்புத்துண்டு ஏதேனும் கிடைக்குமா? " 

3) 

இந்தக் காட்சிக்குப் பொருத்தமான திரைப்பாடல் என்ன? 

= = = = =


139 கருத்துகள்:

 1. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செயல்..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. //(& நம்ம ஊர்ல கும்பகோணம் டிகிரி காபி)//

  காஃபியோட பேரு கெட்டது தான் மிச்சம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பித்தளை, வட்டை, தம்பளரில் கொடுத்தால் அது கும்பகோணம் டிகிரி காஃபி என்னும் நினைப்பே எல்லோருக்கும் இருக்கு. உண்மையில் அந்த டிகிரி என்பது பாலின் தரத்தை முக்கியமாய்ப் பசும்பாலின் தரத்தைக் குறிக்கும். தரமான பசும்பாலில் கலக்கும் காஃபியே டிகிரி காஃபி எனப்படும். இப்போல்லாம் சுத்தமான பசும்பால் யார் வாங்கறாங்க! (ஹிஹிஹி, எங்களைத் தவிர்த்து) :))))

   நீக்கு
  2. ஜுத்தமான பஜும் பால்னா என்ன? இப்போல்லாம் பசு மாடுகள் கண்டதையும் தின்னுட்டுத் தர்ற பால், பசும் பாலாயிடுமா?

   ஏதோ நான் காபி சாப்பிடறதில்லை என்பதால் ரொம்பத்தான் சொல்லிக்கிறீங்க. உங்களுக்காகவாவது, அங்க வந்து ஒரு தடவை காபி சாப்பிடப்போறேன். (அப்புறம் அதை வைத்தே ஒரு தி.பதிவு தேத்திடுவேன்...கபர்தார் ஹாஹா)

   நீக்கு
  3. வெறும் பசும்பால் மட்டுமே. நீங்கள் பெரிய நகரத்தில்/நகரங்களில் வசிப்பதால் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எங்களுக்குப் பண்ணையிலிருந்து பால் வருகிறது. இதற்கு முன்னால் கொடுத்தவங்களும் ஆண்டவன் ஆசிரமத்துப் பால் பண்ணைப் பால் தான். அங்கேயும் பசும்பால். ஆனால் மாடுகளை அங்கே அவிழ்த்துவிட்டுப் புல் மேயக் கூட்டிச் செல்வது இல்லை. நிறைய மாடுகள் என்பதால் சரியான ஆள் இல்லாமல் சிரமம் என்பதால் கட்டிப் போட்டே வைச்சிருக்காங்க எனக் கேள்விப் பட்டேன். அந்தப் பால் கொண்டு கொடுப்பவர் எங்கேயோ ஓடிப் போய்விட்டதால் பின்னர் சில/பல பால்காரர்களிடம் வாங்கிப் பார்த்துட்டுப் பிடிக்காமல் இப்போப் பண்ணைப் பால் வாங்கறோம். பண்ணைக்காரர் எல்.ஐ.சியில் ஏஜென்சி எடுத்து வேலை செய்தவர். படிச்சவர். நாட்டு மாடு, கலப்பினம் இரண்டும் இருக்கு. மொத்தமாகப்பாலைக் கறந்து எல்லாவற்றையும் சேர்த்துத் தான் கொடுக்கிறார். ஆனால் எருமை மாடுகள் இல்லை. எல்லாமே பசுக்கள் தான். எங்க வீட்டுக் காஃபி சாப்பிட்டுப் பாருங்க! தயிர்/மோர் முக்கியமாய்! அம்பத்தூரிலும் கறந்த பால் என்பதால் (அதுவும் ஒரே மாட்டுப்பாலாக வரும்) அங்கேயும் எங்க வீட்டுத் தயிர், மோர் ரொம்பவே பிரபலம்.

   நீக்கு
  4. பசும்பால் காபியா !! ஆச்சரியமா இருக்கு!!

   நீக்கு
  5. நீங்க வந்தப்போக் கொடுத்தது ஆண்டவர் ஆசிரமப் பாலில் கலந்தது. இப்போ இரண்டு வருஷமாச் சுத்தமான பசும்பால். :) பாலைப் பார்த்தாலே சொல்லிடலாம். இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். வெண்ணெயும் அப்படித் தான்.

   நீக்கு
 4. //உதாரணமாக
  ஆங்கிலத்தில்,//

  வழி தவறி பள்ளிக் கூடத்துக்குள் வந்து மாதிரி இருக்கு!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேட் ஆக வந்தவங்க எல்லோரும் பெஞ்சு மேல ஏறி நில்லுங்க!!

   நீக்கு
  2. ஆமாம், எனக்கும் ஒரு சில பதிவுகள் பள்ளிநாட்களை நினைவூட்டுகிறது. இன்னிக்கு, அப்புறமா அறிவியல் பாடம் எடுத்தீங்களே, அந்தப் பதிவு!

   நீக்கு
  3. :))) சான்ஸ் கிடைச்சா விடக்கூடாது!!

   நீக்கு
 5. // ( 8.காலங்களும் பழக்கங்களும் மாறிவரும் நிலையில் அதை.. )

  காலம் எங்கே மாறுது?.. அவங்க அவங்களும்
  அவங்க அவங்க வசதிக்கு மாத்திக்கிறாங்க!..

  வாலறுந்த நரியின் கதை தான்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே
   சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
   அது ஆணவ சிரிப்பு

   இங்கே நீ சிரிக்கும்
   பொன் சிரிப்போ ஆனந்த
   சிரிப்பு

   நீக்கு
  2. !! தில்லைநாயகம் !! வாட்ஸ் அப் ல நீங்க அனுப்பிய கருத்தை இங்கே பகிர்ந்ததற்கு நன்றி.

   நீக்கு
 6. மூன்றாவது படத்துக்கு இப்படி இருக்கலாமோ..

  1) மன்னிக்க வேண்டுகிறேன்..
  உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்..

  2) நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ!..

  ( காலையிலே ஏன் இந்த வேலை?..)

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் அனைவருக்கும்.

  //அதே போல - திருமணம் செய்துகொண்ட ஆண் அவனுடைய அம்மா அப்பாவுடனும்,// - இந்தப் பதிலை ரசிக்கவில்லை. கேள்வி கேட்டதில் நியாயம் இருக்கிறது. அந்த மெதட்டில் ஒரு நன்மையும் இருக்கிறது. நம் மெதடிலும் ஒரு நன்மை இருக்கிறது. இதெல்லாம் நம் வழி வழி வருபவை. நம் பாரம்பர்யத்தில் கூடுதல் அர்த்தம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். நானும் அந்தப் பதிலை ரசிக்கலை. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒரே கருத்து இருக்கணும்னு நியாயம் இல்லையே!

   நீக்கு
  2. அட! என்னங்க இது - ஜோக் சொன்னால் அதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக்காதீங்க! அது நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்பட்டது!!

   நீக்கு
 8. 3 - காட்சிக்குப் பொருத்தமான பாடல். உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 9. //சிக்கலான மணவாழ்க்கைக்கு // - அதுக்கும் ஒரு குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? பெற்றோர்தான் காரணம். அவங்களுக்கும் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு ஆசை. தங்களுக்கும் குழந்தைக்கும் எல்லாம் வாங்கிக்கணும் என்ற ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே குழந்தை என்னும் கோட்பாடின் ஆழமான விளைவுகள் உங்களுக்குப் புரியலை. விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, எதிர்பார்ப்புகள் இல்லாமை, அடுத்தவரோடு அனுசரித்துப் போதல், உறவுகளின் அருமை இப்படிப் பலவற்றையும் இந்த ஒரே குழந்தைகள் இழக்கின்றனர். அவங்க நினைச்சது உடனே நடப்பதால் வாழ்க்கை பூராவும் அதைத் தான் எதிர்பார்க்கீன்றனர். மாறாக நடந்து விட்டால் உணர்ச்சி வசப்பட்டு விபரீத முடிவுகள், அல்லது சண்டை/வாக்குவாதம்/வழி தவறிச் செல்லுதல் எனப் பல நடக்கின்றன. ஒரு பெற்றோர் தங்கள் முதல் குழந்தைக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசே அதற்கு ஒரு தம்பியோ/தங்கையோ அடுத்துப் பிறப்பது தான் என்பது என் கருத்து. அதோடு இல்லாமல் எண்ணிக்கையில் குறைவதால் சில சமூகங்கள் நாளடைவில் அடியோடு மறைந்தும் போய்விடும். :(

   நீக்கு
  2. எது நடக்கிறதோ அது நல்லதுக்குத்தான் என்று பாசிட்டிவ் ஆக நினைப்போமே!!

   நீக்கு
  3. உண்மை. உங்களுடைய பாசிடிவ் திங்கிங். (தமிழில் சொன்னால் சரியா வராது) என்னைப் பல சமயங்களில் ஆச்சரியப்படுத்தும். முக்கியமாய் இந்த வாரம் இந்த பதில்.   மாமியார், மாமனாரை லக்கேஜ் என்று சொல்லும் மருமகள்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நாம் பயணம் செல்லும்போது, நம்முடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எப்போதும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வோம். பாதுகாப்பாகப் பூட்டி வைப்போம். மேலும் பயணங்களில், லக்கேஜ் எப்பொழுதுமே நம் தலைக்குமேலே, உயரத்தில்தான் வைப்போம். // எவ்வளவு எளிதாகக் கடந்து வருகிறீர்கள். எனக்கும் இப்படி ஒரு மனம் வேண்டும். ஆனால்! எங்கே! :(

   நீக்கு
  4. //முதல் குழந்தைக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசே// அடப்பாவீ.. இது என்ன புதுத் தியரி... மேல் நாட்டில் அவர்களுடைய குழந்தைக்குக் கொடுக்கும் புதிய பரிசு, புதிய அம்மா என்று சொல்வதைப் போலச் சொல்றீங்களே.. கடைசி குழந்தை என்ன பாவம் செய்தது? அதற்கு அதிகாரம் செய்ய ஒரு தம்பியோ தங்கையையோ கொடுக்காமல் அநீதி இழைக்கலாமா?

   நீக்கு
  5. இப்படியே போய்க்கிட்டு இருந்தா -- -- கடைசியிலே பிறக்கின்ற 'n_th' குழந்தை கதி என்ன ஆவது!!

   நீக்கு
  6. ம்ம்ம்ம்ம் நான் சரியாச் சொல்லலைனு நினைக்கிறேன். :(

   நீக்கு
  7. அப்படித்தான் இருக்கவேண்டும்!

   நீக்கு
 10. //உள்ளூரிலேயே பிறந்தகம், புக்ககம் இரண்டும் இருப்பது// - இது வரப்ப்ரசாதம்தான். ஏன் இருவர் வீடும் அருகருகில் இருந்தால் இன்னும் நல்லதுதான் என்பது என் அபிப்ராயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பத்தூரில் இருந்தவரைக்கும் என் அப்பா வீடு 3 ஆவது மெயின் ரோடிலும் (இப்போவும் அங்கே தான் இருக்கு. அண்ணா, மன்னி இருக்காங்க) எங்க வீடு 2 ஆவது மெயின் ரோடிலும் இருந்தது. எனக்குப் பிறந்த வீடுனு கொஞ்ச நாட்கள் போய்த் தங்க முடியலையேனு இருக்கும். அப்படியே போனாலும் காலம்பரப் போனால் மதியம் காஃபி நேரத்துக்கு அழைப்பு வந்துடும். :)

   நீக்கு
  2. // காலம்பரப் போனால் மதியம் காஃபி நேரத்துக்கு அழைப்பு வந்துடும். :)// நீங்க புறப்பட்டுச் செல்லும் முன்பே காபி போட்டு, பிளாஸ்க்ல எடுத்து வெச்சிட்டுப் போயிருந்தீங்கன்னா - ஒரு வேளை காபி நேரத்தில் உங்களைக் கூப்பிடாமல் இருந்திருப்பாரோ !!

   நீக்கு
  3. ஹாஹாஹா, நாங்க மாமனார்/மாமியார் இருந்தவரை காஃபிக்கொட்டையை வறுத்து வீட்டிலேயே அரைத்துத் தான் காஃபி போட்டாகணும். இந்த அழகில் ஃப்ளாஸ்கில் ஊற்றினால் அது கீழே தான் போகும். பின்னர் எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு வந்த பின்னரே இந்த வறுத்து அரைத்தல் நின்று கடையில் வாங்கும் வழக்கம் வந்தது.

   நீக்கு
 11. //திருமண பந்தத்தின் முழு அர்த்தமும் புரிந்துதான்// - அது எந்தக் காலத்திலும் புரிந்ததில்லை. Over a period of timeதான் அர்த்தம் புரியும். இவங்க கேட்கறதைப் பார்த்தால் 6 வயசுல பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்போது அந்தப் பெண்ணுக்கு கணவன்னா என்ன, தான் எங்க போகிறோம், திருமணம்னா என்ன என்றெல்லாம் தெரிந்திருந்தது என்று அர்த்தம் வர்றாப்புல கேட்கறாங்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறு வயதுக்கு மணமாகும் பெண்ணிற்கு நாளாக நாளாகத் திருமண பந்தத்தின் அர்த்தம் புரிந்து விடும். அதே பதினெட்டு/இருபது/இருபத்தைந்து/முப்பது வயதுப் பெண்களுக்குப் புரியும் என எதிர்பார்க்க முடியது. ஏனெனில் அந்த வயதில் அவங்களுக்கென்று ஒரு தீர்மானம், ஒரு முடிவு, ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும். அதிலும் இருபது வயதுக்குள்ளான பெண்களிடம் ஓரளவுக்கு ஒத்துப் போதலை எதிர்பார்க்கலாம். இருபத்தைந்து வயதுக்குப் பின்னர் பெண்கள் மனதில் தான், தன் சுகம் என ஏற்பட்டு விடுகிறது. ஆகவே மாமனார்/மாமியார்/மைத்துனன்/நாத்தனார் எனில் கூடுதல் சுமை என நினைக்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் (இப்போவும் இருக்கு என்னும் நம்பிக்கையில்) வளர்ந்த குழந்தைகள் விதிவிலக்காகலாம்.

   நீக்கு
  2. திருமண பந்தத்தின் அர்த்தம் பொதுவாக யாரும் புரிஞ்சுக்கலையோ? வம்சம் விளங்க மட்டுமின்றி சமூகத்தை மேம்படுத்தவும் நல்ல குழந்தைகளைப் பெற்று வளர்த்து இந்த சமுதாயத்தை மேம்படுத்தவும் என எத்தனையோ இருக்கு. விவரிக்க விவரிக்கப் பெரிசா ஆயிடும்.

   நீக்கு
 12. //மாமியார்/மாமனாரை "லகேஜ்" எனச் சொல்லும் மருமகள்கள் அவங்க பெற்றோரைப் பற்றியும் அப்படி நினைப்பார்களா?// - அப்படித்தான் நினைப்பார்கள். இதில் எனக்குச் சந்தேகம் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமா இல்லை. அதுவும் இப்போதைய பெண்கள் தங்கள் பெற்றோருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மாமியார்/மாமனாருக்குக் கொடுப்பதில்லை. விதிவிலக்குகள் தனி.

   நீக்கு
  2. // பெண்கள் தங்கள் பெற்றோருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மாமியார்/மாமனாருக்குக் கொடுப்பதில்லை. // உண்மைதான்.

   நீக்கு
  3. இங்கே ஒரு விஷயம். அப்பா/அம்மாவை மதியாத பெண்களும் உண்டு. அல்லது பெண்ணைச் சிறப்பாகக் கொண்டாடாத அம்மாக்களும் உண்டு.

   நீக்கு
 13. //அம்மா எனில் சாதாரணமானவளாக இருக்க மாட்டாளா? // ஆம்...அவள் எப்போதுமே தியாகிதான் (தன் குழந்தைகளுக்கு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவும் ஒரு மனுஷி தான். அவளுக்கும் பல ஆசைகள், பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் நாம் அம்மாவை/அம்மாக்களைத் "தியாகி" என்னும் பெயரைக் கொடுத்து அவங்களை அமுக்கிடறோம் என எனக்குத் தோன்றும். :(

   நீக்கு
  2. இந்தப் பட்டம்லாம் நாங்க கொடுக்கறதில்லை. அம்மாக்களே அப்படி நடக்கறாங்க. எங்க வீட்டிலயும் என் மனைவி பசங்களுக்காக நிறையவே தியாகம் செய்யறாங்க, நான் சொல்லியும் கேட்காமல். என் வசம் கிச்சன் வரும்போது 8:30க்கு கிச்சன் லைட் அணைத்துவிடுவேன். அதுக்கு அப்புறம் நான் கிச்சனுக்குள் நுழைய மாட்டேன். டயப்படி நான் பண்ணிடுவேன்... அவங்க வரும்போது சூடா இருக்கணுமே..கொஞ்சம் வேலை அதிகமோ..சரி காத்திருந்து பார்ப்போம் என்கிற பிஸினெஸே என்னிடம் கிடையாது. ஆனால் இந்த மாதிரி கன்சிடரேஷன் அம்மாக்கள்ட உண்டு. இது அவங்க ரத்தத்தில் ஊறிய குணம் அல்லது தொப்புள் கொடி உறவு. இந்த பிஸினெஸ் அப்பாக்களிடம் கிடையாது

   நீக்கு
  3. அது என்னமோ உண்மை. எங்க பையருக்கு சூடாக தோசை/அடை/சப்பாத்தி பண்ணித் தரணும்னு நான் ராத்திரி அவர் சாப்பிடும் நேரம் வரை உட்கார்ந்திருப்பேன். ஒன்பதரை ஆகும் அவர் சாப்பிட வர. நைஜீரியா நேரம் மாலை ஐந்து மணி. அப்போத் தான் அலுவலக வேலையிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். ஆகவே ஒன்பதரைக்கு வருவார். நான் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சில சமயங்கள் பேசாமல் இருந்தாலும் பல சமயங்களும் கத்துவார். பண்ணி வைச்சுட்டு நீ போய்ப் படு என்பார். :)))) ஆனால் நான் என்னமோ மாற்றிக்கொள்ளவில்லை. அதே மருமகள் எனில் பண்ணும்போதே அவரை அழைத்துக் கொடுத்துடுவா அல்லது அவர் வேலை செய்யும் அறையில் கொண்டு போய்க் கொடுத்துடுவா, சாப்பிட்டுக் கொண்டே வேலையைச் செய் என! :)))))

   நீக்கு
 14. //ஒரே சொல்லால் ஏற்படுவது போன்ற குழப்பங்கள் // இதில் எங்கே குழப்பம் வந்தது? அந்த வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தத்தை சுலபமாகப் புரிந்துகொள்வோமே. தமிழில் என்ன வித்தியாசம்/சிறப்பு என்றால், ஒரு வார்த்தை வரும்போதே அது தமிழ் மொழிக்கு இயற்கையான வார்த்தை இல்லை என்றால், ஆட்டமேட்டிக்காக நாம் ஒலிக்குறிப்பை மாற்றிவிடுவோம். உதாரணம், புத்தகம், புக்னம், வம்பு, கதை/Gகதை, சித்ரம், சட்னி, சனியன், குணம், குலம் போன்று... கண்டம்/கண்டம் போன்ற வார்த்தைகளை சுலபமாக நாம் புரிந்துகொள்வோம்.

  பதிலளிநீக்கு
 15. //கணவன் வீட்டில் வசிக்கும் பெண்ணிற்குப் பிறந்தகத்தின் மேல் பற்று இருப்பது// - இது என்ன கேள்வி? கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புதுக் குழந்தையாக மாற முடியுமா? பற்று வேறு ஈஷிக்கொள்வது வேறு. எனக்கு என் மனைவி மேல பற்று இருக்கும், அதுக்காக ஆபீஸ் போயிட்டு, அவளிடமே போனில் பேசிக்கொண்டிருந்தால், யாரேனும் என்னைப் பாராட்டுவார்களா? (மனைவி உட்பட?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறந்த வீட்டுப் பற்று இருப்பது சரிதான். ஆனால் அது முழுக்க முழுக்கப் பிறந்த வீட்டுக்காரர்களையே ஆதரிப்பது, அவங்களுக்கே எல்லாம் செய்வது, அவங்க சொல்லுவதையே நம்புவது என இருந்தால் அது சரியா? பிறந்த வீட்டின் குலதெய்வம், அங்கே உள்ள வழிபாட்டு/நாள்,கிழமை மரபுகள் ஆகியவற்றையே கல்யாணம் ஆகிப் பல வருஷங்கள் ஆனாலும் பின்பற்றுவது சரியா? திருமணம் ஆன பின்னர் புக்ககத்தினரின் வழிமுறைகளைத் தான் முக்கியமான நாட்களிலாவது பின் பற்ற வேண்டும்.

   நீக்கு
  2. மேடம்.... பெண்கள், தன் கணவன், அவங்க வீட்டாட்களுடன் நல்ல நட்பு பாராட்டணும் என்றெல்லாம் ரொம்பவே எதிர்பார்ப்பாங்க. அவங்க சைடு ஆட்களிடம் கூடவே ஈஷிப்பாங்க. 'தானாடா விட்டாலும் சதையாடும்'. இதெல்லாம் பெரிய விஷயமா?

   நீக்கு
  3. ஈஷிக்கிறதைப் பத்தி எல்லாம் நான் சொல்லலை. முக்கியமான விஷயங்களில் கூடப் புக்ககத்துச் சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் இருப்பது. எனக்குத் தெரிந்த உறவினர் அவர் புக்ககத்துக் குலதெய்வத்தைக் கும்பிட்ட நாளே கிடையாது. இத்தனைக்கும் திருமணம் ஆகி 40 வருஷங்களுக்கும் மேல் ஆகிறது. பிறந்தகத்துக் குலதெய்வம் தான்! அவர் கணவர் உயிருக்குப் போராடினப்போக் கூடப் பிறந்தகத்துக் குலதெய்வத்திற்குத் தான் வேண்டிக் கொண்டார். எல்லா ஸ்வாமியும் ஒன்றே என்றாலும் இந்தக் குலதெய்வம் விஷயத்தில் புக்ககத்தினர் வழிகளைப் பின்பற்றுவதே நல்லது என்பது என் கருத்து.

   நீக்கு
  4. கீசா மேடம்... நீங்க சொல்றதை நான் புரிஞ்சுக்கறேன். இருந்தாலும், தெய்வம் என்று வரும்போது, நம் மனசில் ஊறின தெய்வம்தான் மனசில் வரும். இதுக்காக மத்த தெய்வங்களை ஒப்பிடக்கூடாது.

   எனக்குத் தெரிந்த பாலக்காட்டுப் பெண், ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்துகொண்டாள். ரெண்டு பசங்களும் பொறந்தாச்சு. நல்ல வேலைலயும் இருந்தா. அவளோட பேரும் முஸ்லீம் பெயர்தான் (பிறந்தது பிராமின்). அவ PC password லக்ஷ்மி பெயர். வெள்ளிக்கிழமை நான் வெஜ் சாப்பிடமாட்டாள். இதுக்கு என்ன சொல்றீங்க?

   நீக்கு
  5. குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியலையோ? :( என்னை/எங்களைப் பொறுத்தவரை புக்ககத்தினரின் குலதெய்வம் ஆன மாரியம்மன் மிக மிக முக்கியம். அதன் பின்னால் எங்க அப்பாவீட்டுக் குலதெய்வங்களுக்கும் அவ்வப்போது ஏதானும் செய்வோம். ஆனால் முன்னுரிமை மாரியம்மனுக்கே!

   நீக்கு
  6. திருமணத்தின்போது, பெண்ணுக்கு கோத்திரம் மாற்றி - (புகுந்த வீட்டின் கோத்திரமாக மாற்றி) அனுப்பி வைப்பார்கள் என்றும், அதற்கும் கல்யாண மந்திரங்களில் சில உள்ளன என்றும் என் பெண் கல்யாணத்தின்போது சாஸ்திரிகள் கூறினர். அப்போது குடும்பத்தின் குலதெய்வமும் மாறிவிடும் என்றார்கள். சிலருக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலுமே ஒரே குலதெய்வம் அமைவது உண்டு.

   நீக்கு
  7. பெண்ணை தாரை வார்த்துத் தரும்போது கோத்திரம் மாறும். இன்னாருடைய கொள்ளுப்பேத்தி (நஃப்த்ரி) இன்னாருடைய பேத்தி (பௌத்ரி) இன்னாருடைய புத்ரி எனச் சொல்லி (சொல்லும்போது சப்தமாகவே சொல்லுவார்கள். ஏனெனில் இதற்கு யாரும் ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என) அதே போல் பிள்ளைக்கும் சொல்லிப் பின்னர் இந்த வரனுக்கு என் பெண்ணைக் கன்யாதானமாகக் கொடுக்கிறேன் என அறிவிப்பார்கள். பெண்ணின் கைகளில் அம்மா/அப்பா பிடிச்சுக்க அப்பா பையரின் கைகளில் அம்மா நீர் ஊற்ற தாரை வார்த்துக் கொடுப்பார். இதே போல் மற்றத் தமிழர் (பிராமணரல்லாதோர்) திருமணங்களிலும் உண்டு. இதைப் பற்றிப் பதிவாகவே எழுதி இருக்கேன் சில ஆண்டுகள் முன்னர்.

   நீக்கு
  8. என்னோட மாமியார் நான் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டாலே என்னை உனக்குக் குலதெய்வ நம்பிக்கையே இல்லை எனக் கடிந்து கொள்வார். ஆகவே அவருக்குத் தெரியாமலேயே வேண்டிப்பேன். :))) கந்த சஷ்டி கவசம் சொன்னாலே கோபம் வரும். பின்னால் அவரே சொல்லவும் ஆரம்பித்தார். :)))) பாரதி பாட்டுப் பாட முடியாது. திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் இதென்ன தமிழில் எல்லாம் சொல்றே என்பார்! :)))) கடைசிக் காலத்தில் தினம் தினம் திருவெம்பாவையும் திருப்பாவையும் படிச்சார்.

   நீக்கு
  9. நான் கீதாவை இந்த விஷயத்தில் பூரணமாக
   ஆதரிக்கிறேன். அழிச்சாட்டியமாகப் பிறந்துவீட்டு குலதெய்வம் தான் வேண்டும் என்றால்
   புகுந்த வீடு என்னாவது.

   நீக்கு
 16. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்றுக் குறைந்து வருவதாகவும் தேர்தலுக்குப் பின்னர் அதிகரிக்கலாம் (ஹிஹிஹி) என்றும் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். நல்லபடியாகத் தொற்று அடியோடு ஒழிந்து போகப் பிரார்த்திக்கிறோம். _/\_

  பதிலளிநீக்கு
 17. இங்கே ஒரு வாரமாக எல்லாக் கட்சிக்காரங்களும் தேர்தல் பிரசாரத்துக்காக வந்து போகிறார்கள். ஒவ்வொருவரும் நிறையப் படித்திருப்பதோடு மட்டுமில்லாமல் கட்சி சார்புடனும் இருக்காங்க. அவங்க அவங்க கட்சிக் கொள்கைகளில் தீர்மானமாகவும் இருக்காங்க. முதல் படத்தில் நம்ம முன்னோருக்கும் தேர்தலில் ஓட்டுப் போட முடிஞ்சால் என்ன செய்திருப்பாங்க?

  பதிலளிநீக்கு
 18. 2.எல்லாச் செல்லங்களும் ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராயிட்டிருக்காங்களோ?
  3. இந்தக் காட்சிகள் இந்தக் காதலர் தினத்தில் அதிகமாகக் காண முடிகிறது. எல்லாச் சானல்களிலும் இப்படி ஒரு காட்சி எல்லாத் தொடர்களிலும். அதுவும் பச்சைப்புடைவை/அல்லது பச்சை நிற உடை உடுத்தியிருந்தால் அந்தப் பெண் தன்னை மணமுடிக்க ஆண்களை அழைப்பது என்னும் கருத்தாம். எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க. மேல்நாடுகளில் இது ஒருவருக்கொருவர் அன்பை/பாசத்தைக் காட்டும்தினம். ஒரு மாணவி தன் ஆசிரியருக்குக் கூட வாலன்டின்ஸ் தின வாழ்த்துகளைச் சொல்லலாம். அக்கா/தங்கைக்கும், அண்ணா/தங்கை, தம்பிக்கும் பெற்றோருக்கும் சொல்லலாம். நம் தமிழ்நாட்டில் தான் சீரழிந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.

   நீக்கு
  2. //ஒரு மாணவி தன் ஆசிரியருக்குக் கூட வாலன்டின்ஸ் தின வாழ்த்துகளைச் சொல்லலாம். அக்கா/தங்கைக்கும், அண்ணா/தங்கை, தம்பிக்கும் பெற்றோருக்கும் சொல்லலாம். நம் தமிழ்நாட்டில் தான் சீரழிந்திருக்கிறது// Correct!

   நீக்கு
  3. இது குறித்துச் சில வருஷங்கள் முன்னர் பதிவே எழுதினேன். தேடிப் பார்க்கணும்.

   நீக்கு
  4. //ஒரு மாணவி தன் ஆசிரியருக்குக் கூட வாலன்டின்ஸ் தின வாழ்த்துகளைச் சொல்லலாம்.// - ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் FIRல் பா, கீ பெயரையும் சேர்த்துடலாமா? நாடு இப்போ போகிற போக்கு அப்படி இருக்கு

   நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க அப்பு(பெண்ணோட 2ஆவது பெண்) வாலன்டின்ஸ் டே கிஃப்ட் எனத் தன் ஆசிரியர்கள், நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பழைய பதிவு கிடைச்சால் தேடி எடுத்துப் போடறேன். ஆசிரியர்களும் மாணவ, மாணவியருக்கு என பரிசுப் பொருள், கேக், ஐஸ்க்ரீம் போன்றவை ஏற்பாடு செய்து வாங்கித் தருவாங்க. இது கிறிஸ்துமஸ் தினத்துக்கும் புத்தாண்டுக்கும் உண்டு. இங்கெல்லாம் தீபாவளி போனஸ் மாதிரி அங்கே உழைக்கும் மக்களுக்குக் கிறிஸ்துமஸ் போனஸ் உண்டு.

   நீக்கு
  6. //அதுவும் பச்சைப்புடைவை/அல்லது பச்சை நிற உடை உடுத்தியிருந்தால் அந்தப் பெண் தன்னை மணமுடிக்க ஆண்களை அழைப்பது என்னும் கருத்தாம்.// - NOTE THIS POINT. என்னை அப்புறம் குறை சொல்லாதீங்க மை லார்ட். ஹா ஹா

   வெளிநாட்டின் வாலண்டைன்ஸ் டே வை, தமிழகம்/இந்தியாவில் கோத்துவிடறீங்களே.. இங்கெல்லாம் வாத்தியாருக்கு வாலண்டின்ஸ் டேக்கு கிஃப்ட் கொடுத்தால்......

   நீக்கு
  7. அதெல்லாம் இல்லை நெல்லை. நேற்றோ/முந்தாநாளோ ஒரு தொலைக்காட்சித் தொடரில் இப்படி ஒரு காட்சியைக் காட்டினாங்க. மணமான பெண் ஒரு மரத்தடியில் கணவனுக்காகக் காத்திருக்க அந்த வழியே சென்ற வாலிபர்கள் சிலர் அடுத்தடுத்து அந்தப் பெண்ணிடம் சிவப்பு ரோஜாவைக் கொடுத்து மண்டியிட்டுக் கொண்டுக் காதலைச் சொல்கின்றனர். அந்தப் பெண் எல்லோரிடமும் தான் திருமணம் ஆனவள் என்று சொல்ல, அவங்க அப்புறம் பச்சைக்கலர் உடையில் வந்திருக்கே எனத் திட்டுகின்றனர்.:)

   நீக்கு
  8. இந்த காதலர் தின கலாட்டா எல்லாம் ஊடக - முக்கியமாக தொலைக்காட்சி தனியார் அலைவரிசைகள் தலை எடுத்தபின்தான் அதிகம் ஆயிற்று.

   நீக்கு
 19. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  வாழ்வில் ஆரோக்கியம் சூழ வாழ்வு தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. மூன்றாவது படம் ஓ மேரி ஸோனி, மேரி தமன்னா.
  யாதோன் கி பாராத் சினிமா:)

  பதிலளிநீக்கு
 21. அதே போல - திருமணம் செய்துகொண்ட ஆண் அவனுடைய அம்மா அப்பாவுடனும், பெண் தன்னுடைய அம்மா அப்பாவுடனும் தொடர்ந்து இருந்துகொண்டால் எந்தப் பிரச்னையுமே இல்லாமல் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் பிறந்தால், அவர்கள் யாருடன் இருக்க விருப்பமோ அவர்களுடன் இருந்துகொள்ளலாம். படிக்கும் வயது வந்தவுடன் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடலாம். அம்மா அப்பா இருவருக்கும் வயதாகிவிட்டால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். """""

  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  நல்ல ஜோக். வீக் எண்ட் மாரியேஜ் ஆகுமோ:)

  பதிலளிநீக்கு
 22. @ கீதா சாம்பசிவம்,

  ''அம்பத்தூரில் இருந்தவரைக்கும் என் அப்பா வீடு 3 ஆவது மெயின் ரோடிலும் (இப்போவும் அங்கே தான் இருக்கு. அண்ணா, மன்னி இருக்காங்க) எங்க வீடு 2 ஆவது மெயின் ரோடிலும் இருந்தது. எனக்குப் பிறந்த வீடுனு கொஞ்ச நாட்கள் போய்த் தங்க முடியலையேனு இருக்கும். அப்படியே போனாலும் காலம்பரப் போனால் மதியம் காஃபி நேரத்துக்கு அழைப்பு வந்துடும். :)''

  ஹ்ம்ம்ம். இதையே நானும் அனுபவித்தேன். ரொம்ப ஏக்கமாக இருக்கும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அம்மா இருந்தவரைக்கும் பிறந்த வீட்டுக்குப் போய்த் தங்கியதே குழந்தைப் பிறப்பின் போது தான். அதுக்கப்புறமாப் போகவே முடியலை. அம்மா போனப்புறமா எங்களுக்கு மறுபடி ராஜஸ்தான், குஜராத் என மாற்றலில் சென்னை வந்து அண்ணா/தம்பி வீடுகளில் தங்கி இருந்தாலும் அம்மா மாதிரி வருமா? :(

   நீக்கு
 23. ''இப்போதைய சிக்கலான மணவாழ்க்கைக்கு ஒரே குழந்தை என்னும் பெற்றோர் எடுத்திருக்கும் முடிவுதான் காரணம் என்பது என் கருத்து. இது சரியா''

  ஆமாம். அந்தக் குழந்தைக்கு விட்டுக் கொடுக்கவே தெரியாமல் போகும்.
  அதுவும் அந்தத் தாயே அவள் பெற்றோருக்கு
  ஒரு குழந்தையாக இருந்தால்
  இன்னும் சிரமம்.

  அப்படி இல்லாத பசங்களையும் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. அம்மா ஒரு தியாகி என்பது நிறைய குடும்பங்களில் உண்மைதான்.
  மாற்றங்களும் உண்டு.

  அம்மா அப்பா ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதைக் காணும் குழந்தைகள் அவர்களும் நல்ல பெற்றோராக இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 25. படம் 1. அன்னதானம் எப்போ தொடங்கும். இதோ வந்து கிட்டிருக்காங்க அம்மா.

  படம் 2.நாய்கள் நீச்சல் போட்டி.

  படம் 3. கருத்துப் படமா? கவர்ச்சி படமா?

  Jayakumar

  பதிலளிநீக்கு
 26. பட்டி மன்றத்திற்கும் வழக்காடு மன்றத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பட்டிமன்றத்தில் அணிக்கு 4 பேச்சாளர்கள் பேசுவார்கள் நடுவர் தீர்ப்பு வழங்குவார். வழக்காடு மன்றத்தில் இரண்டு பேச்சாளர்கள் மட்டுமே. முதலில் ஒரு பேச்சாளர் தன்னுடைய கட்சிக்காரர் சார்பாக பேசிவிட்டு எதிரணி மீது குற்றச்சாட்டை வைப்பார், பிறகு எதிரணி காரர் அதற்கு பதில் கூறி விட்டு தன்னுடைய கேள்வியை கேட்கலாம் அதற்கு முதல் அணிக்காரர் பதில் கூற வேண்டும். இப்படி நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது போலவே இரண்டு பேர்கள் மாறி மாறி பேசி அவர்கள் வாதத்தின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.

  பதிலளிநீக்கு
 27. படம் 1. இவங்க ஏன் ஆ, ஊ ன்னா நம்ம படத்தை போட்டு விடுறாங்க?

  படம் 3. "கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா..?"(எ.பி. தாத்தா நாடாவில் இந்த பாடலை கேட்டதே மில்லை என்று சொல்லாமல் இருக்க வேண்டும். படம் மொழி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழி பாட்டு கேட்டதுண்டு. ரசித்த படம். கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. *தாத்தா பாட்டிகள் இந்த பாடலை கேட்டதேயில்லை

   நீக்கு
  3. மொழி படம் நானும் ரசித்துப் பார்த்தேன்.

   நீக்கு
 28. வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க - உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்...

  வருடவரும் பூங்காற்றையெல்லாம் - கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்...

  என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்... உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்...

  என்னவளே அடி என்னவளே...
  எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்... எந்த இடம் அது தொலைந்த இடம் - அந்த இடத்தையும் மறந்து விட்டேன்...

  உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று - உந்தன் காலடி தேடி வந்தேன்...

  காதலென்றால் பெரும் அவஸ்தையென்று - உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்...
  எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து - இரு கண்விழி பிதுங்கி நின்றேன்...!

  பதிலளிநீக்கு
 29. தாத்தாவின் பற்று :-

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  அனைத்தையும் விட்டுவிட வேண்டும் - கடைசி சீரில் உதடு ஒட்டாமல் இருப்பதைப் போன்று...(!)

  பதிலளிநீக்கு
 30. வழக்காடு மன்றம் என்றால் கோர்ட் போலவே தான் இருக்கும் இருவர் வாதிடுவார்கள். தங்கள் கட்சிசார்பில் (தலைப்பின் கீழ் அதனை ஏற்போரின் கருத்துகளோடு), எதிர்வாதியைக் கேள்விகள் கேட்ப்பார் அப்படியே இருவரும் மாறி மாறி ...நடுவர் இருப்பார் ரெண்டு பெரும் பேசும் வாத பிரதிவாதங்களை வைத்து தீர்ப்பு வழங்குவார்

  பட்டி மன்றம் ஒரு சைட் 3, 4 பேர் கூட இருப்பாங்க...வழக்கமா நாம பார்ப்பதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. 1 படம் - அம்மா போதும் உன் சீன்...அங்கப் பாரு காணாமப் போன உன் ஹஸ்பன்ட்/ வைஃப் வருது.(உட்கார்ந்திருக்கும் குரங்கு ஆணா பொண்ணான்னு தெரியலை!!ஹிஹிஹி)

  ரோடை க்ராஸ் பண்ண இம்புட்டு யோசனையா....வண்டி ஒண்ணும் வரலை...வா ஓடி க்ராஸ் பண்ணிடுவோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 32. கேள்வியும் அருமை..பதிலும் அருமை..கேள்வியைப் படித்து என் பதிலை யோசித்துவிட்டு பின் பதிந்த பதிவைப் படித்தது சுவாரஸ்யமாக இருந்தது..

  பதிலளிநீக்கு
 33. இந்த வாரம் கூடுதலாக *ஶ்ரீராமும் பதில் சொல்லி இருக்கார். $ ஐக் காணவில்லை. கா/சு.சோபனா??? ம்ம்ம்ம்ம்ம்? யாருங்க அவர்?

  பதிலளிநீக்கு
 34. 2 வது படம் : அம்மாடியோவ் நீச்சல் போட்டி வேறயா? மனுஷங்களே இப்படித்தான் தாங்க செய்யறதெல்லாம் நாமளும் செய்யணும்னு படுத்துறாங்கப்பா...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. 3 வது படம் : நீதானே எந்தன் பொன் வசந்தம்....

  உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?

  கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா?!

  மூணு பாட்டின் இந்த வரிகளை லிங்க் பண்ணினா ஒரு சின்ன கதை!!! கிடைக்கும். ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் இருக்கட்டும். இந்தப் பாடலைப் பாடும்போது அந்தப் பெண் எல்லாப் பல்லும் தெரியச் சிரிப்பாளா? அப்போ அவ இந்தப் பசப்புப் பாடலை நம்பலைனு அர்த்தமா?

   நீக்கு
  2. ஹாஹாஹா நெல்லை அதுதான் அந்தக் கதையே....இதெல்லாம் சும்மா டுபாக்கூர்!! படங்கள் அதாவது சும்மா ஜாலியா நண்பர்கள் வட்டத்துக்குள் எடுப்பதுதானே!!

   கீதா

   நீக்கு
  3. அந்தப் பையன் சரியா நடிக்கலை அல்லது அவன் செய்கைகள் பார்த்து அந்த்ப் பெண் சிரிக்கிறாள் அம்புட்டுத்தான் நெல்லை!! அவங்களுக்குள்ளேயே "ஏய் நீ ஒரு பொண்ணுகிட்ட உன் காதலை சொல்லணும் எப்படிச் சொல்வேன்னு கலாய்ச்சிருப்பாங்க அவன் அதுக்கு இப்படி.....நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜமப்பா....எனக்கு இப்படம் சும்மா ஜாலி படம் போலத்தான் தெரியுது!!!!!

   கீதா

   நீக்கு
 36. தாய் தியாகி என்பது பழைய காலம்.
  இன்று அப்படி சொல்ல இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 37. எங்கள் வழக்கில் நாங்கள் பிறந்த வீட்டுடனேயே இருப்போம் இங்கும் சில பகுதிகளில் மாமியார் வீட்டில் இருக்கும் வழக்கம் உண்டு.

  அம்மா அப்பாவுடன் இருப்பதில் மனக்கஷ்டம் வர வாய்ப்பில்லை பிறந்ததில் இருந்து ஒரேபழக்க வழக்கம் என்பதால் பெண்ணுக்கு இலகுவாக இருக்கும் ஆணுக்கு வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் நிற்கும்நேரம் குறைவு வீட்டுப் பொறுப்பும் குறைவு இலகுவாக அஜஸ் பண்ணிவிடுவார்கள் என்பது என் கருத்து.

  படம் 1) பெப்சி இல்லாமல் என்ன சாப்பாடு?
  2) நீச்சல் போட்டிக்கு நாங்கள்தான் நடுவர்கள்.
  3) 'நீ சொன்னால் நிற்பேளடி.....

  பதிலளிநீக்கு
 38. பெண்ணை தாரை வார்த்துத் தரும்போது கோத்திரம் மாறும். இன்னாருடைய கொள்ளுப்பேத்தி (நஃப்த்ரி) இன்னாருடைய பேத்தி (பௌத்ரி) இன்னாருடைய புத்ரி எனச் சொல்லி (சொல்லும்போது சப்தமாகவே சொல்லுவார்கள். ஏனெனில் இதற்கு யாரும் ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என) அதே போல் பிள்ளைக்கும் சொல்லிப் பின்னர் இந்த வரனுக்கு என் பெண்ணைக் கன்யாதானமாகக் கொடுக்கிறேன் என அறிவிப்பார்கள். பெண்ணின் கைகளில் அம்மா/அப்பா பிடிச்சுக்க அப்பா பையரின் கைகளில் அம்மா நீர் ஊற்ற தாரை வார்த்துக் கொடுப்பார். இதே போல் மற்றத் தமிழர் (பிராமணரல்லாதோர்) திருமணங்களிலும் உண்டு. இதைப் பற்றிப் பதிவாகவே எழுதி இருக்கேன் சில ஆண்டுகள் முன்னர்."""""""


  very very valuable info. Thank you Geetha ma.

  பதிலளிநீக்கு
 39. படங்கள் அனைத்தும் சிறப்பு. முதல் படம் மிகவும் பிடித்தது.

  கேள்விகள் - முடிவில்லா கேள்விகள்! :)

  பதிலளிநீக்கு
 40. கேள்விகளும், பதில்களும் அருமை.
  படங்கள் எல்லாம் அருமை.

  கடைசி படம் என்னை எவ்வளவு பிடிக்கும் ? என்று கேட்கும் மனதுக்கு பிடித்தவளிடம் இவ்வளவு என்று கைகளை விரித்து பதில் சொல்கிறார் போலும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!