சனி, 28 ஜனவரி, 2023

டாஸ்மாக் ஊழியர் எடுத்த 12 பவுன் நகை மற்றும் நான் படிச்ச கதை (JKC)

 


============================================================================================================

ஏற்கெனவே ஓரிருமுறை வெளியிட்டிருக்கிறோம்.  நற்செயல் இன்னும் தொடர்கிறது.


==================================================================================================

இப்படியும் உறவுகளை நினைவுபடுத்தலாம், நிலைநிறுத்தலாமோ...


=====================================================================================================

ஓரிரவில்...  ஒரே இரவில்...அலர்ட்..


================================================================================================


 

நான் படிச்ச கதை (JK)

கலியாணராமன்கள் கதை

கதையாசிரியர்: விந்தன்

 

முன்னுரை

முறையான கல்வி இல்லை. தந்தைக்குக் கருமான் தொழிலில் உதவி புரிந்து கொண்டிருந்தவர். இரவு பள்ளியில் படித்து கம்பாஸிடர் ஆனார். கல்கியில் கம்பாஸிடர் ஆக பணியாற்றினார். கல்கியுடைய எழுத்துக்களைப் படித்தே கதை எழுதும் திறமை கிடைத்தது. சாவியிடம் உதவி ஆசிரியர் ஆனார். எப்போதும் மாற்றி யோசிப்பவர் ஆயிற்றே சாவி. அம்புலிமாமா தயவால் பிரபலமாகியிருந்த விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல் இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு கதை எழுதச் சொன்னார். விஜி என்ற புனைபெயரில் எழுதி வந்த கோவிந்தன் விந்தன் என்ற பெயரில்  மிஸ்டர் விக்ரமாத்தித்தன் கதைகள் எழுதினார்.

மிஸ்டர் விக்கிரமாதித்தன் டு இஸட்’, மெளண்ட்ரோடிலே முப்பத்திரண்டு அடுக்கு மாளிகை ஒன்றை நிறுவினார். அந்த மாளிகையில் பிரசித்தி பெற்ற ஸ்பென்ஸர் கம்பெனிக்குவவ் வள் வவ்வேகாட்டுவது போல்விக்கிரமாதித்தன் வென்சர்ஸ்என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார்.

முப்பத்திரண்டாம் மாடியில் வீற்றிருந்த விக்கிரமாதித்தனைபோஜன், போஜன்என்று சொல்லப்பட்ட ஒருவர் நீதிதேவன் என்னும் தன் நண்பனுடன் ஒரு நாள் ஏதோ ஒரு காரியமாகப் பார்க்க வர, மிஸ்டர் விக்கிரமாதித்தரை அவ்வளவு சுலபமாகப் பார்க்க உங்களை நான் விட்டுவிடுவேனா? என்று ஒவ்வொரு மாடி ரிஸப்ஷனிஸ்ட்டும் போஜன் மற்றும் நீதிதேவனை தடுத்து நிறுத்தி, மிஸ்டர் விக்கிரமாதித்தன் அருமை பெருமைகளைக் கூறும் கதையைக் கேளும் என்று கதை சொல்ல தொடங்கி

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கலியாணராமன்கள் கதை. விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன எட்டாவது கதையாவது:

கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! கையில் போதுமான காசில்லாதபோது ஒரு கப் காபியை வாங்கி, இருவர் அதைப் பங்கு போட்டுக்கொண்டு குடிப்பதில்லையா? அந்த மாதிரிக் குடித்துக் குடித்தே இணைபிரியாத நண்பர்களாகிவிட்ட இருவர் இந்தச் சென்னைமா நகரிலே உண்டு. அவர்களில் ஒருவன் பெயர் மட்டுமல்ல; இருவரின் பெயருமேகலியாணராமன்என்பதாக இருந்தது. இதனால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அவர்களைக் கூப்பிட நேர்ந்தால், ‘கலியாணராமன் நம்பர் 1, கலியாணராமன் நம்பர் 2 என்று கூப்பிட்டு வந்தார்கள். என்னதான் நம்பர் போட்டுக் கூப்பிட்டாலும் சில சமயம் அது குழப்பத்தில் வந்து முடியவே, ‘இந்தக் குழப்பத்திலிருந்து மீள வழியே கிடையாதா?’ என்று கலியாணராமன் நம்பர் 1 யோசிப்பானாயினன். அதுகாலை கலியாணராமன் நம்பர் 2 திடீரென்று தீவிரத் தமிழ்ப்பற்றுக்கு உள்ளாகித் தன் பெயரைமணவழகன்என மாற்றி வைத்துக்கொண்டு வர, அது கண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம் வியப்பும் கொண்ட கலியாணராமன் நம்பர் 1, ‘என்ன, இப்படித் திடீரென்று?’ எனக் கேட்க, ‘எல்லாம் தமிழ் வாழத்தான்!’ என மாஜி கலியாணராமனானதப்பு, முன்னாள் கலியாண ராமனான மணவழகன் பதிலுரைப்பானாயினன்.

அது தெரியாதா எனக்கு, உண்மையைச் சொல்லப்பா?’ என்று கலியாணராமன் கண்ணால் சிரித்துக் கொண்டே கடாவ, ‘தமிழ் வாழ்ந்தால் நானும் வாழ்வேன்; நான் வாழ்ந்தால் தமிழும் வாழும்!’ என்று மணவழகன் அப்போதும் இடக்கரடக்கலாக மறுமொழி சொல்ல, ‘கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்?’ எனக் கலியாணராமன் மீண்டும் கேட்பானாயினன்.

அதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாமல், ‘இப்போது அதில்தானப்பா, நல்ல காசு! என்று மணவழகன் அவன் காதோடு காதாகச் சொல்ல, ‘காரியவாதிக்குக் கண்டதெல்லாம் காசுதானே?’ என்று கலியாணராமன் ஒருபுதுமொழியை உதிர்க்க, அதைக் கேட்டு அவன் அப்படியே அசந்து போய் நிற்பானாயினன்.

இப்படியாகத்தானே இவர்களுடையபெயர் மாற்றும் படலம்நடந்து முடிய, ஒரு நாள் கலியாணராமனாகப்பட்டவன் மணவழகனை நோக்கி, ‘எனக்கு ஓர் உபகாரம் செய்வாயா?’ என வினவ, ‘என்ன உபகாரம்?’ என மணவழகன் கேட்பானாயினன்.

கோயமுத்துாரில் ஒரு குட்டி மில் முதலாளி இருக்கிறாராம். அவருக்கு ஒரே ஒரு பெண்ணாம். பெயர் பொற்கொடியாம். அவளுக்காக அவளுடைய மாமா ஆனந்த மூர்த்தி இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார். அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஜாதகம் பார்த்தார்; அதுவும் பொருந்தி விட்டது. பெண்ணை உங்களுக்குப் பிடித்துவிட்டால் கலியாணம் உடனே வைத்துக்கொண்டு விடலாம் என்றார். தாய் தந்தையற்ற எனக்கோ ஓர் அனாதை போல் சென்று அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது; கொஞ்சம் யோசித்தேன். அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு விட்ட அவர், ‘நீங்கள் எதற்கும் யோசிக்க வேண்டாம். கையில் ரொக்கமாக இருபத்தையாயிரம் கொடுத்துவிடுகிறோம். இன்னும் ஓர் இருபத்தையாயிரத்துக்கு நகை நட்டுக்கள் போடுகிறோம். இவை தவிர, சீர் வரிசைகள் வேண்டிய மட்டும் செய்கிறோம். கலியாணத்தைக் கோயமுத்தூரிலேயே வைத்துக் கொண்டு விடலாம். நீங்கள் விரும்பினால் இங்கே பார்க்கும் வேலையைக்கூட ராஜீனாமா செய்துவிட்டு, அங்கே உள்ள எங்கள் மில்லுக்கு மானேஜராக வந்துவிடலாம்என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போனார். அதற்கு மேல் அந்த இடத்தை விடக்கூடாது என்று நினைத்த நான், அவரிடம் ஒரு பொய் செரன்னேன். ‘எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார். பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டிருக்கும் அவர், ரொம்ப நாட்களாக என்னையாவது கலியாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். அவரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். அவர் வந்து பெண்ணைப் பார்த்து, ‘சரிஎன்று சொல்லிவிட்டால் எனக்கும் சரியே!’ என்றேன். ‘சரிஎன்று அவர் போய் விட்டார். அவருடைய விலாசத்தை நான் உனக்குத் தருகிறேன். அந்த விலாசத்துக்குப் போய், நீ எனக்காக ஒரே ஒரு நாள் என்னுடைய அண்ணனாக நடித்தால் போதும்!’ என்று கலியாணராமன் சொல்ல, ‘இதற்காக நீ இவ்வளவு தூரம் என்னிடம் சொல்ல வேண்டுமா? இதைக்கூடச் செய்யவில்லையென்றால் நான்தான் உனக்கு எப்படி நண்பனாவேன், நீ தான் எனக்கு எப்படி நண்பனாவாய்? கொடு முகவரியை, இப்பொழுதே புறப்படுகிறேன்!’ என்று மணவழகன் துடிப்பானாயினன்.

பெண்ணைப் பிடித்துவிட்டால் முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க என்னைக் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வராதே! நீயே அவர்களுடன் கலந்து பேசி, ஏதாவது ஒரு நாளைக் குறித்துக்கொண்டு வந்துவிடு. அந்த நாளில் அவளுக்குத் தாலி கட்ட நான் தயாராகிவிடுகிறேன்என்று கலியாணராமன் சொல்லி, ஆனந்தமூர்த்தியின் விலாசத்தை எடுத்து ஆனந்தமாகக் கொடுக்க, ‘தாலியைக் கட்டிவிட்டுப் பணத்தைக் கேட்காதேடா, புத்திசாலி! பணத்தை வாங்கிக் கொண்டு தாலியைக் கட்டு!’ என மணவழகன் அவனை எச்சரித்துவிட்டு, உடனே கோவைக்குப் புறப்பட்டு போவானாயினன்.

அங்கே ஆனந்தமூர்த்தியின் முகவரியைத் தேடி மணவழகன் அலைய, ‘அவர் கண்ணை மூடிக் காரியம்கூட நடந்து விட்டதே!’ என்று அங்கிருந்தவர்கள் சொல்ல, ‘அப்படியா சமாசாரம்?’ என்று ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற அவன், மறுகணம் ஒரு துள்ளுத் துள்ளி, ஒரு குதி குதித்து நின்று, ‘ஆஹா!-தப்பு, தப்பு! ‘ஆகாஎன்று சொல்ல வேண்டுமன்றோ? ஆகா! அதிருட்டம் அடித்தால் இப்படியன்றோ அடிக்க வேண்டும்? கலியாணராமனைப் பார்த்து விட்டு வந்த அந்த ஒரே ஒரு ஆனந்தமூர்த்தியும் கண்ணை மூடி விட்டாராம். இனி நானாவது, கலியாணராமனின் அண்ணனாக நடிப்பதாவது? நானே கலியாணராமனாக நடிப்பேன்; மணவழகனையும் தமிழ்ப் பற்றையும் சற்றே மறப்பேன். பிரம்மசாரியான என் அண்ணனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்றும், அதனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நானே அரிச்சந்திரனைப் பின்பற்றி வந்ததாகவும் சொல்வேன். அப்புறம் என்ன? அழகான பெண், ஐம்பதாயிரம் ரூபாய், மானேஜர் பதவி எல்லாம் எனக்கே எனக்குத்தான்!’ என்று அப்படியே போய் அந்தப் பெண் வீட்டாரிடம் அளக்க, அவர்களும் அதை நம்பி, மாஜி கலியாணராமனான மணவழகனுக்கே அந்தப் பொற்கொடியை மணம் செய்து வைப்பாராயினர்.

முதல் நாள் இரவு. சினிமாவில் வருவதுபோல் பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் கொஞ்சி வந்த பொற்கொடிதடாரென்று எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு விழுந்து, கையையும் காலையும் உதைத்துக்கொள்ள, ‘என்ன பொற்கொடி, என்ன?’ என மணவழகன் பதற, ‘சாவி, சாவி! சீக்கிரம்! சீக்கிரம்!’ என்று உளறிக்கொண்டே அவள் மூர்ச்சையடைவாளாயினள்.

அட இழவே, நீ காக்கா வலிக்காரியா? அது தெரியாமல் போச்சே, எனக்கு!’ என்று தலையில் அடித்துக்கொண்டே மணவழகன் அங்கிருந்த சாவிக் கொத்தை எடுத்து அவள் கையில் திணிக்க, ‘என்ன அண்ணா, செளக்கியமா? உங்களைத் தேடிக்கொண்டுதான்வந்தேன்!’ என்று யாரோ ஒரு தம்பி அந்த நேரம் பார்த்துத் தன்னைக் குசலம் விசாரிப்பதைக் கேட்டு அவன் திரும்ப, சாலையோரமாக இருந்த ஜன்னலுக்கருகே நின்றுகொண்டிருந்த கலியாணராமன் அவனைப் பார்த்துஹஹ்ஹஹ்ஹாஎன்று சிரிக்க, ‘மோசம் போனேன் கலியாணராமா, உன்னை நம்பி நான் மோசம் போனேன், கலியாணராமா!’ என்று மணவழகன்ஒப்பாரிவைப்பானாயினன்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மோசம் போனது யார்? கலியாணராமனா, மணவழகனா?’ என விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘பொற்கொடி காக்கா வலிக்காரியாக இல்லாமலிருந்தால் மோசம் போனவன் கலியாணராமன். இல்லாவிட்டால் மணவழகன்!’ எனவிளக்கெண்ணெய் முறையில் விக்கிரமாதித்தர் விளக்கம் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்ககாண்ககாண்க…..

ஆசிரியர்


விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூட்த்தில் வேலை கிடைத்த்து.

ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராக நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) “விஜி” என்ற பெயரில் பல கதைகள் எழுதினார்.  விஜி என்ற பெயரை “விந்தன்” என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் “கல்கி” கிருஷ்ணமூர்த்திதான்.

கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார். ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப் பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’ (1956) எழுதினார். இந்நூலுக்குப் புடை நூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார்.

சாவி, ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.

மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

கதையின் சுட்டி

விக்ரமாதித்தன் கதை

 

 

19 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள உணவகத்தின் நற்செயல் வாழ்க. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. கதை படித்தது இல்லை. ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போக வேண்டி இருக்கும் என்று கதை சொல்கிறது.

    ஆகா! அதிருட்டம் அடித்தால் இப்படியன்றோ அடிக்க வேண்டும்? //

    நல்ல அதிருட்டம்தான்.

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. திரு. விந்தன்.,

    சிறப்பான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்..

    பள்ளி நாட்களில்
    விரும்பிப் படித்ததுண்டு..

    பதிலளிநீக்கு
  6. குறைந்த விலையில் உணவு வழங்கல் நற்பணி.

    நகையை கையளித்த நல்லுள்ளத்துக்கு வாழ்த்துகள்.

    காவல் பணியாளரின் சேவைக்கு வாழ்த்துகள்.

    விந்தனின் விக்கிரமாதித்தன் கதை ஏமாற்ற நினைத்ததற்கு நல்ல தண்டனை.

    பதிலளிநீக்கு
  7. ஈரோடு வெங்கட்ராமன் செய்தி வாசித்த நினைவு இருக்கிறது. அவரது சேவை தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்வான விஷயம். தொடரட்டும் அவரது சேவை. பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பசி வேறு, பக்தி வேறல்ல.
    இறை பக்தியை போதிக்கும் விஷயங்களைக் குழப்பி
    ஆதாயம் காணுவோர் பலர். அப்படிப்பட்ட யாரோ
    ஒருவர் வாந்தியெடுத்ததை அப்படியே ஒத்தி எடுத்து இங்கு போடுவதில் அர்த்தம் ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.
    எல்லா இடங்களிலும் கிடைக்கின்ற தகவல்களை உள் வாங்கிக் கொண்டு உங்கள் மொழியில் அதை வெளிப்படுத்துவதே உங்கள் பெயர் போட்டு நீங்கள் எழுதும் எதுவொன்றாகும்.

    பஜகோவிந்தம் ஆதிசங்கரர் அருளியது.
    அதன் சாரத்தை ராஜாஜி
    அவர்கள்
    வடித்தெடுத்து

    பதிலளிநீக்கு
  9. மற்ற பாசிட்டிவ் செய்திகளும் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  10. (தொடர்ச்சி) எழுதிய நூலும் பஜகோவிந்தம் என்று பெயர் கொண்டது.
    அவரே எழுதிய வியாசர் விருந்து நூல் போல.

    'வைதீக மரபைத் தூக்கிப் பிடிக்கும்' என்று யாரோ குறிப்புக் கொடுத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
    ஒன்றை வாசித்து வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாதவைகளைத் தவிர்த்து நாம் எழுதுவதில் இருக்கும் சிறப்ப இது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸி ஸார், இந்தக் குறிப்பை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

      நீக்கு
  11. விந்தன் கதைகள் வாசித்தது இல்லை. இதுதான் முதல் கதை. எளிமையான கதை. சொன்ன விதம் நல்லாருக்கு. அக்காலகட்டச் சொற்கள் நடை.

    கதையின் முடிவை ஊகிக்க முடிகிறது அதாவது பெண்ணின் தந்தை இறந்துவிட்டார் என்று கேட்டதும் ஏமாற்றுவான் என்பது. ஆனால் அப்பெண்ணிற்கு நோய் என் ஊகத்தில் இல்லை. வேதாளத்தின் கேள்வி மொக்கையா இருக்கோ?!!! ஹாஹாஹாஹா தெரிந்ததுதானே ஏமாந்தவர் யார்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. "எதை எழுதினாலும் நாலு பேர் பாராட்டவாவது வேண்டும், அல்லது திட்டவாவது வேண்டும். இல்லையெனில் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நல்லது." 
    இது கல்கி விந்தனுக்கு கூறிய அறிவுரை. 

    இது வரையிலும் ஐந்து பேர்கள் கருத்து கூறியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. குறிப்பாக ஜீவி அய்யா அவர்களுக்கு. உண்மையில் எனக்கு விந்தனைப் பற்றி ஒன்றும் தெரியாது. தற்போதுதான் அவரைப் பற்றி அறிகிறேன். நன்றி 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விந்தன் ஏழ்மையில் வாடியவர். அதனால் கற்பனையைத் தேடி தவமிருக்காமல் அவர்
      வாழ்க்கை அனுபவங்களே அவர் கதைகளுக்கான கரு ஆயிற்று. ஒருவிதத்தில் அந்த ஏழ்மை நிலை இல்லையென்றால் அவரது கதைகள் வறுமையின் அந்த யதார்த்த அனுபவ வெளிப்பாட்டை இழந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. அவர் எந்தளவுக்கு வறுமையில் வாடினார் என்பதற்கு அடையாளமாக நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது.
      'கல்கி' பத்திரிகையில்
      'உங்கள் கதைகள் எங்கிருந்து பிறக்கின்றன' என்று சில எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்டுப் பிரசுரித்திருந்தார்கள்.
      விந்தனும் அவர்களில் ஒருவர். விந்தன் என்ன சொல்லியிருந்தார், தெரியுமா?

      "அதோ தூளியில் கை கால்களை உதைத்துக் கொண்டு என் பச்சிளம் குழந்தை. பாலுக்காக பத்து நிமிஷமாக அரற்றிக்கொண்டு ஓய்ந்து போய்விட்டது.
      அதன் அழுகையை சகிக்காமல் என் மனைவி தூளியிலிரும்து அதை எடுத்து எலும்பும் தோலுமான வரண்ட தன் மார்பில் புதைத்துக் கொள்கிறாள். பசி வேதனையில் குழந்தை பரபரத்து அவள் வற்றிய மார்பில் முட்டி மோதுகிறது. பால் சுரக்காத ஏமாற்றத்தில் மீண்டும் கால் உதைத்து வீறிட்டு அலறுகிறது. இந்த வேதனையில் தான் ஐயா என் எழுத்து பிறக்கிறது' என்று பதிலளித்திருந்தார்.

      இப்பொழுது இதை நினைவில் கொண்டு சொல்லும் பொழுதே எனக்கு மனசு பரிதவிக்கிறது.

      இது தான் விந்தன் எழுத்து -- இவர் தான் விந்தன் - இந்த வேதனை தான் அவரது பசி கோவிந்தம் என்று சொன்னால் இக்காலத்தில் யாருக்குப் புரியும் சொல்லுங்கள்
      ஜெஸி ஸார்.

      நீக்கு
    3. ஆனால் விந்தனின் பேனாவிலிருந்து வெளிப்பட்ட இந்த ஏழ்மைப் பசியை அறியாத மேலே காணும் ஆசிரியர் குறிப்பை எழுதிய எவரோ தனது சொந்த வரட்டுக் கொள்கையை வெளிப்படுத்தும் விதமாக 'வைதீக மரபைத் தூக்கிப் பிடிக்கும் பஜகோவிந்தம்' என்று
      புலம்புகிறார். அதைத் தான் பதிவு செய்திருந்தேன்.

      நீக்கு
  13. விந்தனின் இந்த விக்ரமாதித்தன் கதைகள் சாவி வாராந்தரியில் படிச்ச நினைவு அரைகுறையாய் இருக்கு. என்றாலும் எனக்கு ஏனோ இவர் எழுத்து அவ்வளவாய்க் கவரவில்லை.

    நல்ல செய்திகள் அனைத்தும் அருமை. மருத்துவமனையில் தொண்டு புரியும் நண்பர் பற்றி முன்னாடியே படிச்ச நினைவு. ஜேகே அவர்களின் படிப்பின் தரமும் உயர்ந்து கொண்டே போகிறது. தேடிப் பிடிச்சுப் படிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  14. அது ஏன் எல்லோருமே டாஸ்மாக்கை "டாஸ்மா"ர்"க் என்கிறார்கள்? அதே போல் பாம் ஆயிலை ஃபாம் ஆயில் என்கிறார்கள். வர வரத் தமிழ் உச்சரிப்பே முழுக்க முழுக்க மாறிக்கொண்டே இருக்கு. யாருக்கும் சரியான உச்சரிப்பு வருவதில்லை. "பள்ளி"யைப் "பல்லி" என்கின்றனர். இந்த அழகில் இவங்க தான் தமிழை வளர்க்கிறாங்களாம். அதுவும் ஹிந்தியை விரட்டி விட்டு! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!