திங்கள், 28 பிப்ரவரி, 2022

"திங்கக்கிழமை : பச்சை மஞ்சள் ஊறுகாய் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 

இப்போதே இங்கே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது.  சில நாட்களாகக் காணாமல் போன சூரியன் இப்போது முழு வீச்சில் வரத் தொடங்கி விட்டான்.  காலை மட்டும் சீக்கிரம் எழுந்துக்க (எனக்கு மட்டும் இல்லாமல்) சூரியனுக்கும் சோம்பல்! ஹிஹிஹி, நான் எழுந்துக்க இப்போதெல்லாம் ஐந்து மணி, ஒரு சில நாட்கள் ஐந்தரை என ஆகி விடுகிறது.



 ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது.  பல ஊறுகாய்களையும் ஏற்கெனவே பார்த்து விட்டோம்.  ஆனால் மஞ்சளில் ஊறுகாய் பார்க்கவில்லை.  இதுவும் கொஞ்சம் வெஜிடபிள் ஊறுகாய் மாதிரித் தான் என்றாலும் காய்களைச் சேர்க்காமல் மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, எலுமிச்சை, பச்சை மிளகாய் இவற்றை மட்டுமே வைத்துப் போட வேண்டும்.



நான் இதற்கு என மஞ்சள் வாங்கவில்லை.  சங்கராந்திக்கு வாங்கிய மஞ்சள் கொத்தில் கிடைத்த மஞ்சள் கிழங்குகளே போதுமானவையாக இருந்தன.   வாங்க வேண்டுமெனில் எல்லாமும் ஐம்பது கிராம் வாங்கவும். அதற்கு மேல் வேண்டாம்.  ஐம்பது கிராமே ஒரு பெரிய பாட்டில் நிறைய வரும். பச்சை மிளகாய் ஐம்பது கிராமில் பாதி போதும்.  அல்லது ஒரு பத்து மிளகாய் இருந்தால் போதும்.  ஏனெனில் மிளகாய்த் தூள் வேறே சேர்க்க வேண்டும்.  இப்போது தேவையான பொருட்கள்:

பச்சை மஞ்சள் தோல் சீவித் துண்டமாக  நறுக்கியது  - ஒரு கிண்ணம்

இஞ்சி அதே போல் தோல் சீவித் துண்டமாக நறுக்கியது - அரைக்கிண்ணம்

மாங்காய் இஞ்சி (பிடித்தமானவர் சேர்க்கவும், இங்கே எனக்குக் கிடைக்கவில்லை;  திருச்சி போகணும்>)  நறுக்கியது     --- அரைக் கிண்ணம்

எலுமிச்சை  பெரிதாக இருந்தால் ஐந்து பழம்.   சின்னதாக இருந்தால் பத்துப் பழம்

பச்சை மிளகாய்  காரத்தைப் பொறுத்துப் பத்து அல்லது பதினைந்து இரண்டாக நறுக்கவும்.  பெரிய பச்சை மிளகாய் எனில் மூன்றாகக் கூட நறுக்கலாம்.  நறுக்கிய பச்சை மிளகாய்   அரைக் கிண்ணம்



கொஞ்சம் வேர்க்கடலை பச்சையாக பச்சைப்பட்டாணி கொஞ்சம், விரும்பினால் மாங்காய். எனக்கு இம்முறை மாங்காய் இஞ்சி கிடைக்காததால் மாங்காயையே போட்டுவிட்டேன். 

உப்பு தேவையான அளவு

பெருங்காயத் தூள்  அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்  அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள்  3 டீஸ்பூன்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

கடுகு, வெந்தயப் பொடி  ஒரு டேபிள் ஸ்பூன்

  ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு மஞ்சள், இஞ்சி,மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும். மாங்காய், எலுமிச்சை, வேர்க்கடலை, பட்டாணி ஆகியவற்றை வதக்காமல் சேர்க்கவும். 






























வதக்கியதில் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்துச் சேர்த்துக் கலக்கவும்.  மீதம் உள்ள எண்ணெயைச் சுட வைத்துப் பின் ஆற வைத்துச் சேர்க்கவும்.  வெளியில் வைத்தால் இரண்டு நாட்களும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரமும் இதை வைத்திருக்கலாம். வதக்காமல்  பச்சையாகவே எலுமிச்சைச் சாறு உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்தும் வைத்துச் சாப்பிடலாம்.


கொஞ்ச நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் மேற்சொன்னபடி நறுக்கிய காய்களைக் கலந்து கொள்ளவும். எலுமிச்சையைப் பொடித்துண்டமாக நறுக்கிச் சேர்க்கவும்.  சின்னதாக இருந்தால் ஆறு எலுமிச்சையையும், பெரிதாக இருந்தால் மூன்று எலுமிச்சையையும் நறுக்கிச் சேர்க்கவும்.  மீதம் உள்ள எலுமிச்சையில் சாறு எடுத்துக் காய்களோடு கலக்கவும். இவற்றோடு மாங்காய் ஒரு மாங்காயை நறுக்கிச் சேர்க்கவும் ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி ஒரு கைப்பிடி வேர்க்கடலை ஆகியவற்றை நன்கு கழுவி இவற்றோடு சேர்க்கவும்.   உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கடுகு, வெந்தயப் பொடி ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.


அடுத்த நாள் கொஞ்சம் நீர் விட்டிருக்கும்.  கிளறி விட்டு விட்டு நல்லெண்ணெயைக் காய வைத்து ஆற விட்டு ஊறுகாயில் சேர்க்கவும்.  வினிகர் வாசனை பிடித்தமெனில் White Cooking Vinegar வாங்கி ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டீஸ்பூன் சேர்க்கவும்.  இதை வெளியேயே வைத்திருக்கலாம்.  வினிகர் ஊற்றுவதால் சீக்கிரம் கெடாது.  எங்களுக்கு வினிகர் வாசனை பிடிக்காது. பொதுவாக ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது இல்லை.  ஆனால் இந்த ஊறுகாய் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.  ஆகவே இந்த ஊறுகாயை மட்டும் எண்ணெய் ஊற்றிக் கிளறி விட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் சாப்பிடும் முன்னர் வெளியே எடுத்து வைத்து விட்டுப் பயன்படுத்துவோம்.  சப்பாத்திக்குக் காய்கள் ஏதும் பண்ணவில்லை என்றாலோ, ஆலு பரோட்டா, முள்ளங்கி பராட்டா, தேப்லா போன்றவற்றுக்கோ நல்ல துணை.  

67 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும் அஹமதாபாத்இலிருந்து. இப்போதான் அடைந்தோம். பஸ் விட்டு இறங்கப்போறோம்

    பதிலளிநீக்கு
  2. சீசன் போது எழுதி அனுப்புவதை சீசன் முடிந்து பல மாதங்கள் கழித்து வெளியிடுவது எபியின் வழக்கம். ம ஊறுகாய் விஷயத்தில் கீசா மேடம் தான் தா தா தா தாமதமா அனுப்பினாங்களோ ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒரு டவுட் - பச்சை மஞ்சள் என்ன நிறத்தில் இருக்கும்? (கீ சா மே சமீபத்தில் அனுப்பிய ரெஸிபிதான் !! )

      நீக்கு
    2. பச்சைப் பொய், பச்சை பச்சையா பேசறான்.... எல்லாமே ஒரே நிறமோ? ஹிஹி.. புது மஞ்சள் மாதிரி நிறம்தான்

      நீக்கு
    3. இங்கே பச்சை மஞ்சள் இன்னமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லைக்கு மஞ்சள் பருவம் முடிஞ்சுடுத்துப் போல! :))))))

      நீக்கு
    4. @கௌதமன், "பச்சை" மஞ்சள் என்பது இந்த இடத்தில் நிறத்தைக் குறிப்பிடாது.காய வைக்காத மஞ்சள்.புழுக்கிக் காய வைப்பது குண்டு மஞ்சள்/மஞ்சள் கிழங்கு.

      நீக்கு
  3. கீசா மேடத்தை நம்பி பச்சை மஞ்சளை ஒரு மாசமா மண் தொட்டியில் வச்சிருக்கேன். மாங்கா சீசனுக்கு ரெண்டு மாசம் இருக்கு. இப்போ கிலோ நூறு ரூபாய். இஞ்சி இப்போ கிலோ நாப்பதுதான். என் கவலையைப் பத்தி திபதிவு எழுதறவங்க ஏன் கவலைப்படப் போறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, ஒரு மாசத்துக்கு முன்னேயே பச்சை மஞ்சளில் ஊறுகாய் போட்டிருக்கணுமே! நான் பொங்கல் கழிஞ்சதுமே போட்டுட்டேன். மாங்காய்ப் பருவம் வரை ஏன் காத்திருக்கணும். நிதானமாக ஒரு மாங்காய் இருந்தால் போதும். அல்லது மாங்காய் இல்லாமலும் மாங்காய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம். சும்மா நொ.கு.ச.சா. :))))))))

      நீக்கு
  4. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
    சிலர் ஊறுகாயை ஃப்ரிட்ஜில் வைக்கிறார்களே.. இது சரியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான். அவங்களுக்கு அப்போப்போ கிளறி வெயிலில் வைத்து எடுக்க சௌரியப்படலைனா அல்லது நாள்பட நிற்கும் ஊறுகாயா இல்லைனா

      நீக்கு
    2. ம்ஹூம், வேண்டாம் கில்லர்ஜி! அதுவும் எலுமிச்சை ஊறுகாய், ஆவக்காய் மாங்காய் போன்றவை வெளியேயே இருந்தால் நல்லது. ஆனால் கவனமாகப் பாதுகாக்க வேண்டாம். சாப்பிடும்போது ஊறுகாய் தேவை எனில் சின்னக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அப்படியே சாப்பிடும் கைகளால் ஊறுகாயைத் தொட்டால் உடனே இல்லாட்டியும் மறுநாளைக்குள்ளாவது ஒரு வாசனை வந்து விடுகிறது. இது பல வருஷ அனுபவத்தில் கண்டது. பொதுவாகவே ஊறுகாயைக் கிளறி விட்டாலும் சரி காலை வேளையில் குளித்துவிட்டு வந்த பின்னரே மொத்த ஊறுகாயையும் கிளறி விட்டு அன்றைய தேவைக்கானதை ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துக்கொள்ளலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களுக்குப் பதப்படுத்துவதற்காக அநேகமாய் வினிகர் சேர்ப்பார்கள். அப்படியும் அவையும் குளிர்சாதனப் பெட்டியில் தான் வைக்க வேண்டி இருக்கு.

      பி.கு. படங்கள் எல்லாம் கூகிளார் தயவு. ஹிஹிஹிஹி. நானாவது தெளிவாப் படங்களைப் போடுவதாவது! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. எனக்குத் தெரிஞ்சு குஜராத்/ராஜஸ்தான் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இன்னமும் இந்த வெயிலில் ஊறுகாயை வைப்பது என்பதைத் தொடர்கிறார்களா என்பது சந்தேகமே! இப்போல்லாம் கிராமங்களில் கூடப் பார்க்க முடிவதில்லை. ஆவக்காய் போடும் முன்னர் காயை வெட்டித் துடைத்து நிழலில் உலர்த்துவோம். கடுகுப் பொடிக்குக் கடுகையும், நல்லெண்ணெயையும் வெயிலில் காய வைத்துத் தான் சேர்ப்போம். உப்பை வெறும் வாணலியில் வெடிக்க விட்டு எடுத்துப்போம். இப்படியெல்லாம் செய்யறாங்களானு தெரியலை. மாவடுவைக் கூடக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுபவர்கள் உண்டு. ஒரு சிலர் ஃப்ரீஸரில் ஐஸுடனும் வைக்கின்றனர். மாவடு வெடுக்கென்று சுருங்காமல் இருக்கணும்னு காரணம் சொல்றாங்க. மாவடு சுருங்கினால் தான் எங்க பக்கமெல்லாம் நல்ல வடு என்போம். அதோடு வருஷக்கணக்காகவும் வரும். நான் போன மார்ச் மாதம் போட்ட மாவடு இப்போத் தான் போன மாசம் தீர்ந்த்து. வெளியே தான் வைச்சிருந்தேன். ஒரு வருஷம் நிறைய மாவடு போட்டிருந்ததால் அடுத்த வருஷம் வாங்காமல் முதல் வருஷத்து வடுவையே வைத்துக் கொண்டதும் உண்டு. வெளியே தான் வைப்போம்.

      நீக்கு
    4. //ஆனால் கவனமாகப் பாதுகாக்க வேண்டாம். // கவனமாய்ப் பாதுகாக்க வேண்டும். என்பது தவறாகப் பதிவாகி விட்டது. :(

      நீக்கு
  5. இந்தக் கீசா மேடத்துக்கு தான் ராஜஸ்தானில் இருந்தோம் குஜராத்தில் வாழ்ந்தோம் கௌஹாத்தியில் குடித்தனம் பண்ணினோம்னு காமிக்கறதுல அவ்வளவு மகிழ்ச்சி. நம்ம ஊரு இட்லி தோசை உப்புமான்னுலாம் ஞாபகத்துக்கு வந்தாலும் தேப்லா ஆலு பராந்தா மூலி (நம்ம ஊரு மூளி இல்லை) பரோட்டா இப்படி எழுதி சந்தோஷப்பட்டுப்பாங்க. படிக்கிற என்னைப்போன்ற எளியவங்களைப் பத்தி அவங்களுக்கு என்ன கவலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊரு மொழியிலே "மூளி"னா அர்த்தமே வேறேயாக்கும். எதுக்கு அதைச் சொல்லணும். அதோடு மூலி என்றால் முள்ளங்கினு சுலபமா எல்லோருக்கும் புரியறதே. நான் என்ன அம்பேரிக்காவில் இருந்து வந்து குதிச்சிருக்கேன்னா சொல்றேன். இந்தியாவுக்குள் தானே! ஆந்திராவில் சிகந்தராபாதில் கூட இருந்திருக்கோம்/ ஊட்டியில் இருந்திருக்கோம். அதை எல்லாம் சொல்லறதே இல்லையே! அதைக் கவனிங்க முதல்லே! :)))))

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதிய/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நிம்மதி பெருகப் பிரார்த்தனைகள். போர் விரைவில் நல்லபடியாக சுமுகமாக முடிந்து அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு நம் எல்லோருக்கும்
    தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மஞ்சள் நிறைய இருக்கிறது. நம் கீதாவுக்கு மஞ்சள் ஊறுகாய் போடத்தெரியும்னு போன வாரம் தான் சொன்னேன். வந்தேன் வந்தேன்னு இன்று உங்கள் செய்முறை வந்துவிட்டது.

    மிக மிக நன்றி கீதாமா.
    நல்ல பசு மஞ்சள் வாசனையாக இருக்குமே.
    அத்துடன் இத்தனை பட்டாணி, நிலக்கடலை என்று
    நல்ல ஜமா சேர்ந்திருக்கிறது.

    வினிகர் வாசனை தான் பிடிக்காது.
    ஃப்ரிட்ஜ்ல வைத்தால் போச்சு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே நான் கறைகளை நீக்கவே வினிகர் வாங்கி வைச்சிருக்கேன். குளிர்சாதனப் பெட்டி, அடுப்பு போன்றவற்றையும் வாரம் ஒரு நாள் வினிகரோடு விம் ட்ராப்ஸ் சேர்த்துத் துடைப்பேன். அதுக்குத் தான் வினிகரே!

      நீக்கு
    2. ஓ. வினிகரின் நல்ல பயன்கள் இருக்கின்றதே.
      இங்கே ஆனா ஊன்னா,
      இந்த கிருமி நாசினிதான் எல்லா வேலைக்கும்.

      நீக்கு
    3. ஆனால் மஞ்சளே ஒரு கிருமி நாசினி தான்.
      மஞ்சள் நலம் பெருகட்டும்.
      மனம் நிறைய நன்றி.

      நீக்கு
  9. நல்ல சமய சஞ்சீவியாக இந்தப் பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள் அன்பு கீதாமா.
    நம் தயிர் சாதத்துக்கும் நன்றாக இருக்கும் இல்லையா.

    இவ்வளவு ஆரோக்கியமாக ஒரு ஊறுகாய் கிடைத்தால்

    எவ்வளவு நலம்!!
    ரொம்ப அருமையாகச் சொல்லி விளக்கி இருக்கிறீர்கள்.
    வெறுமனயே சாப்பிடலாம் மாதிரி இருக்கிறது.

    சிறப்புப் பதிவாக மஞ்சள் ஊறுகாயைப்
    பார்க்கிறேன். மகளுக்கு செய்து கொடுக்கிறேன்.
    மனமார்ந்த நன்றி கீதாமா.
    பதிவிட்ட எங்கள் ப்ளாகுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரேவதி. ஏற்கெனவே பச்சை மஞ்சள் ஊறுகாய் போட்டுப் பதிவும் போட்ட நினைவு இருக்கு. தேடிப் பார்த்தேன். கிடைக்கலை. இப்போவும் போடலாம். அங்கே தான் வருஷம் பூராவும் பச்சை மஞ்சள் கிடைத்துக் கொண்டிருந்ததே. ஹூஸ்டனில் பையர் வாங்கி வருவார். தினம் காலை பச்சை மஞ்சளைத் தோல் சீவிக் கடித்து வெறும் வயிற்றில் சாப்பிடுவார்.

      நீக்கு
  10. ஊறுகாய் அசத்தல்!! கீதாக்கா....நானும் ஒவ்வொரு முறையும் இப்படி பொங்கலுக்கு வாங்கும் பச்சை மஞ்சளில் செய்வதுண்டு. இம்முறை கொஞ்சம் பொங்கலுக்கு வாங்கிய பச்சை மஞ்சள் ஊறுகாய் செய்தேன். ஒரு வகை இப்படி, ஆனால் பட்டாணி, நிலக்கடலை சேர்க்கவில்லை. சேர்த்ததும் இல்லை. மாங்காய், இஞ்சி சேர்த்தேன், ஆனால் இங்கு மா இஞ்சி கிடைப்பதில்லை. ரொம்பப் பிடிக்கும்.

    இப்படிக் கொஞ்சமும், நீர் நெல்லிக்காய், நீர் எலுமிச்சை போடுவது போலவும் கொஞ்சம் செய்தேன்.

    தொக்கு போன்று செய்யலாம் என்று நினைத்தால் இதற்கே சரியாகிவிட்டது. அந்த மூன்று நாட்கள் மட்டுமே பச்சை மஞ்சள் கிடைத்தது. அப்புறம் கிடைக்கவில்லை. இப்போது ஊறுகாய் போடுவது மகனுக்கு அனுப்ப மட்டுமே வெயிலில் உலர்த்தி...எனவே இது போடும் ஆர்வத்தில் கொஞ்சம் பச்சை மஞ்சளை மண்ணில் நட விட்டுப் போச்சு.

    நிலக்கடலை, பட்டாணி சேர்த்து உங்கள் மெத்தடிலும் செய்ய வேண்டும் ஆனால் அடுத்த முறைதான் முடியும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மா ஆவக்காய் ஊறுகாயில் கூடக் கொண்டைக்கடலை போடுவார். தனிக் கொண்டைக்கடலையை ஊறுகாய் போட்டாலும் ஆவக்காயோடு சேர்த்துப் போடுகையில் அந்த மாங்காய்ப் புளிப்பும், காரமும் இறங்கிக் கொண்டைக்கடலையில் ஊறிக்கொண்டு நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. அதோடு வெஜிடபுள் ஊறுகாய் எனில் பீன்ஸ், காரட், பச்சைப்பட்டாணி, பச்சை வேர்க்கடலை, காலிஃப்ளவர், டர்னிப் அல்லது நூல்கோல் போன்றவை போட்டுத் தானே பண்ணுகிறோம். தனி காலிஃப்ளவரிலும் ஊறுகாய் போடலாம். ஆனால் அதற்குப் பூண்டு நிறையச் சேர்ப்பாங்க. ஆகவே எங்களுக்குப் பிடிக்காது. அதுக்கெல்லாம் வெல்லம் தூள் செய்து சேர்ப்போம்.

      நீக்கு
    3. https://sivamgss.blogspot.com/2022/01/blog-post_25.html பச்சை மஞ்சள் தொக்கு இங்கே பார்க்கலாம்.

      நீக்கு
  11. புதுமையான குறிப்பு..
    பசு மஞ்சள் என்றுமே நல்லது நன்மையளிப்பது தான்..

    பசு மஞ்சள் என்றது பச்சை மஞ்சள் என்றாலும் அதன் செழுமையைக் குறிப்பது..

    மஞ்சள் இல்லாத வைபோகம் எதுவும் நம்மிடத்தே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மஞ்சள்/மஞ்சள் பொடி சேர்க்காமல் எதுவும் பண்ண மாட்டேன். தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்க எடுக்கும் நெல்லிக்காய்ச் சாறோடும் பச்சை மஞ்சள் துண்டு ஒரு அங்குல நீளம் தோல் சீவிச் சேர்ப்பேன். பச்சை மஞ்சள் பருவம் முடிந்து விட்டால் மஞ்சள் பொடி.

      நீக்கு
    2. இங்க பெண்ணும் இதை செய்வாள்.
      இயற்கை உணவு தான் எப்போதும்.

      ரொம்ப நன்றி கீதாமா.

      நீக்கு
  12. உலர்ந்த மஞ்சளை விரலளவுக்கு நம்முடன் வைத்திருந்தால் தீயன எதுவும் நம்மை நெருங்காது..

    அதைப் பற்றி நிறைய - நிறைய பேசலாம்..

    மஞ்சள் மஞ்சள் தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையவே இருக்கு வீட்டில். ஒரு திறந்த பெட்டியில் மஞ்சள் கிழங்குகளோடு வசம்பு சேர்த்து வைத்திருக்கேன். அப்படியும் வண்டு ஆங்காங்கே வரத்தான் செய்கிறது.

      நீக்கு
  13. ஊறுகாயில் கடலையும் பச்சைபட்டாணியும் சேர்ப்பதை இப்பொழுதுதான் கேள்விபடுகின்றேன்.. அடுத்த தடவை செய்யும் போது சேர்த்து செஞ்சு பார்க்கின்றேன்.. நல்லா இருந்தால் பாராட்டுக்கள் இல்லையென்றால் மோடிஜியை திட்டும் போது கீதாம்ம்மா கூட உங்களையும் சேர்த்து கொள்கின்றேன்


    நான் கடையில் ஊறுகாய வாங்குவதில்லை வீட்டிலே நானே செய்து கொள்வேன் அது போல ப்ரிஜ்ஜிலும் வைப்பதில்லை. நான் செய்ய்டும் ஊறுக்காய் கெட்டுவிடுமா இல்லையா என்று எனக்கு தெரியாது காரணம் அது கெட்டுப் போவதற்கு முன்பே காலியாகிவிடும் அல்லது வீட்டிற்கு வரும் நண்பர்கள் தூக்கி சென்றுவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹஹா, தாராளமாய்த் திட்டுங்க தமிழரே! எங்க பக்கம் (மதுரை) வைய வைய வைரக்கல், திட்டத் திட்ட திண்டுக்கல் என்போம்.

      நீக்கு
    2. //எங்க பக்கம் (மதுரை) வைய வைய வைரக்கல், திட்டத் திட்ட திண்டுக்கல் என்போம்// எங்கள் பக்கத்திலும் (சோழ தேசம்) இப்படி சொல்லித்தான் எங்களை நேற்று வார்கள்.

      நீக்கு
    3. அப்படியா? ஆனால் எனக்குக் கல்யாணம் ஆகி வந்தப்போ ஒரு சமயம் பேச்சின்போது நான் இதைச் சொன்னதும் என் மாமியார்/மாமனார் உள்பட அனைவருமே ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஒரு வேளை நீங்க திருச்சி என்பதால் தெரிஞ்சிருக்கலாம். திருச்சிக்காரங்க பாதி தஞ்சைப்பழக்கம்/மீதி மதுரைப்பழக்கம்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான விளக்கத்துடன் கூடிய குறிப்பு! விளக்கத்தைப்படிக்கும்போதே சாப்பிட்டுப்பார்க்க ஆசை வந்து விட்டது. ஊறுகாயை இப்போதைக்கு கண்ணாலாவது பார்க்கலாம் என்று ஸ்க்ரோல் செய்தால் ஊறுகாயைக்காணவில்லை. ஏமாற்றி விட்டீர்கள் கீதா!!
    பசு மஞ்சள் இங்கே துபாயில் கிடைக்கும். செய்து பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா, ஆமா இல்ல! ஶ்ரீராமுக்குப் படத்தை எடுத்து அனுப்பறேன்னு சொல்லிட்டு எனக்கு மறந்தே போச்சு. அவரும் அப்போவே ஷெட்யூல் பண்ணிட்டார் போல. எதுவும் கேட்கலை. உங்க கேள்வியைப் படிச்சுட்டுத் தான் அந்தக் குறிப்பிட்ட மெயிலைச் செக் செய்தேன். முடிஞ்சால் சாயந்தரத்துக்குள் படத்தை எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பிச் சேர்க்கச் சொல்றேன். :))))

      நீக்கு
    2. மன்னியுங்கள் மனோ. நேற்று இரவில் இருந்து வயிற்று உபாதை திடீரென அதிகரித்துவிட்டது. காலை எழுந்திருக்கவே முடியலை. வாசல் தெளித்துக் காஃபி போட்டுட்டுப் படுத்துட்டேன். பத்தரைக்குத் தான் எழுந்திருந்தேன். விரைவில் படம் எடுக்கிறேன். :(

      நீக்கு
  16. பச்சை மஞ்சள் ஊறுகாய் படங்களுடன் செய்முறை குறிப்பு நன்றாக இருக்கிறது.
    மா இஞ்சி ஊறுகாய் போட்டு இருக்கிறேன். மஞ்சளில் ஊறுகாய் செய்தது இல்லை.
    செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி, இங்கே ஒரு ஓட்டலில் மாங்கா இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்துத் தொக்குக் கிளறுகிறார்கள். நன்றாக இருந்தாலும் காரம் எங்களுக்குத் தாங்கலை. :(

      நீக்கு
  17. என்ன இன்னிக்குக் காத்தாடுதே? ஊறுகாய் என்பதாலா? "திங்க"ற ஐடம் எனில் கூட்டம் தானாகச் சேருமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பசு மஞ்சள் பாக்கெட்டில் ஸிலோன் கடைகளில் வந்து விட்டது. மாயிஞ்சி என வாங்கி வந்து விட்டார்கள். உங்களின் முந்தைய குறிப்பின்படி நாட்டுப் பெண்ணிற்கு செய்முறை சொன்னேன். அவளும் செய்தாள். மா இஞ்சி கிடைக்கவில்லை. வினிகரும் சேர்த்துச் செய்தாள். மஞ்சளின் அளவு சிறிதுதான். சேர்க்கை ஸாமான்கள் நிறைய இல்லையா? அந்த விழுதின் ருசி அவ்வளவு நன்றாக இருந்தது. தொக்கும் நன்றாகவே இருக்கும். ஃபிரிஜ்ஜில் வைத்துதான் இதைமட்டும் உபயோகப் படுத்தினோம். மாங்காய் குறிப்பிடவில்லை அதில். நல்ல உபயோகமான குறிப்பு. அன்புடன்

      நீக்கு
    2. நன்றி அம்மா. மாங்காய் இஞ்சி உங்க நாட்டுப் பெண் எந்த ஊரில் இருக்காங்கனு தெரியலை. அம்பா ஹல்தி என்றால் எல்லோருமே புரிஞ்சுக்கறாங்களே! நானும் இப்போப் பிள்ளை/நாட்டுப் பெண் இருக்கையில் குளிர்சாதனப் பெட்டியில் தான் வைச்சேன். எங்கேயானும் அவங்க பத்து/எச்சிலோடு கலந்துடுவாங்களோனு சந்தேகம். :))))

      நீக்கு
    3. இங்குதான் இங்கு நான் ஜெனிவா வந்த பிறகு நடந்த விஷயம் இது ஊறுகாய் மிகவும் நன்றாக இருந்தது என்பது எல்லோருடைய அபிப்பிராயமும் அன்புடன்

      நீக்கு
    4. ஓஓஓஓஓஓஓஓஓஓஓ! அங்கெல்லாம் கிடைக்குமா சந்தேகமே/ அம்பேரிக்காவில் (அமெரிக்கா ) ஹூஸ்டனில் அநேகமாய் எல்லாமுமே கிடைக்கின்றன. வாழைத்தண்டு, முருங்கைக்கீரை என! இதுவும் குஜராத்தி ஸ்டோர்ஸில் வந்திருக்கும். அம்பா ஹல்தி என்றால் கொடுப்பாங்க. ஊறுகாய்க்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன்றி. _/\_

      நீக்கு
  18. வித்தியாசமான ஊறுகாய்... விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  19. முதல் முறையாக கேள்விப் படுகிறேன். செய்து பார்க்க வேண்டும். பச்சைப் பட்டாணி, நிலக்கடலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே? ஜெல் ஆகுமா? இங்கே (கனடாவில்) கிடைக்கிறது. வாங்கி போட்டுப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, பானுமதி, நான் கிட்டத்தட்டப் பத்து வருஷங்களாக இந்த ஊறுகாய் பத்திச் சொல்லிண்டு இருக்கேன். எல்லாமே சரியாக ஊறிக் காரம், உப்புப் பிடித்துச் சாப்பிட நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  20. மத்தவங்க கொடுத்த கருத்துரைகள் தவிர அதற்கு பதில் என நான் நீட்டி முழக்கி இருப்பது தான் அதிகம். :)))))

    பதிலளிநீக்கு
  21. நல்ல விளக்கத்துடன் நல்ல குறிப்பு அழகாக தந்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  22. சுவையான ஊறுகாய் குறிப்பு. சாப்பிடத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!