சனி, 19 பிப்ரவரி, 2022

பாசிட்டிவ் - நான் படிச்ச கதை

 தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அத்தாபூர் 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில்' 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விஷாலினி, 7. இவர் தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள்.

விஷாலினி வெள்ள பேரிடர் காலங்களில் உயிர், உடைமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டை கண்டுபிடித்துள்ளார்.இதில், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு பொருட்கள் அடங்கிய பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ்., வசதி போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.  இக்கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசால் இவருக்கு இளைய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறுமி விஷாலினிக்கு பால புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி பாராட்டினார்.

=============================================================================================================================

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் அவர் கேரளா வந்துள்ளார்.

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, 2017ல் 39 வயதில், திடீரென மூளை ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும், பார்வை கிடைக்கவில்லை.

இந்தியாவின் ஆயுர்வேதத்தின் சிறப்பை அறிந்த ரெய்லா ஒடிங்கா, கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு மகளை சிகிச்சைக்காக அனுப்பினார். இங்கு 2019ல், ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பின் பார்வை மேம்பட்டதும், ரோஸ்மேரி கென்யா திரும்பினார். தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட அவருக்கு, இழந்த பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரோஸ்மேரி, கென்யா நாட்டின் தொலைகாட்சிகளில், இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறை, உணவு முறைகளால் தான் பார்வை பெற்ற விதத்தை விளக்கினார். முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவும், இந்தியாவின் மருத்துவ பாரம்பரியம் குறித்து பல இடங்களில் பெருமையுடன் பேசி வந்தார்.

இழந்த பார்வை மீண்டும் கிடைக்க காரணமான இந்திய மருத்துவத்தின் அற்புதத்தை பல உலக நாடுகள் உணர இது காரணமானது. தற்போது மகளுக்கு மேலும் மூன்று வாரம் சிகிச்சை பெற, ரெய்லா ஒடிங்கா குடும்பத்துடன் நேற்று முன்தினம் கூத்தாட்டுக்குளம் வந்தார். அவரை ஸ்ரீதரீயம் தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி, துணைத்தலைவர் ஹரிநம்பூதிரி, சி.இ.ஓ., பிஜூநம்பூதிரி ஆகியோர் வரவேற்றனர். மகளுக்கு பார்வை கிடைக்க காரணமான டாக்டர் நாராயணன் நம்பூதிரிக்கு, ரெய்லா ஒடிங்கா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்......

==========================================================================================================================

 

நான் படிச்ச கதை  

ஜெயக்குமார் சந்திரசேகர் 

------------------------------------------------------------------------------------

குழந்தையும் கவிதையும் - நகுலன்


ஆசிரியர் : நகுலன், இயற் பெயர் : துரைசாமி. (1921-2007) கும்பகோணத்தில் 1921இல் பிறந்து 1935 இல் திருவனந்தபுரத்தில்  குடியேறியவர். பிரம்மச்சாரி. MA தமிழ், MA ஆங்கிலம், Phd ஆங்கிலம் பட்டங்கள் பெற்றவர். புனித இவானியோஸ் கல்லூரி ஆங்கில பேராசிரியர் ஆக இருந்து ஒய்வு பெற்றவர். கா. நா. சு அவர்கள் இவரது உற்ற தோழர், ஆசான். இவர் கொஞ்சம் தத்துவ முறுக்கு உள்ளவர் என்று கூறப்படுகிறார். இவரது படைப்புகள் முதலில் சி சு செல்லப்பா நடத்திய “எழுத்து” என்ற பத்திரிக்கையில் வெளியாகின. இவரது கதைகள் கவிதைகள் நவீனத்துவ போக்கை கடைபிடிப்பவை. இவர் எழுதிய புதுக் கவிதை ஒன்று 


எனக்கு

யாருமில்லை

நான் 

கூட.

 மேலும் விவரங்கள் கீழ்க் காணும் சுட்டியின் இணைப்பில் காணலாம். 


https://ta.wikipedia.org/s/1afh


இன்றைய கதையை, கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு டைரிக்குறிப்பு என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். இது கணையாழி யில் வெளி வந்தது. ஆகையால் அதன்  தரம், தனித்துவம் போன்றவை உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.


இக்கதை அழியா சுடர்களில் இருந்து எடுக்கப்பட்டது. 


ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும் - நகுலன்
 


என் அறையில் இருந்தேன்.  அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது.  அதன் தாய்மொழி மலையாளம்.  அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.  கறுப்பிலும் கறுப்பு.  அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.

கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும்.  விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது

நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று.  அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி யின் ‘கிங்கிணிக் கவிதைகள் என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன்.  குழந்தை ஒரு கிராமத்தில் L.P. (LOWER PRIMARY) பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.

மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன்.  “படித்தேன் என்றது.  இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள் என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.  நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன்.  அது அதிலிருந்து ‘ஸைக்கிள் என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும் வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்தது. எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது.  அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன்.  குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.

1. ஜன்ம காரணி

            பாரதம்

            ஆஹா ஆஹா ஆஹா

            கர்ம மேதினி பாரதம்

            நம்மளாம் ஜனகோடிதன்

            அம்மையாகிய பாரதம்

            ஆஹா ஆஹா ஆஹா

(தாய் மண்ணே வணக்கம்!)

            2. பல பல நாளுகள்

            ஞானொரு புழுவாய்

            பவிழக் கூட்டில் உறங்கி

            இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே

            நாள்கள் நீங்கி

            அரளிச் செடியுடே

            இலைதன் அடியில்

            அருமக் கிங்கிணி போலே

            வீசுங் காற்றத்தில் இளகி விழாதே

            அங்கனே நின்னு

            ஒருநாள் சூரியன்

            உதிச்சு வரும்போள்

            விடரும் சிறகுகள்வீசி

            புறத்து வந்து அழகு துடிக்கும்

            பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)

            தளிராய் விடர்த்து வீசும்

            பனிநீர்ப்பூவில்

            படர்ந்து பற்றியிருந்னு .

            பூவில் துள்ளும் பூவதுபோலே

            பூத்தேன் உண்டு களிச்சு.

(வண்ணத்து பூச்சியின் உயிர்ப்பு)

அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.

எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு.  அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு.  வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள் என்றே சொல்ல வேண்டும்.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது.  ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன்.  ”அதற்கென்ன எழுதலாமே என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது.  ஒரு இசைவெட்டு.

ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.  சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரு நாள் அதன் ’அம்மூம்மா (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு என்று சொல்லிச் சிரித்தது.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்

குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிமி

            குமி

            உமிக்கரி

*********************

            நஞ்சு

            குஞ்சு

            மத்தைங்காய்

*************************** 

            மணிக்குட்டன்

            குணிக்குட்டன்

            கொடுவாளை

குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.

மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது.

கணையாழி-1992

மலையாளத்தில் வாசிப்பு என்பதற்கும் படிப்பு என்பதற்கும் வித்தியாசம் தெளிவாக உண்டு.  உதாரணம் : செய்திகள் வாசிப்பது. பாடப்புத்தகம் படிப்பது.

இக்கதையை ஒருதடவை நீங்கள் வாசித்தீர்கள். திரும்பவும் இரண்டாம் தடவை  படித்தீர்கள்  என்றால் ஏதோ கொஞ்சம் புரிந்து கொண்டீர்கள் என்று கொள்ளலாம்.

மூன்றாம் தடவை படிக்கும் போது பல உள் அர்த்தங்கள், கருத்துக்கள் விளங்குவதை காணலாம்.

கேரளத்தில் பொதுவே எல்லோரும் நல்ல நிறம் உள்ளவர்கள் ஆக இருப்பர். ஆனால் இந்தக் குழந்தை மாறுபட்டு கருப்பாக உள்ளது.

ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பொதுவாக எழுத்து மயக்கம் உண்டு. (4 த, 4 க, 4 ட 4 ச) மேலும் வார்த்தைகளை கோர்வையாக வாக்கியங்களாக சேர்ப்பதிலும் தடுமாறுவார்கள். இக்குழந்தை விதிவிலக்கு.

கவிதை அதுவும் புதுக்கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ளும் திறன் 8 வயது குழந்தைக்கு இருப்பது ஆச்சர்யமே.

கவிதைகளுக்கு சந்தம் சேர்த்து பாடும் திறன் அமைவது அபூர்வம் .

இவ்வளவு திறமைகள் உள்ளதால் தான் தன்னுடைய வெறுப்பு, சுய பச்சாதாபம், மற்றவர்கள் மேல் உள்ள கோபம் போன்றவற்றை புதுக் கவிதையாக கூற முடிகிறது.

செயலில் காட்டமுடியாது உள்ள கோபத்தை பெயர் சிதைத்தல் மூலம் வெளிப்படுத்துவது குழந்தைகளின்  இயல்பு.

ஆகவே சிமி, குமி, உமிக்கரி என்று தன்னை தானே இகழ்ந்த குழந்தை, தம்பியை மணிக்குட்டன், குனிக்குட்டன், கொடுவாளை (வெள்ளி நிற மீன்) என்றும், தங்கையை நஞ்சு, குஞ்சு, மத்தங்காய் (மஞ்சள் பரங்கிக்காய்) என்றும் கேலி செய்கிறது.

சிறுகதைகளுக்கு என்று வரையறுக்கப்பட்ட இலக்கணங்கள் ஒன்றும் இக்கதைக்கு பொருந்தவில்லை. கதைக்களன் இல்லை. கதைக்கு ஒரு திருப்பம், முடிச்சு ஒன்றும் இல்லை. குணச்சித்திரம் அறவே இல்லை, எல்லாம் ஊகத்திற்கே.

இதைத்தான் நவீன கதை என்று சொல்கிறார்கள்.

 இலவச இணைப்பு.

புதுக்கவிதை என்று எனது முயற்சி. ஸ்ரீராம் அவர்கள் மன்னிப்பாராக. அவருடைய கருப்பொருட்களை எடுத்துக்கொண்டதற்கு.

காற்றில் அசைந்தது திரைச்சீலை

என்னைத் தொடாதே

என்றது கதவு.

இந்த கவிதை  திரைச்சீலை கதவை விளையாடக் கூப்பிடுகிறது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ஒரு குழந்தை.

கதவு திரைச் சீலையிடம் ஊடல் கொண்டுள்ளது என்று தோன்றினால் நீங்கள் ஒரு மத்திய வயதுக்காரர்.

திரைச்சீலை கதவைக்  கொஞ்சி தன் அன்பைக் காட்டுகிறது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ஒரு முதியவர்.

இந்தக் கதவுக்கும் திரைசீலைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ஒரு மாமியார் அல்லது மருமகள்.

63 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    பார்வை பெற ஆயுர்வேதம் உதவியது என்பது ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    இந்த நாளில் பகிர்ந்துகொண்ட நேர்மறை செய்திகள் சிறப்பு. வாசிப்பு அனுபவமும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலைவணக்கம். நோயில்லா
    வாழ்வு நமக்கு என்றும் நிலைக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோயில்லா வாழ்வு நமக்கு என்றும் நிலைக்க இறைவன் அருளட்டும்.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. சிறுமி விஷாலினி 7 வயதில் இவ்வளவு கண்டு பிடித்திருக்கிறாரா.
    எத்தனை ஆக்க பூர்வமான உழைப்பு.

    இந்த வீடு (Pod)? வெள்ள வேளையில் எத்தனையொ
    மக்களைக் காக்கும்.
    மென்மேலும் வளர்ச்சி அடைய இறைவன்
    அருள வேண்டும்.
    அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  6. சிறுமி விஷாலினியின் கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது.
    ஆயுர்வேதத்தின் பெருமை பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீதரீயம் மருத்துவமனை பற்றி இப்போதுதான்
    கேள்விப் படுகிறேன்.
    இத்தனை அருமையான சேவை, அதுவும்
    ஆயுர் வேதம் வழியில் ஒரு கண் பார்வையையே மீட்டிருக்கிறார்கள்
    என்றால்
    எத்தனை பெரிய தர்மம்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை. பகிர்ந்தமைக்கு நன்றி ஜெ.கே.சார்.
    சிபி
    குமி
    உமிக்கரி
    மனதை என்னவோ செய்கிறது.
    கருப்பான பெண்கள் சந்திக்கும் கேலியும், அவமானமும் மிகவும் கொடுமையானவை.

    பதிலளிநீக்கு
  9. திரு ஜயக்குமார் கருத்துரை ,விமரிசனம் செய்திருக்கும்,
    கதை எழுத்தாளர் நகுலனின்
    பார்வையில் எழுந்த உயிர் ஓவியம்.
    ஒரு சின்னக் குழந்தையும் அறிவும் ஆற்றாமையும்
    ஓய்வு பெற்ற எழுத்தாளரின்
    அன்பு அணுகலும் மனத்தை நெகிழ்விக்கின்றது.

    'என்னுள்ளே நானே இல்லை' மிக மிக யோசிக்க
    வைக்கிறது,.

    பதிலளிநீக்கு
  10. கவிதை படித்துப் புரிந்து கொள்ளும் புத்திசாலிக் குழந்தை..
    மனம் நோகவைக்கும் சமூகம்.

    மனம் நொந்து தன் வருத்தத்தை எழுத்தில் சொல்லும்
    வல்லமை அருமை.
    கண்முன் நடக்கும் கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த புறக்கணித்தல்கள் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

      நீக்கு
  11. செல்வி விஷாலினி மேன்மேலும் வளர வேண்டும்..

    வாழ்த்துவோம்..

    பதிலளிநீக்கு
  12. பாரெங்கும் பரவட்டும்
    பாரம்பரிய வைத்தியம்!..

    பதிலளிநீக்கு
  13. ஆயுர்வேதம் மிகச் சிறந்த மருந்துவம்.
    இதன் பூர்வீகம் இந்தியா என்பதால் உலகம் அங்கீகரிக்கவில்லை.

    சிறுமி விஷாலினிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் அங்கீகரிக்கும்.  நம்மவர்கள்தான் புறக்கணிப்பில் முதலிடத்தில் இருப்பார்கள்!

      நன்றி ஜி.

      நீக்கு
  14. @ அன்பின் ஜி..

    // இதன் பூர்வீகம் இந்தியா என்பதால் உலகம் அங்கீகரிக்க வில்லை..//

    அதுமட்டும் அல்லாமல்,
    ஆயுர்வேத, சித்த வைத்திய சிகிச்சைகளின் போது சில கட்டுப்பாடு விதிமுறைகள் உள்ளன..

    கூடவே பத்திய உணவுகளும்..

    இதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று சொல்லிக் கொண்டு நாடோடி கொள்ளைக் கும்பல்கள் நாட்டுக்குள் வந்தன..

    நம்மவர்களுக்கு அது பிடித்திருந்ததால் நமது கலை கலாச்சார செல்வங்கள் அழிக்கப்பட்டன..

    டமில், டமில்.. ன்னு கத்துனாலும் தமிழ்க் கலாச்சாரத்தைத் தான் நாம ஆதரிக்க மாட்டோமே!..

    சரி.. ஆயுர்வேதத்தை ஆதரிப்பீங்களா?...

    அதுவும் மாட்டோம்.. அதுல தான் சமசுக்கிரிதம் இருக்குதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... நல்லவைகளை புறக்கணிக்க நாலுவிதமா காரணம் சொல்லிக் கொடுத்திருக்காங்க...

      நீக்கு
  15. // சரி.. ஆயுர்வேதத்தை ஆதரிப்பீங்களா?..//

    அவுரு துட்டு கொடுப்பாரா?.. குவளைக்கால், கோழிக்கால்
    பிரியாணி கொடுப்பாரா?..

    பதிலளிநீக்கு
  16. // இதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று சொல்லிக் கொண்டு நாடோடி கொள்ளைக் கும்பல்கள் நாட்டுக்குள் வந்தன..//

    நாட்டுக்குள் வந்த நாடோடி கொள்ளைக் கும்பல்கள் - இதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரிந்த கும்பலை சில காசுக்கு ஆசைப்படும் கும்பல் பின்தொடர்ந்ததன.

      நீக்கு
  17. அனைத்தும் சிறப்பு. விஷாலினி வியக்க வைத்தாள்.

    பதிலளிநீக்கு
  18. சுசீலா, நவீனன் -- இந்த ரெண்டு பேருமே நகுலன் தான் என்று தெரிந்திருந்தும் அந்த ரெண்டு பேரும் இல்லாத நகுலனின் கதையா என்று கேட்கத் தோன்றியது. அந்த மஞ்சள் பூனைக்குட்டி கூட இல்லையா என்ற கேள்வியோ கேட்கக் கூட திராணியற்று நினைவுகளுக்குள்ளேயே அமிழ்ந்தது.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் மதிய வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. இன்னிக்குக் காலம்பர வர முடியலை. வயிறு இன்னும் சரியாகலை. எப்போச் சரியாகுமோ! விட்டுட்டேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் உடனே சரியாயிடும். சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ...எல்லாம் இருக்குமே

      நீக்கு
    2. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சைக்ளோபம்!  எனக்கும் திங்கள் செவ்வாயில் வயிற்றுவலி...   அதுதான் காப்பாற்றியது.

      நீக்கு
  21. ஏழு/எட்டு வயதில் குழந்தைகள் இவ்வளவு திறமைசாலிகளாக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
    நகுலனின் கதையில் ஏழெட்டு வயதுப் பெண் கவிதை புனைகிறது. புதுக்கவிதையைப் புரிந்து கொள்கிறது. ஆச்சரியம் தான். நான் அதிகம் நகுலன் கதைகளைப் படிச்சதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே நவீன விஞ்ஞானத்தின் ஜீன்களோடு பிறக்கின்றன.

      நீக்கு
  22. அழியாச்சுடரிலிருந்து எபிக்கு அப்படியே எடுத்துப் போடுவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். வாசித்ததில் ஒன்றரக் கலந்த சுயானுபவ விவரிப்பு, மூலத்தைத் தேடி வாசகரை வாசிக்க வைப்பது தான் இந்த மாதிரி முயற்சிகளின் வெற்றியாக அமையும். இதை என் தனிப்பட்ட கருத்தாக கொள்ள வேண்டுகிறேன், ஜெயக்குமார் ஸார்.

    பதிலளிநீக்கு
  23. மிகச் சிறு வயதில் கர்நாடக சங்கீதப் பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிக்கும் திறமை பெற்ற குழந்தைகள் என்று கேட்டதுண்டு பார்த்ததுண்டு. நேரடியாகவும்.

    சிறுமி விஷாலினியையும் அந்த வகையில் எடுத்துக் கொண்டு பாராட்டும் மனம் இருந்தாலும், அதே சமயம் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலமுரளி, மேண்டலின் ஸ்ரீனிவாஸ் எல்லோரும் அப்படித்தானே...

      நீக்கு
  24. நகுலன் அவர்களின் கதை அருமையான கதை. விஷயம் என்னவோ சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும, அது மிக மிக நுண்ணிய உணர்வு. சொன்னவிதம் வெகு அருமை உணர்வுபூர்வமான கதை. தான் கறுப்பு என்று கேலி செய்யப்படுவது அக்குழந்தையின் மனதில் எப்படி வேரூன்றி உள்ளது, அதனால் உடன் உள்ள குழந்தைகளின் மீதான தன் வருத்தம், உமிக்கரி என்ற வார்த்தையிலும் அதைத் தொடர்ந்து வரும் வார்த்தைகளிலும் தெரிகிறது.

    கதை ஒரு நிகழ்வு போல இருந்தாலும் அதில் ஆழமான ஒன்லைன்!

    ஜெகே அண்ணா வித்தியாசமான கதைகளை அறிமுகப்படுத்துவது சிறப்பு. அவரின் அறிமுகக் கருத்துகளும் அதே போன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜெகே அண்ணா வித்தியாசமான கதைகளை அறிமுகப்படுத்துவது சிறப்பு. அவரின் அறிமுகக் கருத்துகளும் அதே போன்று./

      உண்மை. அதுவும் இந்த வாரம் சிறப்பு.

      நீக்கு
  25. எபியில் மற்றொரு கவிஞர்!!! ஸ்ரீராம் போன்று இப்போது ஜெகெ அண்ணா.

    கவிதை அருமை! இதுவும் பல கருத்துகளைச் சொல்கிறது அவரவர் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம்

    ஜெகெ அண்ணா அதற்கு உங்கள் விளக்கக் கருத்து நகைச்சுவை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. விஷாலினிக்கு வாழ்த்துகள். கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. @ ஜீவி அய்யா

    நகுலன் கதை பற்றிய அறிமுக விமரிசனத்தை பாராட்டிய ஜீவி அய்யா அவர்களுக்கு நன்றி.

    என்னுடைய இந்த முயற்சிக்கு முக்கிய காரணங்கள்.

    இந்த பகுதிக்கு (நான் படிச்ச கதை) கட்டுரைகள் எழுத வேறு யாரும் இல்லை என்ற குறையை கொஞ்சம் நிறைவு செய்ய,
    சிறுகதைகளை முழுமையாகவோ அல்லது முடிவுடன் உள்ள கதைச் சுருக்கமாகவோ கொடுத்தால் தான் வாசகர்களுக்கு அது சென்றடையும் என்ற நம்பிக்கையால்,,
    சுட்டிகளை கொடுத்து வாசிக்கச் சொன்னால் அது சிலருக்கு பிடிக்காது என்பதால்,
    அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தால்,
    இணையத்தில் இலவசமாக கிடைக்கும் படைப்புகழை மட்டுமே அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கொள்கையால். விலை கொடுத்து வாங்க வேண்டியவற்றை அறிமுகப்படுத்தினால் அது விளம்பரம் ஆகிவிடும் என்பது என் உள்ளுணர்வு.

    என்னுடைய முதல் அறிமுக விமரிசனம் (கொலவெறி டீ) ஒரு முன்னோட்டம். இரண்டாவது கம்ப்யூட்டர் முத்துலிங்கம் இலங்கை எழுத்தாளரை அறிமுகப்படுத்த, மற்றும் கம்ப்யூட்டர் நாம் எல்லோரும் தற்போது உபயோகிப்பது என்பதாலும். மூன்றாவது அறிமுகம் மாதவன் கதை ஒரு குறும்படம் (டாக்குமெண்டரி) என்று எனக்கு பிடித்ததால், நான்காவது (நகுலன்) புதுகவிதைகளும் எனக்கு பிடிக்கும் என்பதால்,

    கட்டுரையை பாராட்டிய எல்லோருக்கும் நன்றி.

    @கீதா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறீங்க. குளிருது. நன்றி.

    @வேங்கடஜி விமரிசன வித்தகர் பாராட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விலை கொடுத்து வாங்க வேண்டியவற்றை அறிமுகப்படுத்தினால் அது விளம்பரம் ஆகிவிடும் என்பது என் உள்ளுணர்வு.//

      இல்லை JC சார்...   நான் மாறுபடுகிறேன்.  நல்ல படைப்புகள் தெரியாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் தவறில்லையே...    உண்மையில் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பபதுதான் தவறு என்று சொல்வார்கள்.  அது படைப்பாளிக்குச் செய்யும் துரோகம் என்றும் சொல்வார்கள்.  நான் என் சுயநலத்தால் அதை கண்டுகொள்வதில்லை.

      நீக்கு
  28. விஷாலினி குட்டிப் பெண் வியக்க வைக்கிறாள். ஆயுர்வேத சிகிச்சையில் அப்பெண்ணிற்குக் கண்பார்வை கிடைத்தது நன்று. ஆயுர்வேதத்தில் பல தீர்வுகள் இருந்தாலும் அது பரவலாக அறியப்பாடமல் இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். இப்போது ஆயுர்வேதத்தில் தனியார்க் கல்லூரிகளும் வந்துகொண்டிருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. @கீதா ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறீங்க. குளிருது. நன்றி.//

    ஹாஹாஹா ஜெகெ அண்ணா உங்களுக்கு நான் எதற்கு ஐஸ் வைக்க வேண்டும்!!!!!?? எனக்கு ரசனைகள் கூடுதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு ரசனைகள் கூடுதல்//

      ஆம், ஆமோதிக்கிறேன். 
       
      என் கவிதைகளையும் கீதா ரொம்பவே சிலாகிப்பார் என்பதால் (மட்டும்) சொல்லவில்லை (ஹிஹிஹி) 

      நீக்கு
  30. சிறுமி விஷாலினி ஆச்சரியப்படுத்துகிறார். பாராட்டுவோம். ஆயுர்வேத சிகிச்சை மூலமாக ரோஸ்மேரி ஒடிங்கா கண்பார்வை பெற்ற செய்தியை செய்தித் தாளிலும் வாசித்திருந்தேன்.

    கதைப் பகிர்வு நன்று. இலவச இணைப்பும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!