திங்கள், 7 பிப்ரவரி, 2022

"திங்க"க்கிழமை :  பீடர்ஸ்பர்க் பிரியாணி   - அப்பாதுரை    ரெஸிப்பி 

 

பீடர்ஸ்பர்க் பிரியாணி
அப்பாதுரை 

டிசம்பர் கடைசியில் என் நண்பர் குடும்பத்துடன் என்னைக் காண வந்திருந்தார். குடும்பம் என்றால் என் வட்டத்தில் இந்நாளில் இரண்டு பேர் என்று அர்த்தம். பிள்ளைகள் பறந்து விட்ட கூட்டம். வங்காள நண்பரும் அவர் மனைவியும் என்னுடன் சில நாட்கள் தங்க சிகாகோவிலிருந்து மிசௌரி கொலராடோ ஓக்லஹோமா என்று சாவதானமாக நாலு நாள் சுற்றுப்பயணத்தில் டெக்சஸ் வந்து சேர்ந்தார்கள். வரும் பொழுதே சாப்பிட என்ன வேண்டும் என்று சொல்லிவிட்டார் நண்பர். ஹௌராவிலிருந்து திப்யேந்தர மனோஹர் சாடர்ஜி, கரக்பூரிலிருந்து ப்ரீதி சுராபி சாடர்ஜி ஆகியோருக்காக உங்கள் விருப்பத்தின் அடுத்த சமையல்குறிப்பு இங்கே பதிவாகிறது. தேவையானவை (சர்க்கரை A1C அளவு ஏழுக்குள் இருக்கும் ஐம்பது வயதைக் கடந்த இரண்டு பேருக்கு):    கால் கப் பாஸ்மதி அரிசி (ஏழுக்கு மேல் A1C இருந்தால் இதைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும்)    காய்கறிகள் (உங்கள் இஷ்டத்துக்கு ஜமாயுங்கள் என்றாலும் இது என்னுடைய சமையல் குறிப்பு என்பதால் இவற்றை அவசியமாகக் குறிப்பிடுகிறேன்)       இஞ்ச் நீளத்துக்கு வெட்டிய இளசான பீன்ஸ் அரைக்கால் கப்       பச்சைப் பட்டாணி அரைக்கால் கப்       சிறிதாக நறுக்கிய சிவப்பு அல்லது வெள்ளை வெங்காயம் மற்றும் தக்காளி அரைக்கால் கப்       பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் அரைக்கால் கப்       பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி கலவை ஒரு டேபிள் ஸ்பூன்       புதிதாக இடித்த ஜீரகம் மிளகு ஏலக்காய் சோம்பு லவங்கம் தனியா பொடிக் கலவை ஒரு டீஸ்பூன்       புதிதாக இடித்த இஞ்சி பூண்டு கலவை அரை டீஸ்பூன்       வெந்தயம் அரை டீஸ்பூன் (வாசனைக்கும் உதவும் A1Cக்கும் உதவும்)       கரம் மசாலா கால் டீஸ்பூன் (பிடித்தால் அதிகம் சேர்க்கலாம்)       மிளகாய்ப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்       உப்பு ஒரு டேபிள் ஸ்பூன்       கட்டி வெண்ணை ஒரு சதுர இஞ்ச் அல்லது இரண்டு டீஸ்பூன் அல்லது உங்கள் தேவையைப் பொறுத்து       தயிர் கால் கப்       நல்லெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை ஒரு டீஸ்பூன்

சமையலை ரசிப்பவர்களுக்கான செய்முறை:     பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை கப் குடிநீரில் ஊற வையுங்கள். அகலமான சட்டி ஒன்றைச் சுடவைத்து அதில் வெந்தயத்தை வறுத்து, பொன்னிறமானதும் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியுடன் கலக்கவும்.பதினைந்து நிமிடமாவது ஊற வைத்த அரிசியை தனிப் பாத்திரத்தில் சாதமாகும் வரை வேக வையுங்கள். குக்கர் பயன்படுத்தினால் உங்களுக்கு சமைப்பதில் ரசனை இல்லை என்ற சந்தேகம் வரும். பாதிக்கு மேல் வெந்ததும் தண்ணீரை வற்றி சூட்டிலிருந்து அகற்றி அப்படியே மூடி வைக்கவும்.     இன்னொரு அகலமான சட்டியை மறுபடி சூடாக்கி நல்லெண்ணை விடவும். இடித்து வைத்த ஜீரகம் மிளகு ஏலக்காய் சோம்பு லவங்கம் தனியா பொடிக் கலவையை மிதமான சூட்டில் இலேசாக வறுக்கவும். இதில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து ஐந்து புரட்டல் புரட்டவும். இதில் அரை இஞ்ச் வெண்ணைக் கட்டியைச் சேர்க்கவும். உடன் இடித்து வைத்த இஞ்சி பூண்டு கலவையைச் சேர்த்துப் புரட்டவும். பிறகு பிற காய்கறிகளைச் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டவும். பிறகு மிளகாய் கரம் மசாலா உப்பு இன்னும் ஏதாவது விட்டுப் போயிருந்தால் சேர்த்துப் புரட்டவும். சூட்டிலிருந்து விலக்கி கடைசியாக தயிர் கால் கப் சேர்த்துப் புரட்டவும்.     அரிசிச் சட்டியில் காய்கறிக் கலவையைச் சேர்த்தாலும் சரி காய்கறிக் கலவையில் அரிசியைச் சேர்த்தாலும் சரி அல்லது மூன்றாவதாக ஒரு அகலமான சட்டியில் இரண்டையும் சேர்த்தாலும் சரிதான். (பாத்திரம் கழுவப்போவது நானா?)     அரிசியும் காய்கறியும் சேர்த்த சட்டியில் அரை கப் குடிநீர் சேர்த்து மூடி மிதமான சூட்டில் எட்டு நிமிடம் சமைக்கவும். மூடியை விலக்கி ஒரு கிளறு கிளறி சூட்டிலிருந்து அகற்றவும். மிச்சமிருக்கு வெண்ணையை அப்படியே போட்டு (இன்னொரு அரை சதுர இஞ்ச் வெண்ணை சேர்த்தாலும் சரிதான்) மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களில் சாப்பிடும் சூட்டில் பதமான பிரியாணி தயாராக இருக்கும். கொதிக்கக் கொதிக்க சாப்பிடுவோர் ஐந்து நிமிடங்கள் பொறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாப்பாட்டை ரசிப்பவர்களுக்கான செய்முறை:     நல்லெண்ணை/ஆலிவ் எண்ணை தவிர ஏனையவற்றை ஒரு குக்கரில் கொட்டவும். குக்கரை மூடி வேக வைக்கவும். இரண்டு விசில் வந்தால் அதிகம். அதற்கு முன்பே நிறுத்தி உடனடியாகவோ ஐந்து நிமிடம் பொறுத்தோ தட்டில் பரிமாறி ஒரு பிடி பிடிக்கவும்.     ஓ, நல்லெண்ணை/ஆலிவ் எண்ணையா? தலை கை காலில் தேய்த்துக் கொள்ளவும். வறட்டுத் தோலுக்கு நல்லது.

இரண்டு பேருக்கான மதியச் சாப்பாடு மேற்சொன்னது. மிச்சம் இருந்தால் இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம்.

அட, அதுவா? பிரியாணி படம் கைவசம் இல்லை. டிசம்பரில் செய்த பிரியாணி படத்துக்கு எங்கே போவது? கேஜிஜியின் வாட்சப் குறிப்பைப் பார்த்தவுடன் இப்போது எழுதிய குறிப்புக்கு இன்று செய்த ஸாலட் படம் சேர்த்தேன். பொன் வைக்குமிடத்தில் ஏதோ பூ வைப்ப்து போல பிரியாணி படம் வைக்கும் இடத்தில் சாலட் படம் வைத்திருக்கிறேன். பிரியாணிப் படப்பிரியர்கள் பொறுத்து அருள் பாலிக்கவேண்டும். (ஆமாம்.. இங்க என்ன சிக்கன் மட்டன் பிரியாணியா பாழாய்ப் போவுது? இதுவும் காய்கறி, அதுவும் காய்கறி. போவிங்ளா?) அப்புறம் இந்த பீடர்ஸ்பர்க், என் சமையற்கூடம் இருக்கும் இடம். அதான் பெயர்க்காரணம். போகிற போக்கில் இன்னொரு குறிப்பு. சமையலை ரசிப்பவர்கள் எல்லாவற்றையும் அரைப்பதில்லை என்று கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். இடிக்கிறார்கள். ஹிஹி. நானும். தமிழில் என்ன, ஆட்டுக்கல்லா? சொல் மறந்தே போன பொருள் பத்து டாலருக்குள் அமெசானில் கிடைக்கிறது, இரண்டு வருடமாக உபயோகிக்கிறேன். டீயிலிருந்து அனேக சமையலுக்கும் மசாலா இடிக்கிறேன்.

74 கருத்துகள்:

 1. அப்பாத்துரை சாரின் குறிப்புகள்னா சென்சார் ஆகியருக்குமோ என்று நினைத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன்.

  ஒருவேளை படத்தையே சென்சார் செய்துவிட்டார்களா இல்லை A1C என்பதால் பிரியாணியில் உள்ள பாஸ்மதியை மட்டுமா என்று யோசனை வந்தது

  பதிலளிநீக்கு
 2. அரைக்கால்கப் என்றெல்லாம் அளவு போட்டிருக்கீங்களே.... பிரியாணி மூவருக்குப் கோதுமா இல்லை, அதில் இருவர் பார்க்க மட்டும்தான் அனுமதியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹி.. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மிக அளவாக சமைப்பதில் தேர்ச்சி பெற்று வருகிறேன். அதனால் என்ன பலன்னு கேட்டீங்கனா ஒண்ணும் இல்லே, அளவோட சாதம் சாப்பிட்டா வேறே எதையாவது அளவுக்கு அதிகமா தின்று வைக்கிறேன்.

   நீக்கு
  2. என பெரியம்மா ஒருவர் மிக அளவோடு சமைப்பதில் வல்லவர். சிறு வயதில் அவர்கள் வீட்டுக்கு லீவுக்கு வா என்று வற்புறுத்துவார்கள். பயமாக இருக்கும். காரணம், அளவோடு அளந்து சாப்பாடு போடுவார்கள். தட்டில் கை வைத்த கணமே காலியாகிவிடும். பெரியம்மா வீட்டு மனிதர்களோ அதை இருபது நிமிடம் சாப்பிடுவார்கள். நான் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருப்பேன்.

   நீக்கு
  3. இந்த மாதிரி நம்ம ரங்க்ஸும் ஒருத்தர் கிட்டே அகப்பட்டுக் கொண்டு திண்டாடி இருக்கார். ராத்திரி சாப்பாட்டுக்கு வானு கூப்பிட்டுட்டு இரண்டே இரண்டு ஃபுல்கா, ஒரு கரண்டி சப்ஜி மட்டும் கொடுத்துட்டு அதை அவங்க ஒரு மணி நேரம் (குறைந்தது) சாப்பிட இவரோ ஒரே வாயில் போட்டுக் கொண்டுவிட்டுப் பின்னர் மேலே எதுவும் வராமல் முழிச்சிருக்கார். :)))) இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம். ஆனால் எனக்குத் தெரிஞ்சவரை இப்படித் தன் வீட்டில் அரைகுறையாய்ச் சாப்பிடுபவர்கள், சிக்கனச் சமையல் சமைப்பவர்கள் வெளியில் சாப்பிட நேர்ந்தால் வெளுத்துக் கட்டிடுவாங்க. நிறைய அனுபவம்.

   நீக்கு
  4. கீசா மேடம்...இதுக்கு அவங்க சாப்பிடக் கூப்பிடாமலேயே இருந்திருக்கலாம்.

   துபாய் போன புதிதில், நான் ஸ்வாகத் ஹோட்டலில் கூப்பன் வாங்கிக்கொண்டு சாப்பிடுவேன் (ஒரு வேளை சாப்பாடு 5.5 திர்ஹாம் வரும். கூப்பன் இல்லைனா 7 திர்ஹாம்). வெள்ளிக்கிழமைகளில் மாறுதலுக்காக குஜராத்தி மெஸ் செல்வேன். அன்றைக்கு அங்க ஜாமூன் அல்லது வேறு ஏதாவது ஸ்வீட் இருக்கும். சாப்பிடச் சென்றால், சப்பாத்தியோ சாப்பாடோ... நாமதான் போதும் போட்டுடாதீங்கன்னு சொல்லணும். இல்லைனா வந்துக்கிட்டே இருக்கும். ஸ்வீட்ஸும் எவ்ளவுனாலும் சாப்பிட்டுக்கலாம் (2005க்குப் பிறகு வாடகை மற்ற செலவுகளை அளவுக்கு அதிகமா ஏத்திட்டாங்க. அதனால அவங்களால தாக்குப் பிடிக்க முடியலை). பஹ்ரைனிலும் ஒரு நம்பூதிரி மெஸ்லயும், நாம் போதும் போதும்னு சொல்ற வரைல போடுவாங்க. ஆனா அதுக்கேத்த மாதிரி கஸ்டமர்களும் டீசன்சியை மெயிண்டெயின் செய்யணும். (என்னோட வேலை பார்த்த ஒருவன், நம்பூதிரி மெஸ்ஸில் சாப்பிட்டான். அவன் போனப்பறம் எங்ககிட்ட-அவருக்குத் தெரியாது அவன் என்னோட வேலை பார்க்கிறான்னு, அவர் சொல்றார், நானே நிறைய போடுவேன், ஆனால் இந்தப் பையன் 3 ஆள் சாப்பிடறதைச் சாப்பிடறார். சொல்லவும் ரொம்பவே தயக்கமா இருக்கு என்றார்).

   குஜராத்திகள் மாதிரி, நம்மிடம் விருந்தோம்பல் இல்லையோ?

   நீக்கு
 3. பொன் வைக்கும் இடத்தில் பூ என்பதுபோல் மத்தவங்க 75 சூர்ய நமஸ்காரம் செய்யும்போது எனக்கு இருபது தேறுமான்னு தெரியலை. அதிலும் இப்போ உள்ள யோகா லீடர், அடுப்பில் பாலைக் காய்ச்ச பாத்திரம் வைத்திருப்பதுபோல் தினமும் 10 சூர்ய நமஸ்காரத்தையே வேகவேகமாகச் செய்வதால் எனக்கு கொஞ்சம் சிரம்மாகவேறு இருக்கிறது. அதனால் சீக்கிரம் எழுந்ததால் எபிக்கு சீக்கிரம் வர முடிந்தது.

  மூளி பராத்தா கார்ர் மன்னிப்பாராக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே கதை இங்கேயும். மனதளவில் வெற்றி என்பார்களே, அது போல.

   நீக்கு
  2. நெல்லை அது சரி சூரிய நமஸ்காரம் ஃபாஸ்டா செய்யலாமா?

   நான் கற்ற வரையில் சூரிய நமஸ்காரம் வேக வேகமாகச் செய்யக் கூடாது அதன் பயன் போயே போச்!!! அது புஷப்ஸ் எக்ஸர்சைஸ் அல்ல. ஒவ்வொரு ஸ்டெப்பும் நல்லா மூச்சு உள்வாங்கி வெளியிட்டு அதை உணர்ந்து செய்ய வேண்டும். அதுதான் அதன் குறிக்கோளே! மூளையிலிருந்து கால பாதம் வரை ரத்த ஒட்டம் நன்றாக நடைபெறுவதற்கும் மெட்டபாலிஸம் சரியாக இருப்பதற்கும்.

   கீதா

   நீக்கு
  3. அப்போது இதோடு சேர்த்துச் சொல்ல இன்னொன்றும் விட்டுப் போய்விட்டது. சூரியநமஸ்காரம் என்பது மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் sync ஆகும் ஒன்று. அதனால்தான் யோகாசனத்தில் இது ரொம்ப முக்கியமாகக் கருதப்படுகிறது....மெட்டபாலிஸம் மற்றும் உடை குறைக்கவும் தான்

   ஆனா இதை செஞ்சுட்டு 1/4 கிலோ மைசூர்பா சாப்பிடக் கூடாதாக்கும்!!!! ஹாஹாஹாஹா நெல்லை என்னை அடிக்க வருவதற்குள் கீதா ஓடிக்கோ

   கீதா

   நீக்கு
  4. இன்று 56 செய்தேன்... நாளை உடம்பு தேறுமான்னு பார்க்கணும்.

   இங்க வளாகத்துல ஒரு பெண் மெதுவா சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தாங்க. அவங்கள்ட கேட்டேன் எவ்வளவு பண்ணறீங்கன்னு. தினமும் 52, ஆனால் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஸ்லோ மோஷன் மாதிரி செய்தாங்க.

   இங்க 1 மணி நேரம் யோகாவுல எல்லாம் கவர் பண்ணணும். அதனால கொஞ்சம் வேகமாப் போகுது. சூர்யநமஸ்காரம் வேகமாவும் செய்யலாம். மெதுவாச் செய்தால் பலன் அதிகம்னு தோணுது.

   நீக்கு
  5. //செஞ்சுட்டு 1/4 கிலோ மைசூர்பா சாப்பிடக் கூடாதாக்கும்// - அப்படியா கீதா ரங்கன்(க்கா)? எவ்வளவு சாப்பிடலாம்? நீங்க பாட்டுக்கு 1 கிலோன்னு எழுதிடாதீங்க. என்னால் அவ்வளவெல்லாம் சாப்பிடமுடியாது. அதிகபட்சம் 980 கிராம்தான் சாப்பிடமுடியும்.

   நாலு நாட்களுக்கு முன், என் அண்ணன் வர்றான்னு, மைசூர்பாக் பண்ணினேன். சாப்பிட்டவர்கள் சூப்பரோ சூப்பர் என்று சொன்னாங்க. எபிக்கு எழுத, தக்காளி புளியோதரை பண்ணலாம்னு நினைத்துள்ளேன். எப்போ செஞ்சு எப்போ எழுதப்போறேனோ

   நீக்கு
  6. பொதுவாகவே யோகாசனம் என்பது நிதானமாகத் தான் செய்யணும். வேகமாச் செய்வது உடல் பயிற்சியோடத் தான் சேரும். யோகாசனம் இல்லை. ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு நிலையில் கிட்டத்தட்ட 2 நிமிடம் பண்ணணும். ஒரு ஆசனம் முடிக்கக் குறைந்தது 5 நிமிஷம் ஆகணும்.

   நீக்கு
 4. பல வருடங்களுக்குப் பிறகு பிரியாணி அரிசியில் செய்த எள் சாதம் இரண்டு நாட்கள் முன்பு சாப்பிட்டேன்.

  பத்து வருடங்களுக்கும் மேல் துபாய், பஹ்ரைனில் பாஸ்மதி அரிடி, அதிலும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசி. பிறகு யாரோ அது உடலுக்குக் கெடுதல் என்று கொளுத்திப்போட, பாஸ்மதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

  அப்பாதுரை சார் செய்முறையையும் செஞ்சு பாத்துட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை பொதுவாக சர்க்கரை இருப்பவங்களுக்கு பச்சரிசி யூஸ் பண்ணினா கஞ்சி வடித்துச் சாப்பிடுவது நல்லது. ஸ்டார்ச்!!

   நான் புழுங்கரிசியே கூட கஞ்சி வடித்துதான் பயன்படுத்துகிறேன். கேரளா சிவப்பு மட்டை அரிசியையும் கஞ்சி வடித்துத்தான்

   ஸோ பாசுமதி யூஸ் பண்ணினா கஞ்சி வடிச்சிட்டுதான் செய்வது..அரிசி கொதிக்க விட்டு.முக்கால் பதத்தில தண்ணிய வடிச்சுரணும்

   கீதா

   நீக்கு
  2. இப்படி வடித்து சாப்பிட்டா சர்க்கரை குறையும்னு சொல்றாங்க. சொல்லிட்டு போகட்டும். சாப்பிடுற நமக்கு என்னவோ சர்க்கரை அப்படியே தான் இருக்குது. :-).

   நீக்கு
  3. ஹாஹாஹாஹா ஆமாம் அப்பாதுரைஜி!!!

   கீதா

   நீக்கு
  4. //பண்ணினா கஞ்சி வடித்துச் சாப்பிடுவது// உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா, கரி இருக்கா உமி இருக்கான்னு கேட்கற மாதிரி இப்போல்லாம் குக்கர்லயே கஞ்சி சேராம சாதம் செய்யும் குக்கர் வந்தாச்சாம். அறிவியல் போகும் வேகத்தைப் பார்த்தால், அம்மி, உரல் உபயோகிங்க, வெங்கலப்பானைல குமுட்டி அடுப்புல சாதம் பண்ணுங்க என்று அவங்களே விளம்பரம் தரும் அளவுக்கு வந்துடுவாங்க

   நீக்கு
  5. அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க.. இங்க கிரீன் லிவிங்னு ஒரு கும்பல்... மின்சாரம் கேஸ் அடுப்பினை பயன்படுத்தாமல் சமையல், மண்பாண்டங்கள் பயன்பாடு, அம்மி, குழவி, ஆட்டுக்கல் அப்புறம் அது என்ன கலுவமா அது.. துணி காய இயற்கை வெப்பம் அது இது என்று கிளம்பியிருக்கிறார்கள்.

   நீக்கு
  6. என் ரிலேஷன்ல ஒருத்தன் இப்படித்தான் வீகன் என்று இருக்கான். இந்த மாதிரி ஏமாளிகளின் தலையில் மிளகாய் அரைக்க என்று இதற்கென்றே உணவு டெலிவரி செய்கிறார்கள். சாப்பாட்டு ஒர்த் 10 ரூபாய் தேறாது, ஆனால் நிறைய ரூபாய் ஒரு வேளைக்கு வாங்கறாங்க. இதுல, ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது ஸ்நாக்ஸ் இலவசமா கொடுப்பதையே ஜென்ம சாபல்யம் அடைந்ததுபோல நினைச்சுக்கறாங்க.

   நானும் வீகன், ஆர்கானிக் உணவு என்றெல்லாம் ஆரம்பித்து ஏமாளிகளின் காசில் கல்லாக் கட்டிடவேண்டியதுதான்

   நீக்கு
 5. சூப்பர்! அப்பாதுரைஜி!!

  ஹப்பா அப்ப நான் சாப்பிடலாம்!!!! நானும் இந்த A1C தான் பார்ப்பது.

  ஆமாம் நானும் இடித்துப் போடுறது வழக்கம் ஹிஹிஹிஹி...அது மணம் சுவை நன்றாக இருக்கும் என்பதால்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஹிஹிஹிஹி...அது மணம் சுவை நன்றாக இருக்கும் என்பதால்// - அதுனாலயா இல்லை மெஷினை (ஃப்ரிட்ஜ், மிக்சி) உணவு தயாரிக்க உபயோகிக்கக் கூடாது என்ற பாலிசி காரணமாகவா?

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியும் மகிழ்வும் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா..ஏன் இந்த கீசா மேடம் மதிய வணக்கம் சொல்றதில்லை? எல்லாரும் மதியத்துல தூங்கிக்கிட்டிருப்பாங்க என்று நம்பறாங்களா?

   நீக்கு
  2. ஹாஹாஹா நெல்லை, மதிய வணக்கம்.

   நீக்கு
 7. செயின்ட் பீடர்ஸ்பர்க் இல்லையோ? போகட்டும். இந்தப் பதிவு நேத்திக்கே வந்துட்டதா என்னோட டாஷ்போர்டும் சொல்லுது, மெயிலிலும் வந்திருக்கு. இஃகி,இஃகி,இஃகி, அப்பாதுரையின் பிரியாணி செய்முறையும் நன்றாகவே இருக்கு. அதென்ன அரைக்கால் கப்? கால் கப் இருந்தால் சரியா வராதா?

  பதிலளிநீக்கு
 8. அப்பாதுரை ஆட்டுக்கல் என்னும் பெயரில் படத்தில் காட்டி இருக்கும் கலுவம் மருந்துகள் பொடி செய்ய, ஏலக்காய், இஞ்சி இடிக்கப் பயனாகும். மற்றபடி பெரிய அளவிலான சமையலுக்கு இன்னும் பெரிசாக இருக்க வேண்டாமோ? இதை நாங்க கலுவம் என்றே சொல்லுவோம். ஆட்டுக்கல் என்னிடம் இருக்கு. முடிஞ்சால் படம் எடுத்துப் போடறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலுவமா? இப்பத்தான் தெரிஞ்சுக்குறேன். நன்றி. மருந்து பொடி செய்யனு சரியா சொன்னிங்க. நான் தான் தமிழ் தெரியாம ஆட்டுக்கல்னு சொல்லிட்டேன்.
   கலுவம் தமிழ் சொல் தானா?

   நீக்கு
  2. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D// விக்கி சொல்லும் பொருள்.
   https://agarathi.com/word/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D அகராதி கொடுக்கும் பொருள். கலுவம் என்றாலே மருந்து அரைக்கப் பயன்படுத்தும் குழிவான கல் என்றே பொருள்.

   நீக்கு
  3. கீதாக்கா இடிக்கும் சின்ன உரல் கல்லிலேயே கிடைக்கிறதே. கனமான உரல் எவர்சில்வர் கோட்டிங்க்??? அதுவும் இருக்கிறதே இரண்டுமே இருக்கு வீட்டில். நான் இப்போது இருக்கும் வீட்டில் ஆட்டுக்கல்/கல்லுரல் இருக்கிறது அடுக்களையில் தரையில் பதித்து. குழவியும் எளிதாக இருப்பதால் அதில் தட்டி அரைத்து என்றும் அவ்வப்போது செய்வதுண்டு

   கீதா

   நீக்கு
  4. என்னிடம் இருக்கு தி/கீதா. நேரம் கிடைக்கையில் படம் எடுக்கிறேன். எவர்சில்வர் கோட்டிங் இல்லை. முழுக்க எவர்சில்வரிலேயே எங்க பெண் வாங்கி வைச்சிருக்கா. கர்நாடகம், ஆந்திரா எல்லா ஊர்களிலேயும் வாடகை வீடுகளில் ஆட்டுக்கல், அம்மி பதித்திருப்பார்கள். அதே போல் வெந்நீர் அண்டாவும் அடுப்போடு போட்டு வைச்சிருப்பாங்க. இப்போல்லாம் தெரியலை. அண்ணா ஹோசூரில் இருந்தப்போ அங்கே பார்த்திருக்கேன். அதே போல் நாங்க சிகந்திராபாதில் இருந்தப்போவும் சில வாடகை வீடுகளில் இருந்தன. ஆனால் நாங்க இருந்த வீட்டில் இல்லை என்பதால் சென்னையிலிருந்து வரவழைச்சோம்.

   நீக்கு
 9. இந்தப் படம் வாட்சப்பில் எ.பி.குழுமத்தில் வந்திருந்ததா? என்னடாப்பா, அன்னிக்கு சாலட் என்று சொன்னாரே, இன்னிக்கு பிரியாணினு போட்டிருக்காரேனு யோசிச்சேன். அப்பாதுரையே பதிலும் சொல்லிட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை சொல்லணும்னா எனக்கெல்லாம் சாலட் தான் லாயக்கு. நம் சமையல் எல்லாம் சமையல், சமையலுக்கு முன் சாப்பிடு முன் சாப்பிட்ட பின் என்று சுத்தம் செய்யவே அதிக நேரம் எடுக்கின்றன (உப்மா உள்பட).

   நீக்கு
  2. உளவியல் ரீதியா, சாலட் சாப்பிடறவங்க, முன் ஜென்ம வாசனை இன்னும் போகாதவங்க என்று சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கறீங்க?

   நீக்கு
 10. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஆரோக்கியம் சூழ வாழ இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. A1C பிரியாணி பதிவு சூப்பர்ப்.

  அதுவும் துரை!! (அரைக்கால் கப் அளவு!!ஹா ஹா.)

  இதற்கும் தனித் திறமை வேண்டும். அதுவும் இடித்துப் பொடித்து
  செய்த உணவு நல்ல வாசனையாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஃப்ளாரிடா வாச்சே:)

  ஸோ இது வெறும் பீட்டர்ஸ்பர்க் ஆகத் தான் இருக்கணும் கீதாமா.

  இதுவரை கஞ்சி வடித்ததில்லை.
  குக்கர் ஐந்து நிமிடத்தில் செய்து விடுகிறது ஸ்மார்ட் குக்கர்.

  எல்லாவற்றையும் தயார் செய்து உள்ளே
  போட்டால் புலாவ் தயார்.

  பதிலளிநீக்கு
 13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 14. அடேங்கப்பா...
  நாளைக்கு வரவிருக்கும் மர்மத்தை விட தூக்கலாக இருக்கின்றதே!..

  பதிலளிநீக்கு
 15. வல்லியம்மா சொல்கின்ற மாதிரி எல்லாவற்றையும் தயார் செய்து உள்ளே
  போட்டால் புலாவ் தயார்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குப் பேர் புலாவா இல்லை கதம்ப சாதமா இல்லை களிகஞ்சியா?

   நீக்கு
 16. சமையலை ரசிப்பவர்களுக்கான செய்முறை: 1

  சாப்பாட்டை ரசிப்பவர்களுக்கான செய்முறை:2

  ஓ ஓகே. புரிகிறது.:)

  இத்தனை அருமையாக துளி வெண்ணெய் மட்டும் சேர்த்து சமைப்பது

  மிக அற்புதம். பாஸ்மதி ,குக்கரில் செய்வதை விடுத்து
  திறந்த பாத்திரத்தில் செய்வதே உத்தமம்.
  மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  இங்கேயும் கலுவம் இருக்கிறது. இஞ்சி மசாலா டீ,
  மசாலா பொடி எல்லாவற்றுக்கும் அது உபயோகமாகும்.

  பதிலளிநீக்கு
 17. ஒரு சந்தேகம். பிரியாணிக்கும் புலாவிற்கும் வித்யாசம் என்ன?

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரியாணிக்கும் புலாவிற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் இப்ப எல்லாரும் எல்லாத்தையும் ரெண்டையும் மிக்ஸ் செஞ்சு பேர் சொல்லிக் குழப்பி...ஹிஹிஹி...எப்படினாலும் எல்லாம் வயித்துக்குள்ளதானே போயி மிக்ஸ் தானே ஆவப் போவுது!!!!! விடுங்க!!

   கீதா

   நீக்கு
  2. என்னைப் பொறுத்த வரை/எனக்குத் தெரிஞ்ச வரை பிரியாணி என்பது தென்னிந்திய முறைப்படியானது. ப.மி.கொ.ம.இஞ்சி, (விரும்பினால் பூண்டு) இவற்றோடு மசாலா சாமான்களும் மிகக் கொஞ்சமாகச் சேர்ப்பாங்க. இதை அரைத்ததும் தேங்காய், முந்திரி விழுது தனியா அரைச்சுப்பாங்க. தக்காளி ப்யூரி அல்லது தக்காளி+வெங்காயம் அரைத்தது வைச்சுப்பாங்க. பிரிஞ்சி இலை போட்டு நெய்யில் வதக்கிக் காய்களை நெய்/வெண்ணெயில் வதக்கிக் கொண்டு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதுகளையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டு தேவையானால் மி.பொ./மல்லிப் பொடி சேர்த்து இதிலேயே அரிசியையும் சேர்த்து வறுத்துக் கொண்டு பாஸ்மதி அரிசின்னால் ஒரு கிண்ணம் அரிசிக்கு ஒரு கிண்ணம் வெந்நீர் சேர்த்துக் குக்கரில் வைத்து ஒரே விசில் அல்லது ரைஸ் குக்கரில் வைக்கலாம்.

   நீக்கு
  3. புலவு எனில் எல்லாவற்றையும் வறுத்தே சேர்ப்பார்கள். இதில் மசாலாப் பொடிகளே அதிகம் பயன்பாட்டில் இருக்கும். புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள் சேர்ப்பார்கள். பிரியாணிக்குச் சிலர் தயிர் சேர்ப்பார்கள். எலுமிச்சம்பழம் பிழிவதும் உண்டு. ஆனால் புலவில் அவை இருக்காது. கொஞ்சம் காரம் தூக்கலாகவே இருக்கும். ஃப்ரைட் ரைஸ் என்றாலும் எல்லாப் பொடிகளோடும் காய்களை வேகும்வரை வதக்கிக் கொண்டு சமைத்த சாதத்தைச் சேர்ப்பதைச் சொல்கிறார்கள்.

   நீக்கு
 18. HbA1c test எடுத்து பார்த்து விட்டு, இதை செய்ய முயற்சிக்க வேண்டும்... ஆமாம் ஏழுக்குள் இருந்தால் நல்லது என்று யார் சொன்னது...? (மூன்றுக்குள் கொண்டு வந்துள்ளேன் - ஒரு காலத்தில்...)

  அப்புறம் வறட்டுத் தோலுக்கான குறிப்பு அருமை + ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 19. சுவாரசியமான சமையல் குறிப்பு - வித்தியாசமானதும் கூட. செய்து பார்க்கும் யோசனை இல்லை. :)

  பதிலளிநீக்கு
 20. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இன்றைய திங்களில் பிரியாணி ரெசிபியை வார்த்தைகளால் அலங்கரித்த முறையை ரசித்தேன். செய்முறைகள் கச்சிதமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 22. எனக்கு சாப்பாட்டை அளவாக பண்ண மாட்டேன் எப்போதும் சற்று அதிகமாக பண்ணுவேன் அதுவும் வீட்டிற்கு நண்பர்கலை கூப்பிட்டால் வழக்கத்திற்கும் அதிகமாகவே பண்ணுவேன். சாப்பாடு மேஜையில் அதிகம் இருந்தாலே நன்றாக சாப்பிட்டது போல ஒரு எண்ணம் எனக்கு உண்டு. அப்படி இல்லாமல் குறைத்து சமைத்தால் சாப்பிட்ட திருப்தி இருக்காது. அதிம சமைத்து மிஞ்சினால் போகும் போது நண்பர்கள் அதை சந்தோஷமாக எடுத்து செல்வார்கள்

  சாப்பிடும் போது A1cயை பற்றி நினைக்க கூடாது....

  பதிலளிநீக்கு
 23. பீட்டர்ஸ்பர்க் பிரியாணி - புதிய பெயரில் பழைய பிரியாணி. புதிதாக இடித்த மசாலா கலவை, புதிதாக இடித்த இஞ்சி, பூண்டு விழுது... கடையில் வாங்குவது ஆகாதா? நீங்கள் தயிர் சேர்க்கிறீர்கள், என் மகள் காய்கறிகளை தயிரில் ஊற வைத்து சேர்க்கிறாள்.

  பதிலளிநீக்கு
 24. @ ஜெயகுமார் சந்திரசேகர்..

  // ஒரு சந்தேகம். பிரியாணிக்கும் புலாவிற்கும் வித்யாசம் என்ன?..//

  முதலில் புலாவ்!..(ஆவ்!..)

  புலால் எனும் வார்த்தையைத் அடித்துத் துவைத்து காயப் போட்டு எடுத்ததால் - புலவு..

  புலவு என்பதே பின்னாளில் -
  புலாவ்!.. (ஏவ்!..)

  (புலால்) இறைச்சி வகையறாக்களுடன் புலவிய (புழுங்கிய) செவ்வரிசிச் சோற்றை மாந்தி விட்டு பூங்கொடிப் பாவையருடன் குலவியவர்கள் நம்மவர்கள்..

  புறநானூற்றில் புலவு பேசப்படுகின்றது..

  பண்டைத் தமிழகத்துக்கும் அரபு தேசங்களுக்கும் அன்றைக்கு தொடர்பு இருந்திருக்கின்றது..

  குறைந்த நீரை வைத்துக் கொண்டு நிறைவான உணவு தயாரிக்கும் முறை அரபுகளுக்கு பிடித்துப் போனது - இப்படியே தான்..

  இந்தப் புலவு தான் வடக்கே மொழி மாற்றத்தால்
  "பிர்யாணி" (பிரியாமணி/பிரியாணி அல்ல) என்றானது..

  இன்றைக்கும் அரபு தேசங்களில் புலாவ் என்பதை விட பிர்யாணி என்பதே சொல் வழக்கு..

  புலாவ் ( பிர்யாணி) இதில் எத்தனை எத்தனையோ வகைகள்..

  ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு வீட்டுக்கு வீடு ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்..

  எனக்கே பத்து வகைகளுக்கு மேல் தெரியும் (வாவ்!..) ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு வீட்டுக்கு வீடு ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்..//

   அதே அதே துரை அண்ணா

   கீதா

   நீக்கு
  2. புதன் அன்று பதிலாக வரவேண்டியதை இன்றே ஒரு பதிவு அளவிற்கு எழுதி விட்டீர்கள். என்றாலும் என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. நான் பார்த்த வகையில் மிளகாய்ப்பொடி மல்லிப்பொடி இல்லாமல் பிரியாணி போல் செய்வதை புலாவ் என்று கூறுகிறார்கள். அந்த பதிலும் திருப்தி படுத்தவில்லை. 

   நாளை என்ன மர்மமோ?

   Jayakumar

   நீக்கு
  3. //ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு வீட்டுக்கு வீடு ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்..//

   பச்சை மிளகாய், தேங்காய்ப் பால், ஏலக்காய் மற்றும் அதன் தோழிகளை வைத்துக் கொண்டு கூட பிர்யாணி (புலவு) செய்யலாம்..

   நீக்கு
  4. ஆனால் ஒன்று. புலாவில் அசைவம் சேர்ப்பதில்லை. காய்கள் மட்டுமே. அசைவ புலாவ் இதுவரை கண்டதில்லை.

    Jayakumar

   நீக்கு
  5. புலாவ், வெஜிடபிள் பிரியாணி, குர்மா, பரோட்டா - இவை எல்லாமே.... நான் வெஜ் சாப்பிட ஆசைப்பட்டவர்கள், காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்ட வெஜிடபிள் டிஷ் என்பது என் எண்ணம். மூன்றாம்சுழி வந்துதான் இதனை க்ளாரிஃபை பண்ணணும்.

   நீக்கு
 25. @ கீதா..

  // பிரியாணிக்கும் புலாவிற்கும் வித்தியாசம் உண்டு... //

  இல்லை.. இல்லை..

  புலால் கலந்த சோறு தான் புலவு.. புலவு என்கிற பெயர் தான் பிர்யாணி என்றாகி விட்டது..

  அதெல்லாம் போட்டிருந்தால் இது.. இதெல்லாம் சேர்த்திருந்தால் அது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படீல்லாம் சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க. உங்க தொடர்கதையிலேயே இதனைச் சேர்த்துவிட்டுடுங்க துரை செல்வராஜு சார்.

   நீக்கு
 26. @ ஜெயக்குமார் சந்திரசேகர்..

  // ஆனால் ஒன்று. புலாவில் அசைவம் சேர்ப்பதில்லை. காய்கள் மட்டுமே. அசைவ புலாவ் இதுவரை கண்டதில்லை.. //

  புலால் (இறைச்சி) வாடை தான் புலவு.. ஊனின் நாற்றம் புலவு..

  இறைச்சி கலந்த சோறு சங்க காலத்தில் 'ஊன் துவை சோறு' எனப்பட்டிருக்கின்றது..

  " புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை கறிசோறு உண்டு.. " (கபிலர் - புறம்:14:12- 16)

  இணையத்தில் தேடிப் பார்த்துக் கொள்ளவும்...

  புலவு சோறு தமிழ் மன்னர் மக்களுடையது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

  புறநானூற்றின் வரிகளை மட்டும் இணையத்தில் இருந்து தேடிக் கொடுத்துள்ளேன்..

  மற்றபடி - இது எனக்கு பள்ளி நாட்களிலேயே தெரியும்.. காரணம் - அன்றைய தமிழாசிரியர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலவு வரும் நேரத்தில் புலவு உண்டு உலவுகின்ற மன்னா! உங்கள் அலவுக்குக் காரணம் அவளின் அளவா இல்லை அழகா? - ன்னு இனி சரித்திர நாவல் எழுத ஆரம்பித்துவிடவேண்டியதுதான்

   நீக்கு
  2. நெல்லை சார். இதையே வார்த்தைகளை மடக்கிப் போட்டு ஒரு புதுக் கவிதை ஆக்கி விடுங்கள்.

   Jayakumar

   நீக்கு
  3. வாவ்.. சற்றும் எதிரே பாராத நுணுக்கம். புலாவ் என்பது இந்துஸ்தானி என்றே நினைத்தேன்.

   நீக்கு
 27. பீடர்ஸ்பர்க் பிரியாணி செய்முறை குறிப்பு மிகவும் அருமை.
  செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!